(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1 – 5 | அத்தியாயம் 6 – 10
1. அவசரம் அவசரம்!
‘சரோஜா, நேற்று ராத்திரி நடந்ததெல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்னாலே நிற்கிறது. அந்த ஜெயில் பூட்டு எப்படிப் ‘படீர்’ என்று தானாக உடைந்தது! அந்த ஆற்றின் நடுவே எப்படித் ‘திடீ’ ரென்று பாதை உண்டாயிற்று! இன்னும்…….”
“இன்னும் கடமுட கடமுட’ என்று எப்படி இடி இடித்தது! ‘பளிச் :பளிச்’சென் று எப்படி மின்னல் மின்னியது! ‘உஸ்ஸ்’ என்று சீறிக்கொண்டு எப்படி அந்தப் பாம்பு படம் எடுத்து ஆடி வந்தது! இதை யெல்லாம் பார்க்கப் பார்க்க அற்புதமாகத்தான் இருந் தது, அண்ணா!”
“ஆமாம், சரோஜா! இன்னொரு தடவைகூடப் பார்க்கவேணும் போலே இருக்கிறது.
“எனக்கும்தான், அண்ணா! அப்பாவிடம் சொல்லிக் கட்டாயம் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.”
“ஏண்டி சரோஜா, எதைக் கட்டாயம் போய்ப் பார்க்க வேணும்? மிருகக்காட்சி சாலையிலே புதிதாய் வந்திருக்குதே காண்டா மிருகம், அதைத்தானே?” என்று கேட்டுக்கொண்டே அப்போது அங்கே வந்தாள், சரோஜாவின் சினேகிதி சகுந்தலா.
இதைக்கேட்டதும், சரோஜாவும் அவள் அண்ணன் முரளியும் கடகட’ வென்று சிரிக்க ஆரம்பித்தனர். பிறகு, சரோஜா சகுந்தலாவைப் பார்த்து, “காண்டா மிருகத்தைப் பற்றியோ, கரடிக் குட்டியைப் பற்றியோ நாங்கள் பேசவில்லை, சகுந்தலா. தேவேந்திரா தியேட்ட ரில் நடக்கிறதே ‘கிருஷ்ண லீலா’, அந்த நாடகத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நாடகத் திலே ஒவ்வொரு காட்சியும் எப்படித் தெரியுமா இருக் குது? அட்டா! அதிலே கிருஷ்ணனாக நடிக்கிறான் ஒரு. சின்னப் பையன். அவன் நடிப்பைப் பற்றி எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை!” என்றாள்.
“அவன் மட்டும்தான் பிரமாதமாக நடிக்கிறானோ? அந்தக் கொட்டகையே கிடுகிடுக்கும்படி ராவணனாக நடித்தானே ஒரு பையன்…”
இப்படி முரளி சொன்னதும், சரோஜாவும் சகுந்தலாவும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
“ஏன் இப்படிப் பல்லைக் காட்டுகிறீர்கள் ?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டான் முரளி.
“என்ன அண்ணா, ‘கிருஷ்ண லீலா’விலே ராவணன் எங்கே வந்தான்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் சரோஜா.
“ப்பூ! கம்ஸன் என்பதற்குப் பதில் வாய் தவறிச் சொல்லிவிட்டேன். அதுக்கா இந்த அசட்டுச் சிரிப்பு!” என்றான் முரளி.
“சரி, அது போகட்டும். ஏன் முரளி, எத்தனை மணிக்கு ‘கிருஷ்ண லீலா’ ஆரம்பமாகிறது ?” என்று கேட்டாள் சகுந்தலா.
“சரியாக ஆறு மணிக்கு ஆரம்பமாகும். எட்டு மணிக்கு முடியும்.”
“அப்படியா! சரி, இதோ இப்போதே என் அப்பா விடம் சொல்லி இன்றைக்கே ‘கிருஷ்ண லீலா’வைப் பார்த்துவிட்டு வருகிறேன். பார்த்தபிறகு உங்களோடே பேசினால்தான் சுவாரஸ்யப்படும்” என்று கூறிவிட்டு வந்த வழியே ஓடினாள் சகுந்தலா.
“அண்ணா, நாமும் அப்பாவிடம் சொல்லி இன்னொரு தடவை கட்டாயம் அந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும்” என்றாள் சரோஜா.
இப்படி சரோஜாவும் முரளியும்தான் நாடகத்தைப் பற்றிப் பேசுவதாக நினைக்கவேண்டாம்! சென்னை நகர் முழுவதும் அதைப் பற்றியே பேச்சு! தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று அந்த நாடகத்தைப் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டுச் சும்மா திரும்பி வர வில்லை; ‘அபாரம்! அற்புதம்! பிரமாதம்!’ என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே வருகிறார்கள்!
“ஸ்ரீ முருகன் பால நாடக சபா’ என்றால், சென்னை நகரில் பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். அந்த நாடகக் குழுவில் இருப்பவர்கள் எல்லாருமே குழந்தை கள்தான். பதின்மூன்று பதினாலு வயதுக்குமேல் எவருமே இல்லை. மொத்தம் நாற்பத்து மூன்று குழந் தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சும், பாட் டும்,நடிப்பும் – அடடா! அபாரம்! அபாரம்! அந்த சபை யாரின் காட்சி அமைப்புக்களெல்லாம் மிக மிகப் பிரமாதமாயிருக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பிரமாண்டமான காட்சிகளை யெல்லாம் காணலாம். பள பளப்பான உடைகளும், வர்ண விளக்குகளும் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
குழந்தைகளை வைத்து இவ்வளவு பிரமாதமாக நாடகங்களை நடத்துவதற்கு முக்கிய காரணம் யார்? அவரைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர்தான் அந்த சபாவின் மானேஜர் மதுரநாயகம். அவரது முயற்சியாலே தான் அந்த சபா இவ்வளவு தூரம் பேரும் புகழும் பெற்றிருக்கிறது! நாடகங்களைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை ஒழுங்காக நடத்துவது, குழந்தைகளைத் தயார் செய்வது, வரவு செலவுக் கணக்குகளைப் பார்ப்பது, விளம்பரம் செய்வது எல்லாம் மதுரநாயகத்தின் பொறுப்புத்தான். சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், மதுரநாயகம் இல்லாவிட்டால், அந்த நாடக சபாவே இல்லை!
அன்று செவ்வாய்க்கிழமை நாடகம் கிடையாது. முதல் நாள் திங்கட்கிழமையும் நாடகம் நடக்கவில்லை. மறுநாள் புதன்கிழமைதான் நாடகம்.
நடுவே இரண்டு நாட்கள் நாடகம் நடக்காததற்குக் காரணம் வேறொன்றுமில்லை. ஒரு நாடகம் முடிந்து மறு நாடகம் ஆரம்பிப்பதற்கு இடையிலே இரண்டு நாட்கள் வேண்டும். முந்திய நாடகத்தில் உபயோகித்த காட்சி அமைப்புகளை யெல்லாம் அப்புறப்படுத்தி விட்டுப் புது நாடகத்துக்கு வேண்டிய காட்சிகளை அமைப்பதற்குத்தான் இரண்டு நாட்கள் வேண்டியிருக்கிறது!
‘கிருஷ்ண லீலா’ முடிந்து, இப்போது ‘துருவன்’ நாடகம் ஆரம்பமாகப் போகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் வெகு மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.
பகல் மணி இரண்டு இருக்கும். வீட்டுக்குச் சாப்பிடப் போயிருந்த மானேஜர் மதுரநாயகம் திரும்பி வந்தார். மேடையில் எவ்வளவு தூரம் அலங்கார வேலைகள் நடந்திருக்கின்றன என்பதைப் பார்த்து விட்டுத் தம் அறைக்குள் சென்றார்; நாற்காலியில் உட்கார்ந்தார். துருவன் நாடகத்துக்கு இன்னும் என்னென்ன சாமான்கள் தேவை என்று யோசனை செய்தார். அவற்றை ஒரு காகிதத்தில் எழுதினார். எழுதி முடித்ததும், கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரண்டரை. உடனே அவருக்கு ஏதோ ஞாபகம் வந்தது. மேஜைமீது இருந்த மணியை ‘கிணிங்’ என்று ஒரு தடவை அடித்தார்.
ஒரே ஒரு தடவைதான் அடித்தார்!
சில ஆபீஸ்களில், ‘கிணிங், கிணிங், கிணிங் என்று மிட்டாய்க்காரனைப் போல் ஓயாமல் மணியை அடித்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனாலும், ஆபீஸ் பையன் வரமாட்டான். எங்காவது மூலையில் தூங்கிக் கொண்டிருப்பான். அல்லது, சொந்த வேலையாக வெளியே போயிருப்பான். இரண்டும் இல்லாத போனால், யாருடனாவது அரட்டை அடித்துக் கொண்டிருப்பான். கடைசியில் மணி அடித்தவரே, ஆபீஸ் பையன் செய்ய வேண்டிய வேலையைச்செய்து முடித்துவிடுவார் !
ஆனால் அங்கேயுள்ள ஆபீஸ் பையன் ரமணி அந்த ரகத்தைச் சேர்ந்தவனல்லன்! மதுரநாயகம் ஒரே ஒரு தடவைதான் மணியடித்தார். உடனே, ‘குப்பென்று பாயந்து அறைக்குள்ளே ஓடினான், “என்ன சார்” என்று மிகவும் பணிவாகக் கேட்டான்.
“ரமணி,என் அம்மாவுக்கு நேற்றே பணம் அனுப் புவதாக எழுதியிருந்தேன். மறந்துவிட்டேன். இன்றைக்குக் கட்டாயம் அனுப்பிவிட வேண்டும். உடனே தபாலாபீஸிற்குப் போய் ஒரு மணியார்டர் பாரம் வாங்கிவா” என்று சொன்னார் மதுரநாயகம்.
“இதோ! ஒரு நொடியில் வாங்கி வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தபாலாபீஸை நோக்கி ஓடலானான் ரமணி.
மறு விநாடி மதுரநாயகம், “ரமணி ! ரமணி ! வேண்டாம், வேண்டாம். வா இங்கே!” என்று அழைத்தார்.
ரமணி ஓட்டத்தை நிறுத்தினான். அவர் அருகே திரும்பி வந்தான்.
“ரமணி, நீ போய் பாரம் வாங்கி வந்து, நான் அதைப் பூர்த்தி செய்து, அப்புறம் மணியார்டர் அனுப்புவது என்றால் நேரமாகிவிடும். நானே போய், மணியார்டர் பண்ணிவிட்டு வருகிறேன். யாராவது கேட்டால் தபாலாபீஸிற்குப் போயிருப்பதாகச் சொல்” என்று கூறிவிட்டு மதுரநாயகம் சிறிது தூரத்திலுள்ள தபாலாபீஸை நோக்கிக் கிளம்பிவிட்டார்.
தபாலாபீஸிற்கு மதுரநாயகம் வந்து அரைமணி நேரம் இருக்கும். அவர் வந்தபோது மணியார்டர் செய்யும் இடத்திலே ஒரு ‘க்யூ’ வரிசை நின்றுகொண்டிருந்தது. அப்போது அவர் இருபதாவது ஆளாக அங்கு போய் நின்றார். ஆனால்,இப்போது- அதாவது இந்த அரைமணி நேரத்தில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்துவிட்டார். இன்னும் இரண்டு பேர்களே அவருக்கு முன்னால் நிற்கிறார்கள். “சரி! இன்னும் ஐந்து நிமிஷத்தில் நமது முறை வந்துவிடும். பணத்தை அனுப்பிவிடலாம்” என்று மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டிருந்தார் மதுரநாயகம்.
அந்தச் சமயம் அங்கே வெகு வேகமாக ஓடிவந்தான் ஒரு பையன். அவன் மதுரநாயகத்தின் அருகே சென்றான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, “சார், சார், உங்களை சபா முதலாளி உடனே அழைத்து வரச் சொன்னார். கையோடு கூட்டிவரச் சொன்னார்” என்றான்.
இதைக் கேட்டதும் மதுரநாயகம், “என்னடா கண்ணப்பா, என்ன விஷயம்? ஏன் இந்த அவசரம்?” என்று பரபரப்புடன் கேட்டார்.
“தலைபோகிற காரியம் சார்! உடனே வாருங்கள் சார்!”
“என்னடா இது! விளங்கச் சொல்லேன்” என்று கேட்டார்.
“எல்லாம் நீங்கள் வந்தால் தானாகத் தெரியும். சீக்கிரம் வாருங்கள் சார்!”
இதைக் கேட்டதும் மதுரநாயகத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கலவரத்துடன், ‘க்யூ’ வரிசையை விட்டு வெளியே வந்தார்.
“நல்லவேளை ; ஒருவர் தொலைந்தார்” என்று மதுர நாயகத்துக்குப் பின்னால் நின்றவர் மகிழ்ச்சியோடு முன்னால் நகர்ந்தார்.
“நல்ல சமயத்திலே வந்தானே அந்தப் பையன்! அவன் மகராசனாயிருக்க வேணும்” என்று வாழ்த்திக் கொண்டே அவருக்குப் பின்னால் நின்றவர்களும் முன்னால் நகர்ந்தார்கள்.
ஆனால் பாவம், அரைமணி நேரமாகக் கால் வலிக்க நின்ற மதுரநாயகத்துக்கு இப்படிப்பட்ட ஓர் அவசரச் செய்தியா வரவேண்டும்!
2. திருட்டுப் பட்டம்
தபால் ஆபீஸை விட்டு வெளியில் வந்த மதுர நாயகம்.
“டேய் கண்ணப்பா, என்னடா விஷயம்?” என்று திரும்பவும் கேட்டார்.
“நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள், சார்: நேரிலே வந்தால் எல்லாம் தானாகத் தெரிந்துவிடும்” என்று கூறிக்கொண்டே முன்னால் வெகு வேகமாக ஓடினான்
கண்ணப்பன். மதுரநாயகமும் அவனைப் போல் தெருவிலே ஓட முடியுமா? ஆனாலும், அவசர அவசரமாக நடந்து சென்றார்.
நாடக சபைக் காரியாலயத்துக்குள் மதுரநாயகம் நுழைந்ததும், அங்கு வேலை பார்க்கும் ஆட்கள் எல்லோரும் ரமணியைச் சுற்றிக் கும்பலாக நிற்பதைப் பார்த்தார். ரமணி தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.
மதுரநாயகத்தைக் கண்டதும், “இதோ மானேஜர் வந்துவிட்டார்!” என்று கூறிக்கொண்டே கூட்டத்திலிருந்த ஒருவன் ஒதுங்கி நின்றான். உடனே மற்றவர்களும் ஒதுங்கி நின்றார்கள்.
‘மானேஜர் வந்துவிட்டார்’ என்பதைக் கேட்டதும், ரமணியின் அழுகை அதிகமாகிவிட்டது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
உடனே மதுரநாயகம் அவன் அருகே சென்று, “ரமணி, ஏன் அழுகிறாய்? என்ன விஷயம்?” என்று கலக்கத்துடன் கேட்டார். அவன் பதில் பேசவில்லை. அவனால் பேச முடியவில்லை! மேலும் மேலும் அழுதான்.
“சொன்னால் தானே தெரியும்! சும்மா அழுது கொண்டே நின்றால்…?” என்றார் மதுரநாயகம்.
உடனே, ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்த நாடக சபா முதலாளி மோகனரங்கம், மதுரநாயகத்தின் அருகே வந்தார். “மதுரநாயகம், நான் சொல்லுகிறேனே என்று வருத்தப்படக் கூடாது. இந்த மாதிரி ஊர் பேர் தெரியாத அனாதைகளையெல்லாம் இங்கு வேலைக்கு வைத்ததே தப்பு அன்றைக்கே சொன்னேன். நீங்கள் கட்டாயப்படுத்தினீர்கள். சேச்சே, மோசம், மோசம். நமது சபாவில் இதற்கு முன் ஒரு துரும்பு கூடக் களவு போன தில்லை…” என்று அவர் ஆரம்பித்தார்.
உடனே மதுரநாயகம், “என்ன! களவு போய்விட்டதா? என்ன களவு போய்விட்டது? விஷயத்தைக் கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்” என்றார் பதட்டத்துடன்.
“எல்லாம் உங்கள் ரமணியைக் கேட்டாலே தெரியும். டேய், இந்தத் திருட்டு அழுகையெல்லாம் இங்கே வேண்டாம். உன் திருவாயைத் திறந்து நீ செய்த திருவிளையாடலை எடுத்துச் சொல்லுடா! அவரும் தெரிந்து கொள்ளட்டும். அயோக்கியப் பயலே! இதுமட்டும்தானோ, இன்னும் என்னென்ன திருட்டெல்லாம் செய்திருக்கிறாயோ!” என்றார் நாடக சபா முதலாளி,
இதைக் கேட்ட பிறகும் ரமணியால் மௌனமாக இருக்கமுடியவில்லை. “மானேஜர் சார்… சத்தியமாக…நான் … திருடவில்லை. வீணாகப் பழி…” அவனால் அதற்குமேல் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
”ஆமாம்! சத்தியமாக இவர் திருடவில்லையாம். அட்டா! போன ஜன்மத்தில் இவர்தான் அரிச்சந்திரனாக இருந்தார். அப்போது நிஜமே பேசியதால் ராஜ்யத்தை இழந்து, மனைவி மக்களையும் விற்கும்படியாகி விட்டதல்லவா? அதனாலே, ‘இனிமேல் நிஜமே பேசுவதில்லை. பொய்யேதான் சொல்லுவது’ என்று முடிவு பண்ணிக்கொண்டு இந்த ஜன்மத்தில் இப்படி அயோக்கியப் பயலாக வந்து பிறந்திருக்கிறார்! அப்படித்தானேடா?” என்று குத்தலாகக் கூறினார் மோகன ரங்கம்.
மதுரநாயகத்துக்குத் ‘திருட்டுப் போன சாமான் எது? எப்போது திருட்டுப் போயிற்று?’ என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. யாராவது சொன்னால்தானே தெரியும்? அவர் முதலாளியைப் பார்த்து, “ஐயா, நடந்தது என்ன என்பதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்றார்.
“நடந்ததுதானே தெரிய வேண்டும்? சரி, இந்தத் திருட்டுப் பயல் சொல்லாத போனால் போகட்டும்” என்று கூறிவிட்டு, “ஏ, துரைசாமி! இங்கே வா!” என்று அங்கு நின்றுகொண்டிருந்த திரை இழுக்கும் துரைசாமியை அழைத்தார் மோகனரங்கம்.
துரைசாமி முன்னால் வந்தான். “நடந்ததை நடந்தபடி சொல்லு” என்றார் சபா முதலாளி.
“இதோ சொல்லுகிறேன்” என்று தொண்டை யைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான் துரைசாமி. “நான் பகல் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். தியேட்டருக்குள் நுழையும்போது ஆண்களுக்கு ‘டிக்கெட்’ கொடுக்கும் அறை இருக்கிறதே, அதற்குள்ளே ரமணி மட்டும் தனியாக ஏதோ செய்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். உடனே, ஜன்னல் ஓரமாகப் போய் நின்றுகொண்டு அவன் உள்ளே என்ன செய்கிறான் என்று மெதுவாக உற்றுப் பார்த்தேன். அவன் என்ன செய்தான் தெரியுமா? அந்த அறையில் வடக்கு மூலைக்குச் சென்றான். மேல் கூரையில் ஏதோ ஒரு பொட்டணத்தைத் திணித்து வைத்தான். அது என்ன பொட்டணமாக இருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்தேன். புரியவில்லை. சரி, நாம் போய் எடுத்தால் சந்தேகத்துக்கு இடம் ஏற்படும் என்று எண்ணி நேராக ஆபீஸுக்கு வந்தேன். உங்களிடமாவது முதலாளியிடமாவது சொல்லிப் பார்க்கச் சொல்லலாமென்று நினைத்தேன். நீங்கள் அறையில் இல்லை. உடனே முதலாளி அறைக்குச் சென்றேன். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் என்னையும் அழைத்துக் கொண்டு டிக்கெட் அறைக்குச் சென்றார். ரமணி பதுக்கி வைத்த பொட்டணத்தை எடுக்கும்படி என்னிடம் சொன்னார். நான் அதை எடுத்து அவர் கையிலே கொடுத்தேன். அவர் அதைப் பிரித்தார். பிரித்ததும்…” – துரைசாமி முழுவதையும் கூறி முடிக்கவில்லை. அதற்குள், “போதும்! என் மேஜை மேலே அந்தப் பொட்டணம் இருக்கிறது. அதை உடனே எடுத்து வா. நேரே பார்த்தால்தானே அவருக்குத் தெரியும்!” என்றார் மோகனரங்கம். அதைக் கேட்டதும் மதுரநாயகம் திகைத்துப்போய் அப்படியே சிலைபோல் நின்றுவிட்டார்.
துரைசாமி முதலாளி அறைக்குள் ஓடிப் போய் அங்கே மேஜைமேல் இருந்த பொட்டணத்தை எடுத்து வந்தான்.”இதோ, இந்தப் பொட்டணம்தான்!” என்று கூறி மதுரநாயகத்திடம் அந்தப் பொட்டணத்தை நீட்டினான்.
மதுரநாயகம் அதைக் கையிலே வாங்கினார். அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். உள்ளே இருந்ததைக் கண்டதும், “ஆ! துருவனுக்கு இடுப்பிலே கட்டுவதற்காக வாங்கியதல்லவா இந்தப் பட்டுத் துணி! என்று இதையா ரமணி எடுத்தான் என்கிறீர்கள்?” திகைப்புடன் கேட்டார் மதுரநாயகம்.
“ஆமாம், ‘கெஜம் பன்னிரண்டு ரூபாய்; மூன்று கெஜம் முப்பத்தாறு ரூபாய்’ என்று சொல்லி இன்று காலையில் வாங்கி வந்தீர்களே ! இதே துணியைத்தான் இவன் திருடியிருக்கிறான். இன்னும் கொஞ்ச நாளிலே இங்குள்ள சாமான்கள் எல்லாவற்றையுமே விற்றுவிடுவான். கடைசியில், இந்த நாடக சபாவையே விலை பேசிவிடுவான்!” என்றார் மோகனரங்கம்.
”ஐயா! இதை ரமணி எடுத்திருப்பானா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது… “
”என்ன! இன்னுமா சந்தேகம்? மதுரநாயகம், உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால்தான்! இந்த மாதிரிப் பயல்களுக்குத் தஞ்சம் கொடுப்பதே மகாப் பாவம்! இவன் நமது நாடகங்களிலே நடிப்பவர்களைப் பார்த்துப் பார்த்து இதுவரை நல்லவன்போல் நடித்திருக்கிறான். சுத்த மோசக்காரன்!” என்று கத்தினார்.
“நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே!”
“என்ன! நம்பவே முடியவில்லையா? சரி தான், ஜோஸ்யம், ஆருடம் பார்த்துத்தான் நம்ப வேண்டும் போலிருக்கிறது. இவன் பொட்டணத்தில் என்ன வைத்திருந்தான் எனபது துரைசாமிக்கு அப்போது தெரியுமா? பொட்டணத்தைக்கூட அவனாக எடுத்துக் கொண்டு வரவில்லையே ! நான் எடுக்கச் சொன்ன பிறகுதானே எடுத்தான்! கையும் களவுமாக அகப்பட்ட பிறகும் நம்ப முடியவில்லை என்கிறீர்களே!”
“ரமணி இதுவரை இப்படி நடந்துகொண்டதே இல்லையே!”
“நமக்குத் தெரியாமல் அவன் என்னென்ன செய்திருக்கிறானோ! இந்த ‘நல்ல பிள்ளைக்கு நீங்கள் வீட்டில் வேளா வேளைக்குச் சாப்பாடு போடுகிறீர்கள். சபா விலும் மாதம் பத்து ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுக்கிறோம். இவை போதாதென்று பட்டுத் துணி வியாபாரத்தில் வேறு இறங்கிவிட்டான். சுத்த அயோக்கியப் பயல்! தீட்டின மரத்திலே பதம் பார்க்கிறான்!” என்று கூறிக்கொண்டே ரமணியை முறைத்துப் பார்த்தார் மோகனரங்கம்.
“ஐயா! கொஞ்சம் தயவுசெய்து வாருங்கள். உங்கள் அறைக்குச் சென்று தனியாகப் பேசலாம்” என்று கூறி அவரை அறைக்குள்ளே அழைத்துச் சென்றார் மதுரநாயகம். இருவரும் அங்குள்ள நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.
“ரமணி இதுவரை ஒரு சிறு தவறுகூடச் செய்ததில்லை. தீர ஆராயாமல் அவனுக்கு நாம் திருட்டுப் பட்டம் கட்டிவிடக் கூடாது” என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் மதுரநாயகம்.
இதைக் கேட்டதும் முதலாளி மோகனரங்கத்துக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. அவர் மொத்தத்தில் நல்லவர்தான். ஆனாலும், சில சில சந்தர்ப்பங்களில் கோபக்காரராக மாறிவிடுவார். அப்போது யார் எப்படிச் சொன்னாலும், எதைச் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார்.
“என்ன இது! ஒரு அனாதைப் பயல்! அவனுக்குப் பரிந்துகொண்டு பேசுகிறீர்களே! அப்படியானால், நான் பொய் சொல்லுகிறேன், இல்லையா ? இனி இதைப் பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை இப்போதே ‘கல்தா’ கொடுத்து வெளியே அனுப்பப் போகிறேன்” என்று கத்திக்கொண்டே எழுந்துவிட்டார். மோகனரங்கம்.
“ஒன்றிரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாமே!” என்று கொஞ்சம் தயக்கத்தோடு கூறினார் மதுரநாயகம்.
“அதெல்லாம் இல்லை. வேண்டுமானால் உங்கள் வீட்டில் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அவனை ஒரு நிமிஷம்கூட வைத்துக்கொள்ள முடியாது. இந்நேரம் அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைத்திருப்பேன். உங்களுக்காகத்தான் இந்த அளவோடு விடுகிறேன்” என்று இரைந்துகொண்டே அறையை விட்டு மோகனரங்கம் வெளியே வந்தார். மதுரநாயகமும் கவலையோடு எழுந்து அவரைத் தொடர்ந்து வெளியே வந்தார்.
“டேய் ரமணி, இந்த நிமிஷமே நீ இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விட வேண்டும். இது என் கண்டிப்பான உத்தரவு…உம்…நிற்காதே! போ” என்றார் மோகனரங்கம்.
ரமணி தயக்கத்துடன் மதுரநாயகத்தின் முகத்தைப் பார்த்தான்.
“டேய், என்னடா விழிக்கிறாய்? போடா என்றால் போக மாட்டாய்?” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகிலே வேகமாக வந்தார் மோகனரங்கம். பின் கழுத்திலே கையை வைத்துப் ‘பர பர’வென்று வாசலை நோக்கித் தள்ளிக்கொண்டே போனார். வெளியே அவனை விட்டு விட்டுத்தான் உள்ளே திரும்பி வந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டதும் மதுரநாயகத்துக்கும் தலை சுற்றியது. துக்கம் மேலிட்டது. பேசாமல் தம்முடைய அறைக்குள்ளே சென்றார். ‘பொத்’தென்று நாற்காலியில் சாய்ந்தார். யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் அவரது நினைவுக்கு வந்தது.
3. பழைய சம்பவம்
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவுநேரம்.
மானேஜர் மதுரநாயகம் எழும்பூர் ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தார். திருச்சியிலிருந்து வந்திருந்த அவருடைய அத்தானை (அக்காளின் கணவர்) வழி யனுப்பத்தான் சென்றிருந்தார். 9-40க்குப் புறப்படும் வண்டியில் அவரை அனுப்பிவிட்டு, ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார். பஸ்ஸிற்காகக் காத்து நின்றார்.
ஐந்து நிமிஷம் ஆயிற்று; பத்து நிமிஷமாயிற்று; பதினைந்து நிமிஷங்களும் பறந்தோடி விட்டன. ஆனாலும் பஸ்தான் ஓடி வரவில்லை! அப்போது, ‘டர்டர் டர்டர்’ என்ற ‘இன்னிசை’யுடன் ஓர் ஆட்டோ ரிக்க்ஷா, அங்கு வந்தது. அதைப் பார்த்ததும், ‘மணியோ பத்துக்கு மேலாகிறது. இனியும் நின்றால் நேரம் வீணாகும். ஆதலால், இந்த ஆட்டோ ரிக்ஷாவிலே போய்விடலாம்’ என்று தீர்மானித்தார் மதுரநாயகம், உடனே ஆட்டோ ரிக்ஷாவை அழைத்து, அதிலே ஏறி உட்கார்ந்துகொண்டார். “தங்கசாலைக்குப் போ” என்றார். கர்ணகடூர சத்தத்துடன் அது புறப்பட்டது. எதிரில் இருக்கும் உயரமான ரயில் பாலத்தில் ஏறியது. சுமார் ஐம்பது அடி தூரம்கூடப் போயிருக்காது.
அப்போது –
“ஆ! ஐயோ! ஐயையோ!” என்ற கூக்குரல் கேட் டது. சத்தத்தைக் கேட்டதும், மதுரநாயகம் திடுக்கிட்டார். எதிரே பார்த்தார். அங்கே மனிதன் இழுக்கும் ஒரு ரிக்ஷா மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பின்புறமாக ஓடி வந்துகொண்டிருந்தது! அதை இழுத்துச் சென்ற ரிக்ஷாக்காரன் அதைக் கைவிட்டு விட்டான் என்பதை மதுரநாயகம் உடனே புரிந்து ரிக்ஷாவுக்குள் இருப்பவர்தான் கூக் குரல் போடுகிறார் என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.
உடனே அவர், “ஏய்! ஏய்! நிறுத்தப்பா, நிறுத்து!” என்று பரபரப்புடன் கூறி ஆட்டோ ரிக்ஷாக்காரனின் முதுகிலே பலமாகத் தட்டினார். உடனே அவன் நிறுத்தினான்.
மதுரநாயகம் கீழே இறங்குவதற்குள் பின்னோக்கி வந்த அந்த ரிக்ஷா சரிவிலே வெகு வேகமாக ஓடியது. அதைத் தொடர்ந்து ரிக்ஷாக்காரனும் ஓடினான். ஆனாலும், அவனால் ரிக்ஷாவைப் பிடித்து இழுத்து நிறுத்த முடியவில்லை!
சிறிது தூரம் சென்றதும், தலை குப்புறக் கவிழ்ந் தது அந்த ரிக்ஷா ! அதிலிருந்து ஒரு குண்டு மனிதர் “அம்மாடியோவ் !” என்று கதறிக்கொண்டே கீழே சாய்ந்தார். மறு நிமிஷம், ஓடி வந்த ரிக்ஷாக்காரன் அவர் அருகே சென்றான். “ஐயையோ! அடிபட்டு விட்டதா ! எந்த இடத்திலே அடி? என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவரது உடம்பைத் தொட்டுப் பார்த்தான்.
இதற்குள் மதுரநாயகம் அங்கே வந்துவிட்டார். அவர் மட்டும் வரவில்லை; ஒரு சிறு கூட்டமே வந்து விட்டது! ஒரு போலீஸ்காரரும் அங்கே வந்து சேர்ந்தார். அந்தப் போலீஸ்காரர் கூட்டத்துக்குள்ளே புகுந்தார். அங்கே நின்ற ரிக்ஷாக்காரனைக் காதைப் பிடித்து இழுத்துச் சென்றார். பக்கத்திலே இருந்த ‘மெர்க்குரி’ விளக்கின் அடியிலே கொண்டுபோய் நிறுத்தினார். கூட்டமும் அங்கே வந்தது.
மதுரநாயகம் கீழே விழுந்த கனத்த மனிதரை மெதுவாகத் தூக்கிவிட்டு,”அடி பலமோ?” என்று கேட்டார்.
“நல்ல காலம்; அடி எதுவும் இல்லாமல் தப்பினேன். ரிக்ஷா ஜீவன் செத்த பயல்களெல்லாம் இழுக்க வந்துவிட்டான்கள்!” என்று அந்தக் குண்டு மனிதர் ஆத்திரத்துடன் சொன்னார்.
“சரி, வாருங்கள். அந்த ரிக்ஷாக்காரனை என்ன செய்கிறார்கள்; பார்க்கலாம்” என்று கூறி அவரையும் அழைத்துக்கொண்டு ரிக்ஷாக்காரன் நின்ற இடத்துக்கு வெகு வேகமாகச் சென்றார் மதுரநாயகம்.
அங்கே போலீஸ்காரரின் எதிரே விளக்கு வெளிச்சத்தில் நின்ற ரிக்ஷாக்காரனைக் கண்டதும் மதுரநாயகம் திடுக்கிட்டார். அவர் மட்டும் தானா திடுக்கிட்டார்? அங்கு நின்ற எல்லோருமே-போலீஸ்காரர் உள்பட அனைவருமே திடுக்கிட்டார்கள். ஏன்?
அவன் ஒரு சிறுவன்! ஆம், அவனுக்கு வயது பதின்மூன்று பதினாலுக்கு மேல் இருக்காது. ஆனாலும், நன்றாக வளர்ந்திருந்தான்.
“டேய், ரிக்ஷா இழுக்க உனக்கு யாரடா லைசென்ஸ் கொடுத்தது? கையிலே லைசென்ஸ் வில்லை கட்டியிருக்க வேணுமே! எங்கே அது?” என்று அவனை அதட்டிக் கேட்டார் போலீஸ்காரர்.
அந்த ரிக்ஷாக்காரப் பையன் திரு திரு வென்று விழித்தான். “இது என் ரிக்ஷா இல்லை. வேறு ஒருவருடையது. பசிக்கிறக்கத்தில் விட்டு விட்டேன்” என்று தயக்கத்தோடு கூறினான்.
“என்ன! வேறு ஒருவனுடையதா? நீ எப்படி இழுக்கலாம்? நட ஸ்டேஷனுக்கு” என்று கூறி அவனை ரிக்ஷாவுடன் பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார் போலீஸ்காரர். செல்லும் போதே கீழே விழுந்தவரைப் பார்த்து, “நீங்களும் வாருங்கள். இவனைச் சும்மா விடக்கூடாது” என்று கூறி அவரையும் அழைத்தார்.
அந்தப் பையனைப் பார்த்தவுடனே மதுரநாயகத்துக்கு அவனிடம் ஓரளவு அநுதாபம் ஏற்பட்டுவிட்டது. இந்த வயதில் இவன் ஏன் ரிக்ஷா இழுக்கவேண்டும்? எப்படி இவனுக்கு இந்த ரிக்ஷா கிடைத்தது?’ என்றெல்லாம் எண்ணினார். கடைசியில், ‘சரி, நாமும்இவர்களோடு போய், என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே !’ என்று நினைத்துக்கொண்டே அவரகளின் பின்னால் சென்றார். போலீஸ் – ஸ்டேஷனுக்குச் சென்றதும், சப்.இன்ஸ்பெக்டருடைய அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் ஓரமாக நின்று கவனித்தார்.
சப்- இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சுருக்கமாகக் கூறினார் போலீஸ்காரர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரிக்ஷா இழுத்த சிறுவனைப் பார்த்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விகளுக் கெல்லாம் அவன் கூறிய பதில் இதுதான்.
“நான் பிறந்தவுடனே என் அம்மா ஜன்னிகண்டு இறந்து போனாள். என் அப்பாவும் ஆறேழு மாதங்களுக்கு முன்பு ஒரு வெறி நாய் கடித்துச் செத்துப் போனார். வேறு உற்றார் உறவினர் இல்லாததால் நான் அனாதையானேன்; என் அப்பா பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அதனால், எட்டாவது வகுப்பைப் பாதியிலே முடித்துக்கொண்டு ஊர் ஊராக வேலைக்கு அலைந்தேன். ஒன்றிரண்டு இடங்களில் வேலை கிடைத்தது ஆனாலும், அங்கெல்லாம் அதிக நாள் இருக்கமுடியாமல் போய்விட்டது. கடைசியாக இந்தப் பட்டணத்துக்கு வந்தேன். வந்து ஒரு மாதம் ஆகிறது. இங்கும் வேலை கிடைக்கவில்லை. அதனால், கூலி வேலை பார்த்தாவது காலத்தைக் கழிக்கலாம் நினைத்தேன். அதில் தினம் இரண்டணா என்று கிடைத்தது. அதைக்கொண்டு அரை வயிறும், கால் வயிறும் நிரப்பி வந்தேன். வயிறு நிறையச் சாப்பிட எனக்கு ஒரு வழி சொல்லித் தந்தார், எனக்குத் தெரிந்த ஒரு ரிக்ஷாக்காரத் தாத்தா. அவர் பகலெல்லாம் ரிக்ஷா இழுப்பார். விளக்கு வைத்த பிறகு அவருக்குச் சரியாகக் கண் தெரியாது. வெள்ளெழுத்தாம்! அத னால், அவர் என்னிடம் இந்த ரிக்ஷாவைத் தந்து இரவு நேரங்களிலே இழுக்கச் சொன்னார். கிடைககும் கூலி யில் அவருக்குப் பாதி கொடுத்து விடுவேன். நாலு நாட்களாக இந்த மாதிரி செய்து ஒரு ரூபாய் மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அதை நேற்று ராத்திரி நான் தூங்கும்போது எவனோ ஒருவன் திருடிப் போய் விட்டான் ! அதனாலே இன்றைக்கு முழுவதும் பட்டினி ! பட்டினியோடே ரிக்ஷா இழுத்தேன். இப் படி விபரீதம் நேர்ந்துவிட்டது. நான் செய்தது தப்புத் தான். ரிக்ஷாவிலே வந்த பெரியவரையும், உங்களை யும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று ஞ்ெசிகக் கேட்டுக்கொண்டான்.
இதைக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர், “பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும்… சரி, உனக்கு இப்போது என்ன வயது?” என்று கேட்டார்.
“பதின்மூன்று”
“என்ன! பதின்மூன்றுதானா! ரிக்ஷா இழுக்க வேண்டுமானால், 17-வயது முடிந்து 18-வது வயது ஆரம்பமாகியிருக்க வேண்டும். தெரியுமா? லைசென்ஸ் இல்லாமல் ரிக்ஷா இழுத்ததே குற்றம்.”
“எனக்கு இது தெரியாது, சார். பொய் சொல்லுவது, திருடுவது, ஏமாற்றுவதுதான் குற்றம் என்று நினைத்தேன், இப்போதுதான் இதுவும் குற்றமென்று தெரிகிறது”.
“சரி, உன்னுடைய ஊர் எது ? உன்னுடைய பெயர் என்ன?”
“என் ஊர் வேலங்குறிச்சி. மதுரைக்குப் பக்கத்திலே இருக்கிறது. என் பெயர் ரமணி”
“பெயரெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நீ லைசென்ஸ் இல்லாமல் இழுத்தது ஒரு குற்றம். இந்தப் பெரியவரைக் கீழே தள்ளியது இரண்டாவது குற்றம். இந்த இரண்டுக்கும் சேர்த்து உனக்குச் சரியான தண்டனை வாங்கித் தரவேண்டியது தான்.”
இதைக் கேட்டதும் அவன் திடுக்கிட்டான். “சார், சார்! தெரியாமல் செய்துவிட்டேன், சார்! தயவு செய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள், சார்!” என்று கெஞ்சினான்.
இந்தக் காட்சியைக் கண்ட மதுரநாயகத்தின் மனம் இளகிவிட்டது. உடனே அவர் மெதுவாக சப்-இன்ஸ்பெக்டரின் அறைக்குள்ளே நுழைந்தார்.”சார், வணக்கம்!” என்று ஒரு கும்பிடு போட்டார்.
“என்ன விஷயம் ?” என்று கேட்டார் சப்-இன்ஸ் பெக்டர்.
“ஒன்றுமில்லை. உங்களிடம் ஒரு வேண்டுகோள்…..”
“வேண்டுகோளா! அது என்ன? நீங்கள் யார்?”
“ஸ்ரீ முருகன் பால நாடக சபா என்று கேள்விப் பட்டிருப்பீர்களே……”
“ஆமாம். இப்போதுகூட கிருஷ்ணலீலா நாடகம் நடத்துகிறார்களே….?”
“ஆமாம், ஆமாம், நான்தான் அந்த நாடக சபாவின் மானேஜர். பெயர் மதுரநாயகம்…”
“அடடே! அந்த சபாவின் மானேஜரா! மிஸ்டர் மதுரநாயகம், இப்படி உட்காருங்கள். நின்று கொண்டே பேசுகிறீர்களே?” என்று எதிரிலே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார் சப்-இன்ஸ்பெக்டர்.
மதுரநாயகம் நாற்காலியில் உட்கார்ந்ததும், “உங்கள் சபாவுக்கு நான் இரண்டு மூன்று முறை வந்திருக்கிறேன். குழந்தைகளெல்லாம் மிகவும் பிரமாதமாக நடிக்கிறார்கள். என் குழந்தைகளுக்கு உங்கள் நாடக மென்றால் மிக மிகப் பிடிக்கும். என் சின்னப் பையன் ஆனந்தன், ‘கிருஷ்ண லீலா’வை மட்டும் மூன்று தடவைகள் பார்த்திருக்கிறான்!” என்று புகழ ஆரம்பித்துவிட்டார் சப்-இன்ஸ் பெக்டர்.
“அப்படியா ! சந்தோஷம்” என்றார் மதுரநாயகம்.
“ஆமாம், நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வில்லையே!” என்று கேட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.
“இந்த ரிக்ஷாக்காரப் பையனைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. ரிக்ஷா இழுத்தாவது யோக்கியமாக வயிறு வளர்க்க நினைத்திருக்கிறான். இவன் துர் அதிர்ஷ்டம் இப்படி ஆகிவிட்டது. தயவு செய்து இவனை மன்னித்துவிட்டால், அதுவே தாங்கள் எனக்குச் செய்யும் பெரிய உதவி. தங்களை நான் மறக்கவே மாட்டேன்” என்றார் மதுரநாயகம்.
ரிக்ஷாவில் ஏறிக் கிழே விழுந்த பெரியவருக்கும் இரக்கம் உண்டாகிவிட்டது. “ஆமாம் சார், இரவு நேரத்தில் ஆளைச் சரியாகப் பார்க்காமல் ரிக்ஷாவில் ஏறிவிட்டேன். என்னைப் போன்றவர்களை வைத்து இந்தப் பொடியனால் இழுக்க முடியுமா? ஏதோ தெரி யாமல் செய்துவிட்டான்! இவனை விட்டு விடுவதில் எனக்கும் சம்மதமே!” என்று பரிந்து பேசினார்.
சப்-இன்ஸ்பெக்டர் சிறிதுநேரம் யோசனை செய்தார். பிறகு அந்தப் பையனைப் பார்த்து, “சரி, ஏ பையா, இனி ஒரு தடவை நீ இந்த மாதிரி செய்தாயோ, தண்டனை நிச்சயம்தான். இப்போது உன்னை விட்டு விடுகிறேன்” என்று கூறிவிட்டு, “என்ன மிஸ்டர் மதுரநாயகம், உங்களுக்குத் திருப்திதானே?” என்று கேட்டார்.
“மிகவும் நன்றி” என்று கூறிவிட்டு சப் இன்ஸ் பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தார் மதுரநாயகம். ரமணியும் அவர் பின்னால் வந்தான்.
வெளியே வந்ததும், “சார், நீங்கள் தெய்வம் போல் வந்தீர்கள். உங்களை மறக்கவே மாட்டேன்” என்று கண் கலங்கக் கூறினான் ரமணி.
“அது போகட்டும். இனி நீ இப்படியெல்லாம் செய்யாதே. நாளைக் காலையில் ஏழு மணிக்கு என் வீட்டுக்கு வா. விலாசம் இதோ இருக்கிறது” என்று கூறித் தம்முடைய தோல் பையிலிருந்த ‘விசிட்டிங் கார்ட்’ ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டுப் புறப்பட்டார் மதுரநாயகம்.
4. அவன் குணம்
மறுநாள் காலை நேரம். மதுரநாயகத்தின் வீட்டுக் கடிகாரம், ‘டாண், டாண்’ என்று ஏழு தடவைகள் அடித்து முடித்தது. அதே சமயம், “சார்! சார்” என்ற குரலும் கேட்டது.
அறையில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த மதுரநாயகம் சத்தம் கேட்டதும் வெளியே வந்தார். வாசல் பக்கம் பார்த்தார். உடனே, “ஓ, நீயா.வா,வா ! உள்ளே வா” என்று அன்புடன் அழைத்தார்.
வாசலில் நின்றுகொண்டிருந்த ரிக்ஷாக்காரப் பையன் ரமணி அறைக்குள்ளே வந்தான். மதுரநாயகம் தம்முடைய நாற்காலியில் உட் கார்ந்தார். “நீயும் இப்படி உட்கார்” என்று கூறி எதிரிலிருந்த நாற்காலியை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்.
“பரவாயில்லை,சார்?” என்று கூறிவிட்டு நின்று கொண்டிருந்தான் ரமணி.
“சும்மா உட்கார்ந்து பேசு” என்று சொன்னார் மதுரநாயகம். ரமணி தயக்கத்துடன் அவர் சுட்டிக் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
“ரமணி, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன். நேற்றுப் போலீஸ் ஸ்டேஷனில் நீ ஒன்றிரண்டு இடங்களில் வேலைக்கு இருந்ததாகவும், அங்கெல்லாம் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை என்றும் சொன்னாயே. ஏன் அப்படி? என்ன காரணம்?” என்று கேட்டார் மதுரநாயகம்.
“இதே கேள்வியை அந்த இன்ஸ்பெக்டர் கேட்டாலும் கேட்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ சொல்லுகிறேன்; கேளுங்கள்” என்று ஆரம்பித்தான்.
“என் அப்பா இறந்ததும், நான் மதுரையிலே முதன் முதலாக ஒரு பணக்காரர் வீட்டிலே வேலைக்குச் சேர்ந்தேன். எடுபிடி வேலைதான். சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் சம்பளம் தந்தார் அந்தப் பணக்காரர். அவர் சுத்தக கருமி. ஈவு இரக்கம் இல்லாதவர்.
“ஒருநாள் காலை நேரம், ஒரு சிறு பெண்-வயது ஐந்துகூட இருக்காது- பிச்சை கேட்க அந்த வீட் டுக்கு வந்தாள். அப்போது எல்லோரும் பலகாரம் சாப்பிட்டுவிட்டார்கள். நான் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.
“பிச்சைக்காரப் பெண், ஐயா சாமி, பிச்சை போடுங்கள். பசியாயிருக்கிறது’ என்று கூறிக் கொண்டே கையிலிருந்த தட்டை நீட்டினாள். அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாயிருந்தது.ஆனால், அந்தப் பணக்காரருக்குக் கோபம்தான் வந்தது. ‘சீ கழுதை ! போ. பிச்சை வேண்டுமாம் பிச்சை! பிறக்கும்போதே பிச்சைப் பாத்திரத்தோடே பிறந்துவிட்டது. போ, போ’ என்று விரட்டினார்.
“அந்தப் பெண் போகவில்லை. ஐயா, உங்க ளுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. ஏதாவது கொடுங்கள், ஐயா!’ என்று கூறி அவரது காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். உடனே அவர் காலை வேகமாக உதறினார். அவள் கீழே விழுந்தாள். கையிலிருந்த தட்டும் தரையிலே உருண்டு ஓடியது. அந்தப் பரிதாபக் காட்சியைக் காண எனக்குச் சகிக்கவில்லை.
“சற்று நேரம் சென்று அந்தப் பெண் மெதுவாக எழுந்தாள். கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“ஐந்து நிமிஷம் நிமிஷம் சென்றது. பணக்காரர் என்னிடம் காலணாக் கொடுத்துப் பொடி வாங்கிவரச் சொன்னார். வெளியே வந்ததும், அந்தச் சிறு பெண் எங்கே என்று தேடிப் பார்ததேன். தெருக் கோடியில் களைத்துப்போய் அவள் உட்கார்ந்திருந்தாள். உடனே நான் அவளிடம் ஓடினேன். ‘தங்கச்சி, நீ வருத்தப் படாதே! உன்னை ஒரு பணக்காரர் பிடித்துத் தள்ளினாரே, அவர் வீட்டில்தான் நான் இருக்கிறேன். உன்னைப் பார்க்க எனக்கு வருத்தமாயிருக்கிறது. நீ இப் போதே எழுந்து நேராக அந்த வீட்டுக் கொல்லைப் புறத்துக்குப் போ. நானும் ஒரு நொடியில் அங்கு வந்து விடுகிறேன். வந்ததும், உனக்கு நிச்சயம் ஏதாவது சாப்பிடுவதற்குத் தருவேன்’ என்று கூறி அவளை அனுப்பி வைத்தேன்.
“சிறிது நேரத்தில் பொடியை வாங்கிக்கொண்டு போய்ப் பணக்காரரிடம் கொடுத்துவிட்டு, சமையல் கட்டுக்குச் சென்றேன். எனக்காக இருந்த மூன்று இட்டலிகளையும் ஒரு இலையில் வைத்தேன். அவற்றை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்துக்குச் சென்றேன். அங்கே தயாராகக் காத்துக்கொண்டிருந்த சிறுமியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னேன், சிறுமி ஆசை ஆசையாக இட்டலிகளைச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.
‘இது நடந்து கால்மணி நேரம்கூட ஆகியிருக்காது. முதலாளி கூப்பிடுவதாகச் சமையல்காரன் வந்து என்னைக் கூப்பிட்டான். உடனே நான் அந்தப் பணக்காரரிடம் சென்றேன். ‘டேய், நீ என்ன வேலை செய்தாய்? அயோக்கியப் பயலே! யாரோ ஒரு பிச்சைக்காரப் பெண்ணாம். அவளுக்கு நீ இட்டலி கொடுத்தாயாமே! யாரைக் கேட்டுக்கொண்டு கொடுத்தாய்?’ என்று கோபத்துடன் இரைந்தார்.
“சமையல்காரன் கோள் சொல்லியிருக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ‘ஐயோ, நான் ஒன்றும் திருடிக் கொடுக்கவில்லையே! எனக்காகத் தந்த இட்டலி களைத்தானே அவளுக்குக் கொடுத்துவிட்டு நான் பட்டினி கிடக்கிறேன்’ என்றேன்.
என் பேச்சைக் கேட்டதும் அவரது கோபம் அதிக மாகிவிட்டது, ‘டேய், யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? உனக்குத் தந்த இட்டலிகளைத் தானம் செய்துவிட்டு நீ இப்போது பட்டினி கிடப்பதாகச் சொல்கிறாய், உண்மைதான். ஆனால், மத்தியானம் சாப்பிடும் போது இந்த வேளைக்கும் சேர்த்தல்லவா மூக்குப் பிடிக்கச் சாப்பிடப் போகிறாய்? அப்போது யாருக்கு நஷ்டம்? எனக்குத்தானேடா! இதே போல் எத்தனை தடவை செய்திருக்கிறாயோ! திருட்டுக் கழுதை’ என்று என்னைத் திட்டினார். அவர் என்னைத் ‘திருடன்’ என்று சொன்னது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தது. பேசாமல், அன்றே – அந்த நிமிஷமே அவர் வீட்டைவிட்டே வெளியேறிவிட்டேன்.
“பிறகு, நான் எங்கெங்கோ வேலைக்கு அலைந்தேன். கடைசியாக ஒரு பலசரக்கு மண்டியில் வேலை கிடைத்தது. அந்த முதலாளியிடம் ஒரு கணக்கப்பிள்ளை இருந்தார். அவர் இருபது வருஷ காலமாக அவரிடம் வேலை பார்த்துவந்தார். அன்று ஒருநாள் கணக்கப் பிள்ளையின் பெயருக்கு ஓர் அவசரத் தந்தி வந்தது. அப்போது அவர் கடையில் இல்லை. பாங்கிலே பணம் கட்டப் போயிருந்தார். முதலாளியே கையெழுத்துப் போட்டுத் தந்தியை வாங்கினார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், தந்திச் சேவகரிடமே அதைக் கொடுத்துப் படித்துக் காட்டச் சொன்னார்.
“தந்திச் சேவகர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு த்ஸௌ, த்ஸௌ, பாவம்! உங்கள் கணக்கப்பிள்ளையின் தாயார் இறந்து விட்டார்களாம். உடனே புறப்பட்டு வரவும்’ என்று இருக்கிறது’ என்றார்.’சரிதான்’ என்று கூறித் தந்தியை வாங்கிப் பெட்டிக்குள்ளே வைத்தார் முதலாளி.
“தந்திச் சேவகர் போனதும் என்னை அவர் அருகிலே அழைத்தார். அப்போது நானும் அவரும் தான் இருந்தோம். ‘டேய்,ரமணி! இந்தத் தந்தி வந்த விஷயத்தைக் கணக்கப்பிள்ளையிடம் சொல்லவே சொல்லாதே. எழுதவேண்டிய கணக்குகளெல்லாம் ஏராளமாக இருக்கின்றன. கணக்கப்பிள்ளை இன்றைக்கே ஊருக்குப் போய்விட்டால், திரும்பிவரப் பத்துப் பதினைந்து நாளாகும். மூன்று நாளிலே கணக்குகளை யெல்லாம் எழுதி முடித்துவிடுவான். அப்புறம் சொல்லலாம்’ என்றார்.
“இதைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன். என்ன இது! உங்களிடம் இருபது வருஷமாக வேலை பார்த்து வருகிறார் அந்தக் கணக்கப்பிள்ளை. அவரைப் பெற்று வளர்த்த தாயார் இறந்துவிட்டதாக அவசரத் தந்தி வந்திருக்கிறது. இறக்கும் சமயத்தில்தான் அவர் அம்மாவின் அருகிலே இல்லை; இறந்த பிறகாவது அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டாமா? உங்கள் வேலைதான் பெரிது என்கிறீர்களே!’ என்று ஆத்திரத்துடன் கேட்டுவிட்டேன்.
“நான் கூறியதைக் கேட்டு அவர் கோபம் கொண்டார். ‘டேய், அதிகப் பிரசங்கி! நீ அவனிடம் இதைப் பற்றி ஏதாவது சொன்னால், உடனே உன்னை வேலையை விட்டே விரட்டி விடுவேன்’ என்று மிரட்டினார்.
உடனே நான் அவரிடம்; ‘சிரமப்பட்டு நீங்கள் விரட்டவேண்டாம். நானே போய் விடுகிறேன். ஆனாலும், உடனே பாங்குக்குப் போய்க் கணக்கப்பிள்ளையிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டேன்.
“நேராக பாங்கிற்குப் போனேன். கணக்கப்பிள்ளையிடம் அந்தத் துக்கச் செய்தியைக் கூறிவிட்டு, அந்த ஊரைவிட்டே புறப்பட்டேன். நேராக இந்தப் பட்டணத் துக்குத்தான் வந்தேன்.”
இவ்வளவு நேரமாக ரமணி கூறியதைக் கேட்ட தும், மதுரநாயகத்துக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ‘ஒரு சிறு பையன். இவனுக்கு எவ்வளவு பரோபகார சிந்தனை!’ என்று வியந்தார்.
பிறகு புன் சிரிப்புடன், “ரமணி, நீ சொல்லுவதெல்லாம் சரிதான். இருந்தாலும், காலத்தை ஒட்டி, நமது நிலைமையை அனுசரித்துப் போக வேண்டியதுதான். ஆமாம், நீ சொல்வதைப் பார்த்தால் உனக்கு ஒருவரின் கீழேயிருந்து வேலை பார்க்கப் பிடிக்காது போல் தெரிகிறதே!” என்று கேட்டார் மதுரநாயகம்.
அதற்கு ரமணி கண்கலங்கப் பின்வருமாறு கூறி னான்: “எனக்கு ஒருவரின் கீழ் வேலை செய்யக்கூடாது என்பதில்லை, சார். யாரேனும் வேலை கொடுத்தால், கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்வேன். பொய் சொல்லமாட்டேன். திருடமாட்டேன், என்னைப் பற்றி நானே சொல்லுகிறேனே என்று நினைக்காதீர்கள். சிபாரிசு செய்ய எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நானோ அனாதை!”
உடனே மதுரநாயகம், “சரி, வருத்தப்படாதே! எங்கள் சபா முதலாளியிடம் சொல்லிப் பார்க்கிறேன். அவர் உன்னை எடுத்துக்கொள்ளலாம். இதற்காகத் தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்” என்றார்.
அன்றே முதலாளி மோகனரங்கத்திடம் ரமணியை அழைத்துச் சென்றார். அவனை நாடக சபாவில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டார். ரமணி ஓர் அனாதை என்பதைக் கேட்டதும் முதலாளி கொஞ்சம் தயங்கினார். மதுரநாயகம் மிகவும் சிபாரிசு செய்யவே, “சரி, உனக்கு நடிக்கத் தெரியுமா? இதற்குமுன் எங்கேனும் நடித்திருக்கிறாயா?” என்று ரமணியைக் கேட்டார்.
“இல்லை சார், சொல்லிக் கொடுத்தால் பழகிக் கொள்ளுவேன்” என்று சொன்னான் ரமணி.
“அதெல்லாம் இப்போது வேண்டாம். ஆபீஸ் பையனாக வேலை பார்த்த ஞானமுத்து ஒரு வார லீவில் ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பி வரவில்லை.பதி னைந்து நாளாகிறது. தகவலும் இல்லை .. மதுரநாயகம், அவன் இனிமேல் வந்தால் ‘வேண்டாம்’ என்று சொல்லி அனுப்பி விடுங்கள். இன்று முதல், அவன் வேலையை இந்தப் பையன் பார்க்கட்டும். நாடகத்திலே மற்றப் பையன்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதைச் சும்மா இருக்கும்போது இவன் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும். ஒரு வருஷம் கழித்து நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம்” என்றார் முதலாளி.
ரமணி அன்றே பத்து ரூபாய் சம்பளத்தில் ஆபீஸ் பையனாகச் சேர்ந்துவிட்டான். பொய் சொல்லாமல திருடாமல் யோக்கியனாகவே இதுவரை அவன் நடந்து வந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் இப்போது பட்டுத் துணியைத் திருடிவிட்டான் என்றால் மதுரநாயகம் உடனே நம்பி விடுவாரா?
5. பேனாவைக் காணோம்!
மாலை மணி ஆறு அடித்தது. ரமணியைப் பற்றி யோசித்துக்கொண்டே அறையில் உட்கார்ந்திருந்த மதுரநாயகம் மெதுவாக எழுந்தார். அறையைவிட்டு வெளியே வந்தார். அங்கிருந்து தெருவுக்குச் சென்றார். தெருவில் ரமணி நிற்கிறானா என்று சுற்றுமுற்றும் பார்த்தார்;
காணவில்லை. ‘ஒருவேளை வீட்டுக்குப் போயிருப்பானோ?’ என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றியது. உடனே, நேராக வீட்டை நோக்கி நடந்தார். போகும் போதே வழியில் ரமணி நிற்கிறானா என்று பார்த்துக்கொண்டுதான் போனார். அவனைக் காணோம்.
வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் கேள்வியாக “ரமணி இங்கே வந்தானா?” என்றுதான் கேட்டார்.
“இல்லையே! அவன் எங்கே போனானோ! ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டாள் மதுரநாயகத்தின் மனைவி கமலாதேவி.
“ஒன்றுமில்லை. சும்மாதான் கேட்டேன்” என்று கூறிவிட்டு நேராகத் தமது அறைக்குள் சென்றார். சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, பனியனுக்குமேல் அங்கவஸ்திரம் ஒன்றை எடுத்துப் போர்த்துக்கொண்டார். அப்படியே போய் வாசலில் நின்றார். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ரமணி வரவில்லை.
‘எங்கே போயிருப்பான்? அவனைத் தனியாகப் பார்த்துப் பேசினால்தான் உண்மை தெரியும்’ என்று நினைத்துக்கொண்டே வாசலில் நின்றார். அவரால் சிறிது நேரம்கூடப் பொறுமையாக நிற்கமுடியவில்லை. வாசலை விட்டுக் கீழே இறங்கினார். ‘விடு விடு’ என்று நடந்து கடை வீதிப் பக்கமாகச் சென்றார். ரமணியைத் தேடித் தேடிப் பார்த்தார். சுமார் ஒரு மணி நேரம் தேடியும் அவன் அகப்படவில்லை!
‘சரி ‘வீட்டுக்குப் போவோம். இரவு எப்படியும் சாப்பிட வந்துவிடுவான்’ என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்றதும், “இன்னும் ரமணி வரவில்லையா?” என்று மனைவியிடம் கேட்டார்.
“நீங்கள் பார்க்கவில்லையா? அரை மணி நேரத்துக்கு முன்பு இங்கு வந்தானே! உடனே போய்விட்டான் போலிருக்கிறது. நான் அடுக்களையில் இருந்தேன்” என்றாள் கமலாதேவி.
“அடடே! அப்படியா! நான் அவனையல்லவா தேடி விட்டு வருகிறேன். அவன் ஏதாகிலும் சொன்னானா?”
“ஒன்றும் சொல்லவில்லையே!” என்றாள் அவர் மனைவி.
“அவன் எவ்வளவு நல்லவனாக, யோக்கியனாக நடந்துகொள்கிறான்! அவன்மேல் வீண் பழி சுமத்துகிறார் எங்கள் முதலாளி! அவன் திருடனாம்; அயோக்கியனாம்?” என்றார் மதுரநாயகம்,
“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்? ‘என் ரமணி திருடனும் இல்லை; அயோக்கியனும் இல்லை. தங்கக் கம்பி’ என்று உங்கள் முதலாளியின் தலையில் அடித்துச் சத்தியம் செய்தீர்களாக்கும்…ஆமாம், அவன் எதைத் திருடிவிட்டான்?” என்று கேட்டாள்.
“உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும். பாவம், நாடகத்துக்கு வாங்கி வைத்த மூன்று கெஜம் பட்டுத் துணியைத் திருடி விற்கப் பார்த்ததாக ரமணி மீது பழி போடுகிறார்கள் !”
“உங்களுக்கு எல்லாமே ஒன்றுதான். வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாது ! உங்களை ஏமாற்றுவது சுலபம் என்று அந்த ரமணிக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?” என்று எரிச்சலோடு கூறினாள் கமலா தேவி. ரமணிக்கு இலவசமாகச் சாப்பாடு போட்டு, வீட்டிலேயே வசிக்க இடமும் கொடுத்தது ஆரம்பத்திலிருந்தே அவளுக்குக கொஞ்சமும் பிடிக்கவில்லை. இது தான் நல்ல சமயம் என்று நினைத்து அவள் அவனைத் தாக்கிப் பேச ஆரம்பித்துவிட்டாள்!
“கமலா, ரமணியைப் பற்றி உனக்குச் சரியாகத் தெரியாது. அவன் இப்படி எல்லாம் தவறான வழியில் போகவே மாட்டான்” என்றார் மதுரநாயகம்.
“ஆமாம். உங்கள் ரமணியைப் பற்றி நீங்கள்தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.”
“கமலா, வீணாக அவனைச் சந்தேகிக்காதே! பாவம், அவனுக்குத் தீயவரைக் கண்டால்கூடப் பிடிக்காது. நாடகங்களில்கூடக் கெட்ட குணங்களைக் கற் றுக் கொடுக்கும் நாடகங்களை அவன் விரும்ப மாட்டான்…கமலா, அவனைப் பற்றி ஒன்றே ஒன்று சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையாகக் கேள். கிருஷ்ண லீலா, துருவன், பிரஹலாதன் போன்ற நாடகங்களுடன் புதுமையாகவும் பல குழந்தை நாடகங்கள் வேண்டுமென்று போட நினைத்து, நல்ல நாடகங்களை எழுதித் தருகிறவர்களுக்குப் பரிசு தருவதாகப் போன மாதம் நாங்கள் விளம்பரம் செய்ததும், உடனே ஏராளமான நாடகங்கள் வந்து குவிந்ததும் உனக்குத் தெரியும். அப்படி வந்த நாடகங்களை நான் இரவு வெகுநேரம் வரை படிப்பதும் உனக்குத் தெரியும். இதை அவனும் கவனித்திருக்கிறான். ஒரு நாள் – நீ உன் தாயார் வீட்டுக்குப் போயிருந்த சமயம் என்று நினைக்கிறேன் – அவன் என்னிடம் வந்து, ‘சார், நானும் இந்த நாடகங்களைப் படித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டான். ‘சரி’ என்று கூறி இரண்டு நாடகங்களை அவனிடம் கொடுத்தேன். அந்த இரண்டையும் அவன் படித்துப் பார்த்தான். கடைசியில் அந்த இரண்டிலே ஒன்றை என்னிடம் கொடுத்து ‘இது நன்றாயிருக்கிறது. இன்னொன்று மோசம்’ என்றான். ‘ஏன், அது உனக்குப் பிடிக்கவில்லையா?’ என்று கேட்டேன். ‘ஆமாம், பொய் சொல்வது, திருடுவது – இப்படிப்பட்ட பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் நாடகமாகவே இது இருக்கிறது. இதை மேடையில் பார்த்தால் பலர் கெட்டுவிடுவார்களே என்று பயந்து தான் ஒதுக்கிவிட்டேன்’ என்றான். உடனே நானும் அந்த இரு நாடகங்களையும் படித்துப் பார்த்தேன். அவன் சொன்னது முற்றிலும் சரியாகவே இருந்தது. நாடகத்தில்கூடத் தீமையை விரும்பாதவன் ரமணி! அவனா திருடியிருப்பான்?” என்று கேட்டார்.
“இப்போதுதான் புரிகிறது! அதுபோல் திருட்டு நாடகங்களைப் படித்துப் படித்துத்தான் அவனும் திருடப் பழகியிருக்கிறான் போலிருக்கிறது! தான் மட்டும் தான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று நினைத்துத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறான்.”
“கமலா, வீணாக அவன்மீது குற்றத்தைச் சுமததாதே! நான் தினமும் பேனா, கடிகாரம், மணிபர்ஸ் முதலியவற்றை மேஜைமேல்தானே வைக்கிறேன்? அவன் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாமே!” என்றார் மதுரநாயகம்.
“உங்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாயிற்றே! மணிபர்ஸில் முதலில் எவ்வளவு வைத்தோம் என்பது தெரிந்தால் அல்லவா குறையும் போது எவ்வளவு குறைகிறது என்பது தெரியும்?” என்றாள் கமலா.
“கமலா, நீ சொன்னதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லுவாய்”
“ஆமாம், நீங்கள்மட்டும் புதிதாகச் சொல்லுகிறீர்களாக்கும்! அவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? நேரமாகிறது; சாப்பிட வாருங்கள்” என்று கூறிவிட்டு அடுக்களைக்குச் சென்றாள் கமலாதேவி.
மதுரநாயகம் சாப்பிடும் போதெல்லாம் ரமணியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இரவு தூக்கம்கூட வரவில்லை! ‘எங்கே போயிருப்பான்? சாப்பிடக் கூட வரவில்லையே!’ என்ற யோசனையிலே இருந்தார்.
மறுநாள் அதிகாலையில் மதுரநாயகம் எழுந்தார். உடனே, ரமணி வழக்கமாகப் படுக்கும் வெளித் திண்ணைக்கு வந்து பார்த்தார். அங்கே அவன் இல்லை! ‘என்ன! இரவு சாப்பிட வரவில்லை, படுக்கவும் வரவில்லையே! அவன் ரோஷக்காரனாயிற்றே ! ‘ஒரு வேல, தற்கொலை…’ இதற்குமேல் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மனக் கலக்கத்துடனே காலை வேலைகளை முடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு அறைக்குள்ளே சென்றார். அவசர அவசரமாகச் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார். மேஜை அருகே சென்றார். மேஜை மேலிருந்த கடிகாரத்தை எடுத்தார்; கையிலே கட்டிக்கொண்டார். மணிபர்ஸை எடுத்தார்; சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார். இன்னும் ஏதோ ஒன்றை அவர் எடுக்கப் போனார். ஆனால், அதை அங்கே காணவில்லை! உடனே சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். அங்கும் இல்லை. ஜன்னல், மேஜை அறை, அலமாரி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டார். அந்த அறை முழுவதும் தேடியும் கிடைக்க வில்லை. உடனே அவர் அளவற்ற ஆச்சரியத்துடன், “எங்கே போய்விட்டது என் பேனா! தங்கமூடி போட்ட ‘எவர் ஷார்ப்’ பேனாவைக் காணோமே!” என்று இரைந்து கூறினார்.
சத்தத்தைக் கேட்டதும், அவர் மனைவி கமலாதேவி அங்கே ஓடி வந்தாள். விஷயத்தை அறிந்தாள் உடனே, “நல்ல பையனாம், நல்ல பையன்! அந்த நாசமாய்ப் போனவன்தான் இதையும் எடுத்துக்கொண்டு தொலைந்திருப்பான். நேற்றுச் சாயங்காலம் நீங்கள் இல்லாத சமயம் பார்த்து வந்தானே, இதைத் திருடிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறான்! ஐயோ! பேனாவை மட்டும்தான் எடுத்தானோ, இன்னும் என்ன என்ன சாமான்களை யெல்லாம் எடுத்திருக்கிறானோ!” என்று திட்டிக்கொண்டே அறையிலிருந்த சாமான்களை யெல்லாம் சரிபார்க்க ஆரம்பித்து விட்டாள்!
‘பேனாவைக் காணோம்!’ என்றதுமே மதுரநாயகம் அதிர்ச்சியடைந்தார். ‘ரமணிதான் அதைத் திருடியிருக்க வேண்டும்’ என்று கமலாதேவி சொன்னதும், அவருடைய அதிர்ச்சி இன்னும் அதிகமாகியது!
“ரமணியா பேனாவைத் திருடியிருப்பான்?” என்றார் தாழ்ந்த குரலில்.
“பின்னே, கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு அயலூரி லிருந்தா திருடன் வருவான்? இவனைத் தவிர வேறு யார் எடுத்திருப்பார்கள்? சம்பளம் கொடுத்த சபாவிலே பட்டுத் துணியைத் திருடினான்; சாப்பாடு போட்ட வீட்டிலே தங்கப் பேனாவைத் திருடினான்! அந்தப் பட்டுத் துணிகூட முப்பது நாற்பது ரூபாய்க்குள்ளே தான் இருக்கும் இந்தப் பேனா கிட்டத்தட்ட நூறு ரூபாய் இருக்காதா? அட பாவிப் பையா! அன்னம் இட்ட வீட்டிலே கன்னம் வைத்துவிட்டாயே!” என்று இரைந்து பேசினாள் கமலாதேவி.
மதுரநாயகத்துக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. பேசாமல் தலையை விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
”நாயைக் கொண்டு வந்து நடுவீட்டிலே வைத்துச் சாப்பாடு போடச் சொன்னீர்களே! வளர்த்த கடா மார்பிலே பாய்வதுபோல், நம்மிடமே அவன் கைவரிசை யைக் காட்டிவிட்டானே!” என்று கமலாதேவி மேலும் பேசினாள்.
மதுரநாயகம் ஏதாவது பதில் சொல்லுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவர் எதுவுமே சொல்லவில்லை. மௌனமாகவே உட்கார்ந்து கொண்டிருந்தார்.
“நேற்று ராத்திரி நீங்கள் என்ன சொன்னீர்கள்? நான் மேஜை மேல் பேனாவை வைக்கிறேன்; மணி பர்ஸை வைக்கிறேன். அவன் எதையாவது எடுத்திருக்கிறானா?’ என்று கேட்டீர்களே, இப்போது என்ன சொல்கிறீர்கள்? சரி, அதெல்லாம் போகட்டும். இனி மேல், நடக்கவேண்டியதைப் பார்க்க வேண்டாமா? இப்படியே சும்மா உட்கார்ந்திருந்தால், உங்கள் முன்னால் அந்தப் பேனா தானாக வந்து நிற்குமா? எப்படியாவது அவனைத் தேடிப் பிடித்துப் பேனாவை வாங்கிக்கொண்டு, ஆத்திரம் தீர அவனுக்கு முதுகிலே நாலு வைக்க வேண்டாமா? எங்கேயிருந்தாலும் விடாப்பிடியாகத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து வேண்டும்.”
கமலாதேவி இப்படிக் கூறிக்கொண்டிருக்கும் போது, அங்கே வந்தார் பக்கத்து வீட்டுப் பாஸ்கரன். ‘ஓசி’யில் பத்திரிகை படிக்கத் தினமும் காலையில் தவறாது அவர் அங்கு வந்துவிடுவார்! கமலாதேவி சொன்ன கடைசி வாக்கியம் மட்டுமே அவர் காதில் விழுந்தது போலிருக்கிறது. உடனே அவர் “தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமா! எதை? உங்கள் நாய்க் குட்டி ‘ஜிம்மி’ காணாமல் போய்விட்டதா?” என்று அநுதாபத்துடன் கேட்டார்
“அந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றிகூட ஆறு மாதமாக இந்த வீட்டிலே வேளா வேளைக்குத் தின்று வளர்ந்த ரமணிக்குக் கிடையாதே! அவன் செய்த வேலையைக் கேளுங்கள். நேற்று சபாவிலே இருந்த பட்டுத்துணியைத் திருடி அவன் அகப்பட்டுக் கொண்டுவிட்டான். ஆனால், அவன் திருடியிருக்கவே மாட்டான் என்று இவர் முதலாளியிடம் சொன்னாராம். முதலாளி என்ன, சாமானியப்பட்டவரா? அவர் ரமணி தான் திருடியிருக்கவேண்டும் என்று முடிவுகட்டி உட னேயே அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார். பிறகு அவன், இவர் இல்லாத சமயம் பார்த்து இங்கே வந்து மேஜைமேல் இருந்த தங்கப் பேனா வையும் திருடிக்கொண்டு ஓடிப் போய்விட்டான்…ஐயோ! அது எவ்வளவு நல்ல பேனா!” என்று பாஸ்கரனிடம் பரிதாபத்துடன் சொன்னாள் கமலாதேவி.
உடனே பாஸ்கரன், “சரிதான், நான் அவன் இந்த வீட்டுக்கு வந்தவுடனே சந்தேகப்பட்டேன். நான் நினைக்கிறது எப்போதுமே சரியாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் எல்லாம் அளவோடுதான் இருக்க வேண்டும். கொஞ்சம் இடம் கொடுத்தால் ஆபத்துத் தான்!” என்றி கூறிக் கமலாதேவியின் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
பாஸ்கரனுக்கு ரமணி என்றாலே பிடிக்காது. ஏன்? அவர் சாப்பிடுகிற சோற்றிலே ரமணி மண்ணை வாரிப் போட்டானா? இல்லை. ஆனாலும், காரணம் இருக்கிறது. ஒரு நாள் பாஸ்கரன் கடைக்குப்போய் ‘சிகரெட்’ வாங்கி வரும்படி ரமணியிடம் கூறினார். அதற்கு அவன், ‘சார், நீங்கள் என்னவேலை வேண்டுமானாலும் சொல்லுங்கள்; செய்யத் தயார். ஆனால், தயவு செய்து ‘சிகரெட்’ வாங்கமட்டும் என்னை அனுப்பாதீர்கள். இந்தக் கெட்ட பழக்கத்துக்கு நான் உதவமாட்டேன்” என்று சொல்லிவிட்டான். உடனே பாஸ்கரனுக்குக் கோபம் வந்துவிட்டது! “சுத்த அதிகப் பிரசங்கி!” என்று திட்டிவிட்டு மதுரநாயகத்திடம் விஷயத்தைக் கூறினார். அதற்கு மதுரநாயகம், “பாஸ்கர் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். சிகரெட் பிடிக்கமாட்டேன். பொடி, புகையிலை போடமாட்டேன். காப்பி குடிக்கமாட்டேன். என்னிடம் பழகியவன் எப்படியிருப்பான்?” என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கூறினார். ஆனால், பாஸ்கரன் சிரிக்க வில்லை. ‘சமயம் வரும். அப்போது இந்தப் பொடியனை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்’ என்று கருவினார். அந்த நல்ல சமயம் இப்போது வந்திருக்கிறதே! அவர் சும்மா இருப்பாரா?
“எவ்வளவு செல்லமாக வளர்த்தோம்! இப்படி மோசம் செய்துவிட்டானே பாவிப் பையன்!” என்று அங்கலாய்த்தாள் கமலாதேவி.
“ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் சொல்லுகிறபடி செய்தால் சீக்கிரம் பேனா கிடைத்துவிடும் உடனே பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியது. ஒரு ‘ரிப்போர்ட்’ கொடுக்க வேண்டியது. எங்கிருந்தாலும் அவனை சிண்டைப் பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள். மதுரநாயகம்! ஏன் இப்படிப் பிடித்துவைத்த பிள்ளையார்போல் இருக்கிறாய்? உடனே எழுந்திரு. ‘ரிப்போர்ட்’ கொடுத்து விட்டு வரலாம்” என்றார் பாஸ்கரன்.
இதைக் கேட்டதும், இதுவரை மௌனமாயிருந்த மதுரநாயகம், “என்ன! போலீஸிலே ‘ரிப்போர்ட்’ கொடுக்கிறதா?” என்று கேட்டார்.
“பின்னே, பொட்டுக் கடலைக்காரனிடமா ‘ரிப்போர்ட்’ கொடுப்பது? என்னப்பா யோசிக்கிறாய் ? எழுந்திரு. எனக்கு இந்த ‘டிவிஷன்’ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைத் தெரியும். ‘ரிப்போர்ட்’ கொடுத்ததும் அவர் நாலா பக்கமும் ஆட்களை அனுப்பி அவனை உடனே பிடித்துவரச் சொல்லுவார். அவன் எங்கே போவான்? இந்தப் பட்டணத்தில்தானே அந்தப் பேனாவை விற்கவேணும் ?” என்றார் பாஸ்கரன்.
பாஸ்கரன் மதுரநாயகத்தைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தபோது மதுரநாயகம் சிறிது தயங்கினார்.அதைக் கண்டதும் அவர் மனைவி கமலாதேவிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.
“யோசித்து யோசித்துத்தான் இப்படி ஆகிவிட் டது. ரமணி இன்னும் என்ன என்ன எடுத்திருக்கிறான் என்பதுகூட அவனைப் பிடித்தால் தெரிந்துவிடும், இனி அவனைச் சும்மா விடக்கூடாது! நீங்களோ நாடகக் கொட்டகைக்குப் போய்விடுகிறீர்கள். இரவு வெகு நேரம் சென்றுதான் திரும்பி வருகிறீர்கள். இல்லாத சமயம் பார்த்து அவன் வந்து எதையாவது தூக்கிக்கொண்டு ஓடிவிட்டால் நான் என்ன செய்வது? அவனைச் சும்மா விட்டு வைக்கக்கூடாது. ஆபத்துத் தான்!” என்றாள் கமலாதேவி.
“மதுரநாயம், பேசாமல் எழுந்திரு. நேரமாகிறது” என்று கூறி மதுரநாயகத்தின் கையைப் பிடித்து இழுத்தார் பாஸ்கரன்.
மதுரநாயகம் அரை மனசுடன் எழுந்து பாஸ்கரனோடு சென்றார்.
இருவரும் பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷக்குச் சென்றார்கள். சப்-இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை விளக்கிக் கூறினார் பாஸ்கரன்.
காணாமல் போனது எவர்-ஷார்ப் பேனா. தங்க மூடி போட்டது; அடிப்பாகம் கறுப்பு நிறம்; மதிப்பு நூறு ரூபாய் இருக்கும்; பேனாவின் மேல் ‘சேகர் அன்பளிப்பு’ என்று எழுதப்பட்டிருக்கும். மலேயாவிலிருந்து சேகர் என்ற உறவினர் அனுப்பியது, அனுப்பி ஒன்றரை வருஷம் இருக்கலாம். சந்தேகப்படும் பையன் பெயர் ரமணி. வயது பதின்மூன்று. மாநிறம். சுமார் நாலரை அடி உயரம்.
இந்த விவரங்களுடன் “ரிப்போர்ட்” எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள் மதுரநாயகமும், பாஸ்கரனும்.
அன்று மதுரநாயகம் நாடக சபாவுக்குப் போவ தற்கு முன்பே இந்தச் செய்தி அங்கே போய்ச் சேர்ந்துவிட்டது. அப்படியானால் முதலாளிக்கு இது தெரியாமலா இருக்கும்? அவருக்கும் உடனே தெரிந்து விட்டது. எல்லாம் அந்தப் பாஸ்கரன் செய்த வேலை தான்!
மதுரநாயகம் சபாவுக்குள் வந்து நுழைந்ததுமே, “என்ன மதுரநாயகம்! அந்தப் பயல் உங்களிடமே தன் வேலையைக் காட்டிவிட்டான் போலிருக்கிறது! அவன் பரம யோக்கியன் என்று நேற்றுச் சொன்னீர்களே, அந்தப் பரம யோக்கியன் செய்த வேலையைப் பார்த்தீர்களா? பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி என்பார்களே, அது போலத்தான் அவனும் இருந்திருக்கிறான்” என்று வாய் மூடாமல் பேசலானார் முதலாளி. மதுரநாயகம் பதில் எதுவும் கூறவில்லை. தலையைக் குனிந்தபடி தமது அறைக்குள்ளே சென்றார்.
– தொடரும்
– பர்மா ரமணி (நாவல்),1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை