யார் உலகம்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 8,870 
 

பத்திரிகை ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். “நீங்கதான் பேசணும்னு வருந்தி வருந்தி அழைச்சிருக்காங்க, சிங்கப்பூரிலேருந்து!”

மல்லிகாவால் அவருடைய உற்சாகத்தில் பங்குகொள்ள முடியவில்லை. “இங்க வேலை தலைக்குமேல கிடக்கே, ஸார்,” என்று தப்பிக்கப் பார்த்தாள்.

“என்னிக்குமா நமக்கு வேலை இல்ல? அதை யாராவது பாத்துப்பாங்க. நீங்க போறீங்க!” உரிமையாக மிரட்டினார். “ஒங்களுக்குக் கைவந்த தலைப்பு — இது ஆண்களின் உலகம்!” ஆசிரியர் சிரித்தார்.

“வீட்டில..,”

“அட! நீங்க மத்த பொண்ணுங்க மாதிரியா? டாக்டர் வாசன் ரொம்ப நல்ல மனுசரில்ல! ஒங்களைப்பத்தி எவ்வளவு பெருமையாப் பேசுவார்! நானே அவருக்குக் `கால்’ அடிச்சுச் சொல்லிடறேன். போன தடவைகூட, பினாங்குக்கு அவர்தானே கூட்டிட்டுப் போனார்!”

அவர் அழைத்துப் போனதுதான் பிறருக்குத் தெரியும். போகிறபோதும், திரும்புகிறபோதும், ஏன் விழா மண்டபத்துக்குள் நுழையும்வரை வாய் ஓயாது அவளை ஏசிப் பேசியது அவளுக்குத்தானே தெரியும்!

பெண்கள் என்றாலே `ஏளனம்’ என்றிருந்தவர், தன்னைவிட ஒரு பெண் பிரபலமாக விளங்குவதா என்றே அவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சிறுகச் சிறுக அவளை அடக்கி, தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள உத்தேசித்திருந்தாரோ என்று காலங்கடந்து மல்லிகா யோசித்தாள்.

இல்லாவிட்டால், முதலிரவன்றே, “நான் சொந்தமா கிளினிக் வெச்சிருக்கேன். நீயும் வேலைக்குப் போனா, வீட்டையும், என்னையும் யாரு கவனிச்சுப்பாங்க? அதனால, ஒன் வேலையை விட்டுடு,” என்று கண்டிப்பான தொனியில் ஆரம்பித்திருப்பாரா?

அவரது கோரிக்கையை அவள் உடனே நிராகரித்தாள். “படிக்கிறதும், எழுதறதும்தான் என் உயிர் மூச்சு. இன்னொரு தடவை இந்தப் பேச்சை எடுக்காதீங்க!”

அவர் முகம் இறுகிப்போனது இன்றும் மல்லிகாவின் கண்முன் நின்றது.

அது என்னவோ, அவள் மேடைகளில் பேசும்போது கணவரும் உடன் வந்தார்.

`மனைவிக்கு எத்தனை பக்கபலமாக இருக்கிறார்! இவருக்கு ஒரு பலத்த கைதட்டல் குடுங்க,’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் –அனேகமாக, ஒரு பெண் — ஆரவாரமாக ஒலிபெருக்கியில் கூறுவாள். முகங்கொள்ளாப் பூரிப்புடன் எழுந்து நின்று, கூப்பிய கரங்களுடன் ஒரு வட்டமடித்துவிட்டு உட்காருவார்.

உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை எல்லாம் வெளிக்காட்ட முடியாது, ஒரு சிறு புன்னகையுடன் அமர்ந்திருப்பாள் ஆதர்ச மனைவி.

இந்த அவலத்தையெல்லாம் ஆசிரியருடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? அவரும் ஆண்தானே!

வரண்ட புன்னகை ஒன்றைச் சிந்தினாள் மல்லிகா.

அவளுடைய சம்மதத்திற்கு அறிகுறி அது என்று எடுத்துக்கொண்ட ஆசிரியர், “இந்த வாரத்துக்கான கேள்வி-பதிலை முடிச்சுட்டீங்களா?” என்றபடி, நடையைக் கட்டினார்.

பெண்கள் அதிகமாகப் படிக்கும் அப்பத்திரிகையில் ஒரு தனிப்பகுதியை அவள் நிர்வகித்தாள். குழந்தைகள், மாமியார் கொடுமை என்று ஆரம்பித்தது, சமீப காலமாக வேலை செய்யும் இடங்களில் ஆண்களால் வதை, பிற பெண்களின் குத்தல் பேச்சு, கணவன்மார்களின் அதிகாரம் என்று விரிவடைந்திருந்தது.

பாதி படித்திருந்த கேள்வியை மீண்டும் எடுத்தாள் மல்லிகா. ஒரு நீண்ட கட்டுரையைப்போல, தனது திருமண வாழ்க்கை என்னும் `நரகத்தை’ (அவள் எழுதியிருந்தது) விவரித்திருந்தாள் அப்பெண். அதில் கலந்திருந்த உணர்ச்சிப்பெருக்கு மல்லிகாவை அவளுடன் பேசும்படி தூண்டியது.

மல்லிகாவின் குரலைக் கேட்டு மகிழ்ந்தே போனாள் அப்பெண்மணி. “எங்க மாநில சுல்தான் எங்க வீட்டுக்காரருக்கு டத்தோ(DATO) பட்டம் குடுத்திருக்காரா! பூவோட சேர்ந்த நார் மாதிரி, எனக்கும் டத்தின்கிற பட்டம். கலை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்க என்னைக் கூப்பிடறாங்க. காசு குடுத்தா, என்னதான் செய்ய முடியாது! சொந்தமா காரும், டிரைவரும் ஏற்பாடு செய்திருக்காரு எங்க வீட்டுக்காரர்!” அவள் மூச்சு விட்டுக்கொண்டபோது, மல்லிகாவிற்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இவளைப்போன்ற பெண்களுக்கு என்ன மனக்குறை இருக்க முடியும்? இன்னும் எதுவும் தேவையில்லை என்ற நிலையே மனத்துள் வெறுமையை உண்டுபண்ணிவிடுமோ என்று அவள் யோசனை போயிற்று.

“வீட்டில நடக்கறது யாருக்குத் தெரியும்? அவர் நில்லுன்னா நிக்கணும், வந்து படுன்னா படுக்கணும்!” சற்று மாற்றிச் சொன்னாள். “இல்லாட்டி, அடி, ஒதை, இன்னும் கேக்கக்கூடாத வசவு. இவர் என்னை நடத்தற லட்சணத்தைப் பாத்து, என் மூணு பிள்ளைங்களும் பயந்துட்டாங்க. `கல்யாணம் கட்டிட்டு, ஒங்களைமாதிரி அடிமையா இருக்க என்னால முடியாதும்மா,’ன்னு மக வெளிப்படையாவே சொல்லிட்டா”.

“எத்தனை வயசுப் பிள்ளைங்க?” மல்லிகா கேட்டுவைத்தாள், அவள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று உணர்த்துவதைப்போல.

“எல்லாருக்கும் முப்பத்தஞ்சு வயசுக்குமேல ஆயிடுச்சு. ஆனா, இன்னிக்கும் அப்பாவைக் கண்டா நடுங்குவாங்க!”

மல்லிகா சமூக இயலில் முதுகலை பட்டம் பெற்றவள். இருப்பினும், இவளை எப்படிச் சமாளிப்பது என்று அயர்ந்தவளாக, “ஒங்க கேள்வியைச் சொல்லலியே?” என்று கேட்டாள்.

“அதிகாரம் செலுத்தினாதான் ஆம்பளைன்னு இவங்களுக்கு யார் சொல்லிக் குடுத்தாங்க? ஒரு பொண்ணு என்ன படிச்சாலும், எவ்வளவு பெரிய வேலை பாத்தாலும், அவளோட நிலைமை ஏன் இன்னும் மாறலே? இதான் என்னோட கேள்வி!”

ஒரு பக்கத்தில் விடை காணக்கூடிய பிரச்னையா இது? காலம் காலமாக நடந்து வருவது!

யாரால், எப்படி, இந்த நிலைமை மாறும்?

மாற விடுவார்களா ஆண்கள்?

வீட்டுக்குப் போன பிறகும், மல்லிகாவின் மனதில் இக்கேள்விகள் சுழன்று சுழன்று வந்தன.

“என்னைப் பேசச் சொல்லி, சிங்கப்பூரில கூப்பிட்டிருக்காங்க,” உணர்ச்சியற்ற குரலில் கணவரிடம் தெரிவித்தாள்.

“வேற வேலையில்ல,” வெடித்தார் வாசன். “யாராவது கூப்பிட்டா, ஈன்னு இளிச்சுக்கிட்டு, ஒடனே அவங்க பின்னாலேயே ஓடிடுவியே! ஆம்பளைங்களோட சேர்ந்து இருந்தாத்தானே ஒனக்கு ஆனந்தம்!”

அவர் கூறியதில் உண்மை இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், மனம் என்னவோ நொந்துபோனது. கனத்த இதயத்துடன் அப்பால் நகர்ந்தாள்.

மேடையில் நின்று தான் உரையாற்றுகையில், பலரது கண்களில் தோன்றப்போகும் ஒளிப்பொறியை நினைத்தவுடன் எழும் உற்சாகமோ, ஆர்வமோ இப்போது எழவில்லை.

புறப்பட இரண்டே நாட்கள் இருந்தன. குறிப்பாவது எடுத்துக்கொள்ளலாம் என்று காகிதத்துடன் உட்கார்ந்தவளுக்கு அழுகைதான் வந்தது.

இருபத்தி ஐந்து வருடம்! போலி மணவாழ்க்கை.

`ஆதர்ச தம்பதிகள்!’ என்று இவர்களை உலகமே கொண்டாடுகிறது!

மல்லிகா உட்கார்ந்திருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், ஏதாவது வேலை செய்தபோதும் எண்ணங்கள் முடிவற்றுச் சுழன்றன.

ஏதோ பிறந்தோம், இருக்கப்போவது சில ஆண்டுகள். இன்றோ, நாளையோ நமக்கு மரணம் நேரலாம். எப்போது என்றுகூடத் தெரியாது. இவ்வளவு அநித்தியமான வாழ்க்கையில் தானும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்து, பிறரையும் அப்படியே வைத்துக்கொள்ள சிலருக்கு ஏன் தெரிவதில்லை?

ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஏன் இவ்வளவு சச்சரவு?

வேலைக்குப் போய் வீடு திரும்பியதும், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பதோ, சமைப்பதோ இன்றும் பெண்ணின் கடமையாகத்தானே இருக்கிறது!

ஆண், தான் வேலை பார்க்கும் இடத்தில் ஏதேனும் குழப்பம் என்றால், வீட்டிலிருக்கும் அப்பாவிப் பெண்ணைச் சாடுவானாம். உடல் உபாதைகள், வேலைப்பளுவுடன், அதையும் அவள் தாங்க வேண்டும். ஏனென்றால், அவள் பொறுமையின் சிகரம் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறாளே!

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாங்கும் அடிதான் ஒருவரை தத்துவ ஞானி ஆக்குகிறது என்று எண்ணம் போக, மல்லிகாவால் சிரிக்கக்கூட முடிந்தது.

ஒரே வீட்டில் இரு அந்நியர்கள்! கடந்த ஒரு மாதமாக — தன்னைப் பேசும்படி அயல் நாட்டுக்காரர்கள்கூட அழைத்திருக்கிறார்கள் என்று அவள் தெரிவித்த அன்றையிலிருந்து — தானும், கணவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லையே!

ஆரம்பத்தில் விறைப்பாக இருந்தவர், போகப் போக, எதையோ இழந்தவராய், இருந்த இடத்தைவிட்டு நகராது, ஒரே இடத்தை வெறித்தபடி இருந்தாரே! முன்பெல்லாம் அதை அலட்சியப்படுத்தினாலும், இப்போது அதற்கு அர்த்தம் புரிந்தது.

தனது அதிகாரம் இனி செல்லுபடியாகாது என்று சந்தேகமறப் புரிந்தவுடன், ஒரு விரக்தி ஏற்பட்டிருக்கிறது.

ஆக, ஆணின் பலம் பெண்ணின் கையில்தான் இருக்கிறது! வெளிப்பார்வைக்கு, இது ஆண்களின் உலகமாகத் தெரியலாம். ஆனால், பிறர் அடித்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, அழுதபடி தாயைத் தேடி ஓடும் சிறுவனைப்போல், எல்லா நிலைகளிலும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்!

பாவம் அவன்! உணர்ச்சியளவில் தன் பலகீனத்தை மறைக்கவே உடல் பலத்தையும், உரத்த குரலையும் பெரிதாகக் காட்டிக்கொள்கிறான். இது புரிந்தே, பெண்ணும் அவனுக்கு விட்டுக்கொடுப்பதுபோல் சாமர்த்தியமாக நாடகம் ஆடுகிறாள்! ஏனெனில், அவள்தான் இவ்வுலகில் சக்தி!

மேடையில் தான் என்ன பேச வேண்டும் என்று இப்போது தெளிவு பிறந்தது.

“வாங்கம்மா,” என்று சிரித்த முகத்துடன் வரவேற்ற விழா ஏற்பாட்டாளர் — ஒரு ஆண் –, “ஆம்பளைங்களை ஒரு சாத்து சாத்துங்க!” என்றார் விளையாட்டாக.

“சேச்சே!” என்று மறுத்தாள் மல்லிகா.

(தமிழ் நேசன், வல்லமை.காம்)

Print Friendly, PDF & Email

1 thought on “யார் உலகம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *