கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 9,481 
 

05 செப்டம்பர் 2009

அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும்.

வெட்கமாயிருந்தது. அமெரிக்கா வந்த பின்னும் இண்டியன் பங்ச்சுவாலிட்டி. ஹெட்மாஸ்டர் தங்கதுரையின் அறுக்கும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

யார்க், பென்சில்வேனியாவில் காலை பத்து மணி்க்கு அவரை சந்திப்பதாக இருந்தது. இப்போது மணி மத்தியானம் இரண்டு.

”இன்னும் திருந்தலையா நீ?”

இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அரை டிராயரோடு நடுநடுங்கிக் கொண்டே ஸ்கூல் வராந்தாவில் அவர் முன்னால் நிற்கிற அதே உணர்வு. கையில் இப்போது பிரம்பு இல்லை என்பது மட்டுமே ஒரே வித்தியாசம்.

அவர் பெயரைக் கேட்டால் ஸ்கூல் மொத்தமுமே இருபது ரிக்டர் அளவில் நடுநடுங்கும். வாத்தியார்களும் விதிவிலக்கல்ல.

அம்மா என் தலையில் அரை பாட்டில் எண்ணெயைக் கொட்டி, படியப் படிய பத்து நிமிஷம் வாரி விடுவாள். உவ்வே என்று நான் வெளியே எடுப்பதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோசையைத் திணிப்பாள். இந்த காலை கடன்களை முடித்து அனுப்பி விடுவதற்குள் பெல் அடித்து, பிரேயரும் முடிந்து விடும். இப்படி பல நாள் ஸ்கூலுக்கு லேட்டாகப் போய், ரவுண்ட்ஸ் வரும் அவரிடம் மாட்டிக் கொள்ளுவேன்.

”வாடா இங்கே. வாடான்னா.” – பிரம்பை ஆட்டிக் கொண்டு அவர் கூப்பிடும் போதே டிராயர் நனைந்து போகும்.

எடுத்த எடுப்பில் கெண்டைக்கால் ஆடுதசைக்குக் கீழே சளீர் சளீரென்று பிரம்பு ஒரு பிரேக் டான்ஸ் ஆடிய பின்புதான், ”ஏண்டா லேட்டு?” என்று விசாரணை துவங்கும். லேட்டாய் வருகிற வாத்தியார்களுக்கும் கிட்டத்தட்ட இதே ட்ரீட்மென்ட்தான். பிரம்படி இல்லை என்பது மட்டும்தான் வித்தியாசமே தவிர நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்விகளுக்குப் பஞ்சமே இருக்காது. அதைவிட அமைதியாய் நாலு அடி வாங்கிக் கொள்வதே மேல்.

இருந்தும் அவரை வெறுக்கிறவர்களை விட நேசிக்கிறவர்களே அதிகம். ஒழுங்கீனங்களுக்குத்தான் ருத்ரதாண்டவம் ஆடுவார். மற்றபடி சாதாரணமாய் சந்திக்க நேர்ந்தால் ஒரு பாசக்கார அப்பா மாதிரி பழகுவார்.

என்னை மாதிரி ஒரு லோயர் மிடில்கிளாஸ் பேர்வழி நன்றாகப் படித்து அமெரிக்கா வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அவருடைய கண்டிப்பு, +2 தொடங்கி காலேஜ் போகிற வரைக்கும் இன்னதைப் படி என்று அவரளித்த ஆலோசனைகள் எல்லாமே காரணம்.

யார்க்கில் மகள் வீட்டில் இருக்கிறார் என்று எதேச்சையாய் அறிந்ததும், அவரை ஒரு முறை இங்கே அமெரிக்காவில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசை எழுந்தது. விட்டுப் போன தொடர்புகளையெல்லாம் தேடிப் பிடித்துப் பேசி கடைசியில் அவர் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து விட்டேன்.

போன் போட்டு என் பெயரைச் சொன்னதும், ”லேட்டா வந்து மாசத்துக்கு பத்து வாட்டி அடி வாங்குவியே?” என்று கரெக்டாய் ஞாபகம் வைத்துக் கேட்டார். கொஞ்சம் கூட மாறாத அதே கர்ஜனைக் குரல்.

வாரக் கடைசியில் நேரில் சந்திக்க முடிவானதும், ”சரியா எத்தனை மணிக்கு வரே?” என்பதுதான் அவர் கேள்வி.

நான் வசிக்குமிடத்திலிருந்து நேஷனல் ஹைவே பிடித்து காரில் போனால் நான்கு மணி நேரம். ஆனால் நடந்ததே வேறு.

என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தபடி, ”என்ன ஸார் பலமா யோசனை? காலைல பத்து மணிக்கு வரேனுட்டு மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்து நிக்கறிங்க?”

அவர் போட்ட ஸாரில் நக்கல் இருந்தது. எத்தனை காலம் கழித்து சந்தித்தாலென்ன, அவருடைய பார்வையில் இன்னமும் நான் அரை டிராயர் ஹைஸ்கூல் பையன்தான். முதலில் ஒழுங்கீனத்தை ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் மற்ற ஷேம நலங்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிப்பார்.

”பங்ச்சுவாலிட்டி பார்க்கிற வெள்ளைக்காரன் கிட்டே எப்படி இத்தனை நாளா குப்பை கொட்ட முடிஞ்சது?”

நான் சங்கடமாய் நெளிந்தேன். ”இல்லை ஸார். இந்த மாதிரி லேட்டா வர்றதெல்லாம் ஸ்கூல் டேஸோட முடிஞ்சது. இப்பல்லாம் நான் அப்படி இல்லை. உங்களை சந்திக்க திட்டமிட்ட இன்னிக்குன்னு பார்த்து ஏகப்பட்ட பிரச்சனைகள்.”

”என்ன பிரச்சனை?” – ஒரு நொண்டிச்சாக்கை கேட்கத் தயாராகிற மாதிரி அசுவாரஸ்யமாய் கீழ்ப் பார்வை பார்த்தார்.

”காலைல ஆறு மணிக்கு நியூஜெர்சில காரெடுத்தா நாலு மணி நேரத்தில் யார்க் வந்து சேர்ந்துரலாம்ன்னு நினைச்சேன் ஸார். எழுந்து பார்த்தா காரைக் காணோம். பார்க்கிங் ஸ்டிக்கர் சரியா ஒட்டாம உரிஞ்சு விழுந்துட்டதால காரை டோ பண்ணி கொண்டு போய்ட்டாங்க. நூறு டாலர் ஃபைன் கட்டி காரை திரும்ப எடுத்து வரதுக்கே பதினோரு மணி ஆயிருச்சு. லேட் ஆயிட்டிருக்குன்னு உங்களுக்கு போன் பண்ணினேன். உங்க மகள்தான் போன் எடுத்தாங்க. பத்தரை மணி வரைக்கும் எனக்காக காத்திருந்து பார்த்துட்டு நீங்க லைப்ரரிக்குப் போய்ட்டிங்கன்னாங்க. சொன்னாங்களா?”

அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும்.

”அதுக்கப்புறம்தான் ஸார் அதை விட பெரிய களேபரம் நடந்துருச்சு.”

அவருக்கு லேசாக ஆர்வம் ஏற்பட்ட மாதிரிதான் இருந்தது. கண்களை கொஞ்சம் விரித்துக் கொண்டு என்னைப் பார்த்தார்.

”டெலவர் தாண்டினதும் சரியான மழை. காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடாம கபகபன்னு பசி. ஹை வேயை விட்டு கீழிறங்கி ஒரு ஃபுட் எக்சிட்ல காரை விட்டேன். அதான் ஸார் என் போதாத நேரம். வசமா மாட்டிகிட்டேன்.”

”அங்க என்னாச்சு?” என்றார் ஆர்வமாக.

”அங்கே நம்ம ஊர் துரைசாமி பாலம் மாதிரி ஒரு அண்டர் ப்ரிட்ஜ். தண்ணி முழங்கால் அளவுக்குத் தேங்கியிருக்கு. அதிலே கார் மாட்டிகிச்சு ஸார்.”

”அமெரிக்காவில் ப்ரிட்ஜுக்கடியில் தண்ணி தேங்கிக் கிடக்கா? அப்படியெல்லாம் ஒழுங்கீனமா விட மாட்டாங்களே?”

”நானும் அப்படித்தான் ஸார் நினைச்சிட்டிருந்தேன். இங்கே வந்து கொஞ்ச நாளானப்புறம்தான் இங்கேயும் வெள்ளம் வரும். இங்கேயும் கரண்ட் போவும். இங்கேயும் போலிஸ்காரன் கடமை தவறுவான்னு தெரிஞ்சது.”

”ஏற்கெனவே தண்ணி தேங்கியிருக்கே? அதுக்குள்ளே ஏன் காரை விட்டே?”

”எல்லா காருமே மெதுவா போய்ட்டுதான் ஸார் இருந்தது. கரெக்டா நான் போறப்போ ஒரு பதினாறு சக்கர ட்ரக் பக்கத்து லேன்ல பாஸ் பண்ணி போச்சு. அது வாரி இறைச்ச தண்ணி என்னோட கார் மேல வெள்ளமா கொட்டி கார் அங்கயே படுத்துருச்சு. எஞ்சினுக்குள்ளே தண்ணி போயிருச்சுன்னு நினைக்கிறேன். கார் ஆஃப் ஆயிருச்சு. அப்புறம் ஸடார்ட் ஆகவே இல்லை.”

”911 அவசர உதவியை கூப்பிட்டியா?’

”கூப்பிட்டேன். எல்லா விபரமும் கேட்டுட்டு போலிஸை அனுப்பி வெக்கறேன்னாங்க. சொன்ன மாதிரி போலிஸ் அடுத்த அஞ்சு நிமிஷத்தில் வந்துட்டாங்க.”

”காரை வெளியே எடுத்துட்டாங்களா?”

”இல்லை ஸார். பாலத்துக்கு முன்னாலும் பின்னாலும் போலிஸ் காரின் விளக்குகள் எரிவதை பனியடிச்சுப் போன கண்ணாடி வழியே மசமசப்பா பார்க்க முடிஞ்சது. டிராஃபிக்கை நிறுத்தி டைவர்ட் பண்ணிட்டிருந்தாங்க. ஆனா யாரும் என் கார் பக்கத்திலேயே வரலை.”

”நீயும் காரை விட்டு இறங்கிப் போகலையா?”

”ஸோன்னு கொட்டற மழையில் கதவு மட்டம் வரைக்கும் தண்ணி. தண்ணியோட அழுத்தத்தை எதிர்த்து கதவை என்னால திறக்க முடியலை. மறுபடியும் 911 கூப்பிட்டு லைஃப் த்ரெட்டனிங் சிச்சுவேஷன்னு சொன்னேன். ஆம்புலன்சும் ஃபயர் என்ஜினும் வந்துட்டிருக்குன்னாங்க. நேரம்தான் ஓடுது ஆனா யாரும் கிட்ட வராப்ல இல்லை. மழையும் ஓய்ஞ்ச பாடில்லை. இப்ப கார் தரையை விட்டு லேசா மேலே எழும்பி சுத்த ஆரம்பிச்சிருச்சு.”

”அய்யய்யோ.” என்றார் ஹெட்மாஸ்டர் தங்கதுரை. குரலில் மெலிதான பதட்டம். ”மை குட்னஸ். கண்ணாடியை இறக்கி நீ தண்ணிக்குள்ளே குதிச்சுப் போயிருந்திருக்கலாமே?”

‘ஆமா ஸார். அது லேட் ஞானோதயம். தண்ணி ஜன்னல் கண்ணாடிக்கு மேலே வந்துருச்சு. இப்படி வெள்ளம் மாதிரி பெருக்கெடுக்கும்ன்னு நான் நினைக்கவேயில்லை. எனக்கு நீச்சலும் தெரியாது. வசமா மாட்டிகிட்டேன். எமர்ஜென்சி சேவைகளால ஒரு பருப்பும் வேகப் போறதில்லைன்னு புரிஞ்சிருச்சு. ஆனாலும் இப்ப வேற வழியில்லையே. கண்ணாடியை இறக்கி தண்ணிக்குள்ளே குதிக்கறதுதான் ஒரே வழி. கண்ணாடியை இறக்கினதும் குபீர்ன்னு வெள்ளம் காருக்குள்ளே வந்துருச்சு. தண்ணிக்குள்ளே மூச்சுத் திணற எத்தனை நேரம் தத்தளிச்சேன்னு எனக்கே தெரியாது. அப்புறம் சுத்தமா நினைவிழந்துட்டேன்.”

நிஜமான வருத்தத்தோடு என்னைப் பார்த்தார். ”ப்ச். லைப்ரரிக்குப் போன எனக்கு பதினொரு மணிக்குதான் ஹார்ட் அட்டாக் வந்தது. நான் கிழம். பரவாயில்லை. பாவம் உனக்கு ரொம்பச் சின்ன வயசு.”■


05 செப்டம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *