கைமாஞ்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 3,760 
 
 

இளமதிக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. காலையில் இருந்து சரியாகச் சாப்பிடவில்லை. கணவன் மாறனும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. தன் அம்மா சாப்பிட்டாளா என்று மட்டும் பார்க்கத்தெரிந்த மாறனுக்கு மனைவியை ஒரு வார்த்தை சாப்டியா? என்று கேட்கத்தோணுவதில்லை. இதை நினைக்கும் பொழுது மனதில் எழும் துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் ததும்பியது. தனது பிறந்த வீட்டில் அப்பா தான் சாப்பிடவிட்டால் ”டேய் சாப்டியா?” என்று கேட்காமல் ஒரு நாளும் சாப்பிட உட்கார்ந்ததில்லை. அவளுக்குப் பிடிக்காத சாப்பாட்டை அம்மா சமைத்தால் என்றால் சாப்பிடாமல் அடம்பிடிப்பாள். இதனால் அப்பா, அம்மாவை திட்டுவதோடு அவளைச் சமாதானம் செய்து,

”டேய் சாப்பிடுறா. அடுத்த முறை உனக்குப் பிடித்த சாப்பாட்டைச் சமைக்கச் சொல்கிறேன்.”

என்று அப்பா சொல்லும்போது அம்மா சமையல் கட்டிற்குள் இருந்து அப்பாவையும் என்னையும் முறைப்பாள். அதையெல்லாம் கண்டு கொள்ளாது நான் அப்பாவின் கெஞ்சலுக்காகச் சாப்பிட உட்காருவேன். இந்த நினைவுகள் எல்லாம் நெஞ்சில் நிறைந்து என்னை ரணப்படுத்துகின்றன. இங்கு எவ்வளவு வேலை பார்த்தாலும் கண்டு கொள்ளாத கணவனும் மாமியாரின் செயல்களும் இளமதிக்கு வெறுப்பை மூட்டின.

திருமணம் செய்து வந்த புதிதில் இளமதி அத்தை, மாமா, ஆச்சி, மதினியின் பிள்ளைகள் என்று ஏழுபேருக்குச் சமைக்க வேண்டியிருந்தது. அத்தனை பேருக்குச் சமைப்பது சிரமமாக இருந்தாலும் மனமுவந்து செய்தாள். காலையில் ஒருவருக்குத் தேனீர், ஒருவருக்குக் காப்பி என்று ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாகச் செய்ய வேண்டியிருந்தது.பெரிய மதினியின் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடுவதில் ஆரம்பித்து இரவு தூங்கும்வரை வேலையிருக்கும். போதாத குறைக்கு வாரத்தில் மூன்று நாட்களாவது விருந்தினர் வருகை வேறு.

அந்த வீட்டில் இவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் ஆச்சி மட்டும்தான். இவளுக்கு ஒத்தாசையாக காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவிக்கொடுப்பது என்று இருந்தாள். இத்தனைக்கும் ஆச்சிக்கு வயது தொன்னூறுக்கு மேலிருக்கும். இரவு அனைவரும் உண்டபின் சாப்பிட அமர்ந்தவளுக்கு, மதினியின் மூத்த மகன் பிரசன்னாவின் வருகையால், அவளுக்கு இருந்த சாப்பாட்டையும் மாமியார் தனது பேரப்பிள்ளைக்கு வைக்கச்சொன்னதால் அதுவும் பறிபோயிற்று. இரவு ஒன்பதுக்கு மேல்

இருந்த களைப்பில் இனிமேல் சமைத்துச் சாப்பிடவும் மனது மறுத்ததால் அப்படியே போய் படுக்கையில் விழுந்தாள். மாமியாருக்குத் தனது மருமகள் சாப்பிடவில்லையே எனத் துளிக்கூட கவலையில்லாது மகிழ்ச்சியுடன் பேரப்பிள்ளையிடம் அளவளாவிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த இளமதிக்குத் தன் மாமியாரின் மேலும் தன்னைக் கண்டு கொள்ளாத கணவன் மேலும் அளவிடற்கரிய கோபம் வந்து, அது தன்மீது ஏற்பட்ட கழிவிரக்கமாக மாறி அவளையும் அறியாமல் கண்ணீராய்க் கன்னங்களில் வழிந்தது. இந்த வெறுப்பு எல்லாம் தன் அப்பா, அம்மா மேலே திரும்பியது. விசாரிக்காமல் தனது அண்ணன் சொன்னார் என்பதற்காகத் தன்னைப் பாழும் கிணற்றில் தள்ளிவிட்ட தன் அப்பாவை எண்ணிக் கண்ணீர் உகுத்தாள்.

அன்று ஆடிஅமாவாசை. முந்தின நாள்தான் நல்ல நாள் என்று வீட்டையெல்லாம் மாமியார் துடைக்கச் சொன்னார் என்று வீடு துடைத்து, விளக்கு விளக்கி, சமையல் செய்து என்று நாள்முச்சூடும் வேலையிருந்தது. மறுநாளும் மாமியார்,

”இன்று ஆடிஅமாவாசை. வீடு துடைத்து, குத்துவிளக்கை விளக்கு. பாயாசம் வை” என்றவுடன்,

” நேத்துத் தானே அத்தை வீடு துடைத்து, விளக்கைச் சுத்தம் செய்தேன்” என்றாள். உடனே அவளது அத்தை,

”நேத்து சாப்பிட்டேன்னு இன்னைக்குச் சாப்பிடாமலா இருக்க..”

என்றவுடன் இளமதிக்கு அவளையும் அறியாமல் சுளீரென்று வந்த கோபத்தில் கண்ணிலிருந்து கண்ணீர் பொங்கியது. மாமியாரின் மேலிருந்த கோபம் ஒரு பக்கம், அவரின் பேச்சை எதிர்க்கவியலாத அறியாமை மறுபக்கம் என அழுகைதான் எட்டிப்பார்த்தது. அவ்வப்போது மாறனிடம் எரிச்சலாகவும் கோபமாகவும் வெளிப்படுத்தித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்வாள். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று யோசித்தவளுக்குத் தான் வேலைக்குப் போவதுதான் சரியான முடிவாக இருக்கும் என நினைத்திருந்தாள். ஒருநாள் மதியப்பொழுதில் போஸ்ட்மேன் வீசிய கவர் தனது எதிர்காலத்தை மாற்றப்போகிறது என்பது தெரியாமல், பிரித்துப் படித்தவளுக்கு மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனது. தனக்குப் பக்கத்து ஊரில் வேலை கிடைத்திருப்பதை அந்தத் தபால் பரிசாகக் கொடுத்திருந்தது. மாறனுக்கு அனுப்ப மனமில்லாவிட்டாலும் பணத்திற்காக அனுப்பி வைத்தான். தன்னைப்பற்றி புரிந்து கொள்ளாத கணவனையும் மாமியாரையும் தண்டிக்க இதைவிட வேறுவழியில்லையாதலால் தனக்கான கனவுகளைத் தேடி புறப்பட்டாள். இளமதி தனது மகளுடன் பக்கத்துஊருக்குப் புலம்பெயர்ந்தாள்.

தற்போது மாமனார் இறந்து, தனது கணவனும் மாமியாரும் மட்டுமே தனித்திருப்பதால் மாமியாரின் அதிகாரம் குறைந்ததோடு, வாயும் ஒடுங்கிப்போனது. இளமதிக்குக் கைமாஞ்சி போட்டதுபோல் தனது வாழ்க்கையின் பாதிநாட்கள் நிம்மதியிழந்து போனநினைவுகள் இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. இனிமேல் தான் தொலைந்து போன காலங்களை வசந்தமாக்கவும் முடியாது எனும்போது வரும் மகிழ்வான பொழுதுகளை அவர்களால் அழிக்கவும்முடியாது என்பது அவளுக்கு ரெக்கைகட்டிப் பறப்பதுபோல் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *