கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 56 
 
 

அன்று காளமேகம் திருமலைராயன் பட்டினத்திற்கு வருகின்ற நாள். அவரை உள்ளே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவ்வூர்க் கவிஞர்கள் யாவரும் அதிமதுரக்கவிராயரின் தலைமையில் ஒன்று சேர்ந்து அவரைப் பயமுறுத்தி விரட்ட ஊர் எல்லையிலேயே கூடிவிட்டார்கள். கூட்டமாக வந்திருக்கும் தாங்கள் அத்தனை பேரும் திருமலைராயன் பட்டினத்துக் கவிஞர்கள் என்பதை அறிந்து கொண்டதுமே காளமேகம் அஞ்சிப் போவார்’ என்று அவர்கள் மனக் கோட்டை கட்டினர். இந்தத் துணிச்சலில், காளமேகத்தைக் கண்டதும் தாவிப் பாய்ந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

தம் சிந்தனையின் போக்கிலே ஆழ்ந்தவாறே சாலையில் வந்து கொண்டிருந்த காளமேகத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.

“நீங்கள் எல்லாம் யார்? எதற்காக வழியோடு போகிற என்னை இப்படி வளைத்துக் கொண்டு நிற்கிறீர்கள்? விஷயத்தைச் சொல்லுங்கள்!” கணீரென்று வெண்கலக் குரலில் இப்படிக் கேட்டார் காளமேகம்.

“நாங்களா? நாங்கள் எல்லாம் திருமலைராயன் பட்டினத்துக் கவிராயர்கள்.” வளைத்துக் கொண்டிருந்தவர்கள் மறுமொழி கூறினார்.

காளமேகத்திற்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டு விஷமத்தனமாகச் சிரித்துக் கொண்டே , “அடடா! நீங்கள் கவிராயர்களா? (‘கவி என்ற சொல்லுக்குக் குரங்கு’ என்றும் ஒரு பொருள் உண்டு. நான் வெறும் மனிதர்கள் என்று அல்லவா தவறாக எண்ணி விட்டேன்?” என்றார். மேலும், “நீங்கள் கவிராயர்கள் ஆனால் அதற்குரிய படி தோற்றம் இல்லையே?”

“வால்எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன்னிரண்டு
கால்எங்கே? உட்குழித்த கண்எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்”

என்று பாடிப் பரிகசித்தார். சுற்றியிருந்த புலவர்கள் அத்தனை பேரும் முகத்தில் விளக்கெண்ணெய் வழிய நின்றார்கள். ஆனால், காளமேகம் அதோடு விட்டுவிடுபவராகத் தெரியவில்லை. அவர்களை நோக்கியபடியே, “ஆமாம்! நீங்கள் கவிராயர்கள் என்று சொல்லிவிட்டீர்கள். நான் யார்?’ என்று உங்களுக்குச் சொல்லவில்லையே! கேளுங்கள். நானும் ஒரு கவிஞன்தான். ஆனால் உங்களைப் போல் அல்ல! எப்படிப் பட்ட கவிஞன் தெரியுமா? சொல்லுகிறேன், கேட்க வேண்டும்” என்று திரும்பவும் பாட ஆரம்பித்துவிட்டார்.

“இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட் டாகாதோ – சும்மா
இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின்
பெருங்காள மேகம் பிளாய்!”

காளமேகம் இப்படித் தற்புகழ்ச்சியாகக் கூறிய பாடலைக் கேட்டதும் கூட்டத்தின் முன்னணியில் நின்ற அதிமதுரத்திற்கு அவமானமும் கோபமும் உண்டாகிவிட்டது. ‘தங்கள் கூட்டத்தைக் கண்டே ஓடிப்போவான் என்று எண்ணியதற்கு மாறாகக் காளமேகம் துணிவாகத் தங்கள் முன் நின்று தங்களையே தாழ்த்திப் பேசுகிறானே?’ என்று நினைந்து மனம் கொதித்தது அதிமதுரத்திற்கு. . . .

“ஓய்! காளமேகம். நான் யார் தெரியுமா உமக்கு! நான்தான் அதிமதுரம்! எனக்கு இணையான புலவனே இந்தப் பக்கத்தில் கிடையாது! வீணாக யாரிடம் மோதிக் கொள்கின்றோம் என்று தெரியாமல் பின்பு திண்டாட வேண்டாம். எச்சரிக்கையாக நடந்து கொள்ளும்!”
அதிமதுரம் ஆத்திரம் பொங்கும் குரலில் இவ்வாறு கூறியதும் முன்னைக் காட்டிலும் உரத்த குரலில் கலகல வென்று சிரித்தார் காளமேகம்.

‘ஓஹோ! நீர்தானா அந்த அதிமதுரம் ? உம்மை தெரியாமல் இருக்குமா என்ன? நன்றாகத் தெரியுமே! எனக்கே தெரிய வில்லையானால் வேறு யாருக்குத்தான் உம்மைப்பற்றி தெரியப் போகிறது? உம்மைப்பற்றி நான் அறிந்ததைச் சொல்லுகிறேன், கேளும்:

அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதி மதுர மாயெடுத்துச் சொல்லும் – புதுமை என்
காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கெனவே கூறு.”

அதிமதுரம் = அரத்தை, வசம்பு இவைகளைப் போல ஒரு காட்டு மருந்துச்சரக்கிற்குப் பெயர்.

காளமேகப் புலவர் அதிமதுரத்தைப் பற்றிய தம் பாடலைக் கூறி முடித்தார். அதிமதுரம் வெலவெலத்துப் போனார். மற்றவர்கள் நடுங்கி ஓடுவதற்குத் தயாராகிவிட்டனர். ‘உண்மை யிலேயே இது பெரிய சண்டமாருதம்தான், இதனிடம் நம் முயற்சி பலிக்காது’ என்று அப்போதுதான் திருமலைராயன்பட்டினத்துக் கவிராயர்களுக்குப் புரிந்தது.

காளமேகத்தைப் புரட்டு செய்து ஓட்டுவதற்கு வந்த அவர்கள் காளமேகத்தின் புரட்சியிலே சிக்கிக் கருத்தழிந்து தாங்களே திரும்பி ஓட வேண்டியதாயிற்று. அவர் பாடல்கள் அவர்களை அவ்வாறு அஞ்சி நெஞ்சு குலைந்து ஓடும்படியாகச் செய்துவிட்டன.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *