தகப்பன்சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 2,184 
 

பொழுது போகவில்லை!

மேஜை இழுப்பறையைக் குடைந்தேன். அது அலிபாபா குகை. என்ன இருக்கு என்பதே வெளியே தெரியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு போல எல்லாமே அதற்குள் கிடைக்கும்! அதை ஒழிக்க ஆரம்பித்தால் பொழுது போவதே தெரியாது. அவ்வளவு புதையல்கள். தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதைபொருள் பொக்கிஷங்கள். விவசாய வேலைகள் முடிந்து விட்டன். வேலை எதுவும் இல்லை. அதனால்தான் இந்த வெட்டி வேலை.

விவசாய வரவு செலவு கணக்கு, கடன் பத்திரங்கள், விவசாயக் கருவிகளின் விலைப் பட்டியல், உரமூட்டைகள் ரசீது, டிராக்டர் எல்.ஐ.சி. ரசீது, பழைய புகைப்பட ஆல்பங்கள் என திரெளபதி வஸ்திராபரணமாய் நீளும் பட்டியல். வேர்த்து வழிந்து களைத்து விட்டேன்.

கையில் அகப்பட்ட பழைய வார ஏட்டுடன் ஈசிசேரில் சாய்ந்தேன். கவிப் பேரரசு வைரமுத்துவின் கட்டுரை. தன் மகன் பற்றிய வரிகள்! பெட்டிச் செய்தியாக என் மகனிடம் மட்டுமே தோற்க விரும்புகிறேன்! எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள். மகனிடம் தோற்பது எவ்வளவு சுகம். பிரகலாதனிடம் தோற்ற இரண்யன், மகனிடம் பாடம் கேட்ட சிவன் என இந்தத் தோல்வி காலம் காலமாகத் தொடரும் தொடர்கதை தானே!

கைகள் வார இதழைப் புரட்ட சிந்தனை இதயத்தைப் புரட்ட நினைவுகள் சிறகடித்துப் பறந்தன. தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகன் விவேக். நஞ்சையும், புஞ்சையும் நாலு தலைமுறைக்குக் குந்தித் தின்றாலும் குறையாத செல்வம். புள்ள படிச்சு ஒண்ணும் ஆகப் போறது இல்லை. கல்யாணப் பத்திரிகையில் பின்னால் போட்டுக் கொள்ள ஒரு டிகிரி படிண்ணேன். அந்தப் பயபுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிப்பேன்னான். சரி தொலையட்டும் என்று தலையாட்டினேன். அப்படி தலையாட்டினது தப்பாய்ப் போச்சு.

படிச்சு முடிச்சதும் கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழில் நடத்தணும். கோடி கோடியா சம்பாதிக்கனும்னு ஒத்தைக் கால்ல நின்னான். சிபாரிசு அம்மாக்காரி மேலிடத்து சிபாரிசை மீற முடியுமா? மீறினால் உள்நாட்டுக் கலவரம் வெடிக்குமே. பய அரசியல்வாதி ஆக வேண்டியவன். நல்லாவே கூட்டணி அமைக்கிறான். என் எதிர்ப்புகளை அம்மா என்ற பிரம்மாஸ்திரம் மூலமாக மண்ணைக் கவ்வச் செய்யும் மகாபுத்திசாலி.

இந்தப் பனிப்போர் ஒருநாள் வளைகுடாப் போராக வெடித்தது. அந்தநாள் நன்றாக நினைவில் இருக்கிறது. எனக்குப் பிடித்த உருளைக்கிழங்கு கறியைம், உருண்டைக் குழம்பையும் ஒருபிடி பிடித்து ஓய்வாக அமர்ந்து இருந்த நேரம் பயபுள்ள மெதுவாக ஆரம்பித்தான். ‘அப்பா நான் கம்ப்யூட்டரில் மேலே படிக்கணும். தனியாத் தொழில் தொடங்கணும். அதுக்கு அமெரிக்காப் போகணும். இதுக்கு தான் உருண்டைக் குழம்பும், உருளைக்கிழங்குமா? எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. இரண்டு நாளா அம்மாவும், புள்ளையும் குசுகுசுன்னு பேசிகிட்டு குறுகுறுன்னு முழிக்கும் போதே தெரியும். பய ஏதோ குழி பறிக்கப் பிளான் பண்ணுறான்னு. எதுக்கு இருக்குறத உட்டுட்டுப் பறக்கிறத பிடிக்கப் போற. நல்ல மாடுன்னா உள்ளூரிலேயே விலை போகும்’ என்று சீறிய என்னை அடக்கினான்.

‘ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க. பரம்பரை பரம்பரையா நீங்க விவசாயம் பார்க்கிறீங்க. பண்ணையாராவே இருக்கீங்க. உங்ககிட்ட வேலை பார்க்கிறவங்களும் அப்படியே இருக்காங்க. வருஷாவருஷம் தண்ணீர்ப் பிரச்சனை இயற்கை உற்பாதம்னு ஏகப்பட்ட சிக்கல். விவசாயம் வேணும்தான். அதுலயும் புதுமை செய்யணும். அதுக்கான பயிற்சி மேற்கொள்ளனும்னு யோசிச்சு இருக்கீங்களா? எனக்கு விவசாயம் தெரியாது. தெரிஞ்சது கம்ப்யூட்டர் மட்டும்தான். அந்தத் துறையில் முத்திரை பதிக்கணும் ‘பில்கேட்ஸ்’ மாதிரி. விவசாயத்துக்கும் கம்ப்யூட்டர் உபயோகம் செய்யலாம். என்ன உரம், என்ன மருந்து என்று கேட்டுத் தெளியலாம். என்ன விலை என்று வீட்டில் இருந்தபடியே பேசி முடிக்கலாம்.

எனக்குள் ஒரு பொறி அதை என் கண்களில் படித்து விட்டான் அந்தப் பயபுள்ள. ஆனாலும் என் ஈகோ முற்றிலும் அகலவில்லை. ‘முடிச்சிட்டியா, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா’ என்றேன் நக்கலாக. ‘இதுக்கெல்லாம் முடிவு கிடையாது அப்பா! நீங்க போதும்கிறது எனக்குப் போதல. எனக்குப் போதும்கிறது நாளை என் மகனுக்குப் போதாது. மாறுதல் என்பது மட்டும்தானே உலகில் மாறாத உண்மை. நாடு என்ன செஞ்சது என்பதை விட நாட்டுக்காக நாம என்ன செஞ்சோம்கிறது தான் முக்கியம். தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு விவேகானந்தன் என்று பேர் வச்சுட்டீங்க. அந்தப் பெயரை நான் காப்பாற்ற வேண்டாமா?’

‘சின்ன வயசில் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையான்னு கேட்பீங்க. அம்மா பிள்ளைன்னு வாய் தவறி சொன்னாலும் தாங்க மாட்டீங்க அத்தனை பாசம் என்மீது. மேலதான் கடமுடான்னு சத்தம். அடிமனதில் சில்லென்ற பாச ஊற்று. அதை சுவைத்தவன் நான். கத்துகிறதுக் காகத்தான் நான் அமெரிக்காப்போறேன். கற்றதை நம்ம மண்ணில்தான் களம் இறக்குவேன்’. மளுக்கென கண்களில் முட்டிய நீரை அடக்க முடியாது தோற்றேன்.

‘என் பிரிவைத் தாங்க முடியாதுன்னுதான் இப்படி அழுகுணி ஆட்டம் ஆடுறீங்க!’ இலக்கு பார்த்து அவன் எய்த வார்த்தைகள் – என்னால் மறுக்க இயலவில்லை. இருந்தாலும் முழுவதும் இறங்கி வர என் வறட்டு கௌரவம் இடம் தரவில்லை.

‘இதோ பாருடா விவேக் என்ன விட்டா நீ பாட்டுக்குப் பேசி கிட்டே இருக்கே. உன் இஷ்டத்திற்கு எல்லாம் ஆட முடியாது. சிவனேன்னு அப்பாவுக்கு ஒத்தாசையா வீட்டோடே கிட’ என்ற என்னவளின் நடிப்பை நிஜம் என்று எண்ணி ஏமாந்தேன். அவள் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்கா விட்டால் என் தலை வெடித்து விடும். அப்படி ஒரு குணம் எனக்கு.

‘இரண்டு வருஷம் தானே, போயிட்டு வாடா ராஜா. அவ கிடக்கிறா’ என்ற போது தாயும், பிள்ளையும் ‘சக்ஸஸ்’ என்று கண் ஜாடையில் பேசிக் கொண்டதை உணராத மடையன், என் வாயாலேயே என்னை வீழ்த்தி மகனை அமெரிக்கா அனுப்பிய ராட்சஸி அவள் என்பதை அவள் வாயாலேயே கேட்டபோது எனக்கு எவ்வளவு அதிர்ச்சி. ராட்சசி என்று பல்லைக் கடித்தேன்.

அழகான ராட்சஸி என்று கை கொட்டி சிரிக்கும் விவேகம். சே எல்லாம் பிரமைதான். மகன் அடுத்த வாரம் வரப்போவதை ஒலி பரப்பத்தான் கோயிலுக்குப் போறேன் என்று போயிருக்கிறாள்; சிரித்து சிரித்தே என்னைச் சிறையிலிட்ட ராட்சஸி.

விமான நிலையத்தில் கடைசி நிமிடத்தில் என் காதருகே கிசு கிசுத்த வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வர எனக்குள் புன்னகை. அப்பா! உங்க பிள்ளை ஒருநாளும் அமெரிக்க மாப்பிள்ளை ஆகமாட்டான். இது உறுதி என்றவனை ஏறிட என்னுள் வெட்கம். மனசை எந்தக் கம்ப்யூட்டர்ல படிக்கிறான் இந்தப் பயபுள்ள. அவன் மூச்சுக் காற்றின் கதகதப்பும் அரும்பு மீசையின் குறுகுறுப்பும் இப்போதும் என் காதிலும், கழுத்திலும் என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் பெருமிதமாக.

என் நாடி பிடித்து துல்லியமாகக் கூறும் மகனைக் கர்வமாகப் பார்க்கிறேன். இந்த மேதையின் தகப்பன் இவன் என்று நாளை ஊர் சொல்லும். நான்தான் என் பாச வலையைச் சற்றே இறுக்கி விட்டேனோ? முதல் முதலாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறேன். மகன் வந்ததும் டவுனில் இருக்கும் இடத்துல ஒரு ஐ.டி. சென்டர் ஆரம்பிக்கச் சொல்லணும். என் பண்ணையாட்களின் வாரிசுகளுக்கு அதுல வாய்ப்பு தரணும். நிறைய வேலை இருக்கு. என் புள்ள எனக்கு மட்டும் மகனல்ல. இந்த நாட்டுக்கே சிறந்த குடிமகனா சிறக்கணும்.

குப்பெனன்ற மல்லிகைப்பூ வாசம். வந்துட்டா மகராசி. நான் இவ்வளவு நேரம் புலம்புனத எல்லாம் அவகிட்ட சொல்லிடாதீங்க. என்னைக் கிண்டலடிச்சே கொன்னுடுவா? புள்ளயும் தானுமா கூட்டணி அமைச்சு என்னைக் கோழி அமுக்குவது போல ஒரே அமுக்கா அமுக்கியதை உங்ககிட்டேயும் சொல்லி மானத்தை வாங்குவா! ப்ளீஸ் சொல்லாதீங்க! மகன் கிட்டத் தோற்கலாம்; மனைவி கிட்டத் தோற்கலாமா? ஹி, ஹி, ஹி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *