குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 9,429 
 

ஊரை நெருங்கிவிட்டிருந்தேன்.

தைமாதம், எப்போதும்போல ஏரியில் தண்ணீர் வடிந்து கோடைகாலமென்று கைகட்டி சாட்சி சொல்லிக்கொண்டிருக்கிறது. தலைக்குமேலே காய்ந்தவண்ணமிருந்த சூரியன் கைங்கர்யத்தால், வெள்ளிச் செதிள்கள் நீரில் ஆங்காங்கே மினுக்கிக் கொண்டிருக்கின்றன. சித்தேரிக் கரையில் இரண்டொருவர், நனைந்த கோவணமும் தலையில் முண்டாசுமாய் செம்மண்நிறத் தண்ணீரை வாரியிறைத்து, வண்டிமாடுகளைக் கழுவுகிறார்கள். இடைக்கிடை வைக்கோல் பிரிகளைக்கொண்டு அவற்றைத் தேய்க்கவும் தவறவில்லை. மாடுகளைத் தேய்க்கின்றபோது, அவைகள் உடல்களைச் சிலிர்க்கவும், தலைகளைச் சிலுப்பிக்கொள்ளவும் செய்ய, மண்டைச் சலங்கைகளும் கழுத்துமணியும் கலகலவென்று அசைந்து அவ்விடத்திலோர் காரியக் கூத்து. தூரத்தில் ஏரிக்கரையிலிருந்து பார்க்க, தெற்கில் கத்தாழை, தாழம்புதர்கள் கரை வரிசைகளுக்கிடையே மணலும், கூழாங்கற்களுமாக வறண்டு கிடக்கும் ஓடை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நுங்கும் நுரையுமாக காவிவண்ண வெள்ளம் ஏரிக்குள் ஆக்ரோஷத்துடன் நுழையும். ஓடை வறண்டிருந்த சித்திரை மாதமொன்றில் தாழம்புதர் மறைவில், ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை முதன்முதலாக பார்த்ததும், அதனால் இரவு முழுக்க அவஸ்தைப்பட்டதும் உண்டு.

சித்தேரிக்கரையிலிருந்து வடக்காக இறங்கினால், ஊரிலிருக்கின்ற கொஞ்சம் பாரியான பெரியதெருவில் கால் வைக்கவேண்டும். இருபுரங்களிலும் தழையதழைய பூவரசுமரங்கள், தப்பிய இடங்களில் முருங்கை மரங்கள், பச்சைப்பாம்புகள்போல கொத்துகொத்தாக முருங்கைக்காய்கள். வலப்புறம் ஏரியை ஒட்டி மிகப்பெரிய ஆலமரம். தாழ்ந்த கிளைகளில், பசுமாடுகள் கன்று ஈன்றும்போது, வந்துவிழும் நச்சுக்கழிவுகள் வைக்கோலில் வைத்துச்சுற்றியவைச் சிறுசிறு பொதிகளாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. அப்படிக் கட்டித்தொங்கவிட்டால், ‘கன்றுப் போட்டிருக்கும் பசுவிற்கு கூடுதலாக மடி சுரக்கும் என்பதான நம்பிக்கை. ஆல் பழுத்து, கீழே கிடக்கும் பழுத்த இலைகளில் விழுவது, உச்சிவேளை நிசப்தத்தை கலைத்துக்கொண்டு துல்லியமாகக் கேட்கிறது. மேல்கிளைகளில் காகங்கள், கீழ்க்கிளைகளிகளில் அணில்கள், விழுதுகளில் சிறுவர்களென்று, ஆலமரத்தினைப் பங்குப் போட்டுக்கொண்டு விளையாடுவது இன்றைக்கும் தொடர்கின்றது.

ஆலமரத்திற்கு தெற்காக புளியமரம், முன்பு இருந்ததைவிட இளைத்து இருக்கிறது. ஆனாலும் மெல்லிய புளியங்கொம்புகளெங்கும் சடைசடையாய் புளியம்பழங்கள், காற்றின் சலசலப்பில் ஒன்றிரண்டு பூமியில் விழவும் செய்கின்றன, ஊர்க்குத்தகை எடுத்தவன் இன்னும் உலுக்காதிருக்கவேண்டும். காவலுக்கென்று ஒரு கிழவி மரத்தடியிற் கொம்பினை வைத்துக்கொண்டு, ஒப்புக்குச் சப்பாணி என்றவகையில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறாள். கோடாலி முடிச்சும், கூன் முதுகும், ‘கைப்பேணிக்கிழவி’யின் அவதார வரிசை என்பதை முன்வைக்கிறது.

கைப்பேணிக்கிழவியைப் போக்குக்காட்டி எடுத்த புளியம்பழங்களின் ஓட்டில் அளவாய் ஓட்டை போட்டு, கறந்த வெள்ளாட்டுபாலின் வெதுவெதுப்பில் ருசிபார்த்தது; ஞாபகத்தில்வந்து நாவில் எச்சில் ஊறுகிறது. தெரு, சிமெண்ட் கான்க்ரீட்தனத்துடன் சிங்காரமாக நீண்டிருக்கிறது. மேலே சிமெண்ட் இருந்தாலென்ன, அடியிலிருப்பது மண்தானே; என்னைப்போல. வலப்புறம் கிடந்த திறந்த வெளியில் நரிக்குறவர்களின் கூடாரங்கள் முளைத்திருந்தன. தள்ளிக்கிடக்கின்ற ஈச்சம்புதர்களின் மறைவில்தான் அவசரத்திற்குப் பெண்கள் ஒதுங்குவார்கள். ஆண்களைக் கண்டால் அதே அவசரத்துடன் எழுந்துகொள்வார்கள் இரண்டு நரிக்குறவ பெண்களுக்கிடையேயான சண்டை நடப்பதின் காரணமாகக் கூச்சல்கள். அதனை வேடிக்கைபார்க்கின்ற ஆர்வம் இன்றைக்கும் தொடர்வதன் அடையாளமாக, ஒரு கும்பல். அக்கும்பலின் பார்வை இப்போது என் மீது விழுகிறது. அங்கிருக்கின்ற முகங்களை ஞாபகபடுத்திப் பார்க்கிறேன். என் நினைவேட்டில் அவர்களுக்கேதும் முகமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் உள்ளத்திலே பொத்திவச்ச வேறுவகையான ஓவியங்களுக்குச் சிதைவில்லையென்றுதான் சொல்லணும்.

காலத்தூசுகளை அவ்வபோது தட்டித் துடைத்துவிட்டு; ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்துப் பார்த்து பழகியநினைவுகள். ஒவ்வொன்றையும் முட்டைகளாகப் பாவித்து உடைந்து விடாமற் கவனத்துடன் இறக்கியாகணும். இருபதுவருடங்களாக, அவற்றில் சில மனப்புத்தக மயிலிறகுகளாய் குஞ்சுபொறித்துகொண்டு உள்ளன. அவற்றைப் பருந்துக்கும், வல்லூறுக்கும் இறையாக்காமல் இன்றுவரை, எண்ணிக்கைக்குச் சேதமின்றி பாதுகாக்கிறேன்.

ஏரியைவிட்டு இறங்கியதுமே அந்த அனுபவத்திற்காகக் காத்திருந்தேன். தலைப்பிரவசத்தின்போது பெண்ணுக்கு ஏற்படும் அச்சமும் ஆனந்தமும், நானிட்ட முதற் காலடியில் ஒட்டிக்கிடக்கிறது, மண்ணில் விழுந்த கழிவுகளோடு சீம்பாலுக்காக தாய்ப்பசுவின் மடியினை முட்டும் கன்றினைப்போல. சித்தேரியில் படர்ந்திருக்கும் ஆலமர விழுதுகள், செம்மண்குளத்து பாசியும் தாமரையும், பாறாங்கற் பீடத்தில் கிழக்குப்பார்த்து அமர்ந்து எண்ணெய் பிசுக்குச் செதிள்களை உரித்துக்கொண்டிருக்கும் மூளிப்பிள்ளையார், எங்கள் வீட்டுக் கூன்விழுந்த தென்னை மரம், எருக்கஞ்செடி முளைத்திருக்கும் ஆதிமூலப் பிள்ளைவீட்டுக் குட்டிச் சுவர், அங்கே போஸ்டரில் தெரியும் நடிகர் நடிகைகள், அவர்களின் உதடுகளில் கரித்துண்டாற் கீறிய மீசைகள், மந்தைவெளி நாவல்மரங்கள் நாவற்பழங்கள், இலுப்பைமரம் பொன்வண்டு, இன்னும் எத்தனையோ…

இது என்னுடைய வீதி, இங்கேதான் சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு, அரைக்கால் சட்டையுடன் சில நேரங்களில் அம்மணமாகக் கூட வீதிகளில் ஓடியிருக்கேன். இது என்னுடைய மந்தைவெளித் திடல் இங்கே நிலவொளியில் புழுதியில் வியர்க்க வியர்க்க ‘பலிஞ்சடுகுடு’ விளையாடியிருக்கேன், அப்பா புதுச்சேரிக்கோ, திண்டிவனத்துக்கோ அல்லது பக்கத்து ஊருக்கு நிலவரி வசூலுக்கோ போயிருக்குக்கும் நேரங்களில் ‘கோட்டிப்புள்ளோ, பேந்தாவோ, இலுப்பைகாய் ஆட்டமோ ஆடுவதும், சில சமயங்களில் அவர் கண்ணிற்பட்டு அடிபடுவதும் நடந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் உறவுப் பெண்களின் மஞ்சட் தண்ணீரிலே நனைந்திருக்கேன். சித்திரை வெயிலில் அரசமரத்து நிழலில் ஆடுபுலி விளையாடியிருக்கேன். என் வீட்டுக் கூடத்துத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளை அம்மா படிக்க, பக்கத்திலிருந்து கேட்டிருக்கேன்.

“இந்த வயசுல அங்கே போயிட்டு என்னச் செய்யப் போறீங்க. இங்கே நமக்கு என்ன குறை. வாரந்தோறும் பிள்ளை வந்துட்டு பார்த்துக்கிறான். மாதத்துக்கு ஒரு முறை மாப்பிள்ளையும் பெண்ணும் வந்துட்டுப் போறாங்க. புதுச்சேரியிலிருந்து பொன்னி அரிசி, பஞ்சாபிலிருந்து பாசுமதி, யாழ்பாணத்து மரக்கறிகள்னு சகலமும் வீடு தேடிவருது. ஆபத்தென்றால் ஓடோடிவரும் அரசாங்கம், மருத்துவ வசதிகள். இதற்கு மேல என்னவேணும். இவைகளையெல்லாம் இந்தியாவில எதிர்பார்க்கத்தான் முடியுமா? ”

“ஒனக்குப் புரியாது கற்பகம்.. நாந்தேடுறது மேலானது, பவித்ரமானது. நான் தவழ ஆரம்பித்தபோது சுவைத்தமண். அம்மா விரல்விட்டு எடுத்தும் அகலாமல் கொழகொழவென்று நாவில் ஒட்டியிருக்கின்ற மண்.”

“இதைத்தான் திரும்பச் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க”

“சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப் போகணும்.”

“நீங்க மாதந்தவறாம பணம் அனுப்பனுப்ப உங்கக் தம்பியும் மறக்காம கடிதம்போட்டாரு. எப்போது நீங்க பணம் அனுப்பறது நிறுத்தனீங்களோ, அப்போதையிலிருந்து எந்தத் தகவலுமில்லை. யோசிச்சுப் பாருங்க..அந்தப் பணமெல்லாம் இங்கே இருந்திருந்தா, இன்றைக்கு நமக்குண்ணு ஒரு அபார்ட்மெண்டை சொந்தமா வாங்கியிருக்கலாம். இப்படி அரசாங்கத்தின் தயவுல வாழவேண்டியதில்லை.”

“கற்பகம் எதற்காக இப்படிச் சத்தம்போடற? இங்கே நமக்கென்ன குறைச்சல்?”

கற்பகம் பாயிண்டைப் பிடித்துவிட்டாள்.

“அதனைத்தான் தொண்டை கிழிய நானும் சொல்லறேன். கேட்டுத் தொலைக்கணும். நாற்பது ஆண்டுகளாக இல்லாத ஊர் நினைப்பு, இப்போதைக்கு எதற்கு?”

என்னிடம் பதிலிருந்தது. சொல்லத் தைரியமில்லை. இந்தத் நாற்பது ஆண்டுகால தாம்பத்தியத்தில் நிறைய சுமந்து சுமந்து, அவள் மனது கூன்போட்டிருக்கிறது. என் மனதிலிருக்கும் நெல்லிக்காய் சிப்பத்தை அவிழ்த்துக்கொட்டினால், இந்தியாவிற்கான எனது பயணம் நின்றுபோகலாம்.

“கற்பகம் ஏதாவது தெரிந்துதான் பேசறியா? என் தம்பி இருக்கான். உறவுக்காரர்கள் இருக்காங்க. பால்ய சிநேகிதன் ராகவன் இருக்கான். எனக்குண்டானது எங்கே போய்விடும்.”

“ஆ…மாம் நினைப்புப் பொழப்பைக் கெடுக்குது.”

“கற்பகம்..! பாண்டவர்கள் கேட்டதுபோல, தம்பியிடம் சின்னதாய் வீட்டில் ஒரு பகுதியை எனக்காக ஒதுக்கச்சொல்லிக் கேட்கப்போகிறேன். கிடைக்கும் பட்சத்தில் அங்கேயேத் தங்கிக்கொண்டு, தெம்புள்ளவரை ஊர் மண்ணில் காலார நடந்துவிட்டு, உன்னிடம் வந்து சேருவேன்”

அவளிடம் சத்தியம் செய்தேன். இடையில் சேர்க்கவேண்டிய வார்த்தையை தாம்பத்திய தருமம் கருதி பிரயோகிக்கலை. நாற்பது ஆண்டுகால இடைவெளியில் மனதில் எழுதியிருந்த ஊர்ப் பிம்பம் கலையாமலிருக்கிறது: ஆச்சாரி வீட்டு தென்னங்கீற்றுத் தட்டியின் மறைவில் இன்றைக்கும் விறுவிறுப்பாக சீட்டாட்டம் நடக்கிறது, ஆனால் ஆடுகின்ற மனிதர்கள்தான் வேறு. பெரியபிள்ளை வீட்டுத்திண்ணையில் வெட்டிப்பேச்சு இன்றைக்கும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் நானறிந்த கார்மேகம் பிள்ளையோ, தானப்பக் கவுண்டரோ, தரகர் அருணாசலமோ அல்ல; இவர்கள் வேறு. அந்தத் தூலக்கட்டுவீடு ஆனந்தக் கவுண்டருடையதாகத்தான் இருக்கவேண்டும். அவர், எந்த நேரமும் வண்டிமாடுக¨ளை வைக்கோல் பிரியால் தேய்த்துத் தேய்த்துத் அவற்றின் உடலிலிருந்து உணியெடுத்துக்கொண்டிருப்பார். இப்போதும் பூவரசு மரத்தில் ஒருஜதை வண்டிமாடுகள் கழுத்தில் கட்டிய மணிகளோடு தலையை அசைத்து வைக்கோலை அசைபோடுகின்றன, ஆனந்தக் கவுண்டர் அங்கில்லை. மேற்கால இருப்பது கூத்துவாத்தியார் வீடு. சித்திரை மாதமானால், அவர் வீட்டு வாசலில் கூத்து ஒத்திகை நடக்க, தாளச் சத்தமும், மிருதங்கச் சத்தமும் பின்னிரவுவரை கேட்டுக்கொண்டிருக்கும். பனிக்காக தலையில் முக்காடிட்டுக்கொண்டு ஒத்திகைப் பார்ப்பதற்கென் ஒரு கூட்டம் நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருக்கும்.

“தெரியாமல் நடந்துபோச்சு தாத்தா.” எதிரே நுங்கை உறிஞ்சி, மிச்சமிருக்கும் பனங்காயில் சவுக்குக் குச்சியைச் சொருகி, தலையை குனிந்தவாறு உருட்டிவந்த பையன் என்மீது மோதி நிற்கிறான். நினைவுகளில் பின்னோக்கி ஓடியதில் நான்கூட இப்படி மோதி என்னுடைய மனிதர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறேன். ஒதுங்கி ஓட நினைத்தச் சிறுவனைத் தடுத்து நிறுத்துகிறேன்.

“ஏண்டா தம்பி.. வாத்தியார் ராகவன் வீட்டுக்குப் போகணும்”

“வாத்தியார் ராகவன் வீடா? யாரைச் சொல்றீங்க?”

“நம்ம, முரளியோட தாத்தாவைச் சொல்றார்னு நினைக்கிறேன்.” அவனோடு சேர்ந்துகொண்ட மற்றொரு பையன் உதவிக்கு வருகிறான்.

“ஓ அவங்க வீடா? அதோ அந்த கல்வீடு. திண்ணையிலே குத்துகாலிட்டு ஒக்காந்திருக்கிறாரே, அவர்தான் ராகவன் தாத்தா.” சிறுவர்கள், மீண்டும் பனங்காய்களை உருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள்.

ராகவன் பால்ய சினேகிதன். எனது இளம் வயது வினைகளின் பங்காளி. கைகொட்டிச் சிரித்திருக்கிறோம், கட்டிப் பிடித்து உருண்டிருக்கிறோம். மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம், நிமிடக் கணக்கில் பேசாமலிருந்திருக்கிறோம்.

அவந்தான்.. அப்படியே இருக்கிறான். முகச் சுருக்கங்கங்களை எடுத்துவிட்டு, தலைக்கு கறுப்புச் சாயமும் இடமுடியுமானால், என் மனத்திலுள்ள ராகவந்தான்.

“ராகவா..!”

“யாரது? நெத்திக்கெதிரே தெரியும் சூரியனால கண்ணு கூசுது. கேட்ட குரலா இருக்குது. நெருங்கி வாங்க.”

“ராகவா.. உன்னோட சிநேகிதன் பட்டாபி வந்திருக்கேன்”

“பட்டாபியா? எந்த பட்… அடடே.. வாடா வா..என்னால நம்ப முடியலை. சித்திரையில் மழைபேஞ்ச மாதிரி இருக்குது.” ஆர்வத்துடன் தள்ளாடி நெருங்கிவந்தவன், இறுகக் கட்டிக்கொள்கிறான்.

“என்னடா..இதற்குள்ள இப்படி ஆட்டம்போடற.”

“வயசு ஆகுதல்ல.. நீ மேற்கத்திய நாட்டுல இருந்துவர, கடேசிவரை காயாவே இருந்துட்டுப் போகலாம். நாங்க பூ, காய், கனிண்ணு வாழப்பழகியவங்க. வயதோடு இணங்கிப் போகிறோம்..”

“ஆரம்பிச்சுட்டியா?. இந்த விஷயங்கள்ல நீ மாறலையே”

“சரி சரி எப்போ பிரான்சுல இருந்து வந்த? மனைவி, பிள்ளைகள் எப்படி இருக்காங்க..?”

“நேற்றைக்கு. பிள்ளைகளும், மனைவியும் நல்லாவே இருக்காங்க. என்னோட ஆரோக்கியத்திலதான் சேதம். உடம்புல இல்லை, மனசுல. எப்படிச் சொல்றது? ஓடிக்கொண்டிருக்கும்போது தெரியலைடா. உட்கார்ந்திட்டோம் இல்லையா? மனசு அலையுது. தப்புப் பண்ணிட்டேன் ராகவா. எஞ்சிய நாட்கள் முச்சூடும் நம்ம மண்ணில விழுந்து, அங்கபிரதட்சணம் பண்ணனும்னு மனசு துடிக்கிது. இப்பல்லாம் தொடர்ச்சியா, எதையாவது காரணமா வச்சுகிட்டு, நம்ம ஊரின் ஞாபகங்கள் திரும்பத் திரும்ப மனசை ஆக்ரமிச்சுடுது. எந்த மண்ணுல முளைத்தேனோ, அந்த மண்ணுக்கே எருவாகனுமென்கிற தீர்மானத்தோட புறப்பட்டு வந்துட்டேன்.”

அவன் கைகளைப் பிரித்து முகம் புதைக்கிறேன். ஆறுதலாக என் தோளில் கைவத்து அருகே இழுத்துக்கொள்கிறான். அவன் கண்களும் கலங்கியிருக்கின்றன.

“மீனா.. கொஞ்சம் வந்துட்டு போ”.. திண்ணையிலிருந்து, வீட்டின் உட்பக்கத் திசைக்காய்க் குரல் கொடுக்கிறான்.

“என்ன மாமா.. கூப்பிட்டீங்களா?”

“என்னோட மருமகள் மீனா.. இவன் பட்டாபி, பால்ய சினேகிதன்; பிரான்சுல இருக்கான். நாற்பது வருசத்துக்கு முன்னாடி கிளம்பிப் போனவன், மறுபடியும் வந்து நிக்கிறான். சரி.. காப்பி போட்டுக்கொண்டுவாம்மா. அதற்காகத்தான் கூப்பிட்டேன்.”

“எனக்குச் சர்க்கரை சேர்க்கவேண்டாம்மா.. எங்கிட்ட நிறைய இருக்குது”

“உனக்கும் சர்க்கரை வியாதியா? வியாதியை மட்டும் கடவுள் வித்தியாசம் பார்க்காமல் கொடுத்திடறான்”

“ராகவா என் உருப்படாத தம்பி எப்படி இருக்கிறான்? இப்பவும் அப்படித்தானா?”

“ஏண்டா பட்டாபி? இப்படி கேக்கிற.. உனக்கு நடந்தது எதுவும் தெரியாதா?”

“நீ என்ன சொல்ற கடேசியா அவனிடமிருந்து கடிதங்கள் வந்து பத்துவருடங்களுக்கு மேலாகுது.”

“அவன் உயிரோடு இருந்தாத்தானே உனக்குக் கடிதம் போடமுடியும். ஆனால் உன் தம்பிப் பெண்சாதி கோகிலா நல்லப்பெண்ணாயிற்றே. அவள் கூடவா உனக்கு எழுதலை”

“அவள் எனக்குக் கடிதம் போடாததில ஆச்சரியமில்லை. என் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் அந்தப் பெண்ணை குறைகூறி நிறைய எழுதியிருக்கேன்.”

“அங்கிருந்துகொண்டே, அப்பெண்ணிடம் குற்றம்கண்டு எழுதியதில எனக்கு உடன்பாடில்லை. உன் தம்பியிடம்கூட அப்படியென்ன பெருசா குறை கண்டிட்டீங்க?”

“என்னடா ராகவா? நீயா இப்படி பேசற? நடந்ததெல்லாம் உனக்குந் தெரிஞ்சதுதானே? அப்பாவும் அவனைப் படிக்கவைக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தார். புதுச்சேரியில் வாடகைக்கு வீடுபிடித்து, பாட்டியை சமைத்துப் போடச் செய்து, வாராவாரம் ஆட்கள் தலையில் உப்பு மிளகாய் முதற்கொண்டு அனுப்பிவச்சார். குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருந்தாலாவது, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருக்கலாம்னு நீதானே சொன்னே. சரி அதைவிடு. அப்பாவின் பேச்சைக்கேட்டு, இருக்கிற நிலபுலங்களையாவது ஒழுங்காக மராமத்துப் பார்த்திருந்திருக்கலாம். ஊர் சுத்திக்கொண்டிருந்தவன், எவளோ ஒருத்தியை வீட்டிற்கு அழைத்து வந்து பொண்டாட்டி என்றிருக்கிறான். அப்பாவால் பொறுக்கமுடிலை, அவர் குணமும் உனக்கு நல்லா தெரியும். போடாவெளியே என்று சொல்லியிருக்கிறார். அப்பா எடுத்த முடிவு என்வரைக்குஞ் சரி.”

“பட்டாபி.. உன் தம்பி திடீர்னு விபத்துல போயிட்டான். ஆனால் நாமதான் அவனைச் சரியாப் புரிஞ்சுக்கிலையோன்னு நினைக்கிறேன். அடிப்படையிலேயே நம்மிடம் கோளாறுகள் இருக்கின்றன. நமக்குச் சரியென்பதை ஒரு வாழ்க்கைமுறை சட்டமாக வரித்துக்கொண்டு, முரண்படுகின்றவர்களைத் தண்டிக்க நினைக்கிறோம். நீ நம்ம ஊர்க்காரந்தான் இல்லைண்ணு சொல்ல முடியுமா? ஆனாலும் வெளிநாட்டவர்க்கு ஊழியம் செய்யணும்னு புறப்பட்டுப்போய்ட்ட. திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு அந்திமக் காலத்துல இங்கே வந்திருக்கிற. இதெல்லாம் உன் வகையில் சரியென்று நினைக்கலாம். நான் அப்படி நினைக்கிலை.”

“….”

“பெரிய படிப்பு, வெளிநாட்டுல உத்தியோகம், பணக்கார மனைவியென நீ அரிதாரம் பூசிக்கொண்டப்போ, எங்களுக்கெல்லாம் பிரம்மிப்பாகத்தானிருந்தது. ஆனால் அந்த பிரமிப்பினை காலமும் இடைவெளியும், தின்று செரித்துவிட்டன பட்டாபி. உன்னைத் தலையில்வச்சுக் கொண்டாடிய உன் தகப்பனாருக்கு உன்னால என்ன செய்ய முடிஞ்சது. மாதம் தவறாம பணம் அனுப்பின. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா படுத்தபடுக்கையிலேயே அவர் மலஜலம் போனப்போ, முகம் சுளிக்காமல் சிசுருட்ஷைகள் செய்தது உன்னோட பணமில்லை. அவர் வேண்டாமென்று ஒதுக்கிய உன்னோட தம்பிப் பெண்சாதி. உன் தம்பி செத்தப்போ இந்த ஊரே திரண்டிருந்தது. உனக்கு ஒண்ணு ஆச்சின்னா எத்தனை பேரு வருவாங்கண்ணு நெனக்கிற. நாற்பது வருஷத்துக்குப்பிறகு, இந்த மண் என்னுடையது, இந்த மனிதர்கள் என்னுடையவர்கள்னு உணர்வுபூர்வமா உரிமைகொண்டாடிவருவதற்கு சமூக நீதிகள் என்ன சொல்லும்ணு யோசிக்கிறேன்.”

“ராகவா என்ன சொல்ற?”

“என் மனதிற் பட்டதைச் சொன்னேன். உண்மையைச் சொல்லப்போனா என்னால கூட உன் மனதிலிருக்கின்ற, பழைய நண்பனா பழகமுடியாது, பழசையெல்லாம் புதுப்பிக்க முடியாது. இந்த நாற்பது ஆண்டுகால இடைவெளியில், என்னென்னவோ நடந்து போச்சு. உறவோ நட்போ, இடைவெளி எல்லையைப் பொறுத்தே அதன் ஜீவிதத்தை நடத்துது. அன்றாடம் பழகுகிற மனிதர்களிடத்திலேயே இப்போதெல்லாம் நமக்கு அக்கறை வரமாடேங்குது. திடீரென்று படரவருகிற உறவுக்கொடிகளிடம் எப்படி? அறுத்துவிடத்தான் சொல்லும். மனைவி, பிள்ளைகளைவிட்டு இங்கேயே காலந்தள்ளப் போகிறேன் என்கின்ற நினைப்பெல்லாம் ரொம்பகாலத்துக்குத் தாக்குப்பிடிக்காது. நீங்காத நினைவுகளென்பது எப்போதாவது நினைத்து சந்தோஷப்படவும், பெருமூச்சிடவும் உதவும். யதார்த்தத்துக்கு உதவாதுண்ணு நினைக்கிறேன். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. ஏதோ வந்தற்கு என்னோட இரண்டு நாட்கள், உன் தம்பிவீட்டுல இரண்டு நாட்கள்னு தங்கியிருந்து ஊரைபார்த்துட்டுக் கிளம்பு. இறுதிகாலத்துலயாவது ஓரிடமா இருக்கப் பழகிக்க.”

ராகவன் மருமகள், இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டுவந்து ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டுத் தயங்கி நின்றாள்.

“ஏதாவது சொல்லணுமா?” ராகவன்.

“ஆமாம் மாமா. உங்கப் பிள்ளை அவர் தங்கச்சிக்கிணு போனவாரம் ஓட்டிம்போய் விட்டுட்டுவந்தக் கிடாரிக்கண்ணு, திரும்பவும் நம்மவீட்டுக்கு வந்துட்டுது, கொட்டாயிலே நிக்குறதைப் பாத்துட்டு வறேன்.”

– ஜூலை 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *