(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
உண்மை பேசுதல்
மகாத்துமா காந்தி அவர்கள் சிறை வாசத்தில் வாழும்போதும் கடவுள் தியானத்தை விடாமல் செய்துவந்தார். ஒரு நாள் நெடுநேரம் தியானம் செய்துகொண்டே இருந்தார். இவருக்குக் காவல் காக்கும் வீரருக்கு மிக்க பசி உண்டாகியது. பசியால் கோபம் கொண்ட அவர் தினந்தோறும் இந்தத் துன்பமே என்று தியானம் செய்தவரை உதைத்தார். அவ்வுதை வேகமாகப் பட்டதால் கீழே விழுந்து இரத்தம் ஒழுகியது. அச்சமயம் காந்தி வீரரின் காலைத் தடவி, “உங்கள் காலை என் பல் குத்தியிருக்கு மே? கடவுள் இவ்வளவு கொடுமை யான பற்களை அமைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன்” என்று அழுதார். இவ்வித இரக்கமுள்ள சொற்களைக்கேட்ட வீரர் அவர் அடிகளில் விழுந்து வணங்கி “பொறுமைத் தெய்வமே ! தங்கள் வாயால் இழிவான இரண்டு சொல் கூறி என்னை வையுங்கள்” என்று வேண்டினர். அப்போது காந்தி மகான், “பிற உயிர்களுக்குச் சிறிதும் துன்பம் தராத சொற் களைப் பேசலே உண்மை பேசுதலாகும், அவ்வித உண்மை பேசும் விரதத்தைக் கொண்ட யான் எவ்வாறு உம்முடைய மனம் வருந்தப் பேசுவேன்” என்று உண்மை பேசுதலின் தத்துவத்தைப் போதித்தார். பின் வீரர் தாம் செய்த குற்றத்தை மன்னிக்கும்படிப் பலதரம் அவர் காலில் விழுந்து கேட்டுக்கொண்டார். பின் வரும் குறளிலும் இக் கருத்து வற்புறுத்தப்பட்டுள்ளது.
வாய்மை எனப்படுவ தியாதெனின், யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
வாய்மை எனப்படுவது = உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது
யாது எனின் = எது என்று கேட்டால்
யாது ஒன்றும் = எவ்வளவு கொஞ்சமும்
தீமை இலாத = (பிறவுயிர்களுக்குத்) துன்பம் இல்லாத சொற்களை
சொலல் = கூறுதல் ஆகும்.
கருத்து: பிறர்க்குத் துன்பம் தராத சொற்களைக் கூறுதலே உண்மை ஆகும்.
கேள்வி: வாய்மையின் இலக்கணம் என்ன?
எனப்படுவது +யாது எனப்படுவதியாது, குற்றிய லிகரம்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.