தாராள மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 9,712 
 

அம்மா இரண்டு புத்தம்புது லெஹன்கா மாதிரி ஆடைகளைக்கொண்டு வந்திருந்தாள். அளவைப்பார்க்கும்போது எனக்கு கச்சிதமாகப்பொருந்தியது. வண்ணமும், வடிவமைப்பும் மிகவும் அழகாக இருந்தன. பள்ளியில் சில பணக்கார வீட்டுமாணவிகள், விழாக்கள், கொண்டாட்டங்களின்போது, இது போன்ற விலை யுயர்ந்த ஆடம்பரமான ஆடைகளை அணிந்துவரும்போது, என்னால் இதுபோல் வரமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுவது உண்டு. அடுத்தவாரம் பள்ளியில் ஏற்பாடு செய்திருக்கும் விழாவுக்குப்போட்டுக்கொண்டு போகவேண்டும். விலை சீட்டைப்பார்த்துவிட்டு, “ஏதம்மா பணம்? இவ்வளவு விலை கொடுத்து வாங்கி யிருக்கிறாயே” என்று கேட்டேன். “நம்மால் இவ்வளவு கொடுத்து வாங்க முடியுமா? பிரியாம்மா வீட்டில் கொடுத்தார்கள். அவர்கள் பெண்ணுக்கு அன்பளிப்பாக வந்ததாம்: உடைகளில் ஏதோ ஒன்று பிடிக்கவில்லையாம். அதனால் நமக்குக்கொடுத்துவிட்டார்கள்.”

சென்ற மூன்று மாதங்களாகத்தான் அம்மா அவர்கள் வீட்டிற்கு வீட்டுவேலைக்காக சென்றுகொண்டிருக்கிறாள். அந்த வீட்டுக்காரர் பெரிய வேலை பார்க்கிறார். பரம்பரை பணக்காரர்கள் போலும். எப்போதும் வீட்டிற்கு முன்னால் நான்கைந்து கார்கள் நிற்கும். நிறைய பேர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவர்களது பெண் என்னைவிட உயரமாகவும், குண்டாகவும் இருப்பாள். நான் ஏழாவது வகுப்பு. அவள் அண்ணன் எட்டாவது வகுப்பு: எப்போதும் பியானோ வாசித்துக்கொண்டிருப்பான். அது வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டதாம். நண்பர்கள் பட்டாளத்துடன் கூத்தும், கும்மாளமுமாக இருப்பான்.

அம்மாவுக்கு முன்பைவிட இரண்டு மடங்கு சம்பளம் என்றவுடன் மறுபேச்சில்லாமல் பழைய இடத்தில் சண்டை போட்டுவிட்டு, உடனே இங்கு வேலைக்கு சேர்ந்துவிட்டாள். ஆனால் வேலை அதிகந்தான். நாள் முழுக்க வேலை செய்துவிட்டு இரவு அடித்துப்போட்டதுபோல் தூங்கும்போது, பாவமாக இருக்கும். அப்பாவும் ‘உடம்புக்கு முடியாவிட்டால் விட்டு விடு’ என்றுதான் சொல்வார். அப்பா ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பது, சேட்டுக்கு வட்டி கட்டுவதற்கும் , ஆட்டோ பழுது பார்ப்பதற்கும், வாடகைக்கும், வீட்டு செலவுக்கும் என்று பற்றாக் குறையாக இருக்கும்போது, நானும் தம்பியும் படிப்பதற்கு எப்படி போதுமானதாக இருக்கும்? அதனால்தான் முடிந்தவரை வேலைக்கு செல்வதாகச் சொல்வாள் அம்மா. பள்ளிக்கட்டணம் குறித்தகாலத்தில் கட்டமுடியாமல் போகும்போது படிப்பை நிறுத்திவிடலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால் முன்பு அம்மா வேலைசெய்த வீட்டில் – வீட்டுக்காரர் ஆசிரியர் – அப்பா அம்மா இருவரையும் கூப்பிட்டு நிறைய அறிவுரைகள் வழங்குவார். கட்டணம் கட்ட கடைசி தேதியன்று முடியாவிட்டால் தான் கட்டிவிடுவதாகவும், பின்னால் பணம் கிடைக்கும்போது கொடுத்தால் போதும் என்பார் எனக்கும் எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுமாறு அறிவுறுத்துவார்.

புது இடத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அம்மா என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள். வீட்டுக்கார அம்மா, அதுதான் பிரியாம்மா, மிகவும் அழகாகவும், ஆடம்பரமாக உடை அணிந்தும் இருந்தார்கள். நிறைய படித்திருப்பார்கள் போலிருக்கிறது. சாப்பாட்டு மேசையில் தட்டில் ஏதோ நொறுக்குத்தீனி கொரித்துக் கொண்டிருந்தார்கள். என்னை யாரென்று அம்மாவிடம் விசாரித்துவிட்டு, அப்படியே தட்டை என்னிடம் நீட்டி கீழே உட்கார்ந்து சாப்பிடச்சொன்னார்கள். எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. தட்டைக்கழுவி வைத்துவிடு என்றார்கள். அம்மாவுக்கு முடியவில்லை யென்றால், என்னை வந்து வீட்டு வேலைகளை செய்யச் சொன்னார்கள். படிப்பைப்பற்றி கேட்டார்கள். சொன்னேன். ‘மேலே படிக்கப் போகிறாயா, படித்து முடித்து விட்டு என்ன செய்யப்போகிறாய்’ என்று கேட்டார்கள்.’ ஆசிரியை வேலைக்குப்போய் இயலாதவர்களுக்கு படிப்பு இலவசமாக சொல்லிக்கொடுப்பேன். எல்லோரும் கல்விகற்க ஊக்குவிப்பேன். அப்பா அம்மாவை வயதான காலத்தில் காப்பாற்றுவேன்: தம்பியை நன்கு படிக்க வைப்பேன்’ என்றேன். சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்கள். அவர்கள் அலட்சியம், மிடுக்கு இவை மிகவும் அன்னியமாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தது. .

அம்மாவுக்கு திடீரென்று இரண்டுமூன்று நாட்களாக வயிற்றுப்போக்கு: வேலைக்கு செல்ல முடியவில்லை. அப்பா திட்டினார். ஓசியில் கிடைக்கிற தென்று அவர்கள் வீட்டில் கண்டதையும் தின்றுவிட்டு வந்திருப்பாளென்று. வீட்டுக்காரம்மா தொடர்ந்து கைபேசியில் அழைத்துக் கொண்டேயிருந்ததால், அப்பா விருப்பமில்லாமல் என்னை அங்கு வேலைக்கு அனுப்பினார். சனி, ஞாயிறு கிழமைகளில் அவர்கள் வெளியில் சென்றுவிட்டதால் வேலை அதிகமில்லை. முதன்முறை என்பதால் அவர்களும் என்னிடம் வீட்டுவேலை முழுவதும் செய்வாளென்று எதிர்பார்க்கவில்லை.

எப்படியோ, வேலை அதிகமிருந்தாலும், அம்மா மகிழ்ச்சியுடன் இருந்தாள். அவர்கள் கொஞ்சம் பயன்படுத்தியது போக மீதியுள்ள சாக்கலேட், பிஸ்கட் இனிப்பு, காரவகையறாக்களைக்கொண்டு வருவாள். எனக்கு அவற்றை சாப்பிடுவதில் நாட்டம் இல்லை. சிலநாட்களுக்குமுன் இப்படித்தான்; அண்மைக் கால ஃபேஷன் நகையென்று ஒரு மணிமாலையைக் கொண்டு வந்தாள். இது நாம் போட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்காது என்று சொல்லிப்பார்த்தேன். கேட்கவில்லை. பின்னாளில் எனக்குப் பயன்படும் என்று பெட்டியில் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாள். பிரியாம்மாவுக்கு எவ்வளவு தாராள மனசு என்று புகழ்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அன்று பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது, அம்மா முன்பு வேலை செய்த வீட்டு ஆசிரியரைப்பார்த்தேன். “ஏம்மா! எங்க வீட்டுப்பக்கமே வருவதில்லை? எங்களை அடியோடு மறந்து விட்டாயா?” என்று கேட்டார். “மறக்க வில்லை, ஐயா! அவசியம் வருகிறேன்” என்றேன். அம்மா சண்டை போட்டுவிட்டு நிறுத்திக்கொண்டபிறகு, அங்கு செல்ல எனக்கும் தயக்கமிருந்தது. நான் மூன்றாம் வகுப்பு படித்ததிலிருந்து பழகியவர்கள்தான். எளிமையான குடும்பம். கணவன், மனைவி இருவர்மட்டும்தான். மகன்கள் வெளியூரில் வேலை பார்க்கிறார்கள். சிறுமியாக இருந்தபோது விளையாட பொம்மைகள், பின்னர் கற்பதில் ஆர்வமூட்டும் உபகரணங்கள், பின்னர் நூலகம் போன்று பராமரித்து வருபவைகளில் என் வயதுக்கேற்றவையான சிறிய புத்தகங்கள், எல்லாம் விலையுயர்ந்தது என்று சொல்லமுடியாது: ஆனால் மிகுந்த பயன்பாடுள்ளவை யாக ஏதாவது கொடுத்துக் கொண்டேயிருப்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால், பாராட்டுமழை பொழிவார். அவர்கள் வீட்டு அம்மாவும், அவ்வப்போது செய்யும் உப்பு, சர்க்கரை குறைவான பலகாரங்களைக்கொடுப்பார் கள். ஆரம்பத்தில், தன் மடியில் உட்காரவைத்து ஊட்டியிருக்கிறார்கள். அன்பான வர்களை இழந்து விட்டோமேயென்று அழுகையாக வந்தது.

இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அன்று வேலைக்கு சென்ற அம்மா திரும்பிவந்துவிட்டாள். நிறைய ஜீப்புகளும் வேன்களும் பிரியாம்மா வீட்டின் முன் நின்றிருந்தனவாம். லஞ்ச ஒழிப்புப்போலிஸ் வாசலின் உட்பக்கத் தைப்பூட்டி யாரையும் உள்ளே விடவில்லையாம். வீட்டுக்காரர் வருமானத்திற்கு பொருத்தமில்லாத அளவுக்கு ஏகப்பட்ட சொத்து சேர்த்திருப்பதாகவும், அதனால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த சிலநாட்களில், நாளிதழில் செய்தி வெளியானது. பிரியாம்மா அவர்கள் பெற்றோர் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுவிட்டார்கள். வீடு பூட்டி சீல்வைக்கப்பட்டிருந்தது. அம்மாவையும் விசாரிப்பார்களோ என்று பயந்துகொண்டிருந்தாள். அப்படியொன்றும் கூப்பிடவில்லை.

அப்பா இனி யார்வீட்டிற்கும் வேலைக்கு செல்லவேண்டாமென்றார். இந்த வருடத்துடன் என் படிப்புக்கு முற்றுப்புள்ளியாம். கல்வியே உயர்வுக்கு வழி என்று ஆசிரியர் சொன்னதை மறக்காமல், என் படிப்பை நிறுத்த மறுத்துவிட்டாள் அம்மா. சண்டைபோட்டு நிறுத்திக்கொண்டதால், ஆசிரியர் வீட்டிற்கு செல்ல அம்மாவுக்கு வெட்கமாக இருந்தது. வேறுவேலைக்கான சாத்தியங்களைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள். வேறு எதுவும் சரியாகத் தோன்றவில்லை. ‘இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் இப்டித்தான்: என் புத்தியை செருப்பாலடிக்கணும்’ என்று புலம்ப ஆரம்பித்தாள்.

நான் ஆசிரியரை ஒருநாள் சந்தித்தது சகஜமாகப்பேசியதைக்கூறி அவர்கள் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை விளக்கினேன். நான் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறேன் என்று தைரியமூட்டினேன். தான் சண்டைபோட்டு நிறுத்திக்கொண்ட முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்ட அம்மா ஒருவாறு தயக்கத்துடன் என்னுடன் வர ஒத்துக்கொண்டாள். நானும் அம்மாவும் ஆசிரியர் வீட்டுக்குக் கிளம்பினோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *