(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில் இக்கதைகள் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
I – வேதாசலமும் அவர் அடிமைகளும்
நெடுங்காலத்திற்கு முன், வேதாசலம் என்ற பெயருள்ள ஒரு செல்வர் இருந்தார். அவருக்குத் திருமகள் அருள் நிரம்பி இருந்தது. பல ஏக்கராப் பரப்புள்ள நன்செய்களும் புன்செய்களும், மா, தெங்கு, பலா முதலிய மரங்கள் செறிந்த தோப்புக்களும் அவருக்கு இருந்தன. நூற்றுக் கணக்கான கறவைப் பசுக்களும் ஆடுகளும் அவருக்கு உண்டு. எல்லா நலங்களும் பெற்று வேதாசலம் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வந்தார்.
உலகில், பொதுவாகச் செல்வர்கள் உயர்ந்த நோக்கங்களும், சீரிய ஒழுக்கமும், நற்குணங்களும் அமைந்தவர்களாய் இருப்பதில்லை. ஆகையால், அவர்கள் வாழ்வு சிறப்படைகிறதில்லை. செல்வம் வந்துற்ற போது, செருக்கு மேலோங்கிவிடுகின்றது. இரக்கம் அவர்களை விட்டு விலகிவிடுகின்றது. செல்வர்கள் தங்கள் வேலைக்காரர்களை நடத்தும் முறை மிகவும் இழிவானதாய் இருக்கின்றது. சில நேரங்களில் அவர்கள் தங்கள் வேலைக்காரர்களைக் கோபிக்கும் பொழுது பார்த்தால், அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். வேலைக்காரர்களைத் தூற்றும் வார்த்தைகள் காதால் கேட்கத் தகாதனவாய் இருக்கும்.
வயிற்றின் கொடுமையால் இவற்றைக் கேட் டுப் பொறுத்திருப்பார்கள் அவ்வேலைக்காரர்கள்; ஆனால், தங்கள் மனத்தில் செல்வனை வெறுத்துச் சபித்துக்கொண்டிருப்பார்கள்.
பண்டைக்காலத்தில் சில செல்வர்கள் மனிதர்களை அடிமைகளாகக் கொண்டிருந்தார்கள். அந்த அடிமைகளை அவர்கள் விலங்குகளினும் இழிவாக நடத்தி வந்தார்கள். அவர்களை மக்களாகவே அவர்கள் நினைப்பதில்லை; கல், மரம் என எண்ணி , அவர்களைக் கடுமையாக வேலை வாங்கி மிகக் கொடுமையாக நடத்தினார்கள். குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல அவ்வன்கணாளர்களிடம் அகப்பட்டுக்கொண்டு அவர்கள் பட்ட அவதி கொஞ்சநஞ்சமன்று. அவர்கள் அடைந்த துன்பம் சொல்லத்தான் தரமா, எண்ணத் தான் இயலுமா? அவர்கள் வாழ்வு துன்பம் நிறைந்தது. அது அவர்கள் செய்த பாவம். அதற்காக யார் என் செய்வது! செல்வரிடம் மேன்மையான குணங்கள் பொருந்தியிருப் பின், பொன் மலர் நறுமணம் எய்தியது போலாகுமல்லவா!
II – அடிமைகள் அன்பு
ஆனால், வேதாசலமோ, அன்பு, அருள், அடக்கம், பொறுமை முதலிய நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர். அவரிடம் பல அடிமைகள் இருந்தார்கள். தம் அடிமைகளைச் சொந்தப் பிள்ளைகளைப் போலவே அவர் பாதுகாத்து வந்தார். உணவு, உடை முதலியவற்றில் அவர்களுக்கு யாதொரு குறையும் வைக்கவில்லை; அவர்கள் உடலை மட்டுமல்லாமல் அறிவையுங் கூட வளர்த்தார்; அவர்களுக்குத் தகுந்த கல்விப் பயிற்சி உண்டாகவும் ஏற்பாடு செய்தார். இவ்வளவு அருங்குணங்கள் அமையப்பெற்ற தலைவரைப் பெற்ற அடிமைகள் அவரிடம் அன்பு காட்டி வந்தது ஒரு வியப்பா? பெற்ற தாயினும் அன்பு காட்டும் வேதாசலத்தைத் தலைவராய் அடைந்ததற்குத் தங்கள் முன் பிறப்பின் நற்செயலின் பலனே காரணம் என அவர்கள் எண்ணினார்கள்; அவரை நெஞ்சார வாழ்த்தினார்கள்; அவரது பெருமையை அடிக்கடி தங்களுக்குள்ளே சொல்லி மகிழ்ந்தார்கள்; அவருடைய சிறப்பு வாய்ந்த குணங்களையும் பெருமைகளையும் புகழ்ந்து பேசாத நாளெல்லாம் பிறவா நாட்களெனக் கருதினார்கள். பல சொல்வானேன்? அவர்க ளுடைய நெஞ்சில் வேதாசலம் கோயில் கொண்டார்.
‘நம் தலைவரினும் மேலான ஒருவர் இவ் வுலகில் வேறெவரும் இல்லை. எத்தனையோ செல்வர்கள், தங்கள் அடிமைகளை ஆடுமாடு களாகக் கருதி, மிகக் கொடுமையாக நடத்து கிறார்கள். அவர்கள் தவறிழைப்பதும், ஒழுங் காக நடப்பதும் ஒன்றுதான். வீணில் கொடிய தண்டனையை அவர்களுக்கு விதித்து அவர்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்குகிறார்கள். நம்முடைய தலைவரோ, நம் ஆற்றலுக்குத் தக்கபடி வேலை கொடுக்கிறார். நமக்கு நல்ல உணவும் உடையும் குறைவின்றிக் கிடைக்கின்றன. நம்முடைய நலத்திலேயே அவர் கண்ணுங்கருத்துமாயிருக்கிறார். அவர் நம்மிடம் காட்டும் அன்புதான் என்னே! எப்பொழுதும் மலர்ந்த முகம், புன்சிரிப்பு, குளிர்ந்த பார்வை, இனிய சொல் – கடுகடுத்த சொல் மருந்துக்கும் இல்லை! இத்தகைய தலைவரிடம் நாம் அடிமையாய் வாழ்வதே நமக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டா!” என்று வேதாசலத்தைப் புகழ்ந்து பேசினார்கள் அவர் அடிமைகள்.
III – சாத்தான் வேலை
இவ்வாறு தலைவரை அடிமைகள் புகழ்ந்து வாழ்த்துவது சாத்தானுக்குப் பிடிக்கவில்லை. “அடிமைகளுக்கும் தலைவருக்கும் இவ்வளவு நட்பும் உண்டா? இது இயற்கைக்கு முற்றிலும் மாறானது அல்லவா? இவர்களை எப்படியும் கத்தரித்து விட வேண்டும்! இவர்களது நட் பைக் குலைக்க வேண்டும்! இதற்கு யாது வழி!” என்று சாத்தான் சிந்தித்தது.
அடிமைகளுள் அழகப்பன் என்பவன் ஒருவன். அவன் மற்றவர்களைப்போல மனவலிமை உள்ளவன் அல்லன். பிசாசு அவனைத் தன் வசப்படுத்தி, அவன் துணை கொண்டு மற்ற அடிமைகளின் மனத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணிற்று. பிசாசு அழகப்பன் மனத்தினுள் புகுந்து அவனை ஆட்டி வைக்கத் தலைப்பட்டது. அவ்வளவு தான்!
IV – அழகப்பன் சூளுரை
ஒரு நாள் வேதாசலத்தின் அடிமைகள் மகிழ்வுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்; வழக் கம்போலத் தங்கள் தலைவருடைய நற்குணத் தையும், தாராள மனத்தையும், அவர் தங்களை நடத்தும் மேன்மையையும் வானம் அளாவப் பாராட்டிக்கொண்டிருந்தார்கள். பேய்க்குணம் வாய்ந்த அழகப்பன் அவர்களை அதட்டி அமர்த்தி, “இம்மாதிரி நம் தலைவரைக் கங்கு கரையில்லாமல், கண் மூடித்தனமாகப் புகழ்வது சுத்த முட்டாள்தனம். நாம் உழைப்பது போல உழைத்தால், ஒரு பேய்கூட நம்பால் இரக்கங்கொள்ளும். நம் தலைவர் மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்படி நடந்து நாம் செயல்களைச் செய்கிறோம். அவருடைய பாட்டுக்குத் தகுந்தபடி நாம் தாளம் போடுகிறோம்; அவர் குறிப்பறிந்து செயல்களைச் செய்கின்றோம். அவர் ‘எள்’ என்று சொல்லுமுன் நாம் எண்ணெயுடன் நிற்கிறோம். அவர் மனம் எவ்விதத்திலும் கோணாதபடி கருத்துடன் இருந்து நாம் அவருக்குத் தொண்டு செய்கிறோம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைகிறார்! நம்மிடத்தில் அன்பாய் இருக்கிறார். இதில் என்ன வியப்பு இருக்கிறது? நீங்கள் சற்று ஏறுமாறாக நடவுங்கள்; ஏட்டிக்குப்போட்டி செய்யுங்கள். அவர் சீற்றங்கொள்ளும்படி ஏதாவது ஒன்றைச் செய்து பாருங்கள், அப்பொழுது அவர் சாயம் வெளுத்துவிடும்! தர்ம புத்திரரின் அவதாரமென நீங்கள் கொண்டாடும் வேதாசலம், துர்வாச முனிவராய்விடுவார்! அப்போது நாம் படும்பாடு நாய்கூடப் படாது!” என்று பிதற்றினான்.
உடனே மற்றோர் அடிமை குறுக்கிட்டு, “அது ஒரு போதும் நடவாது! இன்று நேற்றன்று நம்முடைய தலைவருடன் நாம் பழகுவது. அவருடைய குணத்தை நாம் நன்கு அறிவோம். நாம் குற்றம் செய்த போதிலும் ஒரு குழந்தையிடம் தாய் நடந்து கொள்ளும் விதத்திலேயே அவர் நம்மிடம் நடந்து கொள்வர்; நம்மைச் சீறிச் சினந்து பேசார்; தீங்கு செய்யவும் மாட்டார். இது உண்மை. பந்தயம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்வோம்!” என்றான்.
அழகப்பன், “சரி, பந்தயம் வைப்போம்: தலைவர் மனம் வருந்தும்படி ஒரு செயலை நான் செய்கிறேன். அவர் என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள்! அப்படிக் கோபமூண்டு பதிலுக்குப் பதில் எனக்கு ஏதாவது தீங்கு செய்வதை நான் உங்களுக்குக் காட்டாவிட்டால், என் பெயர் அழகப்பன் அன்று! என் பெயரை மாற்றிக் கூப்பிடுங்கள்! என் இரு காதுகளையும் அறுத்து உங்கள் முன்னிலையில் வைத்துவிடுகிறேன்! சரிதானா?” என்று படபடப்புடன் சொன்னான்.
“நீ காதுகளையும் அறுத்துக்கொள்ள வேண்டா; உன் பெயரையும் மாற்றிக்கொள்ள வேண்டா. நீ தலைவரைச் சீற்றங்கொள்ளச் செய்ய முடியாது. நீ தோற்றுப்போவாயாகில், தீபாவளிக்கு உனக்குக் கிடைக்கும் துணிகளை யும் பொங்கல் நாளில் கிடைக்கும் புதுப்பரிசையும் எங்களிடம் கொடுத்துவிட வேண்டும். நாங்கள் சொன்னது பொய்யாய்விட்டால், எங்களுக்குக் கிடைக்கும் துணி மணிகளையும் பணத்தையும் உனக்குத் தந்துவிடுகிறோம். நீ அடாத செயலைச் செய்யும் பொழுது தலைவர் அளவு கடந்து கோபித்து உன்னைக் கொடிய தண்டனைக்கு உள்ளாக்குவாரென்று நாங்கள் சிறிதும் நம்பவில்லை. அவருடைய பொறுமையில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. இதில் ஐயமேயில்லை. ஆனால், கடவுள் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாரோ!
“ஒரு வேளை கால மாறுபாட்டால் அவர் கோபித்துக்கொள்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் கொடிய தண்டனை யைக் கொள்ளவேண்டி வருமேயென்று நீ சிறிதும் அஞ்ச வேண்டா. தக்க நேரம் பார்த்து நாங்கள் தலைவரிடத்தில் உன்பால் பரிந்து பேசி, உன்னிடம் இரக்கங்காட்டி உன் பிழையைப் பொறுத்தருளச் செய்து, உனக்கு விடுதலையும் வாங்கித் தருகிறோம்!” என்று அந்த அடிமை அழகப்பனுக்கு உறுதி மொழியும் கூறினான்.
மறு நாளே தலைவருக்குச் செற்றமூட்டி அவரை ஆட்டி வைப்பதாகச் சூள் உரைத் தான் அழகப்பன். இது விசுவாமித்திரர் அரிச்சந்திரனைப் பொய்யனாக்குவதாக வசிட்டரிடம் கூறிய சூளுரையைப் போன்றிருந்தது.
அழகப்பனது அடாத செயல் வேதாசலத்தின் எண்ணிறந்த ஆடுகள் அழகப்பன் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. அவைகளைக் காப்பது அவன் கடமை. அந்த ஆடுகளுள் மிக்க வலிவும் அழகும் வாய்ந்த ஒரு செம்மறி ஆடு இருந்தது. அதன் கொம்புகள் நன்றாய் வளர்ந்து பல திருகல்களுடன் கூடிப் பார்வைக்கு மிக அழகாயிருந்தன. அந்த ஆட்டை வேதாசலம் தம் உயிர் போல எண்ணி அதனிடம் அதிக விருப்பம் வைத்திருந்தார்.
ஒரு நாள் அவருடைய ஆடுகளைப் பார்க்க நண்பர் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு வேதாசலம் அந்தச் செம்மறியாட்டைக் காட்ட எண்ணியிருந்தனர்; ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அவர்களைக் கூட்டிப் போனார். அவருடைய அடிமைகளும் அப்பொழுது அங்கிருந்தார்கள். அப்பொழுது அழகப்பன் தன் நண்பர்களுக்குக் கண் சாடை காட்டினான். அவ்வாறு செய்தது, ‘தலைவரை உடனே எவ்வளவு சினம் அடையச் செய்கிறேன் பாருங்கள்!’ என்று சொல்வது போன்று இருந்தது.
ஆட்டு மந்தைக்குள் அந்த அழகிய செம்மறியாட்டை வேதாசலத்தால் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. “அப்பா, அழகப்பா, இங்கே வந்திருப்பவர்கள் என் நண்பர்கள். இவர்களுக்கு எனக்கு மிகவும் விருப்பமான- என் கண் போன்ற அழகிய செம்மறியாட்டைக் காட்ட விரும்புகிறேன். ஆகவே, நீ அந்த ஆட்டைப் பிடித்துக்கொண்டு வா,” என்று அவர் அன்புடன் சொன்னார்.
அவ்வளவுதான்! விரைந்து ஆட்டு மந்தையில் நுழைந்தான் அழகப்பன்; அந்தச் செம்மறியாட்டை ஒரு கையால் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான்; மற்றொரு கையால் அதன் வலக்காலை மடித்து மரக்கிளையை ஒடிப்பது போலச் சடக்கென்று ஒடித்தான்; அவ்வாறே மற்றக் கால்களையும் ஒடித்தான். இரத்தம் பீரிட ஆடு கதறிக்கொண்டே கீழே விழுந்து உயிர் துறந்தது.
அப்போது பேய் ஒரு மரத்தில் உட்கார்ந்து தன் வயப்பட்டுத் தன் விருப்பம் போல ஆடும் அழகப்பன் செயலைக் கண்டு மகிழ்ந்தது.
VI – தலைவரின் பொறுமை
இந்தக் காட்சி வேதாசலத்தையும் அவர் நண்பர்களையும் திடுக்கிடச் செய்தது. அவர்கள் மிகுந்த நடுக்கம் கொண்டார்கள்; தாங்கள் பார்த்தது கனவா நனவா என்று ஐயுற்றார்கள். அடிமைகள் அடுத்த நொடியில் யாது நேரிடுமோ என்று அஞ்சினார்கள். இந்தக் கொடுஞ்செயலைக் கண்டதும் வேதாசலம் திடுக்கிட்டார். இந்த நிகழ்ச்சியை அவர் சிறிதும் எதிர்பார்த்தாரில்லை; சிறிது நேரம் மனத்துயருடன் பேசாமலிருந்தார். அவருக்கு இன்னது செய்வது என்பதே தெரியவில்லை.
அவர் சிறிது நேரம் தலை கவிழ்ந்து தரையை நோக்கியவண்ணம் இருந்தார்; பின்னர் அண்ணாந்து பார்த்து, ‘கடவுளே!’ என்று பெருமூச்சு விட்டார். உடனே அவர் முகம் ஒரு மாறுதலை அடைந்தது. முகத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்தது. அவர் அழகப்பனைப் பார்த்து, “அழகப்பா, இது உன் பிழை அன்று. நீ பேய் வசப்பட்டிருக்கிறாய்; அது உன்னை இவ்வாறு ஆட்டி வைக்கிறது! அதன் கட்டளைப்படியே நீ நடந்தாய். எனக்குத் தலைவர் கடவுள். அவர் உன் தலைவனினும் வலியவர். அவர் எனக்கு இட்டிருக்கும் கட்டளை வேறு. அதன்படி நான் பொறுத்துக்கொள்கிறேன்; உன்னிடம் சினம் கொள்ளவில்லை. நீ செய்த பிழைக்கு உன்னைச் சிறையில் வைக்கவோ, உனக்குத் துன்பம் இழைக்கவோ நான் உடன்படேன். அந்த அச்சம் உனக்குச் சிறிதும் வேண்டா. உன்னிடம் எனக்குப் பகையே இல்லை. நீ நல்ல குணங்களை அடைய வேண்டுமென்பதுதான் என் ஆவல். பேய்க்குணம் உன்னை விட்டு அகலவேண்டுமென்பதே என் வேண்டுகோள். இனி நீ அடிமையல்லை. உனக்கு முழு உரிமை அளிக்கிறேன். உன் விருப்பப்படி நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உனக்கு உடைகளும் சிறிது பணமும் தருகிறேன்,” என்று சொல்லி அவனுக்கு இன்னும் பல அறிவுரை களைக் கூறிவிட்டுத் தம் நண்பர்களுடனும் அடிமைகளுடனும் வீட்டுக்குத் திரும்பினார். மரத்திலிருந்து இதைப் பார்த்த பேய் மனம் கசிந்து கீழே விழுந்தது.
தன்னிலும் வலிமை உள்ள ஒருவன் தனக்குத் தீங்கு செய்யின், அவனைச் சினந்து எதிர்த்துப் பதிலுக்குப் பதில் தீங்கு செய்ய விருப்பமிருந்தாலும், செயல் பலியாததால், ஒருவன் சினத்தை வெளிக்காட்டாமல் அடக்கிப் பொறுமையுடன் இருக்கக் கூடும். இதை நாம் பொறுமை என்று சொல்ல முடியாது. பழிக்குப் பழி வாங்கப் போதிய ஆற்றல் இருந்தும், தன் சினம் செல்லக் கூடியதாயிருந்தும் ஒருவன் பிறர் தீங்கு செய்யின் சிறிதும் சினங் கொள்ளாது பொறுமையுடன் இருப்பானாகில், அதுவே வியக்கத்தக்கது. அதுவே, உண்மையில் பொறுமை எனப்படும். வேதாசலம் தம் அடிமையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் நினைத்தால் அழகப்பனைக் கைவிலங்கிட்டுச் சிறையிலிட்டுத் துன்புறுத்தலாம்; அவன் உயிரையும் வாங்கிவிடலாம். அவருக்கு அவ்வளவு ஆற்றல் இருந்தது. அழகப்பன் மிகக் கொடிய செயலைச் செய்திருந்தும், வேதாசலம் சிறிதும் சினம் கொள்ளவில்லை; பொறுமையையே தம் அணிகலனாகக் கொண்டார். இவ்விதப் பொறுமையே மெச்சத் தகுந்தது.
– டால்ஸ்டாய் சிறுகதைகள் (ஆறாம் வகுப்புக்குரியது), முதற் பதிப்பு: நவம்பர் 1960, எம்.எஸ்.சுப்பிரமணியம் பிரசுரம், திருநெல்வேலி.