கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 223 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“கார்த்திபா ஒரு விசயம் கேட்கனும், கோச்சுக்க மாட்டதானே” என்ற அம்முவிடம் “சொல்லு குட்டிமா” என்றதும் எனது மடியில் அமர்ந்து என்னுடன் குழந்தைப் பாடல்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பா தலைத் திருப்பி என்னைப் பார்த்தாள். “உன்னை இல்லைடாக் குட்டி, நான் கூப்பிட்டது சீனியர் குட்டிமாவை.. ” மீண்டும் அஞ்சலிப்பாப்பாவிற்கு “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா… என்றது வெள்ளைப்பசு உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.’ பாட்டின் மேல் கவனம் சென்றது. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று நபர்கள், ஆனால் கூப்பிடப் பயன் படுவது இரண்டே பெயர்கள். குட்டிமா இருவருக்கும் நான் கார்த்திபா. ஜூனியர் குட்டிமாவிற்கு ஜூலை வந்தால் 3 வயது. குழந்தைகளின் இரண்டு வயது முதல் நான்கு வயது வரைக்கான காலம் அற்புதமானது. நீங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை விட, அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம்.

“அம்மா, அப்பா இரண்டு பேரும் கோவிலுக்குப் போக ஆசைப்படுறாங்க,”

“ஹரே கிருஷ்னா க்ருப்போட கோயில் ஃப்ரீத்ஹெம்ஸ்காத்தான் பக்கம் தானே, அங்கேப் போயிட்டு வரச்சொல்லு”

“அவங்க… குட்டிப்பாவையும் கூட்டிட்டுப் போக ஆசைப்படுறாங்க, இதுவரைக்கும் பாப்பாவை கோவிலுக்கோ சர்ச்சுகோ கூட்டிட்டுப் போகலேன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க… வாசுதேவனும் ரங்கநாயகியும் நீண்டகால கோபத்தை மறந்து, ஒரு மாதம் எங்களுடன் தங்க ஸ்வீடன் வந்து இருக்கிறார்கள். மருமகனை மாப்பிள்ளை என வாய்நிறையக் கூப்பிடாமல் பெயர் சொல்லி அழைப்பவர்களை நானும் பேர் சொல்லித்தான் அழைப்பேன். “நாமதான் பாப்பாவுக்கு சாமி, பூதம் கண்டதை எல்லாம் கத்துக்கொடுக்ககூடாதுன்னு பேசி இருக்கோமே,,, பின்ன என்ன திடீர்னு” என்றதும் அம்முவின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. தனது கோரிக்கையை விட, தன் அம்மா அப்பாவின் விருப்பம் நிரகாரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஆயுதம் அது. கிருஷ்ணன் தேவையில்லை, ஆனால் அம்மு முக்கியம் அல்லவா… குழந்தைக்கு சாமி கண்ணைக்குத்தும் ரீதியிலான விளக்கங்கள் எல்லாம் கொடுத்து பயமுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அஞ்சலிப்பாப்பா அச்சில் அம்முவைப்போல இருந்ததால், வாசுதேவன், ரங்கநாயகி இருவரும், மறுநாள் கோவிலில் குழந்தைக்கு நடைப்பழக்கியபடி மகளின் குழந்தைபிராயத்தை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரே மகளை, அவர்களின் விருப்பமின்றி கவர்ந்தெடுத்ததின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியின் வடிவில் கரைந்து கொண்டிருந்தது.

பூசை நடக்கும்பொழுது, அஞ்சலிப்பாப்பாவிற்கு அது எல்லாம் புதியதாகத் தோன்றியது,. கொஞ்சம் மிரண்டுபோய் என் பக்கத்தில் வந்துவிட்டாள்,. இருந்த போதிலும் அவளுக்கு அங்கிருந்த கிருஷ்ணர் படங்களின் மேலும் பொம்மைகளின் மேலும் ஒர் ஈர்ப்பு வந்துவிட்டது. “கார்த்திபா, அது என்ன?” என மழலையாக கிருஷ்ணன் சிலையை கைக் காட்டிக் கேட்டாள்.

“நல்லா .. மாட்டினியா … பதில் சொல்லு” எனத் தோளில் இடித்தாள் அம்மு.

“அது, கிருஷ்ணன், அர்ஜுனோட நண்பன்… காம்பிஸ்”, ஸ்வீடனிலேயே இருக்கப்போகின்றோம் என முடிவாகிவிட்டதால், தமிழும் ஸ்வீடிஷும் கலந்தே பேசி அஞ்சலிப்பாப்பவைப் பழக்கப் படுத்தி வருகின்றோம். நாங்கள் இருவரும்

வேலைக்குப்போவதால் பகல் நேர முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதனால்,

தமிழுக்கு இணையாக ஸ்வீடிஷையும் அஞ்சலிப்பாப்பா வேகமாக கற்றுவருகிறாள். இந்த மூன்று வாரங்களாக அம்முவின் பெற்றோர் இருப்பதால் குழந்தைகள் காப்பகத்திற்கு மட்டமடித்துவிட்டு தமிழையும் பாசத்தையும் கற்று வருகின்றாள்.

“அஜூன் ஆரு”

“வீட்டுக்குப்போனதும் யூடூப்ல குட்டிம்மாவுக்கு கட்டுறேன்” எனச்சொல்லி வீட்டுக்கு வந்ததும் யுடுயுபில் மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரின் தமிழ் மொழிமாற்று வடிவத்தைத் தேடி எடுத்து,

“இதுதான் அஜூன்” என்றேன் குழந்தையின் மொழியில்.

‘அஜுனும் க்ரிஷும் காம்பிஸ்” அவளுக்கு எளிமையாக்க கிருஷ்ணனை க்ரிஷ் ஆக்கி, “அஜூனுக்கு எப்போ பிரச்சினை வந்தாலும் க்ரிஷ் உதவி பண்ணுவார்”

“பிச்சினா” அடடா, குழந்தைகளுக்கு ஏதுப் பிரச்சினை, பிரச்சினை என்பதை எப்படி புரியவைப்பது. குழம்ப,

“இந்தே பிச்சினா … யெல்பர், க்ரிஷ் யெல்ப்பர் அஜுன் ஆல்தீத், பெர்சொன் வெம் யெல்பர் எர் க்ரிஷ் ” க்ரிஷ் எப்பொழுதும் அஜுனுக்கு உதவுவார், யார் உதவி செய்கிறார்களோ அவரின் பெயர் க்ரிஷ் என்ற பொருள்படும் விதத்தில் அம்மு ஸ்விடீஷில் தொடர்ந்தாள்.

வாசுதேவனும் ரங்கநாயகியும் ஊருக்குப்போன பின்னர், குழந்தையை அழைக்க நானும் அம்முவும் காப்பகத்திற்கு சென்றபொழுது, கருப்பு, வெள்ளை குழந்தைகளுடன்

விளையாடிக்கொண்டிருந்த எங்களின் தேவதையுடன் வேறு ஒரு குட்டி அரபுக்குழந்தையும் ஓடிவந்தது.

“குட்டிமா, இது யாரு… ” என அரபுக்குழந்தையையும் அரவணைத்தபடி அஞ்சலிப்பாப்பாவிடம் கேட்டேன்.

“க்ரிஷ்” என்றாள் குழந்தை.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *