அப்புக்குட்டி மீன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 2,771 
 
 

“ஹலோ! அப்புக்குட்டி மீன் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? ”

அலைபேசியில் மாமா உரக்கக் கத்துவது காற்றில் கலந்து அந்தரத்தில் நீச்சலடித்தது.

எதிர்முனை என்ன பதில் சொல்லியதோ? தெரியாது.

யாழ்.ஈழநாட்டிலை அரசியல் கேலிச் சித்திர பகுதியொண்டு அப்புக்குட்டி அண்ணையின் டவுட் என்ற பெயரிலை காத்திரமாகவும் சுவாரஸியமாகவும் வாறது தெரியும். மற்றது அந்த நாளிலை அப்புக்குட்டி ராஜகோபால் என்றொரு நகைச்சுவை நடிகர் ஒரு கலக்கு கலக்கியதும் தெரியும். இன்னுமொரு ஆள் சவாரித் தம்பர் உடைய உற்ற சிநேகிதன் அல்லது உதவி ஆள். அவரும் அப்புக்குட்டி. சீ..சீ.. அயத்துப் போனன். அவர் சின்னக்குட்டி.

எங்கட வீட்டில பத்துப் பேர். நான்.என்ரை அவர். என்ரை அப்பு ஆச்சி.அவருடைய ஐயா. ஐஞ்சு பிள்ளைகள்.அதில மூத்ததும் கடசியும் ஆண். இடயில மூண்டும் பெண்.

எப்ப பார் என்னோடை ஒட்டிக் கொண்டு..அல்லது உராசிக் கொண்டு. நெடுக உது தான் என்னவருக்கு வேலையாய் போச்சு.

சரி சரி. உவரை ஒருக்கா அருட்டிப் பாப்பம்.

“இஞ்சாருங்கோ.. உந்த அப்புக்குட்டி மீன் எண்டால் என்ன? சொல்லுங்கோ? ”

“ஓ.. அது..அது.. அதுவா”

சடைஞ்சார் ஆத்துக்காரர்.

சுருட்டு ஒன்றை பத்த வைத்து ஒரு இழுவை இழுத்தார்.

“விறுதாதானே வேண்டாமெங்குறது… இனி நீங்க எங்க சொல்லப் போறீங்க.. சுருட்டுதானே சொல்லப் போவுது!”

“உந்த பாரதி தாசன் பற்றி கேள்விப்பட்டனியே. அவர் தான் என்ரை நினைவிலை வாறார்”

“யார் உங்கட மூத்த அம்மானின்ர கடசிப் பெடியையே சொல்லுறியள்? ”

“பாரதி தாசன்… வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா…எண்டு பாட்டு எழுதினவர். ஆனால் வலிமையான கப்பலை கூட எளிமையான உந்தக்

குட்டி மீன் நகரவிடாமல் செய்து கப்பல் நிறுத்தி என்ற பெயர் பெற்றது. அது தெரியுமோ உனக்கு? ”

“என்ன.. பூனை தெருவில போற மாதிரி… மீன் குறுக்கால போனதோ”

“படிச்சவைக்கு தெரியும் நான் என்ன சொல்றன் எண்டு. புத்தி வயக்கெட்டுப் போச்சு… உனக்கு குறுக்கால போற பூனை தெரியும்..ஒட்டிக் கொண்டு போற மீன் தெரியாது..”

“கழுவுற மீனில் நழுவுற மீன் தெரியும். அதுக்கை எங்கை மீன் ஒட்டுது! இஞ்சை பார் பேந்தும் வக்கணையாய் காதில பூ வைக்கிறதை.”

“ நீ வலிய கொழுவப் பாக்கிறாய்..சோலி வேண்டாம்.. இனி நீயே சொல்லு” என்றார் என்ரை புருஷன்.

“அதன் சைசை வைத்து சின்ன குட்டிமீன் எண்டும் சொல்லுவினம். அதனை கப்பலொட்டி மீன்.. உறிஞ்சு மீன்…எண்டெல்லாம் கண்டபாட்டுக்கு சொல்லுறவை. உந்த மீன் சதைப்பிடிப்பற்றது என்பதனால் மனிதர் விரும்பி உண்பது குறைவு. சிலர் பொரிப்பினம்.”

“உதென்ன ரண்டு பேரும் என்ன விண்ணாளம் பறையிறியள்” என்றார் அந்தப் பக்கமாய் வந்த அப்பு.

“எணெய்…உந்த அப்புக்குட்டி மீன் கேள்விப்பட்டணியளே? அது பற்றி சொல்லணை?..”

“தீர அயத்துப் போச்சு. எங்கட இளம் பராயத்தில ஒவ்வொரு குறிச்சிக்கையும் நாலஞ்சு பேராவது அப்புக்குட்டி எண்ட பேரோட இருந்தவை.கனக்கப்பேருக்கு வீட்டுப் பெயர். சிலருக்கு செல்லப் பெயர். சிலருக்கு பட்டப் பெயர். முந்தி ஒருக்கா பக்கத்துப் பட்டினத்தில கமக்காரர் கூட்டம் கூடியவை. எங்கை இருந்தாலும் அப்புக்குட்டி அண்ணை உடனடியாக மேடைக்கு வரவும் எண்டு சொல்ல மைதானத்துக்கை இருந்த அரைவாசி சனம் மேடைக்கு போட்டுது. அப்புக்குட்டி எண்டொருத்தர் என்ரை குஞ்சையா. நான் இளந்தாரியாக இருக்கேக்கையும் இருநந்தவர். ஆள் வலு நட்டாமுட்டி.”

“என்னணை..நான் அப்புக்குட்டி மீனை கேக்க.. நீ உன்ரை பாட்டுக்கு உன்ரை அப்புக்குட்டிக் குஞ்சைப்பத்தி அலம்பிக் கொண்டு போறாய்? ”

“இதென்ன ஆக்கினை பிடிச்ச வேலை. அப்புக்குட்டி மீனோ? உங்கை கொம்மா வாறா. அவவைப் பிடி. சங்கடப்படுத்தாமல் என்னை விடு”

“எல்லோரும் என்ன சமா வைக்கிறியளோ? சீமானுக்கு கதை கண்ட இடம் கயிலாயம். போற அலுவலை அயத்துப் போகும். சுறுக்கா வராது” என வரும் போதே ராவத் தொடங்கினா ஆச்சி.

“எணை விடிஞ்சா பொழுதுபட்டா அந்தாளோடை செருகாட்டி உனக்கு பத்தியப்படாது. அப்புக்குட்டி மீன் எண்டால் என்னணை? ”

“நான் சின்னப்பொடிச்சியாய் இருக்கேக்கை உது பத்தி கனக்க கதைப்பினம். கடலுக்கை காணப்படும் உடும்பு போல எண்டு சொல்லுவினம்.ஒட்டினால் விடாதாம். உடும்பை சுவரிலை ஒட்ட வைத்து கள்ளர் ஏறுவது போல இந்த மீனை

கடலுக்கை எறிஞ்சு பெரிய மீன்களை பிடிப்பது அநாதியில் வழக்கமாம். எங்கட காலத்தில வெறும் மேலோட ஆழ் கடலுக்கை சுழி ஓடுவினம்.அவையளிலும் ஒட்டிக் கொள்ளும். பின் கஷ்டப்பட்டுப் புடுங்கி எடுப்பினம்.சில வேளை தோலும் அள்ளுப்பட்டுப் போகும்.”

“இன்னுமொரு கதை சொல்லுறன் கேளடி மோனை. உந்த மீன் குஞ்சுகளை பிடிச்சு ஊருக்கை பண்ணை கட்டி வளப்பினம். பேந்து கடலாமைகளை பிடிக்குறதுக்காக வளர்ந்த மீன்களின் வாலில் இறுக்கமாக கயித்தால் கட்டி கடலுக்கை வீசுவினம். மற்றத் தொங்கல தாம் பிடிச்சிருப்பினம். ஆமைகள் அடி ஆழத்தில் சீவிக்கும். அதில போய் இவையள் ஒட்டிக் கொள்ளுவினம். பேந்தென்ன? இவை வலிச்சு வலிச்சு இழுக்க ஒட்டி இருக்குற ஆமையும் சிக்குப்பட்டுப் போகும்.”

என்ரை கடசி ரண்டும் குறுக்கமறுக்க கலைபட்டுத் திரிஞ்சுதுகள்.

பெடியின்ரை கையில பெரிய சுறா மீன் பொம்மையொன்று. அதில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு கனக்க குட்டி குட்டி மீன்கள்.

பெடிச்சியின்ரை கையில பெரிய ஆமை பொம்மையொன்று. அதிலயும் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு கனக்க குட்டி குட்டி மீன்கள்.

“தம்பி டேய்..கொஞ்சம் நில்லு என்ரையப்பு. உதென்னடா கையில. யாரடா வாங்கித் தந்தவை? ”

“தாத்தாதான் நேத்து ரா திருவிழாவில வாங்கி தந்தவரெணை. குட்டி குட்டியாக அப்பிக் கிடக்கிறதால அப்பிக்குட்டி மீன் எண்டு முந்தி சொன்னவையாம். இப்ப அப்புக்குட்டி மீன் எண்டு சொல்லுவினம் எண்டு சொன்னவரெணை. மினைக்கடுத்தாதை. விடு. நான் விளயாடப் போறன்” என்றவாறே விளையாட நாண்டு கொண்டு நின்ற சின்னவளையும் இழுத்துக் கொண்டு ஓடினான்.

“வளவுக்கை விளையாடுங்கோ. ஒழுங்கை முடக்கில கடி நாய் கிடக்கும். கவ்விப்போடும்.”

இரண்டுக்கும் வயது கன வித்தியாசமில்லை.இன்னமும் விளையாட்டு புத்தி.

இரண்டாவது குமரி வந்தாள்.

“அப்புக்குட்டி மீன்களில் எட்டு வகை உண்டு. 30 முதல் 110 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். திமிருடன் திரியும் திமிங்கலம் என்றாலும் சரி அல்லது அசுரத்தனமாகத் தாக்கும் சுறா என்றாலும் சரி அல்லது கோட்டான் திருக்கை போன்ற பெரிய மீன்கள் அல்லது பெரிய ஆமை வகைகள் என்றாலும் சரி அவற்றை ஆதார உயிரினமாக்கி இலாவகமாக ஒட்டிக் கொள்ளும்.பின் இவை தங்குயிரியாக, நீந்தும் சிரமமின்றி இரை தேடும். தமது ஆதாரிகளின் மிச்சங்களையும் எச்சங்களையும் உண்ணும். அவற்றின் வாயருகே சென்றால் அவற்றிக்கே இரையாவதும் உண்டு. வாய்குள் உள்ள நுண்ணுயிர்களை உண்டுவிட்டு பவுத்திரமாகத் திரும்புவதும் உண்டு. கப்பலுக்கு அடியிலும் சில சமயம் நீந்துகின்ற மனிதர்களின் உடலிலும் கூட ஒட்டிக்கொள்ளும். சுமார் 1 லட்சத்து 99 ஆயிரம் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமே பெயர் உண்டு. 25 மில்லியன் வரையான கடல் வாழ் உயிரினங்களுக்கு இன்னமும் பெயர் இல்லை என்றும் பள்ளிக்கூடத்தில் படிப்பித்தார்கள்.”

தான் படித்த அனைத்தையும் மூச்சுவிடாமல் கொட்டித் தீத்தாள் அவள்.

“என்ரை மூத்தவன் வாறான்.அவனும் அப்புக்குட்டிதான். எப்ப பாத்தாலும் அலைபேசியோடை ஒட்டிக் கொண்டு..”

“சும்மா கொதி ஏத்தாதையணை” என்ற அவன் மேலும் தொடர்ந்தான்.

“அப்புக்குட்டி மீன் என்பது கிராமிய வட்டார வழக்கு. சரியான தமிழ்ப் பெயர் தெரிந்தவை குறைவு. ஆங்கில பெயர் ரெமோரா.மூல மொழியான லத்தீனில் ஒட்டுவது என்பது அதற்கு அர்த்தம். அறிவியல் பெயர் எக்கனெய்ஸ். காரணப் பெயர் ‘ஸக்கர் பிஷ்’. செயற் பாட்டுப் பெயர் கப்பல் நிறுத்தி. இவற்றை கப்பல் காரர் அழகிய ஆபத்து என்பார்கள். கப்பலுக்கு அடியில் கண்டால் கதிகலங்கிப் போவார்கள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த ரோமானிய பேரரசன் காலிக்யூலா மூர்க்கத்தனமாக ஒரு நாட்டைத் தாக்கிவிட்டு இரவோடிரவாக தப்பி ஓட முயல, ஏராளமான மாலுமிகள் இருந்தும் கப்பலை முன் நோக்கி நகர்த்த முடியவில்லை. அதற்குள் அடுத்த நாட்டின் கப்பல்கள் முன்னேறித் தாக்கி காலிக்யூலாவை கொன்றுவிட்டன. காலிக்யூலாவின் கப்பலின் அடியில் அப்பிக் கொண்டிருந்த அப்புக் குட்டி மீன்களைக் கண்ட மாலுமிகள் அவைதான் இறுக்கிப் பிடித்து கப்பலை நிறுத்திவிட்டதாக கதை கட்டி விட்டார்கள்.

அப்புக்குட்டி மீனின் தலைப்பகுதியில் நீள் வட்ட வடிவில் உறிஞ்சு தகடு உள்ளது. அதில் உள்ள கோடு போன்ற எலும்புகளுக்கு லமெல்லே என்று பெயர்.அவற்றைச் சுற்றி தடிமனான தசை உண்டு. எலும்புகளை அசைத்து உறிஞ்சு விசை மூலம் காற்றை உறிஞ்சி வெற்றிடத்தை உருவாக்கி பசை இல்லாமலே ஆதார உயிரினங்களுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளவும் தேவைக்கு ஏற்ப விடுவித்துக் கொள்ளவும் அவற்றால் இயலும்.”

விசாலமாக விபரித்தான். இதற்கு மேலும் உறிஞ்சு தகடு பற்றி மனது உறிஞ்சத் தயாராக இல்லை.

பெரியவளுக்கு இப்ப கிட்டடியிலதான் கல்யாண எழுத்து முடிஞ்சுது. எப்பவும் காதலை கண்களுக்கை நிரப்பிக் கொண்டுதான் திரிவாள்.

அவளின் காது மடல் திருகினேன்.

கவிழ்ந்து கிடந்தவள், நிமிர்ந்து எழுந்தாள்.

“ஓ! பெரிய மீனோடு ஒட்டி உறவாடி சின்னச்சின்ன மீன்கள் திரியுமே அதைப் பார்க்க எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் ஞாபகம் வருகின்றது. ஓ ஹோ நிலா ராணி! உளமே கவரந்தாய் நீ என்று ஆரம்பமாகும். நீல ஓடையில் அல்லியை போல நீந்தும் வெண் அன்னமே…உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம் தோழிமார்கள்தானோ…இந்த வரிகள் அந்தச் சுறா மீனுக்கும் அதை சூழத் திரியும் அப்புக்குட்டி மீன்களுக்கும் பொருந்துதுதானே…”

“என்னைத் தலைசாய வைத்தவரும் உன்னைத் தலையாட்ட வைத்தவரும் லைனிலை இருக்கிறார். இந்தா..கதை” என்றாள் அவள்.

தப்பிதல் தெரிந்தது.

காதருகே கொண்டு செல்ல முன்பாகவே “வணக்கம் மாமி ” என்ற குரல் ஒரு தடவைக்கு மேலாக காற்றில் கசிந்து காதில் கலந்தது.

ஸ்பீக்கர் போனிலை போட்டுத் தந்து விட்டாள். என்னுடைய முகத்தையும் மருமகன் பார்க்கக் கூடியதாக வைத்திருப்பாளோ. உவளின்ரை சேட்டை வரவர கூடிப் போச்சு.

அதிர்வலைகள் உள்ளுரப் பரவிட, ஓர் உசுப்பல் உணர்வு தோன்றி மறைந்தது.

ஏதேட்சையாக வலது கை பின்னால் தொங்கிய முந்தானையை இழுத்து முன்னுக்குச் செருகியது. தலை மயிரையும் முன்னால் இருந்து பின்னுக்கு ஒரு தரம் விரல்களால் நைசாக நீவியது.

“தம்பி உங்களிலை அவள் வைத்திருக்கிற காதலை… அவள் தொலைபேசியிலை வைத்திருக்குற காதல் வெளிப்படுத்தி விடும்.” என்றேன் நான்.

அந்தப்பக்கம் கேட்ட சிரிப்பொலியால் – இந்தப் பக்கமும் சிரித்தது.

“அது தொலை பேசி இல்லை மாமி. அதற்குப் பெயர் திறன் பேசி.சில பேர் அதனை நுண்ணறி பேசி எண்டும் சொல்லுவினம். நவீன திறன் பேசிகளில் எக்கச்சக்கமான செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். திறன் பேசி ஒன்றில் 80 செயலிகள் இயல்பாகவே இணைக்கப்படிருக்கும். ஆனால் 30 செயலிகள் வரைதான் அனேகமானவர்களின் பாவனைக்கு உட்பட்டவையாக அமையும். உலகில் 86 ஆயிரம் வித்தியாசமான செயலிகள் பாவனையில் உண்டு. செயலி என்பது ஆப்ஸ் என்பதின் தமிழ் வடிவம். ஆப்ஸ் என்பது அப்பிளிக்கேஷன்ஸ் என்பதன் சுருக்கம். அதிலை கதைக்கலாம்.குறுஞ் செய்தி பகிரலாம்.மின்னஞ்சல் பரிமாறலாம். படம் பிடித்து அனுப்பலாம். பாட்டுப்போட்டுக் கேட்கலாம். போகும் பாதையை பார்க்கலாம்.

கற்க உதவும் கருவியாக, பணிகளை விரைவில் செய்ய உதவும் கருவியாக, பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கான கருவியாக, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட செயலிகளுடன் ஆரம்பத்தில் ஆரம்பமானது. நூல்கள் படிப்பது, நூல்களிலும் தாள்களிலும் இருப்பதைப் படி எடுப்பது, பாடல்கள் கேட்பது, செய்திகள் அறிவது, திரைப்படங்கள் தொலைக்காட்சிகள் காணொளிகள் பார்ப்பது, கடைகளில் சாமான் வாங்குவது, வாடகை வண்டிகளை வருவித்தல், நல்ல உணவு சாலைகள் தங்கும் விடுதிகள் பற்றிய ஆலோசனைகள், வரைபட உதவியுடன் பயணம் செல்லும் இடத்தை அடைதல், புது மொழி கற்றல், பணப் பரிவர்த்தனை, பங்குச் சந்தை, முதலீடு, குழும உரையாடல்கள், மெய் நிகர் வகுப்புகள் என கன வேலை செய்யலாம்.

முதியவர்கள் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரோக்கிய ஆப்ஸ்களை விரும்பி தரவிறக்கம் செய்கிறார்கள். இளைஞர்களுக்கு மந்திரவாதியின் மந்திரக்கோல் போலாகி வாழ்க்கையே இன்று அதனுடன் என்றாகிவிட்டது.” – பெரிதாய் சொல்லிவிட்டு நீண்ட பெரு மூச்சுடன் நிறுத்தினார் மருமகன்.

“அம்மா ஏதோ குட்டி மீனைப் பற்றிக் கேட்க வெளிக்கிட்டவ. நீங்கள் என்ன உங்கட பாட்டுக்கு குறுங் கருவி பற்றி வெளுத்து வாங்குகின்றீர்கள்!” என்றாள் மகள்.

“ஸிம்பிள்! அது மீனாக இருந்தால் நடைமுறையில் முரண்பாடு்! அது போனாக இருந்தால் முரண்பாட்டில் நடைமுறை!” என்றார் மருமகன்.

அவள் அவனை திறன் பேசியில் பொய்யாகக் கிள்ளி செல்லமாகச் சிணுங்கினாள்.

ஒரே கருவியின் தொழில் நுட்ப முன்னேற்றம்தான், மூத்த மகளை எட்ட இருந்தே குரல் கொடுக்கவும், கிட்ட வந்து கிள்ளுவது போல் பாவனை செய்யவும், எனக்கு பழக்க தோஷத்தால் காதோடு ஒட்டியவாறே கதைக்கவும் அனுகூலமளித்தது.

“நுண்ணறி பேசியையும் கிரகம் பெல்தான் கண்டு பிடிச்சவரே அத்தான்?”

தூரத்திலிருந்தே குரல் கொடுத்தாள் எனது இரன்டாவது மகள்.

“கிரஹம் பெல் 1876 ல் உலகுக்கு அறிமுகப்படுத்தியது தொலை பேசியை மட்டுமே. அது கம்பி வழி ஒலியை கடத்தியது.நிரந்தரமாக ஓர் இடத்தில் நிலை கொண்டது. 1973 ம் ஆண்டு செல் பேசி வந்தது. கம்பி வழியின்றி அலை வரிசை மூலமாக ஒலியை கடத்தும் சாதனம் என்றபடியால் காவித்திரிய முடிந்தது. அதனால் அதற்கு செல்லிட பேசி, நகர் பேசி, கை பேசி, அலை பேசி என்ற பெயர்களுமுண்டு.ஆரம்பத்தில் செல் பேசி செங்கல் அளவில் பெரிதாக அமைந்த படியால் வாகனங்களில் மட்டுமே இணைக்கப்பட்டது. 1989க்கு பின்னர்தான் கையடக்க அளவில் சட்டைப்பையில் வைக்கக்கூடியதாக மெல்ல மெல்ல உருமாறியது.1997 ம் ஆண்டில் புகைப்பட கருவி உட்பட புதிதாக மேலும் பல நுட்பங்களுடன் படிப்படியாக இணையத் தொடர்பையும் இணைத்துக் கொண்டு பாவனைக்கு வந்தது. தொடு திரையுடன் கூடிய கைக்குள் அடங்கக் கூடிய கணனி போன்ற இதற்கு திறன் பேசி என பெயரிட்டனர்.”

எங்கோ நிண்ட மூத்தவள் கிட்ட வந்தாள். குரலை மாற்றினாள்.

“ உதைத்தான் தம்பி எங்கை போனாலும் காதுக்கை கொண்டு திரிவாள்.கேட்டால் உன்னைத்தான் காதுக்கை கொண்டு திரியுறன் என்பாள். எப்ப பாத்தாலும் உதோடைதான்”

மூத்த மகள் இஞ்சாலை சொல்வது திறன்பேசி் இல்லாத வலது காதில் கேட்கின்றது.

“மாமியைப் போல குரலை மாத்தி சேட்டை விடுகுது என்ரை மனுஷி! கண்டு பிடிக்கிறதில் சூரப்புலி போல நானும் ஒருக்கா ஹை டாலிங் சொல்லிப்பாப்பமா! ம்..ம்.. தற்செயலாய் மாமிதான் எண்டால் ஏடாகூடமாகிவிடும்! ஏன் வீண் சோலி. “ஓமெணை…இஞ்சை என்ரை அம்மாவும் உதைத்தான் சொல்லுகிறவ.நானும் உப்படித்தானாம்.”

மருமகன் அங்காலை சொல்வது திறன்பேசி் உள்ள இடது காதில் கேட்கின்றது.

மருமகன் சொன்னது மகளுக்கும் கேட்டிருக்க வேணும்.

“அம்மா! சும்மா அவரோட சொறிஞ்சு பார்க்கத்தான் உன்னை மாட்டி விட்டனான்.” சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக என்னிடமிருந்த போனைப் பறித்தாள்.

“அன்பே! மாமியிடம் திறன் பேசியை கொடுத்தாய். பறித்தாய். அவசரப்படாதே. உன் கூந்தலில் ஒன்றை தனதாக்கித் தன்னை அலங்கரித்துக் கொள்ளப் போகிறது உன் திறன் பேசி” – மருமகன்.

“அட! அதற்காகவும் ஒரு புதுக்கவிதை.அதற்குள்ளாகவும் ஒரு புதுக்கவிதை!

“மை சுவீட் டார்லிங்! உன் காதுகளும் என் உதடுகளும் அருகருகே.அதனால்தான் கற்பனையும் கவிதையும் எகிறுகின்றது. குறுங்கருவியும் குறுமீனும் நன்று! ஒட்டிக் கொண்டால் கழட்டுவது கடினம் என்பதில் ஒன்று! அப்புகுட்டி மீன்களுக்கு

மட்டும் பேசும் திறன் இருந்தால் சுறாமீன்களை சும்மா சுத்திப் பார்த்து என்ன வரப்போகுது? வாழ்க்கையில் நெடுக ஒட்டிக் கொண்டு திரிய ஒரு திரில் அல்லது திகில் தேவை என உன்னை சுற்றி வராத என்னை கேலி செய்யுமோ! சொல்லடி என் கண்ணே!” மீண்டும் மருமகன்.

“பிள்ளை.. உந்த ஸ்பீக்கரை நிப்பாட்டு முதலில. வெளியால கேட்குது” என்றது நான்.

“உங்கை சனமாக் கிடக்கு.கொஞ்சம் பொறுத்து எடுக்கின்றேன்.” என்றது மருமகன்.

“ஓ! நல்ல மூடில நிற்கிறார் போல.இப்ப வைச்சிட்டார்.விடாமல் துரத்திப் பிடிக்க வேண்டும்.கொஞ்ச இடங்கொடுத்தால் ஒன்றுக்குள் ஒன்றை சொருகுவதில் வலு விண்ணன் என்று சொல்ல வேண்டும். ம்..ம்.. சொல்லின் அர்த்தத்தை முடிவு செய்வது சொல்லா? இடமா? அதையும் ஒருக்கா அவரை கேட்க வேண்டும்.”- இது தன் பாட்டுக்கு மகள்.

“பிள்ளை! உந்த ஸ்பீக்கர் போனை நிப்பாட்டு. அவரும் நீயும் கதைத்த அவ்வளவும் வெளியாலை கேட்டது. பிறகு மனதுக்குள் கதைப்பதாக நினைச்சுக் கொண்டு இந்தளவும் கதைப்பதையும் நிப்பாட்டு. இதுவும் வெளியாலை கேட்குது.”மீண்டும் நான்.

ஆரம்பத்தில் அலைபேசியில் உரக்கக் கதைத்த மாமாவை வலுக் கட்டாயமாக இழுத்துப் பிடித்தேன்.

“தொடக்கியவை தானே முடிச்சும் வைக்க வேண்டும் என்றொரு வழக்கம் எங்களிடம் உண்டு! மாமா நீங்கள் சொல்லுங்கோ…அப்புக்குட்டி மீனைப் பற்றியோ வேறு ஏதாவதோ?”

“சொன்னவையளும் ஓரமாக ஒதுங்காமல் ஓரளவிற்கு ஒப்பேற்றிப்போட்டினம். பத்துப்பேர் பத்து விதமாச் சொல்லுவினம் என்பது கூட இந்த விசயத்தில் மெத்தச் சரியாப் போச்சு. குடும்பம் எண்டால் உப்படித்தான்.கதையோடை கதையாக அபரிமிதமில்லாமல் அப்புக்குட்டியும் வரும்.அலை பேசியும் வரும்.முகக்கவசத்தை கழட்டி வைப்பவர்களை கண்டிருப்பீர்கள். ஆனால் அப்பு மீன் கழண்டதையோ திறன் பேசியால் கழராதவர்களையோ கண்டிருப்பீர்களா! சில தவறுகள், நாம் யார் என்று சொல்லிவிடும்.சில தவறுகள், நாம் யாராக வாழவேண்டும் எனச் சொல்லித்தரும்! பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் நம்மைப்பற்றி நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நாமே நினைத்துக் கொள்வோம். சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.வாழும் விதத்தில்தான் உள்ளது.” என்றார்.

அப்புக்குட்டி மீன் இராவணனைப் போல.அதற்கு வேண்டப்பட்டவற்றை மட்டுமே நாடும். அலை பேசி இராமனைப் போல. எந்தக் பேதமுமின்றி எவரையும் நாடும்.

எதனையும் கணிக்கும் கருவி மனம் தவிர வேறு ஏது?

தேவையானதை தேவையான நேரத்தில் பயன்படுத்தத் தெரிந்தால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையின் அடையளமாக எதிர்காலம் வியத்தலில் ஒட்டிகொண்டிருக்கின்றது!

– நவம்பர் 2021, அக்கினிக்குஞ்சு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *