கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 4,453 
 

அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. அவன் திருப்பூரில் இருந்து விரைவாக அருப்புக்கோட்டை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தான். ஒரே பதட்டம்,பயம் அவனுடைய மனதில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தான். மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது…

“வாங்க தம்பி சீக்கிரம்! அவ உங்கள பாக்கணும்னு சொல்லுறா”

“சரிங்க அத்தே! இன்னும் கொஞ்ச நேரத்துல ஆஸ்பத்திரிக்கு வந்துடுவேன். அவளை பாத்துக்கோங்க!”

ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு விரைவாக ஆஸ்பத்திரிக்கு வந்தடைந்தான்.லட்சுமி தேவியை பார்த்தவுடன் அவனுடைய கண்கள் கண்ணீர் குளங்கள் ஆகிப்போயின.

“தைரியமா இரு தேவி! குலசாமியை நல்லா கும்பிட்டுக்கோ”

“சரிங்க மாமா “

என்று அழுத வண்ணம் கூறினாள். அவள் கண்ணீரை துடைத்து அவளை சமாதானப்படுத்தினான். அறைக்குள் நர்ஸ் வந்து அவனிடம் கையெழுத்து வாங்கினார்.

“எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க டாக்டர் இப்ப வந்துருவாரு”

சிறிது நேரத்திற்குப் பிறகு டாக்டர் பிரசவ அறைக்குள் சென்றார். வலி தாங்க முடியாமல் அவள் கத்திக்கொண்டே இருந்தாள். மனைவி வலியால் துடிக்க அவன் மனது துடித்துக் கொண்டிருந்தது. கையில் வர்ஷனை வைத்துக் கொண்டு இருக்கையில் அவனும் அழத்தொடங்கி விட்டான். அவன் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன். அவனுக்கு ஒரு வயதாகிறது.

வயிற்று பசியால் அழுது கொண்டிருந்தான். அத்தை அவனுக்கு கடையில் பால் வாங்கி கொடுத்தார். அதை குடித்த பிறகு அவன் அமைதியாக உறங்கி விட்டான். அவளின் குரல் வலியால் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு மனைவியின் குரல் மெதுவாக குறைந்து குழந்தையின் குரல் மெல்ல ஓங்கியது……

அளவு கடந்த மகிழ்ச்சி !ஆனந்த கண்ணீருடன் அனைவரும் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. கண்களை மூடி கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தான் .
இரவு இரண்டு மணி அனைவரும் உள்ளே சென்றார்கள்.செவிலியர் வந்தார்.

“சுகப்பிரவேசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது“ என்று கூறிவிட்டு சென்றார்.

வாடிப்போய் இருந்த அவனது முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. பெண் குழந்தை என்றால் அப்பாவுக்கு சொல்லவா வேண்டும்? அவளுக்கும் ஆனந்த கண்ணீர் ஆறாய்ப் பாய்ந்தது.

“கண்ணு ரெண்டும் அப்பனை போலவே இருக்கு”

“வாய் லட்சுமி போல இருக்கு”

என்று பார்க்க வந்த ஒருவருக்கொருவர் பெண் பிள்ளையை வர்ணித்துக் கொண்டிருந்தார்கள்.

பொழுது விடிந்தது. அனைவருக்கும் இந்த இனிய செய்தியை போனில் சொல்லி மகிழ்ந்தான். அப்பொழுது அவனுடைய முனியக்கா அம்மாச்சி ஞாபகம் வந்தது.

“சுடுகாட்டில் கொள்ளி போட ஒரு ஆம்பள புள்ளையும்! மந்தையில கொள்ளி போட ஒரு பொம்பள புள்ளையும் இருக்கணும் டா பேராண்டி”

என்ற அம்மாச்சியின் சொலவடை போர் விஜயனின் மனதில் வந்து சென்றது…

சொல்ல முடியாத அளவிற்கு சந்தோசம் பெண் குழந்தை பிறந்தத அந்த நாளில்….

– நீரோடை மின்னிதழ் ஜனவரி 2024

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *