கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 8,182 
 

பரபரவென்று வாசலுக்கு ஓடினாள் ராதிகா. பால் பாக்கெட் ரெண்டு படியில் கிடந்தது. எடுத்து உள்ளே நகர்கையில் சொக்கலிங்கம் வாயிலுக்கு வந்து கொண்டு இருந்தார். “பேப்பர் வரலியா?”,

அவளது கையில் இருந்த பால் பாக்கெட்டுகளை பார்த்தபடிக் கேட்டார்.

“நான் கவனிக்கல. ஏற்கனவே லேட் . நீங்க கொஞ்சம் போய் பாருங்க”, நிற்காமல் ஓடினாள்.

ஒரு பத்து நிமிடத்தில் காபி கலந்து எடுத்து வந்து நீட்டுகையில், கையில் பேப்பருடன் இருந்த சொக்கலிங்கம், நிமிர்ந்து பாராமல் கையை நீட்டினார்.

“இங்க பார்த்து வாங்குங்க. கொட்டிட போகுது” என்று சொல்லும் போதே கையில் கப்பில் இருந்து ரெண்டு துளி காபி பேப்பரில் சிந்தியது .

சட்டென்று நிமிர்ந்தார். “எதிலும் கவனம் இல்ல உனக்கு. கொஞ்சம் பொறுமையா குடுத்தா என்ன? போய் துணி எடுத்து வா, தரை வீணா கரை ஆகும்”.

ஒரு பெருமூச்சுடன் ராதிகா துணியை கொண்டு வந்து காபி கரை துடைத்து நிமிர்கையில், “இந்தா இதை உள்ள கொண்டு போ”, சொக்கலிங்கம் இப்பொழுதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
ரொம்ப கவனமாக கப்பை வாங்கியவள், அடுக்களையில் நுழைந்து ஒரு நீள் மூச்சு வாங்கினாள்.

“பொறுமை, பொறுமை”.

அடுத்த ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. காலை உணவு தயாரித்து ஹாட் பாக்கில் வைத்து, மதிய உணவு தனி ஹாட் பாக்கில் வைத்து, தனக்கு கையில் உணவு தப்பர்வேர் டப்பாவில் பேக் செய்து, நிமிர்கையில், வாசலில் பரிமளத்தின் கணவன் நின்றிருந்தான்.

“ராதிகா, அந்த வேலைக்காரம்மா புருஷன் வந்து இருக்கான் பாரு”, சத்தமாகக் குரல் கொடுத்தார்.

ஒரு நிமிடம் பக் என்றது. ஐயோ பரிமளம் வேலைக்கு வரவில்லையா?

“என்ன மாரி, பரிமளம் எங்க?’ கொஞ்சம் கவலையோடு நின்ற ராதிகாவுக்கு மாரி சொன்ன பதில் வயிற்றில் பாலை வார்த்தது.

“அம்மா வீட்ல ஒரு சின்ன பூஜை. பரிமளம் ஒரு பதினோரு மணிக்கு வரேன்னு உங்க கிட்ட சொல்ல சொல்லிச்சு. நீங்க வேலைக்கு கிளம்பி போக சொல்ல கவலை படுவீங்கன்னு அதுக்கு கவலை. ஐயா கிட்ட இன்னிக்கி ஒரு நாள் அடஜஸ்ட் பண்ண சொல்லுங்க. அவருக்கு கோவம் வரும்னு சொல்லிச்சு”

“பரவா இல்ல அவ வரும் போது வரட்டும். ஐயா கிட்ட நான் சொல்லிக்கிறேன். அவரு எப்படியும் வீட்ல இருப்பாரு”.

குளியலறைக்கு விரைந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்கள் கிளம்புவதில் நகர்ந்தது.

“என்னவாம் அந்த ஆளுக்கு?” கண்ணாடி முன் நின்று உருவத்தை சரி பார்த்துக் கொண்டு இருந்தவளின் பின்னே நின்றார் சொக்கலிங்கம்.

“எத்தனையோ முறை உங்க கிட்ட சொல்லி இருக்கேன். என்னதான் வீட்ல வேலை செய்யறவங்க என்றாலும், கொஞ்சம் அவங்கள மரியாதையோடு பேசுங்கன்னு. அவன் வாசல்ல நிக்கும் பொழுது அவன் காது கேக்க வேலைக்காரின்னு சொல்லணுமா? அவ பெரு உங்களுக்கு தெரியும் தானே? பரிமளத்தோட புருஷன்னு சொன்னா கொறஞ்சா போகும்”.

“நான் என்ன கேட்டா நீ என்ன பேசற? கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”.

ராதிகா மனதுக்குள் ஒன்றில் இருந்து ஐந்து வரை எண்ணினாள் .

“அவங்க வீட்ல எதோ பூஜை. அவ பதினோரு மணிக்குத் தான் வருவாள். இன்னிக்கி கொஞ்சம் நீங்க பாத்துக்கோங்க”.

“என்ன பழக்கம் இதெல்லாம்? நீ இருக்கும் போதே வந்து வேலை முடிக்கணும்னு தானே பேச்சு. இதெல்லாம் நீ குடுக்கற இடம்.நான் சாப்பிடும் பொழுது வந்து நிப்பா. அவ பின்னாடி நின்னு யாரு காபந்து பண்றது?’, எரிச்சல் வந்தது சொக்கலிங்கத்திற்கு.

“இது இன்னிக்கி ஒரு நாள். அவளுக்கு நீங்க வீட்ல இருப்பீங்கனு தெரியும். அவளும் இந்த வீட்ல பத்து வருஷமா வேலை செய்யறா. எதுக்கு பின்னாடி நின்னு காபந்து பண்ணனும்? நீங்க இன்னும் டிபன் கூட சாப்பிடல. எப்படியும் ரெண்டு மணிக்குத் தான் சாப்பாடு. அப்புறம் என்ன. ஒரு நாள் பாத்துக்க முடியாதா?”

முடிந்த வரை குரல் உயர்த்தாமல் பொறுமையாகப் பேசினாள்.

அடிக்குரலில் முணுமுணுத்தவாறே நகர்ந்தார். அவள் தனக்கு டிபன் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். “என்னது இன்னிக்கும் தோசையா?”,

“மாவு ரெண்டு கரண்டி தான் பாக்கி. நாளைக்கு வேற ஏதாவது பண்றேன். மதியத்துக்கு ரசம் தான் இருக்கு. எனக்கு வேகமா பண்ண முடியல. காய் நறுக்கவே ரொம்ப நேரம் ஆச்சு. அப்புறம் அதுக்கு ஒரு போன் பண்ணாதீங்க”, கை கழுவ எழுந்து சென்றவள் பின்னாலே வந்து நின்றார்.

முன் நெற்றியில் கலைந்து இருந்த கேசத்தை கொஞ்சம் சரி செய்தாள்.

“போதும் சிங்காரம். நேரம் ஆச்சு கிளம்பு. அடுத்த மாசம் ரிடையர் ஆகப் போற. எதுக்கு இவ்ளோ அலங்காரம்?’ நக்கலாக ஒலித்த குரலை லட்சியம் செய்யாது நகர்ந்தாள்.

வெளியே வந்து ஷேர் ஆட்டோ பிடித்து மவுண்ட் ஸ்டேஷன். அங்கிருந்து ட்ரெயின் . கிண்டியில் இறங்கி மறுபடி ஷேர் ஆட்டோ. பிரபல மருத்துவமனை ஒன்றில் சீப் டாக்டரின் பெர்சனல் செக்ரெட்டரி. இன்னும் ஒரு மாதம் . அதற்கு பிறகு இந்த ஓட்டம் இல்லை. முப்பத்தி மூன்று வருடமாக ஓடியாகி விட்டது. அதற்கு பிறகு ஓய்வு.

சொக்கலிங்கம் ஓய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகி விட்டது. கவர்ன்மென்ட் உத்யோகம். ஐம்பத்தி எட்டு முடிந்து ரெண்டு வருடம் எஸ்ட்டென்சன் பெற்று அறுபதில் ஓய்வு. ஆளைப் பார்த்தால் வயது தெரியாது. அவ்வளவு நேர்த்தி. மழமழ வென்று தினமும் ஷேவ் செய்து , ஷார்ட்ஸும் ட்ஷர்ட்டும் போட்டுக் கொண்டு அவர் வாக்கிங் போவதை பார்க்கவே அந்த காலனியில் ஒரு ஆன்டி கூட்டமே அலைபாய்வதாய் அலட்டுவார். அலங்காரப் பிரியர். மகா முன்கோபி. கோபம் வந்தால் இன்ன வார்த்தைத் தான் வாயில் வரும் என்பது சொல்ல முடியாது.

ட்ரெயினில் ஏறிய உடன் மங்கை கையசைத்தாள். “என்ன ராது, சொக்கநாதர் என்ன சொல்றார்?’,

மங்கை, ராதிகாவுடன் ஆஸ்பத்திரியில் உடன் வேலை செய்பவள்.

“சொல்றாரு சுரைக்காய்க்கு உப்பில்லைனு”, ராதிகா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“உப்பு டப்பாவை பக்கத்துல வெச்சு போட்டுக்க சொல்லு, இல்லனா இப்படி சொல்லு, கொஞ்சம் உப்பு கம்மி பண்ணினா கோபம் குறையுதான்னு பாக்கத் தான் கம்மியா போட்டேன்னு”,

மங்கையின் பேச்சு ராதிகாவை சிரிக்க வைத்தது.

கிண்டியில் இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

“உனக்கு கோபமே வராதா, ராது? சில சமயம் உன்னைப் பார்க்கும் போது என்னை நினச்சு எனக்கே கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு மட்டும் எப்படி இப்படி பொறுமையே இல்லாம இருக்கு”.

“அது வந்து ஒண்ணும் பலன் இல்லை மங்கா”.

முப்பத்து ஐந்து வருட மண வாழ்க்கை. முதல் பத்து வருடங்கள் புரிதல் தேடி, அடுத்த பத்து வருடங்கள் வாழ்க்கையை ஸ்திர படுத்த, அடுத்த பத்து வருடங்கள் புரிந்தவற்றோடு தன்னைப் புகுத்திக் கொள்ள, இப்படியே பயணப்பட்டாகி விட்டது. கடந்த ஐந்து வருடங்கள் தான் தன்னைப் பற்றி நினைத்துப் பார்க்க என அவள் எடுத்துக் கொண்டது.

பணத்திற்கு குறைவு இல்லை.

குழந்தை பாக்கியம் அவர்களுக்கு அமையவில்லை.

எந்த வித மருத்துவ பரிசோதனைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள சொக்கலிங்கம் விரும்பவில்லை.. யார் மீது குறை என்பது தெரியாத போதும், தாய்மை அடைய முடியாத அவளது நிலையைப் பற்றி யாரேனும் பேசும் போது மவுனம் காப்பார். அது சம்மதம் என்பது போல.

ராதிகாவிற்கு முதல் ஐந்து வருடங்களுக்குள் அவரது குணம் புரிந்து விட்டது. அவர் ஒரு சுகவாசி. தான், தன் சுகம் தாண்டி சிந்திக்க கற்றுக்கொள்ளாத, கற்றுக்கொள்ள விருப்பப்படாத ஒரு மனிதர். பிடிவாதம் அதிகம்.

ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் வீடு பற்றிய சிந்தனை மனதுள் நுழையவே நுழையாது. இருபது வருடமாக ஒரே இடத்தில் வேலை. பல சமயங்களில் அவளது வேலையிடம் அவளது தாய்வீடாகி இருக்கிறது.

“என்ன ராதிகாம்மா, சாப்டீங்களா இல்லயா? இப்படி சோர்ந்து கிடக்குறீங்க? கொஞ்சம் காபி குடிங்க சூடா, உடம்புக்கு சுகமில்லையா?”

“ராதிகா மேடம். உங்களுக்கு ரொம்ப கால் வலின்னு சீப் சொன்னாரு, கொஞ்சம் வீட்டுக்கு போகும் முன்ன என்ன பாத்துட்டு போங்க.நீங்க என் கிட்ட சொல்ல கூடாதா? ஏன் கஷ்டப்படறீங்க?”

ஆயா வேலை பார்ப்பவர் முதல் ஆர்த்தோ டாக்டர் வரை கரிசனத்துடன் கேட்கையில் தாய் முகம் நினைவில் வரும். கூடவே கணவனின் முகமும்.

“என்ன சாஞ்சு சாஞ்சு நடக்கற?”

“குதிகால் வலி தாங்க முடியல. என்னன்னு தெரியல”.

“கொஞ்சமாவா திங்கற? எப்படி ஊதி கெடக்கு பாரு உடம்பு. அதான் வலி. முதல்ல வெயிட் குறைக்கிற வழியப் பாரு. அப்புறம் கொஞ்சம் சூப் வெச்சு குடு. ரொம்ப பசிக்குது”

இது போன்ற தருணங்களில் மௌனம் அவளுக்கு மொழியாக போனது.

வேலை முடிந்து வீடு செல்லும் பொழுது மணி ஏழு. கிண்டி ஸ்டேஷன் அருகில் இருந்த சங்கீதாவில் ரெண்டு பாக்கட் பரோட்டா வாங்கிக் கொண்டாள்.

வீட்டிற்குள் நுழையும் பொழுதே சொக்கலிங்கம் குரல் கேட்டது. யாருடனோ போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

“என்ன பண்ண சொல்லுங்க. இன்னிக்கி பாருங்க இந்த வேலைக்காரி பண்ணின கூத்து. பாத்திரம் எடுத்து வெளிய வைக்காமல் தூங்கிட்டேன். பெல் அடிக்கலாம் இல்ல. அவ பாட்டுக்கு தேய்க்காம போய்ட்டா. இப்போ ராதிகா வந்த நான் தான் பேச்சு கேக்கணும்”.

ராதிகாவுக்கு ஆயாசமாக இருந்தது. பாத்திரம் கிடக்கிறதா? இவரை என்னிக்கி நான் பேசி இருக்கேன்?

உள்ளே அவள் வரும் சத்தம் கேட்டதும் போனை கட் செய்து விட்டு ஆரம்பித்தார்,

“இது சரி வராது. அவளை வேலை விட்டு நிறுத்து. ஏதோ இவ இல்லனா வேற ஆளே கிடைக்காத மாதிரி நீ கொஞ்சிகிட்டு இருக்க. இத்தனை விசுவாசம் உனக்கு என் கிட்ட கூட கிடையாது. அது என்ன கைல?’

“பரோட்டா”, சோபாவில் அமர்ந்தபடி ராதிகா கையில் இருந்த பொருட்களை கீழே வைத்தாள்.

“என்ன பிரச்சனை?” கொஞ்சம் தண்ணி குடிக்க வேண்டுமாய் இருந்தது அவளுக்கு. எழுந்திருக்க மனம் இல்லை.

“அவ எப்போ வரேன்னு சொன்னா? பதினோரு மணிக்கு வரல. நான் சாப்பிட்டு டிவி பாத்துகிட்டு இருந்து தூங்கி போய்ட்டேன். அவ வரவே இல்லை”.

“சரி பரவாயில்லை விடுங்க. நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துருவா. எப்படியும் நான் இப்போ ஒண்ணும் சமைக்க போறது இல்லை. வாங்கிட்டு வந்துட்டேன்.”

“எனக்கு வேண்டாம். ஏற்கனவே வயிறு ஒரு மாதிரி இருக்கு. நீ கொஞ்சம் கஞ்சி வெச்சு குடு”.

தன்னை மீறி உச்சுக் கொட்டி விட்டாள்.

கொஞ்ச நேரம் மௌனம்.

“பரவாயில்லை. நீ எனக்கு ஒண்ணுமே பண்ண வேண்டாம். நான் பட்டினி கெடக்கறேன். என்ன இருந்தாலும் வீட்டுல சும்மா இருக்கற ஆளு தானே. ஒரு வேளை சாப்பிடாம இருந்த ஒண்ணும் ஆகாது. நீ பரோட்டா சாப்பிடு”.

சொக்கநாதன் குரல் எரிச்சல் நிரம்பி வழிந்தது.

ராதிகா கண்கள் மளுக்கென்று நிரம்பியது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் எழுந்து அடுக்களைக்குள் நுழைந்தாள். மதியம் சாப்பிட்டு போட்ட பாத்திரங்கள் அப்படியே கிடந்தது. எல்லாவற்றையும் நகர்த்தி வைத்தாள். அடுப்பில் வெந்நீர் வைத்து கஞ்சி மாவு கரைத்தாள். பக்கத்தில் இருந்த குவளையில் தண்ணீர் நிரப்பி மடக் மடக்கென்று குடித்தாள். கொல்லைப்பக்கம் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது.
பரிமளா.

“அம்மா நான் பன்னெண்டு மணிக்கு வந்தேனம்மா .உள்ளாரா டிவி ஓடற சத்தம் கேட்டுச்சு, எவ்ளோ பெல் அடிச்சும் ஐயா தொறக்கவே இல்ல. நீ நாளைக்கு காலைல கஷ்டப்படுவேன்னு இப்போ ஓடியாறேன். வாசப்பக்கம் வந்தா ஐயா இருப்பாருனு பயம்”.

அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

“இந்த பாத்திரம் எல்லாம் முதல்ல தேச்சு வை. காலைல சீக்கிரம் வந்து பெருக்கி துடைக்கலாம்.
நான் ஐயாக்கு கஞ்சி குடுத்துட்டு வரேன்”.

ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்த சொக்கலிங்கம் ராதிகாவை முறைத்தார்.

“என்ன சத்தம் அங்க? நான் தான் ஒண்ணும் வேண்டாம்னு சொன்னேன் இல்ல”

“வந்த களைப்புல கொஞ்சம் அசதி. அதுக்கு எதுக்கு கோபம்?” இந்த கஞ்சி கொஞ்சம் குடிங்க. பரிமளா வந்தாச்சு. நான் பாத்திரம் ஒழிச்சு போடப் போறேன்”.

“ஓ. திருட்டுத்தனமா வாராளா ? ஏன் இந்த பக்கம் வராம இருட்டுல அந்த பக்கம் வரது? நான் என்ன புலியா சிங்கமா? நீ தான் நல்லவ நான் தான் வில்லன். எல்லார் கிட்டயும் இப்படி ஒரு இமேஜ் பண்ணி வெச்சு இருக்கே நீ”.

“நான் என்ன பண்ணினேன் இப்போ? நீங்க நடக்கற விதம் வெச்சு தான் உங்கள கணிப்பாங்க.மத்தவங்க எல்லாம் முட்டாள் இல்ல. இப்போ உங்கள வில்லனா காட்டி எனக்கு என்ன கிடைக்க போகுது?’, சட்டென்று உள்ளே போனாள்.

பரிமளா பாத்திரம் தேய்த்து துடைத்து வைத்தாள்.

“இந்த பரிமளா. பரோட்டா. வாங்கிட்டு வந்தேன். ரெண்டு பேருக்கும் வயிறு சரி இல்லை. நீ வீட்டுக்கு எடுத்துப் போய் பசங்களுக்கு குடு”.

ஒரு டம்பளர் பால் மட்டும் குடித்து விட்டு, குளித்து, படுக்கச் சென்றாள்.

அரை மணி நேரத்தில் சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

“என்ன ராதிகா , ரொம்ப டயர்டா? இன்னும் ஒரு மாசம். அப்புறம் உனக்கு ரெஸ்ட்”, சிரித்துக் கொண்டே பேசினார்.

“அது தான் நானும் யோசிக்கிறேன். ரொம்ப போர் அடிக்கும் வீட்டுலேயே இருந்தா. ஓடியே பழகியாச்சு”.ராதிகா பதில் சொல்லி முடிக்கும் முன்,

“ஏன்? இப்போ நான் இல்ல. டிவி பாக்கறேன், புக் படிக்கிறேன், வாக்கிங் போறேன். நீயும் வீட்ல இருந்தா, சுட சுட சாப்பிடலாம். மதியம் ஆறிப் போனதை கடனேனு சாப்பிடற நிலைமை இல்லை”,

“ஹ்ம். அப்புறம்?’

“பேசாம இந்த பரிமளாவை வேலை விட்டு தூக்கு. எங்க அம்மா அவங்க கடைசி நாள் வரைக்கும் வேலைக்காரி வெச்சது இல்லை. அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்கிட்டாங்க. நீ வீட்ல இருந்தா உனக்கும் பொழுது போகும்”.

“உங்களுக்கு என்னோட ஓய்வு பத்தி வேற ஒண்ணுமே தோணலியா?” ராதிகா குரலில் இருந்த வருத்தம் சொக்கலிங்கத்திற்கு புரிந்ததா தெரியவில்லை.

“போதும் ரொம்ப பேசாத. எனக்குத் தூக்கம் வருது என்றபடி திரும்பிப் படுத்தார்”.

இதோ வருது வருது என்று நினைத்த தினம் வந்தே விட்டது. அவளுக்கு ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் டின்னர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இத்தனை வருட சேவையைப் பாராட்டி அவளுக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சீப் டாக்டர் அவளை மதியமே வீட்டிற்கு சென்று விட்டு ஓட்டலிற்கு தம்பதியராக வரும்படி அனுப்பி வைத்தார். அப்படியும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப நான்கு மணி ஆகி விட்டது.

வீட்டிற்கு வந்தவள், சொக்கலிங்கம் வீட்டில் இல்லாதது பார்த்து திகைத்தாள். சரி பக்கத்தில் எங்கோ போய் இருப்பார் வந்து விடுவார் என்று நினைத்து டின்னெர்க்கு என்று வாங்கி வைத்த புது பட்டு புடவை எடுத்து உடுத்தினாள்.

கணவனுக்குத் தெரியாமல் அவருக்கு வாங்கி வைத்து இருந்த சஃபாரி சுய்ட் எடுத்து வைத்தாள்.

மணி ஐந்து. சொக்கலிங்கத்திற்கு போன் செய்தாள் . அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

சட்டென்று மனதில் ஒரு பயம். எதாவது ஆகி இருக்குமோ? ஏழு மணிக்கு அந்த விருந்தில் கலந்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது?

ஆறு மணிக்கு சொக்கலிங்கம் வந்து சேர்ந்தார். அழகாய் உடுத்தி காத்திருந்தவளை புதிராகப் பார்த்தார்.

“எங்க கிளம்பற?”

“என்ன கேக்கறீங்க? இன்னிக்கி என்னோட ரிட்டயர்மெண்ட் பார்ட்டி. ஒரு மாசமா இந்த நாள் பத்தி தானே பேசிகிட்டு இருந்தோம். இப்போ புதுசா கேக்குறீங்க? நான் தான் சொன்னேனே உங்க கிட்ட நம்ம ரெண்டு பெரும் போகணும்னு”

ராதிகாவிற்கு பதட்டம் தவிர்க்க முடியவில்லை.

“பார்ட்டி போகணும்னு சொன்ன. ஆனா நானும் வரணுமா?” உள்ளே நுழைந்து மெதுவாக உடை மாற்றிக் கொண்டார். ராதிகாவின் கண்கள் கடிகாரத்தில் நிலைத்தது.

“என்ன பேசறீங்க. நான் நேத்தி பேசும் போது கூட உங்க கிட்ட சொன்னேன். கிளம்புங்க உங்களுக்கு புது டிரஸ் வாங்கி வெச்சு இருக்கேன். போட்டுக்கோங்க”. அவள் கையில் வைத்து இருந்த உடையைப் பார்த்தார்.

“உங்க ஆபீஸ் பார்ட்டி, உன்ன கூப்பிட்டு இருக்காங்க. அங்க எனக்கு என்ன வேலை?”

மெதுவாகப் புரியத் தொடங்கியது ராதிகாவிற்கு.

உடையை சோபாவின் மேல் வைத்தாள்.

“இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?” குரலில் கொஞ்சம் கடுமை இருந்தது.

“இல்ல உங்க சீப்புக்கு என்னைத் தெரியும் இல்ல. எனக்கு ஒரு போன் பண்ணிக் கூப்பிட கூடாதா? மதிக்காத இடத்துக்கு நான் எதுக்கு வரணும்”

அலுப்பு தட்டியது ராதிகாவிற்கு . பல வருடம் முன் பால்ய ஸ்நேகிதியின் திருமணத்தில் தனியே நின்று பார்ப்பவர் கேள்விகளுக்கு சொன்ன பொய்கள் நினைவில் வந்து சென்றது.

“இதோ பாருங்க அவருக்கு மூணு நாளா எக்கச்சக்க சுர்ஜரீஸ். மூச்சு விட நேரம் இல்ல. உங்க ரிட்டயர்மெண்ட் போது என்ன யாரு கூப்பிட்டாங்க? நான் உங்க கூட சந்தோஷமா வரல? கிளம்புங்க. சீப் எங்கிட்ட சொல்லும் போது உங்க கணவரை நான் கூப்பிடறேன்னு சொன்னாரு. எனக்கு அவர் நிலைமை தெரியும். நான் தான். அதேல்லாம் அவர் எதிர்பார்க்க மாட்டார்னு பெருந்தன்மையா சொல்லி வெச்சேன். என் தப்பு தான். ப்ளீஸ் இன்னிக்கி எனக்கு முக்கியமான நாள். அத கெடுத்துடாதீங்க”

“ஓ . உங்க சீப் நிலைமை உனக்கு புரியும் ஆனா புருஷன் மனசு புரியாது. அப்படித்தானே? நீயே மதிக்கல அவங்க எப்படி மதிப்பாங்க? என் கூட வந்ததா சொல்லி காட்டுறீயா? நீயும் நானும் ஒண்ணா?”

“எனக்கு போராட நேரம் இல்லை. உங்களுக்கு பத்து நிமிஷம் டயம். நான் டாக்ஸி கூப்பிட போறேன். அதுக்குள்ள கிளம்புங்க. இல்லனா நான் தனியா போறேன். நீங்க எங்கன்னு கேட்டா பொய் சொல்றது ஒண்ணும் எனக்கு புதுசு இல்ல”

போனை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

பத்து நிமிடத்தில் வண்டி வரும் போது சொக்கலிங்கம் தயாராக இருந்தார். அவள் வாங்கி வந்த உடுப்பைப் போடவில்லை.

இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

நிறைய புகழுரைகள். அவளது நல்ல மனம், நேர்மை, தொண்டு மனப்பான்மை, அன்பு எல்லாவற்றை பற்றியும். அவள் வேலை செய்த டிபார்ட்மெண்ட் மட்டுமின்றி மற்ற டிபார்ட்மெண்ட்களின் பணியாளர்களும் அவளுக்கு பரிசுகள் கொடுத்தனர். சீப் பேசும் போது, சொக்கலிங்கத்தை ராதிகாவின் முதுகெலும்பு என்றார். மேட் பார் ஈச் அதர்.
ஆதர்ச தம்பதிகள். அவரது சப்போர்ட் ராதிகாவின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய ஊன்றுகோல் என்று சொல்லும் போது மட்டுமே சொக்கலிங்கம் முகத்தில் சிரிப்பு வந்தது.

வீடு வந்து சேர மணி பன்னிரெண்டாயிற்று. கலங்கிய கண்களுடன் வீடு வந்து சேர்ந்தவள் எதுவும் பேசாமல் தூங்கச் சென்றாள் .

அடுத்த நாள் காலை சொக்கலிங்கம் எழுந்து வரும் பொழுது ராதிகா குளித்து தயாராக இருந்தாள் .

“என்ன நேத்தியோட உன் வேலை முடிஞ்சாச்சு. ஞாபகம் இல்லயா? எங்க கிளம்பிட்ட? அடுக்களைக்குள் எட்டிப் பார்த்தார். எல்லாம் துடைத்து சுத்தமாக இருந்தது.

“நீங்க சொன்ன ஒரு சில விஷயங்கள் யோசிச்சு பார்த்தேன். சரினு பட்டுச்சு. பரிமளாவை வேலையிலிருந்து நிறுத்திட்டேன். ரொம்ப நாளா நீங்க சொல்லிகிட்டே இருந்தீங்க. இந்த வேலை முடிஞ்சதும் எனக்கு ஓய்வுன்னு. இங்க இருந்தா உங்களை கவனிக்கிறது, வீட்டு வேலை பாக்கறதுன்னு எனக்கு ஒய்வு கிடைக்க வழியே இல்லை. அதுனால ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன். ஒரு லேடீஸ் ஹாஸ்டெல்ல ரேஜிஸ்டெர் பண்ணி இருக்கேன். அங்கேயே மேட்ரன் வேலை. அங்க இருக்கற பெண்களை பாத்துக்கணும். சாப்பாடு குடுத்துடுவாங்க. சூப்பர்வைஸ் பண்ணினா போதும். பொழுதும் போகும். இப்போ தான் எனக்கு நிஜமான ஓய்வு. நீங்க தனியா இருக்கும் போது கொஞ்சம் உங்களால என்ன எல்லாம் பண்ணிக்க முடியும்னு பாருங்க. ஒரு மாசம் கழிச்சு நான் வரேன். அப்புறம் என்ன பண்ணன்னு முடிவு பண்ணலாம். ரொம்ப காலம் ஓடிட்டேன். கொஞ்சம் ஓய்வு எனக்கு வேணும் எல்லாத்துலயும்.

ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தார் சொக்கலிங்கம்.

தெருமுக்கில் ஆட்டோவுடன் நிற்கும் மங்கையை நோக்கி நடந்தாள். ராதிகா.

ஒரு மாதத்தில் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *