இப்படியும் நடக்குமா? – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 16,507 
 

“யார் அது?” என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி இருந்தது.

காட்டுப் பாதையில் இருட்டு வேளையில் செல்வது அபாயகரமானது என்று நடராஜனின் நண்பன் கோவிந்தராவ் எவ்வளவோ முறை எச்சரித்திருந்தான். அதை அலட்சியம் செய்துவிட்டு அந்தப் பாதையில் வந்தது, அதுவும் தனியாக வந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நடராஜன் அப்போதுதான் நன்றாக உணர்ந்தான்.

ஆயினும் தைரியமாக, “யார் நீங்கள்?” என்று கேட்டான்.

“புலிக்குட்டி முனுசாமி என்று நீ கேள்விப்பட்டதே இல்லையா, தம்பி? நாங்கள் அவருடைய ஆட்கள்!” என்று கூறிவிட்டு, அந்தப் பத்து முரடர்களும் உரக்கச் சிரித்தார்கள்.

“சரி, நீங்கள் ஏன் என்னை இப்படிச் சூழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான் நடராஜன், அதட்டும் குரலில்.

“உன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்துவிட்டால் தாராளமாக வழி விடுவோம்! சீக்கிரம் எடு, பணத்தை!” என்று அவர்கள் குண்டாந்தடிகளை ஓங்கினார்கள்.

நடராஜன் சிறிதும் பயப்படாமல், “முடியாது!” என்றான்.

“முடியாதென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம்” என்றார்கள் அந்த முரடர்கள்.

உடனே நடராஜன் குபீ’ரென்று பாய்ந்து, அந்த முரடர்கள் அத்தனை பேரையும் ஒரே நொடியில் கீழே தள்ளிவிட்டான்.

நடராஜன் என்னமோ மகா நோஞ்சலான ஆசாமிதான். வயதும் இருபதுக்கு மேல் இருக்காது. காற்றடித்தால் கீழே சாய்ந்து விடக்கூடியவன்தான். என்றாலும், அவன் கையை ஓங்குவதற்கு முன்னால் அத்தனை முரடர்களும் தொப்… தொப் என்று கீழே விழுந்துவிட்டார்கள்.
விழுந்தவர்கள் மறுபடியும் எழுந்திருந்து நடராஜன்மீது பாய்ந்து, அவனோடு சண்டை போடுவார்கள் என்பதுதான் யாரும் எதிர்பார்க்கக்கூடியது.

ஆனால், அந்த முரடர்கள் அப்படி ஒன்றும் செய்துவிட வில்லை. விழுந்த இடத்திலேயே கிடந்தார்கள்; மூர்ச்சைகூட ஆகிவிட்டார்கள்.

‘இப்படியும் நடக்குமா?’ என்றே நினைக்கத் தோன்றும் நமக்கு! மகா பலிஷ்டர்களான பத்து முரடர்களை ஒரு நோஞ்சல் பேர்வழி எப்படிக் கீழே வீழ்த்தியிருக்க முடியும்? அவனிடம் ஏதாவது மந்திர சக்தி இருந்ததா?

அதெல்லாம் ஒன்றுமில்லை. அவனுடைய வெற்றிக்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது.

அது ஒரு சினிமா படப்பிடிப்பு. அந்த நோஞ்சான்தான் அந்தப் படத்தின் கதாநாயகன்! கதாநாயகன் எப்போதாவது தோல்வி அடைந்தான் என்பது உண்டா?

– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *