அம்மா வந்திருந்தாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 3,613 
 

ஓர் பின்காலை வேளை, பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கு அனுப்பிய பின்னர் கால் தேய யாரோ சாலையில் கஷ்டப்பட்டு நடக்கும் சப்தம். அம்மா வந்திருந்தாள். 

எல்லா உறவுகளினின்றும் அவளுக்கு மட்டும் என் எலும்புக்கும் சதைக்குமான வித்தியாசம் தெரிந்திருக்கிறது.

நானே மறந்துப்போன என் விருப்பமான பலகாரங்களெல்லாம் அவளுக்கு மட்டும் இன்றளவும் மறக்கவேயில்லை! அவளோடு என் விருப்பங்களெல்லாம் என் வீட்டுப்படி ஏறிவிடுகின்றன!

செவ்வந்திப்பூ, கூரைப்புடவை, கடலைமிட்டாய், அஞ்சாறு முத்தங்களோடு மனதுக்குள் அமர்ந்துகொண்ட்து! 

வாரம் ஒருமுறை என்றிருந்தது மாறி மாதமொருமுறை ஆகி, நேரம் கிடைக்கையில் என்றாகிப்போன அவள் வீட்டுக்கான என் பயணங்களில் தொலைந்துப்போன என் இன்பங்களை ஒரே பார்வையில் தந்துவிட்டு போனாள் அவள்!

கால்கட்டுப் போட்ட புதிதில் அவள் முந்தானை நனையாத என் வருகைகளே பதிவானதில்லை அவளிருதயத்தில்! “ஏன்மா இந்தாளுக்கு என்னைக் கட்டிவெச்சே!” என்று மனதுக்குள் சுக்கல் சுக்கலாய் அவள் உடையும் சத்தத்தை உணராமலேயே புலம்பிய நினைவுகளெல்லாம், அவள் காலிங் பெல் அழுத்தும் முன் என்னவர் என் உச்சி முகர்தலை அவள் பார்த்த வேளையில் அவளுக்கு வந்துபோயிருக்கும்!

கெலாக்ஸ், ஆலிவ் ஆயில், ஸ்கிம்ட் மில்க் சுகர்ப்ரீ பால்கோவா எனும் என் டயட்டெல்லாம் அவளுக்குத் தெரியாது, பேரன் பேத்திக்கு திரட்டுப்பால், மாப்பிள்ளைக்கு முந்திரிக்கொத்து, நெய் முறுக்கு, மகளுக்கு புட்டரிசி பாயாசத்தோடு கொஞ்சம் சத்துமாக் கஞ்சியும் அவள் படைத்தாள்!

மணமாகி பத்து வருடம் ஆனபின்னும் மருமகப்பிள்ளைக்கு பரிசுகள் கொடுக்க தவறுவதேயில்லை அம்மாக்கள். ஃபேஸ்புக் கல்யாணம், ஸ்கைப் கல்யாணமெல்லாம் நடக்கும் இக்காலத்திலும் இவள் மட்டும் மருமகன் முன் நிற்கக்கூடாதென என் பின்னால் மறைந்துகொண்டாள்.

கொஞ்சம் மூத்திருந்தாள், 60 வயதுக்கு 80தின் முதுமை. ஓர் கண்ணாடி. அள்ளி அப்பிக்கொண்ட புன்னகை. நன்றாகத்தான் இருக்கிறேன் எனக் காட்டிக்கொண்ட தென்பு, நிறைய நரை, நிறையக் கணிவு, கொஞ்சம் முதுமை, நிறையத் தனிமை! மாமியார், மாமனாரை முதலில் வீட்டுக்கு அழைத்துவர வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவளைப் பார்த்தேன், ஏனோ அக்கண்கள் என் மடியில் சாயும் அனுமதியைக் கேட்டு மயங்கி விழத்தொடங்கினாள்……

போர்வையை வீசியெறிந்துவிட்டு ஓடோடி சமையற்கட்டை அடைந்தேன், அவள் போட்டுக்கொண்டிருந்த வெல்லம் போட்ட தேயிலை மணம் என்னை சுண்டி இழுந்துக்கொண்டிருந்தது! அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்…

ச்சீ கழுதை, போடி போய் முதல்ல பல்லை வெளக்கு என கோபமாய் முறைத்தாள்!

என்னவரின் அன்னையும் என் அன்னையே என மனதினுள் ஓர் முனுமுனுப்பு கேட்டது!

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *