கரிசலாங்குட்டை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 2,104 
 

கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள் தலையில் சுமந்து செல்லும் அளவுக்கு நிறைந்திருந்ததில் முகத்தில் பூரிப்பு வெளிப்பட்டது.

கரிசலாங்குட்டை. அது தான் அவளுடைய கடவுள். மழை பெய்யும் காலங்களில் காடுகளிலிருந்து காய்ந்து, உதிர்ந்த மரத்தின் இலைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு குட்டையில் தேங்கி, மக்கி, உரமாகி மண்ணோடு கலந்து நீர் குறைந்த பின் அதில் முளைக்கும் கரிசலாங்கண்ணி செடிகள் வளமாக வளர்ந்து நிற்கும் போது கடவுளையே நேரில் பார்த்தது போலிருக்கும்.

வருடத்தில் மூன்று மாதங்களுக்கு தினமும் வளர, வளர இலைகளைப்பறித்து அருகில் உள்ள சிறு நகரத்தில் ஒரு கோவிலின் முன்னே அதிகாலையிலேயே தனது காட்டில் போடப்பட்டிருக்கும் குடிசை வீட்டிலிருந்து பழைய சேலையை கீரை வாடாமல் இருக்க ஈரமாக்கி, அதில் கீரைகளை புடியாக்கி, எண்ணி அடுக்கிய பின் தலையில் சிம்மாடு கூட்டி, அதன் மேல் வைத்து சுமந்து நடந்தே சென்று ஒரு புடி ஐந்து ருபாய் என நூறு புடிகள் விற்றதும், அதில் வசூலாகும் ஐந்நூறு ரூபாயை தனது இடுப்பில் சொருகியுள்ள சுருக்குப்பைக்குள் போட்டுக்கொண்டு ஊருக்கு செல்வாள். பசித்தாலும் கடைகளில் சாப்பிடாமல், பசி பொறுத்து வீடு வந்து நேற்றைய மீதமான பழைய சோறு கரைத்துக்குடித்து பசி போக்குவாள். 

தோட்ட வேலைக்கு கூலிக்கு பயிர்களுக்குள் உள்ள களை எடுக்கும் வேலைக்குப்போனால் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் தான் கிடைக்கும். அதுவும் வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோதான் வேலை கிடைக்கும். ஆனால்

கீரையின் மூன்று மாத வருமானம் வருடம் முழுவதும் செலவின் தேவைகளை பூர்த்தி செய்து விடும்.

“கீர தெய்வம் கண்ணு முழிச்சுதுன்னாவே நாம் பெத்த அஞ்சு பொம்பளப்புள்ளைங்களும் பெத்த பத்து பேத்திமார்களுக்குமே பொங்கல் நோம்பிக்கும், ஆடி மாசத்துல வார தூரி நோம்பிக்கும் துணி, மணி எடுத்துக்கொடுத்துப்போடுவனாக்கும். பலகாரத்தோட ஒரு வாரத்துக்கு சோறும் ஆக்கிப்போட்ருவேன். சாமிக்கு வளத்தர கெடாவ வெட்டி கெடா விருந்தும் போட்டுருவேன். நாந்தெனத்துக்கும் கும்பிடற சாமியே கரிசலாங்குட்டைல இருக்கற கரிசலாங்கண்ணி செடிகதான்” என வெள்ளந்தியாக உறவுகளிடம் பேசும் போது எழுபது வயதிலும் ராமாயிக்கு பூரிப்பு முகத்தில் வந்து மனதை மகிழ வைக்கும்.

“பாட்டி. சின்ன வயசிலிருந்தே கீரை விக்கப்போவீங்களா? பள்ளிக்கூடம் போகலையா? ” பேத்தி ரம்யாவின் கேள்வி.

“அப்பெல்லாம் படிக்க போக பொட்டப்புள்ளைகளை அனுப்ப மாட்டாங்க. பத்து வயசுலியே கண்ணாலம் பண்ணி புருசனூட்டுக்கு அனுப்பி போடுவாங்க. எனக்கு சின்ன வயசா இருக்கற காலத்துல ஒரு சமயத்துல மழை மாரி செரியா பேயாம சோத்துக்கே ரொம்ப சிரமமா ஆயிப்போச்சு. ராயி களிக்கு கீரையப்பொறிச்சு கெடைஞ்சு திம்போம். ஒரு தடவ ராயி கெடைக்காம கீரைய மட்லுமே கடைஞ்சு தின்னம்னா பாத்துக்குவே…”

இதைக்கேட்ட பேத்தியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“வேலில இருந்த கத்தாளையத்தோண்டி அதுல இருக்கற கெழங்க வேக வெச்சுத்திண்ணோம். பல பேருக்கு சோத்துக்கில்லாமப்போயி பசியோடையும், பட்னியோடையும் கெடந்த போது வசதி படைச்சவங்க ஏழை பாலைக்கு மக்காச்சோளக்கஞ்சிய காச்சி எலவசமா ஊத்துவாங்க. அந்த சமயத்தல பிளேக் நோயி வந்து நெறையப்பேரு செத்துப்போனாங்க. செத்துப்போறதுக்குள்ள வாரிசுகள நெறையா பெத்துப்போடோனும்னு வசதியானவங்க ஊட்டு பசங்க நாளஞ்சு பொண்ணுகள கண்ணாலம் கட்டிக்குவாங்க. சோறு கெடச்சா போதுமுன்னு வேற வழியில்லாம வேண்டான்னு சொல்லிக்காம பொண்ணுகளும் கண்ணாலத்துக்கு ஒத்துக்குவாங்க. அப்புடித்தான் நானும் உங்கொப்புச்சிய அதுதான் என்ற புருசன நாலாவதா கட்டீட்டேன். கட்டுனவரு அஞ்சு பொம்பளப்புள்ளைங்கள கொடுத்துப்போட்டு ஒரேடியா போயி சேந்துட்டாரு. அவரு கண்ணாலம் பண்னுன மத்த பொம்பளைகளுக்கு கொழந்தைகளே பொறக்கலீன்னு வெச்சுக்குவே… காடு ரெண்டேக்கரா எனக்கு குட்டையோட பங்கு வந்தும் சோத்துக்கு கூட வெளைச்சலில்லாம போன போது காட்டுக்குள்ள ஒதுக்குப்புறமா ஆடுமாடுக தண்ணி குடிக்கறதுக்கு என்ற மாமனாரு தோண்டுன குட்டைல மொளைச்ச கரிசலாங்கண்ணி கீரதான் அஞ்சு கொழந்தீகளையும் வளத்தி கண்ணாலம் பண்ணி சீர் செறப்பு கொடுக்க ஒதவுச்சு” என கூறிய போது அம்மாவின் அம்மா அம்முச்சி ராமாயி கண்களில் வடிந்த கண்ணீரை பேத்தி சிறுமி ரம்யா பாசத்துடன் மடியில் அமர்ந்தவாறு தனது கைக்குட்டையால் துடைத்து விட்டாள்.

இப்படியிருக்க ஒரு நாள் தனது பக்கத்து வீட்டு சம வயது பங்காளி மாரன் வந்து “இந்த ஏரியாவுல தொழில் பேட்டைன்னு ஒன்னு கவுருமெண்டு கொண்டு வந்து கப்பெனி கட்டப்போறாங்களாமா. தண்டக்காரம் வந்து சொல்லிப்போட்டு போறான். உன்ற கரிசலாங்குட்டை வெரைக்கும் வருதாமா. குட்டைய மூடிப்போடுவாங்கன்னு சொல்லீட்டான்.” எனக்கூறக்கேட்ட ராமாயிக்கு நெஞ்சு அடைத்து மயக்கம் வருவது போலிருந்தது‌.

இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. திருமணமாகி குழந்தைகள் பிறந்து கணவன் இறந்த பின் உயிர் வாழ கண் முன் கடவுள் கொடுத்த ஒரே வழி குட்டையில் வளரும் கரிசலாங்கண்ணி கீரை மட்டும் தான். நகரத்து ஊரில் கீரையை வாங்குபவர்களும் ” ஆத்தா நீ குடுத்த கீரைய வணக்கி கொடுத்தா குழந்தைகளுக்கு சளியே வாரதில்லை. நீ நூறு வருசம் வாழோணும். எங்களுக்கு கீரைய இப்படியே கொடுக்கோணும். உங்கள கீரை டாக்டர்னே எங்க குழந்தைக சொல்லுதுங்க” என்பர்.

‘இந்த சொல்லை ஒன்னி கேட்க முடியுமா? சுருக்கு பையிக்கு பணம் எப்படி வரும்? பேத்திக சீருக்கு கம்மல் போட முடியுமா? ராயி, கம்பு வாங்கி வயிறு வளக்க முடியுமா?’ எனும் சிந்தனையில் விடியும் வரை தூக்கம் வரவில்லை. 

காலையில் எழுந்து வெளியில் சென்று பார்த்த போது கரிசலாங்குட்டையை மூட இயந்திரங்கள் பல வரிசை கட்டி வந்ததும், அதைக்கண்டு சொல்ல முடியாத வேதனை நெஞ்சில் பாரமாக அழுத்தியது. ஒரு முறையாவது குடையை மூடுவதற்கு முன் பார்த்து விட வேண்டுமென எண்ணியவள் குட்டையருகில் அப்பாவியாகச்சென்று நின்று கரிசலாங்கண்ணி செடிகளை ஒரு குழந்தையைப்போல் எண்ணி கைகளில் வருடி விட்டாள்.

குட்டை ‘உள்ளே வா’ என தன்னை‌அழைத்தது போலிருக்க, தன்னிலை மறந்து நீரும், சேறும் நிறைந்த நடு பகுதியை நோக்கி கால்கள் தானாக நடந்தன. கண்களில் கண்ணீர் ஆறாகப்பெருகியது. “ஒன்னி உங்கள நாம் பாக்கவே முடியாதா?” செடிகளிடம் பேசினாள். கதறினாள். குட்டையின் மையத்தில், எப்போதும் செல்லாத சேற்றுப்பகுதிக்குள் இப்போது ஆபத்தையறியாமல் கால் வைத்ததும் சட்டென சேற்றில் பட்ட கால்கள் வழுக்கிட உடலை இழுத்துச்சென்று நீருக்குள் விழச்செய்ததும், சுய நினைவு வந்தவளாய் அதிர்ச்சியடைந்து, நீரில் விழுந்த பறவை தனது இறக்கைகளை படபடவென அடிப்பது போல் சேற்று நீரில் கைகளை அடிக்க, அடிக்க, மனம் மரண பயத்தில் துடிக்க, துடிக்க கனமான உடல் மேலே வருவதற்க்கு பதிலாக கீழ் நோக்கி அமிழ்ந்து மறைய, தன்னை பல காலமாக மிகவும் நேசித்த ராமாயி எனும் மனுசியை குட்டை தனது சேறு எனும் கைகளால் முழுவதுமாக இழுத்து, இறுக்கமாகப்பற்றி ஆலிங்கனம் செய்து கொண்டது.

குட்டையைச்சுற்றிலும் வந்து நின்ற இயந்திரங்கள் குட்டையைச்சுற்றியிருந்த ஏரியின் மண்ணை இடித்து குட்டையை முழுவதும் மூடும்படி தள்ள, குட்டையோடு ராமாயும் காணாமல் போனாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *