கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 59 
 
 

வந்த விருந்தினர் பசியால் வெந்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள் புல்வேளூர்ப் பெருமக்கள் தாங்கள் உண்டு தங்கள் வயிறுண்டு என்ற கட்டுப்பாடான கொள்கைக்காரர்கள் புல்வேளூரார். பனந் தோட்டத்திற்கு நடுவில் ஒரு பலா மரம் போல் பூதன்’ ஒருவன் தான் அந்த ஊரிலேயே மற்றவர்களைப் பற்றி நினைப்பவனாக இருந்தான். பசித்து வந்த விருந்தினரைக் கண்டால் பண்போடு உபசரிப்பான்; ‘யாருக்கு வந்த விருந்தோ?’ என்று எவரையும் அலட்சியம் செய்வதே இல்லை. புல்வேளூரில் நல்ல மனிதனாக அந்த ஒருவன் பூதன் என்ற பெயரோடு இருந்து வந்ததனால்தான் மழை பெய்து வந்தது.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில், வயிறு காய வந்த ஒளவையார், நல்லவேளையாகப் பூதனுடைய கண்ணிலே பட்டார். புல்வேளூரைப் பற்றி அதற்கு முன்பு தெரிந்துகொள்ளாத அவர் பூதனைக் காண்பதற்கு முன் சந்தித்த இரண்டொருவர் மூலம் அது எத்தகைய ஊர் என்பதைத் தெரிந்து கொண்டார். விருந்து கண்டால் வருந்தி ஒளிந்து கொள்பவர் புல்வேளூர்ப் பொது மக்கள் என்ற நிலையைப் புரிந்து கொள்ள ஒளவையாருக்கு வெகு நேரம் ஆகவில்லை. காளான் களுக்கு நடுவில் குண்டு மல்லிகை போல் பூதன் அங்கே இருப்பதும் தெரிந்தது. வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்திட்டான் பூதன். அவன் அந்த அரும்பசிப் போதில் அள்ளி இட்டவரகரிசிச் சோறு அமுதமாக இருந்தது.

அப்போதுதான் வடித்து இறக்கியிருந்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வதக்கலையும் ஆவி பறக்கும் சூட்டோடு இலையில் படைத்தபோது ஒளவையார் இந்த உலகத்தையே மறந்து சுவைத்து உண்டார். மொர மொரவென்று புளித்த கெட்டியான மோரை ஊற்றின் போது அந்தச் சுவை பன் மடங்காயிற்று. தரமாகச் சமைத்திருந்தாள் புல்வேளூர்ப் பூதனின் மனைவி. வரகரிசியைக் குத்திப் புடைத்துச் சோறு சமைக்கும் பழக்கம் அவளுக்குக் கைவந்த பயிற்சி. எண்ணெய் கொட்டி வாட்டியிருந்த கத்தரிக்காய் வதக்கல் உலகம் பெறும். பசியார் உண்டபின் பூதனுடைய காலமறிந்து செய்த நன்றிக்கு என்றும் அழியாத ஒரு பதில் நன்றியைத் தாமும் செய்ய விரும்பினார் ஒளவையார்.

“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும் – தரமுடனே
பல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந் திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்”

‘ வழுதுணங்காய் = கத்தரிக்காய், பரித்து = அன்பு கொண்டு..

இப்பாடல் மூலமாகப் புல்வேளூர்ப் பூதனின் விருந் தோம்பும் பண்பை என்றென்றும் நிலைக்கச் செய்துவிட்டார் ஒளவையார். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை அன்போடு இட்டான் பூதன். அந்த அன்புக்கு நன்றி, காலத்துக்கு வளைந்து கொடுத்து அழிந்து போகாத ஒரு கவிதையாகக் கிடைத்தது. புல்வேளூரில் பூதனிருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கலாம். ஆனால் அந்தப் பரோபகார சிகாமணியின் பெயருக்குத் தமிழ்ப் பாட்டியார் கொடுத்த நற்சான்றுச் செய்யுள் தமிழ் மொழி உள்ளவரை அழியப் போவதில்லை. காலத்தை வென்று கொண்டே வளரும் பூதன் புகழ்.

அவன் அளித்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வதக்கலையும் புளித்த மோரையும் உலகம் பெறும் உணவாகக் குறிப்பிட்டு மகிழ்கிறார் ஒளவையார். ‘அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டே பரிவுடன் அந்த உணவை அளித்தான்’ என்பதையும் பாட்டிலே நன்கு கூறியுள்ளார் ஒளவையார். நன்றி செய்தவன் அழிவுக்கு அப்பாற்பட்ட நன்றியைப் பதிலுக்குப் பெற்று விட்டான்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *