எத்திராஜுலுவும் ‘L’ போர்டும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 5,213 
 
 

1962ம் வருஷத்தின் தொடக்கத்தில் மார்ச் மாதத்தில் சேர்ந்தாற் போல நாலைந்து நாள் விடுமுறை வருகிறாற் போல் வாய்த்த சுபயோக சுபதினம் ஒன்றில். உதயாதி நாழிகை 7 மணிக்கு மேல் ஒரு கப் காபியைக் குடித்து விட்டு. இரண்டு மூன்று பெருமூச்சுக்களையும் மலைப்போடும், பயத்தோடும் வெளித் தள்ளி விட்டு அதன் பின் உயர்திரு. டாக்டர் எத்திராஜுலு, எம்.ஏ.பி.எச்.டி. அவர்கள் ‘கார் டிரைவிங்’ பழகிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

‘அது சரி! புரொபலர் எத்திராஜுலு எப்போது கார் வாங்கினார்?’ என்று உங்களில் யாருக்காவது கேள்வி கேட்பதற்குத் தோன்றலாம்.இந்தக் கேள்வியை நீங்கள் இன்றையிலிருந்து சரியாக இரண்டரை மாதத்துக்கு முன்னால் – அதாவது 75 நாட்களுக்கு முன்னால் கேட்டிருக்க வேண்டும்.

சரியாக 1961ம் வருஷம் டிசம்பர் மாத நடுவில் புரொபலர் எத்திராஜுலு ஒரு ‘ஸெகண்ட் ஹேண்ட்’ கார் வாங்க வேண்டுமென்று தீர்மானித்து, அதற்காகச் சுமார் 4500 ரூ பணமும் ஒதுக்கி வைத்து விட்டுக் கார் புரோக்கர்களிடமும் சொல்லி வைத்தார். 1962ம் இங்கிலீஷ் வருடமும் அதோடு உயர்திரு. எத்திராஜுலு அவர்கள் வீட்டு வாசலில் சேர்ந்து வந்து நின்றன. டிரைவராக முனியப்பனும் வந்து சேர்ந்தான். மாதம் ஒன்றிற்கு 2000 ரூபாய் வருமானம் உள்ள ஆள் கூட ஒரு பழைய மாடல் காரைக் கட்டித் தீனி போடுவது சிரமமான காரியம் என்று என்னைப் போல் நண்பர்கள், வேண்டியவர்கள் எல்லாம் எவ்வளவோ அறிவுரை கூறியிருந்தும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வெறும் 800 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய உயர்திரு. டாக்டர் எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்.டி. அவர்கள் கார் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இத்தனை வயதுக்குமேல் அவருக்கு இன்னதென்று புரியாததும், புரிந்த வரையில், ஒரு கார் இருந்தால் தீரக் கூடியதுமான வியாதி ஒன்று வந்து தொலைத்திருந்தது. இருந்தாற் போலிருந்து பத்துக் கெஜ தூரம் நடந்தாலே கண்களை இருட்டிக் கொண்டு மயக்கமாக வந்தது. இரண்டொரு நாள் பிளாட்பாரத்தில் நடக்கும் போதே அவர் தலை சுற்றி மயங்கி விழ நேர்ந்து, கல்லூரிப் பையன்கள் சைக்கிள் ரிக்‌ஷாவில் தூக்கிப் போட்டு அவரை வீட்டில் கொண்டு வந்து விட நேர்ந்ததும் உண்டு. இந்த மயக்கத்துக்குப் பயந்துதான் அவர் கார் வாங்கினார்.கார் வாங்கிய பின்போ அவருக்கு வேறோர் விதமான மயக்கமும் வந்து சேர்ந்தது. அதற்கு ஆகிய செலவைக் கணக்குப் பார்த்த போது ‘கிர்ர்’ரென்று தலை சுற்றியது; மாதிரிக்கு எத்திராஜுலு அவர்களின் டைரியில் கண்டபடி 1962ம் வருடம் ஜனவரி, பிப்ரவரி, இரு மாதங்களுக்கும் கார் வகையில் அவருக்கு ஆன செலவு விவரங்களைப் பார்க்கலாம்.

3.11.62 கார் செலவு மொத்தம் ரூ.472 – விவரம் வருமாறு:

1.டிரைவர் சம்பளம் (அண்டு) பேட்டாரூ.180 
2.பெட்ரோல் + ஆயில்ரூ.110
3.முன்பக்க டயர் டியூப் – புதியதுவாங்கின வகையில்ரூ. 21
4.இண்டிகேடர் லைட் பழுது பார்த்ததற்காகரூ. 15
5.கார்புரேட்டரும் ஜெட் புதியது மற்றும்சில்லறைச் செலவுகள்⁠ ரூ.146
மொத்தம்ரூ.472

2.2.1962 கார் அவஸ்தை – கட்டுக்கடங்காத செலவு – சனியன் மொத்தம் ரூ. 515

1.டிரைவர் சம்பளம் (அண்டு) பேட்டாரூ.180
2.பெட்ரோல் பங்க்… பில்ரூ.120
3.முன்பக்க டயர் தேய்ந்திருந்ததனால் ரீட்ரேட் செய்யரூ. 80
4.ஹெட்லைட் தகராறுரூ. 25
5.ஸைலன்ஸர் ‘நாய்ஸ்’ரூ. 85
6.ரேடியேட்டர் கோளாறு ஃபேன் பெல்ட் புதியது – ஹாரன் தொல்லைரூ. 25
மொத்தம் –ரூ.515

கட்டுக்கடங்காத இந்தச் செலவுகளின் காரணமாக வேறு எதிலாவது சிக்கனமாயிருக்க வேண்டுமென்று தவித்துத் தடுமாறி, இராப்பகலாகத் தூக்கமிழந்து, அப்படியே தூங்கினாலும் சொப்பனங்களில் கூட ‘ஸைலன்ஸ் பைப்பு டிரபிள்…!’, ‘ரேடியேட்டர் தகராறு…’, ‘டைனமோ சார்ஜ் ஆகவில்லை…’ என்று இந்த மாதிரிச் சொப்பனங்களாகவே கண்டு, அலறியடித்து எழுந்திருப்பது வழக்கமாகியிருந்தது எத்திராஜுலுவுக்கு.

எத்திராஜுலு அவர்கள் இப்படிப்பட்ட நிலையில் டிரைவர் சம்பளமாகிய ரூ.180 ஆவது மாதா மாதம் மீதப்பட்டால் நல்லதென்று கருதியவராக, அதை டிரைவர் முனியப்பனிடம் எப்படிச் சொல்வதென்று சொல்லத் தயங்கினார். அந்தச் சமயத்தில் ‘நுணலும் தன் வாயாற் கெடும்’ என்பது போல் முனியப்பனே அவரிடம் அதைப் பற்றி ஆரம்பித்தான். –

“நீ இன்னா சார்… உடம்புக்கு முடியலேன்னாலும் வண்டியை எடுன்னு… கஸ்டப்படுத்துறே… ஏங்கல்… தாங்கல்லே நா வராமப் பூட்டாலும் ஒரு நா ரெண்டு நா… நீயே சவாரி பண்றாப்லே இருக்கணும்… டிரைவிங் படிச்சுக்க லார் பட்டணத்திலே கெய்வி இருக்காளே… பல்லுப்போன கெய்வி… அவகூட ஸ்டியரிங் புடிச்சிக்கினு ஒட்டிக்கினு போறா ஸார்…”

“ரொம்ப கரெக்ட் முனியப்பன்! நாளைக்குக் காலையில் ஏழு மணியிலிருந்து எனக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்க வந்துடு…” என்று கடைசியில் அவனைக் குருவாக அங்கீகரித்தார் எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்.டி.

“இது என்னா படா வித்தை?…ரெண்டு நா..கத்துக்கினியானா… அப்புறம் நீயா. ஸ்டியரிங்கைப் பிடிச்சுக்கினு போவே..” என்று சொல்லிக் கொண்டே மறுநாள் காலையில் தானே இரண்டு பெரிய எல் – போர்டுகளும் எழுதி எடுத்துக் கொண்டு வந்துவிட்டான் முனியப்பன். அவன் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே ‘டிரைவிங்’ கற்றுக் கொள்வதற்காக ‘டெம்ப்ரரி லேர்னிங் லைசென்ஸ்’ தயாராக எடுத்து வைத்திருந்தார் எத்திராஜுலு.

எனவே ஆரம்பத்தில் கூறியபடி மேற்கண்ட சுபயோக சுபதினத்தில் காரின் நான்கு சக்கரங்களிலும் எலுமிச்சம் பழங்களை வைத்து நசுங்கச் செய்தபின்-டிரைவர் முனியப்பனுக்குக் குருதட்சிணையாக 2 ரூபாயும் கொடுத்து – அவனைப் பக்கபலமாக அருகில் அமர்த்திக் கொண்டபின் எத்திராஜுலு ‘டிரைவிங்’ பழகலானார்.

“ஸாரு! பராக்குப் பார்க்காதே. இங்கேயே என்னையே கவனி: ‘கீ’‘’யை ஆன்லே போட்டுக்க, ஸ்டார்ட்டரை இஸ்த்துக்கினு… அதுக்கு மின்னாடியே ‘கியரை’ நியூட்ரல் பண்ணிக்குவே… பண்ணிக்கினியானா… என்ஜீன் ஸ்மூத்தா ஆடும்… அப்புறம். ‘க்ளச்’ பெடலைக் காலாலே அமுக்கிக்கினு… ‘ஃபர்ஸ்ட்’ கியரைப் போடு. ‘கிளச்’ மேலே இருக்கிற காலை மெல்லக் கொஞ்சமா எடு… இன்னொரு காலாலே ‘ஆக்ஸிலேடரை’ அமுக்கி ஸ்டடியா ரேஸ்… பண்ணு…”

‘டிரைவிங்’ தீட்சை கொடுக்கும் ஞானகுருவாகிய முனியப்பன் கூறியபடியே இத்தனை காரியங்களையும் உயர்திரு எத்திராஜுலு அவர்கள் செய்து முடித்த பின்னும்… பிடிவாதக்கார விருந்தாளியைப் போலக் கார் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டது. அண்டசராசரங்களும் நடுங்குகிறாற்போல என்ஜின் விட்டுவிட்டுக் குதிப்பது மாதிரி ஒசை வந்தது. அந்த ஒசை வந்த மறுகணமே என்ஜின் ‘ஆஃப்’ ஆகிவிட்டது. அவ்வளவுதான்! எத்திராஜுலு அவர்களின் பூர்வாசிரமத்து டிரைவரும் தற்போதைய ஞானகுருவும் ஆகிய முனியப்பனுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது.

“இன்னா ஸார். உன்னோட படா பேஜாராப் போச்சு… இதே புரியிலேன்னா காலேஜியிலே நீ எப்படி ஸார் அத்தினி பசங்களுக்குக் கத்துக் குடுக்கிறே?… இங்கே பாரு…ஸார்! ஆக்ஸிலேட்டரை அமுக்கி ரேஸ் பண்றப்போ… ‘க்ளச்’ மேலே இருக்கிற காலை மெதுவா… நெதானமா எடுக்கணும்… பொசுக்குனு எடுத்திட்டியோ வண்டி ‘ஆஃப்’ ஆயிப்பூடும்… எங்கே… இப்ப கரெக்டா… செய்யி பார்க்கலாம்…” கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடக்கியாண்டு பயப்படாமல் வகுப்பு நடத்தும் புரொபஸர் எத்திராஜூலு! இப்போது இரண்டு ‘எல்’ போர்டுகளிடமும் ஒரு கிழ டிரைவர் முனியப்பனிடமும் மாட்டிக் கொண்டு விழித்தார்.

இரண்டாவது முறையாக இப்போது பதறாமல் ‘குரு’வின் கட்டளைப்படியே எல்லாம் செய்து கியரைப் போட்டபோது… ‘கர்ர் புர்ர் சர்ர்…’என்று இன்னும் எப்படி எப்படியெல்லாமோ சேர்ந்தும் கர்ணகடுரமான ஓசை ஒன்று எழுந்தது. உடனே டிரைவர் முனியப்பன் எத்திராஜுலுவை அடித்துவிடுவது போல் கூப்பாடு போடத் தொடங்கி விட்டான்.

“‘க்ளச்சை’ நல்லா அமுக்காமலேயே கியர் போடுறியே ஸார்! சர்த்தான்… நீ இந்த லட்சணத்துலே வண்டி கத்துக்கினியானா நாலே நாளுலே இந்த வண்டியைக் காயலான் கடைக்குத் தள்ளிக்கினு போயிடலாம்”…என்று கேலியில் இறங்கிவிட்டான் டிரைவர் முனியப்பன்.

அன்று இவ்வளவில் கல்லூரிக்குப் போக நேரமாகிவிட்டதனால் மறுபடி அடுத்த நாள் காலை மீண்டும் தொடர்ந்து கற்றுக் கொள்ளத் தொடங்கலாமென்று தீர்மானித்துக் கொண்டு குளித்துச் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டார் எத்திராஜூலு. கல்லூரிக்குப் போகும்போது அவர் தன்னோடு இருந்து தான் வண்டி ஒட்டுகிற திறனைக் கவனிப்பதற்காக அவரை முன் ஸீட்டிலேயே உட்கார்ந்து கொள்ள வேண்டுமென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டு விட்டான் டிரைவர் முனியப்பன்.

“நீ ஒண்ணுமே செய்ய வேணாம் ஸார்!நான் எப்படி ஒட்டுறேன்னு பார்த்துக்கினே வந்தியானாக்கூடப் பத்து நாளிலே தேறிடுவே…” என்று அவன் சொல்லியபோது பி.எச்டி பட்டம் வாங்க ‘தீஸிஸ்’ எழுதினதைவிடக் கஷ்டமான காரியமாக அவருக்குத் தோன்றியது கார் டிரைவிங். கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாகவமாகவும், பயப்படாமலும், மிக அலட்சியமாகவும் தாங்களே டிரைவ் செய்து கொண்டு வரும் ‘ஒனர்’களைப் பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு சுலபமாக டிரைவ் செய்யத் தெரிந்து கொண்டுவிட்டதற்காக அவர்கள் மேலெல்லாம் பொறாமைப்பட வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. நாலு காராவது நாலு லாரியின் மேல் மோதி அப்படி மோதுவதன் மூலம் உலகத்தில் கார் டிரைவிங் தெரியாத மடையன்கள் இன்னும் நாலு பேராவது இருக்கிறான்கள் என்று நிரூபணமாக வேண்டும் போல அவருக்கு ஆசையாகவும் இருந்தது. தம்முடைய காரில் தாம் உட்கார்ந்து கொண்டு போகும்போது எதிரே வருகிற ஒவ்வொரு புத்தம் புதிய காரையும் ஒரு லாரியோடு மோதுவதாகக் கற்பனை செய்து மகிழும் குரூரமான சந்தோஷத்துடனே ‘டிரைவிங்’ போவது கற்றுக் கொள்ளத் தொடங்கியபின் இந்தச் சில தினங்களாக அவருடைய வழக்கமாகியிருந்தது.

மூன்றாவது நாள் காலை ‘டிரைவிங்’ கற்றுக் கொள்ளும்போது அவர் வண்டியை ஒழுங்காக ‘ஸ்டார்ட்’ செய்து ‘கியர்’ போட்டு மெயின் ரோட்டில் கொஞ்சதுரம்கூட ஒட்டிவிட்டார். அப்புறம்தான் பிடித்தது சனியன். எதிரே வந்த பிரம்மாண்டமான வைக்கோல் போர் வண்டி ஒன்றிலிருந்து காரை விலக்குவதற்காக ‘ஸ்டியரிங்கை’ இந்தப் பக்கம் சுற்றுவதற்குப் பதில் அந்தப் பக்கமே சுற்றி அதன் விளைவாய் எத்திராஜுலு அவர்களும், அவர்களுடைய காரும், ‘டிரைவிங்’ குரு முனியப்பனுமாகச் சேர்ந்து ஒரு பெரிய பள்ளத்தில் இறங்க நேர்ந்தது. நல்லவேளையாக வண்டிக்கும் ஒன்றும் சேதமில்லை. அதிலிருந்த ஆட்களுக்கும் சேதமில்லை. பள்ளத்தில் இறங்கிய அதிர்ச்சியில் வண்டி தானாகவே ஆஃப் ஆகிவிட்டது. எப்படியோ அரும் பாடு பட்டு வண்டியைப் பள்ளத்திலிருந்து மெயின் ரோட்டுக்குத் தள்ளிக் கொண்டு வந்து வீட்டுக்குப் பத்திரமாகத் திரும்ப முடிந்தது ஆண்டவன் புண்ணியம்தான். ‘இப்போது உங்கள் மோட்டாரை நீங்களே ஒட்டலாம்’ என்ற புத்தகம் புரொபஸருக்கு பால பாடமாகியிருந்தது.

பின்பொரு நாள் காரின் எதிரே நகராமல் குறுக்கே வந்து நின்ற எருமை மாடு ஒன்றைக் கண்டு காலால் ‘பிரேக்’கை மிதிப்பதற்குப் பதிலாகப் பதற்றத்தில் எத்திராஜுலு அவர்கள் ‘ஆக்ஸிலேட்டரை’ப் பலங்கொண்ட மட்டும் மிதித்து வைக்கவே வண்டி சீறிப் பாய்ந்து பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டது. அடிபட்ட எருமை மாடு சாகவில்லை யானாலும் மாட்டுக்காரன் புரொபஸர் எத்திராஜுலுவையும் அவருடைய காரையும் சுற்றிக் கூட்டம் கூட்டிச் சந்தி சிரிக்கப் பண்ணி ரூ.200 வாங்கிவிட்டான். இது நிகழ்ந்தபோது எத்திராஜுலுவே ‘சுயசாரத்யம்’ செய்யத் தொடங்கியிருந்தார்.

எத்திராஜுலு இரண்டு மாதங்களாக முயன்று பழகியும் ‘டிரைவிங்’ அவருக்கு வரவில்லை. கீழ்க்கண்ட மாதிரிச் செலவுகள்தான் நாள் தவறாமல் வந்தன.

1. கருணாகர முதலித் தெருத் திருப்பத்தில் MSY 0832 ‘பியட்’டில் இடித்ததற்காக அந்தக் கார்க்காரருக்குக் கொடுத்துச் சரிக்கட்டிய வகையில் ரூ.150.00

2. மெயின்ரோட்டில் குறுக்கே வந்து மாட்டிக் கொண்டு வதைத்த எருமை மாட்டிற்கு. ரூ. 200.00

3. தெருமுனையில் வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் மோதியதற்கு நஷ்டஈடு.ரூ.100.00

எத்திராஜுலு இப்படி செலவுகளைக் கண்டு ஸெல்ஃப் டிரைவிங் தேவையில்லை என்று கைவிட்டதோடு அமையாமல் ‘ஸெல்ப் டிரைவிங்’ தொந்திரவினால் ஆகிய செலவைவிட ‘டிரைவருக்கு’ ரூ. 180 கொடுத்துத் தொலைப்பதே மேல் என்று மறுபடியும் முனியப்பனை வைத்துக் கொண்டார். காரில் இருந்த ‘எல்’போர்டுகளைக் கழற்றிவிட்டாலும் அந்தக் கார் என்கிற அவஸ்தை தினசரி தமக்கு எதையோ பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது போல்தான் அவருக்குத் தோன்றியது. அவருடைய சம்பளத்தில் சராசரி மாதா மாதம் ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் விழுங்கிக் கொண்டிருந்தது அந்தப் பழைய கார்.

“செலவு இப்படியே ஆகிக் கொண்டிருந்தால் அந்தக் காருக்கு மாட்டி வச்சிருந்தீங்களே ‘எல்’போர்டு அதை எடுத்து நீங்களும், நானுமே ஆளுக்கு ஒண்ணு மாட்டிக்கலாம்” என்று அவருடைய மனைவியே ஒருநாள் அவரை வயிரெரிச்சலோடு கேலி செய்யத் தொடங்கிவிட்டாள். கடைசியாக அடுத்த முறை நான் உயர்திரு எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்டி, அவர்களைச் சந்தித்தபோது “காரோடு சேர்ந்து தெருவில் மயங்கி விழறதைவிடக் கார் இல்லாமே நடந்து போய்க் கொண்டிருக்கிற போதே மயங்கி விழுந்து விடலாம் போலிருக்கு சார்! செலவு ஆளையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது” என்று அந்தரங்கமாகவும் மனப்பூர்வமாகவும் வருத்தப்பட்டார் அவர். அதோடு 4500ரூ. விலைக்கு வாங்கிய அந்தப் பழைய கார் கடந்த சில மாதங்களில் ரிப்பேர் செலவு வகையறாக்களில் சுமார் 5000 ரூ சாப்பிட்டுவிட்டதாகவும் சொல்லி அழுதார். அவருடைய முகம் கவலையினால் வாடியிருந்தது. பேச்சிலும் மலர்ச்சியில்லை. தாம் வாங்கிவிட்ட பழைய காரினால் தமக்கு உண்டாகியிருந்த கஷ்டங்களுக்கு இந்தப் பாழாய்ப் போன உலகம் முழுவதுமே பொறுப்பாளி என்பதுபோல் அவர் உலகத்தை வெறுப்போடு பார்ப்பதாக எனக்குத் தோன்றியது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பழைய காரினால் தாம் படும் அவஸ்தைகளையே அரற்றிக் கொண்டிருந்ததனால் சிறிது காலம் புரொபஸர் எத்திராஜுலுவைச் சந்திக்காமலே அவர் பார்வையில் படுவதிலிருந்தே தப்பித்துக் கொண்டு வந்தேன் நான்.

மீண்டும் நான் 1962ம் வருடம் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி பாரத நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த புண்ணிய தினத்தன்று உயர்திரு. டாக்டர் எத்திராஜுலு எம்.ஏ.பி.எச்.டி. அவர்களைச் சந்தித்தபோது,

“சார் ஒரு குட் நியூஸ்… நம்ம காரை… நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்!” அந்தக் காரினால் அவர் அதிகம் சிரமப்பட்ட பின்பு அதை ஒரு பொதுவுடைமையாக்கி-நம்ம கார் என்றே எல்லாரிடமும் சொல்லத் தொடங்கியிருந்தார். “ஒரு சினிமாப்படத் தயாரிப்பாளர் தம்முடைய படம் ஒன்றில் மலையுச்சியிலிருந்து கார் ஒன்று கீழே கவிழ்கிற காட்சியைத் தத்ரூபமாக எடுப்பதற்காக நம்ம காரை 9500 ரூ கொடுத்து வாங்கிக் கொண்டு போய்க் கவிழ்த்துவிட்டார்” என்று முகமலர்ச்சியோடு தெரிவித்தார்.

“சபாஷ் பேஷான காரியம் செய்தீர்கள்” என்று நான் அவரைப் பாராட்டினேன்.

“ஆமாம் சார் இந்தச் சுதந்திரதினத்தைப் போல் நான் பரிபூரணமான மகிழ்ச்சியை அடைந்த சுதந்திரதினம் வேறொன்று இருக்க முடியாது. பாரத நாட்டுக்கு அந்நியர்களிடமிருந்து விடுதலை கிடைத்ததைவிட இந்தப் பழைய காரிடமிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது பெரிய காரியம் என் கையை விட்டுப் போகிறதற்கு முன் இந்தக் கார் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிற விஷயங்கள் ஏராளம் சார்”!

“டிரைவிங் ஒன்றைத் தவிர” – என்று ஞாபகமாகக் குறுக்கிட்டு அவருடைய வாக்கியத்தைத் திருத்தினேன் நான்.

– அமுதசுரபி, ஜூன், 1963, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *