இச்சு மாட்ஸியோ மிச்சாமியைச் சிலிர்க்க வைத்த வீரவாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 3,717 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்ற வாரத்தில் ஒரு நாள் என்னுடைய டூ~இன்-ஒன் ஆன மனைவியின் ஆணைப்படி ஒரு டூ இன்-ஒன் (டிரான்சிஸ்டர்-கம்-டேப் ரிக்கார்டரை) வாங்க பர்ஸில் பணத்தோடு பர்மா பஜாருக்குக் கிளம்பினேன் நான். பேரம் பேசுவதில் ஆராய்ச்சியே செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள கிச்சாவையும் துணைக்குக் கூப்பிட்டுக் கொள்ளத் திருவல்லிக்கேணிக்குச் சென்றேன். அங்கு ‘மேட்-இன்-ஜப்பான்’ அயிட்டங்களால் அவனது பெட்-ரூம் நிரப்பப்பட்டு ஒரு மினி பர்மா பஜாராக மாறியிருப்பதைப் பார்த்து பிரமித்தேன்.

டேபிள் மீது கண்ணாடிப் பெட்டிக்குள் கம்ப்யூட்டர் போல ஒன்று இருப்பதைப் பார்த்து ‘இது என்ன?’ என்று கேட்ட என்னைப் பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு ‘ இது ரேடியோ-கம்- டேப்ரிகார்டர்-கம்-ரிக்கார்ட்பிளேயர்-கம் அலாரம் கிளாக் – கம்… என்று டி.வி. வாஷிங்மெஷின், தையல்மெஷின், பீரோ இப்படி பன்னிரண்டு அயிட்டங்கள் சேர்ந்த ‘டுவெல்வ்-இன்-ஒன்’ சிஸ்டம்’ என்று அசத்தலாகக் கூறி, வெறும் டூ-இன்-ஒன் வாங்க நினைத்த என்னைக் கூனிக் குறுக வைத்தான். அது மட்டுமல்ல, எவ்வளவு தடவை குளித்தாலும் எப்போதும் உலர்ந்து போன நார்த்தங்காய் மாதிரி கிட்டத்தில் நெடி அடிக்கும் கிச்சா, அன்று பரிமள சுகந்த கந்தனாக விளங்கினான். தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விடும் பூவாளி சைஸ் செண்ட் பாட்டிலைக் கொண்டு, தீ அணைப்பது போல திருவல்லிக்கேணியே மணக்கும் அளவுக்குத் தன் உடம்பு பூராவும் பீய்ச்சி அடித்துக் காட்டி என்னைத் திக்பிரமை அடைய வைத்தான். தனது வலதுகை மணிக்கட்டில் தூளிபோல தொங்கும் ராட்சஸ சைஸ் ரிஸ்ட்வாட்ச் நேரம், தேதி, லக்னம், அமாவாசை, பௌர்ணமி, தட்சிணாயனம், உத்தராயனம் என்று மண்டையைப் போடும் காலம் தவிர, மற்ற எல்லாவற்றையும் காட்டும் என்று கிச்சா கூறியது, எனது வெந்த வயிற்றில் வத்தக்குழம்பைப் பாய்ச்சியது போல இருந்தது!

இப்படி காஸ்ட்லியான சீமைச் சரக்குகளுக்கு நடுவில் கஸ்டம்ஸ் ரெய்டு செய்த ஆபீஸர் போல கம்பீரமாக குந்தியிருப்பதற்குக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாவிட்டால், என் மண்டை ஆயிரம் சுக்கல்களாக வெடித்துச் சிதறிப் போகும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்தேன்.

‘மச்சி, நீ பார்த்த அயிட்டம் அம்புட்டும் மேட்-இன்-ஜப்பான். போன வாரம் மெட்ராஸைச் சுத்திப் பார்க்க ஜப்பான் பார்ட்டி ஒண்ணு வந்துச்சு. என் கைல பத்தாயிரம் ரூபா திணிச்சு பிக்னிக் இட்டுகினு போகச் சொன்னாங்க. நானும் அவங்க கூடவே வழிகாட்டியா இருந்து எல்லாத்தையும் விலாவாரியா புரிய வெச்சேன். வழிகாட்டியா இருந்து சுகுரா விளங்க வெச்சதுல குஷியான ஜப்பான் குள்ளனுங்க குருதட்சிணையா அய்யா கைல அத்தினி அயிட்டங்களையும் திணிச்சுட்டுப் பூட்டானுங்க’ என்று மெட்ராஸ் பாஷையில் சஸ்பென்ஸை உடைத்தான் கிச்சா!

அருகிலிருக்கும் டி.பி. கோயில் தெருவுக்கே வழி கேட்பவரிடம் ‘லெஃப்டுல போய், ரைட்டுல போய், காணாமப் போய், செத்துப் போய்…’ என்று அபத்தமாக வழிகாட்டும் கிச்சா, எப்படி ஜப்பான்காரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்களைக் கவர்ந்து, செண்ட், வாட்ச், சொக்காய், ஷூ என்று கறந்தான்?

‘ஏண்டா கிச்சா, அவங்கள எந்த எடத்துக்கெல்லாம் பிக்னிக் அழைச்சுண்டு போனே? மகாபலிபுரமா? வேடந்தாங்கலா?’ என்று கேட்க ஆரம்பித்த என்னை ‘ஸ்டாப் இட்’ என்பது போல ஸ்டைலாகத் தடுத்து நிறுத்திவிட்டு நக்கலாக, ‘ஊர் ஊரா, தெருத்தெருவா அழைச்சுண்டு போனாத்தான் பிக்னிக்னு உனக்கு யார் சொன்னது?’ என்றான். ‘வீட்டை விட்டு வெளில போறது சாதா பிக்னிக். வெளிலேருந்து வீட்டுக்குள்ள போறது ஸ்பெஷல் பிக்னிக். நான் ஸ்பெஷல் பிக்னிக்கா ஜப்பான்காரங்களை என் வீட்டுக் கொல்லைப் பக்க வழியா அழைச்சுண்டு போய் கிணறுல ஆரம்பிச்சு ரேழி வரைக்கும் சுத்திக்காட்டி அவங்களைச் சிலிர்க்க வெச்சேன்’ என்றவன், தனது கைடு படலத்தை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினான்.

பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு எச்சுமிப் பாட்டியுடன் கிச்சா சென்றபோது கோயிலுக்கு வெளியே வந்து நின்ற ஒரு ஏ.ஸி டூரிஸ்ட் பஸ்ஸிலிருந்து நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தது போல சுமார் இருபத்தைந்து பேர் அடங்கிய ஜப்பான் கோஷ்டி ஒன்று, ஒவ்வொன்றாக உருண்டு உருண்டு இறங்கிக் கோயிலுக்குள் பிரவேசித்தது.

உள்ளே, தூணில் செதுக்கிய பெருமாளின் வாமனாவதாரச் சிற்பத்தைக் காட்டி ஜப்பான் பேர்வழிகள் கோரஸாக ‘இது என்ன?’ என்று திடீரென்று கேட்டுக் கொண்டிருக்க, அந்தச் சமயத்தில் அங்கு வந்த கிச்சா சிற்பத்தைக் காட்டி, லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், லைக் யூ பெருமாள் கேம் டு எர்த் ஆஸ் டூரிஸ்ட் தட் ஈஸ் அவதாரம். அண்ட் ஆல்ஸோ இன் திஸ் அவதாரம். பெருமாள் ஈஸ் ஷார்ட் லைக் யூ. ஸோ திஸ் அவதாரம் வாஸ் ஸ்பெஷலி மேட் இன் ஜப்பான் அவதாரம்…’ என்று அல்ப ஆங்கிலத்தில் கூறிவிட்டு, தொடர்ந்து வாமனாவதாரத்தில் பெருமாள் ஜப்பான்காரரைப் போல குள்ளமாக வந்ததாகவும், பிறகு அதே பெருமாள் திருவிக்கிரம அவதாரம் எடுத்து வளர்ந்து போல் இன்று ஜப்பானியர்கள் உலகில் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறி, ஜப்பானுக்கும் வாமனாவதாரத்துக்கும் உள்ள குறைந்தபட்ச ஒற்றுமைகளை எடுத்துக் காட்டி அவர்களை முகஸ்துதி செய்ய, உச்சி குளிர்ந்த அந்த ஜப்பான் கும்பல், கிச்சாவுக்கே வெட்கம் பிடுங்கித் தின்னும் அளவுக்கு அவன் எதிரில் தலையைக் குனிந்து குனிந்து ‘ஜப்பான் நமஸ்தே’ தெரிவித்தார்கள்.

தொடர்ந்து, கோயில் பிராகாரத்தில், இப்போதுதான் பிறந்திருப்பாரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு தம்மாத்தூண்டு சைஸில் இருந்த ஒரு ஜப்பானிய பெரியவர் முன்வந்து கிச்சாவிடம் தன்னை ‘இச்சு மாட்ஸியோ மிச்சாமி” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, அப்போது அங்கு வந்த தேரடி தேசிகன் கிச்சாவைப் பார்த்துக் கண்ணடித்து, ‘என்ன மாமா, ஜப்பான்காரங்களை சோப் அடிச்சு பணம் புடுங்கறியா?’ என்று உசுப்பினான். அவர்கள் எதிரில் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல கிச்சா நடித்து, அதே சமயம் தேசிகனை ஜப்பான் பாஷை பாணியில் ‘சோமாறிகோ கஸ்மாலம்’ என்று திட்ட, ஜப்பான் டீமில் வந்திருந்த ஒருவர் ‘சோமாரிகோ இட்ஸ்மாலே’ என்கிற தனது பெயரை, தான் சொல்வதற்கு முன்பே ஓரளவு சரியாக ஊகித்த கிச்சாவை மெய்மறந்து பார்த்து ‘ஜப்பான் நமஸ்தே’ செய்ய ஆரம்பித்து விட்டார்.

அனைவரின் அறிமுகம் முடிந்தபின்னர் அவர்களின் தலைவரான இந்த மாட்ஸியோ மிச்சாமி, கிச்சாவின் கையில் இந்திய கரன்ஸியில் பத்தாயிரம் ரூபாயைத் திணித்துவிட்டு, ‘நாங்கள் புராதனமான சென்னையின் ஆத்மாவைத் தரிசிக்க நீங்கள் வழிகாட்டியாக இருந்து உதவ வேண்டும்’ என்று கூறி, குனிந்து நிமிர்ந்து கெஞ்சிக் கூத்தாட ஆரம்பித்தார்.

‘வந்த ஜப்பான் லட்சுமியை வேண்டாம்னு சொல்லாதே…’ என்று கூறி எச்சுமிப் பாட்டி பணத்தைக் கிச்சாவிடமிருந்து பிடுங்கி இடுப்பில் சொருகிக் கொள்ள, கிச்சா, ‘இவர்களை எங்கே அழைத்துப் போவது?’ என்ற ஏக்கத்தோடு எல்லாம் வல்ல எச்சுமிப் பாட்டியைப் பார்த்தான். ‘சாண்டில்ய கோத்திரத்துல பொறந்துட்டு சரித்திரத்துக்குப் பயப்படறியே தரித்திரம்… இவாளை அழைச்சுண்டு உங்க தாத்தா கட்டின ஒண்டுக் குடித்தன வீட்டுக்குப் போ. கொடுத்த பணத்துக்குக் குறைவில்லாம நீயே ஒரு சரித்திர நாவலை கற்பனை பண்ணி ரீல் விடு. மசமசன்னு நிக்காதே…’ என்று பாட்டி கொடுத்த தைரியத்தில், அவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வெளியே வந்தான் கிச்சா.

தான் காட்டப் போவது அவர்கள் ஏறி வந்த ஏர் கண்டிஷன் பஸ் நுழைய முடியாத அளவுக்குப் புராதனமான சரித்திரப் பிரசித்திப் பெற்ற இடம் என்பதை நிரூபிக்க விரும்பினான் கிச்சா. எனவே முதலில் பஸ்ஸை ஐஸ் ஹவுஸ், கூவம் கரையோரமாக விடச் சொல்லி, பசுவும் எருமையும் புரளும் சந்து பொந்துகள் வழியாகச் செலுத்தி, இனி குரங்கு பெடல் அடித்து சைக்கிளில்கூடப் போக முடியாது என்ற இடத்தில் பஸ்ஸை நிறுத்தச் சொன்னான். இத்தனை நேரம் கூவம் நாற்றத்துக்குத் தாக்குக் கொடுக்க முடியாமல் மூக்கை மூர்க்கமாக அழுத்திப் பொத்தியதில், ஏற்கெனவே சப்பையான ஐப்பான் பயணிகளின் மூக்கு, கண்ணுக்குப் பிறகு நேராக வாய்தான் என்று நினைக்கும் அளவுக்கு முகத்தோடு முகமாக அழுந்தி மேலும் சப்பையானது.

நீண்ட பயணத்தின் முடிவாக சிங்கராச்சாரி தெருவில் இருக்கும் தனது | வீட்டின் பின்பக்கத்துக்கு அவர்களை அழைத்து வந்து, வீட்டுக்குப் பின்னால் ஓடும் பாதாளச் சாக்கடையை அவர்களுக்கு அரண்மனை அகழியாக அறிமுகப்படுத்தி வைத்தான். கிச்சா கொல்லைப்புறக் கதவைத் தட்ட, உள்ளிருந்து திறந்த எச்சுமிப் பாட்டியை, ‘இவள் எப்படி இங்கு வந்தாள்?’ என்று அவர்கள் ஜப்பானிய பாஷயில் சந்தேகிக்க, கோயிலிலிருந்து அரண்மனைக்கு ஷார்ட்கட்டில் போக பாட்டிக்கு மட்டுமே தெரிந்த ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறிச் சமாளிக்க, சிலிர்த்துப் போன அவர்கள் எச்சுமிப் பாட்டியை ஜான்ஸி ராணியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள்.

கிச்சா அவர்களை நேராகக் கூடத்துக்கு அழைத்துப் போய், பாய் விரித்துக் குந்த வைத்தான்.

எச்சுமிப் பாட்டியின் அண்ணாவும், தனது மாமா தாத்தாவுமான கோர்ட் டவாலியாக இருந்த குள்ள ராஜாமணியின் போட்டோவைக் கள்ளிப் பெட்டியிலிருந்து எடுத்துக் காட்டி, ‘இவர்தான் இந்த அரண்மனையில் இருந்தபடி சென்னையை ஆண்ட ராஜா…’ என்றான். ரிடையர் ஆகும் சமயத்தில் தலையில் ஜரிகைத் தொப்பி, சிவப்பு நிற அங்கி, மார்பில் குறுக்காகப் பட்டை, போட்டோவுக்காக மார்பில் குத்திக் கொண்ட அச்சுபிச்சு டாலர்கள் சகிதமாக எடுக்கப்பட்ட போட்டோவில், கோர்ட் டவாலி காஸ்ட்யூமில் பளபளத்த குள்ள ராஜாமணி, கிட்டத்தட்ட ஜாடையில் ஜப்பான் எம்ப்பரர் போலவே இருந்ததால் அவர்கள் கிச்சா சொல்வதையெல்லாம் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் கள்ளிப் பெட்டியில் தனது தாத்தா முகச்சவரம் செய்வதற்காக உபயோகப்படுத்திய, தேவையில்லாமல் கொஞ்சம் பெரியதாக இருந்த கத்தியை எடுத்துக்காட்டி ‘அரசரின் வீரவாள்’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிவிட்டு, அதில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்த ஓரிரு முடிகளைக் காட்டி, ‘செங்கல்பட்டு மன்னரின் தலையைப் போரில் கொய்தபோது ஒட்டிக்கொண்டு விட்டன’ என்று ரகசியமாகக் கூற, அவர்கள் பயபக்தியோடு கத்தியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!

உலக யுத்தத்தின்போது, நேதாஜியோடு ஜப்பானுக்குப் போன தனது தாத்தாவும், எச்சுமிப் பாட்டியின் கணவருமான நாகச்சாமியின் ஞாபகார்த்தமாக வைத்த ‘ஹிரோஷிமா நாகசாமி’ என்ற பெயர்தான் எப்படியோ திரிந்து ‘ஹிரோஷிமா நாகசாகி’ என்று மருவிவிட்டதைக் கூறினான் கிச்சா!

சென்னையை ஆண்ட மன்னனின் வாரிசே இப்போது தங்களுக்கு வழிகாட்டியாக அமைந்ததில் பரம சந்தோஷம் அடைந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த மேட்-இன்-ஜப்பான் அயிட்டங்களைக் கிச்சாவுக்குத் தாரை வார்த்தார்கள். பதிலுக்கு அவர்களை வரிசையாக அமர்த்தி தலைவாழை இலை போட்டு விருந்து அளித்தாள் எச்சுமிப் பாட்டி. குச்சியில் சாப்பிட்டுப் பழகிய அவர்கள், கையால் சாப்பிட முடியாமல் களேபரம் செய்ய, இந்த இலையிலிருந்து அடுத்த இலைக்கு என்று குழம்பு, ரசம் ஓடி சாப்பாடெல்லாம் கலந்து, விருந்து சம பந்தியாக முடிந்தது.

விருந்துக்குப் பிறகு, சென்னையின் புராதனமான சரித்திரப் பிரசித்தி பெற்ற விளையாட்டு என்று கூறி, அவர்களுக்குப் பம்பரம் விட்டுக் காட்டிய கிச்சா, அசால்டாக அப்பீட் எடுத்து உண்ட களைப்பில் மல்லாக்கக் கிடந்த, ‘இச்சு மாட்ஸியோ’ வயிற்றில் சின்னக் கவுண்டர் விஜயகாந்த் ஸ்டைலில் பம்பரத்தைவிட, அவர் ‘கிச்சுக்கிச்சியோ… கிச்சுகிச்சியோ’ என்று ஜப்பானில் கத்தியபடி கூச்சத்தில் நெளித்ததைக் கண்டு மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தபடி பார்த்தார்கள்.

அதேபோல், மொட்டைமாடியில் பட்டம் விட்டுக் காட்டும்போது, ‘டீல் ஆகிப் போன காத்தாடியைப் பிடிக்குமாறு விளையாட்டு சுவாரஸ்யத்தில் கிச்சா கத்த, சிங்கராச்சாரி தெருவில் இறங்கிய அந்த இருபத்தைந்து ஜப்பான்காரர்களும், அறுந்து சந்து பொந்தெல்லாம் பறக்கும் காத்தாடியை அண்ணாந்து பார்த்தபடி துரத்தி வெறியாக ஓடுவதை வேடிக்கை பார்க்க, திருவல்லிக்கேணியில் உள்ள அத்தனை மொட்டை மாடிகளும் திருவிழாக் கணக்கில் நிரம்பி வழிந்தன. அவர்கள் துரத்திய பட்டம் பாவ்லா காட்டிவிட்டுக் கடைசியாக ஐஸ்ஹவுஸ் சந்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அவர்களது ஏ.ஸி. பஸ்ஸில் மாட்டிக் கொள்ள… பஸ்ஸைப் பார்த்தவுடன் இரவு ஜப்பான் ஏர்லைன்ஸ் பிடிக்க வேண்டியது நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாக கிச்சாவுக்கு டாட்டா சொல்ல ஆரம்பித்தார்கள். கடைசியாக ஏறிய, ‘ இச்சு மாட்ஸியோ மிச்சாமி யை நிறுத்தி, தெருவில் போன மிட்டாயில் கைக்கடிகாரம் செய்து மாட்டி விடுபவனை கிச்சாகூப்பிட்டு, ஒரு நாலணா கொடுத்து அவர் கையில் மிட்டாய் கடிகாரம் கட்டச் சொன்னான். நெகிழ்ந்து போன இச்சு மாட்ஸியோ பதில் மரியாதையாக தனது ராட்சஸ சைஸ் ரிஸ்ட்வாட்ச்சை கிச்சா கையில் கட்டிவிட்டார். ‘எச்சுமிப் பாட்டியை விசாரித்ததாக’ அனைவரும் கோரஸாகக் கூறிவிட்டு ‘த்ரீ சியர்ஸ் டூ மெட்ராஸ் கிங் கிச்சா’ என்று குரல் கொடுக்க, ஏ.ஸி. பஸ் ஏர்போர்ட் நோக்கி விரைந்தது. வைத்திருக்கும் அயிட்டங்களைக் கொண்டு பர்மா பஜார் போல கிச்சா பஜார் என்று கிச்சா ஆரம்பிப்பதற்குள் ஒரு ஜப்பான் டூ இன் ஒன்னை அவனிடமிருந்து சீப்பாக வாங்க நான் பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கூடிவரவில்லை!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *