புரொபசர் சகல சந்தேக நிவாரணி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 17,810 
 
 

பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து விடுவார். அங்கே ஃபிசிக்ஸ் டிபார்ட்மென்ட்டில் ஏறக்குறைய எடுபிடி மாதிரி. வயசு ஆயிட்டுது நாற்பதுக்கும் பக்கமா!

எங்கள் காலனி மீட்டிங்குக்கு அநேகமாக அவர்தான் தலைமை வகிப்பார். எது ஒண்ணும் ‘புரொபசரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே!’ என்போம்.

இலவச காஸ் அடுப்பு நமக்கும் உண்டா? முதியோர் பென்ஷனுக்குத் தேவையான தகுதிகள் என்ன? வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஏதோதுட்டு தராங்களாமே… யாரை அணுகி, எப்படி வாங்குவது?

கார்ப்பரேஷன் லாரி தண்ணி கொண்டுவந்து சப்ளை செய்யுமாமே… எங்கோ சொல்லிவிட் டால்? அது எப்படி?

ப்ளஸ் டூ படித்த பையனை யாரைப் பிடித்து, எந்தத் தொழில் கல்லூரியில் தள்ளலாம்? வெளி மாநிலத்தில் நம்ம கோட்டா எவ்வளவு? கிடைக்குமா? இது மாதிரி கேள்விகளுக்குச் சகலசந் தேக நிவாரணியாக இருந்து வந்தார் அந்த புரொபசர்.

காசு பணமெல்லாம் மோசடி செய்யமாட்டார். நல்ல மனுஷன்!

எப்பப் பார்த்தாலும் ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பார். மொட்டை மாடிக்குத் துணி உலர்த் தப் போனால், தன்னைச் சுற்றிலும் 20 புத்தகங்களைத் தலைக்குப்புறப் போட்டுக் காய்கறிகளைக் கூறு கட்டின மாதிரி வைத்துக்கொண்டு மும்முரமாக எழுதிக்கொண்டு இருப்பார்.

‘‘புவியீர்ப்பும் அன்ட்டார்ட்டிக் கரைசலும்–&னு ஒரு புத்தகம் எழுதியிருக் கேன். இதுவே வேற நாட்டிலேஎழுதி யிருந்தா புக்கர் பரிசே கிடைச்சிருக்கும்’’ என்று அங்கலாய்ப்பார்.

பல பதிப்பகங்கள் அவரை விஞ்ஞான சம்பந்தமான நூல்கள் எழுதித் தரச் சொல்லி உயிரை எடுப்பதாக அடிக்கடி சொல்வார். ஆனால், அவர் உயிர் அவரிடமேதான் இருந்து வந்தது. அவர் எழுதி எந்த விஞ்ஞான நூலும் வெளியான தாகத் தகவல் இல்லை.

இந்தச் சமயத்தில் தான், காலனியின் மேற்கு பிளாக்கிலிருந்த சந்தோஷ முருகேசன் என்பவர் ‘சமு பதிப்பகம்’ துவக்கினார்.

புரொபசர் உடனே சமு&வின் பிளாக்குக்கு மாபெரும் பொக்கேயுடனும், பழக் கூடையுடனும் மற்றும் நகரின் பிரபல ஸ்வீட் கடையிலி ருந்து இரண்டு கிலோ ஸ்வீட், காரம் இத்துடனும் சென்று, ஒருபொன் னாடையும் போர்த்தி, அவரை வாழ்த்திவிட்டு வந்தார்.

சந்தோஷ முருகேசன், செக்ரடேரியட்டில் மெட்ரோ வாட்டர் பிரிவில் பெரிய அதிகாரி. நியாயமான அளவில் கையூட்டு பெறும் கண்ணியவான்.கணிசமாகச் சேர்ந்த அந்தப் பணத்தைக் கொண்டு தான் பதிப்பகம் தொடங்கினார். பாரதியார், கம்பர், குறள், ராமாயணம், மகாபாரதம் என்று ராயல்டி கேட்காத பிரபல ஆசிரியர்களின் நூல்களை நல்ல முறையில் விறுவிறுவென்று போட்டதோடு, மேற்படி புத்தகங்களில் சிலதை ஓசிப் பிரதியாக புரொபசருக் கும் தந்தார்.

‘‘நம்ம ‘புவியீர்ப்பும் அன்ட்டார்ட் டிக் கரைசலும்’ கூட நீங்கதான் போடணும். இன்னும் ஒரே ஒரு செக்ஷன் தான் பாக்கி இருக்கு. ஓஸோன் ஓட்டையை முடித்துவிட்டால் ஸ்கிரிப்ட் ரெடி!’’ என்றார் புரொபசர்.

‘‘ஆஹா! பேஷா! ஜனவரியில் மாபெரும் புத்தகக்காட்சி வருகிற போது ஒரு ஸ்டால் எடுக்கிறதாக இருக்கேன். நீங்கள் அதற்குள் எழுதி முடித்துவிட்டால் ஓகோன்னு விளம்பரப்படுத்தி பிரமாதமாக விற்றுவிடுகிறேன்’’ என்றார் சமு.

புரொபசர் கல்லூரிக்கு விடுப்புப் போட்டுவிட்டு, அன்ட்டார்ட்டிக் கரைசலின் கடைசி சொட்டான ‘ஓஸோன் ஓட்டை’களை எழுதி முடித்து, சமுவிடம் சமர்ப்பித்தார். என்னுரை, முன்னுரை, பின்னுரை என எல்லா உரையிலும் சமுவின் புகழ் பாடியிருந்தார்.

புத்தகக் காட்சியின் வரவேற்புக் கொட்ட கையில், புரொபசரை அறிமுகப்படுத்தி பொன் னாடை போர்த்திக் கௌரவப்படுத்தியதோடு, ‘‘புவியீர்ப்பும் அன்ட் டார்ட்டிக் கரைசலும் 417&ம் நம்பர் ஸ்டாலில் கிடைக்கும். படித்துப் பார்த்துப் பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய நூல். விலை ரூ.100. ஸ்டாலில் வந்து வாங்குகிறவர்களுக்கு நூலாசிரியர் தன் கைப் படக் கையெழுத்திட்டுத் தருவார். அப்படி அவர் கையெழுத்திடும் நூலுக்கு 50% சலுகை தரப்படும்’’ என்று மேடையிலேயே அறிவித்துவிட்டார் சமு. கூடவே, ‘‘சரியாக மதியம் இரண்டு மணியிலிருந்து ராத்திரி ஸ்டால் மூடுகிற வரை நீங்கள் ஸ்டாலிலேயே இருக்க வேண்டும்’’ என்று அன்புக் கட்டளை போட்டார்.

‘‘அதைவிட எனக்கு வேறென்ன வேலை?’’ என்று புரொபசர் கல்லூரிக்கு மேலும் ஒரு பத்து நாள் விடுப்பு போட்டார். இரண்டு மூன்று பால் பாயின்ட் பேனாக்கள் வாங்கிக்கொண்டார்.

சமு பதிப்பகத்தின் ஸ்டால் சுமாராக… டேபிள் துடைக்கிற சில துணிகள் வெலவெல வென்று இருக்குமே, அது போல பலவீனமாக இருந்தது. மற்ற பதிப்பகங்களிலிருந்தும் நூல்களை வாங்கி வந்து நிரப்பியிருந்தார் சமு.

அவரது வெளியீடு என்று நாலைந்து புத்தகங்கள். மற்றபடி புரொபசரின் ‘புவியீர்ப்பும் அன்ட்டார்ட்டிக் கரைச லும்’தான்.

புரொபசருக்கு ஒரு ஸ்டூல் போட்டிருந்தார். ‘‘நாற்காலி போடலையேனு நினைச்சுக்கா தீங்க. நாற்காலியில் உட்கார்ந்தா தூக்கம் வந்துடும். ஸ்டாலுக்கு வர்றவங்க… முக்கியமா உங்க கிட்ட ஆட்டோகிராஃப் வாங்க வர்றவங்க, ‘என்ன டாது புரொபசர் தூங்க றாரே!’னு நினைச்சுடக் கூடாது இல்லியா?’’ என்றார் சமு.

தினமும் புரொபசர் ஷேவ் செய்துகொண்டு, டிரைகிளினீங்கில் முன்கூட்டியே போட்டு ரெடி செய்து வைத்திருந்த பேன்ட், ஷர்ட், கோட் அணிந்து, டாணென்று 11 மணிக்கெல்லாம் ஸ்டாலுக்குப் போய்விடுவார்.

ஒரே ஒரு சின்னப் பயல்தான், ஞானப்பிரகாசம் என்று பெயர்… ஸ்டாலைத் திறந்து தூசி தட்டி வைப் பான். புரொபசர் அவனுக்கு உற்சாகப் படியாக தினமும் 20 ரூபாய் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து விடுவார்.

தனது புவியீர்ப்பை மட்டும், ஜனங்கள் வந்ததும் கண்ணில் படுகிற மாதிரி ரிசப்ஷன் மேஜையில் அடுக்கி வைத்துக்கொண்டு ஆவலோடு காத்திருப்பார். ஆனால், சோதனையாக புத்தகம் ஒன்றுகூடக் கரைய வில்லை. வருகிற ஜனங்கள் ஒதுங்கி ஒதுங்கிப் போய்க்கொண்டு இருந் தார்கள்.

‘சரியான விளம்பரம் இல்லை’ என்று அலுத்துக் கொண்டு பெரிய கரும்பலகை வரவழைத்துக் கொட்டை எழுத்தில் கலர் கலராக புவியீர்ப்பை எழுதி வைத்தார். ‘ஞாபகமாகக் கேட்டு வாங்குங் கள் புரொபசரின் கையெ ழுத்தை’ என்று சற்றே பெரிய எழுத்தில் சிவப்புக் கலரில் எழுதி, கீழே பச்சை நிறத்தில் பட்டை யாகக் கோடும் போட்டுச் சிறப்பித்தார்.

தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை உட்கார்ந்திருந்தார், டீயும் பகோடா வும் வரவழைத்துச் சாப்பிட்டுக் கொண்டு! ஸ்டூலில் உட்கார்ந்தும், நின்றும், நடந்தும்… ரொம்பத்தான் உடம்பு வலி! வயிற்றெரிச்சல் என்ன வென்றால், அவரது புத்தகம் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை. பாரதி யார், திருவள்ளுவர், கண்ணதாசன் என மற்றவர்கள் எழுதினதுதான் விற்பனை ஆயிற்று!

பதிப்பாளர் சமு தினமும் சாயந்திரம் 7 மணிக்குதான் வந்து எட்டிப் பார்ப்பார். வந்ததும், ‘‘உங்களது ஏதாவது மூவ் ஆச்சா?’’ என்பது தான் அவரது முதல் கேள்வியே!

‘‘பப்ளிஸிடி பத்தலை. நீங்க நுழைவாசல்கிட்ட ஸ்டால் எடுத்திருக்கணும். உள்ளே தள்ளி இந்தக் கடைசியிலே எடுத்தது மிஸ்டேக்!’’ என்று அலுத்துக்கொண்டார் புரொபசர்.

‘‘நீங்க கொஞ்சம் உங்களுடையதைப் போட்டுப் பண்ணுங்க. நான் அப்புறம் கணக்குப் பார்த்து ஸெட்டில் பண்ணிடறேன். உங்க ராயல்டியோடு சேர்த்துக் கொடுத்துடறேன். உங்க போட்டோவோடு பேனர் போடுங்க. இருபதடிக்கு இருபதடி! விளம்பரம்னா நெத்தியடியா இருக்கணும். எக்ஸிபி ஷன் இன்னும் அஞ்சே நாள்தான். அதுக்குள்ளே பார்த்துடணும் ஒரு கை! ஒண்ணுகூட மூவ் ஆக லேன்னா மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ரொம்ப ஒசந்த புஸ்தகம்… ஜனங்களை ரீச் ஆகலையே! உங்க பிரதி 1,100&லே ஒரு நூறு பிரதியாச்சும் நீங்க ஆட் டோகிராஃப் போட்டு வித்தாதான் உங்களுக்கு மரியாதை!’’ என்றார் சமு.

புரொபசருக்கு ரோஷமாகிவிட்டது. தன் சொந் தச் செலவில் தினசரிகளில் விளம்பரம் கொடுத் தார். பேனர் செலவு ரூ.25,000. மனைவியின் நகைகளையும் வைரத் தோட்டையும் விற்றார். அதையடுத்து புரொப சரின் குடும்ப உறவி லேயே ஓஸோன் ஓட்டை விழுந்துவிட்டது. அந்த அம்மணி, ‘‘உங்க சங்காத்தமே வேணாம்’’ என்று பிறந்த வீடு போய்விட்டாள்.

ஏறக்குறைய ரூ.60,000 செலவு செய்து, பத்து நாள் ஓய்வு ஒழிச்சலின்றி புத்தக ஸ்டாலில் காவல் தெய்வம் மாதிரி ஸ்டூலில் விறைப்பாக உட்கார்ந்து, ஸ்டால் வரவுக்குப் பில் போட்டு… எல்லா வேலையும் பார்த்தாகிவிட்டது. சொந்தக் கையெழுத்தை தான் தனது நூல் ஒன்றிலும் புரொப சரால் போட முடியவில்லை.

‘‘இன்னா சார், ஒண்ணியும் மூவ் ஆகலியே?’’ என்று இகழ்ச்சியாகக் கேட்ட ஞானத்திடம், ‘‘நம்ம சப்ஜெக்ட் கொஞ்சம் ஹெவி சப்ஜெக்ட் டுடா… அதான், மக்களை ஈர்க்கலை போல!’’

‘‘அடுத்தாப்ல எதுனா சமையல் பொஸ்தகம், ராசி பலன் பொஸ்தகம் போடுங்க சார், நல்லா மூவ் ஆகும்!’’ என்று டிப்ஸ் கொடுத்தான் பையன்.

‘‘பார்க்கறேன்’’ என்றார் புரொபசர் பலவீனமாக.

அங்கே… பதிப்பாளரும் பிரசுரகர்த்தாவுமான சமு, தன் வீட்டில் மனைவியிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்…

‘‘தெரியாத யாவா ரத்திலே இறங்கினது முட்டாள்தனம். ஆனா, அதிலும் கொஞ்சம் புத்தி சாலித்தனமா வேலை செஞ்சேன்னு வெச்சுக்கோ. புரொபசரை ஒக்காத்தி வெச்சிட்டேன். இல்லாட்டி ஸ்டாலைப் பார்த்துக்க ரெண்டு ஆளைப் போட்டு தினமும் பேட்டா, சம்பளம் சாப்பாடுன்னு 500, 1,000 செலவாகியிருக்கும். அது மட்டுமில்லே… அவரோட புத்தகம் 1,100&ஐ யும் 50% பர்சன்ட் கமிஷன் அடிப் படையிலே லாட்டா அவராண்டையே தள்ளிடப் போறேன். 60% கூடத் தரலாம்; நமக்கு நஷ்டம் இல்லே. ‘உங்க புத்தகம் பிளாட்பாரத்துக்கு வந்தா உங்களுக்குதான் அசிங்கம்’ என்கிற மாதிரி சொன்னா, புரொபசர் தன் தலையை அடகு வெச்சாவது வாங்கிக்குவார்… ரோஷக்கார மனுஷன்!’’

– 04th ஏப்ரல் 2007

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *