என்னுயிர்த் தோழி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 1,468 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள சுமி!

என்னைத் தொடாமல், அடிக்காமல் உங்களாலே இருக்க முடியாதான்னு அடிக்கடி என்னைக் கோபித்துக் கொள்ளுவாயே… இப்போ உன்னைப் பார்க்கக் கூட முடியாமல், இப்படிக் கடிதத்தில் நாம் பேசற காலமும் வரும்னு நான் நினைச்கக் கூடப் பார்க்கலை, கமி’ என்னை வழியனுப்ப நீ ஏன் தொடர் வண்டி நிலையத்திற்கு வரலை? அம்மா, அப்பா, அண்ணா, தங்கைன்னு ஆயிரம் பேர் எனக்கிருக்கலாம், அவங்களுக்கு நடுவிலே நான் உன்னைத்தான் தேடினேன். கலங்கிய முகமாயிருந்தாலும் உன் முகத்தை நான் பார்த்திருப்பேனே, சுமி…

“இன்னையோட நாம பார்த்து இரண்டு மாசமாச்சு, கமி’ ஒரு நாள் நீ அலுவலகத்திற்கு வரலைன்னாக்கூட, எங்கிட்டே சொல்லாமல் எப்படி நீ விடுப்பு எடுக்கலாம்னு சண்டை போட்ட நான்… உன்னைப் பார்க்காமலேயே இத்தனை நாள் இருந்திருக்கேன். இது எப்படி, கமி? “முடியாது !” ‘நடக்காது‘ ன்னு நாம நினைச்ச சில நிகழ்வுகள் எல்லாம் இப்போ நடக்கின்றன, கமி. ‘வாரம் வாரம் தவறாமல் கடிதம் போடணும்’னு நாம பேசினபடி, உன் கடிதமெல்லாம் எனக்கு வந்தன, சுமி. ‘புதுப் பொண்ணு’… சிறிது தாமதமாக எழுதறதாலே மட்டும் இது நீ…ண்…ட கடிதம் இல்லை. இன்னொரு காரணமும் இருக்கு. அது… அப்புறம்…”

“சுமி, எப்படி இருக்கே? என்னை நினைச்கட்டே இருக்கியா? பொருள் அற்ற கேள்விதான். ஆனால்… உன்னை நினைச்சுட்டே தான் இருக்கேன்னு எழுதினால், அதைப் படிக்கறதே எனக்கு எவ்வளவு இருக்கும்; தெரியுமா? அந்த இன்பம், உன்னோட அன்பு, ஆறுதல்… எல்லாத்துக்கும் மேலே… சுமி – நீ – நீ வேணும், கமி, எனக்கு! நான் உங்கிட்டே நிறைய – நிறையப் பேசணும்; பாடணும்; வாய்விட்டுச் சிரிக்கணும், உன்மடியிலே படுத்து நிறைய அழணும்!“இரண்டு மணிக்கணக்கா அப்படி என்னதான் பேகவீங்களோ”ன்னு அலுவலகத்திலே நம்மைப் பார்த்து அத்தனை பேரும் கண் போட்டு விட்டார்கள், சுமி இப்போ எல்லாம் நான் வாயே திறப்பதில்லை. கமி, உன் ‘மஞ்சு’ என்கிற மஞ்சுளா, என்னிக்கு மகளிர் மாமணி மஞ்சுளா பாலகிருஷ்ணனாக ஆனேனோ, அன்றே எனக்கு வாயடைத்துப் போயிற்று.

குழந்தை கூடக், கீழே விழுந்து விட்டாலும், அம்மா பக்கத்துல இருந்தாத்தான் அழும் – அணைச்சு ஆறுதல் சொல்ல ஆள் வேணுமே! அப்படி யாருமே பக்கத்துலே இல்லாததாலே, நான் அழறதுக்காகக் கூட வாயைத் திறக்கறதில்லை. கமி.. இப்படி எல்லாம் நான் எழுதறதைப் படிச்கட்டுப் பயந்துடாதே – இங்கே மாமியாரும், கணவருமா என்னைச் சித்திரவதை பண்றாங்களோன்னு கற்பனையை ஓட விடாதே!

“சுமி… ‘பாலு’ என்கிற திருஆளர் பாலகிருஷ்ணன், அதாவது ‘உன்’ மஞ்சுவின் கணவன் ஓர் இயந்திரம்!பணம் எங்கே, எங்கே என்று அந்தத் தொழில் இந்தத் தொழில், பங்கு வர்த்தகம் என்று பணத்தைத் துரத்துகின்ற ஓர் இயந்திரம். மாமனார் அதை இயக்குகின்றவர். மாமியார் இவர்களை மேற் பார்வை செய்கின்ற மேலாளர்! அலுவலகத்தில் யாராவது, வீடு, அடுக்கு மாடி வீடு, நகை, பட்டுப் புடைவை என்று பேசினாலே நாம் காத தூரம் ஓடுவோமே… உனக்கும், எனக்கும் என்று ஒரு தனி உலகம் இருந்ததே கமி! அந்த இன்பம், ஆசை எல்லாம் இப்போ போன இடமே தெரியவில்லை, சுமி!”

“சுமி, பன்னீர்த் துளிகளாய்த்- தென்றலும், சாரலும் நம்மீது அலுவலகச் கற்றுலாவில் குற்றாலம் போனபோது, நடந்து சென்றதை நூறு தடவையாவது பேசியிருப்போமா? சுசீலாவின் பாடல்களை, வரிகளை அந்த இனிமையைப் பேசாத நாள் ஏது? சுமி?”

“சுமி – உனக்கு நினைவிருக்கா? “மெட்டி ஒலி காற்றோடு” பாட்டின் பண்ணை இசைக்க, யார் முதபில் வருகிறதென்று போட்டி வைத்தோமே நம் கை பாட்டுக்கும் கோப்பில் எழுத, மனமெல்லாம் அந்தப் பண்ணைப் பிடிப்பதிலேயே இருந்தது. ‘அய்… எனக்கு அந்தப் பண் வந்த விட்டது’ என்று மகிழ்ச்சியாய் உன்னிடம் சொல்ல நான் விரைவாய் எழுந்தால்… நீ… என் முன் நிற்கிறாய்.

“உனக்கும் அந்தப்பண் வந்துவிட்டது” என்பது உன் முகத்திலேயே தெரிந்து விட்டது. உடனே, இருவருமாய் உணவுக் கூடத்தில் போய் அந்தப் பாட்டை முழுக்கப் பாடியதும்… அங்கு நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு பேர் அரண்டுபோய் எழுந்து, எரிச்சலில் கத்தியதும்… இப்போ நினைச்சாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது, சுமி!”

“சுமி, இது மாதிரி ஒவ்வொரு நினைவும் தான் இனி என் வாழ்க்கையின் செல்வங்கள் அப்பப்போ… ஒவ்வொண்ணா எடுத்துப் பார்த்துட்டுப், பாதுகாப்பாக எனக்குள்ளே பூட்டி வைச்கக் காலம் பூரா நான் பாதுகாக்கப் போற செல்வங்கள் ‘எப்படித் தான் இவ்வளவு அழகழகாப் பருத்திப்புடைவை உங்களுக்குன்னு கிடைக்குதோ’ அப்படின்னு அத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டு, பருத்திப் புடைவையில் நீயும், நானும் வலம் வந்த காலமெல்லாம் ஏதோ கனவு மாதிரியும், போன பிறவியின் நினைவு போலவும் தோணுது, சுமி!”

“இங்கே நான் இயல்பாக ஓர் இடத்துக்குப் போறதா இருந்தாலும், வீட்லே இருக்கிற அத்தனை நகையையும் போட்டுக்கிட்டு, நிறையச் சரிகை போட்ட பட்டுப்புடைவையும் கட்டிக்கிட்டுத்தான் இவரோட போகணும். புடைவையிலும், நகையிலும் தான் இவங்க கௌரவமே இருப்பதாய் இவங்களுக்கு எண்ணம். புடைவை தேர்வு பண்றதுகூட மாமியார்தான். அவர் ஆட்சிதான் இங்கே. அந்த மகாராணிக்குச் சேவகம் செய்யற வேலைக்காரங்களோட – பத்தோடு பதினோண்ணா நான்!

“ஏய்… யாரங்கே?” என்று கை தட்டினால், “வந்தேன் மகாராணி!” என்று கைகட்டி வாய் பொத்தித் தான் நிற்கவில்லை-மற்றபடி எல்லாம் உண்டு”

“உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? பாட்டுக் கேட்பியா? என்ன புத்தகங்கள் படிப்பே?” என்று இதுவரை இவரிடமிருந்து ஒரு கேள்வி கூட இல்லை, சுமி. அது பற்றித் தெரிஞ்சுக்க அக்கறையும் இல்லை. அதுக்கான சின்ன முயற்சிகூடப் பண்ணலை இவர். மனைவின்னு ஒருத்தி – காலம் பூரா இவரோட இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு போட்டுக்க வந்திருக்கேனே… என்னைப் புரிஞ்கக்கணும்னு இவருக்குத் துளிக்கூட நினைப்பு இல்லே, சுமி! -இவருக்கு. நாம் ஆசை ஆசையா எடுத்தோமே… மஞ்சளும், சிவப்புமாகப் பருத்திப்புடைவை, – ஒரு நாள் பக்கத்தில் இருக்கிற கோவிலுக்குப் போனபோது அதைக் கட்டலாமேன்னு எடுத்தேன்.”

சே… என்ன நிறம் இது… அடிக்கிற மாதிரி… பருத்திப் புடைவை, கண்ணாடி வளையல் இதெல்லாம் பிடிக்காது எனக்கு, விதம் விதமாப் பட்டுப்புடைவை இருக்கு – இதைப்போய்க் கட்டறே; “எங்க வீட்ல வேலைக்காரிக்குக் கூடப் பருத்திப் புடைவை எடுக்கறதில்லே, தெரியுமா? இப்படி இவர் சொல்ல… அந்தப் புடைவை இப்போ என் பெட்டியில் பத்திரமாப் பூட்டிக்கிடக்கு… சுமி, அதே போல என்னோட ஆசைகளுமே…”

ஊட்டிக்குத் தேன் நிலவுக்குப் போனோம், சுமி. கிளம்பறப்போ மாமனார் சொன்னார்” – இரண்டு நாள்ல வந்துடு…நீ இல்லாமல் இங்கே சரியா வராதுன்னு.. ஆனால், ஒரே நாளிலேயே அங்கிருந்து கிளம்பிட மாட்டோமான்னு தோணிப்போச்க, சுமி. ‘ஒரு ரோசாப்பூ இரண்டு ரூபாய்மா – இல்லைன்னா எடுக்காதேன்னு பூக்காரி கத்த, அவ கூடச் சண்டை போட்டுட்டு ஒரு ரூபாய்க்கு – ஒரு பூன்னு சின்னதா ரோசா வாங்கி வைச்கப்போமே, நினைவிருக்கா?

ஊட்டியில், அத்தனை வண்ணத்திலும் பெரிது பெரிதாகப் பூத்த ரோசாப்பூக்களைப் பார்த்தப்போ, ஒண்ணு கூடப் பறிக்கணும்னே தோணலை, சுமி! சுற்றிலும் கண்ணை, மனசை வருடிவிட்ட பகமை, ‘சில்’லுன்னு காத்து, நடு நடுவில புரிய மரங்கள்னு… மனம் ஊஞ்சலாய் ஆட ஆரம்பித்து விட்டது, சுமி. இவர் சொல்றார்… இந்த மரத்தைப் பார்த்தியா, ‘மஞ்சு ‘எவ்வளவு பெரித… ஒரு மரத்தை வெட்டினால் ஒரு கட்டிடலாம்னு.. எனக்கு என்னையே வெட்டற மாதிரி இருந்தது… “இந்தத் தட்பவெப்பம் எனக்கு ஒத்துக்கலை – ஒரே தலைவலி – ஊருக்குப் போகலாம்னு ஓடி வந்துட்டேன்.”

ஒரே பொண்ணு.. வசதியான இடத்துலே கண் கலங்காமல், துன்பப்படாமல் இருப்பா. சீர்உந்திலேயே போவான்னு, எங்க வீட்ல என்னை ஏகப்பட்ட பணமும், நகையும் கையூட்டாகக் கொடுத்து வித்துட்டாங்க, சுமி! அவங்க நினைச்சதெல்லாம் நடக்குது. அவங்க நினைக்கற படின்னா நான் மகிழ்ச்சியா இருக்கேன். நான்..னா என் உடம்பு! ஆனால் மனம்…? அந்தக் காயங்கள்.? நான் கண்கலங்கறதில்லே… என் உடம்புல காயமும் படறதில்லை.

ஆனா, கண்ணுக்குத் தெரியாம, மனத்திலே ஏற்படற காயத்துக்குத்தான் வபி அதிகம்னு உனக்குப் புரியுதா? சுமி? அது ஏன் மற்றவர்களுக்குப் புரிவதில்லை? மாப்பிள்ளையின் ‘மிடுக்கு’ – தொழில் திறமைன்னு தேடித் தேடிப் பார்த்தவங்க, அவர் கட்டின மனைவியின் மனசைப் புரிந்துகொண்டு நடப்பாரான்னு ஏன் பார்க்கலை?

‘சிடுமூஞ்சித் தலைமை எழுத்தர், தேவை இல்லாமல் நம்மகிட்டே அசடு வழிந்து வாங்கிக் கட்டிக் கொண்டு போன நம் அலுவலகக் கதை நாயகர்கள், விரல் ஒடிய, ஒடியத் தட்டச்கப் பண்ணியது, தூசி படிந்த பழைய கோப்புகள், இவற்றை யெல்லாம் விட்டுட்டு எங்கேயாவது ஓடிட மாட்டோமான்னு நீயும், நானும் அடிக்கடிச் சொல்வோமே… நினைவிருக்கா?, சுமி? வேலைக்கே போக வேண்டாம்னு என்னைக் கட்டிப்போட்ட மாதிரி இங்கே வச்சிருக்கும் போது, அதெல்லாம் வேணும் போல இருக்கு, சுமி! அங்கு அத்தனை இசை கேடுகளுக்கு நடுவிலும் நீ இருப்பாயே அது போதுமே எனக்கு!

சுமி… உனக்குத் துன்பமாக இருக்கா? இதை எல்லாம் படிக்கின்ற போது நீ அழுகிறாயா?… தயவு செய்து அழாதே, சுமி! ஆனா… எனக்காக, என்னைப் புரிந்துகொண்டு கண்ணீர்விட நீ மட்டுமாவது இருக்கியேன்னு நினைக்கறப்போ, எனக்கு நீ அழட்டும்னு கூடத் தோணுது.”

இப்போ எல்லாம் ‘திருச்சி ‘ன்னு யாராவது சொன்னாலே மனமும் பரபரப்பாகி விடுகின்றன. ஏதாவது படத்தில, இல்லே தொலைக்காட்சியில் ‘மலைக்கோட்டை’யைப் பார்த்தா அழுகையா வருது, சுமி! விதவிதமான ஆயத்த ஆடைகளைப் போட்டுக்கிட்டு நவீனமாக நிக்கற குழந்தைகளுக்கு நடுவுல பட்டுப் பாவாடை, நீண்ட சடைப்பின்னல்னு பளிச்சுன்னு மின்னற குழந்தைபோலக், கருங்கல் கட்டிடங்களுக்கு நடுவுல மிடுக்கா உயர்ந்து நிற்கின்ற மலைக் கோட்டை! தெப்பக் குளம், ஜோசப் கல்லூரி, ஊசிக் கோபுரம்னு, இந்த அழகு எல்லாம் எந்த ஊர்லே, சுமி, இருக்கு? எத்தனை தான் இறுக்கிப் பின்னி யிருந்தாலும், காவேரிப் பாலத்துல பேருந்து வேகமாகப் போறப்போ, காத்துல மடி படபடன்னு அடிச்சுக்குமே… அந்த இன்பம் இனி எப்போ, சுமி… எப்போ நமக்குக் கிடைக்கப்போறது?

மணல் மட்டுமே இருந்தாக் கூட மணிக் கணக்காப் பார்க்கலாம்னு நினைக்க வைக்கற காவேரி ஆறு எந்த ஊர்ல சுமி, அவ்வளவு அழகு? இங்கே குடிக்கத் தண்ணீர் கூடக் காசு கொடுத்துத் தான் வாங்கறாங்க) அலுவலகம் முடிந்து பேருந்தில் போகின்றபோது, மறைகிற சூரியனின் மஞ்சள் வெளிச்சத்தில காவேரி நீரும், மணலும் மின்ன, இந்தப் பக்கம் திரு அரங்கம் கோயில் கோபுரம், அந்தப் பக்கம் மலைக் கோட்டைன்னு பார்த்தாலே மனத்தில் ஒரு நிம்மதி வருமே… வேலை செய்த அலுப்பையும் மீறிய நிம்மதி! அது இனி எங்கு எப்போது…? நமக்குக் கிடைக்கப் போறது?, சுமி.

பட்டைச் சரிகைப் புடைவையும், கல்லுக் கல்லாய் வளையல்கள், வைரக்கல் மூக்குத்தி, தோடும் இவற்றோடு ஒளி வீககிற மாமிகளுக்கு நடுவே, மெல்லிதாய்ச் சரிகைப் பருத்திப் புடைவையில், நீயும், நானும் வைகுண்ட ஏகாதசிப் பெருமாளைச் சேவித்துவிட வேண்டும்னு முட்டி மோதிக் கொண்டு அலைந்ததை மறக்க முடியுமா, சுமி? மோகினி அலங்காரம், இரத்தின அங்கி, முத்தங்கிப் பெருமாள்னு மாஞ்சு மாஞ்சு பேசறாங்களேன்னு கம்மாப் போகலாம்னு போனது, எப்படியும் ஒரு தரம் கூட ஏகாதசிப் பெருமாளைச் சேவிக்கத் தவறக்கூடாதுன்னு ஏக்கமாப் போச்சு. நமக்குப் போன ஏகாதசியில் நிரம்பக் கூட்டம், அலுவலகத்திற்கு அனுமதி!

‘சிறிது நேரமானாலும் உயர்வான சேவை, போங்கோ’ என்று இந்தப் பக்கம் பெருமாளைச் சேவித்து விட்டு, அந்தப் பக்கம் ‘நேத்திக்கு இயக்குநர்கள் கூட்டத்திலே ஆரம்பித்த ‘மாமா’க்களை முறைத்துவிட்டுச் சேவித்தது கண் முன்னே நிற்கிறது, கமி!நீ நல்லாப் பார்த்தியா? -நான் சட்டை போடாத அத்தனை ஆண்களையும் கூட இடித்துக் கொண்டு, கூட்டத்தில் நீந்தாத குறையாய் ‘இரத்தின அங்கியில் பெருமாளைச் பார்த்தேன்… ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக் கொண்டு விரைவாய் அலுவலகம் போகப் பேருந்தில் ஏறினோமே… ஒரு வேளை அதுதான் நாம் பார்த்த கடைசி ஏகாதசியா?, சுமி…”

ஓடிய பேருந்தைத் திடீர் நிறுத்தல் செய்ததில் ஒருத்தன் நம் மேல் விழ, இரண்டு பேரும் அவனை ‘வாங்கு வாங்குன்னு வாங்கிட்டோமே…’ தயவு செய்து மன்னியுங்கள் என்று அவன் பத்துத் தடவையாவது சொன்னான், பாவம்… கோவில்லே அத்தனை ‘பேரும் இடிச்சப்போ இந்தக் கண்ணுக்கு இன்னாத காட்சிகளைப் பற்றி அன்னிக்கும் பேசினோமே…

சுமி, பிள்ளைப் பேற்றுக்குக் கூட (உடனே கன்னா பின்னான்னு இறக்கை கட்டிப் பறக்காதே… இப்போ ஒண்ணும் இல்லே) நீ இங்கேயே இருந்துக்கோ, வீடு கடல் போல இருக்கு, நிறைய சிறப்பு நிலை மருத்துவர்கள் இருக்காங்க…” இப்படி எல்லாம் இவங்க வீட்ல சொல்றபோ, இனி என்னை அங்கே, அம்மா வீட்டுக்கு அனுப்பவே மாட்டாங்களோனு பயம்மா இருக்கு, சுமி!

இந்த உலகம் ஒரு நாடக மேடை, நாமெல்லாரும் நடிகர்கள்னு சொல்றது பொய், சுமி! உலகம் நாடக மேடைதான். ஆனா – அதிலே நடிக்கறதுக்கு வந்தது நாம – பெண்கள் மட்டும்தான்! நமக்குத் தான் – பொண்ணு, அக்கா, அம்மா, மாமியார், மனைவி, மருமகள்னு நிறைய வேடங்கள்! அப்பப்போ முக மூடியை மாத்த வேண்டியிருக்கு. ஆனா… அப்பா, மகன், கணவன் எப்போதும் ஆண் – ஆண் மட்டும்தான். அந்த ஒரு வேடம் தான் எப்பவும் அவனுக்கு. நாம தான் வேடம் மாத்தறதாலேயோ என்னவோ, இந்தச் சமூதாயத்தில் கண்டனங்கள், விமர்சனங்கள் எல்லாம் பெண்களை நோக்கியே இருக்கு, தப்பு யார் செய்தாலும்!”

கமி, ‘தோழி ‘என்ற பாத்திரத்தில் தான், நாம் நம்ப இயல்போட இருக்கிறோம். உண்மையான தோழியிடம் மட்டுமே ஒரு பெண், தன்னோட சினம், ஏக்கம், விருப்பு, வெறுப்பு, சின்னச் சின்னச் விருப்பங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் வெளிப் படுத்துகிறாள். உயிர்த் துடிப்புடன், உண்மையான பெண்ணாய் அவள் இருப்பது அப்போது தான்! அதில் நடிப்பில்லை!”

அந்த வகையில், என்னுயிர்த் தோழி! உன்னுடன் பழகிய வாழ்ந்த அந்த நாட்கள் மட்டுமே, நான் – நானாய் இருந்த நாட்கள் வெற்றுச் சிப்பிகளுக்கு நடுவே, முத்துச் சிப்பியாய் என் மனக் கடலின் ஆழத்தில் நான் போற்றி வைக்கின்ற நினைவில் நீதான் என்றும் நிலைத்திருக்கிறாய்! மனைவி, மருமகள் என வேடமிட்டுக் கொண்டு மௌனமாய் நடமாடும் நான் ஓர் இயந்திரம்.

வேளா வேளைக்கு எண்ணெய் போட்டுக் கொண்டு, மின்சாரம் சாப்பிட்டுக் கொண்டு யாரெல்லாம் இயங்கச் செய்கிறார்களோ – அவங்க நினைக்கிறதை எதிர் ஒலிக்கின்ற ஓர் இயந்திரம்! உனக்கு..உனக்கு மட்டுமே மஞ்சு, வாரம் தோறும் கடிதமா? என்ன பைத்தியக்காரத்தனம்…செய்தி இருந்தால் எழுது. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று மஞ்சுவின் கணவர் உத்தரவு. ஐந்து ரூபாய் அஞ்சல் உறை வாங்கக்கூட அவரிடம் நான் போய் நிற்க வேண்டிய நிலை.

எனவே, இது தான் நான் – உன் மஞ்க, மகளிர்மாமணி பாலகிருஷ்ணன் ஆன பின் உனக்கு எழுதுகின்ற முதலும்,கடைசியுமான கடிதம். இவ்வளவு நீண்ட கடிதம் ஏன்னு இப்போப் புரிஞ்சிட்டிருப்பே… என் நினைவு வரப்போ அதைப் படிச்கக்கோ, சுமி! எங்க வீட்ல யாரிட்டேயும் இதுபற்றி மூச்சு விடாதே !மஞ்கவா -அவ சீருந்திலேயே தான் போறாளாம்…பட்டுப் புடைவையாவேதான் கட்டுறாளாம்னு சொல்லிடு, பாவம்…அவங்களாவது மகிழ்ச்சி அடையட்டும்! “மஞ்சு..நீ ஒரு தேவதை…நீ இல்லேன்னாச் செத்துடுவேன்னு” பத்துப் பக்கத்துக்கு கடிதம் எழுதிக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க மஞ்சு தயவு செய்து!” என்று எங்கிட்டே கெஞ்சின இரகு, இப்போ எப்படி இருக்கிறார்?

உயிரோடுதானா? சுமி! அவர் சிறிது அசடாகத் தெரிந்தாலும், அந்த அசட்டுத்தனம், அன்பு இப்போ வேணும் போல இருக்கு, சுமி! பேசாமல் அவரையே நான் கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு கூடப் பைத்தியம் போல் நினைத்துக் கொள்கிறேன். காசு, ஆடம்பரம் இவையெல்லாம் யாருக்கு வேணும்? சுமி!

இப்படியே நிறைய எழுதிட்டே இருக்கணும்னு தோணுது – என் கை வலிக்கலை, சுமி! மனம் தான் வலிக்கிறது. இப்ப ஒரு கடிதம் என்னிடமிருந்து நீ எதிர்பார்த்திருக்கவே மாட்டாய், இல்லையா? சுமி! எப்பவோ என் பணப்பையில் நான் போட்டு வைத்திருந்த ஐந்து ரூபாய்க்கும், வேலைக் காரிக்கும் நன்றி சொல்லிடு இல்லாட்டி இதுகூட என்னாலே எழுதியிருக்க முடியாது. உங்க வீட்டு மொட்டை மாடியிலே (நம் விருப்பமான இடத்தில் உட்கார்ந்துதான் தனியா நீ இதைப் படிப்பேன்னு எனக்குத் தெரியும்) அங்கேயே அழுது முடிச்சிட்டுப் போயிடு, யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.

சுமி! கடைசியாக ஒண்ணு … “நீ பணக்காரனைக் பண்ணிக்காதே, சுமி”

என்றும்,
உன்னுடைய அன்புத்தோழி, மஞ்சு.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *