(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘திருமணம் செய்பவர்களுக்குப் பரிசு’ இந்தச் செய்தித் தலைப்பை அன்று பத்திரிகையில் கண்டதும், அந்தப் பரிசுக்காகவே நானும் திருமணம் செய்து கொள்ளலாமா என்ற எண்ணத்துடன் மேற்கொண்டு அச்செய்தியைப் படிக்கலானேன். ஆனால் பரிசு என்ன என்பதை அறிந்ததும் எனக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது. அது ஒரு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய புத்தகமாம்!
முழு விவரமும் இது தான் இலங்கை அரசாங்கம் இனிமேல் திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளுக்கும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நூல் ஒன்றை இலவசமாக வழங்கவிருக்கிறதாம். இப்பரிசு திருமணப்பதிவு அதிகாரிகள் மூலமாக திருமணம் பதிவானதும் அவர்களுக்குக் கொடுக்கப்படுமாம்.
‘திருமணப்பரிசு ஒரு டிரான்சிஸ்டர் றேடியோவாகவோ அல்லது ஒரு ஸ்கூட்டராகவோ இருக்கக்கூடாதா?’ என்ற ஆர்வத்தோடு செய்தியைப் படித்த எனக்கு இது எப்படி இருக்கும்? நான் திருமணம் செய்தால் இதைவிடச் சிறந்த பல நூல்களை நண்பர்கள் பலர் திருமணப் பரிசாகத் தரக் காத்திருக்கிறார்களே! அந்தப் பரிசுகளோடு ஒப்பிடும்போது அரசாங்கத்தின் இந்தப் பரிசு எனக்கு எம்மட்டு?
அரசாங்கத்தின் இத்திருமணப் பரிசின் நோக்கம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பரவச் செய்வதே தவிர திரு மணங்கள் செய்வதை ஊக்குவிப்பதல்ல. அந்தப் பரிசு நூலில் அளவோடு குழந்தைகளைப் பெறவேண்டிய தன் அவசியமும், குழந்தைகள் பிறக்காமல் இருப்பதற்கான வழிகளும் கூறப்பட்டிருக்கும் எனத் தெரியவருகிறது.
அப்படியானால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அவசியம்பற்றி இனிமேல் திருமணம் செய்பவர்களுக்கு மட்டும் விளக்கினால் போதுமென அரசாங்கம் நினைக்கிறதா? கடந்த காலங்களில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அல்லவா அவர்களது முகவரிகளைத் தேடிப்பிடித்து இந்நூல்களை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் புதுத் தம்பதிகள் அளவோடு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதே சமயம் அவர்களோ அளவுக்கதிகமான குழந்தைகளைப் பெற்றுத் தள்ளி அரசாங்கத்தின் நோக்கத்தைப் பாழாக்கி விடுவார்களே!
இது இவ்வாறிருக்க, இல்லற வாழ்வில் புகும் எல்லாருக்குமே இனிமேல் ‘குடும்பக் கட்டுப்பாடு’ பற்றிய நூல் இனாமாகக் கிடைக்குமென்றாலும் அவர்கள் எல்லாரும் நிச்சயம் அதைப் படிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்படி நான் சொல்லுவதற்குப் பல காரணங்கள் உண்டு .
(1) திருமணமான புதிதில் இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடையாது.
(2) குடும்பம் என்று ஆகிவிட்டால் அவர்களுக்கு வேறு பல முக்கிய பொறுப்புக்கள் வந்து விடுமல்லவா?
(3) ‘குடும்பக் கட்டுப்பாடு’ பற்றிய அந்த நூல் நாவல் களைப் போலவோ அல்லது சினிமாச் செய்திகளைப் போலவோ படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் ஒரு சுவையான நூலாக இருக்கமாட்டாது.
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் எத்தனையோ பேர்கள் இந்த நூலைத் தாங்கள் உத்தியோகங்களில் இருந்தும் – பிள்ளைகள் பெறுவதிலிருந்தும் பென்சன் எடுக்கும் காலங்களில் தான் படிப்பார்கள். இப்படி நடந்தால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எதிர்பார்க்கும் வெற்றியைத் தரமாட்டாது அல்லவா? இதைத் தவிர்க்க அரசாங்கம், பரிசு நூல் வழங்கப்பட்ட சகலருக்கும் இரண்டு ஆண்டுகளின் பின் நூலை அவர்கள் சரியாகப் படித்திருக்கிறார்களா என்பதை அறியும் முகமாக ஒரு பரிட்சை வைக்கலாம். அந்தப் பரீட்சைக்குத் தோன்றுவது அவர்களுக்குக் கட்டாயமாக்கப்படுவதுடன், அதில் தேறியவர்களுக்குப் புத்தகங்கள் அல்லாத வேறு பரிசுகளும் வழங்கலாம் என்பது என் கருத்து.
நிற்க, குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நூல் இளம்சந்ததியினரின் – குறிப்பாக காதலித்துக் கொண்டிருப்பவர்களின் கண்களில் பட்டுவிட்டால் அதனால் விபரீதமான பலன்கள் உண்டாகலாம். ஆனால் எப்படித்தான் ஒழித்து மறைத்து வைத்திருந்தாலும் அவர்களும் இதனைப் படிக்காமலோ விடப்போவதில்லை. இந்த அபாயத்தை நினைக்கும் போது எனக்கு இன்னொரு வழி தோன்றுகிறது. அதாவது நூல்கள் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு மாதக் கடைசி நாளன்றும் ஒரு மண்டபத்தை ஒழுங்குசெய்து, அந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்ட அத்தனை பேர்களையும் ‘பிடி விறாந்தில்’ அங்கு அழைத்து, குடும்பக்கட்டுப் பாடு பற்றி அவர்களுக்கு ஒருவர் ‘லெக்சர்’ அடிக்கலாமே! இதனால் படிக்கத் தெரியாதவர்களும் கூடப் பயனடையலாம் அல்லவா?
ஏற்கனவே உத்தேசித்தபடி குடும்பக் கட்டுப்பாடு நூல் விநியோகத்திட்டம் நடந்து தான் ஆகும் என்றால், அதனால் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் பணச்செலவுகளைச் சரிக் கட்டுவதற்சம் ஒரு யோசனை கறப்போகிறேன். அதைக் கேட்டுவிட்டு, ஓர் எழுத்தாளனின் புத்தி அப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்லக்கூடாது.
அதாவது அந்த நூலில் விளம்பரங்களையும் சேர்த்தால் நல்லது என்பதையே சொல்ல வந்தேன். வருங்காலத்தில் அநேகமாக இலங்கையில் உள்ள எல்லா வீடுகளிலுமே இடம்பெறப்போகும் அந்த நூலுக்கு விளம்பரம் கொடுப்ப தென்றால் வர்த்தகர்கள் போட்டி போட்டுக் கொண்டல்லவா முன்வருவார்கள். ஆனால் அந்த விளம்பரங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்யக் கூடியனவாக அமையாது கவனித்துக்கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் விடச் சிறந்த முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமுல் செய்வதற்கு நான் இன்னுமொரு அரிய வழியையும் இதோ கூறுகின்றேன்.
‘திருமணம் செய்பவர்களுக்குப் பரிசு’ என்பதை விட்டு விட்டு ‘திருமணம் செய்யாதவர்களுக்குப் பரிசு’ என அரசாங்கம் அறிவிப்பது தான் அந்த அரிய வழியாகும். அப்பரிசு டிரான்சிஸ்டர் றேடியோ ஸ்கூட்டர் போன்றவைகளாக இருக்கவேண்டும். (அப்படியானால் நிச்சயம் எனக்கும் ஒரு பரிசு கிடைக்கும்!) அதே சமயம் குடும்பக் கட்டுப்பாடு பற்றி அரசாங்கம் அச்சிட்டு வைத்திருக்கும் அத்தனை நூல்களையும் தூக்கி இந்து சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டும் (அதற்கு வேண்டுமானால் நானும் ஒரு கை பிடிக்கலாம்) எதற்காக அப்படிச் சொல்லுகிறேன் என்பது தெரியும் தானே?
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.