அத்திமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 1,431 
 

அத்திமரத்தின் வேர்கள் மிக வலுவானவை. மரத்திலிருந்து பல அடிகள் தூரம்வரைகூட அதன் வேர்கள் பரவியிருக்கும் என்பதை சம்பத் சின்ன வயதிலிருந்தே உணர்ந்திருந்தான். ஒரு முறை சின்ன மாமாவின் வயலில் கிணறு வெட்டும்போது மிக‌தூரத்தில் இருந்த ஒரு அத்திமரத்தின் வேர்கள் கிணறு தோண்ட இடைஞ்சலாக வந்துகொண்டே இருந்தன. கிளைகளில் கொத்தாக தொங்கியிருக்கும் காய்களின் வனப்பும், பெருமழைக்கும் அசைவற்று நிற்கும் அதன் கம்பீரமும் எப்போதும் விசித்திரமானது. கண்டு காய் காய்க்கும் காணாமல் பூப்பூக்கும் என்று அத்திமரத்தைப் பற்றி ஒரு சொலவடையை அடிக்கடி கூறுவான் பழநி. அதற்கான விளக்கத்தையும் எப்போதும் கூடவே கூறிவிடுவான். அப்படிக் கூறாமல் அவனால் இருக்க முடியாது என நினைக்கத் தோன்றும். மந்திரம் போலவும், தன‌க்குத் தெரியும் என்ற அறிவுரை கூறும் மனநிலை உடையவன் போலவும், அதன் பெருமைகளைச் சொல்பவன் போல‌ கேட்காமலேயே அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பான்.

அத்திமரத்தை ஒட்டிய மேட்டு நிலத்தில் சம்பத் வந்து நின்றபோதுதான் அதன் முழு உருவத்தையும் அவனால் காணமுடிந்தது. தூரத்தில் வரும்போது அதன் தலைப்பகுதி ஒரு குடை விரிந்து கிடப்பதுபோலத் தெரிந்தது.. இலையுதிர் காலத்திற்குரிய பெரும்பாலான இலைகள் உதிர்ந்ததால் அதன் சலசலப்பு அதிகரித்து மரம் ஒரு மயக்க நிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது.

குறுகலான ஒற்றையடிப்பாதையில் அதன் சறுக்கல் காரணமாக பிடித்துத் தள்ளியதுபோல இறங்கி வந்தான் சம்பத். மரத்தை நெருங்கும்தோறும் அது பெரிதாகி வர, மரத்தைச் சுற்றி பூச்சிகள், சிலந்தி வலைகள் ப‌றக்கும் உணர்வை ஏற்படுத்தின. மரத்திலிருந்து உதிர்ந்த காய்கள் ஆங்காங்கே கிடந்தது அந்த சூழலைக் களேபர இடமாக‌ மாற்றிவிட்டிருந்தது.

மரம் அவனைவிட நான்கு மட‌ங்கு பெரியதாக இருந்தது மரத்தின் உச்சிவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டான் உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த‌ நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்தது. மரத்தைச் சுற்றி, ஒரு அவசரத்தில் அமைக்கப்பட்டிருந்தது போலிருந்த‌, கல்தளத்தில் மண்ணை நன்கு ஊதிவிட்டு அமர்ந்துகொண்டான். அமர்ந்ததும் அதன் தொடர்ச்சியாக ஆசுவாசப்படுத்தும் தோரணையில் மூச்சை வேகமாக வெளியேற்றி சுற்றுமுற்றும் பார்த்தபடி கால்களை இருமுறை தேய்த்துக்கொண்டான். சின்ன மாமாவிடமிருந்து கற்றுகொண்டவைகளில் இதுவும் ஒன்று. அணிந்திருந்த புதிய தோல் செருப்பின் தன்மை அழகாக, தடித்த தரையில் தேய்க்கும்தோறும் ஏற்படும் ஒலி கிளர்ச்சியாக இருந்தது. நடந்துவந்தபோது அது ஏற்படுத்திய கிளுகிளுப்பு அவன் மனதிலிருந்து இன்னும் அடங்கவில்லை.

பழநி ஒரு தொடர் பேச்சாளன் என நினைக்கத் தோன்றும் அல்லது பாடிக்கொண்டெ இருக்கும் தொடர் பாடகன். எல்லோரிடமும் தன் ஆளுமையை சற்றேனும் காட்ட நினைப்பவன். பெரிய உதடுகளைக் குவித்து, சுருங்கிய‌ வட்ட சின்ன கண்களோடு பேசுவது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக‌ இருக்கும். உருண்டையான தோள்களுடன் அதன் பளுவிற்கு உயரம் குறைந்தவன்போல தெரிவான். ஒரு விசயத்தை ஒரு அளவிற்குமேல் அவனால் புரிந்துகொள்ள முடியாது என்று அவனை கவனிக்கும் கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிடும். சம்பத்தைவிட அண்ணன் ரவி இரண்டு வயது பெரியவன். ரவியைவிட பழநி இரண்டு வயது பெரியவனாக இருப்பான். ஆனால் மூவரும் ஒருசமயத்தில் நண்பர்களாக இருந்தார்கள். இந்த வித்யாசம் பழநியை எப்போதும் துன்புறுத்தியதாக தெரியவில்லை.

பழநிக்குக் கூட எப்போதும் நண்பர்கள் இருக்க வேண்டும். துள்ளிக்குதித்துக் கொண்டு அதீத உடல் அசைவுகளுடனும் மற்றவர்களிடம் எதையாவது சொல்லியோ செய்தோ காண்பித்துக் கொண்டிருப்பான். தன்னை உற்சாகமானவனாக காட்டிக்கொள்ள அவன் செய்யும் சேட்டைகளை ரவி தன‌க்கு எப்போதும் மகிழ்ச்சியளிப்பவை எனக் காட்ட நினைப்பான். பின் ரவி செய்பவை அப்படியே பழநியை பின்பற்றுபவையாக இருக்கும்.

கால்களுக்கு கீழே கருப்பு மரவட்டை ஒன்று தலையை திருப்பி இருபக்கமும் பார்த்தபடி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கவனமின்மை போன்ற ஒரு பாவனையில் செருப்பு காலால் மண்ணை பக்கவாட்டில் சீண்டி அதன் மேல் விழச் செய்தான். அதிர்ச்சியில் துள்ளி வந்தவழியே திருப்பி ஓடியது. உடனே இனி இப்படிச் செய்யகூடாது சற்று முதிர்ச்சியாக நடந்துகொள்ளவேண்டும் என கூடவே நினைத்தான். சுற்று வட்டத்தில் யாருமில்லை, அதுவே அவனைப் பெரும் அமைதியில் திளைக்க வைத்தபடியிருந்தது. கூடவே அப்போதைய‌ வெய்யிலின் மிதமான வெம்மை பிடித்திருந்தது.

தன்னை நிதானப்படுத்திக்கொள்ள ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான். சின்ன மாமா இழுப்பது போல மூச்சை இன்னும் ஆழமாக இழுத்து கண்களைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான். அவர் கற்றுக் கொடுத்தவைகளில் பல‌வற்றை இன்னும் அவன் முழுமையாகப் பின்பற்றவில்லை என்பதை எப்போதும் நினைவில் கொண்டான். திரும்பிப் பார்த்தபோது சற்று தூரத்தில் ஆறுமுகம் கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு, கூட‌ மணியோடு பிராக்கு பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தது தெரிந்ததும் சற்று ஆசுவாசமானான். மெல்லிய நகைச்சுவை உணர்வோடு இருப்பான் ஆறுமுகம். சமயங்களில் அதிதீவிரமான முகபாவனையில்கூட நகைச்சுவை மிளிர்வதுபோல‌ தெரியும் அவன் முகத்தில். ஆறுமுகம் கிட்ட வரும்வரை அவன் பக்கம் திரும்பவில்லை. அவன் புதியதாகக் கற்றிருக்கும் கலைகளில் ஒன்று அது. ஆறுமுகம் வந்ததும் அப்போது கண்டவன்போல் கட்டியிருந்த கைலியை அவசரமாக இறக்கிவிட்டு வணக்கம் முதலாளி என்றான். பொதுவாக அண்ணன் என்றுதான் விளிப்பான். இன்றைய சந்திப்பு ஒருவாரம் முன்பே பேசிவைத்தது என்றாலும், ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் பார்க்குபோது ஏற்படும் அன்னியோன்யமின்மையைக் கடக்க முயற்சிப்பது போலிருந்தது. மிகச் சமீப‌மாக அப்படி அவ்வப்போது அழைக்கிறான். உடல்மொழியிலும் பேச்சிலும் அவன் காட்டும் அதீத மரியாதை சம்பத்திற்கு அதன் நோக்கம் தெரிந்திருந்தாலும் பிடித்திருந்தது. அதனால் கிடைக்கும் ஆதாயத்தை கருதிச் செய்யும் இச்செயல்கள் சம்பத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் மிக அவசியமானதாகவும், தன் ஆளுமைக்குத் தேவையான ஒன்றாக‌வும் நினைத்தான். கூடவே ஆறுமுகத்தால் எந்தப் பெரிய விசயமும் நடந்துவிடப் போவதில்லை, அப்படி ஒன்றை உருவாக்கி நடத்திவிடுவதுபோல் பாவனை மட்டுமே செய்பவன், மற்றபடி அவன் எது செய்தாலும் சொதப்பலாகவே இருக்கும் என நினைத்தான்.

பழநியும் ஆறுமுகமும் எதிரெதிர் கோணத்தில் இருப்பவர்கள் என சிலசம‌யம் நினைத்துக் கொள்வான். பழநியைவிடப் பெரியவனாக இருப்பான் எனத் தோன்றும் உடல்வாகு ஆறுமுகத்திற்கு. ஆறுமுகத்தின் வயதைக் கணிப்பது கடினம். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் உட்கார்ந்து வந்திருந்தான். ஆறுமுகத்தின் தாடைகள் சற்று அகன்றதாக இருக்கும். அகம் நோக்கும் சின்ன, குறுகிய கண்கள், எண்ணெய் காணாத தலைமயிர் தாறுமாறாய் கலைந்திருந்தது. எப்போதாவது எண்ணெய் தேய்த்து படியவாரி வரும்போது முகம் சிறியதாக கோழி குஞ்சு மாதிரி பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

கூடிவரும் அமைதியைக் குலைக்க ‘ஏதாவது வாங்கிட்டு வர‌ணுமா முதலாளி, சிகரெட் வாங்கியறட்டுமா‍’ என்றான். சற்று தள்ளிப் போடுகிறான் அல்லது இயல்பாக்க முயற்சிக்கிறான் என தோன்றியது. சிகரெட் சமீபமாகதான் குடிக்க ஆரம்பித்திருப்பதை அறிந்திருந்தான். இல்லை என்று மறுப்புத் தெரிவிக்க முடியாதபடி அவன் கேட்கும் கேள்விகளைக் கூட‌ சம்பத் ரசித்திருக்கிறான்.

ஏதோ யோசிப்பவன் போல் சற்று காக்க வைத்தான். இமைக்காத கண்களும் உடல் விறைப்பும் சம்பத்திற்கு உதவி செய்தன. நினைவு வந்தவன் போல சின்ன சிலிர்ப்பின்மூலம் உணர்த்திக் காசு எடுத்துக் கொடுத்தான். சொல்லத் தேவையில்லை பிராண்ட் கூட‌ அவனுக்கு தெரிந்திருக்கும். அடிக்கடி செய்யும் இந்த மெளன இடைவெளியை சம்பத் எப்போதுமே ரசித்து வந்தான்.

உடனே பதில் அளிப்பதில் ஒரு தேர்ந்த முதலாளி இல்லை என்பதை ஆறுமுகமே உணர்ந்திருப்பான். அதற்காகவே அந்த மெளனத்தை அங்கீகரிப்பதுபோல் தலையசைத்து ஏற்றுக்கொண்டான். மணியிடன் ‘இங்கேயே இருடா’ என்று போக இருந்தவனிடம் ‘அவனுக்கு ரெண்டு பொறய அப்படியே வாங்கிக்க’ என்றான் சம்பத். ‘சரி வாங்கிக்கலாம் முத‌லாளி, அவனும் ரொம்ப சோகமா இருக்கான், அவனுக்கு இன்னிக்கு பிரண்டு கிடைகலையோ என்னமோ’ என்று கூறிச் சிரித்துவிட்டு ஏதோ அவசரமாகப் போகவேண்டியவன் போலப் போனான். அவன் எதை நினைத்துக் கூறுகிறான் என யோசித்தபடி அவன் போவதையே கவனித்துக் கொண்டிருந்தான் சம்பத்.

மணி, சுந்தரம் வீட்டு நாய். சுந்தரம் தவிர சம்பத், ஆறுமுகம் இருவருடனும் சுற்றிக் கொண்டிருக்கும். பனம்பழக் கூட்டை நடுக் குளம்வரை வீசி எறிந்தாலும் நொடியில் சென்று உடனே காலடியில் போடும் திறன்படைத்தவன். அது அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. சின்னதாகத் தலைகோதினாலும் திரும்பி அமர்ந்தாலும் சட்டென வேறுபக்கம் இருக்கும் கண்களை திருப்பி அவன் கொடுக்கப் போகும் கட்டளைக்குக் கீழ்படிய தயாராய் இருந்தது. கண் ஓரத்தை ராவியபடி ‘என்னடா’ என்றதற்கு ம்ஙூ.. என்று சீழ்க்கை ஒலி போல ஒரு ஒலியை எழுப்பியபடி வாலை வேகமாக ஆட்டி முழு விசுவாசத்தை காட்டினான்.

பழநிக்கும் ரவிக்கும் நாய்களைப் பிடிப்பதில்லை. ஒரு முதலாளிக்கு நாய் அவசியம் என்பதை அவர்கள் தவற‌விட்ட மற்ற எல்லா விசயங்கள் போலவே இதை அவர்கள் உணரவில்லை என்று நினைத்துக் கொண்டான். அவர்களைத் தாண்டி வந்துவிட்டதை அவர்களேகூட உணரவில்லை என்பதை குறிப்பால் பலமுறை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறான். அவர்களிடம் அதுபற்றிய புரிதலை அவன் இதுவரை காணவில்லை. தற்போது புதிய மோஸ்தர் செல்போன் வாங்கியிருந்தான். நினைவுவந்தவனாக வேட்டியின் படிப்புகள் அளுங்காமல் உள்டிராயரில் வைத்திருந்ததை எடுத்து அதன் பளபளப்பை ஒரு முறை ரசித்து விட்டு, சில பகுதிகளை கண்டபின் மீண்டும் வைத்துக்கொண்டான்.

ஆறுமுகம் மிகத்தாமதமாகதான் அவனிடம் நட்பாக வந்து சேர்ந்தான். பால்யத்தில் அண்ணன் ரவியுடன் சேர்த்து பழநிமட்டுமே நண்பர்கள். மூவரும் ஒன்றாகச் சுற்றியிருக்கிறார்கள். கில்லிதண்டா, பளிங்கு, பம்பரம் என்று எல்லா விளையாட்டுகளையும் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். பழநிதான் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவான். ரவி எப்போது பழநியின் வலதுகை போலவே செயல்படுவான். பழநிக்கு எப்போதும் வெற்றி பெறவேண்டும் சின்ன சறுக்கல்கள்கூட் அவன் கெளரவத்திற்கு இழுக்கு என்பதுபோலக் காட்டிக் கொள்வான். கொஞ்சம் முயற்சி செய்தால் பழநியை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று தோன்றும். ஒரு சின்ன தொழிற்நுட்பம் அவன் பேச்சிலும் செயலிலும் உண்டு அதை புரிந்து கொண்டாலோ அல்லது அத‌னினும் விஞ்சும் ஒரு தொழிற்நுட்பத்தைக் கொண்டு அவனை வெல்வது எளிது. பழநி இல்லாத சமயத்தில் அந்த இடத்தை ரவி எடுத்துக்கொள்வதை சம்பத் கேலி செய்திருக்கிறான்.

பழநிக்கு அண்ணன் மேல் எப்போதும் பாசம் உண்டு. அதேபோல் அம்மாவிற்கும் அண்ணன்மேல்தான் பாசம். அண்ணன் மீதான சம்பத்தின் விமர்சனங்களை அம்மா மிகக் கவனமாக எதிர்கொள்வாள் அப்பா இருந்தவரை அப்படித்தான். அம்மாவின் எதிர்கொள்ளல்களைச் சில சமயங்களில் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பல நேரங்களில் அவை அவனுக்கு எரிச்சலையே உண்டு பண்ணியிருக்கின்றன.

ரவியின் மெல்லிய உணர்வுகளை அம்மாவால் ஏற்றுகொள்ள முடிவதில்லை என தோன்றும். இன்னும் கம்பீரமாக இருக்க‌ அதை எப்போது சரிசெய்ய முயற்சிப்பதுபோல அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருப்பாள். அதை சம்பத் கண்டுகொண்டாலோ, ஏதும் சுட்டிக் காட்டினாலோ அம்மாவிற்கு எரிச்சல் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறான். ஒன்றைச் செய்வதற்கு அண்ணன் எடுக்கும் முயற்சிகள், அதை ஒட்டிய‌ அவன் நிலைப்பாடுகள் மிக மெல்லிய உள்ளம் படைத்தவனுக்குரியதாக இருப்பதை சம்பத் கவனித்திருக்கிறான். அதைச் சொல்லி எள்ளி நகையாடும்போது, அம்மா சம்பத்தை கண்டிப்பதைத் தொடங்கிவிடுவாள்.

அவன் மனம் ஒரிடத்தில் நிலை கொள்ளவில்லை, அவன் வந்திருக்கும் விசயம் அவன் மனதில் ஒரு படம்போல நிழலாடுவதைத் தவிர்க்க மணியைக் கண்கொட்டாமல் கவனிப்பதிலிருந்து வேறு இடத்தில் மனதைக் குவிக்க முயற்சித்தான்.

மேற்கே சூரியனின் கதிர்கள் மெல்ல அடங்குவது கைகளைச் சுருக்கிக் கொள்ளும் ஆக்டோபஸ் போல இருந்தது. புதர்கள் மண்டிய நீண்ட பொட்டல் வெளி வான‌த்தை பிரதிபலிப்பது போலிருந்தது. ஆங்காங்கே தெளிக்கப்பட்ட கருமை மேகங்கள் சூழ்ந்த வானம், மழை வரும் போலிருந்தது. போனவருடப் பெருமழை நாளில்தான் ரவிக்கு பெரிய காய்ச்சல் வந்தது. மிக நீண்ட காய்ச்சல். அப்போது அம்மாவின் அதீத செயல்கள் இன்று நினைத்தாலும் எரிச்சலை உண்டாக்குபவை. அப்போது அவளின் நோக்கங்களும் ஆசைகளையும் தெரிந்துகொண்டான். கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் பிடிக்க அவள் இவ்வளவு முயற்சி செய்வாள் என்று அவன் நினைக்கவில்லை.

அலோபதி பெருவைத்தியரையெல்லாம் கண்டு குணமாகாமல் கடைசியில் அம்மாவின் தோழிகளெல்லாம் சேர்ந்து அவனுக்கு பேய் அடித்திருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். எந்தத் தேர்வு கடைசியாக இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்வார்கள். இதற்கு முன்பு அப்படி ஒன்று ரவிக்கு ஏற்ப்பட்டது. கால்வீக்கத்திற்கு சுளுக்கு என்று வைத்தியம் பார்க்க கடைசியில் அது எலும்புமுறிவாக இருந்தது. காய்ச்சலின் போது எப்போது போல அவன் நண்பர்கள் யாரும் அருகில் இல்லை. கடைசியில் சம்பத்தான் அவனை டாக்டரிடம் அழைத்து செல்லவேண்டியிருந்தது.

ரவி தன் தொண்டையைவிட ஒரு பெரிய பொருளை விழுங்கப்பட்டவன் போல அப்போது காணப்பட்டான். வாயின் ஓரங்களில் கோடாகக் கோழை வழிந்தது. புறங்கையில் இருந்த முடிகள் அவனை தொட்டு தூக்கும்போதெல்லாம் சங்கடப்படுத்தியது. இங்குமங்கும் குறுக்கே செல்லும் அம்மா இருக்கும் வீட்டில் அக்குள் முடிகளின் நசநசப்புடனும், ஒரே வேட்டியில் ரவி நாளெல்லாம் பாயில் கிடந்தது, அவன் அந்தரங்கத்தை அம்மா கவனித்துவிடுவாள் என்று பயமாக இருந்தது.

ராஜன் மாமாவிடம் காண்பிக்கச் சொன்னது நீலவேணி பாட்டிதான். இதற்காக ஒரு நாள் காலையில் தொங்கிய கழுத்தும் தளர்ந்த உடலுமாக‌ கைத்தாங்கலாக ரவியைத் தாங்கிக் கொண்டு அம்மாவுடன் சென்றான் சம்பத். மீசையற்ற தடித்த உதடுகளில் மேலுதட்டு பள்ளம் அவரை அழுத்தமானவர் என காட்டியது. வேட்டியும் மேலே ஒரு துண்டு மட்டுமே அணிந்து காணப்பட்டார். அந்த நேரத்தில் பலபேர் அவர்வீட்டில் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் வேறு ஏதேதோ விசயத்திற்காக வந்திருந்தனர். திண்ணை, தாழ்வாரம், முற்றம் என ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். முற்றத்தைச் சுற்றிய எட்டுத் தூண்களில், தூணுக்கு ஒருவராக அட்டை கொடுத்து அமர்ந்திருந்தனர்.

அம்மா முதல்நாளே சொல்லிவிட்டதனால் போனதும் வாங்க உங்களுக்காகத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்’ என்றார். நெற்றி நிறைய விபூதி நடுவில் ஒரு காசு அகலக் குங்குமம். வெற்றிலையில் சிவந்த வாயில் கொஞ்சம் முன்பு போட்டுத் துப்பிய தாம்பூலத்தின் பாக்குத் துணுக்குகளை நாவால் துளாவிக்கொண்டிருந்தார். ரவியைப் பார்த்த ஒரு வினாடியில் இரண்டாவது அறைக்கு அழைத்துவரச் சொன்னார். நிறைய அறைகள் ஒவ்வொன்றிலும் சாமான்கள், புத்தங்கள், அலுமினிய பித்தளைப் பாத்திரங்கள் என இருந்தன. இரண்டாவது அறை ஒரு கோயில்போல இருந்தது. நடுவில் அரையாள் உயரத்திற்கு ஒரு தலைமட்டும் உடைய அம்மன் சிலை. சுற்றிலும் குங்குமத்தால் மெழுகியதுபோன்ற‌ தரை. சுவர் முழுக்கப் பலவகைக் கண்ணாடி சட்டத்தில் அம்மன் படங்கள். எல்லாமே எதோ ஒருவகையில் உக்கிரமாக இருப்பது போலிருந்தது.

அம்மாவிடம் எல்லா வம்புகளையும் பேசிவிட்டுப் பூசைகளை ஆரம்பித்தார். கைத்தாங்கலாக பிடிக்கப்பட்டிருந்த ரவியை அவ்வப்போது கவனித்தாலும் சம்பத்தை முற்றிலும் தவிர்த்தார். கண்களைச் சந்திக்கப் பயப்படுவது ஏன் என்ற ஆச்சரியம் அவனை உறுத்திக்கொண்டே இருந்தது. எறும்புக்கூட்டங்கள் சிதறுவதுபோல மந்திரங்கள் பதற்றமாக ஒலித்தன. ஏற்றமும் இறக்கமுமாக துள்ளிக் குதித்து ஓடின. உள்ளே சென்று வணங்குவது வருவதுமாக இருந்தார். ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு ரவியின் முகத்தில் அடித்தார். ரவியின் நெற்றியைப் பிடித்துக்கொண்டு மந்திரங்களை தொடர்ந்தார். பின் சாந்தமடைந்து உள்ளே சென்றார்.
வெளிவந்தவர் அம்மாவிடம் ‘வயித்த கடபுடன்னு எதோ புரட்டுதும்மா வயித்துலதான் ஏதோ பிரச்சன’ எதாவது புதுசா சாப்பிட்டானா? மாமிசம் கறின்னு வெளியில பிரன்சுங்ககூட எங்காவது சாப்பிட்டானாமா? வெளி போக்குவரத்து எதாவது உண்டா?’ என்று கேட்டுக்கொண்டேயிருந்தார்.

ரவியைப் பார்ப்பதும், அவசரமாக, தெரியலையே சாமி என்பதுமாக இருந்தாள். கொஞ்சம் இருங்க என்று கொல்லைக்கு சென்றார். அங்கிருந்தபடியே அம்மாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சம்பத்திடம் ரவியை அழைத்துவரச் சொன்னார்.

கொல்லையின் நடையின் நடுவில் வலதுஓரமாக ஒரு தொட்டி இருந்தது. அதன்முன் அவனைப் பிடித்துக்கொள்ள சொன்னார். அந்தப்பக்கம் நின்று டவடிவ நிண்ட குழாயை அவன் வாயினுள் நுழைத்தார். கவனம் என்று சொல்லிவிட்டு முதலில் ஒரு ஊது ஊதிவிட்டு கன்னங்கள் குழிவிழ சட்டென காற்றை உள்ளிருந்து இழுததார். காலையில் அம்மா கொடுத்த தோசைகள் முழுசாக பெரிய துண்டுகளால் அப்படியே வெளியே தொட்டியில் கொட்டின. சம்பத் எதிர்பாராமல் ஒரு நிமிடம் பதறிப்போனான்.

அவனுக்கு நீ தம்பியா? அண்ணன் எப்படி, தப்புத் தண்டா ஏதும் போவானா? கேட்டுகொண்டே கண்களை தாழ்த்தி நிதாணமாக வெளியே வந்தவைகளை ஆராய்ந்தார். முன்பே எதிர்பார்த்ததுபோல ஒரு முகபாவனையுடன் ஒரு குச்சியின் கிளறி ‘இதோபார்’ என்றார். தடித்த முடி ஒன்று பின்னிபிணைந்து தோசையோடு கிடந்தது. அப்போது தான் அறுவருப்பு கூடியது போலிருந்தது அவனுக்கு. செம்பட்டை நிறம் கொண்ட கோரைப்புல் போல விரைத்து நின்று ஒரு நுனி ஆடியது.

இனிமே சரியாயிடுவான் என்றார். அது காதோடு கிசுகிசுத்தது போலிருந்தது. ஆனால் முடியைப் பற்றி அம்மாவிடம் ஏதும் கூறவில்லை. பத்தியச் சாப்பாட்டை மட்டும் சொல்லிவிட்டு அனுப்பிவிட்டார்.

அரக்க பரக்க வந்து நின்றான் ஆறுமுகம். பெரிய வேலையை செய்து முடித்த திருப்தி அவன் முகத்தில். ‘இந்தாங்க பொறய நீங்களே போடுங்க மணி பாத்துகிட்டு இருக்கான்’ என்றான். மணி சட்டென் துள்ளி எழுந்து நின்றது. இரண்டு பொறையை ஓரமாக போட்டதும், உடலே மனமாக ஓடிவந்து தின்றான்.

சீக்கிரம் நாம வந்துட்டோம் முதலாளி, கொஞ்சம் இருட்டட்டும் போயிடுவோம். முன்னமே பேசிட்டேன்.

புரியுது புரியுது என்று சம்பத் தலையை ஆட்டியபடி லாகவமாகச் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கூறினான்..

அம்மாவிற்கு 50மேல் ஆகிவிட்டிருந்தாலும் இன்னும் கருமையான முடிதான். அத்தனை நீளமான செம்பட்டையான முடி எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியமாக நினைத்துக்கொள்வான். பின் ரவி எழுந்து உடல் தேறி எப்போதும் போல் நடக்க ஆரம்பித்தும் அந்த சம்பவம் நடந்தததை மறக்காததுபோல காணப்பட்டான். ஆனால் ரவியைத் தாண்டி செல்வது என நினைத்துகொள்ள ஆரம்பித்தான்.

வெய்யிலின் தாக்கம் குறைந்து மணி பொன்னிறமாக மாற ஆரம்பித்திருந்தான். சற்றுநேரத்திற்கெல்லாம் கருமையின் வேகம் அவன் உடலில் பரவதொடங்கியிருந்தது.

ஆறுமுகம், முதலாளி இருங்க வாரேன் என்று கைலியை தூக்கிபடி அசைவைக் கண்ட பூனையைப் போல முன்னோக்கிச் சென்றான். இருபதுஅடி சென்றபின் லேசாக சரிவில் இருந்த அந்தப் பகுதியில் அதுமட்டுமே இருந்த குடிசையின் முன் நின்று சைகை செய்தான்.

சட்டென சம்பத்தின் இதயத்தின் வேகம் அதிகரித்தது. ஒரு ஆளுமையை வெளிக்காட்ட அதுவரை அடக்கி வைத்திருந்த அவனின் சிறுபிள்ளைத் தனங்கள் முளைத்து வெளிவருவதுபோல் பூரிப்படைந்தான். எவ்வளவு நினைத்தாலும் அவனுள் வெளிப்பட்ட படபட‌ப்பை நிறுத்தமுடியவில்லை. கிளம்பி மெதுவாக தரையைக் கவனித்தபடியே நட்ந்து சென்றான்.

அந்த குடிசையை அவனும் ரவியும் பழநியும் சிறுவயது முதலே பார்த்து வருகிறார்கள். ஒரு கிழவியும் தன் பேத்தியான சிறுமியும் வாழ்ந்து வருகிறார்கள். அழுக்கடைந்த சட்டையும் பாவாடையும் அணிந்திருப்பாள் அவள். கண்களில் பயமும் உடலில் சிறு துள்ளலுடன் இருப்பாள். அவன் அருகே செல்லச்செல்ல ஆறுமுகம் வேகமாக கையை ஆட்டினான். மழையில் நனைந்திருப்பதுபோல சிறுமினுமினுப்புடன் அந்த குடிசை புதிய ஓலைகளால் தற்போது கட்டப்பட்டது போல தெரிந்தது.. முன்சென்றபோது லேசான மறைவிலிருந்து அவள் வெளிப்பட்டாள். அதுவரை நின்றிருந்த படபடப்பு மீண்டும் வேகம் கொண்டது.

பாத்துக்குங்க முதலாளி என்றான் ஆறுமுகம். அவன் கண்களை சந்தித்தபோது அவன் முகத்தில் தெரிந்த சிரிப்பு தானும் அப்படிதான் வழிகின்றேனோ என நினைத்தான் சம்பத்.

அவளுடைய புன்சிரிப்பு அவனைக் கண்டதும் பூவிரிவதுபோல விரிந்தது. பொன்னிற உடல் மாலை இருட்டில் ஜொலித்தது. பொன்னிறத்தில் சேலை. சின்னசின்னப் பூக்கள் தங்கவெள்ளி நிறத்தில் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகியிருந்தாள். சொருகிய இடத்தில் உடல் நிறம் சற்று வெண்மையாக மாறியிருந்தது. உருண்டையான பூரிப்பான கைகள். தோய்ந்த ஆனால் பந்துபோன்ற மென்மையான முலைகள். லேசான விலகிய முந்தானையில் அது இறுகி இருந்தது. அகன்ற தோள்கள் ஆனால் தோள்களைவிட இடை சிறியதாக் தோன்றியது. செந்நிற உதட்டில் கிழுதடு சற்று பருத்திருந்தது. சின்னது எதுவும் தனக்கு உவப்பானது என்பதுபோல் சின்ன கண்களைக் குறுக்கி நோக்கினாள். சுற்றிக் கட்டிய தலைமயிர் முடிச்சு வேப்பம்பூ போல் விரிந்திருந்த‌ கொண்டையின் செம்பட்டை நிறம் விளக்கின் வெளிச்சத்தில் அபரிமிதமாக‌ மின்னியது.

‘எப்படி இருக்கா’ என்றான் ஆறுமுகம்.

‘இதோ இருக்கோம்ல’ என்றாள் அவள். அந்த பதிலில் அவள் மிக மென்மையாக அதேவேளையில் உற்சாகமானவள் என்பது காட்டியது. அவர்கள் இருவரிடமும் நல்ல பழக்கம் இருக்கும் என தோன்றியது.

‘பேசிட்டேன் அக்கா, ஆளு பெரிய இடம், நல்லா பாத்துக்க’ என்று ஆறுமுகம் கூறிவிட்டு கண்ணடித்தான்.

ஆறுமுகத்தின் முன் முதன்முதலாக தான் சிறுவனாகத் தோன்றியது சம்பத்திற்கு.

சட்டென ஒரு சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பு வெகுவாக அவனை வெட்கப்படவைத்தது. அந்த சிரிப்பினுடே சம்பத்தைப் பார்த்தபடி ‘இதோ பாத்துட்டோம்ல’ என்று ராகமாக சொன்னாள்.

– சொல்வனம், இதழ்-101, மார்ச் 10, 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *