செருக்கை இழந்த புலவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 25, 2023
பார்வையிட்டோர்: 2,409 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழ நாட்டில் பிறந்து வளர்ந்த புலவர் அவர். தமிழ்ப் புலமையில் சிறந்தவர் ஆயினும் இறுமாப்பு மிகுதியாக உள்ளவர். தம்முடைய புலமைத் திறத்துக்கு யாரும் ஈடு நிற்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது அவர் கருத்து மற்றப் புலவர்களைக் கண்டால் அவர்களைக் கேள்விகள் கேட்டு, அவர்கள் பாடல்களில் குற்றங்கள் கண்டும் அவமானப் படுத்துவார் . நல்லவர்கள் அவரைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள்.

அந்தப் புலவர் பாண்டிய நாட்டுக்கும் சென்று தம்முடைய புலமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். இதுவரையில் அவர் மதுரைக் குச் சென்றதில்லை. ஆனால் அங்கே புலவர்கள் பலர் இருப்பது அவருக்குத் தெரியும்.

Sekkai

மதுரை மா நகருக்கு அவர் சென்றார் . அங்குள்ள புலவர்கள் சோழ நாட்டுப் புலவரை அன்போடு வரவேற்றார்கள். அவரோடு மகிழ்ந்து பேசிச் சோழ நாட்டுச் செய்திகளை விசாரித்து அறிந்து கொண்டார்கள். சோழ நாட்டுப் புலவர் பேசும் போதே அந்தப் பேச்சில் அகங்காரம் குமிழி யிட்டது. பாண்டியனுடைய அவைகளப் புலவர்கள் அதைக் கண்டு விட்டார்கள். அவர் தம்முடைய பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனார். சோழ நாட்டின் சிறப்புக்களைச் சொல்ல மறந்தார். சோழனைப் பற்றிப் பேசவும் மறந்தார்.

மதுரை புலவர்களில் தலைவராகிய ஒருவருக்கு அவரை எப்படியாவது தலை குனியச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ‘படித்த வனாம்! தமிழ்ப் புலவனாம்! சிறிதாவது பணிவு இருக்கிறதா? தமிழின் எல்லையைக் கண்டவர் யா ? இவன் அகத்தியரின் அவதாரமாகத் தன்னை நினைத்துப் பேசுகிறானே!’ என்று அவரிடம் அவமதிப்பே உண்டாயிற்று.

“அதெல்லாம் சரி புலவரே. நாம் இப்போது ஏதாவது பாடல் சொல்லலாமே. உங்கள் சோழ மன்னனுடைய புகழை வைத்து ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்றார் புலவர் தலைவர் .

சோழ நாட்டுப் புலவர் தக்க சமயம் வந்தது என்று கருதிப் பாடலைச் சொல்ல ஆரம்பித்தார். சோழனுடைய வீரத்தைத் தெரிவிக்கும் ஒரு பாடலைப் பாடினார்.

“சோழன் மகா வீரன் போரில் புறம் கொடாமல் வெல்பவன். ஆகவே அவன் கவசம் அணியும் போது முதுகுக்கு அணிவதில்லை. யாருக்கும் புறமுதுகு காட்டாத நிலையில் அதற்குப் பாதுகாப்பு எதற்கு?” என்ற பொருளை வைத்து. பாட்டின் முதல் இரண்டு அடிகளைப் பாடினார் புலவர். பின் இரண்டு அடிகளிலே இதற்கு உரிய காரணத்தைச் சொல்லாம் என்று நினைத்திருந்தார்.

இரண்டு அடிகளைப் பாடியவுடன் மதுரைப் புலவர் கையைக் காட்டினார்.

“புலவரே நிறுத்துங்கள். இந்தப் பாடல் யாருடைய புகழைச் சொல்வது?” என்று கேட்டார்.

“ஏன்? இதுகூடத் தெரியவில்லையா? எங்கள் சோழ மன்னனுடைய புகழைத்தான் சொல்கிறது. அவன் புறமுதுகு காட்டாத பெரிய வீரன் என்பதை விளக்குகிறது” என்றார் சோழ நாட்டார்.

“இந்த இரண்டு அடிகளில் அப்படி இல்லையே! உங்களுடைய சோழ மன்னன் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை என்பதுதானே இருக்கிறது” என்று கேட்டார் புலவர் தலைவர்.

“ஆம். அதற்குக் காரணம் அவன் புறமுதுகு காட்டாத வீரன் அன்றோ? இந்த இரண்டு அடிகளிலிருந்தே அதை ஊகித்துக் கொள்ளலாமே. பாட்டு முழுதும் சொல்வதற்கு முன்பே இந்தப் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறதே” என்றார் சோழ நாட்டுப் புலவர்.

“இல்லை இல்லை! இந்த இரண்டு அடிகளிலே சோழன் புகழ் வெளிப்படவில்லை. சோழனுக்கு இகழ்ச்சியாகக் கூடப் பாட்டை முடிக்கலாம்” என்றார் மதுரைப் புலவர்.

இப்படி அந்தப் புலவர் சொன்னதும் சோழ நாட்டுப் புலவருக்குச் சினம் மூண்டது. “பாட்டில் வெளிப்படையாகச் சோழனது பெருமை விளங்குகிறது. நீங்கள் காக்கை வெள்ளை என்பது போலப் பேசுகிறீர்களே!” என்றார்.

“இதே இரண்டடிகளை வைத்துக் கொண்டு உங்கள் சோழ மன்னனை இகழ்ந்தும், எங்கள் பாண்டிய மன்னனைப் புகழ்ந்தும் பின் இரண்டு அடிகளைச் சேர்த்துப் பாடலாம்” என்றார் மதுரைப் புலவர் தலைவர்.

சோழ மண்டலப் புலவர் ஆத்திரத்துடன், “எங்கே பாடுங்கள் பார்க்கலாம்” என்று சொன்னார்.

மதுரைப் புலலர் அமைதியாகப் பாட்டைச் சொல்லத் தொடங்கினார். சோழன் முதுகுக்குக் கவசம் இடான் என்று சோழ தேசப் புலவர் சொன்ன செய்திக்கு உரிய காரணம் இன்னதென்பதைப் பின் இரண்டு அடிகளில் வைத்துப் பாடினார்.

“சோழன் ஏன் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை தெரியுமா? புறங்காட்டாத இயல்பு காரணம் அன்று. சோழனோடு போர் செய்யும் ஆற்றல் பாண்டியனுக்குத்தான் உண்டு. அவனுடன் பாண்டியன் போர் செய்தால் நிச்சயம் சோழன் புறமுதுகிட்டு ஓடுவான். ஆனால் அவன் புறங் கொடுப்பதைக் கண்டவுடன் பாண்டியன் அவனை ஒன்றும் செய்ய மாட்டான். அவன் முதுகின் மேல் வேலை எறிய மாட்டான். அவ்வளவு உதார குணமும் பெருவீரமும் உடையவன் பாண்டிய மன்னன். தன் முதுகில் பாண்டியன் வேலை எறிய மாட்டான் என்ற உறுதி இருக்கும் பொழுது சோழன் அஞ்ச வேண்டிய அவசியமேயில்லை. அதனால் தான் சோழ மன்னன் தன் முதுகுக்குக் கவசம் அணிவதில்லை”.

இப்படியெல்லாம் பொருள் கூறும்படியா அந்தப் பாடல் அமைந்தது பாவம்! சோழ மண்டலப் புலவர் வாயடைத்துப் போனார். எது சோழனது வீரத்தை வெளிப்படுத்துமென்று நினைத்தாரோ, அதையே வைத்து அவனுடைய இழிவையும் பாண்டிய மன்னனுடைய உயர்வையும் காட்டும்படி மதுரைப் புலவர் பாடிவிட்டார்.

புலவர் தம்முடைய செருக்கழிந்து அறிவு பெற்றார்.

– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *