தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 3,383 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சரசாவுக்கு எழுதப்பட்ட சுருக்கமான கடிதங்கள் அவை. ஒரு பெண்ணின் மனத்தைத் தொட்டுச் சிலிர்ப்பு மூட்டி, சுகமான மையலில் ஆழ்த்தும் வாசகங்கள் இலை மறைவு காய் மறைவாக இடையிடையே குனிந்தும்நிமிர்ந்தும் நின்றன.

அந்தக் கடிதங்களை உயர்த்திப் பிடித்த படி ஒரு நாள் யாராவது தன் முன்னால் வந்து கர்ஜிப்பார்கள் என்று மகாலிங்கம் நினைத்துப்பார்த்ததில்லை.

சோமு இப்பொழுது கர்ஜித்துக் கொண்டு நிற்கிறான். “என்ன சொல்றீங்க… இதெல்லாம் நீங்க எழுதினதுதானே?”

மகாலிங்கம் ‘வெலவெல’த்துப் போய்விட்டார்.

“வந்து… நான்… நான்…!”-குரலில் நடுக்கம்.

“காதல்கடிதாசி எழுதற வயசாய்யா உமக்கு? எழுத்தைப் பார், எழுத்தை….த்தூ…. வெக்கமா இல்லே?”

கிளை முறிகிற மாதிரி ‘சட சட’ வென்றுவார்த்தைகளைக் கொட்டினான் சோமு. அவர் பதில் பேசவில்லை

தலை நிமிரவில்லை

“இப்போ இந்தக் கடிதாசிங்கதான் கிடைச்சிருக்கு சரசாவை வலையிலே தள்ள என்னென்ன அநியாயம் பண்ணி யிருக்கிறீரோ, எல்லாமே வெளியே வரத்தான் போகுது…”

“சோமு, நான் சொல்றதைக் கேட்பியா?” மகாலிங்கம் கெஞ்சினார்.

“நான் என்ன கேட்கிறது? நாலு பேர் முன்னாலே சொல்லுங்க. ஏன், ஊர்அறியச் சொல்லுங்க. ஒரு விசாரணைன்னு வரட்டுமே…” கொம்பேறி மூக்கன் மாதிரி அவரைக் கொத்திப் பிடுங்கிவிட்டு அவருடைய பதிலைச் சற்றும் எதிர்பார்க்காமல் இரண்டே பாய்ச்சலில் அங்கிருந்து போய் விட்டான் சோமு, அந்தக்கடிதங்களுடன்.

நுனிக்கொம்பில் நிறுத்தப்பட்டவரைப் போல் நடு நடுங்கி,பதைபதைத்துப் போனார் கொட்டிவிட்டுப் போகிறானே என்று நெளிந்தார். சரசாவுக்கு அவன் தூரத்து உறவுக்காரன். அன்றைக்கு அவளைத் திரும்பிப் பார்க்காதவர்களெல்லாம் இப்பொழுது வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

சோமு தன்னை பிளாக் மெயில் பண்ண நினைக்கிறானோ என்றுகூட எண்ணத் தோன்றியது. உள்ளுக்குள் பொருமினார்.

‘என் அந்தஸ்து என்ன, வயது என்ன கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் குதறிவிட்டுப் போகிறானே! ‘சாட்டை’ இப்பொழுது அவன்கையில் இருக்கிறது அடிக்கப் பார்க்கிறான். இவன் மட்டுமா? தெருவே எனக்கு எதிராகப் படை திரண்டு வரும்போல் இருக்கிறதே!”

உண்மைதான் அவருக்கு வயது அறுபது ஆகிறது. வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரைத் தாங்கியவர்களும், தலைமேல் வைத்து ஆடியவர்களும் முன்பு இருந்தார்கள். மகாலிங்கம் மனம் குலுங்கினார். சரசாவுக்கு எழுதிய அந்தக் கடிதங்கள்..! அதை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

‘நான் அப்படி எழுதியிருக்கக் கூடாதோ? எதை யெல்லாமோ மறைத்த சரசா இதையும் மறைத்திருக்கக் கூடாதா?’

சரசாவுக்குக் கடிதம் எழுதியது உண்மை. அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல; நான்கு கடிதங்கள். எதற்காக எழுதினார்? எந்த வேகத்தில்? எந்த மன நிலையில்? அவருக்கே சில சமயங்களில் குழப்பமாக இருக்கிறது. குழப்பத்துடன் தான் அந்தப் பழக்கமும் ஆரம்பித்தது.

“சரசா, எப்ப பார்த்தாலும் நீ ரொம்ப வாட்டமா இருக்கே. கவலையா தெரியறே ஏன்?”

கேள்விக்கு உடனடியாக பதில்கிடைக்கவில்லை அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை, அநேகமாக அது அவளுக்குத் தேவையில்லாததுதானே!

“சரசா, ஏதோ அநுதாபத்துக்காகக் கேட்கிறதா நினைக்காதே உண்மையான அக்கறையோடதான் கேட்கறேன்”

பதிலை வரவழைக்க சிரமப்பட்டாலும் சரசாவின் தயக்கம் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதில் அவருக்கு உறுதி.

“அம்மாவுக்கு உடம்புக்கு முடியலே அதனாலே நான் வந்திருக்கேன்” என்று சொல்லிக்கொண்டு வேலைக்கு. வந்தவள் அவள் வேலைக்காரிதான் அவருக்கு எல்லாம் என்ற நிலை. மகாலிங்கத்திற்கு ரிடயர்மெண்ட் கிடைப்பதற்கு முன்பே மனைவி அவரை விட்டு நிரந்தரமாகப் போய் விட்டாள் ஒரே மகள். கல்யாணத்திற்குப் பிறகு போனவள். போனவள் தான்ஏறத்தாழ உறவு மாதிரிதான் அக்கா மட்டும் உண்டு. தம்பி ஓய்வு பெற்றதும் தேடி வந்தாள்.

“நீ மட்டும் எதுக்குப்பா தனியா இருக்கே? எங்களோட வந்துடு, நாலு பேரோடு அஞ்சாம் பேரா. கலகலப்பா ஒரே இடத்தில் நம்ம காலம் கழியட்டுமே” என்றாள்.

“என்ன, அப்படிச் சொல்லிட்டே? ஐம்பத்தெட்டிலே முப்பத்தெட்டு வயது ஆசாமியாட்டம் இருக்கேன்னு எல்லாரும் தமாஷ் பண்றாங்க!” – மகாலிங்கம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“அப்போ இன்னொரு கல்யாணம் கூடச்செய்துக்குவே போலிருக்கே” என்று தமக்கை கேலியாகச் சொன்ன போது, அவர் அசட்டுத்தனமாகச் சிரித்தார்.

அக்காவை அனுப்பிய பிறகு தான் காலைக் கடிக்கும் மீன் மாதிரி மனதை எதுவோ வருடியது.

அதற்கு இசைந்தாற்போல் நேர்ந்தது தான் சரசாவின் பிரவேசம் ஏகாங்கியாக இருந்த மகாலிங்கத்துக்கு சரசாவின் அம்மா தான் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். சமயத்தில் அவள் படுக்கையில் விழப் போக சரசா அந்த வேலையைக் கவனிக்க வந்தாள்.

சரசாவை நேருக்கு நேராக வெறித்தோ, முறைத்தோ பார்ப்பது பெருமைக் குறைவு என்று நினைத்துக் கொண்ட மாதிரி மகாலிங்கம் கடைக் கண்ணாலேயே கவனித்தார் இமைக்காமல் பார்க்கிற அளவுக்கு வசீகரம் இல்லா விட்டாலும், மாநிறத்தில் வாழைத்தார் மாதிரி ஒரு வாளிப்பு. வயது முப்பது மதிக்கலாம்.

அவரால் ஒரேயடியாக ஒதுங்கியிருக்க முடியவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்து மனத்திற்கு இதமூட்டிக்கொண்டு குளிர்காய வேண்டும் என்ற வேட்கை.

“சரசா, உன் அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்கு?”

“இருக்காங்க!”விரக்தியான குரல்,

“அப்படீன்னா?”

“அப்பாவுக்கு சரியில்லே. அந்தக் கவலை வேறே, அதனாலே..”

“அப்போஒண்ணு செய்சரசா. தினம்நீயே வேலையைப் பார்த்துக்கோ. பாவம், அவங்களுக்கும் இல்லையா?”

அப்படித்தான் நடந்தது சமைத்து வைத்துவிட்டுச் சந்தடியில்லாமல் சரசாபோய்க்

சரசாவிடமும் ஒரு முறை சொன்னார்.

“எனக்கு சிலது பிடிக்கும் ஆனால்…”

“சொல்லுங்க!”

இடியாப்பத்திலிருந்து என்னென்னவோ ஒரு சிறு பட்டியல். அவளுக்குச் சன்னமான புன்சிரிப்பு வரும் போல் இருந்தது. அதை மகாலிங்கம் எதிர் பார்த்தார்.

உருவத்தை அளந்தாயிற்று செல்வக் களை இல்லை என்பதைத்தவிர அவள்மேனி ஒரு சிலையாகத்தான்இருந்தது. முகத்தில் மட்டும் சதா மேக மூட்டம், ஆழமாக மனத்தில் ஏதோ வேரூன்றிப் போறிருக்கிறது. அது அவளை அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது வயதுக்கு மீறிய விரக்தி முற்றுகையிட்டிருக்கிறது. புன்னகை மலர்வதில்லை. பெயருக்கு ஒரு நகையும் இல்லை மூக்கு குத்தி யிருந்தாள். ஆனாலும் மூளி, காதும் அப்படித்தான் காலியாக இருந்தது.

அவள் சிரித்து, ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மகாலிங்கத்திற்கு ஆசை, ஒரு வேகம். கொஞ்சம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைத்துக் கூப்பிட்டார்.

“சரசா, தப்பா நினைக்கக் கூடாது. முன்னாடியே ஒரு முறை கேட்டிருக்கேன் உன் மனசிலே ஏதோ குறையிருக்கு நான் தெரிஞ்சிக்கக் கூடாதா?” என்றார்.

அவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். இதழ் பிரியவில்லை. “அப்பா, அம்மாவைப் பற்றிக் கவலையா?”

“அதுவும் தான்!” என்றாள் அவள் சுருங்கிய தொனியில்.

“அப்போ, அது இல்லாமெ இன்னொன்றும் இருக்கு, இல்லையா? ஆமா. இருக்கும்… இருக்கும். இந்த வயசிலே அந்தக் கவலை இருந்தாகணுமே!”

“நீங்க என்ன சொல்றீங்க?” மருட்சியோடு சரசா கேட்டாள்.

“வயசுக்குரிய நியாயமான கவலை இருக்கும் இல்லையா, அதைச் சொல்றேன்”

ஒரு மௌனம் .

“என்ன சுமை இருந்தாலும் சமயத்திலே கொஞ்சம் சிரிக்கவும் வேணும் சரசா. சிரிச்ச முகத்தோடு நீ இருக்கணும்னு விரும்பறேன்”

சரசாவின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கத் துருவித்துருவி வழி தேடிக் கொண்டிருந்தார் மகாலிங்கம். சரசாவுக்கு என்ன கவலை என்பதை மகாலிங்கம் அடையாளம் கண்டு விட்டார். இத்தனை வயதாகியும் கழுத்தில் ஒரு தாலிச்சரடு ஏறவில்லையே என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஓர் ஆக்கிரமிப்பு. அது என்ன என்பதுபுரியா விட்டாலும் பூரிப்பு இருந்தது.

தழையைக் கடிக்கிற ஆட்டுக்குட்டி மாதிரி மனம் அந்த நினைவை மேய்ந்து கொண்டிருந்தது. ‘சமையல்காரியாக வந்து போகிறவளைத் தன்னோடு இருத்தி கொண்டால் என்ன? சம்மதிக்கக் கூடிய பக்குவம் சரசாவுக்கு இருக்காதா?’

“சரசா, உன் மனசு தளர்ந்து போயிருக்கு. காரணம் தெரிஞ்ச பிறகும் நான் மௌனமாக இருக்கிறது நல்லதில்லை அதனாலே..”

“ம்.. சொல்லுங்க”

“அதனாலே, உனக்கு சம்மதம்னா நான் உன்னை…”

மறு பேச்சில்லாமல் சரசாவைப் பார்த்தார். அவள் மெளனம் சாதித்தாள். அதைச் சம்மதத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

“ரெண்டு பேருக்கும் இடையில் என்னென்ன வித்தியாசம் இருக்குங்கிறது எனக்குத் தெரியும், உனக்கும் தெரியும். யோசிச்சிப் பார், சரசா”

அதற்குப் பிறகு சில நாள் பேச்சே இல்லை. மகாலிங்கத்திற்கு ஆற்றாமை விலகி நிற்க முடியாது போல் ஒரு வேட்கை எண்ணமெல்லாம் சரசாவைப் பற்றியே.

வெறும் வார்த்தையில் சரசாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையோ என்று மகாலிங்கம் நினைத்தார். பேச்சில் பிடிப்பு விழாவிட்டால் எழுத்தில் நம்பிக்கை வருமா?ஒரு யுக்தி தோன்றியது. ஒரு சிறு கடிதம் எழுதினார். இதமூட்டும் சொற்களைத் தொடுத்துச் சுருக்கமாக எழுதி சரசாவிடம் சேர்த்தார். அடுத்தடுத்து சில கடிதங்கள் சரசாவைத் தன்னுடன் இருத்திக் கொள்வதன் மூலம் அவள் குடும்பத்திற்கு ஆதரவாக, பற்றுக் கோடாக இருக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது நிச்சயம் அவள் நெஞ்சில் உறைத்திருக்கும் என்று மகாலிங்கம் நம்பினார்.

வீண் போகவில்லை. சரசா எதிரே வந்து நின்றாள், ஒருநாள்.

“என்ன, சரசா?”

“நீங்க எழுதியிருந்தபடி…”

“அப்போ உனக்குச் சம்மதம்?”

அவள் தலை குனிந்தாள், பிறகு நிமிர்ந்தாள் அவருடைய நெஞ்சம் நிமிர்ந்தது, இளமை முறுக்கு வந்துவிட்ட மாதிரி.

சமைத்துப் போட்டுவிட்டுப் போகிறவள் பரிமாறுகிற பொறுப்பையும் எடுத்துக் கொண்டாள். உரிமை கிடைக்க வேண்டியதுதான் பாக்கி.

“சரசா, இப்ப உன் முகத்திலே என்ன மாதிரி ஜொலிப்பு! கண் ரெண்டும் நட்சத்திரமா மின்னுது. நீ ரொம்ப அழகா இருக்கே”

மையலும் மதர்ப்பும் மெல்ல மெல்ல அவள் மனத்தில் படர்ந்து கொண்டிருந்தது.

“நினைக்சா வெட்கமாகூட இருக்கு, சரசா!”

“எதைச் சொல்றீங்க?”

“நான் உனக்கு எழுதின கடிதங்கள்! காதல் கடிதம்னு கூடச் சொல்லலாம் இல்லையா? அப்படியேதான் வச்சிக்குவோமே! அதிலே என்ன தப்பு?”

காதல்? இவருடைய காதல் எப்படிப்பட்டது? அவர் புரிந்து கொண்டிருந்தாரோ, இல்லையோ, வெள்ளமாக அது தறிகெட்டுப் புரண்டு போகும் சந்தர்ப்பமும் நேர்ந்து போயிற்று.

செந்தாமரை போல் சரசாவின் முகத்தில் செழிப்பு தோன்றியது. அதனூடே பீதியின் சுழிப்பும் இருந்தது.

“உங்க கிட்டே என்னை ஒப்படைச்சிட்டேன். ஊரறிய உரிமையை எப்ப என்கிட்டே ஒப்படைக்கப் போறீங்க?” என்று சரசா கேட்டபோது மகாலிங்கம் சிந்தனை மூட்டத்தில் இருந்தார்.

“நானும் யோசிச்சேன், சரசா இன்னொன்றையும் யோசிக்க வேண்டியிருக்கு.”

“என்னங்க அது?” பேதைமையோடு கேட்டாள்.

மகாலிங்கம் சொல்லவில்லை. மனம் சொல்லிக் கொண்டது. ‘ஏதோ பரீட்சை பண்ணிப் பார்த்தேன். ஒரு மூலையிலே ஏதோ அவநம்பிக்கை தெரியுது, நான் ஈடு கொடுக்க முடியுமான்னு’

“சொல்லுங்களேன்” என்றாள் அவள் கெஞ்சலாக. “சரசா, காதலிக்கிறவங்க கணவன் மனைவியாதான் ஆகணும்னு நினைக்கிறியா?”

“நீங்க கேட்கறது புரியலியே…!”

“ஒருவருக்கொருவர் ஆதரவா, பிடிப்பா இருந்திட்டா என்ன? உனக்கு எல்லா வசதியையும் தர்றேன், அதுக்கு மேலே இன்னொண்ணு எதுக்கு? நான் சொல்றது புரியுதா சரசா?” மகாலிங்கம் பார்வையால் அவள் உடலைக் கொத்துகிறார்.

சரசா வாயடைத்துப் போனாள். மகாலிங்கம் வாய் திறக்கவில்லை, சரசாவின் கண்ணில் மடை திறந்தது. நடைப்பிணமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

சரசாவை எதிர்பார்த்திருந்தார் வரவில்லை.

பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி பத்தாவது மாடியிலிருந்து விழுந்து இளம் பெண் மரணம்… தற்கொலை! உருவமில்லாத சரங்கள் நெஞ்சக் கூட்டில் பாய்ந்து இதயத்தைத் துளைத்து, குருதியை ருசிக்கின்றன. பயங்கர ஆயுதமாக எதிரே எகிறிக்கொண்டிருக்கின்றன, அவர் எழுதிய கடிதங்கள்.

சோமு மிரட்டுகிறான். இன்னும் யார் யாரெல்லாம் மிரட்டப் போகிறார்களோ!

நீதி விசாரணை நடக்கிறது. அவர் எழுதிய கடிதங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

‘இந்தக் கடிதங்களை எழுதியது நீங்கள்தானே?’

‘ஆம்.’

‘எந்த நோக்கத்தில் எழுதினீர்கள்?’

‘‘சரசாவுக்கு மகிழ்ச்சி உண்டுபண்ணுவதற்காக, அவள்மீது எனக்கேற்பட்ட இரக்கத்தினால்…’

‘இரக்கத்திற்குக் காரணம்?’

‘அவள் சோர்ந்து போயிருந்தாள் ஊக்கமளிக்க விரும்பினேன்.’

‘வேறு காரணமே இல்லையா?’

‘இல்லை’

‘சரசாவை எவ்வளவு காலமாக உங்களுக்குத் தெரியும்?’

‘சொல்லப்போனால் அந்தக் குடும்பத்துக்கு நண்பனாக இருந்து வந்தேன், பல வருஷமாக.’

‘சரசாவுடன் பழகி வந்தீர்கள், அல்லவா?’

‘ஆமாம். அவள் மிகவும் கவலையாக இருந்ததால் மேற்போக்காகப் பழகி வந்தேன்.’

‘சரசாவின் கவலைக்குக் காரணம்?’

‘குடும்ப நிலைமை, தாய் தந்தையின் தொல்லை. அவள் மகிழ்ச்சியாக இல்லை மகிழ்ச்சி உண்டு பண்ணுவற்காகப் பழகினேன்!’

‘அதற்காகவா காதல் கடிதம் எழுதினீர்கள்?’

‘காதல் கடிதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? கடிதம், அவ்வளவு தான்.’

‘அப்படியானால் உங்களுக்கு சரசாவின் மீது தனிப்பட்ட அக்கறை இருந்து வந்தது, சரசாவை அடைய வேண்டும் என்று விரும்பினீர்கள் இல்லையா?’

‘சரசாவை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதே விருப்பம்’

‘சரசாவுக்கு ஆசை காற்றியிருக்கிறீர்கள். வாழ்வளிப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது போன்ற ஒரு புனிதமான காரியத்தைச் செய்வதாக ஒரு பெண்ணிடம் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணும் இணங்கிய பிறகு, ‘உன்னை உரிமையாக்கிக் கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று அவளிடம் சொன்னால், இது அவள் முகத்தில் அறைந்தது போல் ஆகாதா? இதற்குப் பதில் சொல்லுங்கள்!’

பதில் இல்லை.

“என்ன சொல்கிறீர்கள்?”

‘மகிழ்ச்சி மிகுந்த வெறும் நட்பைத் தான் நாடினேன்’

‘நட்பு என்ற போர்வையில் உங்கள் இத்சையைத் தணித்துக் கொள்ளும் எண்ணம் இருந்திருக்கிறது. அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா?’

பதில் இல்லை மகாலிங்கம் விம்மி வெடிக்கிறார். மூர்ச்சை போட்டு…

நெஞ்சுக்குள் நடப்பதுதான் இந்த நீதி விசாரணை. அதற்கு முடிவே இல்லையா? அது முடிந்தால்தானே தீர்ப்பு!

மனம் நிமிர முயலும்போதொல்லாம் மனசாட்சி அழுத்திப் பிடித்துத் திணறல் மூட்டுகிறது. சிம்ம கர்ஜணையாக எது எதுவோ, யார் யாரோ பாய்வதும், பற்றி உலுக்குவதுமாக…

மகாலிங்கம் மன்றாடுகிறார். ‘நான் எழுதிய கடிதங்களே ஆயுதமாகி என்னைக் சித்திரவதை செய்கின்றன. எனக்கு ஒரு தீர்ப்பு வேண்டும்!’

மீண்டும் ஓலம், ‘சரசா, யார் யாரோ என்னை மிரட்டுகிறார்கள். நீயும் என்னை மிரட்டிப் பணிய வைத்திருக்கக் கூடாதா? என் சபலத்திற்கு சவுக்கடி கொடுத்து உன் கழுத்தில் தாலிச்சரட்டை ஏற்றிக் கொண்டிருக்கக் கூடாதா? சரசா, நான் உன்னைத் தொட்டது உண்மை. உன் நெஞ்சில் ஆசைக்கனலை மூட்டி எப்பொழுது உன்னைத் தீண்டி விட்டேனோ, நீ எனக்கு… எனக்கு… தீர்ப்பளிக்காமல் உன்னை நீ முடித்துக் கொண்டு போய்விட்டாயே சரசா…’

மகாலிங்கம் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார். இடை இடையே அவர் முணுமுணுக்கிறார்.

‘சரசா, உன் ஆத்மா சாந்தி அடையட்டும்!’

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *