வாரி வழங்கும் வள்ளல் ஆய்அண்டிரன். யானை, குதிரை, தேரோடு பொருள் பல பாடுவோர்க்கு அளிப்பவன்.
அந்தோ ! ஆய் உயிர் துறந்தான். அருமை மனைவியரும் உயிர் நீத்தனர். “சுட்டுக் குவி” என்பது போல் ஆந்தை அலறியது. சுடுகாட்டில் ஈம விறகு அடுக்கி அவனையும் அவன் துணைவியரையும் தீ வைத்துச் சுட்டுச் சாம்பலாக்கினர். கண்கலங்கினர் புலவர். கண்ணீர் விட்டுக் கதறினர். பசி வாட்டவே வேறு நாடுகளை நோக்கி நடந்தனர். புலவர் நிலை பேரிரக்கத்திற்குரியது.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்