நடக்கட்டும் திருமணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 1,868 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பெண்ணுடன் நட்புக் கொள்வதைக் காதல் என்கிறார்கள். அப்பெண்ணுடன் இன்பம் துய்ப்பதைச் சிற்றின்பம் என்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் சர்வ சாதாரணமானவர்களில்லை. நன்கு கற்று அறிந்த சான்றோர்கள் முதல் பற்று, பாசம், ஆசை முதலியவற்றிற்கு அப்பால் பட்ட துறவிகள் வரை உள்ள பெரியோர்களின் கூற்று அது.

அப்படிப்பட்ட பெரியோர்களும் துறவிகளும் அவர்களையும் அறியாமல் சில பெண்களுடன் சல்லாபம் செய்துவிடுகிறார்கள். இக்காட்சி யாருடைய கண்ணிலாவது பட்டுவிட்டால் போதும், பின் உலகம் அறிந்த ரகசியமாகி விடுகிறது.

அப்படி என்றால் பெண்களைக் காதலிப்பதும், அவர்களோடு இன்பம் அனுபவிப்பதும் சிற்றின்பம் என்றால் பெரிய, பெரிய தத்துவஞானிகளும், முற்றும் துறந்த முனிவர்களும், நாட்டை ஆளுகின்ற அரசியல் தலைவர்களும் இந்தச் சிற்றின்பத்திற்கு அடிமையாவது ஏன்? அதனால் பல கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாவது ஏன்? பிற பெண்களோடு காதலில் ஈடுபட்டால் அது மானப் பிரச்சினையாகிவிடும் என்று அறிந்திருந்தும், தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் அச்செயலில் இறங்கக் காரணம் என்ன? அது சிற்றின்பம் என்பதினாலோ?

இவ்வாறு பல கேள்விகளையும், சிந்தனைகளையும் எழுப்பியது. அன்றைய நாளிதழில் வந்த செய்தியே ஆகும். நோய்களைத் தன் தெய்வ சக்தியால் போக்கியவர் என்றும் பல அற்புதங்களைச் செய்தவர் என்றும் பெயர் பெற்றிருந்த சாமியார் பல இளம் பெண்களோடு சல்லாபம் செய்து வருகிறார். தற்போது அவர் விசாரணைக்காகக் காவலகத்தில் இருக்கிறார் என்ற செய்தி மிகப் பரபரப்பாகப் பரவியது.

வானொலி, தொலைக்காட்சி செய்தியைக் கேட்டவர்களும் நாளிதழைப் படித்தவர்களும் சாமியாரைப் பற்றியே பேசத் தொடங்கினார்கள். எல்லார் எண்ணத்திலும் இந்தச் செய்தியே முக்கிய இடம் பெற்றிருந்தது.

காதலாவது, கத்தரிக்காயாவது இந்தச் சாமியார் ஏன் இப்படி நடந்து கொண்டார்? தன் நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டுவிட்டாரே. இனிமேல் இவரால் பழைய நற்பெயரைப் பெறமுடியுமா? காதல் லீலைகள் அவ்வளவு கவர்ச்சியா? இப்படி எண்ணியவாறு அமுதன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

பேருந்து நிற்குமிடத்தைச் சென்றடைந்த போது அவன் கண்ட காட்சி அவனை அப்படியே பிரமிக்கச் செய்தது. அழகுச் சிலையாக நின்ற அந்த மங்கையைக் கண்ட பின் சற்று நேரம் அமுதன் அசந்து போய் நின்றான். சுயஉணர்வற்ற நிலையில் ஏதோ ஒன்றினால் கவரப்பட்டு செய்வது அறியாது நின்றான்.

அடுத்த சில நிமிடங்களில் வந்த பேருந்தில் ஏறிய அந்த மங்கை மாயமாய் மறைந்துவிட்டாள். ஆனால் அமுதன், சற்று முன் சாமியாரைப் பற்றிக் குறைகூறிய அமுதன், காதலாவது கத்தரிக்காயாவது என்று தத்துவம் பேசிய அமுதன் அந்தப் பெண்ணின் கவர்ச்சியில் மயங்கிப் போய் – நின்றான். மிட்டாய் போன்ற இனிப்பான பொருளைப் பறி கொடுத்த குழந்தை எப்படி ஏமாறிப் போய் நிற்குமோ, அப்படித்தான் அமுதனும் நின்றான்.

சிறிதுநேரத்தில் அமுதன் தெளிவு பெற்றான். ஒரு பெண்ணைக் கண்டதும் இப்படிப் பேதலித்துப் போனோமே என்று வருந்தினான். ஆனாலும் அவளை மீண்டும் காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்த வண்ணமிருந்தது. அந்த எண்ணத்தோடு பேருந்தில் ஏறி வேலைக்குச் சென்றான். வேலை செய்தாலும் எண்ணமெல்லாம் அந்த எழிலரசியைச் சுற்றியே நாட்டமிட்டது.

அமுதனைப் பார்த்த பெண்கள் அவனை அடைவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அமுதன் அதற்கெல்லாம் இடங்கொடுக்கவே இல்லை. அந்தப் பெண்களைப் பொருட்படுத்தவே இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற போக்கில் போய்க் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அமுதன் அன்று பேருந்து நிற்குமிடத்தில் பார்த்த அந்தப் பாவையை மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைக்காத நேரமில்லை.

அடுத்தநாள் காலையில் சீக்கிரமாகவே வேலைக்குப் புறப்பட்டுச் சென்றான். சென்றதும் அவன் கண்கள் நேற்றுத் தன்னைத்தடுமாற வைத்தவளைத் தேடினான். அவளைக் காணாதது கண்டு கலக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போதுதான் அவள் அன்னம் என மெல்ல அசைந்து வந்தாள். அவளின் ஒவ்வொரு அங்கங்களின் அழகையும் கண்டு ரசித்தவன் அவள் அருகில் வந்ததும் கண்டும் காணாதவன் போல் நின்றான்.

அப்போதுதான் அவளைப் பார்ப்பவன் போல் திரும்பியவன் லேசாகச் சிரித்தான். அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் ‘ஹலோ’ என்றாள். பதிலுக்கு ‘அலோ’ என்றவன் தன் பெயர் அமுதன் என்றான். அவள் ‘ஐ யெம் மிஸ். எலிசபெத்’ என்றாள்.

‘கேன் யு ஸ்பீக் டமிள்’ என்று கேட்டபோது, ‘ஓ யெஸ், ஐ கேன் ஸ்பீக் டமிள்’ என்றாள். அப்படி என்றால் நாம் தமிழில் பேசலாமே என்று அமுதன் கூறியபின் அவர்களின் உரையாடல் தமிழில் தொடர ஆரம்பித்தது.

ஆங் மோ கியோ வீடமைப்புப் பேட்டையின் அருகில் உள்ள ‘மே ப்ளவரில்’ உள்ள சொந்த வீட்டில் தன் தந்தையுடன் வாழ்வதாகக் கூறினாள். அப்போது அமுதன் சிறிதும் தாமதியாது உங்களின் தாயார், சகோதர சகோதரிகள்? என்றான்.

என் தாயார் ஒரு விருந்துக்குச் சென்று விட்டு வரும்போது விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார். என் அண்ணன் வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்றவர், அங்கே ஓர் ஆங்கிலப் பெண்ணை மணந்துகொண்டு வாழ்கிறார்; என்று ஏதோ ஒரு தமிழில் பேசி முடித்தாள்.

நீங்கள் தமிழ்மொழியைப் பேசச் சிரமப்படுவதாகத் தெரிகிறதே என்றபோது, உண்மைதான். என் தாயார் ஒரு சீனப் பெண். அவர் என்னை இரண்டாம் மொழியாகச் சீனத்தைப் படிக்கப் போட்டுவிட்டார். முதல் மொழியாக ஆங்கிலமும் இருந்ததால் தமிழின் நிலை இப்படியாயிற்று என்று கொஞ்சம் வருத்தத்தோடு கூறினாள்.

அப்படி என்றால் தமிழ் எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்? என்று அமுதன் கேட்டான். என் தகப்பனாரின் தாயார் அதாவது பாட்டி எங்ககளுடன் இருந்தார். அவர்தான் எங்களை வளர்த்தார். அவரிடம் நாங்கள் தமிழில் பேசிப் பேசித் தமிழைக் கற்றுக் கொண்டோம். ஒரு வேளை பாட்டி மட்டும் இல்லாவிட்டால் இப்போது பேசுகின்ற தமிழும் தெரியாமல் போயிருக்கும். என் பாட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்துபோனார்; என்றாள்.

உரையாடல் சூடுபிடித்துக் கொண்டிருந்த போது எனது வேலை இடம் வந்ததும் விடைபெற்றுக் கொண்டு பிரியாமல் பிரிந்தேன். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

உங்கள் பாட்டிக்கு நான் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும் என்றேன். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று அவளுக்கே உரிய தமிழ் மொழியில் பேசினாள். ஆரம்பத்தில் எலிசபெத்தின் தமிழைக் கேட்க மனதிற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவளின் கதையைக் கேட்ட பின் அந்தத் தமிழாவது அறிந்திருக்கிறாளே என்று மனதிற்குள் அவளைப் பாராட்டிக் கொண்டேன்.

உன் பாட்டி மட்டும் இல்லாது இருந்தால் நீ இந்தத் தமிழும் தெரியாமல் இருந்திருப்பாய். நானும் உன்னோடு பேசும் வாய்ப்பை இழந்திருப்பேன். உண்மைதான் அமுதன். என் தாயாருக்குத் தமிழ் தெரியாது. ஆனால் என் தந்தைக்கு நன்றாகத் தமிழ் தெரியும். இருந்தும் என்னிடத்தில் ஒரு வார்த்தை கூடத் தமிழ்ப் பேசமாட்டார் என்று சொல்லி வருந்தினாள்.

எலிசபெத், உன் தந்தை தமிழ் பேசாதது, தவறுதான். என்றாலும் உன் தாயாரின் இறப்புக்குப் பின் அவர் உனக்காகவே வாழ்கிறார். உன் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக மறுமணம் செய் யாமல் வாழ்ந்து வருகிறார். ஆகவே அவர் மீது குறைகூறாதே. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நீ படித்திருக்க மாட்டாய். பெற்ற தாயும் பேணி வளர்த்த தந்தையும் தெய்வங்கள் என்று தமிழ்ச் சான்றோர்கள் கூறியுள்ளனர். அவர்களை மதிப்பதோடு மறக்கக் கூடாது என்றேன்.

உனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்து, நாம் பேசும் சந்தர்ப்பத்தைக் கொடுத்த அந்தப் பாட்டியின் பெயரைக் கூறவில்லையே என்றதும் ‘ஓ யெஸ் ஐ யெம் சாரி’ என் பாட்டியின் பெயர் லெட்சுமி என்றாள்.

தந்தையின் பெயர் பீட்டர் என்று கூறிய நீ பாட்டியின் பெயர் லெட்சுமி என்கிறாயே என்றதும் என் தாயாரை மணந்தபோதுதான் தந்தை பெயரையும் மதத்தையும் மாற்றிக் கொண்டார். அதற்கு முன்பு அவரின் பெயர் பெரியசாமியாம். என் பாட்டி இறக்கும்வரை என் அப்பாவை சாமி, சாமி என்றே அழைப்பார்; என்றாள்.

கிருத்துவ மதத்தில் சேர்ந்து சீனப் பெண்ணைத் திருமணம் செய்த பின், தமிழ்ப் பேசினால் சீனப் பெண் தன்னைத் தாழ்வாக நினைப்பாளோ என்றுதான் உன் தந்தை தமிழ்ப் பேசத் தயங்கியிருக்கிறார்; என்று கூறியபோது எலிசபெத் ‘இருக்கலாம்’ என்று தலையை ஆட்டினாள். இவ்வாறு எங்களின் நட்பு வளர்பிறை போல் வளர்ந்து கொண்டிருந்தது.

என் பழக்கத்திற்குப் பின் எலிசபெத்தின் நெற்றியில் பொட்டு அலங்காரம் செய்தது. அடுத்த சில தினங்களில் சேலை அணிந்து சிங்காரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினாள். ஆரம்பத்திலேயே எனது மனதைக் கொள்ளை கொண்ட எலிசபெத் தற்போது என் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டாள்.

ஒருநாள், ‘உங்கள் பெற்றோரைப் பற்றிப் பட்டும் படாமலும் சொல்கிறீர்களேயன்றி விளக்கமாகச் சொல்லவில்லையே’ என்றாள். சொல்கிறேன்; என்று சுருக்கமாகச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்த எலிசபெத் ஏமாற்றமாகக் காட்சி அளித்தாள்.

எலிசபெத் உன் முகத்தில் ஒருவித சோகம் தெரிகிறதே என்றேன். ஆமாம் மிஸ்டர் அமுதன். என் தந்தை கிருத்துவ மதத்தில் சேர்ந்த பிறகு அவர் தீவிரமாக மதத்தில் நம்பிக்கை வைத்துள்ளார். உங்கள் தந்தையோ என் தந்தையின் குணத்திற்கு முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். இந்நிலையில் நம் திருமணம் நடைபெறுமா? என்று நினைக்கும்போது பயமாக இருக்கிறது என்றாள்.

நாம், நம் பெற்றோர் துணையின்றி திருமணம் செய்துகொள்ள முடியும். ஆகவே நீ பயமில்லாமல் இரு. நம் திருமணம் நடந்தேறும் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் என் மனதிற்குள் ஏனோ ஒருவித கலக்கம் எழுந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை பெண் கேட்க வருகிறோம். கவலையில்லாமல் போ என்றேன். அவள் சென்றபின் நீண்டநேரம் சிந்தித்தேன். ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிற்குச் சென்றேன்.

அமுதனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர் அமுதனின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர். அமுதனும் பெற்றோரும் எலிசபெத் வீட்டிற்குச் சென்றனர். அப்போது எலிசபெத் ஓடிவந்து வரவேற்றாள். பீட்டர் நாற்காலியிலிருந்து எழுந்தார். எல்லோரும் நாற்காலியில் அமர்ந்த பின் அமுதனின் தந்தை பெண் சம்பந்தமாகப் பேசத் தொடங்கினார். மாறி மாறிப் பேசிக் கொண்டனர். இருவருக்கும் எல்லாக் கருத்துக்களும் உடன்பாடாகவே இருந்தன.

பீட்டர் ஏதோ சொல்ல நினைத்தவர் சிறிது தயங்கினார். அதைக் கவனித்த அமுதனின் அப்பா, ஏன் தயங்குகிறீர்கள் தாராளமாக மனம் திறந்து சொல்லுங்கள் என்றார். நாங்கள் கிருத்துவர்கள். அத்துடன் ஜாதியில் முதலியார். உங்கள் ஜாதியைச் சொல்வதோடு மாப்பிள்ளை எங்கள் மதத்திற்கு வரவேண்டும். நீங்கள் முதலியாராக இல்லாவிட்டாலும் அந்தத் தகுதியில் உள்ள ஜாதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

திரு.பீட்டர் அவர்களே, நாங்கள் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற தத்துவத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். அதனால் உங்கள் பேச்சு எனக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

‘இந்து’ என்ற மதத்தைச் சார்ந்த மக்களிடத்தில் இப்படியொரு ஜாதி முறை பல்லாயிரம் ஆண்களுக்கு முன் புகுந்துவிட்டது. அது இந்துக்களின் நாடி, நரம்பு எல்லாம் புரையோடிவிட்டது. இதன் போக்குப் பிடிக்காதவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் புத்தம், கிருத்து, இஸ்லாம் போன்ற மதங்களில் மாறினார்கள். மாறிக் கொண்டு வருகிறார்கள். மதம் மாறிய நீங்களும் ஜாதி முறையைப் பற்றிப் பேசலாமா?

ஏதோ நம் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நாம் குறுக்கே நிற்கக்கூடாது. அவர்கள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழட்டும் என்றுதான் பெண் கேட்க வந்தேன். நீங்கள் இவ்வாறு மதத்தைப் பற்றியும் ஜாதியைப் பற்றியும் பேசுவது மிகுந்த வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்று சொல்லி நிறுத்தினார்.

நீங்கள் சொல்வது உண்மைதான். அதேவேளையில் நாங்கள் மதம் மாறினாலும் தமிழ்கள்தானே. ஆகவே நமது பண்பாட்டுப்படி நடந்து கொள்ள வேண்டாமா? நமது பரம்பரை பழக்க வழக்கங்களைக் காற்றில் பறக்கவிடலாமா? நன்கு சிந்தித்துப் பாருங்கள் என்றார்.

என்னையா சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறீர்கள்? சிந்திக்க வேண்டியவர்கள் நீங்களா? அல்லது நாங்களா? சீனர்களில் கூட ‘டைலெக்’ என்ற ஒரு முறை இருந்தது. நமது பிரதமரின் பரந்த அறிவால், தெளிந்த சிந்தனையால் உட்பிரிவு எல்லாம் மாறி மறைந்து சீனர் என்ற இனக் கட்டுப்பாட்டுக்குள் ஆக்கிவிட்டார். இன்றைய சீனச்சிறார்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அந்த உட்பிரிவுகள் எல்லாம் ஓடி மறைந்து போய்விடும்.

அது மட்டுமல்ல திரு. பீட்டர் அவர்களே. சீனர்கள் மதம் மாறினாலும் சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளையோ அல்லது பண்பாட்டு நிகழ்ச்சிகளையோ மறக்கவில்லை; பின்பற்றத் தவறவில்லை. ஆனால் நீங்கள், தமிழ் வருடப் பிறப்பு, தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தயங்குகிறீர்கள். நெற்றியில் பொட்டு இட்டு, தலையில் பூ அணிவதைக் கூட நிறுத்திவிட்டீர்களே.

அதை விடுங்கள், தமிழர் பண்பாடு பற்றிப் பேசுகின்ற நீங்கள், மதம் மாறிய பின் தமிழ்மொழியைப் பேசக் கூடத் தயங்குகிறீர்கள். உங்கள் பிள்ளைகளிடத்தில் ஒரு வார்த்தை தமிழில் பேசியதில்லை என்று கேள்விப்பட்டேன். மொழியே விழி என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அந்த விழியையே இழக்கத் துணிந்த நீங்கள் சிந்திக்க வேண்டுமா? அல்லது நான் சிந்திக்க வேண்டுமா?

மதம் மாறிய உங்களை ஏன் இந்துக் கோவிலுக்குச் செல்லவில்லை என்றோ? அல்லது தீபாவளியைக் கொண்டாடவில்லை என்றோ? கேட்கவில்லை. அவை மதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், தமிழ்ப் பண்பாடுள்ள நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாமே? செய்கிறீர்களா? செய்ய முன் வருகிறீர்களா? இப்போது சொல்லுங்கள்; சிந்திக்க வேண்டியவர்கள் நானா? அல்லது நீங்களா?

ஆடு,மாடு, பன்றி, பாம்பு, தவளை, நத்தை என்று எத்தனையோ வகை உணவுகளை உண்டு சீனர்களில் பலர் வாழ்கிறார்கள். அப்படிப் பட்ட பரம்பரையில் பிறந்த சீனப் பெண்ணை மணந்தீர்களே, அந்தச் சீன மாது என்ன ஜாதி என்று கேட்டீர்களா? சீனப் பெண்ணைத் திருமணம் செய்ததைக் கண்டிக்கவில்லை. ஆனால், அந்தச் சீனப் பெண்ணுக்காக உறவை ஒதுக்கிவிட்டு, மதத்தை மாற்றிக் கொண்டு, மொழியை மறந்த நீங்கள், எங்களைப் பார்த்து என்ன ஜாதி என்று கேட்கிறீர்களே, இது நியாயமா? என்று கேட்கிறேன்.

உங்களின் ஒரே மகனை வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பினீர்கள். அவன் அங்கு படித்துமுடித்து விட்டு, அந்நாட்டு ஆங்கிலப் பெண்ணை மணந்துகொண்டு வாழ்வதாக அறிகிறேன். அந்த ஆங்கிலப் பெண் என்ன ஜாதி என்று கேட்டீர்களா? நீங்கள் உங்கள் இனத்திற்கும் மொழிக்கும் செய்த துரோகத்தை உங்கள் மகன் அப்படியே செய்துவிட்டான் பார்த்தீர்களா?

பாட்டியுடன் பழகியதாலோ, என்னவோ? உங்கள் மகள், என் மகனோடு பழகும் வாய்ப்பு பெற்று, மணம் செய்துகொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தால், அது உங்களுக்கும் நல்லது எல்லோருக்கும் நல்லது.

நாங்கள் மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை இல்லாதவர்கள். என் றாலும் எங்களுக்கு எந்த மதத்தின் மீதும், ஜாதியின் மீதும் வெறுப்போ, வேதனையோ கிடையாது. அதனால் நாங்கள் மதம் மாறவோ, ஜாதி யைப் பற்றிப் பேசவோ மாட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியவர் நீங்கள் என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவர் தம் பேச்சை அமைதியோடு நிறுத்தினார்.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த எலிசபெத் மனம் வருந்தினாள். தன் தந்தை மதத்தின் மீது கொண்டிருக்கும் வெறித்தனம் மாறாது. அவர் திருமணத்திற்கு உடன்படமாட்டார். அதனால் திருமணம் எங்கே நடக்கப் போகிறது? நான் அவரை விரும்பியதும் அவர் என்னை விரும்பியதும் கனவாகவே முடியப் போகிறதா? என்றெல்லாம் நினைத்தபோது நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருந்தது. முயற்சி செய்து அழுகையை அடக்க முற்பட்டும் இயலாமல் பொகவே விம்மி விம்மி அழும் சத்தம் வெளிவந்தது. ‘எலிசபெத் ஏம்மா அழுகிறாய்?’ என்று பீட்டர் கேட்டார்.

எலிசபெத் ஓடிவந்து தந்தையின் காலில் விழுந்து ஓவென்று அழுதாள், வாய்விட்டுச் சற்றுநேரம் அழுதபின் அவள் மனத்திலிருந்த பாரம் சிறிது குறைந்தது போல் இருந்தது. அப்போது எலிசபெத் “அப்பா, பாட்டி எனக்குக் கற்றுக் கொடுத்த பண்பாலும் பழக்கவழக்கத்தாலும் உங்களுக்கும் குடும்பத்திற்கும் இதுவரை எந்தக் கெட்ட பெயரையும் தேடிக் கொடுக்கவில்லை.

நீங்கள் ஒரு தமிழராக இருந்தும் தன் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும்; தமிழ்க் கலை, கலாசாரத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கவும் இல்லை.

ஆனால், அண்ணன் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்திருக்கிறீர்கள்; பாசத்தைக் கொட்டியிருக்கிறீர்கள். நாங்கள் எதைக் கேட்டாலும் தயக்கம் இன்றி வாங்கிக் கொடுத்து மகிழ வைத்திருக்கிறீர்கள். பெற்ற தாயைவிட நீங்கள் எங்களுக்காகப் பாடுபட்டிருக்கிறீர்கள்.

பாட்டி இடத்தில் மட்டும் நான் வளராமல் இருந்திருந்தால் அண்ணன் உங்களை மறந்துவிட்டு யாரோ ஒருத்தியுடன் வாழ்வதைப் போல் நானும் யாரோ ஒருவருடன் ஓடிப்போய் இருப்பேன். என்னை எத்தனையோ இளையர்கள் சுற்றிச் சுற்றி வந்தனர். என்னென்னமோ முயற்சிகள் செய்தனர். ஆனால் எந்த இளைஞனிடமும் என் மனம் பறிபோக வில்லை. அவ்வளவு கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தேன். இவரைச் சந்தித்தபின், இவருடன் பழகிய பின், ஏனென்று எனக்கே தெரியவில்லை, என் மனத்தைப் பறி கொடுத்தேன். அவர் மீது ஆசை கொண்டேன்.

”தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, தாயிற்சிறந்ததொரு கோவிலும் இல்லை” என்று இவர்தான் எனக்குச் சொல்லித் தந்தார். அவர் கற்றுக் கொடுத்தபடி நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். நீங்கள் இந்தத் திருமணத்திற்கு உடன்பட்டால் மகிழ்கிறேன். ஒரு வேளை மறுத்தால் இனி என்றுமே திருமணம் செய்துகொள்ளாமல் உங்களுக்காகவே வாழ்கிறேன்; என்று எலிசபெத் பேசியபோது பீட்டரின் கண்களிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாகக் கொட்டியது.

சற்றுநேர அமைதிக்குப் பின், “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதைப் போல என் ஏட்டுப் படிப்பு பகட்டான வாழ்வுக்கு உதவியது. பண்பான வாழ்வுக்குப் பயனற்றுப் போய்விட்டது. இணைந்த உள்ளங்களைப் பிரிப்பதை இறைவனே ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆகவே உங்கள் எல்லோருடைய விருப்பத்திற்கு ஏற்ப அமுதனுக்கும் எலிசபெத்திற்கும் திருமணம் நடக்கட்டும். மூடத்தனமாக நடந்துகொண்ட என்னை மன்னியுங்கள். அத்துடன் என் அறிவுக் கண்ணைத் திறந்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற உண்மையான தத்துவத்தை உணர்த்திய உங்களுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்” என்று பீட்டர் கூறியபோது எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தவழ்ந்தது. “தன்னைப் பழித்தவனை விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே” என்று பாரதிதாசன் கூறியுள்ளார் என்று பீட்டர் கூறியதும் எல்லோரும் சிரித்துவிட்டனர்.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *