மாய இருப்பில் ஒரு மணி விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 8,727 
 

பதவி வெறி பிடித்த சுயநல அரசியல்வாதிகளின் பிரவேசத்தால் கரை உடைத்துப் பாயும் சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவது தமிழின் புனிதம் மட்டுமல்ல மொத்த தமிழினமுமே கருகி அழிந்து போகும் என்ற தார்மீக சிந்தனையின் உச்சக் கட்ட விளைவாகவே ஞானம் சித்தப்பா அரசியலில் களம் இறங்கி முன்னின்று காரிய சாதனை புரியும் அந்தச் சத்திய வேள்விக்குத் துணையாக மங்கையின் அப்புவும் கொடி தூக்கிப் போராடி வந்தாலும் அதையும் புரட்டிப் போடுகிற அளவுக்கு திறந்து கிடக்கிற அவரின் வாழ்க்கைப் புத்தகத்துக்கு மறை பொருள் காவியமாக இன்னுமொரு முகமும் உண்டு

மங்கைக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும் போன வருடம் தான் அவள் பூப்பெய்தி அதற்கான சடங்கு சிறிய அளவில் களை கட்டி நடந்தேறியதை இன்னும் அவள் மறக்கவில்லை அது நடக்கும் போது அதைப் பெரிய அளவில் கொண்டாடி இணங்கிப் போகிற அளவுக்கு ஏனோ அவளுக்கு வாழ்க்கை ஒட்டவில்லை சராசரிப் பெண்களைப் போல பட்டும் பொன்னுமாக வரக் கூடிய மேலோட்டமாகமாக ஒளி கொண்டு பிரகாசிக்கும் பொய்யான வாழ்க்கைத் தடங்கள் மீது மோகம் வைத்து அலைகிற சலன புத்தி அந்த வயதில் கூட ஏனோ அவளுக்கு வரவில்லை அவள் வளர்ந்த சூழலும் அப்புவின் வழிகாட்டலுமே அவள் அப்படி மாறுவதற்கான முக்கிய காரணிகள் இன மோதல்களின் சரிவுகளுக்குட்படாத சுபீட்ச சூரியனின் ஒளிக் குளியலில் சமூகம் சார்ந்த மனிதர்கள் கவலை மறந்து களிப்புற்றிருந்த காலம் அது தேர்தல் என்று வரும் போது அந்த நிலை போய்ப் பரபரப்புத் தலை தூக்கும் அப்பு அதற்காக அடிக்கடி கூட்டம் என்று போய் வரும் போது நடுச் சாமம் ஆகி விடும் அவர் வந்த பிறகு தான் அம்மாவும் நித்திரை விழித்த களைப்போடு அவருக்கும் உணவு பரிமாறித் தானும் உண்ட களைப்போடு தூங்குவதை மங்கை கண்டிருக்கிறாள்

தேர்தல் சமயத்தில் ஊருக்குள் அடிக்கடி களை கட்டி நடந்தேறும் அரசியல் கூட்டங்களுக்கு அப்பு போய் வந்தாலும் அவருக்கு மேடையேறிப் பேச வராது ஒரு சாதாரண பயிற்றப்பட்ட கணித ஆசிரியரான அவருக்கு தமிழில் சரளமாக உண்ர்ச்சி கொண்டு பேசுமளவுக்கு பேசுந் திறன் இல்லாமற் போனாலும் ஞானம் சித்தப்பாவுக்கு அது கை வந்த கலை மிகவும் கற்றுத் தேர்ந்த சமய சார்பான மெய்ஞ்ஞான அறிவில் புடம் போடப்பட்ட தீர்க்கமான தமிழ்ப் புலமை கொண்ட தேசியப் பற்றுடன் உணர்ச்சிகரமாக அவர் மேடை ஏறிப் பேசும் போது அலை மோதும் கூட்டத்திலிருந்து கிளம்பும் கரகோஷம் வானைப் பிளக்கும் இந்த அதிர்வுகளை ஒலிபெருக்கி மூலமே கேட்ட ஞாபகம் மங்கைக்கு

ஞானம் சித்தப்பாவும் அப்புவும் வேற்றுமைகள் கடந்த ஒன்றுபட்ட அரசியலில் ஈடுபடுவதன் மூலமே நாடு முழுமைத் தன்மையுடன் உயிர் வாழும் என்ற தேசியக் கோட்பாடுகளை அடியொற்றியே அவர்களின் அரசியல் வாழ்க்கை ஒரு சத்திய வேள்வியாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணபுருஷராக இருந்து வந்த நந்தகோபாலனின் தமிழ் மூச்சுக் கலந்த பெருமைகள் பற்றி மங்கையைக் கேட்டாலே கதை கதையாகச் சொல்வாள் அவர் தான் ஞானம் சித்தப்பாவின் ஆத்மார்த்தமான அரசியல் குரு சைவமும் தமிழும் வாழ அவர்கள் வாழ்ந்து காட்டிய அரசியல் வாழ்க்கையின் ஒப்பற்ற ஒளித் தடங்கள் இவை நந்தகோபால் அப்பழுக்கற ஓர் அரசியல்வாதி அவர் தமிழைக் காப்பாற்றவே தேர்தலில் நின்ற போதிலும் அது எடுபடாமல் பொய் வென்று கறை குடித்துத் தமிழ் வீழ்ந்ததே ஒரு கண்ணீர்க் காவியமாக மனம் பதறி அழ வைக்கும்

ஞானம் சித்தப்பா எப்போது வீட்டிற்கு வந்தாலும் நந்தகோபால் அவர்களின் தூய்மையான தமிழ் பற்று ஒன்றிலேயே கொடி கட்டிப் பறந்த புனிதமான அவரது அரசியல் இருப்பையே களங்கப்படுத்தித் தகர்த்தெறிந்து இல்லாதொழித்து விட்ட தமிழ் மக்களின் அறிவு சூனியம் குறித்து அப்புவோடு அவர் மனம் வருந்திப் பேசத் தவறுவதில்லை அந்த வழியில் மக்களைத் தூண்டி விட்டு வழி நடத்துகின்ற தலைவர்களின் கையாள்களாக ஊரிலேயே பல தரம் கெட்ட மனிதர்கள் இருப்பது குறித்து அப்பு அவரிடம் வேதனையோடு அப்போது எடுத்துச் சொல்லும் போது அந்தச் சாரமிழந்த வாழ்க்கையின் பொருள் பிடிபடாத மயக்கத்தில் மங்கை மனம் குழம்பிப் போன தருணங்களுமுண்

அப்பு குறிப்பிட்டுப் பேசிய அந்தத் தரங்கெட்ட மனிதர்களுள் ஒரு முக்கிய புள்ளி அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்து கொண்டு அவர் செய்த அரசியல் சதி வேலைகளை ஊரே அறியும் அதற்கான முரட்டுக் குணம் அவருக்கு இயல்பானது அவர் பெயர் தில்லைநாதன் நந்தகோபாலுக்கு எதிராகக் களம் இறங்கிப் போர்க் கொடி தூக்கும் ஒரு தரம் கெட்ட அரசியல் தலைவனை வாழ வைக்க அவர் எப்படியெல்லாம் குறுக்கி வழியில் சதி செய்து உழைத்தார் என்பதை அறியும் போதெல்லாம் தர்மதேவதையே நேரில் வந்து கண்ணீர் வடிப்பது போல மங்கையின் நிலைமை தர்மம் செத்துவிட்டதை எண்ணி வருந்தி அழ அப்புவுக்குத் துணையாக அவளும் அழுத போதிலும் அது எடுபடாமல் மறுபுறத்தில் அதர்மம் வென்றது கலியின் கறை போல வந்து தமிழையும் எரித்து விட்டுப் போகும் என்பதைச் சாட்சி கொண்டு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை புதைகுழிக்குள் போன மனித இழப்புகளே அதற்குச் சரித்திரம் சொல்லும்

அதை நிலை நிறுத்தி வெற்றிக் கொடி நாட்டிய ஒரு சரித்திர நாயகனாக தங்கள் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கிளை விட்டு உள் நோக்கிப் போகும் அந்தக் குச்சொழுங்கை வழியாகத் தினமும் மோட்டசைக்கிளில் தில்லை நிலம் அதிரச் சத்தம் போட்டுப் பவனி போவதைக் காண நேர்ந்த சோகத்தில் மனம் விழுக்காடு கண்ட ஒரு நிழற் பொம்மையாகவெ மங்கை மாறி விட்டிருந்தாள் தில்லையை பற்றி அவள் போட்ட கணக்கின் விபரீத விளைவை மாற்றிச் சரி செய்து புனிதம் காப்பது போலவே வேற்றுமைகள் மறந்த அன்பில் களை கொண்டு பிரகாசிக்கின்ற இன்னுமொரு முகம் தில்லைக்கு இருப்பது அவள் கண்களுக்கு வெளிச்சமானதைப் புடம் போட்டுக் காட்டுகிற மாதிரியே அதுவும் நடந்தேறியது

அது நடந்த போது மங்கை கல்யாணமாகாத சின்னப் பெண் பருவம் கண் திறந்த நேரம் கல்யாணக் கனவுகளினூடாகவே வாழ்க்கையென்பது எதிலும் அடி சறுக்காமல் ஒளி கொண்டு பிரகாசிப்பதாக அவள் தனக்குளே களை கட்டி வாழ்ந்த சமயத்திலே தான் அப்புவிற்கு கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அந்த விபத்து நேர்ந்தது அவர் பள்ளிக்கூடம் விட்டு வந்தால் சும்மா இருக்க மாட்டார் வளவுக்குள் கை நிறைய வேலைகள் அவருக்கு இருக்கும் அந்தக் காலத்தில் கிராமத்து மனிதர்களுக்கு வளவைப் பராமரிப்பதே பெரிய வேலை அதை ஒரு கலை மாதிரி அழகாகச் செய்து முடிப்பார்கள்

வீட்டைச் சுற்றிப் பெரிய வளவு இருப்பதால் அப்புவிற்கு அதனுடனேயே பொழுது கழியும் அதிலும் பங்குக் கிண்று வேறு சுற்றி வர வேலி தான் கறையான் பிடித்து வேலி சரிந்தால் மீண்டும் புதிப்பிக்க ஆள் வரும் அதற்கான சின்னச் சின்ன வேலைக் கச்சிதமாக அப்புவே செய்து முடிப்பதுண்டு அப்படித்தான் ஒரு சமயம் பொழுது படுகிற நேரம் பூவரசம் தடி நட்டுப் புதுக் கதியால் போடுவதற்காககப் பங்குக் கிணற்றின் துலா வழியாக ஏறி மறுபுறம் போய்க் கதியால் போட்டுச் சீர் செய்து விட்டுத் துலா ஏறி இப் பக்கமாக வரும் போது பட்டுப் போன பூவரசம் கதியாலில் கை வைக்க நேர்ந்ததால் தடி முறிந்து அவர் மண்ணில் வீழ்ந்த போது அவர்கள் போட்ட அலறலில் வளவு முழுக்கத் திரண்டு குழுமிய கூட்டத்தின் நடுவே தில்லையின் முகம் தெரிந்தது. மங்கை கண்ணீர் வழிய அதைக் காண நேர்ந்தது

அப்புவின் அரசியல் பரம எதிரியான அவனுக்கு இங்கே என்ன வேலை என்று அவள் குழம்பி நிற்கும் போதே அதுவும் நடந்தது மாலை வந்து விட்டால் ஊரின் பொது விளையாட்டு மைதானத்தில் தில்லைநாதன் ஊர் நண்பர்களோடு சேர்ந்து புட்போல் விளையாடிக் களிப்புக் கொண்ட்டாடுகிற சத்தம் அவர்கள் வீடு வரை கேட்கும் அதிலும் தில்லைக்குக் கனத்த குரல் அப்படியொரு முரடன் அந்த முரட்டுச் சுபாவத்தையும் மீறி அவன் ஒரு மனிதாபிமானம் கொண்ட ஒரு நல்ல மனிதன் என்பதை இனம் காட்டவே அப்புவிற்கு இப்படியொரு விபத்து நேர்ந்திருப்பதாய் மங்கைக்குக் காலம் கடந்த ஞானமாகவே அது மனதில் உறைத்தது

சுவாமி அறைக்குள் போய்ப் பெரியக்கா இந்த விபத்திலிருந்து அப்புவைக் காப்பாற்றும்படி அழுது குழறிப் பெருங்குரலெடுத்து அழும் தீனக் குரலைக் கேட்டோ என்னவோ அதற்காகக் கடவுள் அனுப்பிய கருணையுள்ள ஒரு தூதுவன் போல மனிதாபிமனம் மேலோங்கித் தில்லை தானே முன்னின்று மண்ணில் சரிந்து மயங்கிக் கிடந்த அப்புவை மூவர் துணையோடு சாய்மணையில் தூக்கிக் கிடத்தியதோடு மட்டுமல்லாமல் கார் பிடித்து வந்து அவரை ஒட்டகப்புலத்திற்குக் கொண்டு போய் முறிந்த வலக்கைக்குப் புக்கை கட்டி வீடு வந்து சேரும் வரை பகை மறந்து அப்புவை அவர் வாழ வைத்துக் காப்பாற்றிய அவரின் மாசற்ற இந்தப் பெருங்கருணைக்கு முன்னால் நிழல் போல் தேய்ந்து மறையும் வாழ்க்கையின் கறைகள் குறித்த ஞாபகத்தில் மங்கைக்கு சுயத் தோன்றலான விழிப்பு வரவே வெகு நேரம் பிடித்தது

கறைகளை நீந்திக் கரைக்கு வந்து விட்ட தில்லை மனிதாபிமான சிந்தனைத் தூய்மையினால் புடம் போடப்பட்டு மெருகேறிய உயிர்க் களையோடு மீண்டு வந்த ஒரு சகாப்த புருஷனாய் தன் முன் தலை நிமிர்ந்து நிற்பதைக் காண மனம் கூசியவளாய் மங்கை அப்புவை வராந்தாவில் கொண்டு வந்து கிடத்தும் வரை தில்லையையே வெறித்துப் பார்த்த வண்ணம் நிலை தடுமாறி மறு கோடியில் நீண்ட நேரமாய் நின்று கொண்டிருந்தாள்

தில்லை போன பிற்பாடே பிரக்ஞை மீண்டவளாய் செயலிழந்து கிடந்த அப்புவைக் காண்பதற்கு வராந்தாவை நோக்கி அவள் ஓடி வரும் போது அம்மா ஏதோ சொல்வது கேட்டது

“நீங்கள் தான் எழும்ப முடியாமல் கிடக்கிறியள் இனிப் பால் கறக்க ஐயாவைத் தான் கூப்பிட வேணும்”

பால் கறக்கிறதென்ன இனிக் கொஞ்ச நாளைக்கு என்னாலை பள்ளிக்கூடம் போகவும் ஏலாது நான் சுகப்பட எவ்வளவு காலமாகுமோ தெரியேலை பிள்ளைகள் தான் பாவம் “கல்வி அறிவு குறித்த கவலை அவருக்கு வந்தது போல் அம்மாவுக்கு வராமல் போனது ஏன் அவளுக்கு வயிற்றுக்கு ஊத்தும் பால் பற்றிய கவலை இவ்வளவு நடந்த பிறகும் வருகிறதென்றால் இது அவளது அறிவின் குறைபாடு தானே அப்பு கை ஒடிந்து முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை புக்கை வைத்துக் கட்டிய கறுப்பு நிற பாண்டேஜுடன் மிகவும் சோர்ந்து போய் அவர் சாய்மணையில் படுத்துக் கிடப்பதைப் பார்த்தால் அவர் சுகமாகி வர ஒரு மாதமென்ன அதற்கு மேலும் அவர் ஒரு முழுமனிதனாக எழுந்து நடமாட எவ்வளவு காலம் பிடிக்குமோ? அவர் முழுமனிதனாக இருந்த வரை அம்மா பொறுப்புகள் விட்டுப் போன செல்லப்பிள்ளை மாதிரித்தான் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவது முதற் கொண்டு மாடுகள் பராமரித்துப் பால் கறக்கும் வரை எல்லாமே அப்பு செய்து முடித்த காலம் போய் அவர் இல்லாமல் ஒற்றை ஆளாய் இவ்வளவையும் அம்மாவால் செய்து முடிப்பதென்பது இயலாத காரியம் தான் பால் கறக்க அம்மையா தான் வர வேண்டும் அதுவும் ஏழாலை கிழக்கிலிருந்து வருவதென்றால் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகும் அவர் வந்து பால் கறந்து எப்ப நாங்கள் தேத்தண்ணி குடிக்கிறது குடிச்சிட்டுப் பள்ளிக்கூடம் போகவே லேட்டாகி விடும்

இப்ப அதல்ல பிரச்சனை தில்லை தான் நெஞ்சுக்குள்ளை நிக்கிறான் அப்புவோடு அவனைப் பற்றி நிறையக் கதைக்க வேணும் “

அப்புவுக்குப் பக்கத்தில் வந்ததும் இறுக்கமான ஓர் அமைதி நிலவியது எதுவும் பேசத் தோன்றாமல் முகட்டையே வெறித்துப் பார்த்தபடி அவர் கடைப் பிடிக்கிற இந்தத் தீவிர மெளனத்திற்குப் பின்னால் ஆழ்ந்த அறிவு கண் திறந்த தில்லையைப் பற்றி மட்டுமே நினைவு கூர்ந்து அவர் சொல்ல நினைக்கும் தெய்வீக வாழ்க்கைக் கோட்பாடுகளின் உண்மை நிலை தனக்குள்ளும் உயிர்ப்புக் கொண்டு பிரகாசிக்கிற மாதிரி திடீரென்று குரலை உயர்த்தி மங்கை அவரைக் கேட்டாள்

“அப்பு !இப்ப என்ன சொல்லுறியள் இந்தத் தில்லையைப் பற்றி?

“நான் சொல்ல என்ன இருக்கு? அது தான் நீயே பாத்தியே”

“அந்தாளின்ரை காலை தொட்டுக் கும்பிட வேண்டும் போலை இப்ப எனக்குத் தோன்றுது’

“நீ என்ன சொல்ல வாறாயெண்டு எனக்கு நல்லாய் விளங்குது அரசியல் சகதிக்குள்ளை நிண்டு பாக்கிற போது நான் கண்ட அவன் முகம் வேறு நான் விழுந்த பிறகு தான் தெரிஞ்சுது அவனுக்கு இன்னுமொரு முகம் இருக்கு என்று இதைத் தானே நீ சொல்ல வாறாய்.”

“ஓமப்பு இது வரை எத்தனையோ பாடங்கள் நீங்கள் சொல்லித் தந்ததற்கு மேலாக மேலான அன்பிலே வாழ்ந்து காட்டிய தில்லையின் மூலம் ஒரு புது அனுபவஞானம் எனக்குள்ளே மலர்ந்திருக்கு அரசியல் சாக்கடையிலை வீழ்ந்து கிடந்த அவரையே புனிதம் காத்து மீட்டெடுக்கிற மாதிரி இது நடந்திருக்கே இப்ப என்ன சொல்லுறியள்? வரிந்து கட்டிக் கொண்டு அரசியலிலை களமிறங்கி அவரோடு சண்டை போடப் போறியளே இனியும்?

“அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தான் இது நடந்திருக்கே இவ்வளவும் நடந்த பிறகு அவனோடு சண்டை போட்டது கூட ஒரு கனவாக எனக்கு மறந்து போகும் அதுக்காக வெட்கித் தலை குனிய வெட்கித் தலை குனிய வேண்டியவன் நான் தான் அவனல்ல”என்ற போது ஒரு பிரளயத்திற்குப் பிறகு மீண்டு வந்த மகிழ்ச்சியில் வாழ்க்கையின் கறைகளற்ற அன்பு வானமே மனதில் நிரம்பி வழிய மங்கை அவரை ஒளி சிரிக்க நிமிர்ந்து பார்த்து ஒரு சத்திய பிரகடனம் போலக் குரலில் தெய்வீகம் குழைந்து சொன்னாள்

“நானும் அதைத் தான் சொல்ல வந்தேன் “

“போதுமே இந்த இணக்கப்பாடு ஒரு தில்லையின் வரவினால் தான் என்று மன வேற்றுமைகள் ஒழிந்து உடன்பாடு கண்ட மகிழ்ச்சிப் பெருக்கில் மேலே பேச வராமல் அப்பு வாழ்க்கையே தவமாக வந்து விட்டது போலக் கண்களை மூடி மெய் மறந்திருக்கிற காட்சி ஒளியில் புடம் போடப்பட்டு மின்னுகின்ற ஒரு தரிசன தேவதை போல மங்கையின் நிலையும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிற உலகின் மாய இருப்பே அவள் கண்களை விட்டு மறைந்து வெகு நேரமாகிறது வாழ்வின் கறைகள் விட்டொழிந்த பூரண அன்புக்குக் களையில் விசுவரூபமெடுத்து நிற்கும் தில்லையின் முகம் தான் அதீத காந்தியுடன் சுடர் விட்டெரியும் மணி விளக்காய் அவள் மன இருட்டைத் தின்னும் ஒரு பெரும் ஜோதி போல அவளை ஆட் கொண்டு விட்ட அந்தத் தருணத்தில் அவளுக்கு அரசியல் சகதி குடித்து வீழ்ந்து கிடக்கும் அறிவு சூன்யமாகிப் போன மனிதர்களின் மனங்கள் குறித்த பிரக்ஞையே அடியோடு மறந்து போனது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *