கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 4,906 
 
 

`கமலா’ என்று ஒரு பெண். பாவாடை கட்டிக்கொள்ளத் தெரியாமல் மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலம் முதல், அவளை எனக்குத் தெரியும். நான் அவளை எப்போதும் பரிகாசம் செய்துகொண்டிருப்பேன்.

“கமலா, உனக்கு அறுபது வயதில் சிறு பிள்ளையாய் ஒரு புருஷனைப் பார்த்து வைத்திருக்கிறேன். ரொம்ப அழகாக இருப்பான். தடியை ஊன்றிக்கொண்டு கூனிக் கூனி இடுப்பைப் பிடித்துக்கொண்டு நடப்பான்.”

“போங்க மாமா… நீங்கள் எப்பப் பார்த்தாலும் இப்படித்தான்!”

“அய்யோ, நான் பொய் சொல்கிறேன் என்றா நினைக்கிறாய்? உண்மையாகப் பார்த்து வைத்திருக்கிறேன். குழந்தை மாதிரி வாயில் ஒரு பல் இராது.”

“அய்ய்ய்யோ! அய்யோ… போங்க மாமா! நீங்கள் இப்படியெல்லாம் பேசினால் கெட்டகோபம் வரும். நான் போய்விடுவேன், இங்கு இருக்க மாட்டேன்.”

“நிஜமாய்த்தான் சொல்கிறேன் கமலா. உனக்கு வைரத்தோடு, வைர லோலாக்கு, ஸ்வஸ்திக் வளையல் எல்லாம் போடுவான். `கமலா… கமலா’ என்று தடியை ஊன்றிக்கொண்டே கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நொண்டி நொண்டி உன் பின்னாலேயே ஓடி வந்துகொண்டிருப்பான்.”

“அய்ய்ய்யோ போதுமே… மூடுங்களேன் வாயை!” என்று சொல்லிக்கொண்டே மேலே சொல்லவிடாமல் என் வாயை அமுக்கிப் பொத்துவாள்.

கமலாவுக்கு 16 வயதாகி, சமீபத்தில் கல்யாணம் நடந்தது. புருஷன் சின்னஞ்சிறு பிள்ளை. நன்றாகப் படித்தவன். சம்பாதிக்கிறான். ரொம்பவும் அழகாக இருப்பான். அப்பேர்ப்பட்ட புருஷன் கிடைத்தாரே என்று கமலாவுக்குப் பெருமை.

ஆறேழு மாதங்களாகியும் இப்போதுதான் அவளைப் பார்த்தேன். எனக்கு நமஸ்காரம் செய்தாள்.

“உட்காரு கமலா” என்றேன். அவள் தயங்கினாள்.

சாதாரண கேள்விகள் கேட்டு அவள் வெட்கத்தைப் போக்கி முன்புபோல் சகஜமாகப் பேசும்படியான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று, அவளுடைய மாமனார்-மாமியார், மைத்துனன்மார்கள் இவர்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.

“உன் புருஷனுக்கு இப்போது என்ன சம்பளம்?”

“அதெல்லாம் எனக்கென்ன தெரியும் மாமா?”

“புருஷனுக்கு என்ன சம்பளம் என்று தெரியாமல்கூடவா இருக்கிறாய்?”

“தெரியாது மாமா?”

“சரியாய் 10 மணிக்கு ஆபீஸுக்குப் போய்விடுவான் போலிருக்கிறது!”

“ஒன்பது மணிக்கே புறப்பட்டுப் போய்விடுவார்.”

“அப்புறம், சாயந்திரம் 5 மணிக்குத்தானே வருவான்?”

“ஐந்துக்கு வர மாட்டார். ஆறுக்குதான் வருவார். சில நாள் 8 மணிகூட ஆகிவிடும்.”

“அதுவரைக்கும் நீ `எப்போ வருவாரோ எந்தன் களி தீர!’ என்று அவனையே நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாய்!”

“போங்க மாமா!”

“என்னை எங்கே போகச் சொல்கிறாய்?”

“பின்னே, நீங்க இப்படியெல்லாம் பேசுகிறீர்களே.”

“எப்படியெல்லாம் பேசுகிறேன்? உள்ளதைச் சொன்னேன். நீ அவனையே நினைத்துக்கொண்டே உட்கார்ந்து இருக்கிறதில்லை?”

“இல்லை.”

“நிச்சயமாய்?”

“நிச்சயமாய்.”

“புளுகு.”

“புளுகில்லை. நிஜம், நிஜம், நிஜம்.”

எங்களுக்குள் முன்பு இருந்த சிரிப்பு, விளையாட்டு, சிநேகம் ஏற்பட்டுவிட்டன.

“உன் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!”

“உங்களுக்குத் தெரியும்! நீங்கள்தான் மாமியை எப்போது பார்த்தாலும் நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.”

“ஆமாம். உன்னைப்போல் `இல்லை’ என்கிறேனா? நினைத்துக்கொண்டுதான் உட்கார்ந்திருக்கிறேன். உன் புருஷன் என்ன கோபக்காரனா… சாதாரணமாகச் சிரித்து விளையாடிக்கொண்டு குஷியாக இருப்பவனா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது மாமா.”

“எதைக் கேட்டாலும் தெரியாது என்கிறாயே? உனக்கு என்னதான் தெரியும்?”

“எனக்கு ஒன்றுமே தெரியாது. போய்வருகிறேன் மாமா.”

“உட்காரு சொல்கிறேன். ஒன்றும் சொல்லாமல் `போகிறேன்’ என்கிறாயே. உன் புருஷனுக்கு சங்கீதம் தெரியுமா?”

“அது என்ன தெரியுமோ, எனக்கென்ன தெரியும்?”

” `தெரியுமா?’ என்று கேட்கிறதுதானே?”

“`நான் போய்வருகிறேன் மாமா.”

“உட்காரு… உட்காரு. சங்கீதம் தெரிந்தவனாக இருந்தால், வலிப்பு வந்தவன் மாதிரி மூஞ்சியைக் காண அடித்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் `கொய்… கொய்..!’ என்று இழுத்துக்கொண்டிருப்பானே? அதுகூடவா காதில் விழுந்திடாது?”

“எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது மாமா.”

“அகமுடையானைத் தெரியுமோ, இல்லையோ.”

“அதுகூடத் தெரியாது.”

“அவனை நீ பார்த்ததே இல்லே?”

“இல்லை.”

“யாரோ இப்போது `9 மணிக்கெல்லாம் ஆபீஸுக்குப் போய்விடுவா, ராத்திரி 8 மணிக்குத்தான் வருவா’ என்றாயே, அது யார்?”

`அது யாரோ தெரியாது.”

கல்யாணமான புதிதில் பெண்களிடத்தில் புருஷனைப் பற்றிப் பேசினால் அவர்கள் இப்படித்தான் `கோனாமானா’ என்று பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் மாத்திரம் அடங்காத சந்தோஷம் விளங்கிக்கொண்டிருக்கும்.

“புருஷன் பேரை எடுத்தாலே, உனக்கு வாயெல்லாம் பல்லாய்ப்போய்விடுகிறதே!”

“மாமி பேச்சை எடுத்தால் உங்களுக்கு அப்படி இருக்கிறது.”

“ஆமாம். உன்னைப்போல் `இல்லை’ என்கிறேனா? உன் புருஷன் உன்னை என்னவென்று கூப்பிடுகிறது?”

“நீங்கள் மாமியை என்னவென்று கூப்பிடுகிறது?”

“பேரைச் சொல்லித்தான் கூப்பிடுகிறது.”

“மற்ற பேர்களும் அப்படித்தான் கூப்பிடுவா.”

“அதைக் கேட்கவில்லை. `கமலா… கமலா’ என்று சாதாரணமாகக் கூப்பிடுகிறதுதான் இருக்கிறதே. அந்தரங்கமாகக் கூப்பிடுகிற பேர் ஒன்று இருக்குமே?”

“நீங்கள் மாமியை என்னவென்று கூப்பிடுகிறது?”

“‘ஏ… சைத்தான்!’ என்பேன்.”

“ஹோ… ஹோ… ஹோ!”  இடி இடி என்று சிரித்தாள்.

“என்னைக் கேட்டாய் நான் சொன்னேனே. நீ இப்போது சொல்ல வேண்டுமோ இல்லையோ?”

“எனக்கு செல்லப்பேரு ஒன்றுமில்லை.”

“நீ சொன்னா நான் நம்புவேனா… இல்லாமல் இருக்குமா? எப்படிக் கூப்பிடுகிறான் சொல்லு?”

“இல்லை மாமா. போங்க மாமா, என்னை ஒன்றும் கேட்காதீர்கள். எனக்கு ஒன்றும் தெரியாது மாமா” என்று எவ்வளவோ சாகசங்களும் பிகுவும் பண்ணி, கடைசியில் ” `தேள் குட்டி’ என்று கூப்பிடுகிறது” என்று சொல்லி, கையால் முகத்தை மூடிக்கொண்டு பிடித்தாள் ஓட்டம்.

“ஏ… தேள் குட்டி! இங்கே வா” என்று சிரித்துக்கொண்டே அவள் பின் கத்தினேன். போனவள் போனவள்தான். எத்தனை தரம் கமலா' எனக் கூப்பிட்டாலும், ஒருதரம்தேள் குட்டி’ எனக் கூப்பிடுகிற சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்குமா? ஆனால், வேறொருவர் அதைக் கேட்க முடியுமோ?”

காதல் பேச்சுகளே விநோதம்! வாழ்க்கையில் இனிப்பு பூராவும் அல்லவா சிருஷ்டியில், காதலில் திணிக்கப்பட்டிருக்கிறது.

– எஸ்.வி.வி எழுதிய `காதல் பேச்சு’ என்ற சிறுகதையின் பகுதி இது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *