சம்பாத்தியம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 3,957 
 

சென்னையில் நண்பனின் மகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பார்ப்போம், சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன்.

சின்னக் குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து, படித்து… திருமணத்திற்குப் பிறகு தந்தையின் சாவில் சந்தித்ததோடு சரி.

அதன் பிறகு இதோ…

கதிரவன்… சென்னை தியாகராய நகரில் சாலையோரம் நடந்து செல்ல… அருகில் ஊர்ந்து உரசியபடி கார் ஒன்று வந்து நிற்க… அதன் முன் பக்க கண்ணாடி கதவு திறந்து எட்டிப் பார்த்து..

“அங்கிள் ! ‘’ இளம் பெண்ணின் குரல் அழைத்தது.

பார்த்த கதிரவனுக்கு வியப்பு, திகைப்பு.

“ஏ…ஏ…. மஞ்சு…!” என்றார்

‘’ நானேதான். எங்கே போறீங்க…?”

“சும்மா நடைப்பயிற்சி”

“வண்டியில ஏறுங்க. பக்கத்துலதான் என் வீடு..”

“அப்படியா..?” என்று இவர் ஆச்சரியப்பட…

அவள் அருகில் அமர்ந்திருந்த இரண்டு வயது ஆண் குழந்தை இவரைத் துறுதுறுவென்று பார்த்தான்.

அவர்களுக்கருகில் ஓட்டுநர் இருக்கையில் மஞ்சுவின் கணவன் விதார்த்.

“ஏறுங்க சார் ..”- அவனும் புன்னகையுடன் அழைத்தான்.

மறுத்து தவிர்க்க முடியாத சந்திப்பு. விலக இயலாத அழைப்பு !!

கதிரவன் ஏறினார்.

சொகுசு கார் நகர்ந்தது. போக்குவரத்து நெருக்கடியில் கலந்தது.

கதிரவனுக்கும், மஞ்சுவின் தந்தை கணேசனுக்கும் ஒரே ஊர். பால்ய சினேகிதம். பள்ளி, கல்லூரித் தோழர்கள், மாணவர்கள். அரசு பணியான வேலை விவகாரத்தில் மட்டும் கொஞ்சம் ஏறத்தாழ்வேத் தவிர உயிர் நண்பர்கள்.

கணேசன் பெரிய வேலையில் அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றார். அதற்குத் தகுந்த மாதிரி பணம் சேரல், விளைநிலம், வீடு, மனைகள் என்று ஏகப்பட்ட வசதி.

கணேசன் – சந்திரவதனா தம்பதிகளுக்கு ஒரே பெண் மஞ்சு. ஆசை, ஆசையாய்ப் பெற்று செல்லமாக வளர்க்கப்பட்டவள். பொறியியல் படிப்பு. இவர்களை விட அதிக வசதி கொண்ட சென்னை மாப்பிள்ளைக்கு மனைவியானாள்..

இங்கே கணவன் மனைவிக்கு குதூகலம், மன நிறைவு.

ஆனால் மறுவாரம்……..

கணேசன் மாரடைப்பால் இறந்ததுதான் யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு.

விதி வலியது.! மரணம் தவிர்க்க முடியாதது..!! . என்ன செய்ய முடியும்..?

மஞ்சு வந்து பிறந்த வீட்டில் பெற்ற தகப்பனுக்குக் கொள்ளி வைத்து, காரியங்கள் முடித்துவிட்டு அம்மாவைத் தனித்து விட மனமின்றி வீட்டைப் பூட்டி, நிலபுலன்களை உறவினர்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு தன்னோடு அழைத்துச் சென்றாள்.

அதன் பின் கதிரேசனுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. துண்டிப்பு.

இதோ…. திடீர் சந்திப்பு. !!

கார் ஒரு வளைவில் திரும்பி… ஐந்து நிமிடங்களில் பத்து அடுக்கு மாடி குடியிருப்புக்குள் நுழைந்தது.

மின் தூக்கியில் ஏற… முதல் தளத்தில் வீடு.

உள்ளே பணக்காரத்தனம். ஆடம்பரத்தின் அடையாளங்கள். சொகுசின் பிரதிபலிப்புகள். !!

“எப்படி இருக்கீங்க.. அங்கிள்..?” – மஞ்சு சோபாவில் அமர்ந்ததும் எதிரில் இருந்த கதிரவனைக் கேட்டாள். அருகில் அவள் கணவன் , குழந்தை.

“நல்லா இருக்கேன்ம்மா..”

“வீட்ல நலமா…?”

“எல்லாரும் நலம். நீ எப்படி இருக்கே..?”

“பார்த்தாத் தெரியல..? ரொம்ப நல்லா இருக்கேன். !” பொலிவாய்ச் சொன்னாள்

“மாப்பிள்ளை இன்னும் அதே தகவல் தொழில் நுட்ப கம்பெனியில்தானே இருக்கார்..? !”

“இல்லே சார் . நாங்க இப்போ அமெரிக்காவுல இருக்கோம் !” – விதார்த்.

“என்ன அமெரிக்காவிலா..?” கதிரவன் துணுக்குற்றார்.

“ஆமாம் அங்கிள். உங்களுக்குத் தெரியாதா..?” – மஞ்சு.

“தெரியாது !”

“மன்னிக்கனும். தங்களுக்குத் தகவல் சொல்ல மறந்துட்டேன். !”

“ப… பரவாயில்லே.. மஞ்சு .”

“அப்பா இறந்து போன மறுமாதமே.. அதிர்ஷ்டம் எனக்கும் இவருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைச்சுது. போனோம். அதுக்கு மறுவருடம் இவர் அம்மா அப்பா இறந்தாங்க. வந்து காரியங்க முடிச்சுட்டு சொத்தை எல்லாம் வித்து வங்கியில் ‘ டெபாசிட் ‘ செய்துட்டு அங்கேயே நிரந்தர குடியுரிமையாகிட்டோம். ‘’ என்றாள்.

“அப்படியா..? !” கதிரவன் வாய் பிளந்தார்.

“சென்னையில் இந்த கட்டிடம் மட்டும்தான் எங்கள் அசையா சொத்து. இதில் வரும் வாடகை மாதா மாதம் எங்கள் வங்கி கணக்கிற்குச் செல்லும். நாங்கள் வருடம் ஒரு முறை வந்து ஒரு மாதம் விடுப்பில் இருந்து செல்வோம்.. அது போல இந்த வருசமும் வந்திருக்கோம்..”விலாவாரியாகச் சொல்லி முடித்தாள் மஞ்சு.

“அப்படியா..? எவ்வளவு நிகழ்வுகள்.. !” ஆச்சரியப்பட்ட கதிரவன்…

“அம்மா எங்கே..?” கேட்டார்.

“இங்கேதான் இருக்காங்க..”

“இங்கேன்னா… உள்ளேயா..?”

“இல்லே அங்கிள். முதியோர் காப்பகத்தில் !”

கதிரவன் அதிர்ந்தார்.

“என்னம்மா சொல்றே..?!” அந்த அதிர்விலேயேக் கேட்டார்.

“ஆமாம் அங்கிள். அம்மாவை இங்கே விடும் நிர்பந்தம்.! எங்களுக்கு மட்டுமே அங்கே குடியுரிமை. அம்மா இரு ப்பது பேருக்குத்தான் முதியோர் காப்பகமே தவிர அது முதியோர் காப்பகம் இல் லை. எல்லா வசதி களும் கொண்ட தனித்தனி குடில்கள்.. அங்கே இருப்பவர்கள் எல்லாம் முதியோர் இல்லே. எல்லாரும் 40, 45 வயது உள்ள ஆண், பெண்கள். எல்லாருமே எங்களைப் போல் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் அம்மா, அப்பாக்கள். அடுத்து தனித்து விடப்பட்ட முதியோர்கள். அருமையான இடம். மருத்துவ வசதியும் உண்டு. படுக்கைதான் தனியேத் தவிர…பேசிப் பழக…அக்கம் பக்கம் 50 குடில்கள். அம்மா எங்களோடு தினம் வாட்ஸப்பில் பேசுவாங்க. பேரனோடு கொஞ்சுவாங்க…”என்றாள்.

“நாங்க இங்கே விடுப்பில் வந்ததும் அவங்களை வாரம் ஒரு முறை போய் பார்த்து வருவோம். அப்படித்தான் இப்போ பார்த்து வந்தோம். இடையில் உங்களைச் சந்திச்சோம். !” விதார்த் தன் பங்கிற்குச் சொன்னான்.

கதிரவனுக்கு அவர்கள் சொன்னதெல்லாம் காதில் விழுந்தாலும் மனதில் எதுவும் பதியவில்லை. மாறாய்….

‘ வயதான காலத்தில பெற்றவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு… வெளிநாட்டில் வாசம், சம்பாத்தியம்., சொகுசு வாழ்க்கை, என்ன கொடுமை இது..? ‘ ஜீரணிக்க முடியவில்லை.

ஏழை.. தன் பணத்தேவை, குடும்ப கஷ்டம், முன்னேற்றத்திற்காக பெற்ற அம்மா, அப்பா, மனைவி மக்கள், சொந்த பந்தங்களை உதறி வெளிநாடுகளில் போய் வேலை, சம்பாத்தியம், அதனால் கஷ்டம் என்பது எல்லாம் சரி. ஓரளவிற்கு சரி. ஏற்றுக் கொள்ளக்கூடியது.

ஆனால் இந்த மஞ்சு விவகாரம்…?

பிறந்த, புகுந்த வீட்டு சொத்துக்களே இவர்கள் தலை முறைக்கு உட்கார்ந்து தின்று அடுத்தத் தலைமுறைக்கும் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு உள்ளது. இதையும் தாண்டி தனக்கு ஒரு வேலை வேண்டும் என்றால் இங்கேயே கிடைக்கும் வேலையில் இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு தொழில் தொடங்கி நாலு பேர்களுக்கு வேலை கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். இப்படி பெற்றவர்களுடன் குடும்பமாக இருந்து, அவர்களைப் பேணி… அழகு வாழ்க்கை நடத்தலாம்.

அதை விடுத்து… தங்கக்கூண்டுக்குள் வைத்து கிளியை வளர்ப்பது போல் ஒற்றையான பெற்றத்தாயை தனிமையில் வைத்து தவிக்க விட்டு, தாங்கள் அமெரிக்காவிலும் அந்தஸ்த்திலும் வாழ்வதென்பது எந்த முறையில் சேர்த்தி, நியாயம்…?!

இன்றைய தலைமுறையில் இப்படி எத்தனையோ மக்கள் இவ்வாறு வாழ்கிறார்கள். பணம், புகழ், பெருமைக்கெல்லாம் அடிமையாய்க் கிடக்கிறார்கள். இது என்ன ஒரு மடத்தனம்..?…

“என்ன அங்கிள் பலத்த யோசனை..?” மஞ்சு கலைத்தாள்.

“ஓ…. ஒண்ணுமில்லே…”; – கதிரவனுக்குச் சொல்ல முடியாத தயக்கம், தடுமாற்றம்.

“இல்லே. எதையோ மறைக்கிறீங்க…?” மஞ்சு விடவில்லை.

“என் மனசுல தோன்றிய உண்மையைச் சொன்னால் உனக்கு என்ன உங்க ரெண்டு பேருக்குமே வலிக்கும். !” என்றார்.

“பரவாயில்லே. சொல்லுங்க…?”

“பெத்தவங்களை உதறித் தள்ளிட்டு வெளிநாட்டு வாழ்க்கை வாழறது… மன்னிக்க முடியாத குற்றம்.!!”

“அங்கிள் !!” மஞ்சு அலற…. இருவருமே கதிரவனைத் துணுக்குற்றுப் பார்த்தார்கள்.

“தெளிவாவே கேட்கிறேன். உங்களுக்கு ஏன் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பாத்தியம்..? அதிலும் பெத்தத் தாயைத் தனியே தவிக்க விட்டுவிட்டு அங்கே சம்பாதிக்கிற அளவுக்கு உங்களுக்கு என்ன கஷ்டம். ?”

”……………………………….”

“நீங்கள் மட்டுமில்லே. உங்களைப் போல் பலர் வெளிநாட்டு வாழ்க்கைக்கும், வெற்று காகிதங்கள் சேர்க்கவும் ஆசைப்பட்டு இப்படி பண்றீங்க…?”

”…………………………….”

“என்ன புரியலையா…? தேவைக்கு அதிகமாய், புழக்கத்திற்கு வராமல் வங்கியில் கிடக்கும் பணமெல்லாம் வெற்றுக் காகிதங்கள் இல்லாமல் வேறென்ன.?”

”………………………………..”

“மஞ்சு ! வயசான காலத்துல பெத்தவங்களை பக்கத்தில் வைத்து நல்லது கெட்டது, உதவி , ஒத்தாசைகள் செய்து, பராமரித்து கவனிக்காமல்…. அவர்களை இங்கே தனியே தவிக்க விட்டு, வருசம் ஒருமுறை வந்து பெயரளவிற்குப் பார்த்து, செத்தா கொள்ளி போட்டு, திதி திவசமெல்லாம் செய்யிறது எல்லாம் எந்த விதத்தில் சேர்த்தி…? இதனாலெல்லாம் அவுங்க வாழ்க்கை நிறைவாகுமா, ஆத்மா சாந்தியடையுமா..? கண்டிப்பா அடையாது ! அடைய வாய்ப்பே இல்லை.!” கண்டிப்புடன் சொல்லி நிறுத்தினார்.”

மஞ்சு, விதார்த் ஆடாமல் அசையாமல் ஒரு நிமிடம் இருந்தார்கள்.

சில நொடிகளில்…..

“நீங்க நினைக்கிறது தப்பு. அவுங்க ஆத்மா சாந்தி அடையும்..!” என்றாள் மஞ்சு.

கதிரவன் அவள் கண்களை ஊடுருவி ஆழமாகப் பார்த்தார்..

“அங்கிள்..! நீங்க வளர்ந்து, வாழ்ந்து வந்த காலம் வேற. நாங்க வாழும் காலம் வேற. நீங்க உங்க காலத்தை மனசுல வச்சு பேசுறீங்க. நாங்க எங்க காலத்தை மனசுல வைச்சு நடக்கிறோம். அன்னைக்குக் கூட்டுக் குடும்பம். இன்னைக்குத் தனிக்குடும்பம்.

அன்னைக்குப் பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம். பிள்ளைகள், முதியோரான பெற்றவர்களை காப்பாற்ற வேண்டிய அத்தியாவசியம். அதனால் அவர்கள் இந்த நாடு, நகரம் என்று குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வேண்டிய கட்டாயம்.

இன்றைய கால மாற்றம் அப்படி இல்லே. பிறந்த குழந்தையையே காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குப் போகலாம். பிள்ளைகள் பெற்றவர்களைத் தாங்க வேண்டிய அவசியமே இல்லே. முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டு பறந்து எங்கிருந்தும் வாழலாம்..

அப் புறம்… இந்த திதி, திவசமெல்லாம் நம்ம பண்பாடு கலாச்சாரம் பெயரில் இறந்த உயிர்களுக்காகச் செய்யும் சடங்கு, சமாச்சார மேத் தவிர… ஆத்மாவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லே.” சொன்னாள்.

மஞ்சுவின் இந்த தெளிவான பேச்சு கதிரவனுக்க கே வியப்பு திகைப்பாக இருந்தது. இருந்தாலும் மனசு ஏற்கவில்லை.

“நீ சொல்றதெல்லாம் சரி மஞ்சு. ஆனால் அதுவே சரி கிடையாது. சடங்கு, சம்பிரதாயங்களை விடு. இந்த அன்பு, அரவணைப்பு, பந்த பாசங்கள் என்பதெல்லாம் தூக்கி கடாசிவிட்டுப். போகும் சமாச்சாரமில்லே. ஆத்மார்த்தமானது , உணர்வு, உளப்பூர்வமானது.

இதை அலட்சியப்படுத்துவது, அப்புறப்படுத்துவது, அகற்றுவதென்பது உயிர் வதையானது. பெற்றவர்களை உடன் வைத்து பராமரிப்பதென்பது உன்னை பெற்று, வளர்த்து, அரவணைத்து, ஆதரவு காட்டி அன்பு காட்டி தூக்கி எடுத்து கொஞ்சிய அம்மா அப்பா க்களுக்குப் பிள்ளைகள் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் அது. வாழ்க்கை ஒரு வட்டம். எல்லோரும் தோன்றிய படி மறையும் சுற்றுவட்டப்பாதை.

பெற்றவர்களை என்னை விட தாண்டி பராமரிக்க காப்பகத்தில் விட்டேன். பாதுகாக்க ஆள் வைத்திருக்கிறேன் என்கின்றாயே…அவர்கள் உன் வாரிசா.. இவர்கள் வாரிசா..? பெற்றவர்களின் சொத்து பத்துகளெல்லாம் உனக்குச் சொந்தமா இவர்களுக்குச் சொந்தமா..? அவைகளை விட்டுக் கொடுக்க உனக்கு மனசு வருமா..? ஏற்குமா..? ஏற்காவிட்டாலும் நீ அவர்களுக்கு கொடுப் பாயா..? எழுதி வைப் பாயா..?” கதிரவன் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு நிறுத்தினார்.

மஞ்சு, விதார்த் துக்கு இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியவில்லை. கம்மென்றிருந்தார்கள்

வயசு, வாழ்க்கை… இன்றைக்கு உங்களின் அம்மா, அப்பா வலி வருத்தங்கள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். விதைத்தைத்தான் எல்லோரும் அறுத்திருக்கிறார்கள். நாளைக்கு உங்கள் பிள்ளைகள் உங்களை இப்படி ஒதுக்கி உதறித்தள்ளும்போது இவர்களின் வலி வருத்தங்கள் புரியும்.

வாழ்கைக்குப் பணம் முக்கியம் என்பது உண்மை. ஆனால் பணமே வாழ்க்கை இல்லை என்பதே சத்தியம்.!!

சம்பாத்தியம் என்பது பணம் மட்டுமல்ல உறவுகளில் கொடுக்கல் வாங்கல்களும் சம்பாத்தியமே.. நல்லதைக் கொடுத்தால் நல்லதைப் பெறலாம். வர்றேன். !!” சொல்லி விறுக்கென்று எழுந்து வெளியே நடந்தார் கதிரேசன்.

அவர் செல்வதையே கணவனும், மனைவியும் ஆடாமல் அசையாமல் பார்த்தபடி இருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *