கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,186 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு திருப்புத்தான் திருப்பியிருப்பேன்: அது இரண்டு தடவை திருகினால் தான் திறக்கும் பூட்டு. மேலிருந்து அவர் குரலின் அவசரம் – இல்லை , அதன் மெலினமான ஈர்ப்பு என்னை எட்டிற்று. சாவியைப் பூட்டிலேயே விட்டுவிட்டு, விடுவிடெனப் படிகள் மேல் தத்தி ஓடுகையில், சிறுவயதில் ஆடிய கயிறு விளையாட்டு ஞாபகம் வந்தது. “ஸ்கிப் ஸ்கிப்…ஸ்கிப்” படிக்கட்டு S வடிவத்தில் இருமுறை வளைந்து தான் பிறகு நேராய் மாடிக்கு ஓடிற்று.

ராத்திரி எப்போது மழை பெய்தது? மழையென்று பொழியல் இல்லை; பூமி நனைந்த லேசான தூறல், முகம் துடைத்த குழந்தைகள் போல் மரங்களின் இலைப்பச்சை பளிச்சென்று ஆனால், தனிப்பூச்சாய்த் தெரியாமல் பின்னணியில் வேளையின் மந்தாரத்துடன் ஒவ்வி இழைந்தது.

அவர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார். தலை யணைமேல் நான் போட்ட இடத்தில் புஷ்பம் அப்படியே கிடந்தது.

என் வருகையை அறிந்தாரேனும் அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. கவனம் தன் வலது கை மேல் ஆழ்ந்திருந்தது.

“என்ன?” என்று கேட்டுக் கொண்டே, அருகில் அமர்ந்தேன். கையை நீட்டினார். சுட்டுவிரலில் சொட்டுச் சிவப்பு துளித்து நின்றது. சட்டென விரலை வாயுள் வைத்துச் சப்பினேன்; பிறகு அந்த இடத்தில் நகத்தால் சுரண்டிப் பார்த்தேன்.

“ஏதாவது இடறுகிறதா?”

என் மேல் வைத்த கண்கள் மாறாமல் என்னையே சிந்தித்துக் கொண்டிருந்தன. முகத்தில் புன்னகை மாறவில்லை.

“முள் எல்லாம் ஒரு சமயம் போல இருக்காது; முள்ளுக்கு விஷமுண்டு…” என்று சொல்லிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தேன்.

“அவசரத்துக்கு அருக்கஞ்சட்டி கைக்கொள்ளாது. என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே அவர் சட்டைப் பையில் நீட்டிக் கொண்டிருந்த கைக்குட்டையை இழுத்து, ஒரு ஓரத்தை நாடாவாய்க் கிழித்து விரலில் சுற்றினேன்.

அவர் புருவங்கள் வினாவில் எழுந்தன. என்ன அடர்த்தி, என்ன முரடு, அணில் முதுகில் ராமர் கோடு போல்!

“நான் ஏதோ நல்ல எண்ணத்தில் தான் பறித்துப் பக்கத்தில் வைத்தேன்; நான் எழுந்த இடத்தில் இருக்கட்டும். நீங்கள் கண் திறந்ததும் உங்களுக்கு நல் முழிப்பு ஏற்படணும் என்று. ஆனால் பொழுது விடிந்ததும் விடியாததுமாய் முள்ளைத் தைத்துக் கொண்டு நிற்கிறீர்கள்!”

சொல்லும்போதே எனக்கு அழுகை வந்துவிட்டது.

என் கன்னத்தில் சரளமாய்ப் புரளும் கண்ணீரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். இன்னும் சிந்தித்துக் கொண்டு தானிருந்தார். முகத்தில் புன்னகை மாறவில்லை. அவர் அம்மாதிரியிருந்தது எனக்கு எரிச்சலாய் வந்தது. கோபத்தோடு கன்னத்துக் கண்ணீரை விரலால் வழித்து உதறினேன். மூக்கை உறிஞ்சிக் கொண்டேன்.

“உங்களுக்கெல்லாம் கேலியாய்த் தானிருக்கும்; அப்படி நான் கேலியாய் இருந்தாலும் இருந்துவிட்டுப் போகிறேன். அவ்வளவுதானே! ஆனால் எதையும் தாங்கிக்கற மனசு எனக்கில்லை. உங்களோடு என்னைக் கூட்டி வழியனுப்புகை யில் கூட அப்பா என்ன சொன்னார்?”

புருவங்கள் மறுபடியும் சிலிர்த்துக் கொண்டன.

“ஒண்ணுமே தெரியாத மாதிரி வேஷம் போட வேண் டாம். என் வாயாலேயே வரணும் என்று உங்களுக்கு எண்ணம் இருக்கிறாற் போலிருக்கிறது. இருக்கட்டுமே! அதனாலும் தான் என்ன, உள்ளத்தைத் தானே சொல்றேன்! ஆனால் அப்பா என்னமோ கிண்டலாய்த்தான் சொன்னார். மாப்பிள்ளைவாள், என் பெண்ணிடம் சோகமான கதைப் புத்தகம் ஏதேனும் தப்பித் தவறிக்கூட கொடுத்துவிடாதே யுங்கள். படித்துக் கொண்டு அழுது கொண்டேயிருப்பாள்; உங்களுக்கு வேளைக்குச் சாப்பாடு கிடைக்காது. நேரமாகி விட்டதேயென்று நீங்கள் சாப்பிடாமல் போய்விட்டால், அதையும் சேர்த்து அழுது கொண்டிருப்பாள். வெயிலிலோ மழையிலோ, தப்பித் தவறிக்கூட அவளோடு வெளியே கிளம்பி விடாதீர்கள். கூடவேதான் வருகிறாள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்; ஆனால் திரும்பிப் பார்த்தால் வெய்யிலில் வெண்ணெயாய் உருகிப் போயிருப்பாள்; மழையில் மண்ணாய்க் கரைந்து போயிருப்பாள் அவள் உடல் நிலையை நான் சொல்லவில்லை; என் பெண்ணுக்கு மனசு எவ்வளவு உறுதி என்று சொல்ல வருகிறேன். நான் என்னவோ ஸார், அவளைச் செல்லமாய் வளர்க்கவில்லை. ஐந்து பெண்களைப் பெற்றுவிட்டு யாருக்குச் செல்லம் கொடுக்க எனக்குக் கட்டுப்படி யாகும்? ஏதோ மண்ணையும் புல்லையும் போட்டு வளர்த்தேன். அதையும் போட்டு ஏன் வளர்த்தாய் என்று தான் எல்லாரையும் வளர்த்திருக்கிறேன் என்றாலும் இவள் மாத்திரம் அப்படியிருக்கிறாள்; நான் என்ன பண்ணுவேன்! நான் என் பெண்ணுக்குச் சிபாரிசுக்கு வருகிறேன் என்று நினைக்க வேண்டாம்; உங்களை உஷார்ப்படுத்துகிறேன்; அவ்வளவுதான்!”

“அப்போ எனக்கு அப்பாமேல் எவ்வளவு கோவம் கோவமா வந்தது தெரியுமா? என்னதான் தாலி கட்டி என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறீர்கள் என்றாலும். நீங்களும் நாங்களும் இனிமேல் தானே பழகிப் புரிந்து கொள்ளணும்! என்னைப்பற்றி இப்படி மனசில் புகுத்தினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்னவோ கரைஞ்சு கரைஞ்சு போயிடுவேனாம், இவாதான் வழிச்சு வழிச்சு குண்டானில் ஏந்தின மாதிரி!

“ஆனால் அப்பாவே அப்படித்தான். யாரிடம் எந்த மட்டும் என்ற எல்லையே கிடையாது. தான் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசி, எதிராளி சிரிச்சுட்டால் போதும், தலை காலே தெரியாது.

“ஆனால் அப்பாவுக்கு நிஜமாகவே இப்போ அப்பாடான்னு இருந்திருக்கும். வெய்யிலோ மழையோ அஞ்சில் ஒண்ணு குறைஞ்சால், அந்த மட்டுக்கும் சுமை சுளுவுதானே? அதுவும் தன் நிலையில், பிள்ளையார் பிடிக்க மஞ்சளுக்குக் கூடச் செலவு வைக்காமல் மாப்பிள்ளை கிடைத்தது கொள்ளை அதிர்ஷ்டமில்லையா?

“என் வாயை நீங்கள் பொத்தினாலும் என் உதடுகள் பிடிவாதமாய் உங்கள் விரலடியில் அசையத்தான் அசையும். சொல்லத்தான் சொல்வேன். ஆனால் நான் அசடுதான். என் பொன் அதிருஷ்டம் என்னெதிரில் இமயமாய் நிற்கை யில், அப்பாவின் ராசியைப்பற்றி நான் ஏன் பேசிக்கொண் டிருக்கிறேன்? என்னைப் பெற்றவர் என்று தவிர. இனி அப்பாவைப் பற்றி எனக்கென்ன? திடீர் திடீரென நன்றி அலைமோதி நெஞ்சுவரை எழுகையில் எப்படித் தெரிவிப்ப தென்றே தெரியவில்லை.”

சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நெஞ்சையடைத்தது. கண்கள் கலங்கின. அவர் கைகளையிழுத்து அவைகளின் கிண்ணத்தில் என் முகத்தைப் புதைத்துக்கொண்டேன்.

அவர் கைகள் விடுவித்துக்கொள்ள முயன்றன. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. என் உணர்ச்சிப் பெருக்கோ, நான் சொன்னதில் எதுவோ அவருக்குப் பிடிக்கவில்லை,

“என் மேல் கோபமா? தப்பு ஏதேனும் பண்ணிவிட்டேனா? அப்படியே என் மேல் தப்பு இருந்தாலும் முதலில் என்னை மன்னித்து விட்டதாய்ச் சொல்லுங்கள். பிறகு என் தப்பு என்ன வென்று சொல்லுங்கள். எது? இந்தப் பூவா? இதன் முள்ளா?”

சிரிப்பு மறுபடியும் உதட்டோரங்களில் தோன்றி ஒளி வீசிற்று.

“அப்படியானால் தப்பு என்மேல் ஒண்ணுமில்லையா? உங்கள் சிரிப்பு கலங்கரைவிளக்குப் போல், சுழற்சியில் மறைந்த சமயம் கண்டு நான் மிரண்டதுதானா? நீங்கள் சிரித்தால் என்னுள் வெளிச்சம் எப்படி வீசறது, தெரியுமா? அதன் நிறம் முதல் கொண்டு எனக்குத் தெரியும்! ஒரு தினுசான ஊதா கலந்த நீலம்! என்ன, சிரிப்புப் பரவுகிறது! என்ன இந்தப் பெண் இப்படி அக்கே பிக்கேன்னு இருக்கு என்றா?

“அட, இருந்தூட்டுப் போறேன். உங்களிடம் தானே! என்று வைத்துக்கொள்ளுங்கள்; உண்மையின் நிஜ உருவமே ‘அக்கேபிக்கே தான். உண்மையைத் திரட்டி உருட்டி உருண்டையாய் ஏந்தி, ”இந்தா ! இதுதான் உண்மை என்று கையில் கொடுத்துவிட முடியாது. அப்படியே வழங்கி னாலும், அந்த உண்மை உண்மையான உண்மையல்ல. உண்மை வெண்மையாய் இருக்கலாம்; ஆனால் உருட்டின அந்த உருவில் அது அசல் இல்லை. இந்த அக்கேபிக்கே” நிலையில் தான் அது உண்மை.

“உங்களுக்குக் கேலியாயிருக்கும்; இதெல்லாம் ‘ உனக்கு எப்படித் தெரியும்’ என்று என்னைக் கேட்டால் எனக்குத் தெரியாது. தெரிந்தால் நான் கெட்டிக்காரியாகி விடு வேன்! நான் கெட்டிக்காரியான பிறகு, உண்மையாயிருக்க முடியாது. தோன்றியதைத் தோன்றினபடி, தோன்றின உடனே எங்களிடம் மாற்றி, பொருளும் அதன் எடையுமாய், நீங்கள் நிறுத்திக்கொள்ள, என்னையும் உங்களிடம் ஒப்ப டைத்துக் கொள்வதில் தான் என் உண்மை இருக்கிறது. என்ன, மூக்கில் விரலை வைக்கிறேள்? இது லெக்சர் இல்லை . வெள்ளம் வருகிறது. மதகின் கதவுகள் திறந்து விட்டன. அவ்வளவு தான்.

“என் அக்கேபிக்கேயை முழுக்கத் தெரிந்து கொண்டு விடுங்கள். இந்தப் பூ எங்கிருந்து வந்தது தெரியுமா? நமக்குக் கலியாணம் ஆகி, ஊருக்குக் கிளம்பிய மூட்டை யோடு இதன் செடியையும் சேர்த்துக் கட்டினேன். எனக்கே பூமேல் கொஞ்சம் அசடு உண்டு. இதன் மேல் பித்துக் கூட.

“இங்கு வந்ததும், நள்ளிரவில் எழுந்து – இருட்டுக்கு எனக்குப் பயம் கிடையாது – இதை நடுவது தெரியக் கூடாதாம். அது முளைப்பதில் அவ்வளவு மானியாம் – அப்படி ஒரு தோட்டக்காரக் கிழவன், எங்கள் ஊரிலே எனக்குச் சொன்னான் – தோட்டத்தில் மதிலோரத்தில் – உங்கள் தோட்டத்தில் உங்களுக்குத் தெரியாத இடம் உண்டா. இருக்கலாமா? இருந்தும் உங்களுக்கு மறை வான இடம் என்று நான் நினைத்துக் கொண்ட இடத்தில் நட்டேன்.

“காத்திருந்தேன். ‘குபீர்’ என்ற இதன் மணத்தில் தான் தட்டி எழுப்பினால் போல் எனக்கு விழிப்பு வந்தது. கூடவே சேவலும் கூவிற்று. எழுந்து போய் – இருட்டுக்கு எனக்குப் பயம் கிடை யாது – பறித்து வந்து உங்கள் – அருகே தலையணைமேல் வைத்தேன். இம் முதல் பூவாலன்றி வேறெவ்விதம் என் நன்றியைத் தெரிவிப்பேன்? இன்று தீபாவளி பார்த்துப் பூத்திருப்பதே எனக்குத் தனி அர்த்தமாய் விளங்குகிறது. ஆனால், உங்களுக்குச் சொல்லவில்லை.

“ஏன் முகம் மறுபடியும் மாறிவிட்டது? கண்கள் ஏன் விசனமாகிவிட்டன! உங்களுக்குக் கண்கள் நிஜமாகவே நல்ல அழகு. பெரிதாய், ஏரிகள் போல்! நாள் முழுவதும் உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு அலுக்கவே அலுக்காது. உங்கள் கண்கள் தான் என் கண்ணாடி. மறுபடியும் உங்களுக்குப் பிடிக்காதது என்ன பேசிவிட்டேன்? சொல்லுங்கோளேன்! ஆனால், சொல்லு முன் என்னை மன்னித்துவிட்டேன் என்று முதலில் சொல்லி, என் தப்பு என்னவென்று பிறகு சொல்லுங்கள். உங்கள் கண் களின் வருத்தத்தை சகித்துக்கொள்ளும் மனஸு எனக் கில்லை. இந்தச் சமயத்தில் அப்பா சொன்னது வாஸ்தவ மாய் இருந்தாலும் இருந்து விடட்டும்.

“சொல்ல மாட்டேள்?”

“அப்பா!”

“நான் தானப்பா! நமஸ்காரம் பண்ணுகிறேன். இதானே கிழக்கு? பாரு, நான் எவ்வளவு அசடு! நாம்தான் மாறிட்டோம்னா திசைகூட மாறிடுமா? வீடு இதுதானே? வீடு மாறினால் தானே திசைமாறும்! ஆனால் நான் திசை திரும்பி விட்டேன் அப்பா!

“என்னப்பா பேந்தப் பேந்த முழிக்கறேள்? உன்னை மன்னிப்புக் கேட்கிறேன், அப்பா! இதுக்குமேல் பதவிசாய் எனக்கு வராது காலைப் பிடித்துக்கொண்டு கதற வில்லையே என்கிறாயா? நீ என்னை அப்படி வளர்க்க வில்லை. அதனால் அதற்கும் காரணம் நீதான்.”

“என்ன விமலா, மூச்சேவிடாமல் நீயே பேசிக்கொண்டே போனால்…எனக்கும் நடுவில் ஒரு வார்த்தைக்காவது இடம் வேண்டாமா? என்ன சார். எப்படியிருக்கிறீர்கள். சௌக்யமா? Hearty Congratulations-”

“மாமனாரும் மாப்பிள்ளையும் அப்புறம் வேணது பேசிக்கொள்ளுங்கள், சேர்ந்து கொல்லையில் நெட் கட்டி டென்னிஸ் ஆடற போதும், ஊஞ்சலில் உட்கார்ந்து ஒரே செல்லத்திலிருந்து வெற்றிலை போட்டுக் கொள்ளும் போதும். நான் பேச வேண்டியதைப் பேசித் தீர்த்துவிட் டால் தான் எனக்கும் பாரம் தீரும்.”

‘விமலா -‘

“இது விஷயம் அப்பாவுக்கும் பெண்ணுக்குமிடையில்; நீங்கள் ஏன் தலையிடறேள்? உங்களுக்குப் பிடிக்காட்டா, மாடிக்குப் போங்கள். நம் அறையில் ஒரு சாமான்கூட நிலைகலையாமல், அப்படியே இருக்கும். அப்பா சுபாவம் எனக்குத் தெரியும்.”

“விமலா – இலங்கைக்குக் கிளம்பும் முன்னால் என்ன ஒப்பந்தம் பண்ணிக்கொண்டோம் ? தீபாவளிக்குச் சந்தோஷமாயிருக்க வருகிறோம். இங்கே வந்து சண்டை கிண்டை போட்டு உன் தொண்டையைக் காட்டக்கூடாது.”

“நான் ஒண்ணும் சண்டை போடவில்லை. இப்படிச் சொல்லித்தான் ஏதாவது சண்டை மூட்ட நீங்கள் அடிப் பாரம் போகிறீர்கள் -”

“Oh my God! Alright; have your own way – பிடிவாதக் காரி! வழக்கப் பிரகாரம் எப்போது ஓய்வையோ ஓய்!”

“ஆ! இப்போத்தான் நீங்கள் விமலாவைப் புரிந்து கொண்டேள் -”

“சரியாப்போச்சு! இப்போத்தான் புரிஞ்சுகொண் டேனா? இங்கு வந்து தான் புரிஞ்சுக்கணுமா?”

“சரி; நம் தர்க்கத்தை இப்போ ஆரம்பிச்சுக்கணுமா? அது வந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறெங்காவது கொண்டுவிட?”

“எங்கே கொண்டுவிடும்? திருச்செந்தூரிலா, திருவிடை மருதூரிலா? இல்லை , சமயவரம் காளி சந்நிதியிலா? அங்குதான் பேய் பிடித்தவர்கள் தலையை விரித்து ஆடுவது ஜாஸ்தி! “போறேன். போறேன், என்று கத்துமாம்! ஆனால், பிடித்த பின் போவதாவது!”

“Please – ”

“இல்லை; நீ சொன்ன தற்குச் சொல்ல வந்தேன் – Alright, go ahead and for God’s sake finish Soon!”

“என்னப்பா பேசிண்டிருந்தோம்? – இப்படித்தான் அப்பா , அங்கேயும் ஏதாவது நடுவில் பேசிக் கலைத்து-”

“அவர் ஒண்ணும் பேசவில்லை; யாரையுமே நீ பேசவிட வில்லை. நீதான் பேசிக்கொண்டேயிருக்கிறாய் -”

“never mind! இதான் எங்களுக்குப்பழக்கம். ஆ! நினைப்பு! வந்தது!… முதன் முதலாய் மஞ்சள் தடவின உன் கடிதம் வந்து விஷயம் தெரிந்தது. என்னமா கோபம் வந்தது தெரியுமா, என்ன என் இடத்தை இன்னொருத்தி பிடிச்சுக்க ஆச்சா என்று? அதனால் தான் கல்யாணத்துக்கு நான் வரவில்லை.”

“சார், என்னைத் தப்பாய் நினைக்காதேயுங்கள். உங்கள் பெண்ணே வராதபோது உங்கள் கல்யாணத்தில் எனக்கென்ன ஜோலி?”

“அப்புறம் அடுத்தடுத்து நீ எழுதியும் நான் பதில் போடவில்லை. ஆனால், எப்பவுமே ‘டூ’ விலே இருக்க முடி யுமா? நாள் ஆக ஆக, சபலம் அடித்துக்கொள்ள ஆரம் பித்துவிட்டது. மறுபடியும் ஒரு வரி வராதா, அது சாக்கில் தொத்திக்கொள்ளலாம்னு காத்திருந்தோம் ”

“விமலா, விமலா அக்கிரமக்காரி! நாக்கில் நரம்பில்லாதவளே! -”

“என்ன என்ன?”

“இருந்தோம் என்று பன்மையில் பேசி என்னை ஏன் இழுக்கிறாய்? அநியாயமாய் என்னை ஏன் உடந்தை ஆக்கு கிறாய்? இது விஷயம் அப்பாவுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்று விட்டு -”

“சரி போங்களேன்!….. காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நீ எழுதக் காணோம். வாஸ்தவந்தான்; உனக்கும் ரோசமாயிருந்திருக்கும். அப்புறம் இவர் தான் ஆசையைத் தாண்டிவிட்டார், ‘என்ன விமலா. உன் அப்பாவைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையாயில்லையா? இந்தத் தீபாவளிக்குப் போவோமா’ என்று; அவ்வளவுதான். நானே படிஞ்சு வந்துட்டேன். எங்கேப்பா காணோம் – அதான் சித்தி? புதுசா உறவு சொல்லி அழைக்கிறது கூட என்னவோ மாதிரி வெட்கமாயிருக்கப்பா!”

“அட, வெட்கம் என்று ஒன்று இருக்கிறது கூட உனக்குத் தெரியுமா?”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“எப்படிச் சொல்கிறது? ஏன், நானே எத்தனை தடவை, அடியே பெண்கள் தலை கவிழ்ந்து நிற்பதில் ஒரு அழகு உண்டு. குரலைத் தாழ்த்திப் பேசுவதில் ஒரு குளுமை உண்டு – என்று கெஞ்சியிருக்கிறேன்!”

“மோவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு!” அதை ஏன் விட்டூட்டேள்?

“நான் சொல்லித்தான் தெரியணுமா? உன் மோவா வில் குழி விழுந்திருப்பதே அதனால் தானே!”

“எறும்பூரக் கல் தேயும் என்கிற மாதிரி -”

“அதற்கு நீ கூட ஒரு சமயம், ‘நீங்களே உங்கள் அம்மா பிள்ளையா, நீங்கள் சொல்றபடியே இருந்து கொள்ளுங்கள், நான் என் அப்பா பெண்’ என்று சவாலடித்து விட்டுக் கழுத்தைச் சுளுக்கிக்கொண்டு போனயே, ஞாபகம் இருக்கிறதா!”

“எல்லாம் இருக்கிறது! நம் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டு உங்கள் அம்மா ”அடே கோதண்டம், புளிய மரத்தில் தொங்கு, என்று தீர்ப்புச் சொன்னாரே, அதுவும் ஞாபகமிருக்கிறது! – ஒரு அகமுடையான் பெண்டாட்டி அந்தரங்கம் என்று உங்கள் வீட்டில் உண்டா ? மூச்சு விட்டதற்கெல்லாம் கோர்ட்டு, விசாரணை, சாட்சி சம்மன்! – வீட்டுக்கு நாட்டுப் பெண் என்று எனக்கு மரியாதை வேண்டாம்? இழிவேயிருக்கட்டும்; ஆனால் வீட்டுக்கு மூத்த பிள்ளையின் பெண்டாட்டி என்று உங்களைச் சாக்கிட்டு எனக்குச் சேர வேண்டிய மதிப்பு – அதுகூட எனக்குக் கிடையாது! ஏன், வந்த இடத்தில் சும்மாயிருக்க முடியவில்லையா? இங்கே வந்து கூட நாம் திரும்ப முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளணுமா?”

“மறுபடியும் இந்த நாம்’ என்கிற பிரயோகம் சரியாயில்லை.”

“நாம் இல்லை; நீங்களே தான் என்னைப் பேய் என்று விட்டதால், நீங்கள் சாதுவாகி விடுவீர்களா? சந்தோஷமா யிருக்க வந்த இடத்தில் என்னை அவமானப்படுத்தி, நாளும் கிழமையுமாய் என்னைக் கண்ணீரில் காணுவதில் உமக் கென்ன லாபம், என்ன லாபம்னு கேட்கிறேன் ! ஊ… ஊ….. கொண்டவனே தூற்றினால், கூரை தூற்றக் கேட்பானேன் ஏ…ஏ…ஏ…”

“சில பேருக்கு அழுவதில் தான் சந்தோஷம் ; சண்டை போடுவதில் தான் சமாதானம். பிறத்தியாரை அடித்து விடு வார்கள். அடிபட்டவன் வலிக்கிறதே என்று விசிக்கு முன்னர், அடித்த கை சுளுக்கிக்கொண்டதென்று தாம் உருண்டு உருண்டு அழுவார்கள். உலகமும் அவர்கள் பக்கம் தான் பேசும். சில பேர் பிறந்த வீட்டுக்கு வந்ததுமே கொண்டவனையே, ‘கருடா சுகமா’ என்று கேட்பார்கள்.. சில பேர் – சில பேருக்குச் சில பேர். பல பேர். பொது என்று சொல்லிக்கொண்டு ஒருத்தரையே குறிப்பது தான் வழக்கம்”.

“ரொம்ப Correct! உலகத்தில் பொது என்று இல்லா விட்டால்; அவரவர் காய்ச்சல் எரிச்சல்களைத் தீர்த்துக் கொள்வதோ, நாலு பேர் கண்படக் காற்றாடுவதோ எப்படி? ஆகையால் எல்லாமே ஒன்றைக் குறிப்பது தான்.”

“சிலர்?”

“சிலர் என்றாலும் அதேதான்.”

“பலர்?”

“பலர் என்றாலும் அதேதான்”.

“அப்போ ஒன்று?”

“ஒன்று என்றால் ஒன்றேதான். அன்று இன்று, என்றுமே ஒன்று”.

“எது?”

“அது இது எது எல்லாம்”

“இதென்ன திடீர்னு பாஷையே மாறி, கழிச்சு , விஷயமே சூழ்ச்சியாப் போச்சு! மயிர் சிலிர்க்கிறது; என்னது இது எது அது?”

‘திரும்பிப் பார்-‘

“யார்? ஒ, இதான் சித்தியா? சித்தி, நில் அப்படியே, திசைமாறாமல் , நமஸ்காரம் பண்ணுகிறேன். தடுக்காதே. நான் உனக்குப் பெண்; என்னைப் பெற்றவளை எனக்கு ஞாபகமில்லை. என் சித்தியையாவது பார்க்கிறேன். எங்கே, கொஞ்சம் வெளிச்சத்தில் திரும்பு – உன் பேர் என்ன? என் பேர் விமலா.. நீ பலே கைக்காரப் பேர்வழி, அப்பா! ஓசைப் படாமல் ஊமை மாதிரியிருந்து கொண்டு, ‘லக்கி பிரைஸ்’ தான் அடித்திருக்கிறாய்! சித்தி, ஏன் தலைகவிழறாய்? எனக்குச் சொல்லித்தா என்று என் ஆத்துக்காரர் சொல்லு வார். இவர்தான் என் கண – எங்கேப்பா மாப்பிள்ளை அந்தர்த்தியானம்? பல்தேய்க்கப் போய்விட்டாரா? இந்த வேளைக்கு வீட்டில் காப்பி மூணாவது டோஸ்’ ஆகி யிருக்கும். அவர் என்ன பண்ணுவார்? சித்தி, உன்னைவிட நான் பெரியவளாயிருப்பேன் என்று தான் தோண றது. ஆனால், உன்னை சித்தி என்றுதான் அழைக்கப் போறேன். இஷ்டமானால் ஏற்றுக் கொள். இல்லா விட்டாலும் ஏற்றுக்கொள். எனக்கே இப்பத்தான் கொஞ்சம் புரிகிறது, எல்லாமே கொண்டாடினால் தான் உண்டு என்று. கொண்டாடா விட்டால் விட்டுப் போய் விடுமோ என்கிற பயம்கூட வந்துவிட்டது. அப்பா , மாப் பிள்ளை சொல்வார். ‘விமலா உனக்குப் பயம் தெரிந்தால் தான் உனக்கு விமோசனம், உனக்கு முன்னால் எனக்கு விமோசனம் என்று. அந்த அர்த்தம் இப்பத்தான் மூடு சூளையாகப் புரிகிற மாதிரியிருக்கிறது. அப்பா, எனக்கு உள்ளூறக் கவலையாயிருந்தது, முன்கூட்டித் தெரிவிக் காமலே வருகிறோமே, நீ எங்கே தலை தீபாவளிக்கு உன் மாமனார் வீட்டுக்குப் போயிருப்பாயோ என்று. சாவியை எதிர்வீட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், நீ இல்லாமல் எனக்கு இங்கே என்னப்பா? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே நீதானே! தூர வரும்போதே, சிங்கத்தின் பிடரிபோல் , உன் தலையை ஜன்னலில் ப்ரேம் (Frame) போட்டாற்போல் கண்டப்போதான் வயிற்றில் பயணத்தின் ஜிவ்வு விட்டது. அந்த நன்றியிலேயே அப்பா எனக்குக் கண்ணில் தண் தளும்பி விட்டது.

“அப்பா, இப்போத்தான் கிட்டப் பார்க்கிறேன். நீ தான் நிஜமா மாப்பிள்ளை மாதிரியிருக்கிறாய். முகத்தில் களை கட்டியிருக்கிறது. நான் முன் பார்த்ததுக்கிப்போ பத்து வருடம் உதிர்ந்திருக்கிறது. கண் ஜ்வலிக்கிறது. என்னிக்குமே உனக்கு நிமிர்ந்த முதுகானாலும் இப்போ உடம்பில் புது முறுக்கேறி யிருக்கிறது. தலையில் ஒரு நரை கூட இல்லாமல், ஸாட்டின் மாதிரி , கறுசுறுன்னு பளபளன்னு – இதென்ன, உன் ‘சூ’ மாயமா, சித்தி? ”

“அப்பா, மாப்பிள்ளையைப் பார்த்தயோன்னோ, எப்படி உடம்பு சரிஞ்சு போயிருக்கார்னு? நானும் உட்கார்ந்த பந்தலாய் ஆகி வறேன். எனக்கே தெரிகிறது.

“அப்பா. மாப்பிள்ளைக்கு மண்டை தெரிய ஆரம் பித்து விட்டது. எனக்கும் தலையில் சீப்பு வைக்கவே கிலியாயிருக்கிறது. கொத்துக் கொத்தாய்ப் பிடுங்கிக் கொள்கிறது. நாங்களிருவரும் ஒரொரு சமயம் கண்ணாடிக் கெதிரில் நின்று கொண்டு ஒருத்தரை யொருத்தர் தேற்றிக் கொள்கிற கண்ணறாவி எனக்கே சிரிப்பு வருகிறது; பிறத்தி யாருக்குக் கேட்பானேன்!”

“போனால் போகிறது விமலா இனிமேல் யாரைப் பண்ணிக்கொள்ளப் போறேன்?” என்பார்.

“ஆண்களைப் பற்றி அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்லிவிட முடியாது. இருபது வருஷம் சும்மாயிருந்து விட்டு, என்னைக் கட்டிக்கொடுத்த பின், என் அப்பாவுக்கு இப்போ தோணல்லியா- நான் தான் விட்டுச் சொல்றேனே. வயிற்றிலே பல்லோடுதான் பேசினேன் – இருந்தாலும் ஆண் பிள்ளை சிங்கத்துக்கு அழகு எதுக்கு?” என்பேன்.

“சிங்கமாவது. புலியாவது?” என்று கேட்டுக் கொண்டே மாமியார், கதவு மூலையிலிருந்து அல்லது வாசற்படியில், அல்லது மாடி வளைவில், அல்லது பால் கனியில் தோன்றுவார். மயிர்போனதால் உயிர் பிரியும் கவரிமான்கள் ரெண்டு கண்டேளோ? கீ. கீ…. கீ…’ ஸ்லேட்டில் ஆணியால் கிறுக்கினால் போல் க்றீச் சென்று சிரிப்பார்.

“இது மாதிரிதான் அப்பா எல்லாமே. பார்க்கப் போனால் சின்ன விஷயம் தானே என்று அங்கீகரிக்க முடிவதில்லை. அதுக்கள் தான் தொண்டையில் முள் மாட்டிக் கொண்டாற்போல், சிறுகச் சிறுக ஆளை அரிச்சுத் தின்னு என்னப்பா கையிலே கட்டு? விரலை எங்கே வெட்டிண்டே எப்படி நசுக்கிண்டே? என்ன ஊமைச் சிரிப்புச் சிரிக்கிறே? கையை மறைக்கப் பார்க்கிறே? நான் பார்க்கக் கூடாதா? அதென்ன, அவ்வளவு பரம ரகஸ்யமா? சரி; காட்டாட் டாப் போயேன் எப்படியும் நான் என்ன பண்ணப் போறேன்? உன்பாடு, சித்திபாடு!”

“என்ன சித்தி, உனக்குப் பிரமிப்பாயிருக்கிறதா ‘இதென்ன முடுக்கிவிட்டாற்போல் பேசிக்கொண்டே யிருக் காளே, சாவி ஓயாதா’ என்று? நான் உனக்குத்தான் புதிசு. நானே இப்படித்தான். நான் விமலா. மாமியார்கூட எரிஞ்சு விழுவார் : இதென்ன சள சளா வளாவளான்னு, கடலைக் காய்ப் பானையுள் கையை விட்டாப் போல்’ என்று. என்னைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாச்சு இன்னும் முயற்சி நடந்து கொண்டு தானிருக்கிறது. நடக்கிறதெல்லாம் நடக்கட்டும்; நான் dont care master’ நான் விமலா; ஆனால், இப்போ எனக்கே மூச்சு இரைக்க ஆரம்பித்துவிட்டது. சித்தி, ஒரு முழுங்கு காப்பி கொடுக் கிறாயா? அப்புறமாப் பல் தேய்க்கறேன்.”

‘விமலா!’

“…”

“ஏ விமல், தூங்கிட்டியா?”

“இல்லை , யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்”

“என்ன யோசனை?”

“எவ்வளவோ !”

“இஷ்டமில்லாவிடில் சொல்ல வேண்டாம்.”

“நான் சொல்லாமல் நீங்கள் தெரிந்து கொண்டு விட முடியுமா?”

“தர்க்கம் பண்ணாமலே நமக்குப் பேச வராதா?”

“இல்லை. அவள் முகத்தில் எப்படிப் பால் வடியறது பார்த்தேளா? பார்க்கப்போனால் எங்கள் இருவருக்கும் ஒரே வயது தான்.”

“இதென்ன, அஸிகையா?”

“அஸிகை தானோ, அல்லது ஏக்கமோ? எப்படி வேணு மானாலும் சொல்லுங்கள். போன வயது இனிமேல் வரப் போறதா?”

“நீ என்ன நூற்றுக் கிழவியாகிவிட்ட மாதிரியல்லவா பேசுகிறாய்? அல்லது என்னை ரேழியில் தூக்கிப் போட்டிருக்கிறதா?”

“அதற்கில்லை; இருந்து இருந்து அப்பா இவளை ஏன் பண்ணிக்கணும்? பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தீர் மானித்த பின் இதைவிட அவருக்கு நெருக்கமான வயதில் பெண் அகப்படாத நாளா இது?”

“விமலா, முகத்தில் பால் வடிவதால், குழந்தையென்று அர்த்தமில்லை. பெண்கள் ஆண்களைவிடச் சுருக்கவே விவகார முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்”.

“இல்லை, அப்பாவுக்கு இத்தனை நாட்களுக்குப் பிறகு பால்யம் திரும்பினதைச் சொல்வதா?”

“விமலா. நியாயமாயிரு. தீர்ப்பளிக்க நீ யார், நான் யார்? முதலில் உன் தகப்பனார் கிழம் இல்லை. அடுத்ததாக ஒரு பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்தால் பால்யம் திரும்பினதால் மாத்திரமல்ல. குடித்தனக்காரர் பெண், ‘மாமா, மணி என்ன ஆச்சு?’ என்று கேட்டால், ‘உங்களோடு அவளுக்கு என்ன பேச்சு. அந்த மணியை என்னைக் கேட்டுத் தெரிஞ்சுக்கக்கூடாதோ?’ என்று என்னோடு சண்டைக்கு வருகிறாயே, எல்லாவற்றையுமே அந்தக் கண்ணுடன் பார்ப்பதில் அர்த்தமில்லை. நீயே எண்ணிப்பார். இருபது வருஷமாய் உனக்கு, தானே தாயும் தந்தையுமாய் தொட்டிலிலிருந்து அடைகாத்து. பந்தலில் கையைப் பிடித்துக் கொடுத்து விட்டு, இவ்வளவு பெரிய வீட்டில் உன் இடம் வெறிச்சான அவர் நிலை எப்படியிருக்கும்! யாருக்கும் துணை வேண்டியிருக்கிறது. புருஷனும் – மனைவியுமோ, அப்பனும் மகளுமோ, தாயும் மகனுமோ. ஆணும் பெண்ணுமோ – இது ஆண்டவன் நியதி.”

“எது?”

‘உன்னை விட்டால் எனக்கில்லை
என்னை விட்டால் உனக்கில்லை!’

விமலா கையைக் கொடு; கண்ணீரையும் சிரிப்பையும் தாண்டி, கண்ணை உள்ளுக்குத் திறந்து பார். ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் உனக்கே தெரியும்.

“என்னை விட்டால் உனக்கில்லை
உன்னை விட்டால் எனக்கில்லை”

ஏன் மூச்சு தேம்புகிறது?

“நீங்கள் இது மாதிரி பேசுகையில் இன்று முழுக்க கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. இன்ன தென்று முழுக்கப் புரியாவிட்டாலும் இன்பமும், துன்பமு மாய் மனம் ஊசலாடுகிறது. கற்கண்டுச் சிலும்பல் ஆனாலும் குத்தாமல் இல்லையே! மனம் அலை அடங்குவது போல் இருக்கிறது, உடனே தத்தளிக்கிறது. நிம்மதியில்லை.”

“நிம்மதி இல்லாவிட்டால் நிம்மதி அடைய வேண்டும். சமாதானம் கிட்டாவிட்டால் வலுக்கட்டாயமாய்ப் பண்ணிக்கொள்.

நீ என் சண்டையானால், நான் உன் சமாதானம்
நான் உன் கோபமானால், நீ என் சாந்தம்
நான் உன் வருத்தமானால், நீ என் சந்தோஷம்

இந்த முயற்சி தான், வாழ்க்கையின் எல்லாமே!”

“வார்த்தைகளை எப்படிக் கொட்டறேள்! புல்லரிக்கிறது. உங்கள் நாக்கில் வாக்குப் பேசறது.”

“விமலா!”

“…”

“விமலா!”

“ஊம்….கூப்பிட்டேளா?”

“நாம் நாளைக்கு மத்தியான வண்டிக்குக் கிளம்பிவிடணும்”

“என்ன?”

“…”

“இது தான் உங்கள் தீபாவளி வெடியா? கையை விடுங்கோ -”

“மாட்டேன்.”

“விடுங்கோன்னா விடுங்கோ -”

“விமலா நான் சொல்வதைக் கேள்….”

“எல்லாம் கேட்டாச்சு. உங்கள் சுண்டுவிரலில் பாகாய்ச் சுற்றி, நீங்கள் இழுக்கும் வழியெல்லாம் நான் இழுபடத்தானா இந்த வாய் ஜாலக் எல்லாம்?”

“விமலா, விடிந்தால் ஸ்நானம் பண்ணி மருந்தை விழுங்கின பிறகு அடுத்த வருஷம் தானே தீபாவளி!”

“என் கோபத்தை அனாவசியமாய்க் கிளப்பாதேயுங்கள். தீபாவளியை எப்போதிலிருந்து தங்க நிறையாய் நிறுத்தாறது?”

“விமலா, நாமே இங்கு வந்திருக்கக் கூடாது.”

“ஏன், யார் உங்களை இங்கே என்ன மரியாதைக் குறைவாய் நடத்தினா? ஆமா, எனக்கும் இப்போத்தான் தோணறது; வந்ததிலிருந்தே நீங்கள் ஒரு தினுசாய்த் தான் இருக்கிறீர்கள். கூப்பிட்டால் காது கேட்கவில்லை. ஊமையடி பட்டாற்போல் தலையைத் தூக்கி முழித்து முழித்துப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏன் ஸொரத்தாயில்லை? திகைப் பூண்டு மிதித்து விட்டீர்களா? உடம்பு சரியாயில்லையா?”

“விமலா, நாம் ஊருக்குப் போகணும்.”

“என்னைச் சீண்டாமல் இருங்களேன். அழுகை கூட வருகிறது. வருஷம் கழித்துத் தொலை தூரத்திலிருந்து வந்திருக்கிறோம்; ஒரு வாரமாவது ..”

“விமலா! விமலா! நாம் போயிடலாம்”

“நீங்கள் வேணுமானால் போங்கள்; நான் இருந்து பின்னால் வருகிறேன்”.

“இல்லை; நீ இப்போது என்னருகில் இல்லாமல் நான் இருக்க முடியாது”

“கொஞ்சம் மட்டுக் கட்டிக் கொள்ளுங்கள்! நாளைக்குக் கொஞ்சம் வேண்டாமா?”

“இது பிரியம் இல்லை; இது அவசியம். பிராணனின் மூச்சு மாதிரி.”

“என்னவோ பேசறேளே? பயமாயிருக்கே! ஒண்ணுமே புரியல்லியே? திடீர்னு என்ன நேர்ந்துவிட்டது?”

“ஏதோ மறந்து போனது. மறந்து போனதாக நான் நினைத்துக் கொண்டது நினைப்பு வந்து விட்டது.”

“என்னது? ஆபிஸில் தப்புத்தண்டா பண்ணிவிட்டேளா?”

“முக்கியமாய், ரகஸ்யமாய், பொறுப்பாய்ப் பூட்டி வைக்க வேண்டிய பேப்பர் ஒன்று வெளியில் இருக்கிறதோ என்று பயம் வந்துவிட்டது.”

“பொய் சொல்கிறீர்கள்!”

“ஆமாம்; பொய் சொல்கிறேன்..”

“இதென்ன! அடிவயிற்றில் புளியைக் கரைக்கிற விளையாட்டு! நிஜத்தைச் சொல்லுங்கோளேன்!”

“நிஜம் சொல்கிறேன்.”

“எது நிஜம்;”

“நாளைக்குப் போயாகணும். நீ என்னோடேயே வந்தாகணும், என்னோடேயே இருக்கணும்.”

“ஈசுவரா!”

“விமலா”

என்னை விட்டால் உனக்கில்லை
உன்னை விட்டால் எனக்கில்லை!

***

“ஹ்ஹஹ – உங்களைத் திடீர்னு பின்னால் பார்த்ததும் எனக்குத் திக்கெனத் தூக்கிவாரிப் போட்டது. உட்காருங் கள். மார் படபடக்கிறது. ரெண்டு நிமிஷம் . அம்மாடி! நானே இங்கில்லை. என்னென்னவோ பழசு எல்லாம் யோசனை வீட்டு நினைப்பு வந்துவிட்டதோ என்கிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லை. வீட்டில் என்ன இருக்கிறது? நான் என்ன, பச்சைக் குழந்தையா? அம்மா மடியில் படுத்துக் கொண்டு பால் குடிக்கணுமா? இல்லை. நினைத்துக் கொண் டால் போய் வரும் தூரமா? உங்கள் அருகில் இருப்பதைவிட அங்கு ஒன்றும் எனக்குக் காத்துக்கொண்டு இல்லை. இன்னும் நாம் புதுத் தம்பதிகள் தானே!

“அதுவே இல்லை; என்னவோ யோசனை. யோசனை என்று கூட இல்லை ; சில சமயம் மனம் நிரம்பியிருக்கையில் யாரோடும் பேசணும் என்று கூட இல்லாமல் மௌனமா உட் கார்ந்துண்டே யிருக்கலாம் போல் இருக்கே. அது அப்பவும் மனம் சும்மா யிருக்கிறதோ? ஏதாவது நினைப்பில் ஓடிக் கொண்டே யிருக்கிறது; அது மாதிரி.

“விமலா வந்து ஒருநாள் முழுக்க இல்லை; போய்விட் டாள். கலகல வென்று அவள் இருந்து விட்டுப் போனதி லிருந்து வீடு கொஞ்சம் வெறிச்சுனுதானிருக்கிறது. ஆனால், அதனால் என்னுடைய சந்தோஷம், சொந்த மனோலயம் தப்பிப் போய் விட்டதென்று நான் சொல்ல முடியுமா?

தீபாவளிப் புடவை மடியில் பார்த்ததைவிட உடுத்திக் கொண்ட பின்னர் தான் எனக்கு எவ்வளவு பாந்தமாயிருக் கிறதென்று தெரிகிறது. இந்தப் பாந்தம், வெறும் என் தோலின் சிவப்போடும் சதைமேல் துணி படும் அனுபவத் தோடும் மாத்திரம் இல்லை; மனசுள் புகுந்து அதன் ஆழத் தோடு இழையும் சக்தி அதற்கு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ? புடவையின் தரத்தைச் சொல்லவரவில்லை! அதை இழுத்துப் பிடித்துப் பார்த்துக் கண்டு கொண்ட இழை நயத்தைச் சொல்லவில்லை; தலைப் ஜரிகையைச் சொல்லவில்லை ; அதன் நிறம் — என் ஹ்ருதயத்தில் அதன் ஆஹாய நீலம் இன்னும் அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களும் வந்தேள்.

“ஏன் புன்முறுவல் பூக்கறேள்? நான் கவியாகிவிட்டேன் என்றா? நானா பேசறேன்? அந்த ஆகாய நீலம்னா பேசறது. அவ்வளவு தனி சாமர்த்தியம் எல்லாம் எனக்கு ஏது? எனக்கு எதுக்கு? இந்தத் தோட்டத்தில், இதோ நீங்கள் கல்மேடை யில் உட்கார்ந்திருக்கிறீர்கள்; உங்கள் காலடியில் நாய்போல் நான் உட்கார்ந்திருக்கிறேன். இதைவிடப் பதவி எனக்கு வேண்டாம். இதுவே என் ஆனந்தம். நான் என்னை இழிவு படுத்திக்கொள்ளவில்லை, என் நன்றியை எப்படி உங்களுக்குத் தெரிவிப்பது?

“உங்கள் முகம் ஏன் சுளிக்கிறது? ஓஹோ , பு .ஞ்சுது! நான் நன்றி என்கிற போதெல்லாம் உங்களுக்குப் பிடிக்க வில்லை. வேறென்ன சொல்லவேண்டும் என்கிறீர்கள்? பேச மாட்டேன் என்கிறீர்களே, சொன்னால் தானே தெரியும்? – ஊம் ஜாக்கிரதை; கையில் திருகிக்கொண்டிருக்கிறீர்களே; மறுபடியும் பொக்கப் போறது . இப்பவும் முள்ளோடுதான் பறித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பூதான் என் அடையாள பாஷை. முள்ளில்லாது இதைப் பறிப்பதில். இதன் பாஷைக்கு அர்த்தமில்லை.

“சரி, சரி; நீங்கள் சொல்லாமலே புரிஞ்சு போச்சு. நான் ஆசை, அன்பு, ரத்தத் துடிப்பு, வெறி என்கிற பாஷையைப் பேசவில்லை என்றுதானே? நான் நன்றி நன்றி’ என்பதால் வயதை ஞாபகமூட்டுகிறேன் என்கிறீர்களா? நான் ஏழை யானதால் வயது வித்தியாசத்தைப் பாராட்டாமல் உங்க ளுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன் என்று நினைக்கிறீர் களா? அப்படியில்லை. அப்படி இருந்தாலும் தான் என்ன? உங்களுக்கென்ன குறைச்சல்? உங்கள் வயதில் உங்கள் மாதிரி இப்போ யாரிருக்கிறார்கள்? ரிஷி மாதிரி இத்தனை நாளிருந்துவிட்டு, இப்பொழுது என் பக்கம் திரும்பி என்னை உங்கள் அகன்ற மௌனத்தில், உங்கள் கடைக்கண் பார்வை யில் என்னை அணைக்கும் போதெல்லாம், எனக்கு உடல் பறக்கிறது. திரௌபதியம்மன் விழாவில் நெருப்பு மிதிக்கிற மாதிரி மனம், உடல் எல்லாமே பரவசமாகின்றன. நான் கொடுத்து வைத்தவள் என்று உங்களிடம் சொல்லக் கூடாதா? நன்றி யிருப்பதால் எனக்கு மற்றதெல்லாம் இல்லை என்று அர்த்தமா?

“ஆனால் மற்றதெல்லாம் எத்தனை நாள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இதைப் பற்றிப் பேசுவதால் கேட்கிறேன், உடலில் திமிர் இருக்கும் வரை தானே பெண்கள்? எங்கள் வாழ்வெல்லாம் இரண்டு குழந்தைகள் பெறும் வரை. அப்புறம் நாங்கள் கிழவிகள் தானே! ஐந்து பெண்களைப் பெற்றுவிட்டு என் தாயார் எப்படியிருக்கிறாள் என்று நான் கண்கூடாய்ப் பார்க்கவில்லையா?

“ஆனால், நிலைத்து நிற்கக்கூடியது நன்றியும் விசுவாச மும்தான். இப்போதைக்கு எனக்கு ஒரு குறைவுமில்லை. ஆனால், எனக்கு இதுதான் பெரிதாய்ப்படுகிறது. நன்றி விசு வாசம் – என் வரையில் எனக்கும் உங்களுக்கு மிடையில், எனக்குத் தெரிந்து உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கலாகாது. என் வரையில், உங்களிடம் நான் வெட்ட வெளி; எனக்கு அதுதான் பெரிசு.

“நாம் வெளிக் கிளம்பினால், எந்தக் கலர்ப் புடவையை உடுத்திக்கொள்வது? இந்தப் புடவைக்கு இந்த ரவிக்கை சரியா?’ என்பது முதற்கொண்டு — எனக்கே தெரிந் தாலும், உங்களைக் கேட்டு கொள்வதில் தான் எனக்கு சந்தோஷம்; என் வாழ்க்கையின் நிறைவு. என் சாபம், என் விமோசனம் இரண்டுமே, எல்லாமே நீங்கள் தான்! உங்களிடம் நான் ஒன்றும் ஒளிக்கமாட்டேன்.

“உங்களிடம் ஒண்ணு சொல்லப் போறேன் ; சின்ன விஷயம்தான். உங்களிடம் சொல்லாமலிருந்தால், என் நெஞ்சில் பொத்துக்கொண்டேயிருக்கும். அதற்கு நான் இடம்விடப் போவதில்லை. அண்டாப் பாயஸத்தில் ஈ விழுந்த மாதிரி, நம்மிடையில் அந்த ஈயின் கால் அளவிற்குக் கூடச் சிறு ரகஸ்யம், என்னை உங்களிடமிருந்து ஏன் பிரிக்கணும்? நான் இடம் விடப் போவதில்லை – நீங்கள் இப்போ குறுக்கே பேசாதேயுங்கள். அப்புறம், அப்புறம்….

“விமலாவின் கணவரை ஏற்கெனவே நான் அறிவேன். மூணு வருஷங்களுக்கு முன்னால் ஏதோ பாலம் கட்டுவதை மேற்பார்வையிட எங்கள் ஊருக்குக் காம்ப் வந்திருந்தார். அந்தப் பட்டிக்காட்டில் ஹோட்டல் வசதி கிடையாது. யாராவது வந்தால், யாராவது இடம் கொடுத்துத்தான் ஆகணும். எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார்.

“காலையில் போனால் மறுபடியும் இரவு தான் வரு வார். மத்தியானச் சாப்பாடு , ஆள் வந்து எடுத்துக்கொண்டு போவான். இரவு சாப்பிட்டுவிட்டு, அப்பாவும் அவரும் திண்ணையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அப்படியே உடம்பை நீட்டி விடுவார்கள்.

“அப்பாவுக்குப் பேச ஆள் அகப்பட்டால் போதும்; தான் பிறந்தது, வளர்ந்தது, வாழ்க்கையில் சரிந்தது…. வியாதிக்காரனானது, கிராமத்தில் தானே பள்ளிக்கூட வாத்தியார். தானே போஸ்ட்மாஸ்டர், மணியக்காரருக்கு மந்திரி , ஊர்க் கட்சி வழக்குகளுக்கு மத்யஸ்தர் எல்லாமா யிருப்பது. ஐந்து பெண்களைப் பெற்று அவஸ்தைப்படுவது –

‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி, தான் ஏற்கெனவே ஆண்டி, இன்னும் ஆண்டி ஆவது எப்படி, இனி அரசனாய்த் தான் ஆகணும்; ஒரு வேளை ஆறு பெற்றால் அரசனா வேனோ, தலைக்குமேல் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?’ என்கிற ரீதியில் இது மாதிரி வாய்க்கு வந்ததெல்லாம் பேச்சாய் ஏதாவது பேசிக் கொண் டிருப்பார். அத்தனைக்கத்தனை வந்திருந்த விருந்தாளி சங்கோசி. தாகத்துக்கு ஒரு டம்ளர் தீர்த்தம் கேட்பதற்குள் முகம் மூணு தடவை மாறும்.

வீட்டில் கிணற்று ஜலம் உப்பு. குடிஜலம் ஊருக்கு ஒதுக்காகயிருக்கும் பிள்ளையார் கோவிலை ஒட்டிய குளத்தி லிருந்துதான் காலையும் மாலையும் கொண்டு வரவேண்டும். அம்மாதான் ஆயிரம் வேலையோடு முக்கி முனகியபடி உசிரோடு உடம்பைக் கட்டி இழுத்துக் கொண்டு கொண்டு வருவாள். அவளுக்கு முடியாத சமயம் தான் நான் போவேன். என்னை வெளியில் அதிகமாய் அனுப்புவதில்லை. நான் மதமதவென வளர்ந்திருந்ததாலோ, ஊர் வாயில் அடிபடாமல் இருக்கவோ.

“ஒரு நாள் மாலை குடத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன். இந்த மாதிரி சமயங்களெல்லாம் எனக்கு அவிழ்த்துவிட்ட மாதிரியிருக்கும். வழியெல்லாம் ஒரு கல் லைப் பொறுக்கி இன்னொரு கல்லின் மேல் எறிந்து கொண்டு காலடியில் சுள்ளி இருந்தால் அது வழியிலிருந்து ஒதுங்கும் வரை, வழியெல்லாம் காலால் ஏற்றிக்கொண்டு, வேடிக்கை இல்லாவிட்டாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு , – குடத் தைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டு ஏதோ ஒன்று … கையும் காலும் சும்மாயிராது.

“இவர் எதிர்க் கரையில் உட்கார்ந்திருந்தார். அன்று ஒழிவோ என்னவோ? என்னைப் பார்த்ததும் முகம் சிவந்து, வெளுத்து, சிவந்தது. அதுவே எனக்குச் சிரிப்பாய் வந்தது. எனக்கப்போ விளையாட்டுப் புத்தி அதிகம்தான்.

அவரைச் சீண்டவோ, கையின் ஓயாத சேஷ்டையோ, கரையிலிருந்து ஒரு சிறு கல்லைப் பொறுக்கித் தாழச் சுழற்றிக் குளத்தில் எறிந்தேன். அது மூணு தடவை ஜலத் தகட்டின் மேல் தத்திச் சென்று உள்விழுந்தது.

“அவர் முகத்தில் சிரிப்பு இல்லை; அதன் முன்னொளி பரவியது; ஒரு கல்லை யெடுத்து வீசினார்.

“ஒண்ணு – ரெண்டு – மூணு – நாலு – அஞ்சு – கிளுக்!

“எனக்கு ரோஸம் வந்து விட்டது. சரியான கல்லைத் தேடி என் கண்ணோட்டம் கரைமேல் பாய்ந்தது. அவரும் அவசர அவசரமாய் அவர் பக்கத்தில் தேடினார்.

-எப்படி நேர்ந்ததோ, இரண்டு கற்களும் ஒரே சமயத் தில் கிளம்பின.

– ‘ஓண்ணு – ரெண்டு – மூணு – ‘டனார்-!’ பொறிகள் பறந்தன.

“களி வெறியில் எனக்குச் சிரிப்புப் பீறிட்டது. வெற்றியுடன் எதிர்க்கரையை நோக்கினேன்.

“அவர் ஒரு கையால் மாரைப் பிடித்துக் கொண்டு கரை மேல் சாய்ந்து கிடந்தார். முகம் கடிதாசாய் வெளுத்து விட்டது. உள் வலியில் புருவங்கள் நெறிந்தன.

“குளத்தைச் சுற்றிக்கொண்டு அவரிடம் ஓடினேன். மூச்சுக்கு அவர் தவிக்கும் தவிப்பைக் கண்டு எனக்கும் துக்க மும் திகிலுமுமாய் அழுகை வந்துவிட்டது.

“என்ன உடம்பு? என்ன பண்றது?” பூச்சி பறப்பது போல், கைகளைப் பிசைந்து கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

“ஒண்ணுமில்லை.” – குரல் அடைத்துக்கொண்டு வந்தது. ஜுரத்தின் கலங்கிய சிவப்பை அவர் முகம் அஸ்த மனத்திலிருந்து வாங்கிக் கொண்டதா? அல்லது அவரிட மிருந்து தான் அந்தச் சாயம் வானத்துக்கு ஏறிற்றா?

“இருங்கோ; நான் யாரையாவது அழைச்சுண்டு வரேன்”

“வேண்டாம், வேண்டாம்.” பின்னாலிருந்து அவர் குரல் அவசரமாய்த் தடுத்தது.

“இல்லை ஒரே நிமிஷம்!”

“ஆணையாச் சொல்றேன்; போகாதே! எனக்குச் சரியாய்ப் போய்விட்டது. நானே போகிறேன்.”

“ஆணை யென்றதும் நான் திகைத்துத் திரும்பினேன். அவர் கையை ஊன்றி எழுந்து சற்றுத் தள்ளாடிய மாதிரி கரை மேட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார் .

“நான் வெகுநேரம் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன்,

“ஜலத்தகட்டில் நாங்கள் கிளப்பிய விதிர் விதிர்ப்பையும், கற்கள் விழுந்த இடத்தின் சுழிப்பையும் நான் வாங்கிக் கொண்டு விட்டேனா?

“அன்று இரவு சாப்பாட்டிற்கு அவர் வரவில்லை. அப்புறமே எங்கள் வீட்டுப் பக்கம் அவர் வரவில்லை . அவசர மாய் ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டதாய்த் தெரிய வந்தது.

“ஒரு வாரம் கழித்து, யாரோ வந்து அவர் பேரைச் சொல்லி அப்பாவிடமிருந்து ஜாதகம் மாற்றிக் கொண்டு போனார்கள். அப்புறம் ஒரு தகவலும் இல்லை. அப்பா பார்த்ததில் ஜாதகங்கள் பொருந்தவில்லை.

“இங்கு என்னைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாய்த் தானிருந்திருக்கும். பரவாயில்லை. சமாளித்துக் கொண்டு விட்டார். இன்று ஊருக்குக் கிளம்புகையில், மெனக்கெட்டு, உங்களிடம் சொல்லி என்னை வரவழைத்து எனக்கு நமஸ் கரித்ததே , அன்று குளத்தங்கரையில் தன் மனம் திறந்துவிட் டதற்கு மன்னிப்புக் கேட்கத்தானோ என்னவோ?

நான் சொல்ல வந்தது இதுதான்! சொன்ன பிறகு என் மனம் இன்னும் பெரிதான மாதிரி எனக்கு இருக்கிறது. என் னுள் ஆகாசம் புகுந்து கொண்டாற்போல், நானே இப்போது அதில்தான் மிதந்து கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொன்னதிலேயே எனக்கு நிறைவு ஏற்படுகிறது.

“நானே தான் பேசிக் கொண்டிருக்கிறேன்; எனக்கே தெரிகிறது. ஆனால், எனக்குப் பேசின மாதிரியே இல்லை . இன்னும் பேச எவ்வளவோ முடியும்.

“உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகையிலேயே, கேள்விகள் தாமே எழுகின்றன.

“எங்களிருவருக்கும் ஜாதகம் ஒத்திருந்தாலோ?

“அவர் திரும்பி வந்திருந்தாலோ?

“இப்பொழுது விமலாவின் கழுத்தில் தொங்கும் மாங்கல் யம் என் கழுத்தில் ஏறியிருந்தாலோ?

“அவர் அவ்வளவு சங்கோசியாயில்லாமல் இருந்திருந்தாலோ?

குளத்தங்கரையில் அவர் என் கையைப் பிடித்திழுத் திருந்தாலோ?

“இக்கேள்விகளுக்கு இப்போ நான் என்ன பதில் சொல்ல முடியும்? நான் என் வர்க்கத்திற்கே பேசுவதாய் வைத்துக் கொள்ளுங்கோளேன். எனக்கு வாய்க்கப்போகும் கணவன் இவன் தான் என்று நான் முன்கூட்டி எப்படியறிய முடியும்?

“ஆகையால் எனக்கு வாய்ப்பவன் எவனோ, எவனா யிருந்தாலும் சரி, அவரிடம் நன்றி, விசுவாசம், நாணயம் – இவை விட உயர்ந்து, நிலை நிற்பனவாய், நிச்சயமாய் நான் நிறை வேற்றக்கூடிய பிரமாணிக்கங்கள் எவைகளுக்கு நான் என்னை சமர்ப்பித்துக்கொள்ள முடியும்? மற்றவை தாமே வரும்; வந்தால் வரட்டும். வாராதினும் போகட்டும்! இவை தாம் எனக்கு முக்கியமாய்ப் படுகின்றன .

“நன்றி, விசுவாசம், நாணயம்.

“நான் சொல்லியாகிவிட்டது. இனி, நீங்கள் பாயஸத் தைத்தான் கொட்டுவீர்களோ, ஈனயத்தான் எடுத்தெறிவீர் களோ; உங்களிஷ்டம்! நான் சொல்லியாகிவிட்டது!”

“என்ன செய்கிறீர்கள்? மறுபடியும் பொக்கப் போகிறது. அட, விரலாலேயே முள்ளைக் கிள்ளி எறிந்து விட்டீர்களே! இல்லை, நீங்கள் சூட்ட வேண்டாம். நான் உங்கள் குழந்தையல்ல. உங்கள் மனைவி. என் கையில் கொடுங்கள். நானே சூட்டிக்கொள்கிறேன். என்னுடைய வெற்றி; என் பிரமாணிக்கங்களின் வெற்றி!

– ஆனால் உங்களுடைய ப்ரஸாதம்.

நமஸ்கரிக்கிறேன்.

இதானே கிழக்கு?

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *