துலாபாரம் தோற்காதோ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 2,640 
 

பனிக்குடம் உடைந்தும் கூட நந்தினிக்கு பிரசவ வலி வராததால், இடுப்பு வலியை வரவழைப்பதற்கு அவளுக்கு ஊசிப் போடப்பட்டது. நந்தினி என்னவோ மிகவும் தைரியத்தோடும் நம்பிக்கையோடும்தான் இருந்தாள். ஆனால் அவளது கணவன் அர்ஜீன்தான் ரொம்ப பயந்துப் போயிருந்தான். தன் கையை இறுகப் பற்றிக் கொண்டு தன்னருகிலேயே உட்கார்ந்திருந்தவனை பார்த்த நந்தினிக்கு ஒருபுறம் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தாலும் மறுபுறம் அவன் மீது பரிதாபம் உண்டான அதே சமயத்தில் தன்னைத் தானே வெறுத்தும் கொண்டாள்.

என்னங்க எங்க வீட்டுக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னீங்களா? அம்மாவும் அப்பாவும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டாங்களா? என கேட்ட மனைவிக்கு பதில் கூறாமல் அர்ஜீன் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான். கணவனின் அமைதி நந்தியின் கண்களில் நீரை வரவழைத்தது. மனைவியின் விழியிலிருந்து பொங்கிய கண்ணீரைக் கண்டதும் அர்ஜீன் துடித்துடித்துப் போனான் ‘என்னாச்சும்மா வலிக்கிதா”? இரு நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் என சொன்னவன் பதறியடித்துக் கொண்டு எழுந்துப் போக போனப் போது அவனது கரத்தை பலமாக இழுத்து பிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டவள் அவன் தோள்பட்டையில் தலைசாய்த்து கண்களை மூடிக் கொண்டாள். நந்தினியின் கண்கள் மூடியிருந்தாலும் அவளது உள்ளம் தன் கடந்தக் காலத்தை அலசிக் கொண்டுதான் இருந்தது.
தோழிகளும், ஆசிரியர்களும், தலைமையாசிரியரும் நந்தினியை சூழ்ந்துக் கொண்டு அவளுக்கு வாழ்த்து மழையை பொழிந்துக் கொண்டுயிருந்தார்கள். உன்னால இந்த பள்ளிக்கூடத்துக்கே பெருமைம்மா. டிவி, நியூஷ் பேப்பருன்னு எல்லாத்துலயும் உன்னைத்தான் ரொம்ப புகழ்ந்துப் பேசுறாங்க. கவெர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்ச ஒரு பொண்ணு மாநிலத்துல முதல் ஆளா அதுவும் எல்லாப் பாடத்துலயும் செண்டம் எடுத்து பாஸ் பண்ணியிருக்காலேன்னு எல்லாரும் ரொம்பவும் ஆச்சரியப்பட்டு போறாங்க. உன்னால இனி நம்ம பள்ளிக்கூடத்தோட வளர்ச்சி இரட்டிப்பா அதிகரிக்கப் போகுது என பெருமையாக பேசிய தலைமையாசிரியரின் காலில் விழுந்து வணங்கிய நந்தினி அவருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தாள்.

ரொம்ப சந்தோஷமாயிருக்கு நந்தினி. நீ கண்டிப்பா ஸ்டேட் பஸ்ட் வருவேன்னு எனக்கு தெரியும் ஆனால் எல்லாப் பாடத்துலயும் செண்டம் வாங்குவேன்னு நான் நெனச்சேப் பார்க்கலடி. அந்த சரஸ்வதி தேவிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குப் போலயே! என முகம் நிறைய சந்தோஷத்தோடு கேலியாக கேட்ட தோழி ஜனனியை நந்தினி வெறுமையாக நிமிர்ந்துப் பார்த்தாள். சரி அடுத்து என்னப் படிக்கப் போற? டீச்சர், இஞ்சினியர், டாக்டர் அட்லீஸ்ட் நர்ஸ்? என கேட்ட தோழிக்கு நந்தினி ஒரு வெற்றுப் புன்னகையை பரிசளித்தாள். சரியான அழுத்தக்காரிடி நீ. எதையுமே வாயை திறந்து சொல்லமாட்டேல!
ஜனனியின் வீடும், நந்தினியின் வீடும் பக்கத்து பக்கத்து தெருவில் இருப்பதால், தெரு முக்கு வரை தோழிகள் இருவரும் சேர்ந்துதான் வீட்டிற்கு வருவார்கள். வழி நெடுகிலும் ஜனனி ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள். அவளது வார்த்தைகளை நந்தினி காதில் வாங்கிக் கொண்டாளோ இல்லையோ ஆனால் அவளது மனம் தன் வீட்டில் அடுத்து என்ன நிகழ போகிறதோ என்பதை எண்ணி தவித்துக் கொண்டிருந்தது.

இரவில் படுக்கையில் விழுந்த நந்தினி தலையணையை தன் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள். பதின் மூன்று வயதான நிர்மலாவிற்கு தன் உடன் பிறந்தவளின் கண்ணீரும் அதற்குண்டான காரணமும் புரிந்தும் தெரிந்தும்தான் இருந்தது. ஆனாலும் பாவம் அவளால் மட்டும் என்ன செய்ய முடியும்? இன்று தன் அக்காவிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளைக்கு நமக்கும் உண்டாகத்தானே போகிறது என நினைத்தவளின் கண்களிலிருந்தும் கண்ணீர் கொட்டியது. சுயநலத்தின் மறு உருவான தங்கள் பெற்றோர்களின் சுயரூபத்தை இன்றுதான் இந்த இரண்டு யுவதிகளும் முழுதாக புரிந்துக் கொண்டனர்.

‘இங்க பாருடி பணத்தை தண்ணி மாதிரி செலவலிச்சு காலேசுக்கெல்லாம் அனுப்பி உன்னை மேற்கொண்டு எங்களால படிக்க வைக்க முடியாது”. ஏதோ கெவர்மெண்ட் பள்ளிக் கூடத்துல எல்லாம் இலவசமா கெடச்சதுனால உன்னை இம்புட்டு தூரம் படிக்கவிட்டோம். ஒருத்தனைக் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தப் போற உனக்கு இம்புட்டு படிப்பு போதும். உன்னோட பிரண்டு சனனியோட அப்பா டவுன்ல சவுளிக் கடைதானே வெச்சிருக்காரு? நாளையில இருந்து நீ அவர் கடைக்கே வேலைக்கு போயிடு. உங்கப்பாவே நாளைக்கு அந்த கடைக்கு கூட்டிட்டுப் போயி உன்னை அங்க வேலைக்கு சேர்த்துவிடுறேன்னு சொல்லிட்டாரு. மேலப் படிக்கனுன்ற எண்ணத்தெல்லாம் ஏறக்கட்டி வச்சிட்டு ஒழுக்க அங்க வேலைக்குப் போற வழியைப் பாரு. உங்கப்பா சம்பாதிச்சுக் கொண்டு வர பணம் வீட்டு செலவுக்கே பத்த மாட்டுது. நீ ஒரு வேலைக்கு போனேனா உன் அண்ணணோடப் படிப்புக்கு ஒத்தாசையாயிருக்கும் என சொன்னவளை நந்தினி வெறுப்பாகப் பார்த்தாள்.

என்னாடி அப்புடி முறைச்சுப் பார்க்குற? அவே ஆம்பள புள்ளை. அவே நாளு எழுத்துப் படிச்சாதானே நாளைக்கு உங்க ரெண்டு பேத்துக்கும் சீர்செனத்தி செஞ்சு நகைப் போட்டு ஒருத்தே கையில புடுச்சுக் குடுக்க முடியும். அதோட எங்க கடைசி காலம் வரைக்கும் எங்களை வச்சு கஞ்சி ஊத்தப் போறதும் அவன்தானே! போடிப் போ சிலை மாதிரி நிக்காம போய் காலா காத்துல படுத்து தூங்கு. காலையில எழுந்திருச்சு வேலைக்கு போகணும்மில்லா என்றவள் முத்தியை உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்துவிட்டாள்.

‘ஏய் காளியப்பா உனக்கே இது கொஞ்சமாவது நியாயமாபடுதா”? உன்னாட பொண்ணு நம்ம மாவட்டதுலயே முதல் ஆளா பாஸாகியிருக்கு. அதை மேற்கொண்டு காலேஜ்ல சேர்த்து படிப்ப வைக்கா… நாளைக்கு ஒருத்தனைக் கட்டிக்கிட்டு அவேன் வீட்ல போய் உட்கார்ந்து சாப்பிடதானே போகுது? இதுக்கு எதுக்குண்ணே படிப்பு! என்னய்யா பெத்த அப்பே நீயே இப்படி புரியாம பேசுறியே? இந்த காலத்துல பொண்ணுக்குதான்யா படிப்பு ரொம்ப முக்கியம். நாளைக்கு போற எடத்துல அது வாழ்க்கை நல்லாயிருந்துட்டா சந்தோஷம்தான். ஆனால்… இந்த அ ஆவனவெல்லாம் வேணாண்ணே. உங்க கடையில என் பொண்ண வேலைக்கு சேத்துக்க விரும்பம் இல்லேன்னா சொல்லுங்க நான் வேற கடையைப் பார்த்துக்கிறேன் என முகத்தில் அடிதாற் போல பேசுபவனிடம் இனி மேற்கொண்டு பேசுவதில் எந்த பயனும் இல்லையென புரிந்துக் கொண்ட சதாசிவம் தன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சேலஸ் பெண்ணின் பெயரை சொல்லி அழைத்தார். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு தன் முன்னால் நின்றுக் கொண்டிருந்த நந்தினியை சதாசிவத்தின் பார்வை பரிதாபமாக உரசியது.

இந்;த பொண்ணை கூட்டிட்டுப் போய் சேல்ஸ் செக்சன்ல நிற்க வச்சு வேலை சொல்லிக்குடும்மா என சொல்லிவிட்டு காளியப்பனிடம் கடமைக்கு தலையை அசைத்துவிட்டு தன் வேலையில் சதாசிவம் மூழ்கிவிட்டார். வந்த காரியம் முடித்துவிட்ட திருப்தியோடு காளியப்பனும் அந்த இடத்தை காலி செய்தான்.

சதாசிவத்தின் ஜவுளிக்கடையில் நந்தினி வேலைக்கு சேர்ந்து முப்பது நாட்கள் கடந்திருந்தது. கடை ஊழியர்கள் எல்லோருக்கும் சம்பளத்தை எண்ணிக் கொடுத்தவர் நந்தினியை மட்டும் காக்க வைத்தார்.
இங்க பாரும்மா உங்கப்பே முட்டாளா? இல்லை சுயநலவாதியான்னு எனக்கு தெரியல. ஆனால் நீ நல்லா படிக்கிறப் பொண்ணு. உன்னோட வாழ்க்கை நல்லாயிருக்கனுன்னு நான் நெனைக்கிறேன். எனக்கு நீயும் ஜனனியும் வேற வேற இல்லம்மா. இந்;தா இந்த பாம்ல கையெழுத்துப் போடு என்றவரை அவள் புரியாமல் பார்த்தாள்.

அது தொலைத்தூரக் கல்விக்கான விண்ணப்ப படிவம் என்பது புரிந்து போனதும் நந்தினியின் விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘அட என்னம்மா இப்போ எதுக்கு அழகுற? மொதல்ல கண்ணைத் தொட. உன் அப்பேன்கிட்ட உனக்கு சம்பளம் ஐந்தாயிரமுன்னு சொல்லியிருக்கேன். ஆனால் நான் உனக்கு எட்டாயிரம் ரூபாய் சம்பளமா தரேன். நீ ஐந்தாயிரத்தை மட்டும் உங்க வீட்ல குடு. மிச்ச மூணாயிரத்தை உன் படிப்பு செலவுக்கு வச்சுக்கோ. அப்புறம் நீ கணக்குல புலியாம்மில்ல! ஜனனி சொன்னா. சன்னதி தெருவுல கோவிந்தப்பன்னு ஒருத்தர் இருக்காரே உனக்கு அவரை தெரியும்மில்ல? அவரோட ரெண்டு பிள்ளைக்களுக்கும் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு டியூசன் டீச்சர் வேணுன்னு சொல்லியிருந்தாரு.

அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் டியூசன் எடுத்தினா எப்பிடியும் குறைஞ்சது ரெண்டாயிரம்மாவது கெடைக்கும். அதையும் உன் படிப்பு செலவுக்கே வச்சுக்கோ. அதுப்போக முடிஞ்சளவுக்கு நானும் என்னால முடிஞ்ச உதவியப் பண்றேன்… என சதாசிவம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நந்தினி அவரது காலில் சரணாக்கதியடைந்தாள்.

‘பதறிப் போனார் சதாசிவம்” அட என்னம்மா நீ? காலிலேல்லா விழுந்துக்கிட்டு இருக்க. எழுந்திரி முதல்ல எழுந்திரிம்மா. ஒரு பொண்ணுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்மா. அது உங்கப்பனுக்கு புரியல. சரிவிடு. படிப்பு மட்டும் கையிலயிருந்தா எந்த பொண்ணும் எப்பயும் யார்கிட்டயும் கைக்கட்டியோ தலைக்குனிஞ்சோ நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. அது கட்டின புருசனாயிருந்தாலும்.
தன் தோழியின் தந்தை சொன்ன வார்த்தை நந்தினியின் நெஞ்சில் விதையாக விழுந்தது. சதாசிவத்தின் உதவியோடு வீட்டிற்கு தெரியாமலயே நந்தினி தன் படிப்பை முடித்தாள். ஓடவே அவளது கல்யாணத்திற்கும் நாள் குறிக்கப்பட்டது.

என்னங்க திடீர்ன்னு நந்தினிக்கு கல்யாண ஏற்பாடு பண்றீங்க? காசுப் பணத்துக்கு என்னப்பண்றது. ‘அட கூறுக்கெட்டவளே” இது நம்மளுக்கு கெடச்ச நல்ல வாய்ப்புடி. என்னங்க சொல்றீங்க ஒன்னும் புரியலயே!. மாப்பிள்ளை பையனுக்கு அப்பா அம்மான்னு யாரும் கெடையாதாம். வளர்ந்து படிசத்தெல்லாம் அனாதை ஆசிரமத்துலதானாம். பொண்ணுக்கு சீர் செனத்தின்னு பையன் பெரிசா எதுவும் எதிர்ப்பார்க்கல. அதுனால எல்லாம் நம்ம இஷ்டம்தான். நாளாஞ்சு பவுன் மட்டும் நகைப் போடுவோம். ஒரு சின்ன சத்திரமா பார்த்து கல்யாணத்தை முடிச்சு மொதல்ல மூத்தவளை இங்கிருந்து அனுப்புற வழியை பார்க்கலாம். அதுக்கடுத்து உள்ளவளுக்கு இன்னும் வயசுயிருக்கில்ல. அதை அப்புறம் பார்த்துக்கலாம்.

அடிமாட்டை விலைப் பேசி அனுப்புவதுப் போல தான் பெற்ற பெண் பிள்ளையை துச்சமாக நினைத்து தாயும் தகப்பனும் பேசிக் கொண்டிருந்தவளைகளை நந்தினி சத்தமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போதும் கூட அவள் வாயை திறந்து ஒன்றும் பேசவில்லை அமைதியாகவேயிருந்தாள்.

நந்தினியின் கல்யாண நாளும் வந்தது. அர்ஜீன் கட்டிய மங்கல நாணை நந்தினி மனமார ஏற்றுக் கொண்டாள். தனக்கு கிடைக்காத தான் அனுபவிக்காத பாசத்தையும் அன்பையும் அர்ஜீன் மனைவி மீது மழையாக பொழிந்தான். கணவனின் பாசத்திலும் நேசத்திலும் நந்தினி நெகிழ்ந்துப் போனாள்.

கடமை தீர்ந்ததென கட்டிக் கொடுத்த மகளை பார்ப்பதற்காக காளியப்பனும் அஞ்சலையும் ஒரு நாள் நந்தியின் வீட்டிற்கு வந்திருந்தனர். டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மிசின். இன்டக்சன் ஸ்டவ், ஏசி என சகல வசதிகளுடன் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் நந்தினியை பார்த்த அஞ்சலைக்கு பெற்ற மகள் மீதே பொறாமை உண்டானது.

‘பராவாயில்லையே மாப்பிள்ளை உன்னை மகாராணியாட்டம் பார்த்துக்கிறாரு போல”! ம்… நான்தான் இன்னும் அல்லல்பட்டுக்கிட்டு கெடக்கே என ஏழு மாத கர்ப்பிணி மகளை பார்த்து பெரு மூச்சுவிட்டவளின் பேச்சை நந்தினி காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

வராத மாமனாரும் மாமியாரும் வந்திருப்பதால் காலையிலயே அர்ஜீன் மார்க்கெட்டிற்கு போய் மட்டன் சிக்கன் மீன் என வாங்கி கொடுத்துவிட்டுதான் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனான். விருந்து சமைத்து வாழையிலை விரித்து மனதார பெற்றவர்களுக்கு நந்தினி பரிமாறினாள். வயிறுப் புடைக்க தின்ற காளியப்பன் ஒரு மூலையில் போய் கட்டையை கிடத்திவிட, அஞ்சலை மெல்ல பேச்செடுத்தாள்.
வீட்ல ரொம்ப சிரமம்மாயிருக்கு நந்தினி. உன் தம்பி வேற இப்பதே படிப்பை முடிச்சிருக்கா. அவேன் படிப்புக்கு வாங்குன கடனுக்கே இன்னும் வட்டி கட்டி தீர முடியல. அத்தோட உன்னோட கல்யாண கடன் வேற. ரெண்டும் சேந்து எங்க கழுத்தை நெறிக்கிது. மாசம் பொறந்தா கண்ணு முழியே பிதிங்கிப் போகுது. இந்தா அதுக்குள்ள நீயும் வயித்த தள்ளிக்கிட்டு நிக்கிற. உனக்கு செய்யணுன்னு எங்களுக்கு ஆசையிருக்கதான் செய்யிது. ஆனால் கையில காசுயில்லையே.

உன் வீடுயிருக்கிற லட்சனத்தை பார்த்தாலே தெரியுது. மாப்பிள்ளைக்கு பணத்துக்கும் ஒன்னும் பஞ்சமில்ல போலயே! ஆமா… முப்பது வயசு வரைக்கும் ஒண்டி கட்டையா வாழ்ந்த ஆம்பளைக்கு காசு பணத்துக்கு என்ன கொரைச்சலு? அதுனால உன் வளைகாப்பையும் மாப்பிளையைவே நடத்த சொல்லிரு நந்தினி என நெஞ்சுறுத்தாமல் பேசிய பெற்ற தாயை நந்தினி சலனமற்ற பார்வைப் பார்த்தாள்.
மனைவியின் விருப்படி அர்ஜீனே வளைகாப்பை நடத்தினான். அலுவலக நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், நந்தினியின் பெற்றோர் மற்றும் சொந்த பந்தங்கள் ஒன்றுக் கூடி நந்தினியின் இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையலை அடுக்கினர்.

இப்போதும் கூட தன் கைகளில் கலகலத்துக் கொண்டிருந்த வண்ண வண்ண வளையல்களை நந்தினி மென்மையாக வருடிக் கொடுத்தாள். கணவன் அர்ஜீனை தன் கண்களுக்கு ஆழமாக நிறைத்து விழியகலாமல் பார்த்தாள். ‘என்ன நந்து அப்டி பார்க்குற”? உண்மையிலேயே நான் ரொம்ப குடுத்துவச்சவங்க. ஏன் அப்படி சொல்லற! எல்லா பொண்ணுங்களும் தனக்கு அன்பான அழகானவன் புருசனா வரனுன்னு நெனைப்பாங்க. அத்தோடு தன் மேல் முழுமையான அக்கறை கொண்டவனாயிருக்கணுன்னும் நெனைப்பாங்க. ஆனால் பல பேருக்கு அப்படிப்பட்ட கணவன் கிடைக்கிறதே இல்லை. அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணுன்னு என் முகத்துக்கு நேரவே நிறையப் பேர் வாய் வழியா சொல்ல நான் கேட்டுயிருக்கிறேன்…

அப்டி பார்த்தா நானும் புண்ணியம் பண்ணிணவன்தான் என்றவனை நந்தினி விழியகலப் பார்த்தாள். தாயோடு அன்பு என்னனே எனக்கு தெரியாது. அதை முழுமையா என்னை உணர வச்சவள் நீதான் நந்து. நான் இத்தனை வருஷமா எந்த அன்புக்காகவும் பாசத்துக்காகவும் ஏங்கி தவிச்சேனோ அதை எனக்கு திகட்ட திகட்ட தந்தவள் என்னுடைய மனைவியான நீதான் நந்து. உண்மையிலயே நானும்… அர்ஜீன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினிக்கு இடுப்பு வலி வந்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அவள் கதறித்துடித்தாள்.

அன்பு மனைவியின் அழுகை சத்தம் அர்ஜீனின் இதயத்தில் ஒவ்வொரு முறையும் இடியாக இறங்கியது. நிலைக் கொள்ள முடியாமல் அவன் தவித்தவித்துப் போனான். ஒரு வழியாக நந்தினிக்கு குழந்தைகள் பிறந்தன. ஆம் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக நந்தினிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அர்ஜீன் துள்ளிக் குதிக்காத குறைத்தான். ரோஜா குவியலாகயிருந்த பிஞ்சு மழலைகளை அவன் பார்த்து பார்த்து பூரித்துப் போனான்.

நந்தினிக்கு குழந்தைப் பிறந்து இரண்டு நாள் கழித்துதான் அவளுடைய பெற்றோர் அவளைப் பார்ப்பதற்கு ஆஸ்பிட்டலுக்கு வந்தனர். கூடவே நந்தினியின் தங்கை நிர்மலாவும் வந்திருந்தாள்.
ஒரு பெண்ணுக்கு தலைப் பிரசவம் மறு பிறவின்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துல தாயோட அரவணைப்பும் ஆறுதல் வார்த்தைகளும்தான் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெரிய தைரியமே. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையோ நினைப்போ இல்லாமல் அஞ்சலை சர்வ சாதாரணமாக தலைப்பிரசவம் ஆகியிருக்கும் தன் மகளை பார்ப்பதற்கு சாவகாசமாக வந்திருந்தாள். கொஞ்சம் கூட மனதில் சங்கடமோ குறுகுறுப்போயில்லாமல் வந்து நிற்கும் தன் பெற்றவளை நந்தினியின் பார்வை வெறுப்பாக தீண்டியது. கோபத்தில் சட்டெ முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்கள் தங்கையின் மீது பதிந்தது. ஏனோ இன்று அவள் முகம் களையிலந்து போயிருந்தது. பார்வையாலயே நந்தினி தங்கையிடம் என்னவென்று கேட்டாள். அதுதான் தாமதம் உடனே நிர்மலாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொண்டியது. சட்டென சுவற்றுப் பக்கம் திரும்பிக் கொண்டவள் முகத்தை வேக வேகமாக துடைத்துக் கொண்டாள். ம்கூம் ஏதோ நடக்க கூடாத ஒரு சம்பவம் தங்கையின் வாழ்க்கையில் அரங்கேற போவதை நந்தினி புரிந்துக் கொண்டாள்.

‘என்னங்க ஏதோ டெஸ்;ட் எடுக்கணுன்னு டாக்டர் என்னை அப்போவே வர சொன்னாங்க நான் போயிட்டு வந்துறேன்” என்றவளை அர்ஜீன் புரியாமல் பார்த்தான். கணவனுக்கு கண்களாலயே பதில் சொன்னவள் நிர்மலாவை துணைக்கு அழைத்துக் கொண்டு போவதுப் போல அங்கிருந்து அவளை தன்னோடு கூட்டிச் சென்றாள்.

இப்போ சொல்லு நிம்மி என்னாச்சு? ஏன் உன் முகம் ஒரு மாதிரியாயிருக்கு. …… சொல்லுடி உன்னைத்தானே கேக்குறேன்? இப்படி அமைதியா… அக்கா தயவுசெஞ்சு என்னையும் என் வாழ்க்கையையும் எப்படியாவது காப்பாத்துக்கா என சொல்லிவிட்டு நிர்மலா கதறியழுதாள். நந்தினிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏ…ஏய் எ…என்னடி ஆச்சு? எனக்கு ஒன்னும் புரியல. நிர்மலா கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுடி என்னாச்சு? குமுறி அழுதவள் கண்களை அழுத்ததுடைத்துவிட்டு ஒன்றுவிடாமல் தன் உடன்பிறந்தவளிடம் கொட்டித்தீர்த்தாள்.

நிர்மலா சொல்லுவதை கேட்க கேட்க நந்தினிக்கு கோபம் தலைக்கேறியது. அவளது கண்கள் கோபத்தில் கோவைப் பழமாக மாறியது. தான் பச்சை உடம்புக்காரி என்பதைக் கூட மறந்துப் போனவள் வெறிக் கொண்டவளாக வேக வேகமாக நடந்துப் போய் தான் தங்கியிருந்த ஹாஸ்பிட்டல் அறைக் கதவை படாரென திறந்தாள். அந்த சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவளது குழந்தைகளை பயந்துப் போய் வீரிட்டு அழத் தொடங்கின.

தன் மனைவி வந்து நின்ற கோலத்தைப் பார்த்த அர்ஜீனின் மனதையே ஒரு நொடி பயம் கவ்வியது. என்னாச்சு நந்தினி… என கேட்டக வந்த கணவனை பேச்சை காதில் வாங்க மறுத்தவள், உண்மையிலயே நாங்க ரெண்டு பேரும் உங்களுக்குதான் பொறந்தோமா! இல்லை எங்களை குப்பைத் தொட்டியிலயிருந்து ஏதும் தூக்கிட்டு வந்தீங்களா? நந்தினி என்னயிது… நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருங்க. நான் இன்னைக்கு இவுங்ககிட்ட பேசணும். என் மனசுல பல வருசமா அடைக்கி வச்சிருக்கிற கேள்விகளுக்கு இன்னைக்கு இவுங்க ரெண்டு பேரும் பதில் சொல்லணும்.

நந்தினியின் முதுகுக்குப் பின்னால் அழுதப் படி நின்றிருந்த நிர்மலாவை பார்த்தே காளியப்பனும் அஞ்சலையும் புரிந்துக் கொண்டனர் நந்தினியின் கோபத்திற்கு காரணம் என்னவென்பதை. இப்போ எதுக்காகடி இப்டி கத்துற? என்ன உன் குடியா முழுகிப் போச்சு? நானும் கொஞ்சம் ஏமாளியாயிருந்திருந்தா என் குடியும் கண்டிப்பா முழுகிதான் போயிருக்கும். உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கெடையாதா? பொம்பளை பிள்ளைங்க நாங்க உங்களுக்கு அந்தளவுக்கு கேவலமா போயிட்டோமா! பொறந்தது பொம்பளை பிள்ளைன்னு தெரிஞ்ச அப்போவே எங்க கழுத்தை திறுகி எங்களை கொன்னுப் போட்டு இருக்கலாமே. உங்க சந்தோஷத்துக்காக எங்களை பெத்துட்டு எதுக்காக தினம் தினம் இப்படி எங்களை கொல்லுறீங்க?.

ஏய் நிறுத்துடி என்னாடி விட்டா ரொம்பதான் பேசிகிட்டே போற? இப்போ நாங்க என்ன உங்களை கொடுமைப்படுத்திட்டோம். உன் தங்கச்சிக்கு எப்பேர்பட்ட வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கப் போறோன்னு உனக்கு தெரியுமா? அவதே தெரியாதனமா ஏதோ உன்கிட்ட உளறுறான்னா நீயும் எங்ககிட்ட வந்துகிட்டு தாம்தூம்முன்னு குதிச்சு… போதும் நிறுத்துங்க உங்க வெட்டி வியாக்கியானத்தை.
அந்த சொக்கநாதனுக்கு என்ன வயசுன்னு உங்களுக்கு தெரியும்மா? என்ன பெரிய பொல்லாத வயச கண்டுப்பிடிச்சிட்ட? உங்கப்பனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கும் போது எனக்கு பதினஞ்சு வயசுக்கூட ஆகலை. நானும் அந்த வயசுல குடும்பம் நடத்தி உங்க மூணு பேரையும் பெத்துப் போடலயா? நானாவது அப்போ ஏத்த குச்சி மாதிரியிருந்தேன். ஆனா இவளைப் பாரு நல்ல கொழுக்கு மொழுக்குன்னு உனக்கே அக்கா மாதிரிதானேயிருக்கா. அந்த மனுசனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச அவரோட குடும்பம் நடத்தி வருஷத்துக்கு கொறையாம பத்து புள்ளையாது பெத்துப் போடுவா. உன் வேலையை பார்த்துக்கிட்டு பேசாம போன்னு சொன்னவளை நந்தினி அருவெறுப்பாகப் பார்த்தாள்.

அந்த காலமும் இந்த காலமும் ஒன்னா? அப்பிடியே இருந்தாலும் முப்பத்தி ஏழு வயசு எங்க இருக்கு பதினேழு வயசு எங்க இருக்கு? உங்களுக்கு மனசு கொஞ்சம் கூட உறுத்தலையா? வயசு வேணா முன்னப்பின்ன இருக்கலாம். அப்புறம் அந்த மாப்பிள்ளைக்கு எதுல கொறையிருக்கு சொல்லுப் பார்ப்போம். அத்தோட அவரு நம்ம வீட்டோட மொத்த கடனையும் அடைச்சிட்டாரு. அப்புறம் உன் தம்பிக்கு அவரோட சுகர் மில்லுல மேனேசரா வேலையும் போட்டுக்குடுத்துருக்காரு. இப்போ அந்த மில்லோட வரவு செலவு கணக்கு வழக்கெல்லாம் நம்ம கதிரோட உள்ளங்கையிக்குள்ள.
அந்த சொக்கநாதே தம்பியை கட்டிக்கிட்டா காலம் முழுக்க உன் தங்கச்சி எந்த குறையும் இல்லாம மகாராணிப் போல வாழலாம். நீ உள்ளே புகுந்த தயவுசெஞ்சு குட்டையை கொளப்பாதே என கட் அண்ட் ரைட்டா பேசினான் காளியப்பன்.

இந்த கல்யாணம் நடக்காது. நான் நடக்கவும் விடமாட்டேன். மரியாதையா ரெண்டு பேரும் இங்கிருந்து போயிருங்க. இல்லை விசயம் வெவகாரமாயிடும். என்னடி மெரட்டுரியா? இந்த விசயம் சொக்க நாதனுக்கு தெரிஞ்சா என்னாகுன்னு உனக்கு தெரியும்மா? மொதல்ல இந்த விசயம் போலீஷ் ஸ்டேசனுக்கு போச்சுன்னா உங்க ரெண்டு பேருக்கும் என்னாகுன்னு தெரியும்மா? என நந்தினிக் கேட்;டதும் காளியப்பனும் அஞ்சலையும் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர்.

நிர்மலாவுக்கு வயசு பதினேழுதான் ஆகுது. மைனர் பொண்ணை கட்டாயப்படுத்தி நீங்க பார்த்து வச்சிருக்கிற பணக்கா…ர மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா அப்புறம் உங்களுக்கு ஜெயிலும் களியும்தான் மிஞ்சும் பரவாயில்லையா? ரெண்டு பேத்துக்கும் சம்மதன்னா சொல்லுங்க இப்பயே போலீசுக்கு போன் பண்றேன் என்றவன் தன் கைப்பேசியை கையில் எடுத்தால். நிலைமை கைமீறிப் போய்விட்டதை புரிந்துக் கொண்ட காளியப்பன் கோபமாக துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான். வயிற்றெரிச்சலும் கோபமும் கலந்த பார்வையை அஞ்சலை நந்தினியின் மீது வாரியிரைத்துவிட்டு கணவனை பின்தொடர்ந்து ஓடிவிட்டாள்.

நீ கவலைப்படாத நிர்மலா உனக்கு பெத்தவங்க ஸ்தானத்துல இனி நாங்க இருப்போம். உனக்கு எவ்வளவு படிக்கணும்மோ அவ்வளவும் படி. செலவைப்பத்தி கவலைப்படாத. அதை நான் பார்த்துக்கிறேன் என சொன்ன கணவனை நந்தினி நன்றி கலந்த பார்வைப் பார்த்தாள்.

தன் வாழ்க்கையை சூழ்ந்திருந்த கருமேகம் திசை தெரியாமல் கலைந்து போய்விட்ட சந்தோஷத்தில் நிர்மலா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். தன்னருகில் கிடத்திருந்த மழலைகளை நந்தினி கண்ணசையாமல் பார்த்தாள். மணி பன்னிரண்டாகப் போகுது நந்தினி. காலையில நடந்ததவே நெச்சுக்கிட்டு தூங்காம இருந்தேனா உடம்பு என்னத்துக்கு ஆகும். நிம்மதியா படுத்து தூங்கும்மா. என்னால முடியலேங்க. எ…எப்டி ஒரு பெத்த தாயால இப்டியெல்லாம் சுயநலமா நடந்துக்க முடியுது. ஆம்பளை பிள்ளை உசத்தின்னும் பொம்பளை பிள்ளைங்க மட்டன்னு எதுக்காக இப்படி பாகுப்பாடு பார்க்குறாங்க? பத்து மாசம் வயித்துல சுமந்தவளே இப்படி வேறுப்பாடு பார்க்கலாமா? அப்படி எந்த வகையில நாங்க கொறைஞ்சுப் போனோம்! என கேட்டவளால் அதற்கு மேலும் தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரே மூச்சாக அழுது தீர்த்தாள். அர்ஜீன் அவளது முதுகை மென்மையாக வருடிக் கொடுத்தான்.

அழுதழுது நந்தினிக்கு கண்ணீர் வற்றிப் போனது. இதோ எனக்கும் ஆண் ஒன்னும் பெண் ஒன்னும்மா ரெண்டு குழந்தைங்க கிடைச்சிருக்கு. இவுங்களுக்கு என்னோட ஒட்டு மொத்த பாசத்தையும் அன்பையும் சரிசமமா கொடுப்பேன். வாழ்க்கைக்கு தேவையான நல்லது கெட்டதுகல ரெண்டு பேத்துக்கும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன். இந்த சமூகத்துல எல்லாரும் என் ரெண்டு பிள்ளைகளையும் உயர்வோடும் மதிப்போடும் பார்க்கணும். அப்படிப்பட்ட மனுசங்களாதான் நான் இவுங்களை வளர்த்து ஆளாக்கப் போறேன் என்ற மனைவிக்கு அர்ஜீன் தன் தோள் கொடுத்து அவளை தன்னோடு தாங்கிக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *