கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 24,012 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதன் முதல் நீங்கள் சைக்கில் கற்றுக் கொண்டதை நினைத்துப்பாருங்களேன், சிரிப்பு வரும். எனக்கு அப்போது 13 வயது. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேர் முட்டியில், கோபுர வாசலுக்கு வெளியே சின்னராஜு கடையில் வாடகை சைக்கிள்கள் இருக்கும். எல்லாமே சின்னராஜு சொந்தத் திறமையில் தயாரித்தது. ‘அவர்’ சைக்கிள் ஒரு மணி நேரத்துக்கு இரண்டணா ரேட். ஆளுக்கு காலணா செலுத்தி – எஸ்.எஸ்.எஸ்.- சீரங்கம் சைக்கிள் சங்கம் அமைத்து எட்டு பேர் கோஷ்டியாக எடுப்போம். கற்றுக் கொடுக்க சீமா எட்டு இடமும் குளிர்த்திருந்தால் வரச் சம்மதிப்பான். ஒரு மணியில் எட்டுப்பேர் கற்க வேண்டும். நடுநடுவே சீமா ‘இத பார் இந்த மாதிரி ஓட்டணும்’ என்று மாதிரி காட்டும் வெறுப்பேற்றும் வெள்ளோட்டங்களில் ‘ஸ்டை’லாக ஏறி ஒரு சுற்றுச் சுற்றி வந்து காலைத் தேய்த்துக் கொண்டு நிறுத்தும் நிமிஷங்கள் போக பாக்கி இருப்பதில் எங்களுக்கு ஆளுக்கு ஐந்து நிமிஷம் தான் மிஞ்சும்.

சின்ன ராஜு, இருப்பதற்குள்ளேயே ‘லொடக்காணி’யான சைக்கிகாத்தான் எங்கள் பயிற்சிக்குக் கொடுப்பார். அழுக்கான நோட்டில் காகித பென்சிலில் 4.30 என்று டயம் குறித்துக்கொண்டு சைக்கிளை சீட்டில் தட்டிக் கொடுத்துவிட்டு, “ஒரிஜினல் பி.எஸ்.ஏ வண்டி . எடுத்துக்கிட்டுப் போங்க” என்பான். ப்ரேக், லைட், பின்புற மட்கார்ட் எதுவும் இல்லாது. இரண்டு சக்கரம் ஒரு ஸீட், ஒருமணி, ஹாண்டில் பார் அவ்வளவு தான். உறித்த கோழியைப் போல் ஒரு வண்டி, அதை அழைத்துக்கொண்டு கொள்ளிடம் போகும் மணற் பாதைக்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வோம். எப்போதும் ஹெட்மாஸ்டர் பையன் தான் முதல். அவர் சீட் மேல் ஏற்றி சீமாவும் மற்றொரு அசிஸ்டெண்டும் பிடித்துக்கொண்டு செலுத்த சங்கத்தின் மற்ற அனைவரும் எதற்கோ தலை தெறிக்க ஓடுவோம்.

கடைசியில் என் முறை. என்னை இருவர் தூக்கி உட்கார வைத்து ஜோடித்து “நேரப் பாரு. இடுப்பை வளைக்காம மிதி” என்று சீமா உபதேசம் செய்ய நான் பதினைந்து டிகிரியிதும் சைக்கிள் எதிர் பதினைந்து டிகிரியிலும் ஆரம்பித்து உதட்டைக் கடித்துக் கொண்டு டைட்டாக இருந்த பெடலை மிதிக்க ‘விர்ரக்’ என்று சப்தத்துடன் செயின் கழன்று அப்படியே நான் சரிய சீமா சைக்கிளை என் கழுத்திலிருந்து விடுவித்து, “இப்படி விறைச்சுண்டு அழுத்தினா உனக்கு செத்தாலும் வராது. அடுத்தவன் வாடா” என்றான். மறுபடி ஹெட் மாஸ்டர் மகனுக்கு சான்ஸ்.

இரண்டாம் நாள் சீமா என்னைத் தேற்றிக் தேர் போல் ஏற்றி வைத்தான். பின் வருபவர்களின் உந்து சக்தியினால் பூராவும் பெடலைத் தொடுவதிலேயே என் காலம் போயிற்று. “நேரப் பாரு! கீழே பார்க்காதே” என்று இடுப்பில் அவ்வப்போது குத்து. அப்படியே சீமாவின் மேல் சாய்ந்து, அவன் விலகிக் கொள்ள முழங்காலில் சிராய்த்து அதில் எச்சில் துப்பிக் காகிதத்தை ஓட்டி முதல்உதவி. நொண்டி நொண்டிக்கொண்டே வீடு சேர்ந்தேன். மூன்றாவது தினம் மற்றொரு முழங்கால், நான்காவது தினம் “நான் வரலைடா” என்று காலனவைக் கொடுத்து விட்டு ஒதுங்கல்!

ஐந்தாவது தினம் முதல் முறை கைவிடப் பட்டேன், திடீர் என்று பின்னால் திரும்பிப் பார்த்தால் அவர்களைக் காணோம், சிலிர்த்துப் போய் காலை ஊன்றித் தேய்த்து சைக்கிளைக் குப்பையாய் போட்டுவிட்டு அவர்கள் நோக்கி ஓடிவந்து விட்டேன். திட்டினார்கள்.

ஆறாவது நாள் பாலன்ஸ் வந்துவிட்டது. திடீர் என்று சைக்கிர் விடுவதில் உள்ள உற்சாகம் தென்பட ஆயிரம் நெளி நெளித்தாலும் சைக்கிள் இன்னும் செல்வதில் உள்ள ஆச்சரியத்தில் சிரிப்பு வந்தது. சற்றும் எதிர்பாராத முதல் முத்தம் போல் இருந்தது. மணி அடித்தால் தேவலோகத்துக் கிண்கிணி கேட்டது. “மறைந்த கூண்டிலிருந்து விடுதலை பிறந்து பறவை விரைந் தோடுதே” என்று பாட்டுப் பாடினேன்.

இது என்ன? ரோடு முடிந்து விட்டதே! சைக்கில் இன்னும் போய்க கொண்டிருக்கிறதே! திரும்பக் கற்றுக் கொள்ளவில்லையே! இடது பக்கம் சாக்கடை. வலது பக்கம் முன் வேலி,.வலது பக்கம் திருப்பும் எண்ணம் தான் இருந்ததே யொழிய, சைக்கிள் திரும்பினால் தானே! நேராக வேலி நோக்கிச் சென்று மோதி செருகிக் கொண்டுவிட்டது. பின் பாதி சைக்கிள் தான் வெளியே தெரிந்தது. முன் பாதி? இழுத்தேன். வெளியே வந்தது. முன் சக்கரம் இல்லாமல். இதற்குள் என்னை வந்து சேர்ந்த சங்கத்தின் அங்கத்தினரிடையே அமைதி நிலவியது!

“என்னடா பண்றது இப்ப! சின்னராஜு தோலை உரிச்சுடுவான்!”

“நீதானே உடைச்சே! நீதான் திருப்பிக் கொடுக்கணும். ரிப்பேருக்கு ஆற சார்ஜை உங்க பாட்டிக்கிட்ட கேட்டு வாங்கிக் கொடுத்துடு. முதல்ல போய் முன் சக்கரத்தை எடுத்துட்டு வா!”

எகிறிக் குதித்து விடுதலை பெற்ற சக்கரத்துடன் வந்தேன். சீமா அதை ஃபோர்க்கில் பொருத்திப் பார்த்து “நட்டே போயிடுத்து” என்றான். மெதுவாக நகர்த்திப் பார்த்தான். பத்தடி போனதும் தரையைக் கொத்தியது. எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். “அழாதே வா” என்றான் சீமா. இரண்டு பேர் சைக்கிளை உயரப் பிடித்துத் தூக்கிக் கொண்டும் நான் முன் சக்கரத்தைத் தனியாக அணைத்துக் கொண்டும் திரும்பினோம்.

தூரத்திலிருந்து சீமா சின்னராஜுவைப் பார்த்தான். அழுக்குத் தண்ணீரில் பங்சர் பார்த்துக் கொண்டிருந்தான். சீமா ஒரு க்ரைஸிஸ் ஆசாமி. கடைசி நிமிஷத்தில் முன் சக்கரத்தைச் சொருகித் தொற்றவைத்து பெடலில் ஏறிக் கொண்டு மிதந்து அப்போது தான் ஒட்டிக் கொண்டு வந்து சேர்ப்பவன் போல் சைக்கிளைக் கொண்டு சென்று மற்ற சைக்கிள்களுடன் கலந்து நிறுத்திவிட்டு “பார்த்துக்க சின்னராஜு…” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு கோபுர வாசல் வரை விசில் அடித்துக்கொண்டு நடந்து விட்டு அப்புறம் எல்லோரும் ஒரே ஓட்டம். எஸ்.எஸ்.எஸ். கலைக்கப்பட்டு விட்டது. சின்னராஜு கடைப் பக்கம் அப்புறம் நான் போகவே இல்லை.

எனக்கும் ஒழுங்காக சைக்கிள் ஓட்ட வந்து தண்ணீர்க் குடம் எடுக்கும் கன்னிப் பெண்கள் முன்னல் இரண்டு கைகளாலும் சட்டைக் காலரைச் சரி பண்ணிக் கொண்டு ஓட்டியதையும் ஒரு முறை சைக்கிளில் சமயபுரம் போனபோது மண் பாண்டங்கள் விற்றுக்கொண்டிருந்த ஒருத்தி மேல் மோதியதும் பிற்பட்ட விஷயங்கள்.

அந்த முதல் பாலன்ஸ் தினத்தில் ஏற்பட்ட சந்தோஷம் கார், ஏன், ஏரோப்ளேன் கற்றுக்கொண்டபோது கூட ஏற்படவில்ல.

இப்போது என் மகன் சைக்கிளைப் போட்டுக்கொண்டு விழுந்து முழங்காலில் ரத்தத் திட்டுடன் வீட்டுக்கு வரும்போது எனக்கு அந்தத் தினம் இன்பமாக வலிக்கிறது.

– 1980-03-16

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *