கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 2,525 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சங்கர்:

பள்ளிப் பாடங்களெல்லாம் தொடங்கிவிட்டது. இனி வகுப்புக்கு ஒரு தலைவன் தேவை. வகுப்புத் தலைவன் தேர்தல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் நடந்தே தீரும். நாமும் ஓர் அபேட்சகராக நிற்க வேண்டும். இந்தப் பொல்லாத சுந்தரம் ஒருவன் இருக்கிறானே! அவன் வேறு போட்டிக்கு வந்துவிடுவான். அவனை ஈ மாதிரியல்லவா எல்லாப் பையன்களும் மொய்க்கிறார்கள்! நண்பர்களின் பக்கபலம் அவனைப் போட்டிக்கு நிற்கச் சொல்கிறது. வருஷா வருஷம் போட்டியாக வந்துவிடுகிறான்; இந்த வருஷம் எப்படியாவது அவனை அவமானப்படுத்திவிட வேண்டும். நான் என்ன கெட்டவனா? எனக்கு வகுப்புத் தலைவன் பதவியிலிருக்கத் தகுதியா இல்லை? நான் எவ்வளவு திறமையாகப் பேசினாலும் என்னை ஒருவன்கூட மதிக்க மாட்டேன் என்கிறான். மாணவர் உலகமே இப்படித்தான்! எவனாவது ஒரு பொருளைக் கொடுத்தால் அவனையே இந்தப் பாழாய்ப் போன மாணவர்கள் சுற்றுவார்கள்.கையில் ஒன்றும் இல்லாவிட்டால் ‘போடா… போ’ என்று கைவிட்டுவிடுவார்கள்.

இந்த வருஷம் லீடர் பதவி எனக்கே வந்து சேர வேண்டும். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு காரியத்தை முடிக்க வேண்டும். சுந்தரம் ஓர் ஏமாந்த சோணகிரி; அநுபவம் இல்லாதவன். புத்தகப் புழுவுக்கு அறிவு எவ்வாறு வரப் போகிறது?

ஆகா! ஒரு நல்ல யோசனை! அவர்களிடம் சென்று, ‘ஐஸ் வாங்கித் தருகிறேன், அது வாங்கித் தருகிறேன். எனக்கு வோட் செய்யுங்கள் என்று ஆசை காட்டினால் மறுக்கவா போகிறார்கள்? சரி, நண்பன் சோமுவிடம் போய் இந்த யோசனையைக் கூறிவிட்டு வருகிறேன்.

சுந்தரம்:

நாளைக்கு வகுப்புத் தலைவன் தேர்தல் நடக்கப் போகிறது. வருஷந்தோறும் இந்த லீடர் பதவி எனக்கே வந்து சேருகிறது. அது என்ன சாதாரண வேலையா? வகுப்பைக் கவனிப்பதிலேயே பாடங்களைக் கூடக் கவனிக்க முடிவதில்லை. எனக்கு கடுகளவுகூடப் பிரியமில்லை. என்னவோ! வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னிடம் அவ்வளவு இனிமையாகப் பேசி என்னையே தலைவனாக்கக் கருதியுள்ளனர். நான் என்ன அவ்வளவு நல்லவனா? அவர்களுக்கெல்லாம் என்ன கொடுக்கிறேன்? ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆசிரியர்களும் என்னிடம் பிரியமாகத்தானிருக்கிறார்கள். வகுப்பிலுள்ள அத்தனை பேரும் என்னிடம் அன்பாகப் பழகும்போது இந்தச் சங்கரன் மட்டும் ஏன் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன் என்றிருக்கிறான்?

நான் அவனுக்கு என்ன தீங்கு செய்துவிட்டேன்? ஓகோ! இந்த லீடர் தேர்தல் தான் காரணமாயிருக்க வேண்டும். அவனும் எனக்குப் போட்டியாக வருஷா வருஷம் தேர்தலில் கலந்து கொண்டுதானிருக்கிறான்.ஆனால் ஏமாற்றந்தான் அவனை அணுகுகிறது. நான் மானீட்டராக விரும்பவில்லை. என் சிநேகிதர்களெல்லாம் என்னைப் போட்டியில் நிற்க வேண்டும் என்று தூண்டிவிட்டனர்.நானும் சம்மதித்துவிட்டேன். இந்த யோசனை முன்பே இருந்தால் சங்கரனையே தேர்தலில் புகுத்தி நான் விலகி இருப்பேன். என் மேல் அவனுக்குள்ள பொறாமையும் நீங்கியிருக்கும். சங்கரன் மட்டும் என்னிடம் பேசாமலிருப்பது எனக்கு என்னவோ போலிருக்கிறது. அவனுடைய மனத்திலே நான் கெட்டவன் என்று இடம் பெற்று விட்டேன்! சரி, என்றைக்காவது அவன் மனமாற்ற மடையாமலா போவான்? நாளைத் தேர்தலில் சங்கரனே தேர்ந்தெடுக்கப் பட்டால் எனக்கு மிகவும் நல்லது.நடப்பது நடக்கட்டும்.

சுசீலா:

மாணவிகளுக்கு ஒரு ஸ்தானம் வேண்டும் என்பதற்காக என் தோழிகளெல்லாம் என்னை லீடர் பதவிக்குப் போட்டி போடுமாறு வற்புறுத்தியதின் பேரில் நானும் ஒப்புக் கொண்டுவிட்டேன். இத்தனை மாணவர்களுள்ள வகுப்பில்

என்ககு ஒரு போதும் வெற்றி என்பது கிட்டாது. பெண்களும் தலையிட வேண்டும் என்பதற்காக வேண்டா வெறுப்புடன் கலந்து கொண்டிருக்கிறேன். மாணவர்களை அடக்குவது என்பது மாணவியால் முடியுமா? அப்பப்பா! முடியாத காரியம். நினைத்தாலே பயமாயிருக்கிறது. அவர்களின் கேலிக்கல்லவா ஆளாக வேண்டும்! சுந்தரம் இருக்கிறான்; அவனைப் போன்ற நல்ல மாணவன் வகுப்பிலேயே கிடையாது. பொறுமையும் பொறுப்பும் உள்ளவன்.தற்புகழ்ச்சியற்றவன்.வழக்கம் போல் இந்த ஆண்டும் அவனே தான் தலைவனாக இருக்க வேண்டும். போன வருஷங்கூட இன்ஸ்பெக்டர் வகுப்பைப் பார்வையிட்டபோது, “இதைப் போன்ற ஒரு நல்ல வகுப்பை நான் பார்த்ததே இல்லை; பையன்களும் பெண்களும் நிரம்பச் சமர்த்து” என்றெல்லாம் புகழ்ந்தாரே! அதற்கெல்லாம் யார் காரணம்? எல்லாம் சுந்தரத்தின் முயற்சியே அல்லவா?

சங்கர் வேறு போட்டிக்கு நிற்பான். அவன் பெரிய பொறாமைக்காரன், எப்பொழுது பார்த்தாலும் முகம் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலவே இருக்கிறது. அவனிடமிருந்து ஒரு நல்ல வார்த்தைகூட வரவழைக்க முடியவில்லையே! அவன் மட்டும் லீடராகிவிட்டால் வகுப்பே தலைகீழாகத்தானிருக்கும். பொறுப்பில்லா அவனா வெற்றி பெறப் போகிறான்? ஒரு போதும் இல்லை! லீடருக்கேற்ற தகுதியுள்ளவன் சுந்தரம்தான். நானும் என் வோட்டைக்கூடச் சுந்தரத்திற்கே அளிக்கப் போகிறேன். அவன் நடத்தைகளெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.எனக்கு லீடர் பட்டத்தை தந்தாலும் தேவையில்லை.உங்களுக்கு எல்லாம் தெரியப்போகிறது. பார்த்துக் கொள்ளலாம்.

சங்கர்:

என் திட்டத்தை என் நண்பன் சோமுவும் ஆதரித்துவிட்டான். நானும் அவனும் இன்றே எல்லா பையன்களிடமும் மனக் கருத்தை வெளியிட்டு ஆசை காட்டினோம். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். ஐஸ்கிரீம் என்றதும் வாயைப் பிளந்தார்கள். லீடர் பதவி மட்டும் எனக்கு வரட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளுகிறேன். என்னுடைய உள்ளத்தை எல்லா மாணவர்களும் இப்பொழுதுதான் அறிந்திருக்கிறார்கள். நான் நல்லவன் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. இனி அவர்கள் சுந்தரத்தைக் கூட அணுக மாட்டார்கள். எனவே நானே லீடர் என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம். சுந்தரத்தின் ஆணவமும் அலட்சியமும் இன்று மாலை தேர்தல் முடிவு தெரிந்தவுடன் பறக்கப் போகிறது. நான் வகுப்புத் தலைவனாகிவிட்டால் சுந்தரம் பெட்டிப்பாம்புதான். மாலை வந்துவிட்டது. ‘வோட்’ செய்வதற்குரிய ஏற்பாடும் முடிந்துவிட்டது. எல்லோரிடமும் ஆன மட்டும் எனக்கே ‘வோட் போடுமாறு கூறியிருக்கிறேன். எல்லா மாணவ மாணவிகளும் தங்கள் வாக்கை அளித்துவிட்டார்கள். முடிவுதான் பாக்கி. அதோ, ஆசிரியர் சிரித்துக் கொண்டே வருகிறாரே! என்ன முடிவோ தெரியவில்லை. ஏதோ சொல்ல வாய் எடுக்கிறாரே! ஆசிரியர் பேசுகிறார்:

“மாணவர்களே! மாணவிகளே! இவ்வகுப்பின் மானீட்டர் தேர்தலின் முடிவை அறிவிக்கப் போகிறேன். வழக்கம் போல் சுந்தரமே இந்த வருஷமும் அதிக வாக்கைப் பெற்று அமோக வெற்றியை அடைந்துள்ளான். மொத்த வாக்கு 40. சுந்தரத்துக்கு 29; சுசீலாவிற்கு 9, சங்கரனுக்கு 2. சுந்தரத்தின் அமோக வெற்றியைப் பாராட்டுகிறேன். அவன் எப்பொழுதும் போல் இந்த வருஷமும் லீடர் பதவியை மேற்கொண்டு வகுப்பை உயர்த்தும் பணியில் ஈடுபடுவான். மானீட்டர் சுந்தரம் அவனது வெற்றி குறித்துத் தற்பொழுது சில வார்த்தைகள் பேசுவான்.”

இதைக் கேட்ட எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இப்படி அவமானப்படுவேன் என்று நான் கனவிலும் கருதவில்லை. தலையைக் கீழே குனிந்து கொண்டேன்.

சுந்தரம்:

“கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்” என்பார்களே, அதுபோலல்லவா ஆகிவிட்டது! எனக்கே லீடர் பட்டம் கிடைத்துவிட்டது. இது சங்கரனுக்குப் போயிருக்கக் கூடாதா? சரி, ஆசிரியர் ஓரிரு வார்த்தை பேசச் சொன்னாரே! பேசுவோம்; “மாணவத் தோழர்களே! தோழிகளே! இவ்வாண்டு வகுப்புத் தலைவன் தேர்தலில் எனக்குக் கிடைத்த வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன்; ஆனால் சங்கரன் லீடராக வர எவ்வளவோ முயற்சிகள் எடுத்ததை அறிந்த எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் மானீட்டர் பதவியில் இருந்து அலுத்துவிட்டது. எனவே தேர்தலுக்காக வேண்டி உங்கள் சார்பாகவும் நம் ஆசிரியர் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.”

அப்பா…! இப்பொழுது தான் என் மனம் நிம்மதியாக இருக்கிறது. சங்கரனுக்கு என் மேலிருந்த பகை இனியாவது விலகாதா? ஆசிரியரும் மற்றவர்களும் என் கூற்றுக்கு என்ன சொல்லப் போகிறார்களோ!

சங்கர்:

என் மதிமயக்கம் தீர்ந்துவிட்டது. இவ்வளவு நல்ல குணம் படைத்த சுந்தரத்தையா இவ்வாறு நினைத்தேன்? என் அறிவீனத்தால் என்னையே நான் மாசுபடுத்திக் கொண்டேன்! சுந்தரத்தின் தன்மைகளெல்லாம் இப்பொழு தல்லவா தெரிகிறது! தன் பதவியையே அலட்சியம் செய்து எனக்குத் தரும் சுந்தரத்தை என்னவென்பது? எனக்கு இந்த மானீட்டர் உத்தியோகமே தேவையில்லை. மாணவர்களும் ஆசிரியரும் குழப்பத்தோடு இருக்கிறார்கள். என் முடிவை இதோ அவர்களிடம் வெளியிடுகிறேன்:

“ஆசிரியரவர்களே! மாணவத் தோழர்களே! தோழிகளே! முதலில் நான் என் தவறுதலுக்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். சுந்தரத்தின் மேலிருந்தது அசூயையால் நான் இவ்வளவு நாளாக அவனிடம் பேசுவது கிடையாது. என்னை ஒருவரும் அணுகுவதில்லை; அதனால் என் சினம் எல்லை மீறியது. நான் லீடராக ஆவதற்கு என்ன என்னவோ செய்தேன். ஐஸ்கிரீம், அது இது எல்லாம் வாங்கித் தருகிறேன் எனக்கு மட்டும் வோட் அளியுங்கள்’ என்று மாணவர்களிடம் ஆசை காட்டினேன்.

அவர்களும் பகட்டுக் காட்டினர். அவர்கள் உள்ளம் சுந்தரத்தையே நாடியிருந்தன. அதன் பொருட்டு, சுந்தரத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது. என் மதியீனத்தால் சுந்தரத்தை மடையனென்றே மதித்து விட்டேன். அவன் அறிவும் அன்பும் பண்பும் ஆரிருள் அடர்ந்த அகத்தைத் தெளிவு படுத்தி என்னை உயர்ந்தோனாக்கிவிட்டது. சுந்தரத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எனவே இந்த வருடம் இன்றையத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரமே இனி லீடர் என்பதை உங்களுக்கு மீண்டும் அறிவுறுத்துகிறேன்.”

அதற்கு மேல் என்னால் ஒன்னும் பேச முடியவில்லை. சுந்தரத்திடம் தனியே சென்று மன்னிப்புக் கோர விரும்பினேன். என் இடத்தில் அமர்ந்துவிட்டேன்.

சுசீலா:

நான் நினைத்தபடியே தேர்தல் முடிந்துவிட்டது. சுந்தரம் சிறுவனாக இருந்தாலும் சமர்த்தன் தான். தன் பதவியையே தியாகம் செய்து சங்கரனின் கெட்ட மனத்தைத் திருத்திய சுந்தரம் உத்தமந்தான். நல்லவனுக்குத்தானே நல்லது கிடைக்கும்! சுந்தரத்தால் சங்கராவது திருந்தினானே! சுந்தரத்தின் தியாகமும் அன்புமே அவனை மீண்டும் தலைவனாக்கி விட்டன. இனி வகுப்பில் இன்பம் நிலவியிருக்கும். சுந்தரம்தான் இனி வகுப்புத் தலைவன்; சுந்தரத்திற்கு ஜே!

– 1955 – முதல் சிறுகதை – கண்ணன் இதழில் இடம் பெற்றது, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *