பாவம் பெரியப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 4,250 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோலாலம்பூரிலிருக்கும் என் பெரியப்பா மகன் பெயர் திருஞானசம்பந்தம். எனக்குத் தெரிந் தவரை இப்படியொரு பெயர்ப் பொருத்தம் யாருக்குமே வாய்த்திருக்கவில்லை! ஞானம் என்றாலும் திருஞானம் தான்! ஞானத்துக்கும் அவனுக்கும் சரியான சம்பந்தந் தான்!

பையனுக்கு வயது பதினெட்டுதான் ஆகிறது இதற்குள் அவன் சகலமும் உணர்ந்த மகா ஞானியாகி விட்டான்!

எங்கு படித்தானோ? எதிலிருந்து கற்றானோ? எவர் பேச்சில் கண்டறிந்த ஞானோதயமோ? ஆனால், பிஞ்சில் பழுத்த ஞானி என்பது பெற்றவர்கள் கருத்து. ‘பித்துக்கொள்ளி’யாய்ப் போய்விடுவானோ என்ற கவலை வேறு அவர்களுக்கு. ஆகவே, சிங்கப்பூருக்கு என்னிடம் கூட்டி வந்தார்கள்.

‘நீ தானப்பா இவனைத்திருத்துவ தற்குப் பொருத்த மானவன்’ என்று என் தலையில் நிறைய ‘ஐஸை’யும் அவனையும் கட்டிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

இப்போது என் பொறுப்பு என்ன? ‘திருஞானத்’ துக்கும் அவனுக்கும் ‘சம்பந்தம்’ இல்லாமல் செய்ய வேண்டும்!

சின்னஞ் சிறுசுகளுக்குப் புத்திமதிகள் சொல்வது தான் பெரியவர்கள் வேலை. எனக்கோ அதற்கு நேர் மாறான நிலைமை! ஏனென்றால் சின்னஞ் சிறுசான திருஞானசம்பந்தம் பெரியவர்களை எல்லாம் கதிகலங்க வைக்கும் பெரிய ஞானம்!

முதல் நாளிலேயே அவனுடைய ‘ஞான மார்க்கம்’ வெளிப்பட்டது.

அன்று நான் காலையில் எழும்போது திருஞானசம் பந்தம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மணி ஆறரையாகும் போது வேலைக்குக் கிளம்பினேன்.

‘அவன் எழுந்ததும் குளிக்கச் சொல். பசியாறுவதற்கு வேண்டியதைக் கொடு’ என்று என் மனைவி யிடம் தெரிவித்துவிட்டுத்தான் போனேன்.

வேலை முடிந்து நான் திரும்பி வரும்போது மணி பதினொன்று. கேட்டுக் ‘எங்கே ஞானம்?’ என்று கொண்டுதான் வீட்டுக்குள் பிரவேசித்தேன். என் மனைவி கலவரத்தோடு கையைப் பிசைந்துகொண்டு நின்றாள்.

என்னவோ ஏதோவென்று பதறிப் போய் உள்ளே சென்று பார்த்தால் ஞானம் படுக்கையில் கிடக்கிறான். இன்னமும் தூக்கமா, அல்லது.. என்று கவலையோடு மூக்கில் கைவைத்துப் பார்த்தேன். மூச்சு ஒழுங்காக இருந்தது! நெற்றியைத்தொட்டுப் பார்த்தேன். காய்ச்சலோ கண்றாவியோ எதுவுமில்லை.

‘அடே ஞானம்’ என்று உரத்த குரலில் கூப்பிட் டேன். ‘ம்’ என்று முனகிக்கொண்டே புரண்டு படுத்தான்.

சரிதான்! பயல் இன்னும் துயில் நீங்கி எழவில்லை. விடிந்தது தெரியாமல் தூங்குகிறான். ஆழ்ந்த நித்திரை! அனந்தசயனம், என் மனைவியின் மொழியில் விடியா மூஞ்சித்தனம்;’

என் வாண்டுப் பிள்ளைகளின் இரைச்சல் நல்ல காதுகளை செவிட்டுக் காதுகளாக்கி விடக்கூடியவை. ஆனால் ஞானத்தின் காதுகளில் அதெல்லாம் உறைக் காதது எனக்குப் பெரும் வியப்பாயிருந்தது!

‘எழுந்திருடா ஞானம்’ என்று நான் போட்ட அதட்டல் கேட்டு வேண்டா வெறுப்போடு எழுந்து உட்கார்ந்தவன் மறுபடியும் படுக்க முயன்றான். விட வில்லை நான். வலுக்கட்டாயமாகக் கட்டிலிலிருந்து இறக்க முயன்றேன்.

‘மனிதர்கள் உறங்கும்போது கடவுளுடன் உற வாடுகிறார்கள். அந்த இன்ப அனுபவம் உங்களுக்கெல் லாம் ஏற்படவில்லை போலும்’ என்று அலுப்புடன் சொல்லிக்கொண்டு கீழே இறங்கினான்.

‘அவன் கடவுளுடன் கடவுளுடன் உறவாடிக்கொண்டிருந்ததைக் கெடுத்துவிட்டதாக நம்மீது குற்றம் சாட்டுகிறான். புரிகிறதா’ என்று என் மனைவியின் பக்கம் திரும்பி மெள்ளச் சொன்னேன். அவளுக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது.

அவள் சிரித்ததைக் கண்டதும் ‘சிரிக்காதீர்கள். மனிதர்களின் சிந்திக்கும் ஆற்றலைக் சீர்குலைப்பது சிரிப்புத்தான், சிரித்துச் சிரித்தே கெடுகிறார்கள் உலக மக்கள்!’ என்று சீறினான் ஞானம்:

எனக்கு வந்த பெருஞ்சிரிப்பை அடக்கிக்கொண்டு ‘சரிதான்’டா, போய்ப் பல் தேய்த்துக் குளி போடா’ என்றேன்.

‘பல் தேய்ப்பதும் குளிப்பதும் மனிதன் ஏற்படுத்திக்கொண்ட முட்டாள் தனமான பழக்கங்கள். இயற்கையின் சட்டங்களிலிருந்து மனிதன் இவ்வாறெல்லாம் விலகிச் செல்வதால் தான் அவனை ஆயிரமாயிரம் அவதிகளுக்கு உள்ளாக்கித் தண்டிக்கிறான் இறைவன்’ என்று பிரசங்கம் புரிந்தான் ஞானம்.

என் சிரிப்பு நின்றது. ‘ம்’ என்று எரிச்சலுடன் முறைத்துப் பார்த்தேன் அவனை;

‘வேறென்ன? மனிதன் என்கிற பிராணி ஒன்றைத் தவிர உலகத்தில் வேறு எந்தப் பிராணியாவது பல் தேய்த்துக் கொள்வதுண்டா?’ என்று முணுமுணுத்தபடி வெளியே சென்றான்.

இந்தப் பைத்தியத்தை எப்படித்தான் திருத்தப் போறீங்களோ? என்கிற மாதிரி என் மனைவி என்னைப் பார்த்தாள். பார்வையாலேயே அவளுக்கு நானும் பதிலளித்தேன். “பொறுத்திருந்து பார். பைத்தியம் தெளியப்போகும் விதத்தை’ என்று!


‘அடையாளக் கார்டுக்குப் புகைப்படம் எடுக்க வேண்டும், புறப்படுடா’ என்றேன் மறுநாள்.

‘சேச்சே! என்னென்ன கட்டுப்பாடுகளையெல்லாம் ஏற்படுத்தி மனிதனுக்குத் தொல்லை தருகிறார்கள்’ என்று சலித்துக்கொண்டே புறப்பட்டான்.

‘பஸ்ஸில் போவோமா?’ என்று நான் கேட்டதும் அவனுக்கு வந்ததே கோபம்!

‘பஸ், கார், ரயில். கப்பல், விமானம்…என்றெல் ‘லாம் எதை எதையோ உண்டாக்குவதன் மூலம் மனிதன் கடவுளின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண் டிருக்கிறான். கால்களால் நடர் துசெல்லவேண்டும் என் பதுதான் கடவுளின் நியதி; அமைப்பு. அவ்வாறில்லாமல் மனிதன் உருண்டு செல்ல வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் கால்களைச் சக்கரவடிவில் ஆக்கி யிருப்பார்! பறந்து செல்லவேண்டும் என்று எண்ணி யிருந்தால் இறக்கை முளைக்க வைத்திருப்பார்!’ என்று பொரிந்தி தள்ளிவிட்டுக் கால்நடையாகவே கிளம்பி விட்டான்.

எனக்கு வந்த ஆத்திரம் இவ்வளவு அவ்வளவு அல்ல. ‘டே முட்டாப் பயலே, மனிதன் கட்டிய வீட்டில் ஏண்டா இருக்கிறாய்? மனிதன் தயாரிக்கும் துணியை ஏண்டா உடுத்துகிறாய்?’ என்று கர்ஜித்தேன். அவன் காதுகளில் எதுவும் ஏறவில்லை. அவன் பாட் டுக்கு நடந்துகொண்டேயிருந்தான். வேறு வழியின்றி அவனோடு, நானும் நடக்க வேண்டியதாயிற்று.


மேஜையில் சாப்பாடு தயாராயிருந்தது. கோழிக் குறுமாவின் ‘கமகம’ வாசனை மூக்கைத் தொட்டது, ‘சாப்பிடலாம் வாடா’ என்றுஅழைத்தேன் ஞானத்தை. அப்போது அவன் ஆகாய வெளியை அண்ணாந்து பார்த்தவாறு சிந்தனையில் வசப்பட்டிருந்தான்.

‘நாளைக்குத் திரைப்படம் பார்க்கப் போகலாம் என்கிறீர்களே, அதிலே என்ன இருக்கப்போகிறது? இதோ இங்கே ஆகாயத்திலே பாருங்கள், விந்தைச் சிருஷ்டிகள்! அற்புதக் காட்சிகள்! அவ்வளவும் இறைவனின் அதிசயப் படைப்பு!’ என்றான்.

நானும் அண்ணாந்து மேலே நோக்கினேன். நீல வானம் தவிர வேறொன்றும் அங்கில்லை. அதாவது, அவன் கூற்றுப்படிசாதாரண என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லையாம்! ‘ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டு, அவனைச் சாப்பிடக் கூட்டி வந்தேன்,

நாற்காலியில் உட்கார்ந்து மறு நொடியில் தேள் கொட்டினாற்போல் துடித்து எழுந்தான்.

‘என்னடா ஞானம்? என்ன நடந்தது?’ என்றுபதற் றத்துடன் கேட்டேன். அதற்கவன், ‘இதெல்லாம் என்ன சாப்பாடு? ம்…? மனிதன் சாப்பிடக்கூடிய சாப் பாட்டு வகைகளா இவை?’ என்று துள்ளினான்.

மேஜையில் அப்படி என்ன இருந்தது? சோறு, கோழிக் குறுமா, ரசம், கூட்டு, பொரியல், ஊறுகாய்… இவை தாம்! இவை மனிதர் சாப்பிடக் கூடாதவையா? ஒருவேளை இவன் சைவச் சாப்பாட்டு ஆசாமியோ? குழம்பிப்போய் நின்றேன். அப்போது அவன் திருவாய் மலர்ந்தது பின்வருமாறு:-

‘கறிகாய்களையோ, கிழங்குகளையோ, இலை தழை களையோ, வேறு எதையுமோ வேகவைப்பது கடவு ளுக்கு விரோதமான செய்கை! பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாவதுதான் கடவுள் எழுதியிருக்கும் விதி. மனிதர்கள் அவற்றை மடத்தனமாக நெருப்பி லிட்டு அவியல் என்றும் வறுவல் என்றும் மசியல் என்றும் என்னவெல்லாமோ செய்து இயற்கைக்குமாறு படுகிறார்கள்.

அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விடலாமா என்று என்கை பரபரத்தது. கடுகடுப்புடன் கேட்டேன். ‘அப்படியானால் நாம் எதைத்தான் சாப்பிடுவது? எப்படித்தான் சாப்பிடுவது?;

‘பட்’டென்று பதில் சொன்னான். ‘பச்சையாகவோ பழமாகவோ தின்னவேண்டும். அதுவே இயற்கையானதும் இறைவன் தருவதுமான உணவாகும்!’

திக்குமுக்காடிப் போய் நின்றேன். மனிதர்களுடன் வாழக்கூடாத இவனுடன் பேசிப் பயனில்லை என்று உணர்ந்தேன்,

என் மனைவிக்கோ சிரிப்புத் தாளவில்லை. ‘என்பாடு சௌகரியம். சமையல் வேலை மிச்சம். அவர் சொல்கிற மாதிரி இனிமேல் நம் வீட்டில் எல்லோருமே அரிசியை அரிசியாகவே உண்ணலாமா? கறிகாய்களைப் பச்சை யாகவே சாப்பிடலாமா?’ என்றாள் குறும்பாக!

‘சாப்பிடலாமே ! அவன் சொல்வதிலும் தவறுஎது வும் இருப்ப தாகத் தோன்றவில்லையே!’ என்றேன் தளர்ந்த குரலில். அதைக் கேட்டதும் அவளுக்குப் பொல்லாத கோபம் பொங்கிவிட்டது. எரித்துவிடுவது போல் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

இவளுக்கு என்ன வந்தது ‘திடு’மென்று?


இம்மாதிரிச் சில சம்பவங்களுக்குப் பிறகு திரு ஞானசம்பந்தத்தோடு ‘மோதிக்கொள்ள’ நான் விரும்பவில்லை.

மனித சஞ்சாரமற்ற இருண்ட காட்டுக்குள் தன் னந்தனியே இயற்கை வாழ்வு’ வாழவேண்டியவன் அவன்!

நாடு நகரம் சிற்றூர்களின் இன்றைய உலகமாந்தர் வாழும் நெறிமுறைகளுக்கு நேர்மாறாகப் பேசக்கூடிய ‘முற்றிப்போன முழு ஞானி’யாக எப் படியோ ஆனவன்! ஆனால், எதைப் பேசினாலும் உளறல் இல்லாத தெளிவான பேச்சு. ‘கசமுசா’ இல்லாத ‘கணீ’ரென்ற பேச்சு! இதை நான் ரசிக்க ஆரம்பித்தேன்.

அவன் என்ன சாதாரண மனிதர்களைப் போல் சாதாரண விஷயங்களையா பேசுகிறான்? முரட்டு விஷயங்கள்! கனத்த கருத்துக்கள்! சிந்தனைக் கற்சிகரங்கள்!

தத்துவ மண்மாரிகள்! மூளையை உறைய வைக்கும் பிளாஸ்டிக் மொழிகள்!

அந்த ‘மேதை’யைத் திருத்தியே தீருவேன் என்று நான் வீடுத்த சவாலை மறந்தே போனேன். அவனை எதிர்த்துப் பேசிச் சமாளிக்கும் வழி எதுவும் எனக்குப் புலப்படாமல் போனதால், அவன் வாயிலிருந்து உதிரும் ‘மகத்தான ஞான’ மொழிகளைச் சுவாரஸ்யத் தோடு செவிமடுக்கவும் தலைப்பட்டேன்.

என் மனைவி என்மீது சந்தேகக் கண்வைப்பதற்கு என் போக்கே காரணமாகியது. அதாவது, அவனைப் போல் நானும் ஞானியாகி விடுவேனோ என்று கவலைப் பட ஆரம்பித்தாள்!


அன்று பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட என் குழந்தைகளைப் போகவிடாமல் தடுத்து உட்கார வைத் துக்கொண்டு, திருஞானசம்பந்தம் தன் ஞானோப தேசத்தை அவர்களிடம் அளந்து கொண்டிருந்தான். உபதேசம் என்றால் அதுதான் உபதேசம்!

‘வாழைமரம் படிக்கவில்லை கனிகொடுக்க மறந்ததா? வான் முகிலும் கற்றதில்லை, மழை பொழிய மறந்ததா? என்ற கண்ண தாசன் பாடலைத் தழுவிய அபாரமான உபதேசம்!

பள்ளிக்கூடத்தையே பிள்ளைகள் வெறுத்துவிடக் கூடும். அவ்வளவு அழுத்தமான உபதேசம்! படித் திருந்த படிப்பையும் மறந்துவிடச் செய்யும் அருமையான உபதேசம்!

நான்கூட அந்த உபதேசத்தை கண்மூடி மெய் மறந்து ரசித்தேன் என்றால்… பிள்ளைகள் எப்படி இன்புற்றுக் கேட்டிருக்க வேண்டும்?

அந்தச் சமயம் அடுப்பங்கரையிலிருந்து அகப்பை யும் கையுமாக ஆவேசத்தோடு அங்கு தோன்றினாள் என் மனைவி.

‘இது நல்லாயிருக்கா? பிள்ளைகள் உருப்படுறதா? இல்லே நாசமாப் போறதா?’ என்று கடுமையாகச் சீறினாள்.

‘பிரமாதமான இந்த உபதேசத்தின் அருமையை நீ புரிந்துகொள்ளாமல் சீறுகிறாயே…’ என்று வாய் விட்டுச் சொல்லப் பயந்தது போல் மென்று விழுங்கினேன்.

அவ்வளவு தான் என்னை முறைத்துவிட்டு, கையிலிருந்த அகப்பையை வீசி எறிந்துவிட்டு, முந்தானையை வரிந்து கட்டிக்கொண்டு பேனாவை எடுத்துக் கடிதம் எழுத உட்கார்ந்துவிட்டாள்.

அவளுக்கிருந்த ஆத்திரத்தில் என்ன எழுதினாளோ எப்படி எழுதினாளோ, என் பெரியப்பா மறுதினமே பறந்தோடி வந்து மகன் திருஞானசம்பந்தத்தைக் கையோடு கூட்டிப் போய்விட்டார் கோலாலம்பூருக்கு!

அந்த ‘மகாஞானி’யிடம் இப்போது என்ன பாடு படுகிறாரோ – பாவம் பெரியப்பா!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *