வல்லவனுக்கு வல்லவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 32,980 
 
 

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் பல்வேறு மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அவைகள் தனக்குரிய இடங்களில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. அப்படி வாழ்ந்து வந்த மிருகங்களில் ஓநாயும் ஒன்று. ஓநாய் தன் குட்டிகளுடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தது.

தினமும் குகையிலிருந்து குட்டிகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வேட்டையாடி உண்டு விட்டு, மாலையில் தன் குகைக்கு வந்து விடும். இப்படி அமைதியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் !

அந்த காட்டுக்குள் புலி ஒன்று புதிதாக குடி வந்தது. அதுவரை அந்த காட்டுக்குள் புலி இருந்ததில்லை. அதனால் புலி அங்கு குடி வந்தவுடன் மற்ற மிருகங்கள் அனைத்தும் அதனை கண்டு பயந்தன. அவைகள் பயந்தது போலவே அந்த புலியின் தோற்றமும் அப்படித்தான் இருந்தது. பிரமாண்டமான உருவமும், சீற்றம் கொண்ட முகமுமாய் இருந்தது அதன் தோற்றம். அது மட்டுமல்ல, வந்தவுடன் அங்கிருந்த நான்கைந்து மிருகங்களை அடித்து கொன்றும் விட்டது. இதனால் மிருகங்கள் எல்லாம் நடுங்கி மிரண்டன.

அப்படிப்பட்ட அந்த புலி தான் தங்குவதற்கு ஒரு நல்ல குகையை தேடிக்கொண்டிருந்த பொழுது ஓநாய் தங்கியிருந்த குகையை கண்டது. அந்த குகையினுள் சென்று பார்க்க அது மிக பிரமாதமாய் இருந்த்து. ஆஹா இதுதான் நாம் வசிக்க சிறந்த இடம் என்று முடிவு செய்து அங்கேயே தனது இருப்பை வைத்துக்கொண்டது.

மாலை தன் குட்டிகளுடன் குகைக்கு வந்த ஓநாய்க்கு குகை வாசலிலேயே தன்னுடைய குகைக்குள் யாரோ இருக்கிறார்கள் என்று மோப்ப சக்தியால் உணர்ந்து கொண்டது. யார் என்று தெரியவில்லை. சரி உள்ளே சென்று பார்ப்போம் என்று முடிவு செய்து கொண்டு தன்னுடைய குட்டிகளை அங்கிருந்த ஒரு புதருக்குள் ஒளிந்திருக்க செய்து விட்டு மெல்ல இது மட்டும் தனியாக உள்ளே நுழைந்தது.

புலியார் அங்கு சுகமாய் படுத்து குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தது.

புலியை கண்டவுடன் நடு நடுங்கி வெளியே ஓடி வந்து விட்டது. இப்பொழுது என்ன செய்வது? கவலையில் தன்னுடைய குட்டிகளை அழைத்துக்கொண்டு நடந்தது. இரவு வேறு இருட்டிக்கொண்டு வந்தது. குட்டிகளை வைத்துக்கொண்டு எங்கு தங்குவது என்ற கவலையில் யோசித்துக் கொண்டே நடந்தது.

அப்பொழுது கரடியார் தன்னுடைய குகைக்கு திரும்பிக்கொண்டிருந்தது, ஓநாய் கவலையுடன் நடந்து வந்ததை பார்த்தது. ஏன் உன் குகைக்கு போகவில்;லையா? என்று கேட்டது.

ஓநாய் கவலையுடன் தன்னுடைய குகையில் புலி ஒன்று தங்கியிருப்பதை சொன்னது. கரடியாருக்கு ஆத்திரமாய் வந்தது. அது எப்படி உன்னுடைய குகையில் அது வந்து தங்கலாம்? போய் கேட்கலாம் வா என்று ஓநாயை மட்டும் அழைத்துக்கொண்டு அதனது குகைக்குள் வந்தது.

உறங்கிக்கொண்டிருந்த புலியாரை மெல்ல கூப்பிட்டது. கண்ணை திறந்து பார்த்த புலியார் எதிரில் கரடியும், ஓநாயும் நிற்பதை பார்த்தது.

என்ன? குரலில் அதிகாரம் ஓங்கியிருந்தது. கரடியார் மெல்ல கொஞ்சம் நடுக்கத்துடனும், ஐயா, இந்த இடம் நமது ஓநாயுக்கு சொந்தமானது. நீர் இப்படி திடீரென்று வந்து அதனது இடத்தை ஆக்ரமித்து கொண்டால் அது என்ன செய்யும்?

உடனே புலியார் ஓஹோ..ஓஹோ..என்று சிரித்து ஏளனமாய் என்ன கரடியாரே உமக்கு உடம்பு எப்படியிருக்கிறது? இந்த காடு அனைவருக்கும் பொதுவானது. அதே நேரத்தில் இந்த குகை இப்பொழுது எனக்கு சொந்தம் இதனை கேட்க உனக்கு என்ன தைரியம்?

ஐயா கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள், இந்த காடு அனைவருக்கும் சொந்தம்தான், அதே நேரத்தில் இந்த காட்டில் இத்தனை வருடங்களாக வசித்து வரும் இந்த ஓநாய் இந்த குகையிலேயே நீண்ட காலமாக வசித்து வருகிறது. அதனுடைய பெற்றோர் காலத்திலிருந்து இங்குதான் வசித்து வருகிறது. உமக்கு வேண்டுமானால் நான் ஒரு குகையை காட்டுகிறேன், அங்கு வந்து தங்கிக்கொள்ளும். மரியாதையாய் சொன்னது.

அடேய் கரடியாரே இன்னும் ஒரு நிமிடம் இங்கு நின்றிருந்தாயானால்

உன்னை அடித்து கொன்று விடுவேன், மரியாதையாய் இந்த இடத்தை விட்டு கிளம்பு.

சொல்லிவிட்டு தன் தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தது புலியார்.

கரடியாருக்கு அதை கேட்டவுடன் கோபம் வந்தாலும், புலியாரின் வலிமையை நினைத்து தன்னை அடக்கிக்கொண்டது. இவனுக்கு உடம்பால் பதில் சொல்வதை விட புத்தியால் பதில் சொல்வதுதான் சரி முடிவு செய்த கரடியார், ஓநாயை அழைத்துக்கொண்டு தன்னுடைய குகைக்குள் கூட்டிச்சென்று இரண்டு மூன்று நாட்கள் இங்கு தங்கிக்கொள், அதற்குள் இந்த புலியை அங்கிருந்து விரட்டி விடுகிறேன் சொல்லிவிட்டு கூட்டி சென்றது.

ஓநாயையும், அதன் குட்டியையும் தன்னுடைய குகைக்குள் விட்டு விட்டு கரடியார் மட்டும் வெளியே வந்தது. அதற்குள் காடு நன்றாக இருட்டி விட்டது. கரடியார் மெல்ல அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து சத்தமில்லமல் ஒரு மரத்தின் மீது ஏறியது.

அந்த மரத்தில் ஒரு கிளையில் தேன் கூடு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.

கரடியார் அந்த கிளையை மட்டும் ஒடித்து கொண்டு மரத்தை விட்டு இறங்கி புலியார் தங்கியிருந்த ஓநாயின் குகைக்கு நடந்தது.

அந்த கிளையை ஆட்டாமல் அசையாமல் மெல்ல உள்ளே நடந்து சென்று புலியார் என்ன செய்கிறார் என்று பார்த்த்து. புலியார் உற்சாகமாக தூங்கிக்

கொண்டிருந்தார்.. கரடியார் அந்த கிளையை சத்தம் காட்டாமல் வைத்து விட்டு சற்று வெளியே வந்து அங்கிருந்த நீண்ட குச்சி ஒன்றை எடுத்து குகை வெளியிலிருந்தே அந்த தேன் கூட்டை கலைத்து விட்டு விறு விறுவென வெளியே ஒடி ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டு நடப்பதை கண்கானித்தது.

தனது கூண்டு கலைக்கப்பட்டவுடன் சீற்றத்துடன் வெளி வந்த தேனீக்கள்

குபீரென கூட்டமாய் பறந்து வெளியே வந்தன. யார் தன் கூட்டை கலைத்தது? என்று கோபத்துடன் பார்க்க எதிரில் புலியார் சுகமாய் உறங்குவது கண்களுக்கு தெரிய அவ்வளவுதான் அனைத்து தேனீக்களும் பறந்து சென்று புலியாரை கொட்டி தீர்த்து விட்டன.

சுகமாய் படுத்துறங்கிக்கொண்டிருந்த புலியார் அத்தனை தேனீக்களின் கொட்டுக்களை தாங்க முடியாமல் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. மூக்குக்குள்ளும், வாயுக்குள்ளும் புகுந்து கொண்ட தேனீக்கள் அங்கும் விடாமல் கொட்டின. வலி தாங்காமல் கதற்க்கொண்டே ஓடிய புலியார் தலை தெறிக்க அந்த காட்டை விட்டே ஓடியது.

இத்தனையும் சற்று தூரத்தில் மரத்தின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கரடியார் நிம்மதியாய் தன்னுடைய குகைக்கு வந்து ஓநாயிடம் நாளை மாலை நீ மீண்டும் உன் குகைக்கு போய்க் கொள்ளலாம், அந்த புலியார் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். ஏன் இந்த காட்டை விட்டே ஓடிவிட்டார். இனி யாரும் பயப்படத் தேவையில்லை. இன்று மட்டும் நீயும் உன் குட்டிகளும் இங்கு தங்கிக்கொள்ளுங்கள். சொல்லிவிட்டு தன்னுடைய குட்டிகளை அழைத்துக்கொண்டு அந்த குகையின் சற்று தூரம் சென்று அங்கு தங்கிக்கொண்டது.

மறு நாள் மாலை ஓநாய் தன்னுடைய குட்டிகளுடன் தன்னுடைய குகைக்கு சென்று பார்த்து நிம்மதியுடன் அங்கு தங்கியது. அதற்கு மறு நாள் காலை மறக்காமல் கரடியாரிடம் சென்று தன் நன்றியை தெரிவித்தது. .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *