(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மரியத்தின் உடல் அனலாகக் கொதித்தது. விண் விண் என்று காலிலே வலி தெறித்தது. “அம்மா… அம்மா” என்று அவள் வாய் முணுமுணுத்தது. குழி விழுந்த கண்களில் ஒளியேயில்லை. நினைவு இற்றுவிட்டது போன்ற பிரமை; சுற்றுமுற்றும் பார்த்தாள். பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. அம்மா என்கேயோ வெளியே போயிருந்தாள்.
மரியத்தின் நினைவெல்லாம் மகிழம்பூ மரத்தில்தான் ஒட்டிக் கிடந்தது. மகிழ மரத்தை நாடி ஓட வேண்டிமென அவள் உள்ளம் துடித்தது. ஆனால்… ஆனால்…!
அவளால் எப்படிப் போக முடியும்? மரத்தடிக்குப் போக முடியாமலல்லவா அவளது கால்கள் இருக்கின்றன?
மரியம் விம்மினாள்!
மகிழ மரத்தடி வெறிச்சோடிக் கிடந்தது. ஊரின் மேற்குக் கோடியிலே பள்ளிவாசல். அதனையடுத்து அந்த மகிழ மரம் இருந்தது. நெஞ்சையள்ளும் பசுமைக் கோலத்தோடு பரந்து, வளர்ந்து, செழித்து நின்ற அந்த மரத்தை, மரியம் நாள் முழுதும் சுற்றிய வண்ணம் இருப்பாள்.
மகிழம்பூ பூத்துக் குலுங்கியிருந்தது. இளங்காற்றிலே இணைந்து வரும் மலரின் மணத்தை நுகர்ந்த வண்ணம், மரியம் மரத்தின் புறத்தே நின்றிருப்பாள். உதிரும் பூக்களை ஒன்று சேர்ப்பது அவள் வேலை! தினந்தோறும் இரண்டு படி பூக்களாவது சேர்த்துவிடுவாள். பிஞ்சிக் கரங்கள் அவற்றை மாலையாகத் தொடுக்கும். மாலையில் நாலைந்து வீடுகளுக்குப் பூ கொடுத்துவிட்டு, பதிலாக அரிசியோ அன்றி காசோ வாங்கிக் கொண்டு, களிப்போடு அந்தச் சிறுமி மீளுவாள்.
மரியம் சின்னஞ்சிறு ஏழைப் பெண். எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பிஞ்சு வயதிலேயே தந்தையை இழந்து விட்டாள். அன்னைதான் அனைத்துமாக இருந்து பேணினாள். ஓரிரண்டு வீடுகளில் வேலை பார்த்து மகளைக் கவலையில்லாமல் வளர்த்து வந்தாள். மரியம் தன்னால் ஆன மட்டும் ‘சிறுவாடு’ சேர்ப்பதில் தவறவில்லை.
குறுகுறுப்பான பார்வையாலும், குறும்புப் பேச்சாலும், ஊர்ப் பெண்களின் அன்பை எளிதில் பெற்றாள் மரியம். கள்ளம் கபடு எதுவும் இல்லாத அந்தச் சிறுமியிடம் அன்பு காட்டப் பெண்களும் தவறவில்லை. பிரியமாகத் திண்பண்டங்களெல்லாம் கொடுப்பார்கள்.
மரியம் மெல்லப் புண்டு படுத்தாள். அசையக்கூட உடலில் பலமில்லை. இரண்டு மூன்று நாட்களாக ஆறாத வேதனையால் அவள் அவதிப்படுவதை அவளேயன்றி வேறு யார் அறிவார்கள்? மரியத்தின் நினைவு நீராகப் பெருகியது.
நெஞ்சை அது நெருக்கியது, விழிகளிலே கண்ணீர் திரண்டது. முகத்தில் உருண்டது.
மஸஹர்! அவள் உள்ளத்தே அவன் உதித்தான்! ஆம்; அவனால் வந்த வினைதானே எல்லாம்?
மூன்று நாட்களுக்குமுன்…
மாலை நேரம். மகிழ்ச்சி பொங்க மகிழ மரியம் நின்றிருந்தாள். அசைந்தாடும் மரக்கிளைகளிலிருந்து பூக்கள் உதிர்ந்த வண்ணமிருந்தன. ஓய்ச்சல் ஒழிவின்றி ஒவ்வொரு பூவையும் எடுத்துக் கொண்டேயிருந்தாள். பள்ளிவாசல் ‘மனோரா’க்களில் கொஞ்சி விளையாடும் புறாக்களின் குரலைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை.
அந்த அமைதி மறு நிமிஷம் மறைந்தது. இரண்டு மூன்று சிறுவர்களின் கீச்சு மூச்சுக் குரல்தான் எழுந்து வந்தது.
”டேய், மஸஹர்! அந்த மகிழ மரத்தைப் பார்த்தாயா? எத்தனை ஆயிரம் பூக்கள்! மலரின் மணம் எவ்வளவு மகிழ்ச்சியூட்டுகிறது!” அஜீஸ் ஆனந்தமாகக் கூவினான்.
“மரியத்தைப் பார்த்தாயா மஸஹர்? பெட்டி நிறையப் பூ சேர்த்து வைத்திருக்கிறாளே! அத்தனை பூவையும் எப்படியாவது பிடுங்கிடணும்…” மற்றொரு குரல் கெட்ட செய்கையைச் செய்யக் கூவியது.
கருத்துத் தெரியாத சிறுவர்கள். நல்லது கெட்டது இன்னதென்று அறிய இயலாத வயசு. மஸஹருதீன் வசதியான் இடத்துப் பையன். செல்லப்பிள்ளை! விருப்பப்படி எதையும் செய்வான். நண்பர்கள் அவனைச் சுற்றியிருந்தார்கள். என்றாலும் எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியுமா? அவன் மனத்தை நேரத்திற்கு நேரம் மாற்றும் கருவிகளாக ஆசைத் தோழர்கள் அமைந்திருந்தனர்.
மஸஹருத்தீன் ஆவலோடு அந்தப் பக்கம் நோக்கினான். மரியம் நிறையப் பூ பொறுக்கி வைத்திருந்தாள். ஓலைப் பெட்டி மகிழம் பூவால் நிறைந்து விட்டிருந்தது. கிடைக்கப் போகும் வருவாயை எண்ணி, அவள் இதயம் பூரிப்பால் நிறைந்திருந்தது.
அசைந்து, ஆடி பூப் பொறுக்கி, அவள் கால்கள் அசந்துவிட்டன. மஸஹருத்தீனும் மற்றவர்களும் மரத் தடியை அடைந்தனர். எதையும் எளிதில் செய்யத் தயாராகி விடுவதுதானே இளம் உள்ளம்? நன்மையென்றும் தீமையென்றும் நுணுகியுணரும் ஆற்றல் அந்த நெஞ்சங்களுக்கு ஏது?
மஸஹர் ஏழை மரியத்துக்கு இடுக்கண் விளைவிக்க ஒரு நாளும் நினைத்ததில்லை. ஆனால் துடுக்குத் தோழர்கள் மரியத்தின் மாசற்ற மனத்தை வருத்தத் தூபமல்லவா போட்டு விட்டனர்! மஸஹர் சிந்திக்கவில்லை.
மஸஹர் அவள் அருகே சென்றான். அவள் விழித்தாள்; திகைத்தாள்.
”மரியம், அந்த மகிழம்பூ எல்லாத்தையும் எங்கிட்டே கொடுத்திடு…” மஸஹர் அழுத்தமாகவே கேட்டான்:
“எதற்காக உங்கிட்டே கொடுக்கணும்?” ஓலைப் பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே மரியம் கேட்டாள்.
“அப்படித்தான்; பேசமல் பூவைத தந்திடு…”
“தரமாட்டேன்…” மரியம் தைரியமாகப் பேசினாள் என்றாலும் உள்ளூற அச்சம்தான்:
“கடைசியாகக் கேட்கிறேன்; அதைத் தருவாயா மாட்டாயா?” ”முடியாது. கொடுக்கவே மாட்டேன்.” மரியம் உறுதியாகச் சொன்னாள். பேச்சு வளர்ந்தது. ஆத்திரம் அலையாகப் பாய பூப்பெட்டியை பற்றி இழுத்தான்; மறுபுறம் மரியமும் இழுத்தாள். இருவரி டையே வலுவான போட்டி! மரியத்துக்கு அழுகையும் ஆத்திரமும் இணைந்து வந்தன! ஓலைகள் சரியுமளவுக்கு உறுதியனைத்தையும் ஒன்று திரட்டிக் கொண்டு பெட்டியை வெடுக்கென இழுத்தாள் மரியம். மறுகணம் மஸஹர் ‘பொத்’தென்று கீழே விழுந்தான். அவள் கையிலிருந்த பெட்டி நழுவியது. ‘மரியத்தால்தானே இந்த அவமானம்? அவளைப் பழி வாங்காமல் விடக் கூடாது! கண்கள் சிவப்பேற, சுற்றும் முற்றும் பார்த்தான். தேடிய பொருள் பட்டுவிட்டது. ஆமாம், ஒரு கருங்கல்! பளுவான அந்தக் கல்லைக் கையிலெடுத்து எறிந்தான்.
அச்சத்தால் நடுங்கி ஒடுங்கி நின்ற மரியத்தின், வலக்காலை நோக்கி கல் பறந்தது! மறுகணம்:
“ஆ! அம்மா… அம்மா!” மரியம் எழுப்பிய அவலக் குரல் சுற்றுப்புறமெங்கும் எதிரொலித்தது! மரியம் துடியாய்த் துடித்தாள். காலிலிருந்து ரத்தம் பீறிட்டது. எட்டத்தில் விழுந்த பெட்டியிலிருந்து பூ முழுதும் இரைந்து கிடந்தது. மரியம் நிலத்தில் சாய்ந்தாள். மஸஹருக்கு வஞ்சம் தீர்த்துவிட்ட பெருமிதம் ஒரு நிமிஷம் நிலவியது.
தரையை நனைத்த குருதி அவன் பார்வையில் ‘பளிச்’ செனப் பட்டது. பீதி அவனைப் பற்றிக் ஒன்றும் தோன்றாமல் உணர்ச்சி குன்றி நின்றான். கலக்கம் அவனை வாட்டி வதைத்தது. நன்பர்கள் நகர்ந்து விட்டனர்.
மருண்டு ஓடினான் மஸஹருத்தீன்!
மஸஹர் புரண்டு புரண்டு படுத்தான். பாழும் தூக்கம் அவனைப் பற்றிக் கொள்ள மறுத்தது. மரியத்தின் நினைவு அவனைவிட்டு அகலுவதாயில்லை. விந்தி விந்தி நடக்கும் ஒரு பெண்ணுருவை அவனுள்ளம் உருவகித்து வெம்பியது.
’மஸஹர்! அல்லா உன்னைச் சும்மா விடமாட்டான். மரியத்துற்கு தீங்கிழைத்த உன்னைப் பழி தீர்த்து விடுவான். வினை விதைத்தவன் வினையை அறுக்கத்தான் வேண்டும், இதயத்தின் ஒரு புறத்தில் இந்தக் குரல் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவன் செய்துவிட்ட தீங்குக்குப் பிராயச்சித்தம் இல்லவே இல்லையா?
எவரெனும் அறியாது தவறு செய்து பின்னர் அதற்காகப் ச்சாதாபப்பட்டு நற்கருமங்கள் செய்தால் பாவங்களை இறைவன் மன்னிப்பான் என்று குரஆன்கூற்வில்லையா?
‘ஆண்டவனே, என்னைக் காப்பாற்று! மரியத்திற்கு தீங்கேதுமில்லாமல் எழச்செய்! அறியாது செய்த தவற்றை மன்னித்தருள்!’ சின்ன அறிவுக்கு எட்டினமட்டும், எந்நேரமும் இறைவனைப் பிரார்த்தித்தான் மஸஹர்.
இமைகளை மெதுவாகத் தூக்கம் அணைத்தது. இமைகளை இறுக மூடிக் கொண்டான்.
எங்கும் இருள். மண்டியிட்டவாறு மஸஹர் அமர்ந்திருக்கிறான். அவன் வாய் எதையெதையோ முணுமுணுக்கிறது. பிரார்த்தனை உச்சத்தில் இருக்கிறது!
திடீரென அவன் வதனத்திலே ஜீவகளை ஏன் அரும்பி நடம் புரியவேண்டும்? இருளிலே ஒளியைக் கண்டவன் போலல்லவா அவன் முகம் மலர்ந்து விட்டது!
“மஸஹர்… உன் மனக் கருத்து புரிந்துவிட்டது. குற்றம் புரிந்து விட்டாய். அதனால் நிம்மதியற்றத் தவிக்கிறாய். தவற்றை உணர்ந்து விட்டாய். அதனால் இதயம் இரங்குகிறது. குறை தீர்ந்து விட்டது. மரியத்தின் வேதனை நீங்கி விட்டது! அதோ அவள்!”
எங்கே மரியம்? மரியம் எங்கே? புத்தோளி வந்தணைய அவன் விழிகள் எங்கெங்கோ துழாவின.
மஸஹரின் உடல் நடுங்கியது. உள்ளம் படபடத்தது. திடீரெனக் கண் விழித்துக் கொண்டான். இத்தனை நேரம் கண்டனவெல்லாம் என்ன? செவியிலே ஏதொ ஒலித்தனவே! எல்லாம் பிரமைதானா? கண்ட அனைத்தும் கனவா, நினைவா? கற்பனையா, சொப்பனமா? எது? எது…? உடல் குழுவதும் வியர்வை துளித்தது. மஸஹருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் கண்கள் எப்படியொ அழுந்திவிட்டன.
மாலை வந்தது. மஸஹரின் மனம் தூர் வாறிய கிணற்று நீராகத் தெளிந்திருந்தது. மரியத்தைக் காணத் துடித்தாள. மகிழ மரத்தடியில் நெடு நேரம் காத்திருந்தான். நான்கு நாட்களாக உதிர்ந்த பூக்கள் கவனிப்பாரின்மையால் கருகிக் கிடந்தன. எதை யோஎதிர்பார்த்து அவன் ஏங்கிக்
ஒரு நிமிஷம்… இரண்டு நிமிஷங்கள்!
அந்தச் சிறு பெண் மெதுவாக நடந்து வந்தாள்.
அவன் குகத்திலே ஒளி! அவள் பிழைத்தாள்.
மரியம் வந்து விட்டாள்! நல்லவேளை, அவள் நடையிலே ஊனமில்லை. அப்படியானால் அவள் குணமடைந்துவிட்டாளா? அல்லாவின் கருணைதானா? “மரியம்…” மஸஹரின் கண்டத்திலிருந்து உணர்வுக் குரல் ஓங்கியது. அன்பு, ஆதுரம், இன்பம் அனைத்தும் அதில் குழைந்து நின்றன். மரியம் அமைதியாக நின்றான்.
“என்னை மன்னிப்பாயா, மரியம்? உணராது உனக்கு கொடுமை இழைத்துவிட்டேன். தேவையற்ற மகிழம்பூவுக்காக வீண் வம்பை விலைக்கு வாங்கினேன். உனக்கு அது இடுக்கண்ணாயிற்று. மறந்து விடு, மரியம்…!”
அன்பு பரிணமித்துவிட்டதற்கு அறிகுறியாகவோ என்னவோ, அவள் மெல்லத் தலையசைத்தாள். நன்றிக் கண்ணீர் மஸஹரின் கண்களிலிருந்து உருண்டது.
மகிழம்பூ சொரிந்தது! அதற்குத்தான் எத்தனை சக்தி! இனம் நெஞ்சங்களிலே அன்பும் அமைதியும் படர்ந்தன! அல்லாவின் கருணை!
– 1958 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.