(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“தட்டுங்கள், திறக்கப்படும்” என்கிற வாக்கு பேராசிரியர் வீட்டில் செலாவணி ஆகாது போலும்! நானும் எத்தனையோ தடவைகள் தட்டிவிட்டேன். இன்னும் கதவு திறக்கப்பட வில்லையே? யாரது, ஏன் என்று கேட்பாருமில்லையே!”
பேராசிரியர் பரமசிவம் அவர்களின் வீட்டுக்கதவை தட்டி அலுத்துவிட்ட கைலாசத்தின் மனம் இப்படி முணுமுணுத்தது.
“இதற்காகத்தான் நான் பெரிய மனிதர் எவரையுமே பார்க்கப் போவது கிடையாது. பெரிய மனிதர்கள் வீட்டில் அடையா நெடுங்கதவும், அஞ்சல் அஞ்சல் எனும் கரமுமா காத்திருக்கும்? அடைத்த கதவைத் தட்டித் தட்டி நம் கைதான் நோகும். இல்லையென்றால் காவல்காரன் நிற்பான். மரியாதை இல்லாமல் முறைப்பான். அல்லது அவனுக்கு நெருங்கிய உறவான நாய் உறுமிக்கொண்டு கிடக்கும். வீடு தேடிச் செல்கிற நமக்குக் கால நஷ்டமும் கெளரவ நஷ்டமும்….”
இதே தன்மையில் அவன் உள்ளம் இன்னும் புலப்ப புராணம் தீட்டிக் கொண்டேயிருந்திருக்கும், பேராசிரியர் வீட்டுக் கதவு திறக்கப்படும் ஓசை எழாது இருந்தால்!
திறந்த கதவின் பின்னே நின்ற திருவுருவம் கைலாசத்தின் கோபம், கொதிப்பு குமைதல் அனைத்தையும் அவித்துவிடும் ஆற்றல் பெற்ற குளுமைக் காட்சியாகத் திகழ்ந்தது.
பதினேழு – பதினெட்டு வயசு அழகு உருவம், பளிச்செனப் பார்வையில் பதியும் பட்டுப் பாவாடையும் தாவணியுமாக நின்றது. ஒரு கையில் “எவர்சில்வர் தட்டு, அதில் அஞ்சாறு பஜ்ஜிகள் வலது கை பஜ்ஜியை எடுத்து, செவ்விய உதடுகள் வட்டமிட்டு எழிலுறுத்திய வாய்க்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தது. இயல்பாகவே சதைப் பிடிப்பால் மினுமினுத்த கதுப்புக் கன்னங்கள், வாய்க்குள் அடைப்பட்டிருந்த பஜ்ஜி யினால் மேலும் உப்பிக் காணப்பட்டன. வஞ்சனை இல்லாத வளர்த்தி அந்தப் பெண்ணுக்கு.
“சரியான டொமோட்டோ பிராண்டு. கொழுக்கட்டை மார்க்கு” என்று கனைத்துக் கொண்டது கைலாசத்தின் மனக் குறளி. “இப்படி ஓயாமல் திணித்துக் கொண்டேயிருந்தால் ஒரு உருவம் முட்டகோஸ் மாதிரிப் பசுமையாய் வளராமல், என்னைப்போல் வத்தப் புடலங்காயாகவா விளங்க முடியும்?” என்றும் அது இணைத்தது; இளித்தது. கைலாசத்தின் மனக்குறளி எப்பவுமே ஒருமாதிரிதான். கொஞ்சம் “வால்தனம்” பெற்றது அது.
வாயில் கிடந்து திணறிய பஜ்ஜி மறைந்தால் தான் குமரி குரல் கொடுக்க முடியும் என உணர்ந்த கைலாசம் தனது விசேஷ குணமான சங்கோஜத்தை ஒதுக்கி வைக்கத் துணிந்தான். “ஸார்வாள் இல்லையா?” என்று கேட்டான்.
“அவாள் இவாள் – ஸார்வாள் ஹிஹி” என்று குதிரை கனைப்பது போல் சிரிப்பைச் சிந்தினான் குமரி. அவள் வாயிலிருந்த பஜ்ஜித் துணுக்குகள் தன் மீது சிதறி விடாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சி, கைலாசம் சிறிது விலகி நின்றான்.
“ஸார் அவர்கள் இல்லையா என்று கேட்டேன்” அவன் குரலுக்குச் சிறிது கனம் கொடுத்தான். அவன் முகத்தில் சற்றே கடுமை பரவியது.
தட்டிலிருந்த பஜ்ஜிகளைத் தின்று தீர்த்துவிட்ட குமரியின் கண்களில் தனி ஒளி சுடரிட்டது. குறும்புத்தனத்தின் கனலாக இருக்கலாம் அது. மகிழ்வின் சுடராகவும் இருக்கலாம்.
“தின்று முடித்த திருப்தியின் சாயை!” என்று முனங்கியது கைலாச மனக் குறளி,
“பேபி, அங்கே யாரு?” என்ற கேள்வி வந்தது முதலில், பரமசிவத்தின் உருவம் வந்தது பின்னே, ஈரக் கைகளைத் துண்டில் துடைத்தபடி மெதுவாக வந்தார் அவர். அவன் மீது அவர் பார்வை பட்டதும், வெண்பற்கள் பளிச்சிட்டன. அவர் முகத்தில்.
“என்றுமே ஒரு புதிர் இது. ஸார்வாள் பொய்ப்பல் கட்டி யிருக்கிறார்களா, இல்லை, அவர்களது நிஜப் பல் வரிசையே இந்த வயசிலும் இவ்வளவு அழகாக இருக்கிறதா என்று புரியவில்லை. உறுதியாக முடிவு கட்ட முடியாத விஷயம் இது எனறு கைலாசம் மனக்குறளி கணக்குப் பண்ணியது. அதுவே இதற்கு முன்பு இபிபடி நூற்றெட்டுத் தடவைகள் முணமுணத்திருக்கும். இனியும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் முனங்கும். அது அதனுடைய உரிமை!
“டிபன் பண்ணிக்கிட்டிருந்தேன். அதுதான் நேரமாகிவிட்டது” என்றார் பேராசிரியர்.
மூன்று கண்ணாடி டம்ளர்களை ஒன்றாகச் சேர்த்து உராய்ந்து தொடர் ஒலிகளை எழுப்பியது போல் கலகலெனவும், கிணிகிணி எனவும், கடகட வென்றும் சிரிப்பொலி சிதறினாள் பேபி.
“என்னம்மா விஷயம்? ஏன் இப்ப இவ்வளவு சிரிப்பு” என்று விசாரித்தார் பரமசிவம்.
திடுமெனப் பாய்ந்த சிரிப்பைச் சடக்கெனக் கொன்றாள் அவள். சொன்னாள்: “நீயா அப்பா டிபன் பண்ணினே? அம்மா பண்ணி வைத்தாள். அதாவது ரெடி பண்ணினாள். நீ ஈட் பண்ணினே! என்னவோ நீயே அடுப்பு முன்னிருந்து டிபன் தயார் பண்ணியது போல் பேசுறிறே!”
“சரியான தின்னிப் பன்னி! என்று சீறியது கைலாசம் மனக்குறளி. இதன் மூளையும் பன்னி மூலைதான்!”
பரமசிவம் சிரித்து வைத்தார். அதில் அசட்டுத்தனம் அதிகம் மின் வெட்டியதா? அருமையான பெண்ணைப் பெற்றுவிட்ட பெருமை ஒளி வீசியதா? என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
“கைலாசத்துக்கும் கொஞ்சம் பஜ்ஜி எடுத்து வாம்மா” என்று சொன்ன ஆசிரியர், “இவர்தான் கைலாசம். நல்ல ரசிகர்” என்றும் அறிமுகம் செய்தார்.
உருவிய வாட்கள்போல் பளிரெனப் புரண்டு பாய்ந்தன இரண்டு கருவிழிகள். அவற்றின் ஒளிக்கூர்மையால் தாக்குண்ட கைலாசத்தின் விழிகள் மண்மீது படிந்தன. அவை மீண்டும் மேலெழுந்து பேபியின் முகத்தின் பக்கம் திரும்பியபோது, அம்முகம் மலர்க் குவியல்போல் வண்ணமும் வனப்பும் பெற்றுத் திகழ்வதைக் கண்டன.
“கொஞ்சம்னு சொன்னா எத்தனை? ரெண்டா, மூணா, எத்தனை? சில பேருக்கு ஒரு டஜன் கூட கொஞ்சமின்னுதான் தோணும்”” என்று கொஞ்சும் குரலில் வார்த்தையாடி நின்றாள் அவள்.
“போடி வாயாடி! உன்னோடு பேச முடியாதம்மா என்னாலே. அம்மாகிட்டே போய்க் கேளு. தந்ததை வாங்கிவா” என்று கூறி மகளை அனுப்பி வைத்தார் தந்தை. உடனேயே பொங்கும் பெருமையோடு சொன்னார்: “பேபி இப்படி வளர்ந்து விட்டாளே தவிர, அவள் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறாள். விளையாட்டுப் பிள்ளை. வேடிக்கைப் பிரியை…”
சொல்லாத எண்ணங்கள் அவர் உள்ளத்தில் நீந்தி, பெற்ற மனசில் களிப்புத் திவலைகளை அள்ளித் தெளித்தன என்பதை அவர் முகபாவமும், உதடுகளில் விளையாடிய குறுநகையும் எடுத்துக் காட்டின.
அவர் ஈஸிசேரில் சாய்ந்தார். கைலாசம் ஒரு நாற்காலியில் அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டான். பரமசிவத்தின் பின் பக்கத்தில்தான் அடுப்பங்கரை முதலிய பகுதிகள் இருந்தன.
பேபி ஒரு தட்டில் பஜ்ஜி எடுத்து வந்தாள். அவள், வந்த அழகு ரசிக்க வேண்டிய ஒரு தோற்றமாகத்தான் இருந்தது. தன்னைப் பார்த்து அவன் ரசிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட குமரி நடையில், அசைவில், முகத்தில் நயங்கள் சேர்க்கத் தவறினாளில்லை.
“அப்பா, அம்மா கணக்குப்படி கொஞ்சம் என்றால் அஞ்சு என்று தெரியுது. நான் போய் கொஞ்சம் பஜ்ஜி கொடு அம்மா என்றேன். உனக்காடீ என்று எரிந்து விழுந்தாள். இல்லேம்மா ஸார்வாளைத் தேடி ஒரு ஸார் வந்திருக்கிறார்; அந்த ஸாருக்காக நம்ம அப்பா ஸார் வாங்கிட்டு வரச்சொன்னார் என்றேன். அம்மா தந்தது இதோ” என்று நீட்டினாள். அடிக்கடி அவள் கள்ள விழிப் பார்வை கைலாசத்தின் பக்கமே ஓடி ஒடி மீண்டது.
“போக்கிரி!” என்று செல்லமாகக் கூறிய தந்தை பஜ்ஜியைக் கைலாசத்திடம் கொடுத்து உபசரித்தார். அவனும் சம்பிரதாய வார்த்தைகளை முனங்கி விட்டு அதை ஏற்றுக் கொண்டான்.
“பேபி, காபி கொண்டு வந்து கொடு” என்றார் பரமசிவம்.
“ஐயோ! வீணாப் போச்சே” என்று பேபி விரல்களை உதறவும், “என்னது என்னம்மா?” என்று தந்தை பதறினார்.
“இல்லே, நீ சொன்ன வசனத்தை வெறும் கவிதையாகவே நீட்டியிருக்கலாமே! மை டியர் பேபி, எடுத்து வா காபி என்றால் நன்றாக இராது? அது வீணாகப் போச்சே!” என்று சொல்லிச் சிரித்தாள் அருமை மகள். கைலாசத்துக்கு இனிய பார்வையைப் பரிசளித்து விட்டு, ஸ்டைல் நடை நடந்து போனாள்.
தந்தைக்குப் பெருமையாவது பெருமை! தமது திருப் புதல்வியைப் பற்றிய புகழுரைகள் பேசாமல் இருக்க முடியுமா அவரால்? பேசினார், பேசினார் கவிதை வரிவுரைமாதிரிப் பேசினார். பேபி சின்னக் குழந்தை; அவள் பேச்சிலும் செயல்களிலும் அற்புத ரசம் பொங்கித் துளும்பும். அவள் எஸ்.எஸ். எல்.ஸி. பாஸ் செய்துவிட்டாள். மேலும் படிக்க ஆசைதான், ஆனால் அம்மாவும் பாட்டியும் தான் வேண்டா மென்று தடுத்துவிட்டார்கள். சில மாதங்கள் பாட்டி வீட்டில் தங்கிவிட்டு, இப்போதான் இங்கு வந்திருக்கிறாள். வந்து நாலைந்து நாட்களேயாச்சு. அவள் இல்லாமல் வீடே வெறிச் சோடிக் கிடந்தது. இப்பதான் வீடு கலகலப்பாக ஜீவனோடு விளங்குகிறது. இப்படி விவரித்தார்.
கைலாசம் அவ்வப்போது மென்சிரிப்பும்; “ஊம், ஊம்” எனும் குரலும், தலையசைப்பும் கொடுப்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்? அவற்றை தாராளமாக வழங்கி, ஆசிரியருக்குப் பிடித்த “நல்லபிள்ளை”யாக நடந்து கொண்டான்.
தந்தையின் பேச்சு முடியும் மட்டும் மறைந்து நினிற பேபி வாய் திறவாது அசைந்து நகர்ந்து வந்தாள். வெள்ளி டம்ளரில் காபி எடுத்து வந்தாள், மதிப்பு மிக்க அமிர்தத்தைத் தூக்கி வரும் மோகினி போல. தந்தையருகே வந்துநின்று “ஊம்ம்” என ஒலிக் குறிப்புத் தந்தாள்.
“அவரிடம் கொடம்மா!” என்று அன்பாகச் சொன்னார் பரமசிவம்,
பேபி சிறிது நகர்ந்து முன் வந்து, கை நீட்டி, இந்தாங்க காபி” என்று மழலை மொழிந்து, கைலாசத்திடம் அளித்தாள். எல்லாமே ஏதோ ஒரு நாட்டியத்தின் பாவனைகள் போலத்தான் தோன்றின அவனுக்கு.
அவன் டம்ளரைப் பெற்றுக் கொள்கிறபோது அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய மாதுளை மொக்கு உதடு களில் மென்முறுவல் சுழியிட்டது. கண்ணாடிக் கன்னங்களில் செம்மை சாயமேற்றியது! கண்களில் மிதந்த பார்வை –
“சிறு பெண் எப்பொழுது பெரியவளாகிறாள்? அவளுடைய கண் பார்வையில் விசேஷமான அர்த்தங்கள் தேங்கித் தென் படுகிறபோது!” இப்படி அவன் என்றோ எங்கோ படித்திருந்த நயமான சிந்தனைக்கு ரசமான விளக்கம் காட்டின பேபியின் கண்கள்,
அவன் முகம் மலர்ந்தது. அதன் நிழல்வீச்சுப் போல அவள் முகம் முழு தலர்ந்தது. அவள் தந்த காப்பி அமிர்தமாகத் தான் ருசித்தது அவனுக்கு.
பேராசிரியர் “போரடிப்பு” விருந்து நடந்தினார். தான் அறிந்த அற்புதங்கள், கண்டெடுத்த நயங்கள், உணர்ந்த இலக்கிய உண்மைகள், அபூர்வமாக அவர் எழுதிய எண்ண மணிகள் பற்றி எல்லாம் மிகுந்த ஈடுபாட்டோடு பேசினார்.
இவ்விதப் புரவோலங்களை எல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருப்பதோடு, இடைக்கிடை வியப்புரை உதிர்த்து உற்சாகம் ஊட்ட வேண்டிய அவசியமும் ஏற்படும் என்பதனால் தான் கைலாசம் அடிக்கடி பெரிய மனிதர்களை கண்டு பேசச் செல்வதில்லை. பேராசிரியர் பரமசிவத்தைப் பார்ப்பதற்கு இதற்கு முன் அவன் இரண்டு தடவைகள் தான் வந்திருக்கிறான்.
“அப்போதெல்லாம் இந்தத் தடி பேபி கண்ணில் பட்ட தில்லை, ஸ்கூலுக்கு போயிருந்திருக்கும். அல்லது, பாட்டி வீட்டில் “டேரா” போட்டிருந்திருக்கும். இதுதான் நான் இவளைப் பார்க்கும் முதல் தடவை” என்று மனக்குறளி தன் தொழிலைச் செய்தது.
இன்று கூடக் கைலாசம் பேராசிரியர் வீடுதேடி வந்திருக்க மாட்டான். “அன்றொரு நாள் வழியில் சந்தித்த பெரியவர், “என்னப்பா உன்னைப் பார்க்கவே முடியலியே? நம்ம வீட்டுக்கு வாயேன். உனக்காக ஒரு புஸ்தகம் வச்சிருக்கேன். உயர்ந்த இலக்கியம். அருமையான நூல். நீ அவசியம் படிக்கணும்” என்று கூறி அவன் ஆவலைத் தூண்டிவிட்டார். புத்தகம் என்றால் அவனுக்குப் பெரும் பித்து. நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்து ரசிப்பது தான் அவனுடைய வாழ்க்கை லட்சியம்.
புத்தகத்தை வாங்கிச் செல்ல வந்தவனுக்கு எதிர்பாராத காட்சி விருந்தாக விளங்கினாள் பேபி.
“ஸார்வாள் பலப்பல கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அபூர்வமாகச் சில கவிதைகளும் இயற்றியிருக்கலாம். இலக்கிய மணிகளை எல்லாம் தேடிக் கண்டு திரட்டித் தந்திருக்கலாம். ஆயினும் அவை எல்லாம் ஸார்வாள் தயாரித்துள்ள இந்த அழகு ரத்தினத்துக்கு ஈடு ஆக முடியாது. உலவுகின்ற நற்காவியம் இவள் ஜீவனுள்ள மணிக் கவிதை” என்ற ரீதியில் “இலக்கியநயம்” கண்டு ரசித்துக் கொண்டிருந்தது கைலாசத்தின் மனக்குறளி,
பேபியும் அதற்கேற்றபடி தான் நடந்துகொண்டாள். அடுப்பங்கரைப் பக்கம் போவாள். அங்கிருந்து வெளியே வந்து வேறொரு அறைக்குள் புகுவாள். இன்னொரு அறையினுள் சென்று அவன் பார்வையில் படக்கூடிய இடத்தில் நின்று அதையும் இதையும் எடுத்து, எடுத்ததை இருந்த இடத்திலேயே வைத்து ஏதோ பிரமாத வேலை செய்வது போல் காட்டிக் கொண்டாள். ஒரு அறையின் கதவுக்குப் பின் உடல் மறைத்து, முகிலைக் கிழித்தெழும் முழுமதி போல் முகத்தை மட்டும் காட்டுவாள். மற்றொரு சமயம் முகம் மறைத்து உடல் வனப்புகளை மாத்திரம் காட்சிப் பொருளாக்குவாள். தந்தையிடம் எதையாவது அர்த்தமின்றிக் கேட்டு, காரணம் இல்லாமல் சிரித்து, தேவையில்லாமலே பேச்சுக் கொடுத்து, தான் அங்கிருந்ததை சதா உணர்த்திக் கொண்டிருந்தாள். கைலாசம் விடை பெற்றுப் புறப்பட்டபோது, முகத்தில் வாட்டம் காட்டி முன்வந்தாள்.
“அடிக்கடி வா, கைலாசம். வராமலே இருந்துவிடப் போகிறே!” என்று பரமசிவம் வற்புறுத்திச் சொன்னதும், மகளின் முகத்தில் திருப்தி ஊர்ந்தது. அதே அழைப்பை அவள் விழிகள் சுமந்து படபடத்தன.
“வாரேன் ஸார், வராமலென்ன” என்று அவன் சொன்னதும் அவள் குதூகலித்தாள். குதித்தோடி மறைந்தாள்.
அவனை வழியனுப்பிவிட்டு “குழந்தையோடு” பேசி மகிழ்வதற்காகப் பரமசிவம் உள்ளே போனார். நல்லகுழந்தை வந்து சேர்ந்தது, பச்சைக் குழந்தை! சின்னப் பாப்பா!” என்று கைலாச மனக்குறளி கனைத்துக் கொண்டது.
கைலாசம் இரவலாக வாங்கிவந்த புத்தகத்தைத் திரும்பக் கொடுப்பதற்காக ஒருநாள் பேராசிரியர் வீடு தேடிச் சென்றான். அன்று முன்கதவு சும்மா தான் அடைக்கப்பட்டிருந்தது. அவன் கைவைத்துத் தள்ளியதுமே அது திறந்துகொண்டது. உள்ளே அடி எடுத்து வைத்ததும் அவன் “ஆகா, அற்புதம்!” என்று வியக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
முன் அறையில் பேபி குதித்து ஆடிக் கொண்டிருந்தாள். வெறுமனே அல்ல. கைகளில் ஒரு நூல் கயிற்றைப் பற்றி, அதைத் தலைக்கு மேலும் பாதங்களின் கீழுமாகச் சுற்றிச் சுழற்றி, கயிற்றில் கால்கள் சிக்கிவிடாதபடி சாமர்த்தியமாகத் தாவித்தாவி “ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருந்தாள். தன்னந் தனியாகத்தான். அந்த ஆடலில் அவளுக்கு நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு என்பதை அவளது ஒவ்வொரு துள்ளலும் நிரூபித்தது.
கைலாசம் கதவைத் திறந்துகொண்டு பிரவேசித்த போது, பேபியின் பின்புறத் தோற்றமே அவன் பார்வையில் பட்டது. அதுவும் கண்டு களிக்க வேண்டிய இனிய காட்சியாகத் தான் இருந்தது. அதை ரசித்தவாறே அவன் மெளனமாய் நின்றான்.
அவள் சடக்கென்று துள்ளித் திரும்பினாள். அவளது பாவாடைச் சுழற்சியும், பின்னலின் துவள்தலும், உடலும் குதிப்பும் அவனை மகிழ்வித்தன. அப்பொழுதுதான் அங்கே நின்று தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் கைலாசத்தை பேபி பார்த்தாள். அவ்வளவுதான். கயிற்றுச் சுழற்சியின் லயம் கெட்டு விட்டது. கயிறு கால்களில் சிக்கியது. அவள் முகம் செக்கச் சிவந்தது.
“மன்னிக்கணும்” என்று வார்த்தையை மென்றான் கைலாசம். “ஸார்வாளைப் பார்த்து இந்தப் புத்தகத்தைக் கொடுக்கலாம் என்று வந்தேன்…..”
தலையை நிமிர்த்தாமல், கண்ணின் கருமணிகளை விழிக்கடையில் நிறுத்தி, அப்பா இல்லை. எங்கோ வெளியே போயிருக்கிறாங்க. வர நேரமாகும்” என்று அறிவிப்புச் செய்தாள் குமரி.
“அப்படியானால் ஸார் வந்ததும் இதைக் கொடுத்து விடுங்கள்” என்று கையிலிருந்த புத்தகத்தை அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு அவன் வேகமாக வெளியேறினான். தெருக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு நடந்தான்.
சில அடி தூரம் சென்றதும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது. அந்தத் தூண்டுதலுக்கு இணங்கியதால் நஷ்டம் ஏற்பட்வில்லைதான்! அவன் திரும்பி நோக்கிய போது, வாசல்படியில் நின்று முன்னால் வளைந்து எட்டிப் பார்த்த பேபியின் தரிசனம் அவனுக்குக் கிட்டியது.
“மனித மனசுக்கும் எலெக்ட்ரிக் தனம் உண்டு. ஒரு மனம் தீவிரமாக எண்ணுகிறபோது, அந்த எண்ணம் சம்பந்தப்பட்ட வரை பாதிக்கிறது. அவர் திரும்பிப் பார்க்கமாட்டாரா என்று பேபி தீவிரமாக எண்ணியிருப்பாள். அது என்னைத் தொட்டு “ஷாக்” எழுப்பியிருக்கும். அதன் விளைவுதான் நான் திரும்பி நோக்கியது” என்று அவன் மனம் “விஞ்ஞான ரீதியான விளக்கம்” வரைந்து மகிழ்வுற்றது.
அவன் திரும்பிப் பார்த்ததில் ஆனந்தம் அடைந்த பேபி முகத்தைச் சிரிப்பால் ஒளிப்படுத்திக் காட்டிவிட்டு உள்ளே இழுத்துக்கொண்டாள்.
இளமையும் இனிமையும் கலந்த உருவம் கண்ணுக்குக் குளுமை. எழில் பெற்ற இளமை சும்மா நின்றாலே இனிய காட்சிதான். அது வளைந்தும் அசைந்தும் துள்ளியும் குதித்தும் ஆடுகிறபோது கண்கள் கவிதை – கலை – ஒவியம் எல்லாவற்றையும் பருகிக் களிக்க முடிகிறது. இதற்கு பேபி நல்ல சாட்சி” என்று கைலாச மனக்குறளி பேசியது. . அதன் மண்டையில் தட்டி அதை அடக்க வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு எழவே இல்லை.
புத்தகம் கொடுக்கப்பட்டதைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் மறுநாள் பேராசிரியர் வீட்டுக்குப் பேரனான். புன்முறுவலோடு எதிர்கொண்டழைத்த பேபி “எனக்குத் தெரியும்” என்று வரவேற்பு கூறினிள்.
“என்ன தெரியும்?” என்று, விளங்காதவனாய் அவன் விசாரித்தான்.
“இன்று நீங்கள் வருவீர்கள் என்று!” என நீட்டினாள் அவள்.
”எப்படித் தெரிந்ததோ?”
“அது எப்படியோ தெரிந்தது! என் மனசு எனக்குச் சொல்லிற்று என்று வைத்துக் கொள்ளுங்களேன்!” எனக் கூறிவிட்டுக் “கலகல”வெனச் சிரித்தாள் ஒயிலி. “உங்களிடம் ஒன்று கேட்பேன். நீங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லணும். பொய் சொல்லப்படாது. மனசில் பட்டதை மறைக்கக் கூடாது. ஊங்? என்ன நான் சொல்றது? சரியா?” என்று நீட்டல் – குலுக்கல் – தலையசைப்பு – கை அசைப்புகளோடு பேசித் தீர்த்தாள்.
“ஐயோ, நான் ஒரு சித்திரக்காரனாக இல்லையே! அந்தத் திறமை எனக்கு இருக்குமானால், எவ்வளவோ அருமையான ஒவியங்கள் தீட்டலாமே” என்று மனசாற வருந்தினான் அவன்.
“என்ன, ஒண்ணும் சொல்லமாட்டீர்களா?” என்று அவள் வருத்தமாகக் கேட்டாள்.
“சொல்கிறேன். அவசியம் சொல்கிறேன்” என அவன் உறுதி கூறினான்.
இருப்பினும் அவள் தயங்கினாள். பிறகு துணிந்துவிட்டாள். “நேற்று நான் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்தீர் களே? உங்களுக்கு என்ன தோணிச்சு?” என்று கேட்டாள்.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லுவது என்று புரியாமல் குழம்பினான்.
“எனக்குத்தான் தெரியுமே! நீங்கள் சொல்லமாட்டீர்கள். தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கிற பொண்ணு இப்படிக் குதித்து ஆடுது பாரேன்னுதான் நினைச்சிருப்பீங்க. எருமை மாட்டுக்கு “ஸ்கிப்பிங்” என்ன வாழுதுன்னு உங்க மனசு கேட்டிருக்கும்….”
புலம்பும் குரலில் பேசினாள் அவள். “ஐயோ ஐயோ!” எனப் பதறினான்”நான் அப்படி ஒண்ணும் நினைக்கலே, ஆமா” என்றான்.
“பின்னே? நினைச்சதைச் சொல்லுங்களேன். ஏன் தயங்குகிறீர்கள்?” என்று அவள் சிணுங்கினாள்.
கைலாசம் அவளை ஒரு கணம் பார்த்தான். லேசாகச் சிரித்தான், “அழகான பெண் ஆடிக் குதிப்பது அருமையாகத் தான் இருக்கிறது. பேபி நாட்டியம் ஆடினால் இன்னும் ஜோராக இருக்கும் என்றுதான் எண்ணினேன்.””
ஒய்யாரப் பார்வை ஒன்றை அவன் மீது பதித்துவிட்டு உள்ளே ஓடினாள் பேபி. பின் பக்கமிருந்து வந்துகொண்டிருந்த பரமசிவத்தின் மேல் மோதிக் கொள்ளத் தெரிந்தாள்.
“என்னம்மா இது? ஏன் இந்த ஓட்டம்? கைலாசத்தைப் பார்த்து விட்டா இப்படி ஓடி வருகிறே? பயமா இல்லை, வெட்கமா? என்ன கண்ணு?” என்று கொஞ்சினார் அவர்.
“போ அப்பா!” எனக் குழறிவிட்டு பேபி ஒரு அறைக்குள் மறைந்து கொண்டாள்.
பேபி சரியான விளையாட்டுப்பிள்ளை, வெறும் குழந்தை என்கிற விஷயமாகப் பத்து நிமிஷம் சுவாரஸ்யமாகப் பேசினார் பேராசிரியர். பிறகு இலக்கிய விஷயங்களில் சஞ்சரிக்கலானார்.
அறையினுள் மறைந்த பேபி “பூரண கிரகணம்” ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எட்டி எட்டிப் பார்த்தும், எதிர் வந்து நின்றும், ஏதேனும் காரணம் கற்பித்துக் கொண்டு அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தும் கைலாசத்தின் மீது இனிய நோக்கு உகுத்து அவன் பார்வையைப் பெற்று மகிழ்வுற்றாள்.
அன்று மட்டுமல்ல. அவன் அவர்கள் வீடு தேடி வந்த ஒவ்வொரு சமயத்திலும்தான். கைலாசமும் அடிக்கடி அங்கு வரலானான். பேராசிரியரோடு உரையாடிக் கொண்டிருப்பதால் எவ்வளவோ லாபம் கிட்டுகிறது; புதிய புதிய விஷயங்களை அறிய முடிகிறது; பயனுள்ள பொழுது போக்கு என்றெல்லாம் அவன் நெஞ்சொடு. கூறிக் கொள்வதை வழக்கமாக்கினான். அங்கே அவனை அவ்விதம் இழுக்கும் இனிய காந்தம் ஒன்று உலவுகிறது எனும் உண்மையை அவன் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.
தமது அறிவொளியாலும், பேச்சுத்திறத்தாலும் வசீகரிக்கப் பட்டே அவன் அடிக்கடி வருகிறான் என்றுதான் பேராசிரியர் நம்பினார். ஆகவே சுவையாகச் சம்பாஷித்தார். பேச்சோடு பேச்சாக, “பேபி அப்படிச் செய்தாள். இதைச் சொன்னாள். விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டாள்” என்றும் பெருமையோடு அறிவிப்பார்.
ஸார்வாள் இலக்கியக் கதாபாத்திரங்களின் குணாதிசயங் களையும், உணர்வுக் குழப்பங்களையும், உளப் போராட்டங் களையும், மிகத் தெளிவாகப் புரிந்து, நுணுக்கமாக ஆராய்ந்து, அலசிப் பிழிந்து விவரிக்கிறார்கள். ஆனால் தன் மகளின் உள்ளத்தை உணரும் திறமை பெறவில்லை என்றே தோன்று கிறது. ஸார்வாளின் அறிவையும் ஆராய்ச்சித் திறமையையும் தந்தையின் பாசம் எனும் ஒட்டடை மூடிக்கொண்டது போலும்! என்று கைலாசத்தின் மனக்குறளி எடை போட்டது ஒரு சமயம்.
அது சரியான கணிப்புதான் என்றே காலம் உறுதிப் படுத்தியது.
கைலாசத்துக்கு வழக்கமாகப் பற்றுகிற ஒரு கோளாறு இப்பொழுதும் திடீரென்று ஏற்பட்டது. “மனசு சரியில்லை” எனும் நோய்தான் அது. அகத்திலும் புறத்திலும் நிலவுகிற வரட்சியால் தூண்டப்படும் அந்த வியாதிக்கு அவன் அறிந்த மாற்று “ஊர் வழி போவது”ம், பல மாத காலம் வெளியூரிலேயே தங்குவதுமாகும்.
இம்முறையும் அவ்விதமே திட்டமிட்டு, தனது எண்ணத் தைப் பேராசிரியரிடம் தெரிவித்து விட்டு அவன் வெளியேறி னான். வாடிய முகத்தோடு ஏக்கப் பார்வையை அவன் பக்கம் ஏவி நின்ற பேபியின் தோற்றம் கைலாசத்தின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்காமல் இல்லை. எனினும் அவன் அதைப் பெரிது படுத்தவில்லை.
பிறகும், பிரயாண முன்னேற்பாடுகளில் முனைந்திருந்த அவன் உள்ளத்தில் பேபியின் நினைவு மேலோங்கி நிற்க வில்லை. ஆகவே நீல வானத்திலிருந்து நேராக இறங்கி வந்த தேவ கன்னிகையைப் போல அவள் வந்து நின்றதும் – கைலாசம் சற்று அயர்ந்துதான் போனான். இவளை விட்டு விட்டு எப்படிப் போவதாம்? எங்கே போவதாம்?” என்று முனங்க ஆரம்பித்தது அவன் மனக்குறளி – இலேசாக! அவன் புறப்படும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக பேபி வந்து நின்றதும் கைலாசம் திகைப்புற்றான். கையில் ஒரு பையுடன் காட்சி தந்தவளைக் கண்டதும், “எங்கே கிளம்பிவிட்டாய் பேபி? பஜாருக்கா?” என்று கேட்டு வைத்தான்.
“ஊகும்” என்று தலையசைத்த பேபியின் புரளும் விழிகள் பேசிய பாஷை அவனுக்கு உணர்வுக் கிளர்ச்சி ஊட்டுவதாகத் தானிருந்தது. அவள் தரையைப் பார்த்தாள். மோட்டைப் பார்த்தாள். நாணியும் கோணியும் நேராகவும் பார்த்தாள்.
“என்ன பேபி, என்ன விஷயம்?” என்று துடிப்புடன் கேட்டான் அவன்.
அவள் மென்னகை புரிந்தாள். நானும் வருவேன்” என்றாள்.
ஆச்சரியத்தோடு அவன் “எங்கே?” என்று விசாரித்தான்.
“உங்களோடு நானும் வருவேன். உங்க கூடவே வருவேன்” என்று சிறுபிள்ளை மாதிரி, பிடிவாதக் குரலில் பேசினாள் அவள்.
“இதென்னடா இது விளையாடுறியா பேபி?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் கைலாசம். நான் எங்கோ போகிறேன். எப்படி எப்படியோ அலைவேன். நீயாவது என் கூட வருகிற தாவது!.. இன்னும் எவ்வளவோ சொல்லத் தவித்தான் அவன்.
“எங்கே போனாலும் சரி. நானும் உங்களோடு வருவேன். நீங்கள் இல்லாமல் இங்கு என்னால் இருக்க முடியாது” என்று பேபி அடம் பிடித்தாள்.
“சரி. நான் எங்கும் போகலே; இங்கேயே இருந்துவிடு கிறேன்னு வை. அப்புறம்?
“நானும் இருப்பேன். உங்களோடு இங்கேயே இருந்து விடுகிறேனே?” என்று ஆர்வமும் ஆசையும் துளும்பப் பதில் உரைத்தாள் குமரி. நீள் இமைகள் படபடத்த நெடுங் கண்களிலும் அவ்வுணர்வுகள் ததும்பி நின்றன.
“இதேதடா பெரிய வம்பாகப் போச்சு” என்று எண்ணிப் பெரு மூச்செறிந்தான் அவன். எனினும் உள்ளத்தில் மகிழ்வு பொங்கிக் கிளுகிளுப்பு உண்டாக்காமல் இல்லை.
“பேபி” என்று பேச்செடுத்தான் அவன்.
“என் பெயர் பத்மா. நீங்கள் என்னை பேபி என்று கூப்பிடக் கூடாது!” என்று கட்டளையிட்டாள் அவள்.
அவள் தந்தையை ஏமாற்றுவது, நம்பிக்கைத் துரோகம் செய்வது, தன் மீது படியக் கூடிய குற்றம் பற்றி எல்லாம் லெக்சரடித்தான் கைலாசம். அவன் பெரும் பேச்சு எதுவும் அவள் திடமனசில் சிறு கீறல் கூட ஏற்படுத்தவில்லை.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போகாவிட்டால், நீங்கள் பிரயாணம் செய்கிற ரயிலிலேயே விழுந்து நான் செத்துப் போவேன். நிச்சயமாக அப்படித்தான் செய்வேன். தனியாக, வீட்டுக்குத் திரும்பவே மாட்டேன்” என்று, குரலில் உறுதி தொனிக்கப் பேசினாள் அவள்.
நிச்சயமாக அவள் அவ்வாறே செய்து முடிப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம் ஊசலிட்டது.
“உங்கள் மீது எனக்கு ஆசை. உங்களைப் பார்த்த தினத்தி லிருந்தே உங்கள் மேல் எனக்கு ஆசை ஏற்பட்டு விட்டது என்று உணர்ச்சி நிறைந்த குரலில் சொன்ன பேபி, அவன் அருகில் சென்றாள். அவன் தோள் மீது கைகளை இணைத்துத்
தலையையும் சாய்த்தாள்.
மேலும் அவளை எதிர்த்துப்பேசவோ, தட்டி விலக்கவோ அவனிடம் வலு இல்லை. “வாழ்க்கையின் வறட்சி இந்தக் குளிர் பூஞ்சுனையினால் நீங்கிவிடும். புதுமலர்ச்சிப் பிறக்கும்” என்று முனங்கியது அவன் மனக்குறளி.
அவள் இடுப்பில் கைவைத்து அவளை இன்னும் அருகில் இழுத்தபடி, ஆசைப் பார்வையை அவள் முகத்தில் பதித்து அவன் அன்போடு கேட்டான்: “சரி பத்மா! உன் அப்பா என்ன சொல்வார்? அம்மா கோபிக்க மாட்டாளா?”
“ஊகுங்” என்று தலையசைத்தாள் அழகி. “என் அப்பா எனது இஷ்டத்துக்கு எதிரே நிற்கமாட்டார். அம்மா கோபித்தால் என்ன? பிறகு இணங்கி விடுவாள்!”
“அப்போ புறப்படு” என்றான் கைலாசம்.
“ரயிலுக்குத் தானே?” என்று கேட்ட பேபி, ஆசைத் துடிப்போடு அவன் முகத்தை, நிமிர்ந்த தன்முகம் நோக்கித் தாழ இழுத்தாள்.
ஒரு கணத்துக்குப் பிறகு தான் அவன் பதில் சொல்ல முடிந்தது. “ஹூஹூம். உன் அப்பாவிடம் தான். நாம் இருவரும் சேர்ந்து நமது கருத்தை அறிவித்தால் அவர் நம் தவறை மன்னித்து விடுவார். நமது எண்ணத்தை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு பாராட்டினாலும் பாராட்டுவார். பேராசிரியர் ரொம்ப நல்லவர்” என்றான்.
பரமசிவம் கைலாசத்தின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்க வில்லைதான். முதலில் அவர் திகைப்படைந்தார். பிறகு திருப்தியே கொண்டார். “பேபி எனக்கு வீண் சிரமம் வைக்காமல் நீயாகவே உன் வருங்காலத்துக்கு நல்ல வழி வகுத்துக் கொண்டாய் போலும்! ரொம்ப சந்தோஷம் என்றார். இது வந்து எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்றால்..” என்று இலக்கிய நயம் எதையோ எடுத்துச் சொல்லி விளக்கத் தவித்தார் அவர்.
அவருடைய பேச்சு இப்போது கைலாசத்துக்கு வெறும் போரடிப்பாகத் தோன்ற-வில்லை. அது பெரும் தொண தொணப்பாகவே இருந்தாலும் கூட அதை ஆனந்தமாகக் கேட்டு ரசிக்கத் தயாராக இருந்தான் அவன். கையை அன்போடு பிடித்துக்கொண்டு பேபி அருகிலேயே நிற்கிற போது அவனுக்கு எல்லாம் இன்பமயமாகத் தோன்றாமல் வேறு எப்படி இருக்குமாம்?
– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.