சாது மிரண்டால் (அ) குணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 12,332 
 

விழிப்பு வந்த பொழுது மணி சரியாகத் தெரியவில்லை. படுக்கை அறையின் கண்ணாடி ஜன்னல்களின் திரைச்சீலையினை மனைவி நன்றாக இழுத்து மூடியிந்ததும் ஒரு காரணம். ஓ..! இன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா, அதுதான். லீவு நாள் என்றால் அவள் அப்படித்தான் செய்வாள். அப்பொழுது , ‘சரட்’ என்று ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை கீழே விழுந்த சத்தம் கேட்டது. அந்தப் பை ‘கம்ப்பியூட்டர் டேபிள்’ மேல் அல்லவா இருந்தது. அது ஏன் கீழே விழுந்தது? அதை யார் தள்ளியது? முழுவதும் விழிப்பு வந்திரததால் புரியவில்லை. மெதுவாகக் கேட்டேன், “ஏன் மீனாட்சி, ஏதோ கீழ விழுந்த மாதிரி சத்தம் கேட்கலை?”

“சும்மா படுங்க. ஏதும் விழலை. ஞாயித்துக்கிழமை கூட தூங்கவும் மாட்டீங்க, தூங்கவும் விட மாட்டீங்க” கொஞ்சம் அதட்டலாகவே சொன்னாள். மணமாகி பதிணெட்டு வருடமாகிவிட்டதே ! கொஞ்சம் கழித்து, படுக்கையில் இருந்து எழுந்து கம்பியூட்டர் டேபிள் அருகே போனாள். “ஆமாம், இந்த பிளாஸ்டிக் பை கீழ விழுந்திருக்கு”, யோசனையாய்ச் சொன்னாள். “இதைத் தையல் மிஷின் மேலயீல்ல வைச்சிருந்தேன், யாரு கம்பியூட்டர் டேபிள் மேல வைச்சிருப்பாங்க!” அவளே பதிலும் சொல்லிகொண்டாள், “வேற யாரு ? நம்ம வேலைக்காரி லட்சுமியாத்தான் இருக்கும். அந்தப் பையில கோடாலித் தைலம் பாட்டில் எல்லாம் இருந்துதே! கொஞ்சம் கூடப் பொறுப்புங்கறதே கிடையாது அவளுக்கு. அது மட்டும் உடைஞ்சிருக்கட்டும், இந்த மாச சம்பளத்தில பிடிக்கிறேனா இல்லையா பாருங்க”.

பையை எடுத்துப் பார்த்து விட்டு, உடையவில்லை என்று சமாதானம் செய்துகொண்டுதான் வந்து படுத்தாள். இருந்தாலும் லட்சுமி புராணம் தொடர்ந்தது. ”

ஒரு அரை மணி நேரம் மீண்டும் கண்ணயர்ந்திருப்பேன். அப்பொழுது போன் மணியடித்தது. அந்த சத்தம் கேட்டு, கண் திறந்து எழுந்து அறையினை விட்டு வெளியே வந்தேன். போன் வந்தது சின்ன மகனுக்கு. அவன் சொன்னான், “அப்பா, ரஞ்ஜித் போன் பண்றான், அவுங்க வீடெல்லாம் காலையில லேசா ஆடுச்சாம். ‘எர்த் குவேக்’ ¡ம். நம்ம வீடு ஆடுச்சான்னு கேட்கிறான். ஆடுச்சாப்பா? ”

“அப்படியா, அதானே பார்த்தேன் காலையில பெட் ரூம் டேபிள் மேல இருந்த பிளாஸ்டிக் பை திடீர்ன்னு கீழ விழுந்துச்சு..” அவனுக்குப் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் மனைவியும் எழுந்து வந்து விட்டாள்.

“ஏங்க இன்னைக்கு தேதி என்ன 26 தானே ! டென்டிஸ்ட் கிட்ட போகனுமே. உங்க அருமை மக லதாவுக்கு எட்டரை மணிக்கு பல் டாக்டர் கிட்ட அப்பாய்ண்மெண்ட்.. மறந்தே போச்சு சிக்கிரம் கிளம்புங்க”

ஆமாம் அந்த மனுஷன், அப்பயிண்மெண்ட் வாங்கிட்டு நேரத்துக்குப் போகலையின்னா ,கடிச்சுக் குதறிடுவார். அப்புறம் அலைய விட்டு அடுத்த வாரம் தான் பார்ப்பார். அவர் கூடப் பரவாயில்ல, அந்த செக்ரெட்டரி, அப்பப்பா, அவங்களைச் சமாளிக்காவே முடியாது.

காப்பி மட்டும் குடித்துவிட்டு, வேகமாய் நானும் என் மகளுமாய் படியிறங்கினோம். ” எங்க சார் கிளம்பிடீங்க? கடல் தண்ணி உள்ள வந்திடுச்சாம்”, மூணாம் நம்பர் மாமா, அவர் விட்டு வாசலில் நின்றபடியே சொன்னார். “இவளுக்கு பல் டாக்டரிடம் காட்டனும் சார், எட்டரை மணிக்கு அப்பாய்ன்மெண்ட்'”. சொல்லிவிட்டு வேகமாக கீழிறங்கி போனோம். இவருக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பார்த்தாலும் கார்ப்பரேஷன் தண்ணி, டேங்க்கர் தண்ணி அப்படீன்னு ஏதாவது சொல்லிக்கிடே இருப்பார்.,

ஸ்கூட்டரை எடுக்கலாம் என்று பார்த்தால், வாசலில் கூட்டமாய் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இருக்கட்டும் எதுவோ, மணி இப்பவே எட்டு. பதைபதைப்புடன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய, வாட்ச்மென் மெதுவாக கிட்ட வந்தார்.” சார் என்னவோ கடல் தண்ணி உள்ள பூந்திடுச்சாம், அல்லாம் ஒடியாராங்க” என்றார். அவர் முகத்தில் கலவரம்.

என்ன இது கடல் தண்ணி உள்ள வர்றது ! எனக்கு ஒன்றும் புரியவில்லை. மகளை அங்கேயே வாட்ச்மெனின் நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, ரோட்டிற்க்குப் போய் பார்க்கலாம் என்று தெருவில் இறங்கினேன். வேட்டி பனியன்களுடன் பலரும் கூடி நின்று கவலையாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

நெருங்கி விபரம் கேட்க, “மைலாப்பூரில் கடல் தண்ணி வந்திடுச்சாம்” என்றார்கள். நாங்கள் இருப்பது அபிராமபுரம். மைலாப்பூரில் இருந்து கொஞ்ச தூரம் தான்.

மைலாப்பூர் பக்கம் போகும் ரோட்டைப் பார்க்க , ஆண்களும் பெண்களும், பதறியபடி ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தது தெரிந்தது. வேகமாக அந்தப் பக்கம் போனேன். நிறைய ஏழை ஜனங்கள். அவர்கள் தலைகளிலும் கைகளிலும் முட்டைகள், பெட்டிகள் பைகள். கண்களில் கலவரமும் திகிலும். அப்படிப் பலரையும் பார்க்கவும், என்னிடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது. விபரம் கேட்டால் சொல்லக் கூடிய நிலையில் அவர்களில் எவரும் இல்லை. பதட்டமும் கலவரமுமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்ன என்று கேட்டதற்கு “ம்ம்.. போய்ப் பாரு நீயே ” என்றார்கள் கோபமாய். நிலமை மிகத் தீவிரம் தான் என்பது என்ற உண்மை முகத்தில் அறைந்தது.

அப்பொழுது எதிர் வீடு சங்கர் அப்பா, தன் மோட்டர் சைக்கிளில் வேகமாக வந்துகொண்டிருந்தார். .அவரை எனக்கு நல்ல பழக்கம். என்னை பார்த்தும் நிறுத்தினார். அவர் பக்கம் போனேன். கேட்டேன்.

“என்னன்னு பார்போமின்னு போனேன், விடலை சார். தண்ணி நார்ட்டன் ரோடு வரை வந்திடுச்சின்னாங்கோ, போகாத போகாதன்னு விராட்டினாங்கோ ஏதோ யானை துரத்துராப்ல வண்டியைத் திருப்பிகினு பறந்து வந்திட்டேன்”. அவர் கொஞ்சம் சிரித்தபடி சொன்னாலும், அவர் முகத்திலும் இனம்தெரியாத பயம் சிறிது இருக்கத்தான் இருந்தது. அவர் சொன்ன நார்ட்டன் ரோடு பக்கத்தில் தான் இருந்தது. அப்படியென்றால் என்ன தான் நடக்கிறது? இது என்ன? கடல் தண்ணி ஏன் உள்ளே வருகிறது! அதுவும் இவ்வளவு பேர் விட்டை விட்டு சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஓடிவருமளவு? ஆற்று வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு வருவது மாதிரியல்லவா இருக்கிறது இவர்கள் சொல்லுவதைப் பார்த்தால்!

அவர் சொல்லி முடிக்கவும், என்றும் இல்லாத அதிசயமாக 12c பேருந்து நாங்கள் நின்று கொண்டிருந்த தெருவிற்கு வந்தது. அது போக வேண்டியது மெயின் ரோட்டில். அதை திருப்பி விட்டிருக்கிறார்கள் போல. பின்னே! சங்கர் அப்பா சொன்னாரே. டூ வீலரில் போனவர்க¨ளியே விடவில்லையாமே. இவ்வளவு மக்கள் உட்கார்ந்திருக்கும் ‘பஸ்’சையா விடப் போகிறார்கள். அதான் திருப்பி விட்டிருக்கிறார்கள். பஸ்ஸின் உள்ளே அமர்ந்து இருந்தவர்களுக்கு விபரம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் போலீஸ், அந்தப் பக்கம் பஸ் கார் எதையும் விடவில்லை என்று மட்டும் சொன்னார்கள். அப்படியென்றால் உண்மையிலேயே ஏதோ பிரச்சனை தான் போல. அடக் கடவுளே!

சரி, எதோ நடந்து இருக்கிறது. என்ன என்று தெரியவில்லை. வீட்டிற்கு அவசரமாக வந்தேன். போய் தொலைக்காட்சி பார்த்தால் ஏதாவது தெரிகிறதா என்று பார்ப்போமென்று. நான் வந்தது தான் தாமதம், வீட்டருகே நின்ற பலரும் ‘என்னவாம், என்னவாம்’ என்றார்கள். கடல் தண்ணி பெரிய அளவில ‘சிட்டி’க் குள்ள வந்திடுச்சாம். மைலாப்பூர்ல நார்ட்டன் ரோடு வரை வந்திடுச்சாம். பஸ்செல்லம் விடலையாம், திருப்பிவிடுறானுவளாம். நமம் சங்கர் அப்பா பாக்காலாம்முன்னு போயிருக்கர் யாரையும் விடலையாம். தொரத்துராங்களாம். குப்பத்து ஆளுங்க முட்டை முடிச்சோடா ஓடி வர்ராங்க. சாரிசாரியா மக்கள் மைலாப்பூர் பகத்திலிருந்து வெளியறி அந்தப் பக்கம் போய்க்கெட்டெ இருக்காங்க.” என் குரலில் இருந்த பதட்டமும் சேர , கேட்ட மற்ற பிளாட்டுக் காரர்களுக்கும் பயம் தொற்றி¢கொண்டது.

இன்னது என்று புரியாத பயம். ” டி வி பார்த்தா தெரிஞ்சிடும் சார்” கீழ் வீட்டு பாய் சொன்னர். ஆமாம் என்று சொல்லிவிட்டு , : அப்பா, மணி எட்டு இருபதாச்சுப்பா” என்ற மகளை “பேசாமல் வா” என்று அழைத்துக் கொண்டு தாவி மாடியேறினேன்.

தனியார் தொலைக் காட்சியில் அப்பொழுதுதான் அதை பற்றிய நேரடி ஒளிபரப்பு (!) தொடங்கியிருந்தார்கள். உள்ளெ வந்ததும் மனைவி விபரம் சொல்ல ஆரம்பித்தாள்.

” டீ.வீ யிலே போடுறானே, பெரிய பெரிய கடல் அலைகளாம், அப்படியே உள்ளே வந்து அடிச்சிதாம்.”

ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இது என்ன?, கடல் தண்ணி எவ்வளவு தூரம் வந்திருக்கு, திரும்ப வருமா? பிரச்சனை முடிஞ்சிருச்சா, இன்னும் இருக்கா? வயிற்றில் பாயும் அமிலத்துடன், டீ. வீ யே கதி யென்று அதைப் பார்க்க பயம் இன்னும் கூடுதலானது. கடற்கரையிலேயே ஒரு காமிராவுடன் நேரடி ஒளிபரப்பு செய்ய தொடங்க , கடலின் திடீர் பாய்ச்சலால், அலைக்கழிக்கப்பட்ட பகுதிகளையும், மக்கள் கூட்டம் கூட்டமாக ஓடுவதையும் ,பின்பு பிணங்களை ஒவொன்றாகத் தூக்கிவருவதையும் பார்க்கப் பார்க்க , இது சென்னை தானா, நாமறிந்த அதே சென்னை பீச் தானா என்ற பயமும் கலக்கமும் வந்து அப்பியது. காமரா தெருக்களின் வழியே ஓட, அங்கே காட்டபட்ட சென்னை தெருக்களிலே கேட்பாறற்றுக்க் கிடந்த பிணங்கள்! ஓடிவழிந்தும் வழியாமலும் தண்ணீர்,ன ஆங்காங்கே செத்துகிடந்த மக்கள். அவர்களின் பிணங்கள்!! மணலையும் ரோட்டையும் தாண்டி வந்த கனமான கடல் அலைகளால் தூக்கி எறியப்பட்ட படகுகள், மோதி இழுத்துச் செல்லப்பட்ட கார்கள். பத்தாடி உயரத்திற்க்கு அப்படியே கடற்கரை மொத்த நீளத்திற்க்கும் வேகமாக தண்ணீர் வேகமாய்ப் புகுந்தால் என்ன ஆகும்! மிதக்கும் பிணங்களையும், ஒதுங்கிய உடல்களையும் காட்டினார்கள். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று ஏகப்பட்டவ்ர்கள். அங்கு நடப்பவர்கள் அந்தப் பிணங்களை மிரட்சியுடன் நம்பமுடியாமல் பார்த்தபடி ஒதுங்கி நடந்தார்கள். இறந்து கிடந்தவர்களின் உடல்களில் உடைகள் விலகி உடம்பெல்லாம் மணல் ஒட்டியிருந்தது தெரிந்தது, பார்ப்பவர் வயிற்றைக் கலக்கியது.

ஞாயிற்றுக்கிழமைகளில் எப்படியிருக்கும் இடமது? எவ்வளவு கூட்டம், கார்கள் வண்டிகள், குடும்பம் குடும்பமாக வருபவர்களும் ஜோடி ஜோடியாக வரஉபவர்களும் என்று எவ்வலவு கலகலப்பாக இருக்குமிடமது ! எதனை முறை, இந்த நீல நி¢ற பிரும்மாண்டத்தினை, இவ்வளவு பிரம்மாண்டமால இருந்தும் அமைதியாக இருப்பதன் அதிசயத்தினை, பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி வியந்திருப்பேன். அதே கடல் தானா இது! அது தந்த அமைதியும் உற்சசாகமும், குதுகூலமும் பொய்யா? இதுதான் அதன் மெயான உருவமா! மஞ்சள் மணலும் நீலக்கடலும், இன்று காட்டும் நிறமென்ன!

நடப்பது என்ன என்று சத்தியமாகப் புரியவேவில்லை. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்தான் பாவம் என்ன செய்ய முடியும். அல்லது யார் தான் என்ன செய்ய முடியும்? எவராலும் அறுதியிட்டு எதையும் சொல்ல முடியாத நிலை. நேரடி ஒளிபரப்பில் பேசியவர் குரலிலும் பதட்டம். இன்னது என்று எவருக்குமே புரியவில்லை. நடந்து முடிந்ததே இவ்வளவு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மீண்டும் நில நடுக்கம் வரலாம், மீண்டும் பேரலைகள் வரலாம் என்று சொன்னார்கள். ஏற்கனவே காலையில் வந்த கடல் அலைகளால், அங்கே அவ்வளவு இங்கே இவ்வளவு என்ற சாவு எண்ணிக்கை கணக்குகளும் வர, வீட்டில் தொடர்ந்து இரூப்பதா, அல்லது சென்னையையை விட்டு விட்டு கிளம்புவது தான் பாதுகாப்பானதோ என்ற சந்தேகம் கலந்த பயமும் வந்தது.

வெளியூரில் இருந்து தங்கையும், மற்ற நெருங்கிய உறவினர்களும் , நண்பர்களும் தொலைபேசியில் நீங்கள் எல்லோரும் பத்திராமாக இருக்கிறீகளா?” என்ற தொடர்ந்து விசாரித்தார்கள். நானும் என் நண்பர்களின் இருப்பை விசாரித்து கொண்டேன். மையிலை குளத்தங்கரை அருகில் உள்ள மாமா குடும்பம் பற்றிய நினைவு வந்து அவர்கள் வீட்டுக்கு தொலைபேசியில் பேச முயற்சித்ததில், எந்த பதிலும் இல்லை. பயம் அதிகமானது. கீழ் பிளாட்டில் உள்ளவர்களிடம் பயத்தினை பகிர்ந்து கொள்ள, அதெல்லாம் ஒன்றுமிருக்காது, அங்கேயெல்லாம் இந்தப் பிரச்சனையினால் மின்சாரமிருக்காது என்றனர். கொஞ்சம் பயம் நீங்கியது. இருந்தாலும் , சரி எதற்ர்கும் போய் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று முடிவு செய்தோம்.

அப்பொழுது நிலனடுக்கம் மதியம் 3 மணியிலிருந்து 9 மணிக்குள் மீண்டும் வரலாம் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. நில நடுக்கமா? மாடிவீட்டில் இருப்பது ஆபத்தாயிற்றே ! கிளம்பிவிட வேண்டியது

தான், அந்த நேரம் நம் பிளாட்டில் , மூன்றாவது மாடியில் இருக்கக் கூடாது, பத்து என்று முடிவு செய்துகொண்டோம். மைலையில் உள்ல மாமா வீட்டிற்குப் போய் பார்க்கவும் வேண்டும், அத்துடன் அவர்களுடனே மீண்டும் நிலனடுக்கம் வருமென சொல்லப்படும் அந்த சமயத்தில் இருந்து விடலாம். அவர்களது கீழ்வீடு தானே ! என்று முடிவெடுத்து அவசரமாகக் கிளம்பினோம்.

பிளாட்டை பூட்டி, சாத்துகையில், எதை எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மகள் கேட்டாள். திரும்ப வரும் பொழுது வீடு அப்படியே இருக்குமா? எப்படிப்பட்ட நிலனடுக்கம் மீண்டும் வருகிறதோ அதனால் என்ன என்ன விளைவுகளோ! என்று எண்ணங்கள் ஓடியது. பணம் இருப்பதையெல்லாம் எடுதுக்கொள்ள வேண்டியது தான். நகைகளையும் முக்கிய ரெக்கார்டுகளையும் கூட எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. எடுத்து எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு போய்விடவேண்டும். அதான் பாதுகாபானது என்று நினைதேன். அதற்குள், மகன் சொன்னான், ” அதெல்லாம் வேணாம்ப்பா, அதுவே பிரச்சனையாயிடும். இப்ப எங்க அதையெல்லாம் தூக்கிக் கிட்டுப் போக முடியும். பார்த்துக்கலாம். அப்படி ஏதாவது வீட்டுக்கு ஆச்சுன்னா, எல்லாருக்கும் வர்றது நம்மக்கும் அவ்வளவுதானே பார்த்துக்கலாம் ” என்றான். அவன் அப்படி சொன்னதும் மனது சமாதானமனது. பின்னே இப்பொழுது எல்லாவற்றையும் எங்கே தூக்கிப் போவதாம்.

ஒருவழியாக பூட்டிச் சாத்திகொண்டு, வண்டியில் கிளம்பி, மாமா வீட்டிற்கு சென்றால், மாமா வீடு பூட்டியிருந்தது. மூட்டை முடிச்சுக்களுடன் கார் ஏறி செங்கல்பட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த மாமாவின் பக்கத்து பிளாட் கார அம்மாள் அவுங்களா..பரவாலிங்க இந்த விஷயம் தெரியாமலேயே, நேற்றே கிளம்பி திருப்பதிக்குப் போய்ட்டாங்க. வர இரண்டு நாளாகும்” என்றார்கள், அவர்களிடம் பதட்டம் தெரிந்தது. தங்களுடைய மாருதி 800 காரில் பல பெட்டிகளையும் பைகளையும் அடுக்கியபடி, குழந்தை குட்டிகள், வயதானவர்கள் என்று ஆறு ஏழுபேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் வேட்டி கட்டியிருந்த நடுத்தர வயது ஆண் மட்டும் கொஞ்சம் தொடர்ந்து பதில் சொல்லும் நிலையில் இருந்தார்.

அவர்கள் மாடி பிளாட்டில் வசிக்கும் ஒருவர் பத்து ஆண்டுகளாக காலையில் கடற்கரையில் தான் நடக்கப் போவாராம். இன்று காலையில் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லையாம். விசாரிக்கப் போன இடத்தில், இது போல இன்னும் நிறையப் பேரைக் காணவில்லை என்றார்களாம். அது தவிர அவர் தன்னுடைய பேரன் விவேக்கையும் இன்று அழைத்துப் போயிருந்தாராம். அவன் காலை நேரத்தில் ‘பீச்’சினை ஒட்டியுள்ள ரோட்டிலும் மணலிலும் நிறைய பையன்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கிறேன் என்று சொல்லி அவருடன் இன்று போயிருக்கிறான். காலையில் உள்ளே வந்த கடலைகள், அங்கே விளையாடிக்கொண்டிருந்த பையன்களையும் அப்படியே வாரி எடுத்துக்கொண்டு போய் விட்டாதாம். அதில் அவனும் போயிருப்பான் என்கிறார்களாம். தாத்தாவையும் பேரனையும் இதுவரை காணவில்லையாம். இதையெல்லாம் கேட்ட அவர்கள் மகள் , “வேண்டாம்மினி இங்கே இருக்கவே வேண்டாம் , விவேக்கை கடல் அடிச்சிக்கிட்டுப் போன மாதிரி ,நம்பளையும் கடல் அடிச்சிக்கிட்டுப் போயிடும், நாம உடனே எங்கேயாவது போயிடலாம்” என்று அழ ஆரம்பித்து விட்டாளாம். அதுதான் செங்கல்பட்டில் உள்ள அவருடைய பெரியக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் கிளம்பிக் கொண்டிருக்கிரார்களாம்.

என்ன செய்வது என்று புரியவில்லை. திடீரென உலகம் இருண்டுவிட்டது போல, பிரளயம் வந்து விட்டது போலத் தோன்றியது. என்ன நடக்கப்போகிறது. எப்போழுது சகஜ நிலை திரும்பபோகிறது. திரும்புமா?

மீண்டும் வீடு வந்து, தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க, பேரலையின் கோர தாண்டவதினால் நகண்டு போன கடலோர கிராமங்களின் நிலைமை சோகத்தில் ஆழ்த்தியது. இதன் முடிவுதான் எங்கே? எப்பொழுது? என்று கவலை வந்தது. மதியம் மூன்று மணியில் இருந்து இரவு ஒன்பது மணிக்குள் மீண்டும் பூகம்பம் வரும் என்ற அறிவிப்பு தொடர, மதியம் உணவு முடித்து, உடன் கிளம்பி அருகில் உள்ள ஒரு பூங்காவிற்க்கு குடும்பத்துடன் போவதென்று முடிவு செய்தோம். தரை தானே மாடியினை விட நிலநடுக்கதிற்க்குப் பாதுகாப்பானது. எல்லோரும் படிப்பதற்க்கு ஏதாவது எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். நானும் ஒன்று எடுத்துக்கொண்டேன். மனைவி நாலைந்து சுவாமிப் பாட்டு புத்தகங்களும்,

மகன் பாடப் புத்தகங்களும் எடுத்துக்கொள்ள, கிளம்பினோம். சொந்த வீட்டில் குடியிருக்க பயம்! பார்க் நோக்கிப் பயணம்!!

மூன்று மணி நேரம் பூங்காவில் பெஞ்சிலும் புல் தரையிலுமாக இருந்தோம். அந்த மத்தியான வேளையில், இன்னும் பலரும் வந்திருந்தார்கள். அந்த திறந்த வெளியும், காற்றும் பேரலைகளிலின் செய்திகளை பார்க்காதிருந்ததாலும், மனசு கொஞ்சம் லேசான மாதிரியிருந்தது. மனதும் அவற்றை சற்று மறந்து புத்தகத்தில் லயித்தது.

மணி வாக்கில், அங்கிருந்து கிளம்பி, லஸ் பக்கம் போனோம். சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சொற்ப ஜனங்களின் நடமாட்டம்.

மாலை செய்தித்தாள்கள், கடல் சீற்றத்தால் எற்ப்பட்ட அழிவினை பற்றி பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டிருந்தன. ஒரு கடைப் பக்கம் போய், மெழுகுவர்த்தி கேட்க, அவர் பேசிமுடித்த செல்போனை கீழே வைத்து விட்டு கடையில் இருந்த வேறு ஒருவரிடம் சொன்னர், “ஆந்தமான்ல இருந்து தம்பி பேசுறான். இப்ப இரண்டு நிமிடம் முன்னாடி திரும்ப நிலநடுக்கமாம். அங்கன சுத்தமா கரண்டு இல்லையாம், செல் போன்லயிருந்து பேசுறான். எடுங்கப்பா நாமளும் கடையை மூடிட்டுப் போகலாம்”.

இதைக் கேட்டதும் கொஞ்சம் விட்டிருந்த கலவரம் மனதில் மீண்டும் தொற்றிக் கொண்டது. கலன்கமான மனதுடன் கிளம்பி வீடு வந்தோம். மாடி ஏறினோம்.

அப்பொழுது முதல் மாடியில் இருந்த ராகுல் அம்மா, கைக்குழந்தை ராகுலுடன் வெளியே வந்தார்கள்.

“ஏங்க லதாம்மா , ராத்திரி கடல் தண்ணி உள்ல பூந்திடுச்சுன்னா என்ன செய்றது?” என் மனைவியைப் பார்த்துக் கேட்டார்கள்.

“என்ன செய்ய, அதெல்லாம் அப்படி ஒன்றும் ஆயிடாதுங்க” சாதாரணமாகத்தான் சொன்னர்கள் என் மனைவி.

அதற்கு அவர்கள், “உங்களுக்கு என்ன? நீங்க மூணாவது மாடி, பாதி இராத்திரியில கடல் தண்ணி வீட்டுக்குள்ள வந்திடுச்சுன்னா, நாங்க ஒண்ணாவது மாடியில்யில்ல இருக்கோம். கைக் குழந்தையையும் வைச்சிக்கிட்டு எங்கங்க ஓடுறது?”

எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. “அதுனால என்னங்க, நீங்க வேணூண்ணா எல்லாரும் இன்னைக்கு எங்க வீட்டில் வந்து படுத்துக்குங்க” என்றேன். அப்பொழுது அவருடைய கணவர் அவர்களை உள்ளே அழைக்க, அவர்கள் போய்வட்டார்கள்.

ஆமாம், இரவு நில நடுக்கமோ கடல் தண்ணிர் உள்ளெ வருவதோ நடந்தால் என்ன செய்வது? ராத்திரி தூங்கமுடியாது என்பது மட்டும் புரிந்தது. கவலையோடு மாடியேறினோம்.

எங்கள் பிளாட்டு கதவருகில் யாரோ நிற்ப்பது போல இருந்தது. அருகில் போன என் மனைவி பேச, யார் அது ? என்று கேட்டாள். நானும் அருகில் போய்ப் பார்த்தேன். நின்று கொண்டிருந்தது எங்கள் வீட்டில் வேலை செய்யும் லட்சுமி. நாற்பது வயதுப் பெண்மணி. “நில நடுக்கமா, அதுக்கென்னம்மா செய்யுறது? அதுக்கோசரம் வராத போயிடமுடியுமா? அம்மாம் பாத்திரத்தை வைச்சுகினு நீ அல்லாடுவியே” என்று சொல்வது காதில் விழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *