மனமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,566 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெண் படித்தவள், அழகானவள், நாகரிகமானவள். நிரம்பச் சீதனமுண்டு” என்று அவர் கூறினார். அதைக்கேட்டு அவன், இரை கிடையாமல் அவஸ்தைப்பட்ட நரி உயரத்திலே கிடந்த திராட்சைக் குலையைக் கண்டு வாயூறியது போல அங்கலாய்த்தான். தனக்குச் சீதனம் பிரதானமல்ல. அழகும் நாகரிகமும் இருந்துவிட்டாலே போது மென்று முருகேசு எண்ணியிருந்தான். சீதனமுங் கிடைத்தால் யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்! அவனுக்கு ஒரே ஆனந்தம்.

இந்தக் கல்யாணம் தப்பிவிட்டால் அவன்பாடு அதோ கதிதான். வேறு யார் அவனுக்கு மணம் பேசுவது? தாய் தந்தையர் வள்ளி யம்மையை முடித்தாற் சரி, அல்லது அவளுக்கு எங்கேயாவது கல்யா ணம் ஆகும் வரை உனக்கு வேறு பெண்ணைக் கட்டிதர முடியாது” என்று கூறிவிட்டார்கள். வள்ளியம்மை அவனது மைத்துனி. அந்தப் பெயரைக் கேட்கவே முருகேசுவுக்கு மிக வெறுப்பாயிருந்தது. லீலா, நீலா, புஷ்பம், ராணி என்றெல்லாம் இரண்டு மூன்று எழுத்தில் அழ கான பெயர்கள் இருக்கும்போது இதென்ன பெயர்! “அம்மையைத் தள்ளிவிட்டுச் சுருக்கமாக அழைத்தால், “வள்ளி” என்றுதான் அழைக்க வேண்டும். அவனுக்கலை அருவருப்பாக இருந்தது. படிப்புக் குறைவு. அழகும் மட்டம். நாகரிகமே அறியாத பட்டிக்க டுப்பெண். அவளைக் கல்யாணம் முடித்துப் பட்டினத்துக்கு அழைத்துச் சென்றால் அங்கே கதிரையில் உட்கார்ந்து கொள்ளவே அவளுக்குத் தெரியாது. ஆடவர்களைக் கண்டால் – ஒளிந்து விடக் கூடும். நித்திய பிரம்மச்சாரியாக இருந்து வாழ்க்கையை அனுபவியாது இறக்கம் விட்டாலும் காரியமில்லை அந்த வள்ளியம்மையை மட்டும் மணப்பது இல்லை” என்று அவன் தீர்மானித்து விட்டான். பட்டணத்திலே அரைக்குக் கீழே இறங்கியதும் இறங்காததுமான சட்டை அணிந்த பள்ளிக்கூடப் பெண்கள் இரட்டைப் பின்னலைச் சிலுப்பி மாறிமாறித் கோள் மீது எறிந்து நடக்கும் காட்சியைப் பார்த்துப் பார்த்து அவன் நன்கு நயத்திருக்கிறான். நடு மார்பை மாத்திரம் மறைத்துத் தாவணியணியும் நாரீமணிகள் உயர்ந்த குதிச் செருப்பிலே சறுக்கிச் செல்வதைக் கண்டு மனதைப் பறிகொடுத்து, “இதுதானோ அந்த அன்னநடை” என்று இன்னுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இந்தக் காட்சிகளையெல்லாம் கண்ட கண்ணுக்கு வள்ளியம்மை பொலிவாக இருக்கவில்லை. உலகிலே இப்படியாக மினுக்கித் தளுக்கி ஒயிலாய் நடக்கும் சிங்காரிகள் எத்தனையோ பேரிருக்க அவன் இந்த வள்ளியம்மையையா மணந்து கொள்ள வேண்டும்!

இத்தனைக்கெல்லாம் அவன் ஏதோ பிரபு வீட்டுச் சுகுமாரனல்ல. நாகரிகத்திலே பிறந்து நாகரிகத்திலே சுழியோடி முக்குளித்தவனல்ல. அசல் நாட்டவன். பட்டிக்காட்டுத் தாய்க் கும் தந்தைக்கும் புத்திரனாகப் பூமிப்பிரவேசஞ் செய்தவன். பாவம், அப்படியாகப் பிறந்ததற்காக இன்று அவனுக்கிருக்கும் மனவருத்தம்! அது அவனுக்கும் அவனைப் படைத்த அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். தந்தை இன்னமும் அந்தச் செம்பாட்டுக்காவி ஊன்றித் தடித்த நாலுமுழ வேட்டியை முழங்காலுக்கு மேலே கட்டிக்கொண்டிருந்தார். பரட்டைத் தலைமயிர் நிரம்பிய பொலிவற்ற முகம் வெய்யிலிலே காய்ந்து கறுத்த மேனி இவை இன்னு மின்னும் பெருகினவேயன்றிக் குறைந்தபாடில்லை.

“அம்மா, நீ குறுக்கே கட்டுவதை நிறுத்திவிட்டு இனிமேல் இறவுக்கையும் மாறாடியும் போடம்மா என்று சொல்லிப் பார்த்தான். “இதுவரையும் மில்லையாம். இந்தக் கிழட்டுக்கு இனி ஏனடா அதெல்லாம்” என்று அவள் மறுத்துவிட்டாள். இந்தப் பட்டிக்காட்டுச் சவங்களைத் தன் தோழர் கண்டுவிட்டால் தன் கௌரவத்திற்கு இழுக்கு வந்துவிடும் என்று அஞ்சியதால் நண்பர்களை அவன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதில்லை,

அவன் முதன்முதல் கொழும்பிற்குச் சென்றபோது நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் இப்போது மறந்துவிட்டான். “யாழ்ப்பாணத்தில் இருந்து எப்போ வந்தது” என்று சிங்கள வாலிபர்கள் ஆங்கிலத்திலே கேட்டு நகைத்தார்கள். கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிரை! அசல் நாட்டவன் என்று அப்படியே தெரிந்தது. சப்பாத்துக்காலை இழுத்திழுத்து நடந்தபோது நண்பர்கள் செய்த ஏளனந் தாங்காது ஒரே ஒரு நாள் மாத்திரம் அழுதிருக்கிறான்.

அதெல்லாம் இப்போது அவன் நினைவில் இல்லை . அவ, அது பெரிய நகரவாசி. நாகரிகம் நன்றாய்ப் பிடிபட்டுவிட்டது. அப்பட்டணவாசி முருகேசுவுக்கு இந்தப் பெரியவர் பேசிய பெண், வாழ்க்கைத் துணையாக வந்துவிட்டால் பட்டிக்காட்டிலிருந்து விலகி முற்றாகவே நாகரி உலகில் திளைத்து விடுவான். ஆம், அவன் மனம் அப்படித்தான் எண்ணியது.

இப்படி அழகான நாகரிகமான பெண்ணை மணம் பேசிய பெரியவரைக் கண்டு ஆரம்பத்திலே அவன் வெறுப்புக்கொண்டான். அவருடைய தோற்றம் தந்தையின் தோற்றம் போல் நாட்டுப்புற மாதிரியிலே இருந்தது. இப்பொழுது நாட்டவரைக் கண்டால் அவனுக்கு ஒரே வெறுப்பு. ஆனால் அதைப் பெரியவர் கவனியாதது போல் அவனோடு பேச்சுக்கொடுத்தார். அவர் ஆரம்பத்தில் “தம்பி, இது வெய்யிலல்ல நெருப்பு என்று அகோரமான வெயிலை விஷயமாக எடுத்து கொண்டார்.

அவன் பதில் கூறாது வேறெங்கோ புலனைச் செலுத்தியிருப்பவன் போலப் பாசாங்கு செய்தான்.

“என்ன தம்பி, நான் சொல்லுவது சரியில்லையா?” பதிலில்லை. “ஏன் உமக்கு இந்த வெய்யில் குளிருகிறதா?” இப்பொழுதும் பதிலில்லை .

பெரியவர் இலேசானவரல்ல. இவன் முந்தநாட் பிறந்தவன். இவனா அவரை அசட்டை செய்வது! அவருக்கு இவனையும் தெரியும், இவனப்பனையும் தெரியும்.”

“அது உம்முடை குற்றமில்லைத் தம்பி…..”

இந்த வார்த்தைகளைக் கேட்டு மெல்ல அவரை நோக்கினான். ஆனால் அதற்கிடையில் அவர் கூறி முடித்துவிட்டார்:

“…. பருவக்கோளாறு. வெய்யில் குளிரும்; நிலவு சுடும் அது இந்தப் பருவத்தின் இயல்பு.” அசடு வழிய அவரை நோக்கினான்.

“ஆமாம். அப்படித்தான்” என்று இன்னும் வலியுறுத்தினார். ஒரு கன்னத்தில் அடி விழுந்த அதிர்ச்சி நீங்குவதற்கிடையில் மறு கன்னத்திலும் அடி விழுந்தது போல் இருந்தது அவனுக்கு .

நீங்கள் கூறுவதைக் கவனிக்கவில்லை. மேலே இருந்த குருவியைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்” என்று சமாளிக்க முயன்றான். குரல் தளர்வாக இருந்தது.

“குருவியிலே மனதைப் பறிகொடுக்கக்கூடிய பருவந்தான்” என்றார் குமாரர். இன்னுமின்னும் அவர் வார்த்தைகள் அவனைத் தாக்கி அதிர்ச்சி அடையும்படி செய்தன.

இது அந்தப் பெரியவர் குமாரருடைய இயல்பான சுபாவம். தலைக்கிறுக்குப் பிடித்த பேர்வழிகளை முதலில் தன் வாய்ச்சாதுரியத்தால் மடக்கிவிடுவார். பின்பு இயல்பாகவே பேசிக் காரியம் பார்ப்பார். அல்லாவிட்டால் அவருக்கு வெற்றி கிட்டுவது அசாத்தியம்.

குமாரர் கீழிறங்கிப் பதுமையாகப் பேசினார். முருகேசுவுக்கு நெஞ்சிலே சிறிது சிறிதாகத் தண்ணீர் வந்தது. அவனுடைய ஊர், பெயர், தொழில் இவற்றைப் பற்றி விசாரித்தார்.

அவனுடைய ஊரிலே இருக்கின்ற பெரிய மனிதர்களின் பெயர்களைக் கூறி அவர் ளெல்லாம் தமக்குச் சிநேகிதம் என்றார். தம்முடைய மருமகனும் கிளாக் உத்தியோகத்தில் இருப்பதாகக் கூறிப் பெருமை கொண்டார்.

பேசிக்கொண்டிருக்கும் போது குமாரர் அவன் கையில் மோதிரம் இருக்கிறதா என்று பார்த்தார். “நீ கல்யாணமானவனா? என்று கேட்கலாமோ என்றும் யோசித்தார். ஆனால் அப்படிக் கேட்கக்கூடாது” என்று அவர் மனம் கூறியது.

எதற்காக மூளையைப் போட்டு உடைக்க வேண்டும். வெற்றிலைப்பை இருக்கிறதே. அதை வெளியே எடுத்தார். தானும் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு அவனையும் போடும்படி நீட்டினார். “நான் போடுவதில்லை ” என்றான். “ஒருநாளும்…” “இல்லை – “அப்படியானால் இன்னும் உமக்குக் கல்யாணமாகவில்லையா?”

“இல்லை ” என்றான். “இன்னும்“ என்ற போது அவர் சிறிது அழுத்தமாக உச்சரித்தார். அந்த அழுத்தம் அவன் நெஞ்சிலும் சென்று அழுத்தியது. அப்போது அவன் முகமிருண்டது. ஆனால் அதைக் கண்டு குமாரர் முகம் மலர்ந்த காட்சி அவனிடமிருந்த முகமலர்ச்சியும் இவரிடமேதான் வந்துவிட்டதோ என்று எண்ணும்படியாக இருந்தது. அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். புன்முறுவலை வெளித் தோன்றவிடாது அடக்கிவிட்டார்.

“நீர் விவாகம் செய்த ஆள் என்று எண்ணினேன்” என்றார். அவன் துக்கம் அதி கரித்துவிட்டது. அது பெற்றோர் மீது ஆத்திரமாக மாறியது. இதுகால வரையில் அவனுடைய உத்தியோகத்திற்கும் ” கௌரவத்திற்கும் தக்கதாக ஒரு பெண்ணை முடித்துக் கொடுக்க வில்லையே! “வள்ளியம்மையாம் வள்ளியம்மை! அந்தச் சவத்தை யாருக்கு வேணும்? அம்மானுக்கு முன்கூட்டி முடிவு சொல்லி விட்டால்…… யாரைக் கேட்டுச் சொன்னார்கள்? எனக்கா அவர்களுக்கா கல்யாணம் ? என்னைக் கேளாது முடிவு சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” இவற்றை யோசிக்கும் போது அவனுக்கு ஒரே சினமாக இருந்தது.

குமாரர் மெல்லக் குறுக்கு விசாரணையில் இறங்கினார். “நீர் ஏன் இன்னும் விவாகம் செய்யவில்லை ?” பதில்கூற அவனால் முடியவில்லை . ”கடனிருக்கிறதா?”

“இல்லை ”

“கரை சேராத குமர்…?”

“இல்லை ”

இல்லை இல்லை என்று கூறுகிறானேயன்றிக் காரணத்தைக் கூறவில்லையே!

“உமக்கு விருப்பமற்ற இடத்திலே மச்சாள் கிச்சாள்.”

“ஓ, அந்தத் தொல்லைதான்” என்று ஓய்ந்த குரலிலே கூறினான் முருகேசன்.

“இது பெரிய அநியாயந்தான்” என்றார் குமாரர். தொடர்ந்து ”அவனவன் விருப்பத்திற்கு மணக்க விட வேண்டும். பெற்றார் இதிலே தலையிடுவது தவறு” என்றார்.

அப்போது அவன் நோக்கிய நோக்கு முற்றுஞ் சரி” என்று கூறுவது போல இருந்தது. “நான் அவளை முடிக்கப் போவதில்லை” என்றான் அவன்.

“ஏன் அழகில்லையா? பணமில்லையா?… நீர் விரும்பாததற்குக் காரணம் என்ன?”

“அழகும் பணமும்! சுத்தப் பட்டிக்காடு.”

“அவனவன் உத்தியோகத்திற்குத் தக்கதாக நாகரிகமான பெண் வேண்டும். நீர் சொல்வது நியாயமே” என்றார் குமாரர்.

“நான் இறந்தாலும் அவளை முடிக்கப் போவதில்லை ” என்றான் அவன்.

“அப்படியானால் விவாகஞ் செய்யாமலிருக்கப் போகிறீரா?”

“ஏதோ பார்ப்போம்.”

“சரி தம்பி, நான் உமக்கு ஒரு கல்யாணம் பேசட்டுமா?” என்று குமாரர் கேட்டார். அவர் கேட்ட தொனியில் அவன் நிலைமைக்கு இரங்கிப் பரோபகார சிந்தையுடன் அதை ஒழுங்கு செய்து கொடுக்க முயல்வதாகவே தோன்றியது.

அவன் யோசித்தான். “ஏன் யோசிக்கிறீர்? உமது கஷ்டத்தைப் பார்த்துத்தான் கூறுகி றேன். இங்கிலீஷ் நிரம்பப் படித்த பெண். அழகானவள். உமக்காகத்தான் ஒழுங்கு செய்வ தாகக் கூறினேன். விரும்பாவிட்டால் விடும். எனக்கென்ன?”

“வேண்டாம்” என்று கூற அவன் மனம் துணியவில்லை. எப்படித் துணியும்? அவர் மேலும் கூறினார் பெற்றாருக்கு ஒரே பெண். இப்பொழுது காசாகப் பதினையாயிரம் கொடுப் பார்கள். சொத்து வேறே. மீதி ஏதாவது இருந்தால் அதுவும் அவளுக்குத்தான்!”

“யாருடைய மகள்?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

“மாலியூர்ச் சரவணமுத்தருடைய பெண். அவளை முடிக்கப் பலர் விரும்புகிறார்கள். ஆனால் நான் உமக்குச் செய்து தந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். நீர் கஷ்டப்படுகிறீர். நல்லவராயுமிருக்கிறீர்.”

சிறிது சிறிதாக அவன் முகம் மலர்ச்சியடைந்து வந்தபோதிலும் தன் விருப்பத்தை இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.

“தம்பி, நீர் யோசிக்க வேண்டாம். ஏதோ அந்தப் பெண் உமக்குக் கிடைப்பதாக இருந் தால் உமது பூர்வ புண்ணியந்தான். வயலின் கூட வாசிப்பாள். வாய்ப்பாட்டு – அது கேட்க வேண்டியதில்லை. தங்கக் கிளியாட்டம். பார்த்துக்கொண்டிருந்தாலே பசி தீர்ந்துவிடும்.”

அவனுடைய முகமலர்ச்சியைக் கொண்டே அவன் விரும்புகிறான் என்பதை அவர் அறிந்து கொண்டார்.

“பெண்ணின் பெயர் என்ன?” என்று அவன் கேட்டான். ஏதாவது வள்ளியம்மை கிள்ளியம்மையாக இருந்தால்…இந்தப் பெயரிலேயே எவ்வளவோ இருக்கிறதாம்!

“சீதாலஷ்மி” என்று அவர் சொன்னார்.

“சீதா என்று அழைக்கும் போது என்ன அழகாகவிருக்கும்! இதைச் செய்துகொண்டால் நல்லதுதான்” என்ற முடிபிற்கு வந்துவிட்டான் முருகேசு. இதை விட்டுவிட்டு வேறென்ன சொம்வான்? கண்ணடித்துக் காதல் கொண்டு கடிதமெழுதிக் கண்ணியிலே பட வைக்கும் சாதி ரத்தைக் கூடக் கையாண்டு பார்த்திருக்கிறான். அந்த வித்தையிலே வல்லவர்கள் என்

னையோ பேர் இருக்கிறார்கள்தான். ஆனால், அதிலே முருகேசு வுக்குச் சிறிதும் வெற்றி கிடைக்கவில்லை. அவமானம் நேர்ந்ததும் உண்டு. தானாகவே தனக்கொரு பெண்ணை தேடிக் கொள்ளுஞ் சக்தியும் தனக்கில்லை என்பதை அறிந்து விட்டான். குமாரர் பேசுமிந்த விவாகத்தையும் நழுவவிட்டால் பின்பு அதோகதிதான்.

“ஏன் தம்பி. விருப்பமா, இல்லையா? இல்லாவிட்டால் இல்லை என்று சொல்லும்” என்று கேட்டார் குமாரர்.

“விரும்பாமலென்ன?….” என்று அவன் கூறினான். கூறிய தொனியில் ஏதோ மனக் கஷ்டமிருப்பதாகத் தெரிந்தது.

தாய் தகப்பனுக்குத் தெரியாமல் எங்கேயாவது மணஞ் செய்வது என்று தீர்மானித்த போதிலும், இப்போது அப்படியான ஒரு வசதி வந்த போது இதுகாலவரை இருந்த தீர்மானம் தளர்ந்துவிட்டது. பெற்றார்! அறியாமல் தன் எண்ணப்படி எங்கேயாவது முடிப்பது பெரிய தவறு போலத் தோன்றிற்று. யோசித்தான்…..

“என்ன? ஒளியாமற் சொல்லும். உமக்கிருக்கும் கஷ்டம் என்ன?” என்று குமாரர் கேட்டார்.

அவன் மனதிலுள்ளதைக் கூறினான்.

“இதெல்லாம் எனக்குப் பெரிய காரியமல்ல. அவர்கள் மனத்தைத் திருப்பி ஆனந்தமாக இந்தக் கல்யாணத்தை முடித்துத் தருவேன்…இதெல்லாம் எனக்குப் பெரிய காரியமல்ல.”

அவர் நிமிர்ந்திருந்து இதைக் கூறினார். அவருக்கு அத்துணை திறமையுண்டு என் பதனையும் முருகேசு நம்பினான். அவனுடைய முகத்தில் மெல்ல மகிழ்ச்சிக்குறி தோன்றியது. அதைக் குமாரர் நன்கு கவனித்தார்.

“ஆனால் ஒரு விஷயம். அப்படி அவர்கள் மனதைத் திருப்பி இதை ஒழுங்கு செய்வதாக இருந்தால், இது இரண்டொரு நாளில் முடியக் கூடிய விஷயமல்ல. பல நாட் செல்லும். அத னால் என் தொழில்துறை கெட்டுவிடக்கூடும்” என்றவர் மேலும் சொன்னார்: “தம்பி நான் சொல்வது விளங்கிறதா? எனக்கு அதனால் வரக்கூடிய நஷ்டத்தை நீர் சரிக்கட்ட வேண்டும்…… குறைந்தது இருநூற்றைம்பதாவது தரவேண்டி இருக்கும்”

முருகேசுவுக்கு நெஞ்சிலே ஈட்டிகொண்டு தாக்கியதுபோல் இருந்தது. இருநூற்றைம்ப தென்றால் கொஞ்ச நஞ்சமா? அதனால் அவன் திகைப்படைந்தான்.

இந்தக் கல்யாணமே வேண்டாமென்றாற் பிழையில்லைப் போல இருந்தது. ஆனால் இதை விட்டால் அவனுக்கு வேறு கதியில்லையே! ஒரே கல்யாணப் பயித்தியத்தில் மூழக யிருக்கிறான், எப்படி அங்ஙனம் கூற மனம் வரும்?

“தொகை அதிகமாயிருக்கு” என்றான்.

“நான் பிள்ளை குட்டிக்காரன். என் தொழிலை விட்டு மினைக்கெட வேணும். இருநூற் றைம்பது தந்தாலுமே போதாது. ஏதோ உமக்காக இப்படி ஒப்புக் கொள்கிறேன்” என்று அவர் இடம் வையாது பேசினார்.

அவன் “நூற்றைம்பது தரலாம்” என்றான். நூறு கேட்க என்று விரும்பியவன் பயத்தினால் நூற்றைம்பது என்றான்.

“இல்லைத் தம்பி எனக்குக் கட்டாது.”

“இல்லை , அது போதும் பாருங்கோ ….”

அதிக நேரம் விவாதித்தனர். தனித்தனி ஒவ்வொருவரும் தமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களைக் கூறினர். இறுதியிலே இருநூறுக்கு இருவரும் சம்மதித்தனர்.

“சரி, உம்முடைய வீட்டிற்கு எப்போது வர?” என்று குமாரர் கேட்டார்.

“நாளைக்கே வாருங்கோ. நான் விரைவிலே பயணம் போக வேண்டும்” என்றான்,

“சரி, நாளைக்குச் சரியாகப் பத்து மணிக்கு உம்முடைய வீட்டில் நிற்பேன். நீர் அங்கே காத்திருக்க வேண்டும்… எல்லாம் வெற்றியாகும். இதெல்லாம் எனக்குப் பெரிய காரியமல்ல.”

அவன் பத்து மணிக்கு அங்கே காத்து நிற்பதாகக் கூறினான்.

“சரி, தம்பி! நான் போய் வருகிறேன்.”

“நல்லது.”

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். மறுபடியும் “சரி, தம்பி நான் வாறேன்” என்றார் குமாரர். ”வாருங்கோ ” என்றான் அவனும்.

ஆனால் அவர் போவதாகக் காணவில்லை. அவன் ஆச்சரியப்பட்டான். அதற்கிடையில் நீர் பெண்ணைப் பார்க்க வேண்டாமா?” என்று மறுபடி தொடங்கினார்.

“முதலில் வீட்டுக்கு வாருங்கோ. அதெல்லாம் ஆறுதலாகப் பார்ப்போம்” என்றான் அவன். பெண்ணைப்பார்க்க அவனுக்கு விருப்பந்தான் என்றாலும் அப்போது அப்படிச் சொன்னான்.

சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டு, ”தம்பி கையிலே காசிருந்தால் இருபத்தைந்து ரூபா தாரும். பின் அந்த இருநூற்றிலே கழித்து விடுகிறேன்” என்றார். அவனேன் அங்கே இருபத்தைத்து ரூபா கொண்டு வருகிறான்? “பத்து ரூபா மாத்திரம் இருக்கிறது” என்றான்.

“சரி, அதையாவது தாரும்” என்றார்.

அவன் ‘மனிபாய்க்கை வெளியே எடுத்தான். அப்போது ஒரு வாலிபன் பைசிக்கிள் வண்டியில் அங்கே வந்து இறங்கினான்.

குமாரர் ஏதோ கூற உன்னுவதற்கிடையில் ”உம்மிடம்தான் போய் வருகிறேன்” என்றான் மிடுக்காக அந்த வாலிபன்.

“ஏன், என்ன விசேஷம்?”

“எனக்கு அந்தப் பெண் வேண்டியதில்லை. நீர் சரியான ஏமாற்றுக்காரன்” என்றான் வாலிபன்.

முருகேசுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“என்ன நீர் சொல்வது விளங்கவில்லை . அவசரப்படாமற் சொல்லும்” என்றார் குமாரர். “நீர் நேற்றுக் காட்டிய பெண்தானா மணவறைக்கும் வரும்?” “வேறென்ன!”

“சரி இருக்கட்டும். அந்தப் பெண் எனக்கு வேண்டியதில்லை. மரியாதையாகப் பணத் தைக் கொடுத்துவிடும்”

“ஏன்? எதற்காக?”

“என்னை ஏமாற்றிவிட்டீர். நீர் பேசிய பெண் வேறு நேற்றுக் காட்டிய பெண் வேறு”

உடனே குமாரர் மிகவும் கோபத்தோடு சொன்னார்: “எந்த மடையன் சொன்னான்? நான் அப்படியான அயோக்கியன் என்றா எண்ணுகின்றீர், நீர்! விளங்காமற் பேசுகிறீர்”

“இல்லை, நான் விளங்கித்தான் பேசுகின்றேன்”

இருவரும் பலமாகப் பேசினர். கோபமும் மிஞ்சிக்கொண்டிருந்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக முருகேசு இடையே குறுக்கிட்ட போது அந்த வாலிபன் சொன்னான்: “இவர் எனக்கு ஒரு கல்யாணம் பேசினார் பாரும். நேற்றுப் பெண் பார்க்கப் போனோம். ஒரு அழகான பெண்ணைக் காட்டினார். ஆனால், மணவறையில் வேறொரு மூளிப் பெண் வரும்”

“பொய்” என்றார் குமாரர். “உமக்கெப்படித் தெரியும்?” என்று வாலிபனிடம் முருகேசு கேட்டான்.

“பேசின பெண்ணைத்தான் நான் காட்டினேன் தம்பி” என்று குமாரர் குறுக்கிட்டுக் கூறினார்.

“இல்லை. அந்த வீட்டிலே மூன்று பெண்கள்…” என்று அந்த வாலிபன் ஆரம்பித்தான்.

குமாரர் அவனைச் சொல்லவிடாது தான் குறிக்கிட்டு “யார் சொன்னான்? நீர் சரியான புரட்டுக்காரனாயிருக்கு” என்றார்.

“யார் புரட்டுக்காரன், நானா? நீரா?” என்று கூறியபடி கைச் சட்டையைச் சுருக்கிக் கொண்டு அவரை நோக்கிப் பாயத் தயாரானான் அவன். முருகேசு அவனைப் பிடித்துக் கொண்டு “பெரியவர், கொஞ்சம் பொறுங்கோ ! அவர் தன் நியாயத்தைக் கூறட்டும். பிறகு நீங்கள் சொல்லலாம்” என்றான்.

அந்த வாலிபன் மீண்டும் கூறினான்: “பாரும் மிஸ்டர்! அந்த வீட்டிலே மூன்று பெண். முதல் இரு பெண்களும் அழகில்லை . எத்தனையோ இடங்களில் மணம் பேசியும் எல்லோரும் மறுத்து விட்டார்கள். இறுதியில் இவர் ஒரு சூழ்ச்சி செய்தார். மூத்த பெண் என்று கூறி மூன்றாவது பெண்ணைக் காட்டி, மூத்த பெண்ணைக் “கட்டி அடித்து விட்டார். நம்பி மோசம் போன அந்த மாப்பிள்ளை நாலு நாளிலே கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டான். அவன்தான் இந்த இரகசியத்தை என்னிடம் கூறினான். எனக்கு இரண்டாவது பெண்ணைப் பேசினார். ஆனால், காட்டப்பட்டது அந்த மூன்றாவது பெண்ணாம். இந்த லட்சணத்தில் என்னிடம் பெற்றாருக்கு இவள் ஒரேயொரு மகள் தான் என்றும் சொல்லியிருக்கிறார்.”

இவன் இதைக் கூறிக்கொண்டிருக்கும் போது குமாரர் இடையிடையே குறுக்கிட்டு, “பொய்”, “புரட்டு”, “சுத்தப்பொய்” என்றெல்லாம் மறுத்துக் கொண்டிருந்தார். விஷயத்தைக் கேட்டு முடித்த முருகேக, ஒரேயொரு பெண் என்று அவன் கூறிய வார்த்தையைக் கேட்டதும், “யாருடைய மகள்?” என்றான்.

“மாலியூர்ச் சரவணமுத்தருடைய மகளோ, யாரோவாம்!” என்றான் வாலிபன். முருகேசு ஆச்சரியப்பட்டான். “அந்தப் பெண் வேறு. உமக்குப் பேசியது வேறு” என்று குமாரர் அவசரமாகக் கூறினார்.

“சரவணமுத்தருடைய மகளைத்தானே எனக்கு இப்பொழுது பேசினீர்” என்று முரு கேசு கேட்டேன்.

“எனக்கும் உமக்கும் என்றா எண்ணுகிறீர்? அகப்பட்ட இடமெல்லாம் வலைவீச வேண்டியதுதான். ஏதோ ஒன்று அகப்படும் என்பது அவருக்குத் தெரியும்!” என்று வந்தவன் கூறினான்.

குமாரர் நிலத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார். “என்னுடைய காசு தருகிறீரா, என்ன?” என்று அந்த வாலிபன் முறைப்பாகக் கேட்டான்.

“உமக்குக் காட்டிய பெண்ணை முடித்துத் தந்தாற் சரிதானே!” என்று தயவாகக் கூறினார் குமாரர்.

“நீர் எங்கே கழித்துவிடுகிறீரோ! அதை யார் கண்டது? அந்தப் பெண்ணும் வேண்டாம். வேறு பெண்ணும் வேண்டாம். பணத்தைத் தந்துவிடும்.”

அப்போது றோட்டிலே பஸ்வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது. “நான் இப்போது யாழ்ப்பாணம் போகிறேன். வீட்டிற்கு வாரும் தருகிறேன் என்று கூறிக்கொண்டு எழுந்தார் தரகர். கிட்ட வந்த பஸ் யாரையோ இறக்குவதற்காகச் சிறிது தாமதித்தது. தருணத்தைத் தவற விடாது ஓடிப்போய் ஏறிக்கொண்டார் குமாரர்.

பஸ்வண்டி போய்விட்டது. ஏமாந்த வாலிபர் இருவரும் என்ன செய்வது என்று தெரியாது விழித்துக்கொண்டு நின்றார்கள். அந்த வாலிபன் பற்களைக் கடித்தான். அதற்குமேல் வேறென்ன செய்யமுடியும் அவனால்?

சிறிது மௌனம். “சரியான ஆசாமி!” என்றான் அவன்.

“நல்ல காலம் தருணத்திலே நீர் வந்தது. அல்லாவிட்டால் நான் நிச்சயமாக அணாப் பப்பட்டிருப்பேன்…சீ! இதென்ன உலகம், எங்கே போனாலும் அணாப்பு!” என்றான் முருகேசு.

“ஒரு நாளும் தரகர்மாரை நம்பக்கூடாது” என்று ஒரு அநுபவ சித்தாந்தம் மற்றவனி மிருந்து எழுந்தது.

“நீர் எவ்வளவு பணம் கொடுத்தீர்?” என்று முருகேசு கேட்டான். “அதையேன் கேட்கிறீர்! ஐம்பது ரூபா மண்ணாய்ப் போச்சு!” என்றான் அவன்.

இன்னும் சிறிது நேரம் அந்த அனுபவமற்ற வாலிபர் இருவரும் தங்களுக்கு இதில் கிடைத்த அனுபவத்தைப் பற்றிப் பேசினார்கள். இறுதியிலே இருவரும் பிரிந்து சென்றார்கள் சுடலை ஞானம் வெளித்த முதியவர்களின் மனநிலையிலேயே அப்போது அவர்கள் மன நிலையும் இருந்தது. தரகர்மாரை நம்பினால் வாழ்க்கை முழுவதுமே திண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது.

வழியிலே முருகேசுவின் மனம் இதைப்பற்றி நன்கு சிந்தித்தது. இந்தத் தரகர் வலையிலே சிக்கியிருந்தால் அவன் நிலைமை என்ன! அவன் பெற்றோர் மற்றும் உறவினர் கண்ணிலே விழிக்க முடியுமா?

வீட்டிலே சாப்பிட உட்கார்ந்தபோது தாய் வழமையான பல்லவியைத் தொடங்கினாள். “தம்பி, கொம்மான் இன்றைக்கும் வந்து போகிறார்…” என்றாள்.

வழமையிலே இந்த வார்த்தைகளை அவள் கூறினால் அவன் சினப்பதுண்டு. இன்று மௌனமாகக் குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டு இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அந்தப் பெண் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க உன்னுடைய வாழ்க்கை ஒரு நாளும் உருப்பட மாட்டாது” என்றாள் மறுபடியும்.

“அது சரி இப்ப அவளுக்கென்ன வயது போய்விட்டதா? பதினாலு வயதுதானே! எல்லாம் ஆறுதலாகச் செய்யலாம். கொஞ்ச நாளைக்கு போடிங்கில் இருந்து படிக்கவிடச் சொல்லு. தையலும் பழகிவிடுவாள். பழக்கமும் திருந்திவிடும்” என்றான். தாய்க்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை.

“வாறகிழமை போடிங்கில விடுகிறதென்றுதான் கொம்மான் எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றாள் அவள்.

“அவளுடைய பெயரை எப்படி மாற்றி வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டே ஆறுதலாகச் சாப்பிட்டான் முருகேசு.

– மறுமலர்ச்சி ஆவணி – 1948, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *