குடிகாரச் சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 263 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கரு கும் என்ற இருட்டில் மினுக்கு மினுக் கென்று ஒரு சிமினி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் குடிசையிலிருந்து அந்த முனகல் சப்தம் வந்து கொண்டிருந்தது. “ஐயோ! அப்பா, ஆத்தே, சாமீ! கடவுளே! ஐயோ! என் உசிர் போவாதா? சாமீ , என்னை வாரிக்கொண்டு போயிடேன். ஐயோ! தாங்கலையே” என்ற வார்த்தைகள் விட்டு விட்டுக் கேட்டன. அந்தக் குரல் ஒரு பெண்ணினது குரல் போலத் தோன்றியது. அந்த அந்தகாரத்தில் வாயு பகவானைத் தவிர வேறு யாரும் அந்தக் குடிசைக் குள்ளே போய் விசாரிக்க முன் வரவில்லை. அவர்கூட, தடபுடலாக உள்ளே நுழைந்தால் தகரச் சிமினியி லுள்ள சுடர் பயந்து மறைந்து விடுமோவென்று எண்ணினவர் போல் மெல்ல நுழைந்து கொண்டிருந் தார். வானம் மேகங்களால் சூழப்பட்டு ஒரு கறுப்பு மேலாப்பைப் போர்த்திக் கொண்டிருந்தது.

அந்த அவஸ்தைக் குரலுக்கு இடையே வேறொரு குரலும் கேட்டது: “ரொம்ப வலிக்குதா அம்மா? ரத்தம் வருதே, ஐயோ!” என்று ஓர் இளங்குரல் முன் கூறிய குரலுக்கு நடு நடுவே மெல்லிய இழை போலக் கேட்டது. ஸந்தேகமே இல்லை; அது ஒரு சிறு குழந்தையின் குரல் தான்.

“அப்பன் ஏம்மா இப்படி அடிக்கணும்? உனக்கு வலிக்குதுன்னு தெரியாதா?” என்று அந்த இளங் குரல் வினாவியது.

“என் தலைவிதி யப்பா , தலைவிதி! அந்தப் பாளுஞ் சாமி என்னைக் கொண்டு போக மாட்டேங்குது” என்றது பெண் குரல்.

“அப்பன் இப்படியே அடிச்சா அப்புறம் நாம் என்ன பண்றதம்மா?”

“என்ன பண்றது? பட்டுக் கொள்ளத்தான் வேணும்.”

“எங்கேயாவது ஓடிப் போயிடலாமே.”

“சே? அப்படிச் சொல்லாதே, கண்ணு; நீ தூங்கு.”

“எனக்குத் தூக்கம் வல்லே; பண்ணைக்காரர் கிட்டே சொல்லி அப்பனை மெரட்டச் சொல்லேன்.”

“அதெல்லாம் முடியாதப்பா; சாமி மனசு வச்சா முடியும். இல்லாட்டி இப்படியே செத்துப் போக வேண்டியதுதான்.”

சிறிது நேரம் பேச்சில்லை; மௌனம் நிலவியது. மறுபடியும் அந்த இளங் குரல் அம்மௌனத்தைக் கலைத்தது.

“சாமி எங்கே அம்மா இருக்குது? அது எப்படி அம்மா மனசு வைக்கும்?”

“அதோ அந்தக் குடியானத் தெருவிலே கோவில் இருக்குதே, அதிலே இருக்குது சாமி; கறுப்பண்ண சாமி. அந்தச் சாமியை வேண்டிக்கிட்டா, அது மனசு வச்சாலும் வெக்கலாம்.”

“நான் வேண்டிக்கறேன்: சாமீ , கறுப்பண்ண சாமீ! எங்கப்பனை நீ நல்லா அடிக்கணும். அம்மாவை அடிச்சாக்கக் கொன்னுடுவேன்னு சொல்லணும். சாமீ! எங்கம்மாவை அப்பன் அடிச்சால் வலிக்காமல் இருக்கணும்.”

பெண் குரலில் சோகம் நிரம்பி யிருந்தது மாறிக் களுக்கென்று சிரிப்பின் ஒலி கேட்டது. மறுபடியும் அழுகைக் குரல்.

சேலம் ஜில்லாவில் ராசிபாளையம் ஒரு சிறு கிராமம். அங்கே குடியானவர்களுடைய வீடு அதிகம்; ஒரு பள்ளத்தெருவும் சிறிய பறைத் தெருவும் தனியே இருந்தன. பள்ளத் தெருவிலே இருந்த குடிசை யிலேதான் இந்தக் குரல்கள் கேட்டன.

மாரியாயி நல்ல பெண். அவள் புருஷன் காத்தானும் நல்லவனாகத்தான் இருந்தான். அந்தக் குழந்தை முனியன் பிறக்கிற வரையிலும் அவன் வீட்டிலே சந்தோஷமும் அமைதியும் பொங்கின. முனியன் பிறந்த ஒரு வருஷத்திலே காத்தான் கெட்டுப் போனான். கள்ளரக்கனுடைய மாய வலையிலே அவன் சிக்கிக்கொண்டான். வர வர அவனுக்கேற்ற ஜமாக்கள் சேர்ந்தன. நாள் முழுவதும் உழைத்து விட்டு வந்து ஆனந்தமாகக் குடிசையிலே புகுந்து மாரியாயி காய்ச்சி வைத்த சோற்றைக் குடித்துச் சுவர்க்க இன்பத்தை அனுபவித்த அவன் வாழ்வு நாசமாயிற்று.

இந்தப் பாழும் குடி அந்தக் குடிசையின் சுக வாழ்வைக் குலைத்துவிட்டது. முனியன் வளர வளர அந்தக் குடும்பத்திலே துயரமும் வளர்ந்து வந்தது. முனியன் சிறு குழந்தையாக இருக்கும் போது இந்த விஷயமொன்றும் அவன் மனசில் படவில்லை. அவனுக்கு மூன்று வயது நடக்கும்போதுதான் மாரியாயி ஜுரத்தின் வாய்ப்பட்டாள். அது முதல் அவளுடைய பழைய வலிமை குன்றிவிட்டது. அது வரையில் காத்தானோடு எதிர்த்து வாதாடி அவன் கொடுத்த உதைகளை அவள் உடம்பு தாங்கி வந்தது. இப்போதோ , அவளால் அவற்றைத் தாங்க முடிவதில்லை. அவள் அவனைக் கண்டித்துக் கண்டித்து அலுத்து விட்டாள். ஆனாலும் அந்தக் குடிகாரன் காரணமில்லாமல் அவளை அடித்து வந்தான். வாரத் திற்குக் குறைந்த பக்ஷம் ஒரு முறையாவது இந்தப் பூசை நடவாமல் இராது.

முனியனுக்கு இப்போது ஐந்து வயது. அவன் மனசில் தன் தகப்பனின் கொடுமை உறுத்தத் தொடங்கியது. தாயின் பரிதாப நிலை அவன் நெஞ்சை உருக்கியது. அந்த இளங்குழந்தை என்ன செய்வான் ! பரிகாரம் ஒன்றும் தோன்றாமல் மறு கினான். அவனுக்குக்கூடச் சில சமயங்களில் உதை யிலே பங்கு கிடைக்கும்.

கறுப்பண்ண சாமியை வேண்டிக்கொண்டால் ஏதாவது வழி பிறக்கலாமென்று அம்மா சொன்னதை அவன் உண்மையாகவே நம்பினான். முன் காலத்தில் துருவன் கூடத் தன் மாற்றாந் தாய் பேச்சை நம்பித்தானே நன்மை அடைந்தான்? தவம் செய்யப் போனான்?

முனியனுக்கு அன்று முதல் கறுப்பண்ணசாமி மேலேதான் ஞாபகம்; “சாமி, எங்கப்பன் எங் கம்மாவை அடித்தால் அந்தக் கையை நீ வெட்டிவிடேன். எங்கம்மாவுக்குப் பக்கத்திலே நீ வந்து நின்று தடுத்து விடப்படாதா?’ என்றெல்லாம் வேண்டிக்கொள்வான். பாவம்! குழந்தையின் ஆஹ் லாதத்தைக் கறுப்பண்ணசாமி அறிந்தாரோ, என்னவோ !

கறுப்பண்ணசாமி மனசு வைத்ததாகத் தெரியவில்லை. காத்தானுக்குக் கள்வெறி அதிகப்பட்டு வந்ததேயொழியக் குறையவில்லை; “சாமீ, நான் வேண்டிக்கறது உனக்குக் கேக்கலையா? நீ செவிடா?” என்று முனியன் அழுதான்; அப்பனை நினைந்து பல்லைக் கடித்தான்.

மறுநாள் தீபாவளி. மாரியாயி புல்விற்ற காசில் கொஞ்சம் சேர்த்து வைத்துத் தீபாவளிக்கு ஒரு சாயத்துண்டு வாங்கலாமென்று எண்ணியிருந்தாள். “தம்பி, உனக்குச் சாயவேட்டி வாங்கியாரேன்; கட்டிக்கறயா?” என்று குதூகலத்தோடு அவள் தன் மகனைக் கேட்டாள்.

“நல்லாக் கட்டிப்பேன்” என்று சொல்லிக் கொண்டே, “எங்கம்மா சாயவேட்டி வாங்கப் போவுது” என்று தன்னுடைய தோழர்களுக்கு டமாரம் அடிக்கப் போய்விட்டான்.

அவர்கள் ஆசையில் மண் விழுந்தது. தீபாவளி யன்று காலையில் அந்தப் படுபாவி காத்தான் எப்படியோ பணம் இருக்கும் இடத்தைக் கண்டுகொண்டான் ; ஒருவருக்கும் தெரியாமல் அதை எடுத்துக் கொண்டு போய்க் கள் குடித்துவிட்டு வந்தான்.

“இந்தா, இந்தப் பாவம் உன்னை ஏளேளு சன் மத்துக்கும் விடாது. தம்பிக்குச் சாயவேட்டி வாங்கணும்னு எத்தனை ஆசையாச் சேத்து வச்சேன்! பாவி, நீ அதையும் திருடிக் குடிச்சுட்டு வந்தையே” என்று மாரியாயி திட்டினாள்.

“என்னடீ , தலைக்கிறுக்கு ரொம்பத்தான் ஏறிக் கிட்டுதோ? சாயவேட்டி இல்லாமே அவனுக்குச் சரிப்படலையோ?” என்று அந்த மிருகம் உறுமியது.

“ஆமா, நீ சம்பாரிச்சுத் தராவிட்டாலும் நான் வச்சிருந்ததை எடுத்து அநியாயமாக் குடிச்சுட் டையே, அந்தக் கொளந்தைக்கு என்னத்தைக் குடுப் பேன்?” என்று அவள் அழுதாள்.

“என்னாலே! மாமாலம் பண்ணறே! வெளக்கு மாத்துக் கட்டெக்குப் பட்டுக் குஞ்சலம்!” என்று சொல்லிக்கொண்டே காறித் துப்பிவிட்டு அவளை ஓர் உதை உதைத்தான். அவள் தடாலென்று தரையிலே விழுந்துவிட்டாள்.

இவ்வளவையும் முனியன் மூலையில் நின்று நடுங்கிக்கொண்டே பார்த்தான். அவன் இருதயம் படக்குப் படக்கென்று அடித்துக்கொண்டது. அப்பனை அப்படியே பிடித்துக் கசக்கிவிட வேண்டுமென்ற ஆத்திரம் உண்டாயிற்று.

அந்த ராக்ஷஸன் போய்விட்டான். குழந்தை தாயருகில் வந்தான். அலங்கோலமாகக் கீழே கிடந்த தாயின் முகத்தருகில் தன் முகத்தை வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான். தாயும் அழுதாள். அன்றைத் தீபாவளி தாயின் அழுகையாகிய சுருதியிலே கலந்து இசைத்த அந்த இளங் குழந்தையின் அழுகை யென்னும் சோக சங்கீதத்திலே கழிந்தது.


முனியனுக்கு அப்பன் மேலே கோபம் வந்த தோடு, இப்போது சாமி மீதும் கோபம் வந்தது. அந்தக் கறுப்பண்ண சாமியை நேரிலே போய்ப் பார்த்துச் சொல்லிவிட்டு வரலாம்’ என்று எண்ணினான். தீபாவளிக் கொண்டாட்டக் கூட்டத்தோடு கலந்து கறுப்பண்ணசாமி கோயிலுக்குள்ளே நுழைந் தான். அங்கே ஏக ஆரவாரம். சாமிக்குப் படையல் படைத்திருந்தார்கள்: எத்தனையோ விதமான பழங்கள், இளநீர்க் குலைகள், சோற்று வகைகள், ஆடு, கோழி முதலியவை; எல்லாம் முனியனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கின. ‘இந்தச் சாமி ரொம்பப் பெரிய சாமிபோலே இருக்குது. இத்தனை சோறும் இது தின்னுப் பிடும்னா இது எத்தனை பெரிசா இருக்கணும்!’ அங்குள்ள காட்சிகளிலே அந்தக் குழந்தையுள்ளம் லயித்து நின்றது . அரை மணி நேரம் அவன் கண்கள் அங்குள்ள பொருள்கள் ஒவ்வொன்றின் மேலும் சென்றன. சாமியின் அலங் காரத்திலும் சென்றது.

சட்டென்று முனியன் பார்வை ஒரு பதார்த் தத்திலே சென்று நின்று விட்டது. அவன் ஊன்றிக் கவனித்தான்; கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தான் ; ஆமாம் ; கள்ளுத்தான் ; அப்பன் குடிக்கிற கள்ளுத்தான்.’ அவன் தன் அப்பன் சில நாள் குப்பி யிலே கொண்டு வந்த கள்ளைப் பார்த்திருக்கிறான்; அதன் நாற்றத்தைக்கூட அவன் அறிந்திருக்கிறான்.

கறுப்பண்ண சாமிக்கு உரிய நைவேத்தியவகை களுக்கு இடையில் கள் நிறைத்த குப்பிகள் பல இருந்தன. அவற்றைக் கண்டபோதுதான் முனியன் உள்ளம் திடுக்கிட்டது. “ஐயோ! கள்!” என்று கத்திவிட்டான். கள்ளின் காட்சியிலே அவன் தன் தகப்பனின் கொடுமைகளை யெல்லாம் கண்டான்.

அந்தக் கீக்சுக் குரல் கணீரென்று அருகிலிருந்தவர்கள் காதில் விழவே அவர்கள் முனியன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன், “அடே, இந்தப் பள்ளப் பயல் இங்கே எங்கேயடா வந்தான்? உதையடா; பிடியடா” என்று கத்தினான். ஐந்து நிமிஷத்தில் பலர் வீராவேசத்துடன் ஆளுக்கு ஒரு பக்கம் அந்தக் குழந்தையைச் சூழ்ந்து கொண்டு அடிக்கத்தொடங்கினர். முனியன் மூர்ச்சையாகி விட்டான்.

“இந்த நாயைத் தூக்கி வெளியிலே எறியுங்கள். தீவிளி நாளிலே இந்தக் களுதை கோயிலைத் தீட்டுப் பண்ணிவிட்டது” என்று முழங்கினார்கள் சிலர்.

முனியன் குற்றுயிரும் குலையுயிருமாகச் சில ஹரி ஜனங்களால் கோயில் வாயிலிலிருந்து தூக்கிச் செல்லப்பட்டான். புருஷனால் உதைக்கப்பட்ட மாரியாயிக்குப் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டு, நடந்ததைச் சொன்னார்கள்.

“அட பாவி மவனே! இப்படியா செய்தாய்” என்று அவள் அரற்றினாள்; சிறுவனை ஆசுவாசப் படுத்தினாள்; “சாமீ, உனக்குக் கண்ணில்லையா? அறியாக் கொளந்தையைக் கொன்னுட்டார்களே” என்று பிரலாபித்தாள் ; “முனியா, என் கண்ணே” என்று புலம்பி உருகினாள்.

முனியன் கண்ணைத் திறந்தான். அவன் வாயிலே தண்ணீரை வார்த்தாள். இரண்டு மிடறு குடித்தான். “அம்மா, கறுப்பண்ண சாமியை நம்பாதே நீ” என்று மெலிந்த குரலிலே அவன் சொல்லிவிட்டு நாலு பக்கமும் பார்த்தான். அவனுக்கு உள்ளத்திலே தோன்றிய பயம் இன்னும் நீங்கவில்லை.

“அப்படிச் சொல்லாதே, தம்பி; அந்தச் சாமி தான் உன்னை இவ்வளவாவது இருக்கப் பண்ணிச்சு” என்று அவள் அழுதாள்.

“பொய் அம்மா, பொய்; அந்தச் சாமி கெட்ட சாமி. அதுகூடக் கள்ளுக் குடிக்குது. நான் கண்ணாலே பார்த்தேன். இங்கே அப்பன் கள்ளுக் குடிக்குது; உன்னை அடிக்குது. அங்கே சாமிகூடக் கள்ளுக் குடிக்குது; என்னையும் அடிக்கப் பண்ணிச்சு. அந்தச் சாமி வேண்டாம், அம்மா.”

“இல்லை, கண்ணு; அப்படிச் சொல்லாதே; அவங்க அடிச்சால் அதுக்குச் சாமி என்ன பண்ணும்?”

“அந்தச் சாமி பின்னே ஏன் கள்ளுக் குடிக்க வேணும்? சோறு போதாதா? பளம் போதாதா? அத்தனை புட்டி கள்ளைக் குடிக்கற சாமிகிட்ட அப்பனைப் பத்திச் சொன்னா அது கேக்குமா? என்னை எதுக்கு அடிச்சாங்க? அந்தக் குடிகாரச் சாமி சொல்லித்தானே?”

மாரியாயிக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. அவள் அழுதாள். “சாமி, நீதான் காப்பாத்தணும்” என்று மறுபடியும் கறுப்பண்ண சாமியைத்தான் வேண்டிக் கொள்ளலானாள்.

மறு வருஷம் சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு அமுலுக்கு வந்துவிட்டது. கிராமத்திலுள்ள ஜனங்க ளெல்லாம் குடியை மெல்ல மெல்ல மறக்கத் தொடங் கினார்கள். கள்ளு வாங்கி வைக்கும் கலயங்கள் இப்போது குடிசைகளிலே இல்லை; ஏழைகள் அன்றன்று சேர்த்து வைக்கும் காசுகளைச் சேமிக்கும் கலயங்களே இருந்தன. இந்த யுகப் புரட்சியிலே ராசிபாளையத்தில் மாரியாயியின் குடிசையிலும் ஒளி வீசத் தொடங்கியது. காத்தான் மதுவிலக்கு வந்த புதிதில் சில காலம் வெறிபிடித்தவனைப் போல இருந்தான். பிறகு வர வரத் தெளிவடைந்தான். முன்பு தான் செய்த அட்டூழியங்களை யெல்லாம் நினைக்கும் போது அவனுக்கு அழுகை வந்தது; “சாமீ, இந்த மட்டிலாவது காப்பாத்தினையே” என்று கடவுளை மனமாரத் தொழுதான்.

மாரியாயியின் முகத்திலும் களை உண்டா யிற்று. ‘கறுப்பண்ணசாமி கண் திறந்தார்; அதனால் நமக்கு விடிந்தது’ என்று அவள் நம்பினாள். குழந்தை முனியன் இந்தப் புது மாறுதலை அறிந்து ஆச்சரியப் பட்டான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“ஏம்மா ! இப்ப நம்ம அப்பன் கள்ளுக் குடிக்கிற தில்லையா? முன்னெப்போலே உன்னை அடிக்கிற தில்லையே? என்னெக் கண்டாத் தூக்கி வச்சுக்குதே” என்று தாயைக் கேட்டான்.

“இங்கே கள்ளுத் தண்ணி கெடைக்கிறதில்லே. கள்ளுக் குடிச்சாச் சர்க்கார் தண்டிப்பாங்க. அதனாலேஒருத்தரும் கள்ளுக் குடிக்கிறதில்லே.”

“இப்படி யாரம்மா பண்ணினாங்க?”

“எல்லாம் அந்தக் கறுப்பண்ணசாமிதான், தம்பி. “அந்தக் குடிகாரச் சாமியா!”

“சே, அப்படிச் சொல்லாதே; பாவம்.”

முனியனுக்குக் கறுப்பண்ண சாமியிடம் நம்பிக்கை வரவேயில்லை; அவன் தாய்க்கோ அந்தச் சாமியிடம் நம்பிக்கை போகவேயில்லை.


தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கறுப் பண்ணசாமி கோயிலை ஹரிஜனங்களுக்குத் திறந்து விட்டார்கள். இந்த இரட்டிப்புச் சந்தோஷத்தைக் கேட்டு மாரியாயி ஆனந்தக் கடலில் மூழ்கினாள். அவள் இந்த வருஷமும் தம்பிக்கு ஒரு சாயத் துண்டு வாங்க வேண்டுமென்று பணம் சேர்த்திருந்தாள். அது அப்படியே இருந்தது. அது மட்டுமா? அவளுக்குத் தெரியாமல் காத்தான்கூடச் சிறிது பணம் சேர்த்து வைத்திருந்தான். ‘தீவிளிக்குத் தம்பிக்கு நல்லதாச் சாயவேட்டி ஒண்ணு வாங்கித் திடீர்னு கொண்டு வந்து அவங்களை ஆச்சரியப்படப் பண்ணணும்’ என்று நினைத்தான். தீபாவளிக்கு முதல் நாள் ஒரு வருக்கு ஒருவர் சொல்லாமல் குழந்தைக்கு மாரியாயி ஒரு சாயத் துண்டு வாங்கிவந்தாள்; காத்தான் ஒரு சாய வேட்டி வாங்கி வந்தான்.

தீபாவளியன்று முனியன் அந்த இரண்டையும் உடுத்துக் கொண்டான். அந்த அலங்காரத்தைக் கண்டு தாயும் தந்தையும் உள்ளம் பூரித்தார்கள். தேங்காய் பழம் வாங்கிக்கொண்டு முதல் முதலாகக் கறுப்பண்ணசாமி கோயிலுக்குப் புறப்பட்டார்கள். ஹரிஜனங்களாகிய தங்கள் மூதாதையர்களுக் கெல் லாம் கிடைக்காத ஒரு பாக்கியத்தைப் பெற்ற அவர்கள் நல்ல நாளிலே அதை அனுபவிக்க வேண்டு மென்று எண்ணினார்கள். தீபாவளியைவிட நல்ல நாள் ஏது?

எல்லோரும் கோவிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்தார்கள். எல்லோரும் சுவாமியைப் பார்க்கும் போது முனியன் கண்கள் அச்சக் குறிப் போடு சுவாமிக்கு முன்னே உள்ள நைவேத்தியங் களைப் பார்த்தன; ‘குடிகாரச் சாமி’ யிடம் அவனுக்கு லேசிலே நம்பிக்கை பிறக்கவில்லை. இன்றும் யாரா வது அடிக்க வருவார்களோ என்று கூட அஞ்சினான்.

“இங்கே அது இல்லையே அம்மா?” என்று அவன் கேட்டான்.

“இல்லேயப்பா” என்றாள் தாய்.

“ஏன் அம்மா?”

“எல்லாம் கறுப்பண்ண சாமி பண்ணினது அப்பா!”

தீபாராதனையைக் கண்டு யாவருடைய கைகளும் தலைமேல் குவிந்தன. முனியனும், கள்ளையும் தான் போன வருஷம் பட்ட அடியையும் மறந்து விட்டுக் கைகளைக் குவித்தான்.

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *