தடம் மாறும் தாற்பரியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,143 
 

அந்த CAS எனப்படும் ‘சிறுவர் ஆதரவுச் சபைக்’ கட்டிடத்துக்குள் நுழையும் போது, மனசு கொஞ்சம் படபடத்துக் கொள்கிறது.

“பாரபட்சமின்றி இருக்க வேணும்; வெறும் குரலைக் கொடுக்கிறது தான் எங்கடை வேலை; மற்றும்படி எந்தக் கலந்துரையாடலிலும் நாம் ஒரு பங்காளர் இல்லை” என்றெல்லாம் மொழிபெயர்ப்பாளருக்கான வகுப்புக்களில் திரும்பத்திரும்பச் சொல்லி மனதில் பதிக்கப்பட்டிருந்தாலும்கூட, சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல்கள் ஏற்படுத்தும் உணர்வுகள் மனசை மிகவும் இம்சைப்படுத்தி விடுவதற்கு, நானும் ஒரு தாயாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான்.

வரவேற்பறையினுள் புகுந்ததும், “எனது பெயர் லதா. தமிழ் மொழிபெயர்ப்பாளர். இரண்டு மணிக்கு, சில்வியாவுடன் எனக்கு ஒரு அப்பொயின்மென்ற் இருக்கிறது” என வரவேற்பாளருக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

பிள்ளைகள் ஏதாவது ஒரு விதத்தில் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது பாராமுகமாக விடப்படுகிறார்கள் எனச் சந்தேகம் வரும் சூழல்களில், குறித்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக CAS அந்தக் குடும்பங்களினுள் இடையீடுசெய்வது வழமை. அதுவும் அவர்களுடைய அலுவலகத்தில் அப்பொயின்மென்ற் என்றால் சற்றுச் சிக்கலான பிரச்சனை தான் என என் அனுபவத்தின் மூலம் தெரிந்திருந்தது.

“சரி, வருகையாளர்களுக்கான இந்தப் புத்தகத்தில் கையொப்பமிடுங்கள்” என்று சொல்லிவிட்டு அனுமதிச் சீட்டு ஒன்றைத் தருகின்றாள், அந்த இளம் பெண் வரவேற்புப்பாளர்.

கண்களால் அவ்விடத்தை ஒரு முறை வலம் வந்துவிட்டு, அங்கு இருந்த ஒரு கதிரையில் போய் அமர்ந்து கொள்கிறேன் நான்.

ஏக்கம் நிறைந்த கண்களுடனும், கனமாகத் தெரிந்த ஒரு பெரிய பையுடனும் மறு பக்கத்தில் இருந்த அந்தத் தமிழ் பெண்ணைப் பார்த்த போது அவளுக்குச் சேவை வழங்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது புரிந்தது.

எனது வேலைக்குரிய ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறாமலிருக்கவென கைப்பைக்குள் இருந்த ‘உள்ளும் புறமும்’ என்ற கதைப் புத்தகத்தை எடுத்து வாசிக்க முயன்ற போது, வாசலில் கேட்ட பலமான காலடிச் சத்தங்கள், என் கவனத்தை வாசலை நோக்கித் திருப்பின.

ஓடி வந்த வேகத்தில், “மம்மி” என்று மிகக் குதூகலமாக கூவிய படி அங்கிருந்த அந்தத் தமிழ்ப் பெண்ணை இறுகக் கட்டிக் கொள்கிறாள் மூன்று வயது மதிக்கக் கூடிய ஒரு சிறுமி. அவளின் பின்னால் இரு சிறுவர்களும் அவர்களின் தந்தை எனச் சொல்லக் கூடிய ஒரு நடுத்தர வயது மனிதனும் வந்தனர்.

அதைத் தொடர்ந்து, “நீங்கள் தானா மொழிபெயர்ப்பாளர்?” என ஆங்கிலத்தில் கேட்டபடி என் அருகே வந்த சுருட்டை முடியும், கவர்ச்சியான கண்களும் கொண்ட அந்த அழகான பெண்ணை நோக்கி “ஆமாம்” சொல்லும் போது “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்”, எனச் சொல்ல வேண்டும் போல வாய் குறுகுறுத்தது. ஆனால் என் வேலைக்குரிய சட்ட திட்டங்கள் மீண்டும் நினைவுக்கு வர, “எனது பெயர் லதா. ‘லோலோவின்’ ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர். நீங்கள் சொல்கிற எல்லாவற்றையும் முடியுமான அளவுக்கு சரியாக மொழிபெயர்த்துச் சொல்வதுடன் அவற்றை அந்தரங்கமாகவும் வைத்திருப்பேன். எந்தப் பக்கமும் சார்ந்து கதைக்க மாட்டேன்”, என என்னை உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்து கொள்கிறேன் நான்.

பின்னர் எங்களைப் பார்ததும் எழுந்து நின்ற அந்தப் பெண்ணும் அவளது மூன்று பிள்ளைகளும் அந்த மனிதனும் எம்மைப் பின் தொடர, அந்த அலுவலகத்துக்கு அருகில் இருந்த குழந்தைகள் விளையாடும் மைதானத்துக்கு நாங்கள் போகிறோம். போகும் வழியில் அவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.

“தாய் தன் பிள்ளைகளுடன் என்ன கதைக்கிறா, பிள்ளைகள் அவவுடன் என்ன கதைக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் மொழிபெயர்த்தால் போதும்”, என என்னிடம் சொல்கிறா, சில்வியா.

பின்னர், அந்த மைதானத்தில் அருகில் போடப்பட்டிருந்த ஒரு வாங்கைக் காட்டி, இதில் இருப்போமா எனச் சில்வியா கேட்ட போது, “இல்லை, வெய்யில் இல்லாத இடமாக வேண்டும்”, என ஒரு மரத்தின் கீழ் போய் அமர்ந்து கொண்ட அவள், அவசரம் அவசரமாக தனது பைக்குள் இருந்த பலாப்பழ ரின்னைத் திறந்து அதைத் தனது மூன்று பிள்ளைகளுக்கும் மாறி மாறித் தீத்த ஆரம்பித்தாள்.

“அம்மா, உங்கடை லோயரிட்டையிருந்து உங்களுக்குக் கடிதம் வந்ததே?” எனக் கேட்கும் அவளது மூத்த மகனின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமலே, “சாப்பிடு, சாப்பிடு” என்று அந்தப் பலாப்பழத்தைக் கொடுப்பதிலேயே அவளின் முழுக் கவனமும் இருந்தது. மகனுக்கோ அந்தச் சாப்பாட்டை விட பதிலே மிக முக்கியமாக தெரிந்தது போலும், அதனால் அவன் அதையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான்.

பின்னர் நிலைமையை மாற்றவோ என்னவோ, என்னையும் சில்வியாவையும் பார்த்து, “உங்களுக்குப் பலாப்பழம் வேண்டுமா?” எனச் சைகையால் கேட்டவள், நாங்கள் வேண்டாம் என்றதும், தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் இலங்கையில் தன்ரை வீட்டிலை பலாமரம் நிற்பதை எங்களுக்குக் கஷ்டப்பட்டு விளங்க வைக்க முயன்றாள்.

முடிவில் பிள்ளைகளும் பெற்றோரும் ஊஞ்சல்களில் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஆட்டத் தொடங்கினார்கள்.

அவளை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதும், அவளுடன் கொஞ்சலாக் கதைப்பதுமான அவனின் செய்கைகளில் அவளைப் பிரிந்திருக்கும் விரகதாபமும் தவிப்பும் தெரிந்தன. பிள்ளைகள் தமக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். வேறு சில குடும்பங்களும் அங்கு நின்றனர்.

மழை வரப் போகிறதா அல்லது அது இடம் மாறும் வெறும் கார் முகில் கூட்டமா எனத் தெரியவில்லை. ஓடிக்கொண்டிருந்த கார்மேக முகில்க் கூட்டத்தினுள் தான் ஒளிவதும் பின் வெளியில் வருவதுமாக சூரியன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தின் பின் சில்வியாவை நோக்கி வந்த அவன், “இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் இப்படிச் சந்திக்கோணும்? எங்கடை பிரச்சனையை கொஞ்சமாவது விளங்கிக் கொள்ளுங்கோவன். என்ரை மனிசி இல்லாமல் என்னாலை பிள்ளைகளைத் தனிய வளக்கேலாது. அவவின்ரை இடத்தை என்னாலை நிரப்பவுமேலாது. அதோடை சும்மா தேவையில்லாமல் நான் இரண்டு வீட்டுக்கு வாடகைக் காசு குடுத்துக் கொண்டிருக்கிறன். எப்ப தான் உங்கடை அறிக்கையை குடுக்கப் போறியள்?” என மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் கூறி முடித்தான்.

“நான் அவதானித்த விடயங்கள் பற்றிய என்னுடைய அறிக்கையை நான் விரைவில் சமர்ப்பிப்பேன். பிறகு உங்களுடைய மனைவி போகும் ‘கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகுப்புக்களின்’ இணைப்பாளர் அவவின் முன்னேற்றம் பற்றி விபரிக்க வேண்டும். அவை எல்லாவற்றையும் பார்த்த பின்னர், அவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு தன்னுடைய தீர்மானத்தை அடுத்த கோட்டுத் தவணையின் போது நீதிபதி சொல்வார். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்”, எனச் சில்வியா அவனுக்கு ஆங்கிலத்தில் விளங்கப்படுத்திக் கொண்டிருந்த போது அவர்களின் இரண்டாவது மகன், தனது தங்கையின் கன்னத்தில், அவள் அழ அழ மாறி மாறி அறைந்து கொண்டிருந்தான். அவளின் அலறலுக்கு மேலாகத் தாய் சத்தமாக கத்திக் கொண்டிருந்தாள்.

“பாத்தீங்களா, இவனை! எந்தச் சொல்லும் கேக்காமல் இப்படி நடக்கிற இவனை வைச்சுக் கொண்டு நாங்கள் என்ன செய்யிறது? மூண்டு பிள்ளையளோடையும் தினமும் கஷ்டப்படுகிற என்ரை மனுசிக்கு, அண்டைக்கு அவன்ரை தொந்தரவைத் தாங்க முடியேல்லை. சும்மா ஒருக்கா அவனின்ரை காதை முறுக்கி, சின்னதாக அடிச்சதை, அவன் ரீச்சருக்குச் சொல்ல, பிறகு நீங்கள் அதைப் பெரிசாக்கி, இப்ப எங்கடை வாழ்க்கையைப் பாழாக்கிறியள்…” அவன் உணர்ச்சி பூர்வமாக கோபத்துடன் பொழிந்தான்.

தான் இடை மறிக்க, மறிக்க அவன் நிற்பாட்டாமல் அப்படிச் சொன்னது, சில்வியாவுக்கு கோபமூட்டியதை அவளின் சிவந்த முகம் தெளிவாகக் காட்டியது.

“சரி, உங்களுடைய சந்திப்புக்கான நேரத்தை நான் இத்துடன் முடித்துக் கொள்ளப் போகிறேன். இந்தச் சம்பவம் பற்றி நான் என்னுடைய மேற்பார்வையாளருடன் கதைக்க வேண்டும். உங்களுடைய மனைவியின் அந்தச் செய்கையை, இப்படி நியாயப்படுத்தும் உங்களுடன், உங்களின் பிள்ளைகள் இருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பானதா என நாம் ஆராய வேண்டிய தேவை இப்ப வந்திருக்கிறது. பிள்ளைகளைத் துன்புறுத்துவது கூட இந்த ADHD ( கவனக்குறைவும் அதீத செயற்பாடும் கலந்த குறைபாடு) க்கு காரணமாக இருக்கும். அதை மிக மோசமாக்குவதாக அமையும் என்றெல்லாம் நாம் கதைத்தது, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அத்துடன் பெற்றோரிடமிருந்து தான் பிள்ளைகள் வன்முறையைக் கற்றுக் கொள்கிறார்கள், என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்றெல்லாம் காரமாகச் சொல்லிவிட்டு சில்வியா எழும்பினா.

பெரியதொரு அலை வந்து எல்லாவற்றையும் அடித்துச் சென்ற மாதிரி, பூகம்பம் ஒன்று வெடித்து சிதறியது போல… சட்டெனச் சில நிமிடங்கள் ஒரு பலத்த அமைதி நிலவியது.

“நேரம் முடிஞ்சுதாம்… சீ, இவன்ரை பழக்கவழக்கத்தாலை சில்வியாவுக்கு கோவம் வந்திட்டுது. இவனாலை எப்பவும் பிரச்சனை தான் என்று சொன்ன அவனைப் பரிதாபமாகப் பாத்தாள், அவள். பின்னர், பிள்ளைகளைப் பார்த்து, “சரி, பிரியா, சுதன். இந்த பையிக்கை கொஞ்சம் முட்டை மாவும் தொதலும் கிடக்குது. இரவைக்கு அதைச் சாப்பிடுங்கோ… நாளைக்கு வடிவா எண்ணெய் தேய்ச்சு முழுகுங்கோ. திரும்ப அடுத்த கிழமை வந்து விளையாடலாம், என்ன?” என்றாள் அவள்.

மூத்த மகன் வந்து, “ஹக் மீ” என்று சொல்லி தாயைக் கட்டி முத்தமிட்டான். மற்றவன் பேசாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். சின்னவள் வந்து அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “மம்மி, நோ, நோ, ஐ டோன்ற் வான்ற் ரு கோ, நீங்களும் எங்களோடை வாங்க மம்மி… ஐ வான்ற் மம்மி, ஐ வான்ற் மை மம்மி!” என்று பெரிதாகச் சத்தம் போட்டு அழுதாள்.

அப்படி அவள் அழ அழ அவளைத் தாயிடமிருந்து பறித்தெடுப்பது போலத் தூக்கி எடுத்த அவன், “இந்த வெள்ளையளுக்கு என்ன தெரியும்? பதினெட்டு வயசானதும் இனி உன்ரை வேலையை நீ பார் எண்டு, தங்கடை பிள்ளையளை இவை கலைச்சுவிடுற மாதிரியே நாங்கள் பிள்ளை வளக்கிறனாங்கள்?” என வெறுப்பாகச் சொல்லிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

எங்கிருந்தோ வந்து என்னில் பட்டுத் தெறித்த மழைத்துளி மழை வரலாம் என அறிகுறி காட்ட வானத்தை மறைத்திருந்த கரும் மேகக் கூட்டங்களை அண்ணாந்து பார்க்கின்றேன். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த சூரியனை அங்கே காணவில்லை.

கேள்விக்குறியாகிப் போன அந்தச் சின்னஞ் சிறு குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி என் இதயம் பலமாகக் கனத்தது.

நன்றி: ‘முகங்கள்’ சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *