ஆழ்ந்த உறக்கம். குளிர்காலத்தில் காற்றாடியை 12ஆம் நம்பரில் வைத்து, போர்வைக்குள் கதகதப்பாக சுகமாக தூங்குவது வழக்கம். அப்படி ஒருசுகமான உறக்கத்தில், தீடிரென கதவை தட்டும் சத்தம். யாராக இருக்கும் இந்த நடுநிசியில்? போதாக்குறையாக யாராவது சீக்கிரமா கதவதொறங்களேன் என்று ஒரு பரிட்சையம் இல்லாத ஆண்குரல். ஓட்டின் மேலே மழைநீர் வடிவதற்காக போடப்பட்ட தகரத்தில் உறங்கி கொண்டிருந்த தாய்பூனையும் அழுவது போன்ற குரல் கொடுக்க, திகில் பற்றி கொண்டது மனதில். இதயதுடிப்பைக்கேட்க முடிந்தது. சரி எழுந்து கொள்வோம் என்று கண்ணை திறந்தால், இரவுவிளக்கின் ஊதாநிறத்தையும், கண்ணாடி ஓட்டின் வழியாக எட்டிப்பார்க்கும் நிலவின் வெளிச்சமும்மட்டுமே மிச்சம் இருந்தன. எழ முயற்சி செய்து பயனில்லை. உடல், மூளையின் கட்டளையை கேட்கமாட்டேன் என்கிறது.
கதவை தட்டும் சத்தம் நிமிடத்துக்கு 120 என்ற வேகம் எடுத்திருந்தது. முன்பு பாவமாக கேட்ட குரலும் இப்போது தொறக்கிறியா இல்ல கதவை உடைக்கவா தொனியில் மாறிவிட்டது. சரி அருகில் தூங்குபவர்களை கூப்பிட்டு பார்க்கலாம் என்றாலும் நாக்கும் சொல்பேச்சு கேட்காத பிள்ளையாக மாறி இருக்கு. சரி ஒரு நிமிடம் நில்லுங்கள், கதவை தட்டும் சத்தம் வீட்டில் இருக்கும் மற்றயாருக்கும் ஏன் கேட்கல? சரி ஒன்னும் செய்ய முடியாது நாம கண்ணமூடிக்குவோம். சிறிது நேரத்தில் சத்தம் நின்றது.
எகிப்து மம்மிக்கு உயிர் வந்தது போல கைகால்களில் உணர்வு .பனைமரத்தில் கிளிக்குஞ்சை பிடித்து தின்ன ஏறும் நல்ல பாம்பைப்போல, சுவற்றில் கைவைத்து ஊர்ந்து குழல் விளக்கை தட்டி எறியவிட்டேன். வெளியே சென்று பார்த்தால் யாரும் இல்லை. கையில் ஏதோ புதுசக்தி வந்தது போல உணர்வு. படியில் இருந்து கையை காற்றில் அசைத்து பார்த்தேன். ஆக! என்னால் பறக்க முடிகிறது. ஆனால், மேல் எழும்பி பறக்க முடியவில்லை கீழே விழுந்துவிட்டேன். வீட்டு தின்ணை மீதேறி தவ்விப்பறந்தேன். இரவிலும் கழுகுமலைநகரம் அழகாகதான் இருக்கிறது ஒரு பறவையின் பார்வையில்(Birds view). பறவையானாலே, நீர் நிலையைத் தேடிப்போவது சகஜமப்பா என்பது போல, மலை மேல் பறந்து ஊர்க்கண்மாய் பக்கம் சென்றேன். ஒருபனை மரத்தடியில் பொத்தென்று குதிக்க முள்புதரில் இருந்த முயல் ஓடி ஒழிந்து கொண்டது. பனைமரத்தில் இருந்த மயிலும், நான்கு பனைதூரம் பறந்தது. நிலவின் ஒளியில் பால் கடல் போல வெண்மையாக மின்னியது கண்மாய்நீர். அழகை ரசித்து முடிப்பதற்குள் எங்கிருந்தோ அனகோண்டா தரத்தில் ஒரு மலைபாம்பு வந்து விட்டது. யாருகிட்ட நான் பறவைடா, என்று ஒரு குதி குதித்து கையை வேகமாக வீசிபார்த்து கைவலித்தது தான் மிச்சம். ஐயோ இந்த அனகோண்டாட்ட மாட்டிவிடதான் அந்த திடீர் சக்தியா?.ஓட ஆரம்பித்ததுதான் போதும், லாபகரமாக என்னை தூக்கி கொண்டு கண்மாய்குள் சென்றது பாம்பு.
என்ன ஆச்சரியம்! மூச்சுத்திணறல் இல்லை, தண்ணீருக்கு அடியிலும் சுவாசிக்க முடியுது. ஆழத்தில் ஒரு குகை இருக்க, அதை நோக்கி தூக்கி செல்கிறது. உள்ளே நுழைந்து கொண்டு அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது. ஆகா உட்கார்ந்து சாப்பிட லொகேஷன் தேடுது போல. சுதாரித்துக் கொண்டு கையில் கிடைத்த குச்சியால் அதன்வயிற்றில் குத்தினேன். நான் குத்தியது அதற்கு தெரியாதுபோல, வழக்கம் போல் சுத்தி வந்தது. ஆனால் அதன் இரத்தம் நீலநிறத்தில் காணப்பட்டது. மற்றும் ஒரு துளைவழியாக புகுந்து நீர்மட்டத்தை அடைந்தது.
ஒரு வழியாக பாம்புக்கும் நம்மை பிடிக்காத காரணத்தால் கரையில் வந்து விட்டுவிட்டது. சரி வீட்டுக்கு போய் சேர வேண்டியது தான். லேசாகவிடிந்து இருந்தது. என்ன இது ஆச்சிரியம், நெல்லும், வெள்ளரிக்காயும்,கம்பும் ,சோளமும் விளைந்த வயல்காடு இப்படி ஆலமரம் அத்திமரம் புன்னைமரம் அடர்ந்து இருக்கு. நடக்க ஆரம்பித்தேன் காய்ந்த இலை சருகுகள் மீது.அனைத்துமரங்களும் நூறுவருசத்துக்கு மேலே இருப்பது போல பெரியமரங்கள். எங்கே பார்த்தாலும் மரம், மரம் மட்டும் தான். நம்ம கழுகுமலையே தானா?மரக்கிளைகள் வழியே பார்த்தேன்.உச்சிமலை தெரிந்தது, ஆனால் பிள்ளையார்கோவில் இல்லை. மலையை நெருங்கினேன். மலையைசுற்றிபோடப்பட்ட சிவகாசி செல்லும் சாலையையும், அதன் இருபுறமும் இருந்த மின்சாரக்கம்பவிளக்குகளையும் பார்க்கமுடியவில்லை. விடிந்து ரொம்ப நேரம் ஆகியிருந்தாலும் மக்கள் யாரையுமே பார்க்கமுடியவில்லை.மலைமீது ஏறி நின்று பார்த்தால் வெட்டுவான்கோவில் இருக்கும் இடம்பூசிமொழுகினமாதிரி இருக்கு.8ஆம் நூற்றாண்டுக்கு முந்தையகாலத்திற்கு வந்துவிட்டுவிட்டது போல அந்தநாசமாபோன, ஹாலிவுட்-ல சான்ஸ் கிடைக்காத அனகோண்டா.
சுற்றி எங்கையுமே வீடோ மனிதர்களோ இல்லை.மரம் செடிகொடி பறவைகள் மட்டுமே. உச்சிமலை வரை உயர்ந்த பனைமரங்கள்.குரங்கு கூட்டங்கள்.அனைத்தும் பார்க்க அழகாக இருந்தது.திடீரென ஒருகுதிரை ஓடிவரும் சத்தம்.பறவைகள் பறக்கிறது.அந்த சத்தம் என்னை நோக்கி தான் வருகிறது.உடனே ஒருகுரல் “ஏலே மணி எட்டாவுது ஸ்கூலுக்கு போகலையா, எந்திரிச்சுகுளி” எங்கம்மா குரல்.கண்ணத் தொறந்தா வீடு.ஆனா மணி எட்டுஇல்ல 7 தான். தொலைக்காட்சி பெட்டியில் விடாது கருப்பு குதிரை அருவாள் மீது ஓடிக்கொண்டிருந்தது .