முயலும் முள்ளம்பன்றியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 6,392 
 
 

பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற பரந்த புல்தரையில் முயலார் ஒருவர் புரண்டபடி காலை வெய்யிலை அனுபவித்துக் கொண்டிருந்தார்.தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த சுவையான கரட்டுக்களை களவாடி உண்ட மயக்கத்திற்குச் சூரியக்குளியல் மிகவும் இதமாய் இருந்தது. அந்த இதம் தந்த சுகத்தில் சற்றுக் கண்ணயர்ந்து போக இருந்த அவரை மரத்தை வாள் கொண்டு அரிவது போன்ற முள்ளம் பன்றியார் ஒருவரின் மொற மொற என்ற சத்தம் குழப்பி மிகுந்த எரிச்சலைத் தந்தது.

தன் பாட்டில் புல்லைக் கடித்து மென்றுகொண்டிருந்த முள்ளம் பன்றியாரை வம்புக்கு இழுத்தார் முயலார்.

“ஏய் முள்ளம் பன்றியாரே ! ஒன்றோடொன்று சிக்கிக் கொள்வது போல வளைந்த சிறிய கால்கள் இல்லாவிட்டால் நீர் இவ்வளவு அசிங்கமாக இருக்க மாட்டீர்.” என்று சொல்லிய படி ஏளனமாகச் சிரித்தார் முயலார்.

சும்மா இருந்த தன்னை வம்புக்கு இழுத்த முயலார் மீது முள்ளம் பன்றியாருக்கோ கோபம் கோபமாய் வந்தது.

“முயலாரே என்னைக் கேலி செய்வதை முதலில் நிப்பாட்டும். என் வளைந்த கால்கள் நேராக இருக்கும் உம்முடைய கால்களைவிட வேகமாய் ஓடக் கூடியவை”

மிகவும் வேக மாக ஓடும் விலங்குகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் தன்னை கேவலம் இந்த சிறிய உருவங்கொண்ட மிக மிகச் சிறிய கால்களைக் கொண்டமுள்ளம் பன்றி தனது ஓடும் திறனை குறைத்து மதிப்பிடுவதா? முயலாரால் ஜீரனிக்க முடிய வில்லை.

“அப்படியானால் இருவரும் ஓட்டப் பந்தயம் வைத்துக் கொள்வோம்“ மிக ஆவேசமாகச் சொன்னார் முயலார்.

முள்ளம் பன்றியாரோ முயலார் போன்று நிதானத்தை இழந்துவிடவில்லை. கோழை போல முயலாரின் சவாலுக்கு பயந்துவிடவும் இல்லை. சற்றுச் சிந்தித்தார்.

“நான் உமது சவாலை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்…”

“என்ன தயங்குகிறீர் தோற்றுவிடுவீர் என்று பயமா?” முள்ளம் பன்றியாரின் இயலாமையே அவரின் தயக்கத்துக்குக் காரணம் என எண்ணி உற்சாகம் கொண்டார் முயலார்.

“தோல்விக்கெல்லாம் பயமில்லை. நான் எந்தக்காரியத்தையும் எனது மனைவியை ஆலோசிக்காது செய்யவதில்லை. நான் வீட்டுக்கு போய்விட்டு வந்து உமது பந்தயத்தில் கலந்து கொள்கிறேன்”

“நல்ல பெண்டாட்டி தாசன் தான்நீர் “ என்ற முயலாரின் கேலியைப் பொருட்படுத்தாது வீட்டுக்கு விரைந்தார் முள்ளம் பன்றியார்.

காலை உணவுக்காகச் சென்ற கணவன் இவ்வளவு சீக்கிரமாக வந்தது வியப்பைத் தர அவரை வரவேற்றார் மனைவியார்.

முள்ளம் பன்றியார் நடந்த சம்பவத்தை விபரித்து முயலாரோடான பந்தயத்தையும் கூறினார்.

“உமக்கு மூளை குழம்பிவிட்டதா என்ன ? முயலாரோ மிகவும் வேகமாக ஓடக்கூடிய கால்களைக் கொண்டுள்ளார். நீரோ மிகவும் சிறிய கால்களைகோண்டுள்ளீர். அவரை ஓட்டத்தில் வெல்வது எப்படி?” மிகுந்த கவலையுடன் கேட்டார் மனைவியார்..

“முயலாருக்கு வேகமாகச் செயற்படும் கால்கள் இருக்கலாம். எமக்கோ மிகவும் வேகமாகச் செயற்படும் மூளை இருக்கிறது. அதைப்பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும். “

மிகவும் உறுதியாக்க் கூறினார் முள்ளம் பன்றியார்.

இருவரும் சில நிமிடங்கள் ஆழ்ந்து சிந்தித்து இறுதியில் சிறந்த வழியொன்றைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.

முள்ளம் பன்றியாரின் மனைவி, போட்டி நிகழ எனத் தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ( கதிர் வெட்டப்பட்டு வைக்கோல் அடிக்கட்டை மட்டும் மிகுந்திருந்த) வயலின் ஓர் அந்தத்தில் ஒளிந்து கொண்டார். முயலார் ஓட்டத்தின் முடிவிடத்துக்கு வரும் போழுது அவர் முன் பிரசன்னமாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டார்.

முள்ளம் பன்றியார் வீட்டுக்குப் போவதாக் கூறிப் பந்தயத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக்க் கருதி மீண்டும் காலைவெய்யிலில் குளிர் காயத்தொடங்கியிருந்த முயலார் முன்னர் முள்ளம் பன்றியார் பிரசன்னம் மானது அவருக்கு வியப்பாகக் கூட இருந்தது.

முள்ளம் பன்றியார் முயலாரைத் தான் தேர்ந்தெடுத்த வயல் பரப்புக்கு அழைத்துச் சென்று போட்டி தொடங்கும் இடத்தையும் அதன் முடி விடத்தையும் வரையறுத்துக்கூறினார்.

தானே வெல்லுவேன் என்ற உறுதியான நம்பிக்கையினால் ஓடு களத்தை முள்ளம் பன்றியாரே தீர்மானித்ததை ஒட்டி எந்த ஆட்சேபனையையும் முயலார் தெரிவிக்காது ஏற்றுக்கொண்டார்.

ஓட்டம் ஆரம்பமானது .

முயலாருக்கு ஆமையோடு பந்தயத்தில் தான் தோற்றதும் அதற்கான காரணமும் நினைவுவரவே ஓட்டம் தொடங்கியதும் முடிவிடத்தை நோக்கி அம்பு போல பாய்ந்து ஓடலானார். அவர் முள்ளம் பன்றியார் வருகிறாரா என்று ஒரு தடவை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

முள்ளம் பன்றியாரோ ஓடுவது போல பாவனை காட்டிச் சிறிது தூரம் ஓடிவிட்டு மீண்டும் தொடக்க இடத்திலேயே வந்து நின்று கொண்டார்.

முடிவிடத்தை முயலார் அடைந்த போது முள்ளம் பன்றியார் (மனைவியார்) அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

“என்ன முயலாரே ..உம்மை ஓட்டத்தில் வெல்லுவது சாத்தியம் இல்லை என்று உலகமே பேசுகிறது. ஆனால் முடிவிடத்துக்கு உமக்கு முன்பாக வந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

வடியும் வேர்வையை உடலைச் சிலிர்ப்பதன் மூலம் துடைத்துக்கொண்டு முள்ளம் பன்றியார் கூறியதை நம்பமுடியாது..திகைத்து நின்ற போதும் நம்பாது இருப்பதற்கும் வழியில்லாது தவித்தார் முயலார்..

இம்முறை எப்படியோ வென்றுவிட்டீர் . இன்னுமொருதடவை ஓடுவோமா? முயலாரின் குரலில் சற்றுப் பணிவு கூடியிருந்தது.

முக மலர்ச்சியுடன் பன்றியார் ஒப்புக்கொண்டார். மீண்டும் முடிவிடத்தை தொடக்கமாக்கொண்டு முயலார் ஓடினார்… இம்முறை புலியால் விரட்டப்பட்ட மானின் ஓட்டம் போல் அவர் ஓட்டம் இருந்தது.

ஆனால் முடிவிடத்தை அடைந்தபோது…?

அங்கு அவருக்காக் காத்திருந்த முள்ளம் பன்றியார்

“என்ன சகோதரரே ஏன் இந்தத் தாமதம் “என்றவாறு அவரை வரவேற்றார். ,

முயலாரால் அவ்வளவு சீக்கிரம் தனது தோல்வியை ஒத்துக் கொள்ள முடியவில்லை . மீண்டும் ஒரு ஓட்டம்… மின்னல் என ஓடிய அவரை மீண்டும் முடிவிடத்தில் முள்ளம் பன்றியார் எதிர் கொண்டார்…

கடைசியாக வேறுவழியில்லாது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று முயலாருக்கு.

முள்ளம் பன்றியாரே உம்முள் ஆவி ஒன்று புகுந்து ஓடவைத்ததோ ? …

இந்த அசாத்தியச் செயலுக்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது என்பது முயலாரின் ஊகமாக இருந்தது.

முயலாரின் கேள்விக்குப் புன்னகையை மட்டுமே முள்ளம் பன்றியார் பதிலாக்கினார். ஆனால் மனதில் முயலாரை ஏமாற்றியதற்காக அவர் மிகவும் வருந்தினார். மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.ஆனாலும் தேவையில்லாது மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தும் யந்துகளுக்கு இவ்வகையான தண்டனை நியாயமே என்று அவர் தமது மனதைச் சமாதானமும் செய்து கொண்டார்.

இனி யாரிடமும் பந்தயம் கட்டுவதில்லை என்ற தீர்மானத்துக்கு முயலார் இப்பொழுது வந்திருந்தார்,,,,,தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பன்றியாரிடம் விடை பெற்றுக் கொண்டார்.

– லியோ டால்ஸ்டாய் மொழிபெயர்ப்பு கதை, தமிழில்: வாசுகி நடேசன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *