கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 16,092 
 
 

சர்வ சாதாரணமாக ‘நீ எப்பவாவது குற்றாலத்துல குளித்ததுண்டோ?’ என்று கேட்பது போல் ‘நீ எப்பவாவது பேயைப் பார்த்ததுண்டோ?’ என்று எனது நெருங்கிய நண்பனின் தாயாதி ஒரு முறை என்னைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

“அதான் இப்ப என் எதிரிலேயே பார்த்துக் கொண்டே இருக்கிறேனே…” என்று கூறி அவர் மனதைப் புண்படுத்த விரும்பாததால், “நான் பேயைப் பார்த்தது இல்லை” என்ற பாவத்தில் தலையாட்டினேன்.

நிற்க… எனது நண்பனின் தாயாதியை உங்களுக்குச் சிறிது அறிமுகம் செய்து வைக்கிறேன். பேய், பிசாசு, ஆவி என்று ஆ.வி-யில் (ஆனந்த விகடனில்) கவர் ஸ்டோரியாக வருமளவுக்கு அவர் அவை சம்பந்தமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறார். அவரைத் தாயாதி என்று நேரில் அறிமுகம் செய்வித்தாலும் மறைவில் பேயாதி என்று எனது நண்பனே கேலியாகக் கூறுவதுண்டு. எனக்குத் தெரிந்து பெயர் பொருத்தம் அவருக்கு இருப்பது போல எவருக்குமே கிடையாது. பேய், பிசாசு, பூதம் என்று பிற்காலத்தில் தமது மகன் ஆராய்ச்சி செய்யப் போகிறான் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்தது போல அவரது பெற்றோர் அவருக்கு மாத்ருபூதம்’ என்று நாமகரணம் செய்வித்துள்ளார்கள்.

ஹஹா… ஹ்ஹா …. 3D படம்னு நினைச்சீங்களா? கண்ணாடி இல்லாமலே பார்த்து பயப்படலாம்! ஊஊ… உர்ர்ர்….

ஒரு பிரபல மருந்து கம்பெனியில் மாத்ருபூதம் மெடிக்கல் ரெப்ரஸென்டேடிவ்வாக இருக்கிறார். மாத்ருபூதத்தின் மேலதிகாரியே அடிக்கடி, “என்னதான் ஆவி, பிசாசு என்று ஹாபியாக நேரத்தை வீணடித்தாலும் வேலை என்று இறங்கிவிட்டால் மாத்ருபூதம் பேய்த்தனமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்” என்று கூறுவாராம்.

பேய், பிசாசு இவற்றுக்குப் பயப்படாதவர்கள் கூட இருட்டிய நேரங்களில் தனியான இடத்தில் திடீரென்று மாத்ருபூதத்தைப் பார்த்தால் சிறிது மிரண்டுவிடுவார்கள்.

ரெப்ரஸென்டேடிவ்வாக இருந்து அலைவதாலோ என்னவோ தெரியவில்லை, எப்பொழுதும் மாத்ருபூதத்தின் ஹேர்ஸ்டைல் மயிர்க்கூச்செறிந்து பரட்டையாக இருக்கும். முன் வரிசைப் பற்கள் ஒருவேளை மறந்து போய் உதடுகளுக்கு மேலே வளர்ந்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு வெளியே துருத்திக்கொண்டிருக்கும். அடர்த்தியாக இணைந்த அவரது புருவங்களைப் பார்க்கும் போது அவரது ‘கிராப்பு ‘ புருவத்திலிருந்தே ஆரம்பமாகிறதோ என்று தோன்றும். இரண்டு செவி மடல்களிலும் கறிவேப்பிலைக் கொத்தாக முடிகள். செல்வது அவரா அல்லது அவரது நிழலா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் டெலிபோன் கலர்’ மேனி. மொத்தத்தில் அய்யனார் சிலைக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அய்யனார் மண் குதிரையில் ஆரோகணித்திருப்பார்… மாத்ருபூதம் புல்லட்டில் பறந்து கொண்டிருப்பார்!

வெளிநாட்டுத் தபால் தலைகள், நாணயங்கள் சேகரிப்பது சிலருக்கு ஹாபி என்றால் பேய், பிசாசு, ஆவி இவை சம்பந்தமாகப் பிறரது அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து எழுதி வைத்துக் கொள்வது மாத்ருபூதத்தின் ஹாபி. என்னிடம் இவரது இருபது வருட ஆராய்ச்சியின் பலனாக உருவான பல கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அந்தப் புத்தகத்தில் பிசாசுகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் பிசாசுகளை கொள்ளிவாய்ப் பிசாசு என்று தரம் பார்த்துப் பிரித்துத் தனித்தனியாக விவரித்துள்ளார்.

“அது என்ன சார் கோணவாய் பிசாசு, கேள்விப்படாததாக இருக்கிறதே?” என்று கேட்டதற்கு மாத்ருபூதம் பின்வருமாறு மொழிந்தார்:

“சிலர் சாகும் போது பாரிசவாயு காரணமாக வாய் கோணியபடி இறந்துவிடுவார்கள். அவர்கள் பிசாசாக அலையும் பட்சத்தில் கோணவாய்ப் பிசாசாக அலைவார்கள்.”

சிரித்த முகத்தோடு உயிர் பிரிய வேண்டியதன் அவசியம் எனக்கு அன்றுதான் புரிந்தது.

ஒருவேளை எதேச்சையாகப் பிசாசையோ அல்லது பேயையோ நாம் சந்திக்க நேர்ந்தால், நாம் பார்த்தது பிசாசா அல்லது பேயா என்று எளிதில் அடையாளம் தெரிந்துகொள்ள மாத்ருபூதத்தின் புத்தகத்தில் பிசாசுக்கும் பேய்க்கும் உள்ள குறைந்தபட்ச வித்தியாசங்களும் அதிகபட்ச ஒற்றுமைகளும் விவரிக்கப்பட்டு இருந்தன. இவையெல்லாம் தேவைதானா என்று கேட்காதீர்கள். அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் பிசாசைப் பேய் என்று நம்பி அசட்டுத்தனமாக அதனிடமிருந்து தப்புவதற்காகத் தவறான வழிகளைக் கையாண்டு விட்டால் உங்கள் பிடரியில் பலமாகக் கோட்டை அறை விழும். அதுவும் குட்டி மழலைப் பிசாசுகளுக்கு ராஜதந்திரம் மிகவும் ஜாஸ்தியாம். அவை பாதி சமயங்களில் நம்மை ஏமாற்ற, கொள்ளிவாய் பிசாசுகள் துப்பிய நெருப்புத் துண்டங்களைப் பொறுக்கி எடுத்துத் துண்டு பீடி போல வைத்துக் கொண்டு திருட்டு கொள்ளிவாய் தம் அடிக்குமாம். புத்தகத்தின் ஒரு பக்கத்தில் எச்சரிக்கை என்று போடப்பட்டு ” வேப்பிலை, முருங்கை மரங்களில் தான் பேய் குடியிருக்கும் என்று கனவு காணாதீர்கள். மல்லிகைப் பூப்பந்தல்களில் கூடச் சில பேய்கள் வாசம் செய்யும்…” என்றிருந்தது.

பூமியில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் அத்தர், ஜவ்வாது போன்ற லாகிரி திரவியங்களைப் பிரியமாகப் பூசிக்கொண்டவர்கள் மரணத்துக்குப் பின்னர் வாசனைப் பேய்களாக மல்லிகை, ரோஜா, மருக்கொழுந்து செடிகளில் படுத்துக்கொண்டிருக்கும் என்று மாத்ருபூதம் பகருகிறார்.

அடுத்து வந்தது ஆவிகள் பற்றிய பக்கங்கள். ஸ்டாலின், லெனின், குலோத்துங்கச் சோழன் (இரண்டாம் கு.சோ.), இப்ராஹிம் லோடி, லியர்னார்டோ டாவின்ஸி இப்படிப் பிரபல ஆவிகளில் ஆரம்பித்து, சிறு வயதில் தனது வீட்டு வேலைக்காரியாக இருந்து தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாவின் ஆவி வரை பலதரப்பட்ட ஆவிகளை மாத்ருபூதம் பேட்டி கண்டு தொகுத்திருக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாது – மனிதர் ஆவிகளை அஸால்ட்டாக வரவழைக்கிறார். நமக்குக் கீழே பணிபுரிபவர்கள் கூட கூப்பிட்டவுடன் இவ்வளவு வேகமாக வரமாட்டார்கள்!

ஏ, பி, ஸி, டி என்று ஆங்கில எழுத்துக்கள் இருபத்தி ஐந்தையும் (‘T’) என்ற எழுத்தை எழுதினால் ஆவி வராதாம்…. ஒருவேளை தமக்குப் போட்டியாகக் குடிக்கும் டீயில் பறக்கும் ஆவியை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கின்றனவோ..?) கட்டம் போட்டு சாக்பீஸால் எழுதி, ஸ்டார்ட் என்று எழுதப்பட்ட கட்டத்தில் கேரம் போர்டு காயினை வைத்துக்கொண்டு மாத்ருபூதம் நமக்கு வேண்டிய ஆவியை வரவழைக்க ஆராதனை செய்வார். நானும் எனது நண்பர்களும் – கேட்டுக் கொண்டதற்கிணங்க மாத்ருபூதம் எம். கே. தியாகராஜ பாகவதரை வரவழைத்துக் கேள்விகள் கேட்கச் சொன்னார். “திரு எம். கே.டி அவர்களே! உங்களுக்குப் பிடித்த பாட்டு எது?” என்று என் நண்பன் ஒருவன் கேட்டான்.

எம். கே.டி. கேரம்போர்டு காயினுள் புகுந்து ஒவ்வோர் எழுத்தாக ஓட நாங்கள் குறித்துக் கொண்டு கூட்டிப் படித்ததில், “அண்ணே அண்ணே, சிப்பாய் அண்ணே” என்ற பதில் கிடைத்தது. இளையராஜாவின் விசிறியான நண்பனுக்கு ஏக சந்தோஷம்.

ஆனால் ஒன்று. இந்த ஆவி விளையாட்டில் நாம் அழைத்தது பெர்னாட்ஷாவாக இருந்தாலும் சரி, மாத்ருபூதம் வீட்டுப் பழைய வேலைக்காரி முத்தம்மாவாக இருந்தாலும் சரி… சம்பாஷணை ஆங்கிலத்தில் சரளமாக நடப்பதுதான் சற்று நம்பும்படியாக இல்லை. ஆங்கிலம் என்ன சர்வதேச ஆவிகள் பாஷையா…?

மாத்ருபூதத்தின் கையெழுத்துப் பிரதியில் எனக்குப் பிடித்த இடம் முப்பதாவது பக்கத்தில் வெளியாகியிருந்த ஒரு பேட்டி. மாத்ருபூதம் ஒரு சமயம் தனது சொந்த ஊரான மதுராந்தகத்தில் உள்ள மாந்தோப்பில், தான் சந்தித்த ஒரு ஆவியின் உருவத்தைப் பின்னர் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வரைந்து ஆவியோடு தான் நடத்திய பிரத்தியேகப் பேட்டியையும் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்….

அவர் அன்று சந்தித்த ஆவி கி.மு – வைச் சேர்ந்த ‘புரோட்டஸ் நிகாரிகா’ என்ற கிரேக்கக் குறுநில மன்னரின் ஆவியாம்.

புரோட்டஸ் நிகாரிகாவின் உருவத்தை (நமக்குத் தெரிந்து ஆவி பேய்களுக்குப் பாதம் கிடையாது. மாத்ருபூதம் சந்தித்த பாதி ஆவிகளுக்கு உருவம் இடுப்போடு சரி. எல்லாமே பாஸ்போர்ட் சைஸ் ஆவிகள்தானாம்…) வரைந்து தான் பார்த்ததற்கு சாட்சியாக, கிரேக்க மொழியிலேயே வாங்கி வைத்திருக்கிறார். படத்தின் கீழே கிரேக்க மன்னரின் பேட்டி வேறு. தான் கிளியோபாட்ராவை உளமார நேசித்ததையும் அவள் தன்னை வஞ்சித்து சீசரிடம் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியையும் (புரோட்டஸ் நிகாரிகா, பேட்டியின் ஒரு கட்டத்தில் சீசரை கடங்காரா என்று தேவநாகரியில் திட்டுகிறார்…) பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

மாத்ருபூதத்திடம் “என்ன சார் இது. பயங்கர காதுல பூ சமாசாரமாக இருக்கிறதே?” என்றேன்.

“வா என்னோடு, மதுராந்தகம் மாந்தோப்புக்கு. கிரேக்க மன்னனைக் காட்டுகிறேன்…” என்று கையைப் பிடித்திழுத்தார்.

என்னால் நம்பவும் முடியவில்லை. மந்தோப்பில் கிளையில் ஊஞ்சலாடும் கிரேக்க மன்னனைச் சந்திக்கத் திராணியும் இல்லை. பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு அலங்கரித்துப் பல்லக்கில் அமர்த்தி அவர் அழகு பார்த்துக்கொள்ளும் கண்ணாடி காட்டும்’ வைபவத்தின்போது பெருமாள் காஷவலாக கச்சத்திலிருந்து சீப்பை எடுத்துத் தலை வாரிக்கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் தலைதெறிக்க ஓடமாட்டார்களா…?

தெய்வமோ , தேவதையோ , சைத்தானோ எதுவும் நாம் பார்க்காதவரையில் நம்பலாம். நம்பாதவர்கள் பகுத்தறிவு பேசலாம்.

இவ்வளவு ஏன் சார்…. மாத்ருபூதத்தோடு இரண்டு வருடங்கள் நெருங்கிப் பழகி, அவரது பேய், பிசாசு, ஆவி உலக நட்புறவைக் கேலி செய்து கொண்டிருந்த நானே இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டதிலிருந்து ஒரு மாதிரியாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உயிரோடு இருக்கும்போதே மாத்ருபூதத்துக்குப் பேய், பிசாசு, ஆவி உலக நண்பர்கள் ஏராளமாக உண்டு. இப்பொழுது இறந்து அவற்றோடு ஐக்கியமானதில் அவரது சாம்ராஜ்யம் வேறு விரிவுப்பட்டிருக்கும். ஆவிகளை ஒரு காலத்தில் நம்பாத என்னை மாத்ருபூதத்தின் ஆவி ஒன்றும் செய்யாமலிருக்க நான் இப்பொழுதெல்லாம் ஆவிகளை நம்ப ஆரம்பித்துவிட்டேன்.

யார்ரா அது? என்னை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கச் சொன்னா, ஃபுல் சைஸ் போட்டோ எடுத்து வச்சிருக்கியே!

நமக்கென்று ஒன்று வந்தால்தான் நம்பிக்கையும் வரும் போலிருக்கிறது. சொன்னால் சிரிப்பீர்கள். ஆஃப்டர் ஆல் குடிக்கும் காபியில் ஆவி பறந்தால் கூட நான் அவற்றை அவமரியாதையாக ஆற்றித் தணிக்காமல் தாமாகவே அவை மறையும் வரையில் மரியாதையாகக் காத்திருந்து பிறகு குடிக்கிறேன். போறுமா…. ஓமன் … ஸாரி…… ஆமென்!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *