பிச்சைக்காரியின் சாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 5,759 
 

பகல் இரண்டுமணி. திருநெல்வேலி ஜங்க்ஷன் பஸ் நிலையம்.

வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அந்த வெய்யிலிலும், சிவந்த நிறத்தில் முப்பத்திஎட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பரட்டைத் தலையுடன், அழுக்கான உடைகளில் கைநீட்டி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். கிறுக்கச்சி மாதிரி நாக்கை வெளியில் நீட்டி அடிக்கடி பல்லை இளித்தாள்.

அவளைப் பார்த்து பலர் முகத்தைச் சுளித்தாலும், சில இளவட்டங்கள் பிச்சைக்காரியின் மதர்ப்பான உடம்பில் லயித்தனர்.

ஆனால் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு அவள் எப்படி அமோகமாக வாழ்ந்தாள், ஏன் தற்போது இப்படி ஆனாள் என்பது ஒரு சோகமான கதை….

***

அவள் பெயர் மாலதி. அப்போது அவளுக்கு பதிமூன்று வயது.

சிவந்த நிறத்தில் மிகவும் துடிப்புடன் அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் ருதுவாகி இருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு தம்பி.

அன்று மாலதிக்கு பள்ளிக்கூடம் விடுமுறை. பகல் நேரம் வீட்டின் கொல்லைப்புற வாசலை ஒட்டியிருந்த அகலமான கறுப்புக் கற்கள் பதித்த வெளியில் அமர்ந்து கோலம் போடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுடைய தம்பி வீட்டின் கூடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

மாலதியின் பெற்றோர்கள் ஒரு கல்யாணத்திற்காக அருகில் இருக்கும் கிராமத்துக்கு அன்று காலைதான் கிளம்பிச் சென்றார்கள். மாலை வந்துவிடுவார்கள்.

அத்தனை பெரிய வீட்டில் அந்த நேரம் மாலதியும் அவளின் தம்பியும் மட்டும்தான் இருந்தனர்.

வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரங்களில் பிரதான வாசலின் கதவுகள் பூட்டப்பட்டு, கொல்லைப்புற கதவுகள் மட்டும்தான் திறந்து வைக்கப் பட்டிருக்கும். அன்றும் கொல்லைப்புற கதவுகள் திறந்திருந்தன. அந்தக் கதவுகளுக்கு நேர் எதிரில் இருந்த கல் வெளியில் அமர்ந்துதான் மாலதி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவள் கவனித்தாள். கொல்லைபுற கொட்டகையில் கட்டப் பட்டிருந்த பசுமாடு கத்திக் கொண்டேயிருந்தது. பசுமாடு பசியால் கத்துவதாக நினைத்து அதற்கு கொஞ்சம் வைக்கோலை அள்ளிப் போட்டாள். பசுமாடு வைக்கோலை முகர்ந்துகூடப் பார்க்கவில்லை. ஆனால் தொடர்ந்து கத்தியது.

“வைக்கோலைத் தின்னா தின்னு, திங்காட்டி சும்மாக் கெட…” பசுவிடம் மாலதி கோபம் காட்டினாள். அதன்பிறகு கல்வெளியில் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அந்தச் சமயத்தில் கூடத்தைத் தாண்டி வாசல் கதவுக்கு அப்பால் பிச்சைக்காப் பெண் ஒருத்தியின் குரல் கேட்டது.

பொதுவாக மாலதியின் வீட்டிற்குப் பிச்சை கேட்டு நிறையப் பேர்கள் வருவதுண்டு. இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் பிச்சை போடுவார்கள். மாலதிக்கும் நிறைய ஆண் பெண் பிச்சைக்காரர்களின் குரல்களும், முகங்களும் நன்கு பரிச்சயம் ஆகி இருந்தன. ஆனால் இப்போது பிச்சை கேட்கும் பெண்ணின் குரல் புதிய குரலாகத் தெரிந்தது. தவிர, அந்தக் குரல் ரொம்ப அமானுஷ்யமாக இருந்தது. அந்தக் குரலை கவனிக்க விடாமல் பசுமாடு கத்திக்கொண்டே இருந்தது.

‘யாரது… சத்தம் புதுசா இருக்கு’ என்று நினைத்து மாலதி எழுந்து வாசலுக்குப் போனாள்.

பைத்தியம் மாதிரித் தெரிந்த வயதான பெண் ஒருத்தி எலும்புக்கூடு போல ஒட்டி உலர்ந்து; மொட்டையடிக்கப்பட்ட தலை பூராவும் சீழ் வடிகிற புண்களோடு நின்று கொண்டிருந்தாள். மாலதிக்கு அவளைப் பார்க்க பயமாக இருந்தது.

பிச்சைக்காரி அவளைப் பார்த்ததும், “சோறு… சோறு சோறு போடு சோறு போடு” என்று பற்களை இளித்துக்காட்டி; கையில் வைத்திருந்த ரொம்பப் பழைய ஈயப் பாத்திரத்தை மாலதியை நோக்கி நீட்டினாள். ஈயப் பாத்திரம் காய்ந்து தூசி படிந்து போயிருந்தது. மாலதி காலிப் பாத்திரத்தையும் பிச்சைக்காரியின் முகத்தையும் மாறி, மாறிப் பார்த்தாள்.

பிச்சைக்காரி பாத்திரத்தை நீட்டியபடி பற்களை இளித்து பிச்சை கேட்டுக்கொண்டு அங்கேயே நின்றாள்.

மாலதியின் குடும்பத்தில் பல வருடங்களாக ஐதீகம் ஒன்று உண்டு. இந்த மாதிரி பிச்சை கேட்டு வருபவர்கள் ஏந்தும் பாத்திரத்தை காலியாக ஏந்தக் கூடாது. அப்படிக் காலியான பாத்திரத்தை ஏந்தி நின்றால் பிச்சை போட மாட்டார்கள்.

காலிப் பாத்திரத்தில் பிச்சை போட்டால், பிச்சை போட்டவர்களும் அதே மாதிரி பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமாம்…

அந்த வீட்டிற்கு வழக்கமாக வரும் பிச்சைக்காரர்களுக்கு இந்த ஐதீகம் நன்கு தெரியும். ஆகையால் அவர்கள் காலிப் பாத்திரம் எடுத்து வரவே மாட்டார்கள். வேறு எங்காவது சோறோ, குழம்போ கிடைத்த பிறகுதான் மாலதியின் வீட்டிற்கு வருவார்கள். ஒன்றுமே இல்லாவிடில், வெங்காயமோ அல்லது மிளகாய்களோ எங்காவது பொறுக்கி எடுத்து வருவார்கள். வெறும் பாத்திரத்தில் ஒரு பருக்கைகூட பிச்சையாக கிடைக்காது.

மாலதி, “ஏய் கெழவி, காலி சட்டியில் என்றைக்கும் சோறு போட மாட்டோம்” என்றாள்.

“சோறு போடு…. சோறு போடு” பிச்சைக்காரி பற்களை இளித்துக் காட்டியபடியே திருப்பித் திருப்பி சொன்னாள்.

“செவிடியா நீ?… காலிச் சட்டியில சோறு கண்டிப்பா போடமாட்டேன்…”

கொல்லைப் புறத்தில் பசுமாடு விடாது கத்திக் கொண்டேயிருந்தது. அதன் குரலில் ஒரு அமானுஷ்யம் தெறித்தது….

“பசிக்குது… பசிக்குது. சோறு போடு..”

“சரியான கிறுக்கி… சொன்னதையே சொல்றா.”

மாலதி அலுத்துக்கொண்டாள். உள்ளே சென்று தன் பாடங்களைத் தொடர்ந்தாள்.

அந்தப் பிச்சைக்காரியும் நகர்ந்து போகாமல் சோறு கேட்டுக் கத்திக் கொண்டேயிருந்தாள். பசுமாடும் அலறிக் கொண்டேயிருந்தது.

கூடத்திலிருந்த மாலதியின் தம்பி, “யாருக்கா அவ… கத்திக்கிட்டே கெடக்கா.” என்றான்.

“புதுப் பிச்சைக்காரியா இருக்கா… பாத்தா பயங்கர கிறுக்கி மாதிரி இருக்கா.”

மாலதியின் தம்பி வாசலுக்குப் போனான்.

பிச்சைக்காரி பத்திரத்தை நீட்டி, “சோறு… சோறு சோறு போடு தம்பி” என்றாள். அவனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. காலிப் பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை… சோறு போட்டால் என்னவென்று தோன்றியது. திரும்பிப் பார்த்தான். மாலதி அவளுடைய பாடங்களில் லயித்திருந்தாள். வாசல் கதவை சத்தம் எழாமல் திறந்து வைத்தான்.

பிச்சைக்காரிக்கு மெளனமாகக் கையால் ‘இரு… சோறு கொண்டு வருகிறேன்’ என்று சைகை காட்டிவிட்டு மெதுவாக நடந்து சமையல் அறைக்குப் போனான். ஓசை இல்லாமல் ஒரு பாத்திரம் நிறைய சோறு எடுத்துக் கொண்டான். மறுபடியும் சப்தம் இல்லாமல் மாலதியை நோட்டமிட்டுக்கொண்டே சென்று பிச்சைக்காரியின் அந்தக் காலிப் பாத்திரத்தில் அவசர அவசரமாக சோற்றைக் கொட்டினான்.

மகிழ்ச்சியில் கண்கள் விரிந்த பிச்சைக்காரி, வாசலிலேயே சோற்றைச் சாப்பிடுவதற்காக தட்டுத்தடுமாறி உட்கார்ந்து “நல்லாயிரு தம்பி…நீ நல்லா இரு” என்று சொல்லி இளித்தாள். தம்பிக்கோ பிச்சைக்காரியின் குரல் அக்காவுக்கு கேட்டு விடுமோ என்ற பயத்தில் மார்பு வேகமாக அடித்துக்கொண்டது.

அதனால் மெல்லிய குரலில், “இங்கே உக்காராதே… வேற எங்கேயாவது போயிடு” என்றான். ஆனாலும் அவனுடைய குரல் மாலதியின் காதுகளில் கேட்டுவிட்டது.

மாலதி தலையை உயர்த்திப் பார்த்தாள்…

தம்பி அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக முழித்தது அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேகமாக எழுந்து வாசலுக்குப் போனாள்.

சில சோற்றுப் பருக்கைகள் மட்டும் ஒட்டியிருக்க ஒரு காலி பாத்திரம் தம்பியின் கைகளில் இருந்தது. மாலதி ஆத்திரத்துடன் திறந்திருந்த வாசல் கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். பிச்சைக்காரி அவளைப் பார்த்ததும் இளித்தாள். அவளுடைய ஈயப் பாத்திரம் பூராவும் சோறு நிறைந்திருந்தது.

மாலதி தம்பியை, “சனியனே… காலி பாத்திரத்தில் பிச்சை போடக்கூடாதுன்னு ஒனக்குத்தான் தெரியுமேடா… தெரிஞ்சும் எதுக்காகடா போட்டே?”

“பாத்தா ரொம்பப் பாவமா இருக்குக்கா…”

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சா ஒன்னைக் கொன்னு புடுவாங்க. போடா நீ போட்ட சோறு பூராத்தையும் திருப்பி வாங்குடா. செத்தாலும் நம்ம வீட்ல காலி பாத்திரத்துல பிச்சை போடக்கூடாது… போடா.”

மாலதி தம்பியிடம் கோபமாக இரைந்தாள். தம்பி பேசாமலேயே நின்றான்.

“போய் வாங்குடா…”

தம்பி பயந்துபோய் முழித்தான்.

“நாயே… நீ வாங்கலைன்னா… நான் வாங்கறேன்.”

சாப்பிடுவதற்காக சோற்றில் அப்போதுதான் பிச்சைக்காரி கையை வைத்திருந்தாள்.

“ஏய் கிறுக்குக் கெழவி, திருப்பிக் கொடு எங்க சோறை.” வெடுக்கென்று ஈயப் பாத்திரத்தை பறித்து விட்டாள்.

தம்பியின் கையில் இருந்த பாத்திரத்தை வாங்கி, பிச்சையிட்ட சோறு பூராவையும் அதில் கொட்டிக்கொண்டு, ஈயப் பாத்திரத்தை அலட்சியமாக வாசலில் எறிந்துவிட்டு சமையல் அறைக்குள் ஓடி சோற்றைப் பத்திரமாக வைத்துவிட்டு மறுபடியும் தன்னுடைய பாடப் புத்தகங்களின் முன்னால் போய் உட்கார்ந்தவள் – திறந்திருந்த வாசல் கதவின் வழியாக பிச்சைக்காரி ஆவேசமான முக மாற்றத்துடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்த பயங்கரத் தோற்றத்தைப் பார்த்ததும் வெலவெலத்து எழுந்து நின்றுவிட்டாள். அருகில் வந்துவிட்ட பிச்சைக்காரியின் கண்கள் ஒரு ஆந்தையின் கண்கள்போல விரிந்து சிவந்திருந்தன.

“அய்யோ கிறுக்கி வீட்டுக்குள்ள வந்துட்டா…கிறுக்கி வீட்டுக்குள்ள வந்துட்டா” – பயத்தில் மாலதி அலறினாள்.

பசுமாடும் அமானுஷ்யமான குரலில் விடாது கத்திக் கொண்டேயிருந்தது.

பிச்சைக்காரி கையில் வைத்திருந்த அவளின் ஈயப் பாத்திரத்தை மாலதியின் முகத்தில் விசிறி அடித்தாள்.

“போட்ட சோத்தை திருப்பி அள்ளிட்டுப் போயிட்டு… நாயே என்னை கிறுக்கின்னா சொல்றே? ஒன்னை என்ன செய்யறேன் பாரு…” என்று பற்கள் பூராவையும் காட்டி இளித்தபடி இரண்டு கைகளையும் அவளை நோக்கி நீட்டிக்கொண்டே மாலதியை நெருங்கினாள்.

மாலதிக்கு உடம்பு வியர்த்து நடுங்கியது. மிரண்டுபோய் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னல் நகர்ந்தாள். பிச்சைக்காரி அவளை மிகவும் நெருங்கிவிட்டாள். அவளிடமிருந்து எப்படித் தப்புவது என்று மாலதிக்கு தெரியவில்லை.

பசுமாடும் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது.

மாலதியின் நாக்குப் பூராவும் ஒருவித கசப்புப் பரவியது. எச்சிலைக் கூட்டி விழுங்கிவிட்டுச் சுற்றிலும் பார்த்தாள். பசுமாடு கட்டிக்கிடந்த கொட்டகைக்கு அருகில் இருந்த கழிப்பறைப் பக்கம்தான் ஓட முடியும் போல இருந்தது. சட்டென்று பாய்ந்தோடி கழிப்பறைக்குள் நுழைந்து ககவுகளை பூட்டிக் கொண்டாள்.

பிச்சைக்காரி அவளை விடவில்லை. ஒரு விசித்திரமான குரலை எழுப்பியவாறு கழிப்பறையை நோக்கிப் போனாள். பூட்டியிருந்த கதவுகளை கால்களால் மாறி மாறி உதைத்துக்கொண்டே “போட்ட சோத்தை அள்ளிட்டா போறே, என்னை கிறுக்கீன்னா சொல்றே… சோறு சோறுன்னு நீ பிச்சையெடுத்து அலையப்போறே பாரு. தெருத் தெருவா நீ கிறுக்குப் பிடிச்சி திரியப் போறே நாயே…”

பசுமாடு ஈனக் குரலில் அழுதபடி கயிறை அறுத்துக்கொள்ள திமிறியது.

தொடர்ந்து சில நிமிடங்களுக்கு கதவுகள் பிச்சைக்காரியால் இரைச்சலுடன் உலுக்கப் பட்டுக்கொண்டே இருந்தன. பயந்திருந்த மாலதியைச் சுற்றிலும் ஓர் அந்தகாரம் செவிகள் இரைய சுழன்றது. கதவுகள் பெயர்ந்து அந்தப் பிச்சைக்காரி உள்ளே நுழைந்து விட்டால் என்ன செய்வதென்ற பயம் மாலதியின் நாசித் துவாரங்களை பசையாய் அடைத்தது.

‘என்னைக் காப்பாத்துங்க’ என்று கத்த நினைத்து முயன்றாள். ஆனால் குரலே எழும்பவில்லை…. அப்படியே பேதலித்து நின்றாள்.

சிறிது நேரம் கழித்து “அந்தப் பிச்சைக்காரி போயிட்டா” தம்பியின் குரல் கேட்டது. அதற்குப் பிறகு பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து மாலதி கதவைத் திறந்தாள். அவளுடைய முகம் வெளுத்து, பார்வை நிலை குத்திப் போயிருந்தது.

முகத்தை கோணலாகத் திருப்பியபடி மிக மெதுவாக நடந்து கூடத்துக்குப் போன மாலதி கட்டிலின் ஓரத்தில் மிரட்சியுடன் ஒடுங்கிப்போய் உட்கார்ந்தாள். பிச்சைக்காரியின் முகம் எதிரில் தெரிந்துகொண்டே இருந்தது. அவளின் குரல் செவிகளுக்குள் அதிர்ந்துகொண்டே தொந்திரவு செய்தது. விடிய விடிய மாலதிக்கு தூக்கமே வரவில்லை. ஏராளமாக வியர்த்தது. உடம்பு கொதித்து காய்ச்சல் வந்தது.

வீடு திரும்பிய மாலதியின் பெற்றோர்கள் அவளை ஒரு நல்ல டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். காய்ச்சல் குணமானது. ஆனால் மனச்சிதைவு தொடர்ந்தது. .

அடுத்தமாதம் மாலதியின் வீடு திருடர்களால் கொள்ளையடிக்கப் பட்டது. பிச்சைக்காரியும், திருடர்களும் புகுந்த வீடு இனி வெளங்காது என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்.

அந்தக் குடும்பத்தின் ஐஸ்வர்யம் வேகமாகச் சிதிலமடைந்தது. தம்பி மஞ்சள் காமாலையில் கண்களை இழந்தான். பெற்றோர்கள் மரித்துப் போயினர்.

அதன்பிறகு தொடர்ந்த மாதங்களில் அந்தப் பிச்சைக்காரியின் ஞாபகம் மிகக் கெட்டியான பசைபோல் மாலதியின் மனதில் வழிந்து அவள் வாழ்வில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *