(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பெண்களையெல்லாம் கேலியும் கிண்டலும் செய்து கதை. கட்டுரைகள் எழுதிவரும் இந்த எழுத்தாளர் (அதாவது நான்) தனக்கு எப்படியான பெண்னைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறாரோ? அவளை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கப்போகிறாரோ?”
அவரிடம் (அதாவது என்னிடம்) அகப்படவிருக்கும் அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்ணுக்காக நாம் இப்பொழுதே எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க வேண்டியது தான்.
“போங்கோடி. நீங்கள் ஒன்று, அந்த ஆள் (நான்) ஏற்கனவே யாரோ ஒரு பெண்ணைக் காதலித்திருக்கவேண்டும் அதில் அவருக்கு மகத்தான தோல்வியும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் இப்படியெல்லாம் அவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதும் காரணமாக இருக்கவேண்டும்”
“அப்படியானால் அவர் (நான்) இனித் திருமணமே செய்து கொள்ளமாட்டாரோ?”
இப்படி ஓர் உரையாடல் தங்கள் விடுதிப் பக்கம் நடந்ததாக எனது பெண்வாசகி ஒருத்தி எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறாள்.
மேற்படி உரையாடலிலுள்ள உண்மை பொய் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் எனது எழுத்து. எவ்வளவு தூரம் உலகத்தின் கண்களாகிய பெண்களின் வெறுப்புக்கு இலக்காகி விட்டது என்பதையும், மலரினும் மெல்லியதான அந்த மெல்லியலாளர்களின் இதயத்தை எனது பேனா எத்தனை தூரம் குத்திவிட்டதென்பதையும் உணர்ந்து வருந்தினேன். உடனேயே ஒரு முடிவுக்கும் வந்தேன்.
இப்பொழுதே இக்கணமே உலகத்தின் கண்களாகிய அந்த மெல்லியலாளர்களின் துயர் துடைக்க வேண்டு பென்பதே அந்த முடிவாகும். முதன் முதலாக எனது பேனா இதோ பெண்ணின் பெருமை பற்றி எழுதுகிறது.
கண்ணகி பரம்பரையின் கண்ணீர்
கண்ணகியின் கண்ணீர் மதுரையையே எரித்ததாக சிலம்பு கூறுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மையா னது என்பதையல்ல இங்கு ஆராயப்போவது. கண்ணகி பரம்பரையின் கண்ணீரின் சக்தியையும், நினைத்த நேரத்தில் நினைத்ததைச் சாதிக்கும் அதன் திறனையுமே இங்கு உராயப்போகின்றேன்.
உலகத்தில் பொதுவாக எதிலும் ஆண்கள் தான் வல்லமையுள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கண்ணீர் விடுவதில் பெண்களை வெல்லுவதற்கு அவர்களால் ஒருபோதும் முடியாது. இதில் பெண்களுக்கு நிகர் பெண்களேதான் என்பேன்.
ஆண்களாகிய எங்களுக்கெல்லாம் நெருங்கிய உறவினர்கள் இறந்தால் கூட கண்ணீர் வருவது சிரமமாக இருக்கிறது. இழவு வீடுகளில்கூட அரசியல் சர்ச்சைகளில் தானே ஈடுபட்டு வருகிறோம். பெண்களால் ‘கல் நெஞ்சங்கள்’ என்ற பட்டத்தையும் அல்லவா பெற்று வருகிறோம்?
பெண்களோவென்றால் சொந்தம் பந்தம் என்ற வேறு பாடுகள் இன்றி எங்கும் எப்பொழுதும் கலன் கணக்கில் கண்ணீர் விட வல்லவர்களாகவும் தயாராகவும் இருந்து வருகிறார்கள். இழவு வீட்டை ‘இழவு வீடு’ தான் என்று நினைக்கும் படியாகச் செய்வது பெண்களேதான். சுருக்கமாகச் சொன்னால் பெண்களும் பறைமேளமும் இல்லா விட்டால் இக்காலத்தில் இழவு வீட்டுக்கும் திருமண வீட்டுக்கும் வேறுபாடே காணமுடியாது.
இதைவிட பெண்கள் தமது ‘கண்ணீர்’ என்ற ஆயுதத்தால் தகப்பன்மார்களையும், கணவன்மார்களையும் ஆட்டிவைத்து நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை இருக்கிறதே, அவைகளை எழுதப்போனால் கட்டுரை புராணமாகிவிடும்.
இது இவ்வாறு இருக்க நினைத்த நேரத்தில் பெண்களால் ஏராளமாகவும் தாராளமாகவும் கண்ணீர் விட முடிகிறதே! இது எதனால் தெரியுமா?
எனக்கும்கூட முன்பு இந்த மர்மம் புரியாமலே இருந்தது. பின்பு ஒரு சமயம் எதற்காகவோ நான் அழ நேர்ந்தபோது கண்ணீரை நக்கிச் சுவைக்கும் அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது கண்ணீர் உப்புக் கரித்தது. அதன் பிறகு தான் எல்லாம் புரிந்தது. உப்புத்தான் கண்ணீருக்குக் காரணம் என்றும் பெண்களைவிட ஆண்கள் குறைவாகக் கண்ணீர் சிந்துவதற்கு பெண்களைவிட ஆண்கள் குறைவாக உப்பைப் பயன்படுத்துவது தான் காரணம் என்றும் நான் தெரிந்து கொண்டேன்.
அப்படியானால் இந்தப் பெண்கள் எல்லாரும் சமையலறையிலே இருந்து கொண்டு சமைக்கும் போதெல்லாம் அடிக்கடி உப்புக்கற்களை தமது வாய்க்குள் போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ!
கதைக் களஞ்சியங்கள்
ஆண்களாகிய எமக்கெல்லாம் நண்பர்கள் தெரிந்த வர்களைச் சந்திக்கும்போது கூடவே ஒரு பிரச்சினையும் ஏற் பட்டு விடுவது வழக்கம். அவர்களுடன் சம்பிரதாயத்துக்காவது ஏதாவது கதைத்தாக வேண்டுமல்லவா? ‘எதுபற்றிப் பேசுவது? எப்படி அதை ஆரம்பிப்பது?’ என்பது தான் அந்தப் பிரச்சினையாகும்.
நண்பர்கள் வரும்போது – தெரிந்தவர்கள் எதிர்ப்படும் போது எமக்கு ஏற்படும் இந்தத் தடுமாற்றத்திலிருந்து மீளுவதற்காகச் சில சமயங்களில் ‘மெல்ல நழுவினால்’ கூட நல்லது போல் தோன்றும்.
அப்படித் தடுமாற்றத்திலிருந்து துணிந்து மீண்டு கதைக்க வெளிக்கிட்டோமோ, அதில் பைத்தியக்காரத் தனம் தான் இருக்கும்.
பாடசாலைக்குச் செல்பவரையோ பாடசாலையிலிருந்து வருபவரையோ பார்த்து பதில் நிச்சயமாகத் தெரிந்திருந்தும் ‘என்ன பாடசாலைக்கா?’ என்றோ ‘என்ன பாடசாலையிலிருந்தா?’ என்றோ கேட்டு வைப்போம்.
கடும் வெயிலும் அதிக புழுக்கமும் நிலவும் காலத்தில் ஏதோ புதிதாகக் கண்டு பிடித்தது போல் ‘சரியான வெயில்! சரியான புழுக்கம்’ எனத் திருவாய் மலருவோம்.
இதற்குப் பிறகும் ஏதாவது கதைப்பதாயிருந்தால் ‘உங்கள் ஊரில் எப்படி இந்தமுறை மழை?’ என்றோ அல்லது ‘அங்கு எப்படி வெள்ளாமை’ என்றோ கேட்போம்.
இப்படி அனாவசிய மானதும் அக்கறையில்லாததுமான சங்கதிகளை சம்பிரதாயத்துக்கேனும் பேசத்தெரியாத ஆண்கள் பாடு மிகவும் பரிதாபந்தான். அவர்கள் வள்ளுவர் வழியில் ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனுமில’ என்பதையோ அல்லது ‘யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகுவதையோ’ பின்பற்ற வேண்டியது தான்.
இந்தப் பிரச்சினைகளோ தொல்லைகளோ நமது மதிப்பிற்குரிய பெண்மணிகளுக்குக் கிடையாது. ஆளைக் கண்டவுடன் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? என்ன பேசுவது என்பதில் எலாம் அவர்களுக்குத் தடுமாற்றம் கிடையாது. இதெல்லாம் அவர்களுக்கு ஒரு கைவந்த கலையாக இருந்து வருகின்றது.
நாம் ‘எதைப் பேசுவது?’ என்று தவிக்கிறோம். அவர்களோ ‘எப்படி நிறுத்துவது?’ என்று தெரியாது ‘சமா’ வைக்கிறார்கள்.
நாடாளுமன்றத்திலெல்லாம் தாம் ஆறு மணித்தியாலங்கள் பன்னிரண்டு மணித்தியாலங்கள் என்று பேசிப் பெரிய சாதனைகளை நிலைநாட்டிவிட்டதாக நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெருமைப்படுகிறார்கள். ஆனால் நமது பெண்மணிகளைக் கேட்டால் ‘பூ – இதென்ன சாதனையாம்?’ என்று அலட்சியம் செய்து விடுவார்கள்.
பெண்களைக் கதைக்களஞ்சியங்கள் என்றே சொல்லி விடலாம். கதையைப் பொறுத்தவரை அவர்கள் பச்சைத் தண்ணீரிலும் பலகாரம் சுடுவார்கள்; வெறும் வாயையும் மெல்லுவார்கள். சுருக்கமாகச் சொல்லுவதாயிருந்தால் பேச்சுச் சுதந்திரத்தைத் தக்கபடி சரியாகப் பயன்படுத்துபவர்கள் அவர்களே!
எந்த நேரத்திலும் மடை திறந்த வெள்ளம்போல் நீண்டநேரம் கதைக்கவல்ல கதைக் களஞ்சியங்களான நமது பெண்களிடம், ஆண்களாகிய நாம் பிச்சை எடுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
இரக்கப்போனாலும் சிறக்கப் போவார்கள்
‘இரக்கப்போனாலும் சிறக்கப்போ’ என்பது ஒரு பழ மொழி. அந்த முதுமொழியை வரிக்குவரி கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் எமது மங்கையர் திலகங்களே என்றால், அதுவும் சிறிதும் மிகையல்ல.
மாலை ஆறுமுப்பது படத்திற்குப் போவதற்காகத் திட்டமிடும் நமது பெண்மணிகள், அது சாத்தியப்படாது, மிகப் பிரயாசைப்பட்டு இரவு ஒன்பது முப்பதுக்கே வியர்க்க விறு விறுக்கத் தியேட்டரை வந்தடையும் காட்சிகளை நாம் காண்கிறோம் அல்லவா! இதற்கெல்லாம், அழகு செய்வதையும் அலங்காரம் பண்ணுவதையும் பெண்கள் ஒரு கலையாகவே வளர்த்து வருவது தான் காரணமாகும்.
மரணச் சடங்குகளில் பெண்கள் வகிக்கும் முக்கிய இடம்பற்றி கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இரக்க மட்டுமல்ல, இழவு வீடுகளுக்குக் கூட அவர்கள் சிறக்கவே போகவேண்டி இருப்பதால் அங்கெல்லாம் அவர்களில் சிலர் கால தாமதமாகவே சமூகம் கொடுப்பதையிட்டு நாம் மன்னித்தேயாக வேண்டும்.
மிக மிகச் சாதாரண அலுவல்களுக்கெல்லாம் பெண்கள் மிகமிகப் பிரமாதமான சோடனைசளுடன் புறப்படுவதைக் காண்கின்றோம், ஆனால் என்ன செய்வது, ‘சிறக்கப் போ’ என்ற பழமொழியினை அவர்கள் வரிக்கு வரி பின்பற்ற வேண்டியிருப்பதால் சுண்டங்காய் காற் பணமாகவும் சுமைகூலி (நகைகளும் சேலைகளும் பிறவும்) முக்காற்பணமாகவும் இருப்பதையிட்டு அவர்கள் கவலை கொள்ளுவதில்லை.
ஒவ்வொரு கொண்டாட்டங்கள் கேளிக்கைகளுக் கென்று வேறுவேருன ஆடை அணிகள் அலங்காரச் சாதனங்கள் பெண்களிடம் இருக்கும்: ஏன் பெண்கள் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான விலைமதிப்புள்ள சிலசேலைகள் அவர்களது வாழ்நாளில் ஆக இரண்டொரு சமயங்களில் தான் பாவிக்கப்படுகின்றனவாம் என்றால், அவர்களுக்கு சிறக்கப்போவதிலுள்ள மோகம் எத்தகையது என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?
இவ்வாறு பெண்ணின் பெருமை பற்றி எவ்வளவோ எழுதலாம். ஆனால் ‘நீ ஆணாக இருந்து கொண்டே எதிரிகளின் புகழ்பாடும் எட்டப்பனாக இருக்கிறாயே? பெண்களுக்கு அடிமையாகி அவர்களுக்காக வக்காலத்து வாங்குகிறாயே பாவி’ என்றெல்லாம் எனது இனிய ஆண் நண்பர்கள் சண்டைக்கு வரலாம். இதனாலேயே பெண்களின் ஏனைய பெருமைகள் பற்றி இங்கு சொல்லாமல் விட்டேன்.
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.