அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 7,650 
 

அம்மா அந்த இஞ்சீனியர் வந்தார்னா முதல்ல இந்த மண்ணை எல்லாம் எடுத்து அக்கட்டா போட சொல்லிடு, சொல்லிவிட்டு அம்மாவை பார்த்த மாலதி, அவள் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து அம்மா அம்மா என்று உரக்க கூப்பிட்டாள். திடுக்கிட்டு விழித்த அம்மா என்ன? என்ன? சொன்ன? ஆமா போ ! இவ்வளவு நேரம் கரடியா கத்திகிட்டு இருக்கேன், காதுல வாங்காம உட்கார்ந்துட்டு இப்ப கேளு. சலித்துக்கொண்டே மீண்டும் அந்த வேலையை சொல்லி செய்ய சொன்னாள். சரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள் அம்மா.

மாலதி அவசர அவசரமாய் பஸ் பிடிக்க வீட்டை விட்டு பஸ் நிலையத்துக்கு நடக்க ஆரம்பித்தாள். நடக்கும்போதும் அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்? என்ற எண்ணமே அவள் மனதில் ஒடிக்கொண்டிருந்தது.

அம்மா விவசாய தொழிலில் கரை கண்டவள். இரு பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நேற்று இரவில் பாலுக்கு பிரை ஊற்றி வைத்துள்ளதை சிலுப்பி மோராக்கி தலையில் ஒரு மண்பானையில் வைத்துக்கொண்டு, இன்னொரு பானையில் கெட்டி தயிரையும் ஊற்றி ஒரு கூடையில் வைத்து இடுப்பில் ஏற்றிக்கொண்டு பக்கத்து நகருக்கு .அத்தனை பாரங்களையும் சுமந்து கொண்டு கால் நடையாக கிளம்பி விடுவாள்.

அந்த வெயிலில் பகல் பனிரெண்டு மணி வரை சுற்றி அத்தனை மோர்,தயிர் இவைகளை விற்று விட்டு வீடு வந்தாளானால், கட கட வென ஒரு சொம்பு மிச்சமுள்ள மோரை குடித்து விட்டு பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு மதியம் சோறு தயார் செய்ய ஆரம்பித்து விடுவாள். இவர்கள் இருவரும் வந்து சாப்பிட்டு மீண்டும் பள்ளிக்கு கிளம்பியவுடன், கொட்டிலில் அதுவரை கட்டியிருந்த இரு மாடுகளையும், கூடவே கன்னுகுட்டியையும், கூட்டிக்கொண்டு மேவுக்கு கிளம்பி விடுவாள்.மாடுகளை மேவுக்கு விட்டு விட்டு அவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கரா தோட்டத்தை சீராக்க ஆரம்பித்து விடுவாள்.

வீடு வருவதற்குள் பொழுது சாய்ந்து விடும், வரும்போதே தோட்டத்தில் இருந்து விளைந்த காய்கறிகளை பறித்து வந்து விடுவாள். அதற்குள் மாலதியும் தங்கை விமலாவும்அம்மாளுக்கு உதவியாய் காப்பி தண்ணி போட்டு வைத்திருப்பார்கள். வந்தவுடன் அதை குடித்துவிட்டு இரவு வேலைகளை ஆரம்பித்து விடுவாள்.

அப்பா இறந்த பின்பு இவர்கள் குடும்பம், உறவுகள் எதிர் பார்த்தது போல் தளர்ந்து விடவில்லை.அப்பாவுடனே விவசாய வேலைகளுக்கு கூட மாட இருந்தவள், அப்பாவுக்கு பின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டாள்.

இருவருக்கும் படிப்பை தொடர முடியாமல் பன்னிரெண்டாவது முடியுமுன்னே பள்ளியை விட்டு நிறுத்தவேண்டியதாகிவிட்டது. அது அவளுக்கு மிகப்பெரிய வருத்தம்தான். அதை இவர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள். இருந்தாலும் சும்மா இருக்கவில்லை, அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போக சொல்லி விட்டாள். விவசாய வேலைகளுக்கு கூப்பிடவில்லை. படிப்பை நிறுத்து இரண்டு மூன்று வருடங்களிலேயே தகுந்த வரனை பார்த்து முடித்து விட்டாள். அந்த ஒரு ஏக்கரா காடும் இந்த செலவுகளுக்கு சரியாகி விட்டது. வீட்டில் இருந்த மாடுகளும் இனி தேவையில்லை என்று மகள்கள் சொல்ல அதையும் பெரிய மருமகன் ஏற்பாட்டில் விற்று விட்டாள். தனியாய் நீ இருக்க வேண்டாம் என்று பெரிய மகள் வீட்டிற்கு வர சொல்லி விட்டார்கள். அவளுக்கு மருமகன் வீட்டில் இருப்பது சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது, மருமகன் வாய் வார்த்தையாக சொல்லி விட்டாரே.

மாலதி தலையை உதறிக்கொண்டாள், பஸ் ஏறி வேலை செய்யும் இடத்தை அடைந்தவள், அதற்கு பின் அம்மாவை பற்றி மறந்து விட்டாள். மாலை வீடு திரும்பியவள் வீட்டுக்குள் அந்த மண் அப்படியே கிடந்ததை கண்டவள் கடும் கோபம் கொண்டு அம்மாவிடம் ஏம்மா அந்த இஞ்சீனியர் வந்தா இந்த மண்ணை எல்லாம் கொட்டி வெளியே போட சொன்ன்னில்ல, உங்கிட்ட தானே சொல்லிட்டு போனேன். ம்ம் ன்னு கேட்டுட்டு இப்ப ஒண்ணும் செய்யாம இருக்குது. எப்படி வீட்டுக்குள்ள புழங்கறது?அவளுக்கு வேலை ஆரம்பித்து மூன்று மாதமாய் இழுத்துக்கொண்டிருப்பதை இஞ்சீனியரிடம் சொல்ல முடியாமல் அம்மாவிடம் எகிறி விழுந்தாள். அம்மா அமைதியாக நின்றாள். நான் சொன்னேன் அவர் எடுத்துடறேன்னு சொன்னாரு, சொன்னவுடனே நீ கம்முனு விட்டுட்டியா? உடனே எடுங்க அப்படீன்னு சொல்லி வேலை வாங்கியிருக்கணுமில்லை. அம்மாவிடம் கொஞ்ச நேரம் சத்தம் போட்டு ஓய்ந்து போனவள் சமையலறைக்குள் நுழைந்து சமையல் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

உள்ளே வேலைகளை முடித்து அம்மாவுக்கும் அவளுக்கும் காப்பியை டம்ளரில் ஊற்றிக்கொண்டு வெளியே வந்தவள் அம்மாவை காணாமல் திகைத்தாள்.வெளியே வந்து எட்டி பார்த்தாள். தெருவில் எங்கும் நின்று கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.எங்கு போயிருப்பாள்? மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. காப்பியை உறிஞ்சிக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டவள் அம்மாவிடம் இன்று அதிகமாக பேசி விட்டோமோ? என்ற சிந்தனைக்குள் போனாள்

ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. கணவர் வந்து விட்டார். அவருக்கும் காப்பி கொடுத்துவிட்டு இந்த இஞ்சீனியரின் வேலையை பற்றி கொஞ்ச நேரம் புலம்பியவள் இந்த இஞ்சீனியரால எங்கம்மாவுக்குத்தான் திட்டு, என்று சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்த்து அம்மா இன்னும் வரவில்லை? என்று.

பதட்டமானாள், ஏங்க ஆறு மணிக்கு போன அம்மா இன்னும் காணோங்க, பதற்றத்துடன் சொல்ல கணவன் பதட்ட படாதே பக்கத்துல இருக்கற உன் தங்கச்சி வீட்டுக்கு போயிருக்கலாம், உடனே மாலதி தன் கங்கைக்கு போன் செய்தாள். அம்மா இங்கேதான் இருப்பதாக சொன்னவுடன் இவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த்து. அம்மா கிட்ட போனை கொடு என்றவள், ஏம்மா இப்படியா சொல்லாம கொள்ளாம போவியா? என்று மீண்டும் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். அம்மாவிடமிருந்து மெளனம்.

மீண்டும் தங்கைதான் போனுக்கு வந்தாள். அம்மா கோபமா இருக்கற மாதிரி தெரியுது. என் கிட்ட வந்து எனக்கு எங்காவது வேலைக்கு முயற்சி பண்ண சொன்னா,வீட்டு வேலை இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு சொல்லிட்டு இருந்தா, அப்பத்தான் நீ போன் பண்ணுன என்ன பிரச்சினை?கேட்ட தங்கையிடம். என்ன சொல்வது திகைத்து நின்று விட்டாள் மாலதி.

இரவு முழுவதும் கணவனிடம் அம்மாவை திட்டி விட்டேன் என்று புலம்பிக்கொண்டே இருந்தாள். காலை எழுந்து இவள் வேலைகளை முடித்து கிளம்பும்போது அம்மா வந்தாள்.

இவளுக்கு மீண்டும் கோபம் தலை தூக்க ஆரம்பித்த்து.ஏதோ சொல்ல வருமுன் அம்மாவே நான் நம்ம ஊட்டுக்கே போறேன்,அப்புறமா வாரேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய துணிமணிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். இவள் வாய் திறக்க முயற்சிக்கும்போது கணவன் சைகை செய்து பேச வேண்டாம் என்று சைகை காட்ட இவள் அமைதியானாள்.

அம்மா கிராமத்தில் இருந்த பழைய வீட்டுக்கே போய் விட்டாள்.இவளுக்கு எதையோ இழந்தது போலிருந்தது..கணவனிடம் சொல்லி வருத்த பட்டதற்கு, கவலைப்படாதே, உங்கம்மா இப்ப சந்தோசமாத்தான் இருப்பாங்க வேணுமுன்னா இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போய் பாத்துட்டு வா என்றார்.

அந்த வார விடுமுறையில் அம்மாவை பார்க்க தங்கையுடன் கிராமத்தில் அவள் வீட்டுக்கு சென்ற பொழுது “ வாங்க வாங்க” என்று புன் சிரிப்புடன் வரவேற்றாள் அவள் அம்மா.

பக்கத்து வீட்டிலிருந்து ஒரு குரல் யாருங்க ஆத்தா வந்திருக்காங்க? “வாங்க வாங்கன்னு” கூப்பிட்டிட்டுருக்கீங்க.

“என் புள்ளைங்கதான்” அம்மாவின் குரலில் பெருமிதம்.

எதுவோ புரிந்தது போலிருந்த்து மாலதிக்கு !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *