கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,556 
 
 

ஒரு பெரிய மலைப் பிரதேசத்தில் செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு. அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களும், மான், குரங்கு போன்ற சிறிய மிருகங்களும் வாழ்ந்து வந்தன. காலம் காலமாக பல வகையான மிருகங்களும் ஒரே இடத்தில் இருந்து வந்ததால் இவை ஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தன. ஆனாலும், இக்காட்டிலுள்ள சிங்கங்களில் முரட்டுச் சுபாவமுள்ள சிங்கம் ஒன்று இருந்தது. அதனுடைய செயல்கள் மற்ற சிங்கங்களுக்குப் பிடிக்காததால் அது தனிமைப் படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலவி வந்தது.

இருப்பினும் காட்டிலுள்ள மான், குரங்கு ஆகியவற்றுடன் முரட்டுச் சிங்கம் நட்பாகவே பழகி வந்தது. அவையும் தனியாக வாழும் முரட்டுச் சிங்கத்தின் மீது பாசமாய் இருந்தன. இச்சிங்கம் காட்டில் உலாவச் செல்லும் போது, மான்களுடன்தான் செல்வது வழக்கம். நாட்கள் ஆக ஆக மான்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

இதையறிந்த மற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்துடன் உலவச் சென்ற போது, திசை மாறி வேறு எங்கும் சென்றிருக்கலாம்-அவை இடம் கண்டறிந்து மீண்டும் நம்மிடம் வந்து சேரும் என நம்பிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் முரட்டுச் சிங்கம் காணாமல் போன மான் குட்டி ஒன்றுடன் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததை மற்ற மான்கள் பார்த்தன. ஆனாலும், நீண்ட நாட்கள் ஆகியும் இவ்விரண்டும் தங்களுடைய இருப்பிடம் வந்து சேரவில்லை.

அதிர்ச்சியடைந்த மற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்தையும் குட்டி மானையும் தேட ஆரம்பித்தன. எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குட்டி மானின் தாய், சேயை இழந்த ஏக்கத்தில் காட்டில் சுற்றித் திரிந்தது.

ஓர் அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற சப்தம் கேட்டது. உன்னிப்பாக அந்த திசை நோக்கி நடந்த தாய் மான் சேறும், சகதியுமாய் இருந்த படு குழியில் முதலை ஒன்றுடன் ஒரு சிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. இது நம்முடன் இருந்த முரட்டுச் சிங்கம்தான் என அறிந்து, உரத்த குரலில் சப்தமிட்டது. இந்த சப்தம் கேட்டு, காட்டிலுள்ள மற்ற மான்களும், குரங்குகளும், சிங்கங்களும் அங்கு படையெடுத்தன.

முரட்டுச் சிங்கம் முதலையுடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மான்கள் எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டுமென சிங்கங்களிடம் கூறின. ஆனால், சிங்கங்கள் அது தங்களுக்கு இழைத்த கொடுமைக்கு சாகட்டும் என சொல்லி விட்டுச் சென்றுவிட்டன. ஆனால், குரங்குகள் அந்தச் சிங்கங்கள் சொன்னதைக் கேட்காமல் அதன் மீது இரக்கம் காட்டி காப்பாற்ற ஒரு திட்டத்தைத் தீட்டி மான்களிடம் கூறின.

அத்திட்டத்தின்படி, வளர்ந்த மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை பிடுங்கி நாங்கள் கீழே போடுகிறோம். அதைக் கொண்டு நீங்கள் முரட்டுச் சிங்கத்தைக் காப்பாற்றி விடலாம் என யோசனைக் கூறின.

இதுவும் நல்ல யோசனைதான் என அறிந்த மான்கள், குரங்குகள் மரத்திலிருந்து பிடுங்கிப் போட்ட கொடி ஒன்றை எடுத்துச் சென்று சிங்கம் விழுந்திருந்த குழியில் போட்டு, “ஏய்… சிங்கமே நீ இதை உன் வாயால் கவ்விப் பிடித்துக் கொள். நாங்கள் உன்னை மேலே தூக்கி காப்பாற்றி விடுகிறோம்’ எனக் கூறின.

அவ்வாறே, முரட்டுச் சிங்கமும் கொடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டு ஏறி பாதி குழி வரும் போது, கொடி அறுந்து மீண்டும் குழிக்குள் விழுந்துவிட்டது.

இதை மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் ஏராளமான கொடிகளைப் பிடுங்கி ஒன்றாகக் கயிறு போல் திரித்து கீழே போட்டன. மான்கள் அதை சுருட்டிக் கொண்டு போய் மீண்டும் குழிக்குள் போட்டன. முரட்டுச் சிங்கம் அந்தப் பலமான கொடியைப் பிடித்துக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என கூறிக் கொண்டு மேலே வந்து சேர்ந்தது.

தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றி உயிர் பிச்சை வழங்கிய குரங்கு களுக்கும், மான்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறியது! நாம் நயவஞ்சமாகப் பழகி மான் இனத்தை வேட்டையாடிப் புசித்தும், தன்னைப் பழி வாங்காமல் காப்பாற்றிய செயல் கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.

தன் உயிர் உள்ளவரை தன் பலத்தை வைத்துக் கொண்டு எல்லா உயிர் களுக்கும் தன்னாலான உதவி செய்வேனே ஒழிய, தொந்தரவு செய்யமாட்டேன் எனவும், அன்றிலிருந்து தனக்கு ஏற்பட்ட துன்பம் ஒரு பாடம் எனக் கருதி மற்ற சிங்கங்களுடன் திருந்தி வாழவும் முடிவு செய்தது முரட்டுச் சிங்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *